மலையாளியின் இயல்பிற்கு நெருக்கமான அடையாள மரம் ஒற்றைத் தென்னை மரம். அதேபோல தமிழனுக்கு ஒன்றையொன்று முட்டி நிற்கும் முள்மரம். இந்த அவதானிப்பைக் கொண்ட ஜெயமோகனின் சிறுகுறிப்பை 1990-இல் வாசிக்கிறேன். நான் ஜெயமோகனை முதன்முறையாக வாசிக்க ஆரம்பித்தது அந்தக் குறிப்பு வழியாகத்தான். இன்றும் நினைவில் எஞ்சியிருக்கும் அந்தக் குறிப்புகள் கே.சி.நாராயணன் மாத்ருபூமி வார இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் வெளிவந்தன. இம்மாதிரியான சிறிய கட்டுரைகள் வழியாக ஜெயமோகன் என்ற எழுத்தாளர் என்னைப்போன்ற வாசகர்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பிக்கிறார்.
1980-களிலேயே ’பாடபேதம்’ மாத இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். ஆனால், நான் 1990-களில்தான் வாசிக்க ஆரம்பிக்கிறேன் என்பதால் ‘பாடபேதம்’ இதழில் எழுதியதை நான் வாசித்திருக்கவில்லை. 1998-இல் ’பாஷாபோஷிணி’ மாத இதழின் ஆசிரியராக கே.சி.நாராயணன் பொறுப்பேற்ற சமயத்தில் ஜெயமோகன் ’நோட்டங்கள்’ என்ற பெயரில் ஒரு கட்டுரைத்தொடரை எழுதினார். அதுவரை மலையாள இலக்கியத்தில் காணமுடியாத பல தனித்தன்மைகள் அந்தக் கட்டுரைகளில் இருந்ததால் ’நோட்டங்கள்’ கட்டுரைத்தொடர் வாசகர்களை பரவசமடைய வைத்தது. அந்த கட்டுரைத்தொடரின் இரண்டு சிறப்பம்சங்களை குறிப்பிடவேண்டும். ஒன்று, வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் வழியாக, பண்பாட்டுக்குறிப்புகள் வழியாக இயல்பாக திரண்டுவரும் கவித்துவத்தால் ’நோட்டங்கள்’ கட்டுரைத்தொடரின் மொழி ஈர்ப்புடையதாக இருந்தது. இரண்டு, அந்தக் கட்டுரைகள் தனிமனிதப் பிரக்ஞைக்கு அளித்த முக்கியத்துவம். தனிமனிதப் பிரக்ஞை சமூகப்பிரக்ஞைக்கு எதிரானது என்பதனால் இலக்கியத்திற்கு தனிமனிதப்பிரக்ஞை ஒவ்வாதது என்ற உறுதியான நம்பிக்கையால் மலையாள இலக்கியச்சூழல் இடுங்கிய நிலையில் இருந்தது. 'நோட்டங்கள்’ கட்டுரைத்தொடர் தனிமனிதப்பிரக்ஞைக்கு அளித்த முக்கியத்துவம் வழியாக மலையாள இலக்கிய உலகை ஆச்சர்யப்படுத்த, தொந்தரவு செய்ய ஜெயமோகனின் எழுத்தால் முடிந்தது. என் கவிதை என்பது என் எல்லைக்குட்பட்ட தனிப்பட்ட அனுபவங்களை எழுதுவதுதான் என்ற புரிதலை உறுதியாக்கிக்கொள்ள ’நோட்டங்கள்’ கட்டுரைத்தொடரின் வாசிப்பு எனக்கு உதவியது. தன்னுடைய நுண்மையான அனுபவங்களிலிருந்து தொடங்கி பண்பாட்டு-சமூக-வரலாற்று தளத்திற்கு, தத்துவார்த்தமான, ஆன்மீகமான தளங்களுக்கு உயரும் ஜெயமோகனின் எழுத்துமுறைக்கு சமானமான உதாரணங்கள் மலையாள இலக்கியத்தில் சுத்தமாகவே இல்லை. இப்படி பண்பாடு, ஆன்மீகம், தத்துவம் என பல தளங்களுக்கு மேலெழுவதுதான் ’நோட்டங்கள்’ கட்டுரைத்தொடரின் மூன்றாவது சிறப்பம்சம். அன்றாட வாழ்க்கையின் சாமானிய தளத்தில் உறுதியாக நின்றுகொண்டு, ஆன்மீகமான/தத்துவார்த்தமான விசேஷ தளங்களுக்கு தலை உயர்ந்து நிற்கும் பெருந்தோற்றம் கொண்ட இலக்கியத்தை கண்ணசைவில் காட்ட அந்த கட்டுரைத்தொடரால் முடிந்தது. அந்தக் கட்டுரைகள் ’நெடும்பாதையோரம்’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.
மலையாள இலக்கியத்தைப் பொறுத்தவரை சி.வி.ராமன்பிள்ளைக்குப் பிறகு இன்றுவரை யாருமே நாஞ்சில் நாட்டின் பண்பாட்டை எழுதவில்லை. ஜெயமோகனின் கட்டுரைகளில் உள்ள மனிதர்கள் நாஞ்சில் நாட்டின் வரலாற்றிலிருந்து வந்தவர்கள்தான். அவர்கள் அனைவருமே செறிவான கதாபாத்திரங்கள். இவ்வளவு நல்ல கட்டுரைகளை மலையாளத்தில் எழுதும் ஜெயமோகன் தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர், சிறுகதையாசிரியர் என்பதை தெரிந்துகொண்டேன். ’நோட்டங்கள்’ கட்டுரைத்தொடரிலுள்ள மனிதர்களை, பேசுபொருளை, மொழியை வைத்துக்கொண்டு தமிழில் ஜெயமோகனின் எழுத்து எவ்வளவுதூரம் உயிர்த்துடிப்புள்ளதாக இருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன்.
ஆனால் மலையாளச்சூழலில் ஜெயமோகனின் எழுத்தைப்பற்றி பரவலான மாற்றுக்கருத்துகள் இருந்தன. சமகால பிரச்சனைகளுக்கு எதிர்வினையாகத்தான் இலக்கியம் இயங்க வேண்டும், அது முற்போக்கானதாக இருக்கவேண்டும். எல்லா விஷயங்களிலும் அவற்றின் சரி, தவறுகளையும் ஆராய்ந்து சரியான தரப்பில் நிற்க வேண்டியவன் இலக்கியவாதி என்ற உணர்வு மலையாள இலக்கியச்சூழலில் வலுவாக இருந்தது. மலையாள இலக்கியத்தின் இந்த பொதுவான உணர்வை பொருட்படுத்தாத ஜெயமோகனின் படைப்புகளை மலையாள இலக்கியச் சூழல் எளிமைப்படுத்தி புரிந்துகொண்டது இயல்பானதுதான். அது மட்டுமல்ல, உண்மையாக சொல்லவேண்டுமென்றால், மலையாளத்தில் இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்கும்போது தமிழிலிருந்து ஒருவர் இங்கு புகழடையத் தேவையில்லை என்ற குறுகலான மனநிலையும் ஜெயமோகனின் எழுத்துகளை புறக்கணித்ததற்குக் காரணம். தமிழ் இலக்கிய மரபை சுத்தமாகவே புரிந்துகொள்ளாதது மற்றொரு காரணம். தமிழகத்திலிருந்து தொழிலாளிகள் கூட்டம்கூட்டமாக கேரளத்திற்கு வந்து வேலைசெய்யத்தொடங்கிய காலம் அது. தமிழர்கள் மேல் மலையாளிகளுக்கு இருக்கும் மேட்டிமையுணர்வும், தமிழ் இலக்கிய மரபை புரிந்துகொள்ளாததும் ஜெயமோகனின் படைப்புகள் மேல் மலையாளிக்கு உள்ள எதிர்ப்புணர்விற்கு காரணம் என்று தோன்றுகிறது.
1980-களில் ’பாடபேதம்’ இதழில் கட்டுரைகள் எழுதிய காலத்திலிருந்தே பண்பாட்டு ரீதியான விஷயங்களில் தன் கருத்துகளை, நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியவர் ஜெயமோகன். 1999-இல் ஆற்றூர் ரவிவர்மா தொகுத்த ’புதுமொழிவழிகள்’ என்ற கவிதைத்தொகுப்பின் வெளியீட்டை ஒட்டி நடந்த கவிதை விவாதத்தில் ஜெயமோகனின் முன்வைத்த கருத்துகளால் அவர் மீதான எதிர்ப்புணர்வு அதிகமாகியது. கொயிலாண்டியில் நடந்த அந்த கவிதை விவாதத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. அதனால் ஜெயமோகனின் எந்தெந்த கருத்துகள் அங்கு பங்கேற்றவர்களில் ஜெயமோகன் மேல் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தின என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்த எதிர்ப்புணர்வு மலையாளக் கவிஞர்களில் அதிக காலம் நீடித்தது என்பதை அறிவேன்.
அடுத்து ’பாஷாபோஷினி’ மாத இதழில் ஜெயமோகன் மலையாளக் கவிதைகளை விமர்சனபூர்வமாக மதிப்பிட்டு எழுதிய கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை மலையாளத்தில் ஒரு புதிய கவிதைப் போக்கிற்கான விவாதங்களுக்கு வழிவகுத்தது. மலையாளக் கவிதை பற்றிய ஜெயமோகனின் அவதானிப்புகளை ஏற்றும் மறுத்தும் நிறைய எதிர்வினைகள் வந்தன. வேறொரு மொழியின் (அதுவும் மலையாளத்தின் சகோதர மொழியின்) இலக்கிய மரபிலும், சமூகப் பின்னணியிலும் இருந்து எழுதிய குறிப்பிடத்தக்க அவதானிப்புகளாகத்தான் நான் ஜெயமோகனின் அந்தக் கட்டுரையை பார்க்கிறேன். அந்த நிலையில் ஜெயமோகனின் அவதானிப்புகள் மிக முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன். உரத்த குரலில் ஒலிக்கும், அதிகம் பேசும், கற்பனாவாதம் நிறைந்த, பாடும் இயல்பு கொண்ட சமகால மலையாளக் கவிதைப் போக்கை ஜெயமோகன் கடுமையாக விமர்சித்தார். மலையாள இலக்கியச் சூழலுக்கு வெளியே உள்ள ஒருவரால் மட்டுமே அந்தச் சூழலை விலகி நின்று பார்க்கமுடியும். மலையாளக் கவிதை உலகம் தன்னைத்தானே விமர்சனம் செய்துகொள்ளத் தூண்டியவை ஜெயமோகனின் விமர்சனங்கள். இதுதான் என் நிலைப்பாடு.
அதேசமயம் மலையாளக் கவிதை மரபைப்பற்றிய ஜெயமோகனின் எல்லா கருத்துகளும் முழுமையானவை என்று நான் கருதவில்லை. உதாரணமாக, மலையாளக் கவிதை மரபு சுவாரசியமற்ற வரிகளைப் பாடி அதை கவிதை என்று சொல்வதை, கவிதை என்றால் பாட்டுதான் என்று பிழையாக புரிந்துவைத்திருப்பதை பற்றிய ஜெயமோகனின் விமர்சனம் முழுக்க முழுக்க உண்மை. ஆனால் சந்தம் இசையுடன் மட்டும்தான் தொடர்புடையது என்று நான் நினைக்கவில்லை. மலையாள மொழியின் நெகிழ்வான இலக்கண அமைப்பை உறுதியாக்க, கவிதையின் மொழியை இறுக்கமாக்க சந்தம் பயன்படுகிறது. மலையாளக் கவிதை மரபில் கவிதை என்பது பாடுப்படுவது அல்ல, கவிதை என்பது சொல்வது(recitation) தான். அது மட்டுமல்ல. சங்ககாலக் கவிதையின் நெகிழ்வான தாளம்தான் பிற்கால மலையாளக் கவிதையில் யாப்பாக ஆகிவிட்டிருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. இப்படி, கவிதையில் சந்தத்தின் பணி என்ன என்று என்னை மீண்டும் யோசிக்கத் தூண்டியது ஜெயமோகனின் அவதானிப்புகள்தான்.
ஜெயமோகன் அந்த கவிதை விவாதத்தில் சங்ககால மரபு என்பது மலையாளிக்கும்கூட உரிமையானதுதான் என்பதை மலையாள எழுத்தாளர்களுக்கு நினைவூட்டினார். இன்று தமிழில் புழக்கத்தில் இல்லாத பல சங்ககாலத் தமிழ்ச்சொற்கள் மலையாளத்தில் இன்று புழக்கத்தில் இருக்கிறது என்று ஜெயமோகன் சொல்வார். ‘ஓர்ம’ (ஓர்மை) என்ற சொல்லைப் பற்றி ஒருமுறை சொன்னதை நான் நினைத்துக்கொள்வதுண்டு. தமிழில் அந்தச் சொல் புழக்கத்தில் இல்லாமலாகி அதற்குப் பதிலாக ’ஞாபகம்’ என்ற சொல் வந்துவிட்டது. ஆனால் மலையாளத்தில் இன்றும் ‘ஓர்ம’ என்ற அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. எப்படி தமிழ் நவீன கவிதை சங்க இலக்கியத்தால் தூண்டுதல் அடைந்ததோ, அதேபோல மலையாளத்திற்கும் உரிமையான சங்க இலக்கிய மரபு மலையாள நவீன கவிதைக்கும் உந்துதலாக ஆக வேண்டியதல்லவா என்ற எண்ணம் எனக்கு உருவானது ஜெயமோகனுடனான உரையாடல்களிலிருந்துதான். அந்தத் தூண்டுதலால்தான் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களுக்கு மலையாளத்தில் கிடைக்கும் மொழிபெயர்ப்புகள் அனைத்தையும் நான் வாசிக்க ஆரம்பித்தேன். கே.ஜி.சங்கரப்பிள்ளை தொகுத்த ’சமகாலீன கவிதை’ என்ற தொகுப்பில் ஜெயமோகன் மலையாளத்தில் மொழிபெயர்த்த சில ’ஐங்குறுநூறு’ பாடல்களும் இருந்தன. என்னைப்போல மற்ற மலையாள எழுத்தாளர்களும் இம்மாதிரி சிந்திக்க ஆரம்பிக்க ஜெயமோகனின் தூண்டுதலோ அல்லது அவர் மீதான எதிர்ப்புணர்வோ இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அந்தக் கட்டுரையின் உடனடி பலன் என்பதுபோல பின்னர் மனோஜ் குறூர் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை எழுதினார். அந்த நாவல் மலையாளத்திலும் தமிழ்ச்சூழலிலும் சமானமாகவே கவனிக்கப்பட்டது.
2004-05-இல் சங்ககாலக் கவிதைகளைப்பற்றி ‘மாத்யமம்’ வார இதழில் ‘சங்கச் சித்திரங்கள்’ என்ற பெயரில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அந்தக் கட்டுரைத்தொடரில் குறிப்பிடப்பட்ட சங்கக்கவிதைகள் என்னை கவர்ந்தன. கூடவே, அந்தக் கட்டுரைத்தொடரில் வாசகன் கவிதைக்குள் உள்நுழையும் வழிமுறையும் என்னை கவர்ந்தது. எந்தக் கவிதையையும் ஒருவன் தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களை வைத்துதான் வாசிக்க வேண்டும் என்பதை ஜெயமோகன் எழுதிய சங்க இலக்கிய ரசனைக்குறிப்புகள் உணர்த்தின.
கொல்லன் அழிசி எழுதிய குறுந்தொகை 138-ஆவது பாடலைப் பற்றி ஜெயமோகன் எழுதிய குறிப்பை பிரத்யேகமாக நினைவுகூற வேண்டும். நள்ளிரவில் வீட்டிற்கு அருகிலுள்ள சிறு குன்றில் நொச்சி மரத்திலிருந்து நீலநிறப்பூக்கள் வீழும் ஓசையைக் கேட்டபடி தூங்காமல் இருக்கும் தலைவியின் பாட்டு. இரவில் லாட்ஜ் அறையில் கடிகாரத்தின் டிக் டிக் சத்தத்தால் அலைக்கழிந்து தூங்காமல் விழித்திருக்கும் நண்பர் ஒருவரைப்பற்றிய நினைவிலிருந்துதான் ஜெயமோகன் மேலே குறிப்பிட்ட சங்கப்பாடலின் உணர்வுநிலைக்கு சென்றுசேர்ந்தார் என்பது என்னை ஆச்சர்யப்படுத்தியது. ஜெயமோகன் கவிதை பற்றி சொல்லும் எந்த அவதானிப்பும் வாழ்க்கையனுபவத்திலிருந்துதான் தொடங்குகிறது என்பதை நான் மெல்ல புரிந்துகொண்டேன். அது அவரது இயல்பான இலக்கிய ரசனைமுறை என்று பின்னர் ஜெயமோகன் இலக்கியம் தொடர்பாக ஆற்றிய உரைகளை கேட்டபோது புரிந்தது. ’சங்கச் சித்திரங்கள்’ என்ற ரசனைக்குறிப்புகள் மலையாளத்தில் புத்தகமாக வெளிவரவில்லையென்பது ஒரு இழப்புதான்.
2000-இல் ஜெயமோகன் முன்னெடுத்த குற்றாலம் தமிழ்-மலையாள கவிதையரங்கு என் இலக்கிய வாழ்க்கையின் முக்கியமான சம்பவம். அங்குதான் நான் தமிழ்க் கவிஞர்களை முதன்முதலாக சந்திக்கிறேன், அது மட்டுமல்ல தமிழ்க் கவிதைகள் அங்குதான் எனக்கு அறிமுகமாகின்றன. தமிழில் சுந்தரராமசாமியும், மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மாவும் கலந்துகொண்டனர். முகாமில் கலந்துகொண்ட தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை ஜெயமோகனே மலையாளத்தில் கைப்பட மொழிபெயர்த்து மலையாளத்திலிருந்து வரும் எங்களுக்கு அனுப்பியிருந்தார். அன்று ஜெயமோகன் தன் தமிழ் நூல்களை கணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்துவிட்டார் என்றாலும் மலையாளத்தை கையில்தான் எழுதிக்கொண்டிருந்தார். இன்றும் ஜெயமோகன் மலையாளத்தை கையில்தான் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவரது கையெழுத்தில் கிடைத்த தபாலில் நான் வாசித்த தமிழ்க்கவிதைகள் தொண்ணூறுகளின் மலையாளக்கவிதைகளிலிருந்து மிகமிக வித்தியாசமானவை. 1990-களில் மலையாள இலக்கியத்தின் பொதுவான கவிதைப்போக்குகளை குறிப்பதற்காகத்தான் நான் ‘தொண்ணூறுகளின் மலையாளக்கவிதை’ என்ற சொல்லை இங்கு பயன்படுத்துகிறேன். நான் வாசித்த புதிய தமிழ்க் கவிதைகள் மலையாளத்தின் பொது இலக்கியப்போக்கிலிருந்து மிக அந்நியமாக இருந்தன. கூடவே, தொண்ணூறுகளில் மலையாளத்தில் புதிதாக எழுதத்தொடங்கிய பலரின் கவிதைகளுக்கு அந்த தமிழ்க்கவிதையின் போக்கில் சில தளங்களில் நெருக்கத்தை உணரவும் முடிந்தது. படிமங்கள் மூலமாக பேசுவது என்பதுதான் தமிழ்க் கவிதைகளின் பொதுவான முறைமை. ஜெயமோகனின் மொழிபெயர்ப்பில் மூத்த கவிஞர்களான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்தன் போன்றவர்களின் கவிதைகள் இருந்தன. கூடவே மனுஷ்யபுத்திரன், எம். யுவன் போன்ற இளைஞர்களின் கவிதைகள்.
குற்றாலத்தில் கலாப்ரியாவிற்கு சொந்தமான வீட்டில்தான் கவிதையரங்கு நடந்தது. கலாப்ரியா ஒரு அழகிய பெண்கவிஞராக இருப்பார் என்று நினைத்து வந்த மலையாள இளம் கவிஞர்களுக்கு முன் சபரிமலைக்கு போவதற்காக மாலைபோட்டு நிற்கும் தோற்றத்தில் கருப்பு வேட்டி கட்டி கலாப்ரியா நின்றிருந்தார். விக்ரமாதித்யனும் கல்யாண்ஜியும் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். சுற்றி அமர்ந்து இயல்பாக கவிதை வாசித்து பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துகளை சொல்லும் அந்தக் கவிதை வாசிப்பு முறை மலையாளத்தில் அன்று வழக்கத்தில் இல்லாதது. சமூகம்-அரசியல்- சமகாலம் இவற்றின் பின்னணியில் கவிதையை புரிந்துகொள்வதுதான் மலையாளிகளுக்கு பிடிக்கும். கவிதையை கவிதைக்குள்ளேயே நின்றுகொண்டு பேசுவதுதான் குற்றாலக் கவிதையரங்கின் விவாதமுறை. இந்த முறையுடன் ஒத்திசைவதற்கு மலையாளக் கவிஞர்களுக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. மலையாளிகள் பேசுதளத்திற்கும்(context), தமிழ்க் கவிஞர்கள் பிரதிக்கும்(text) அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று புரிந்தது. பிரதிதான் முக்கியமானது. பிரதி வழியாகத்தான் பேசுதளத்திற்கு(context) செல்லவேண்டும். இந்த வழிமுறைக்கு நேர் தலைகீழாக அல்ல என்று குற்றாலம் கவிதையரங்கின் விவாதம் வழியாக அறிந்துகொள்ளமுடிந்தது.
ஜெயமோகனை அப்போதுதான் முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். அருண்மொழியும், குழந்தைகள் அஜிதனும், சைதன்யாவும் வந்திருந்தனர். ஜெயமோகனின் ஆற்றல் அங்கு வந்த அனைவரையும் செயலூக்கம் கொள்ள வைத்தது. இரவு ஹோட்டலில் திடீரென அஜிதன் அங்கு இல்லை என்று தெரிந்து எல்லோரும் தேட வெளியே ஓடினோம். கடைசியாக, தெருமுனையில் கோவில் தேரைப் பார்த்து நிற்கும் அஜிதனை கண்டுபிடித்தது என் நினைவில் இருக்கும் தனிப்பட்ட பதிவு. அஜிதனை பின்னர் பார்த்தபோதெல்லாம் நான் அந்தப் பெரிய கோவில் தேரையும் சேர்த்தே பார்த்தேன்.
சில மலையாளக்கவிஞர்கள் குற்றாலத்திற்குப் போய் குளித்துவிட்டு வந்தது அன்று மலையாள இலக்கிய உலகில் நகைச்சுவை கதைகளாக பேசப்பட்டது. நான் மெல்ல தமிழ் அகரவரிசையை படிக்க தொடங்கினேன். என் தந்தை அன்று கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காலம். தமிழ் எழுத்துவரிசையை கற்றுக்கொண்டு பஸ், கடை என பெயர்ப்பலகைகளில் உள்ளவற்றை எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கினேன். அடுத்த வருட குற்றாலம் கவிதையரங்கில் கலந்துகொண்டேன். பின்பு ஓகேனக்கல்லிலும், ஊட்டி ஃபேர்ன்ஹில்லிலும் கவிதையரங்குகள் நடந்தன. ஊட்டியில் நடந்த இரண்டாவது சந்திப்பில் தனிப்பட்ட சிக்கலால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. ஊட்டி சந்திப்பில் வினய சைதன்யாவின் இருப்பை குறிப்பிட்டு சொல்லவேண்டும். ஒகேனக்கலின் கவிதைக்கூடுகையிலிருந்து கேரளத்தில் விழுந்த இரண்டு விதைகளில் ஒன்று உடனேயே டி.பி.ராஜீவன் வழியாக ‘ஒகேனக்கல்’ என்ற கவிதையாக முளைத்தது. இன்னொரு விதை இன்னும் கொஞ்சம் காலம் கழித்து மனோஜ் குறூர் வழியாக ’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலாக முளைத்தது.
அன்று கோயம்புத்தூரில் புத்தகக்கடைகளிலிருந்து நான் சில கவிதை நூல்களை வாங்கி வாசிக்கப் பழக ஆரம்பித்திருந்தேன். மொழியின் எளிமையால் என்னால் உடனே புரிந்துகொள்ளமுடிந்தது மனுஷ்யபுத்ரனின் ‘இடமும் இருப்பும்’ என்ற கவிதைத்தொகுப்புதான். ’இடமும் இருப்பும்’ தொகுப்பிலுள்ள சில கவிதைகள் முன்பே ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு வழியாக எனக்கு அறிமுகமாகியிருந்தன. ஜெயமோகனின் மொழிபெயர்ப்பை வாசித்திருந்ததால், அந்தத் தொகுப்பின் மற்ற கவிதைகளை எளிதாக வாசிக்க முடிந்தது. மெல்லமெல்ல நான் சில தமிழ்க்கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.
\இந்த தமிழ்-மலையாள கவிதையரங்கில் கலந்துகொண்ட மலையாளக் கவிஞர்களை அந்த அரங்கு பல விதங்களில் பாதித்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. கல்பற்றா நாராயணனின் கவிதைகள் தமிழ் வாசகர்களுக்கு மிகப் பிடித்தமானதாக ஆகி, தமிழ்க் கவிஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. டி.பி.ராஜீவனின் கவிதைகளும் கவனிக்கப்பட்டன. என் கவிதைகள் மேல் தமிழ் வாசகர்களுக்கு அவ்வளவு விசேஷமான ஆர்வம் உருவாகவில்லை. மாறாக, தமிழ்க் கவிதைகள் மேல் எனக்கு இருக்கும் ஆர்வம் கவனிக்கப்பட்டது. தமிழ்க் கவிதைகளை நெருங்கி அறியும் வாய்ப்பாகத்தான் நான் அந்த கவிதையரங்கை பயன்படுத்திக்கொண்டேன். அந்த அரங்கு வழியாக தமிழ்க் கவிதைகள் மேல் எனக்கு உருவான ஆர்வம்தான் பின்னர் ஞானக்கூத்தன் போன்ற பல கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்க்க உதவியது. பின்பு நான் தமிழ், மலையாள நவீனத்துவ கவிதைகளை, பின்நவீனத்துவ கவிதைகளை ஒப்பிட்டு இரண்டின் ஆற்றலையும், எல்லையையும் புரிந்துகொள்ள முயற்சித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த முயற்சி நான் அந்தக் கவிதையரங்கில் கலந்துகொண்டதன் பலன்தான்.
பின்னர் ஜெயமோகனின் ‘நூறு சிம்ஹாசனங்கள்’ (நூறு நாற்காலிகள்) மலையாளத்தில் பெரிய அலையை கிளப்பியது. எழுத்தாளர்கள் அல்லாத வாசகர்கள் அந்த நாவலை வாசித்தனர். ‘நூறு சிம்ஹாசனங்களை’ அடிப்படையாகக் கொண்ட வலுவான அரங்க நாடகங்கள் உருவாக்கப்பட்டன. எழுத்தாளர்களைப் பொறுத்தவரை, ஜெயமோகன் மேல் அவர்களுக்கு இருக்கும் முன்முடிவுகளால் ‘கசப்பதால் முழுங்க முடியவில்லை, இனிப்பதால் துப்பவும் முடியவில்லை’* என்ற நிலையில் எதிர்வினையாற்றினார்கள். சமூகம் சார்ந்த, அரசியல் சார்ந்த பேசுபொருள் கொண்ட இலக்கியப்படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கேரளத்தில் எப்போதுமே இருக்கும். அதனால் ‘நூறு சிம்ஹாசனங்கள்’’ இயல்பாகவே பரவலாக விவாதிக்கப்பட்டது. ஆனால் மலையாள கல்வித்துறை, அறிவுஜீவிகள் நூறு சிம்மாசனங்கள் நாவலை மனப்பூர்வமாகவே புறக்கணித்தனர் என்பதுதான் என் எண்ணம்.
இலக்கியம், பண்பாட்டு விஷயங்களில் மலையாளிக்கு இருக்கும் பொதுவான அபிப்பிராயங்களுக்கு எதிராகப் பேசும் அந்நியன் என்ற நிலையில்தான் ஜெயமோகனை கேரளத்தில் எழுத்தாளர்களும் கல்வித்துறையினரும் மதிப்பிட்டிருந்தனர். ஆனால், தன்னையே பார்த்துக்கொள்வதற்காக, தன் எழுத்து என்ற கண்ணாடிக்கு முன் மலையாளியை நிறுத்தியவர் ஜெயமோகன் என்பது என் தரப்பு. ஒரே சமயம் இரண்டு மொழிகளிலும் எழுதும் எழுத்தாளர் என்ற நிலையில் ஜெயமோகன் வாசிக்கப்படவில்லை. தமிழ்-கேரள பண்பாட்டு எல்லையிலிருந்து, தமிழ்-மலையாள இலக்கியத்தின் எல்லையிலிருந்து வந்த எழுத்தாளர் என்ற நிலையிலும் ஜெயமோகனின் படைப்புகள் வாசிக்கப்படவில்லை.
கோவிட் நோய்த்தொற்றால் வந்த பொதுமுடக்கத்தில் ஜெயமோகன் ஒரு குறிப்பில் தான் இப்போது இனிமையான கதைகளை எழுதுவதாகவும், தன் நண்பர்களான எழுத்தாளர்களும் இனிமையான கதைகளை, கவிதைகளை எழுதவேண்டுமென்றும் சொல்லியிருந்தார். அவரது இணையதளத்திலிருந்து அவர் எழுதிய கதைகளை ஒவ்வொன்றாக வாசிக்கத் தொடங்கினேன். ஒரு வாசகன் என்ற நிலையில் சமகால மலையாளக் கதையில் என்னவெல்லாம் இல்லை என்று நான் உணர்ந்தேனோ அவையனைத்தையும் கொண்ட நிறைவான கதைகளான அந்தக் கதைகளை மகிழ்ச்சியுடன் வாசித்தேன், அதில் திளைத்திருந்தேன். வேறெந்த இலக்கும் இல்லாத, கதை சொல்லவேண்டும் என்ற தீராத விழைவுதான் அந்தக் கதைகளில் நிறைந்திருந்தது. அரசியல், சமூக நோக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு இலக்கை உத்தேசித்து எழுதப்பட்ட சமகால மலையாளக்கதைகளை இந்தக் கதைகளுடன் ஒப்பிடவே முடியாது.
பொதுவாக மலையாள இலக்கியச்சூழலில் இரண்டு வகையான கதைகள்தான் எழுதப்படுகின்றன. ஒன்று, துல்லியமான சமூக, அரசியல் இலக்குகளும் மேலான நீதியுணர்ச்சியும், அரசியல்சரிநிலையும் (political correctness) கொண்ட கதைகளை மட்டும் எழுத வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்ட எழுத்து. சமூகம், அரசியல் போன்ற பேசுபொருளால் ’இதோ வெடித்துவிடும்’ என்பதுபோன்ற கதைகள் அவை. இரண்டாவது, மனித இருப்பின் இருண்மையான பக்கங்களை துயரத்தை ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கும், பழைய இருத்தலியல் மனநிலை கொண்ட காலகட்டத்தை நினைவுபடுத்தும் கதைகள். (மேற்கத்திய இலக்கியத்தின் பாதிப்பால் அல்ல, கேரள சமகால வாழ்க்கையின் துயரங்களிலிருந்து எழுதப்பட்டவைதான் இந்த இருத்தலியல் தரிசனத்தை அடிப்படையாகக்கொண்ட கதைகள் என்பதுதான் வேறுபாடு) நாளிதழ்களின் மொழிநடையின் மேலோட்டமானதன்மை இந்த இரண்டு வகையான கதைகளிலும் இருப்பதை பார்க்கலாம். ஜெயமோகனின் இந்த புதிய கதைகள் அதனாலேயே மிகமிக வித்தியாசமானவை என்பதை உணர முடிகிறது. அனைத்திற்கும் அப்பால் கதைசொல்லலின் தீராத விழைவை ஜெயமோகனின் புதிய சிறுகதைகள் எனக்கு அளித்தன. மலையாளத்தின் சமகால எழுத்தாளர்களில் சக்கரியாவை வாசிக்கும்போது மட்டும்தான் எனக்கு அந்த விழைவு ஏற்பட்டிருக்கிறது. ஜெயமோகனின் கதைகளின் பண்பாட்டு வெளியுடன் மலையாளிகளுக்கு உள்ள மானசீகமான பிணைப்பு அந்தக் கதைகளின் வாசிப்பை இனிமையாக்கின. பத்து இலட்சம் காலடிகள், தீவண்டி, ஆட்டக்கதை போன்ற சிறுகதைகளின் பின்னணி வடகேரளத்தின் மலபார் பகுதி. நோய்த்தொற்றின் முடக்கத்தில் துயரத்தை சுவைத்துக்கொண்டிருந்த என் மனதை ஆசுவாசப்படுத்த இனிமையான இந்தக் கதைகளால் முடிந்தது. பேசுபொருளில், கதைசொல்லும்முறையில் வெவ்வேறான, நீளம் குறைந்த சில கதைகளை மலையாளத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.
ஜெயமோகனே மலையாளத்தில் எழுதக்கூடியவர், பின் நான் ஏன் இந்த வேலையை செய்யவேண்டும் என்று பலமுறை என்னையே கேட்டுக்கொண்டேன். ஜெயமோகனை வேறொரு மொழியில் எழுதும் எழுத்தாளர் என்ற நிலையில் மலையாளிகள் வாசிக்க வேண்டுமென்றால் மொழிபெயர்ப்பு என்ற நிலையில் அந்தக் கதைகள் மலையாளத்திற்கு வரவேண்டியிருக்கிறது என்று எனக்கு தோன்றியது. ஜெயமோகனின் படைப்புகள் மலையாளத்திற்கும் தமிழிற்கும் இடையே செயல்படுவது. கூடவே, ஜெயமோகன் இருமொழிகளிலும் எழுதுபவர். ஆனால் ஜெயமோகனின் படைப்புகளின் தனித்தன்மை இந்த சிக்கலான நிலையில் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டால் போதாது. முழுமையான ஒரு தமிழ் இலக்கியவாதி என்ற நிலையில் ஜெயமோகன் வாசிக்கப்படவேண்டுமென்றால் அவரது சில படைப்புகளையாவது பிற மொழிபெயர்ப்பாளர்கள் மலையாளத்திற்கு மொழிபெயர்த்தே ஆகவேண்டும். ஆனால் மொழிபெயர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அது ஒரு கடுமையான சவால்தான். காரணம் ஜெயமோகனின் மலையாள மொழிநடை அவ்வளவு வசீகரமானது. அவரது மலையாள உரைநடை நாஞ்சில்நாட்டு மணமும், அழகும் நிறைந்தது. ஜெயமோகனின் மொழியின் வசீகரம் (தமிழ் மட்டுமல்ல மலையாளமும்) வேறொருவரின் மொழிபெயர்ப்பு வழியாக இழக்கப்பட நேரிடுவது சகிக்கமுடியாதுதான். அதேசமயம் கதைசொல்லலின் இன்பத்தையும், அது வழியாக துலங்கிவரும் ஆன்மீகமான தேடல்களையும் தவிர்த்த மற்ற எதையும் உத்தேசிக்காதவை இந்தப் புதிய கதைகள். மலையாள இலக்கியச்சூழல் சமூக எதிர்வினைகளின் இயல்புள்ள படைப்புகளை மட்டும் விவாதிக்கும். அதனால் இந்தக் கதைகளை மலையாளத்திற்கு கொண்டுவர ஜெயமோகனுக்கு தனிப்பட்டமுறையில் விருப்பமில்லை என்று எனக்குத்தெரியும். இந்த நெருக்கடியான நிலையில் ஜெயமோகனின் புதிய கதைகளில் பத்து சிறுகதைகளை நான் மலையாளத்தில் மொழிபெயர்த்தேன். மாயப்பொன் என்ற பெயரில் வெளியிட்ட, பத்து கதைகள் கொண்ட தொகுப்பின் இரண்டாவது பதிப்பு இரண்டு மாதங்களுக்குள்ளேயே வெளிவந்தது.
இருமொழிகளின் எல்லையில் இருக்கும் ஒரு எழுத்தாளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தாய்மொழிகள் இருக்கலாம். தன் அம்மாவிடமிருந்து கிடைத்த மொழி என்ற நிலையில் மலையாளமும், தன் சொந்த தாயாகவே ஆன சொந்த ஊரிலிருந்து கிடைத்த மொழி என்ற நிலையில் தமிழும் ஜெயமோகனின் தாய்மொழிகள். சமகால இந்தியாவின் மிக முக்கியமான ஒரு எழுத்தாளர் அளித்த கொடைகளை தொகுத்துக்கொள்ளும் இந்தத் தருணத்தில் தமிழ், மலையாளம் என்ற இரண்டு கணவாய்களிலிருந்து அந்த மலைச்சிகரமுனையை காணாமல் இருக்கமுடியாது. நிச்சயமாக மலையாளக் கணவாயிலிருந்து அந்த மலையுச்சியை காண்பது எல்லைகள் கொண்டதுதான்.
ஜெயமோகனின் எழுத்தின் மொழியழகு மலையாள மலைச்சரிவில் அமுதம் என பிரவாகமாக ஒழுகிச்செல்கிறது. இந்த மலைச்சரிவில் அவரது உரையாடல் இளம்காற்றென வீசுகிறது. இவை இல்லையென்றால் என் இலக்கிய வாழ்க்கை வாடி மங்கியிருக்கும்.
* ‘கைச்சிட்டு இறக்கானும் வய்ய, மதுரிச்சிட்டு துப்பானும் வய்ய’ எந்த முடிவையும் எடுக்கமுடியாத தர்மசங்கடமான நிலையை சுட்டும் மலையாள பழமொழி
***
[மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தவர் அழகிய மணவாளன்]
No comments:
Post a Comment