மூடியிருக்கும் பெட்டியென மனத்தை உருவகித்துக்கொண்டால், அப்பெட்டிக்குள் என்ன இருக்குமென ஒருவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆபரணங்கள் நிறைந்திருக்கலாம். அல்லது ஆடைகளாகவும் இருக்கலாம். கூழாங்கற்கள் மணல்கட்டிகள், கரித்துண்டுகள், கொலைக்கருவிகள் என ஏதேனும் ஒன்றாகவும் இருக்கலாம். பாம்புக்கூடைகள், பூந்தொட்டிகள், அமுதம், நஞ்சு என எதுவும் இருக்கலாம். எல்லாச் சாத்தியங்களும் உண்டு. எதையும் முழுக்க ஏற்கவும் இயலாது. நிராகரிக்கவும் இயலாது. மனித இயல்பே ஏற்கவும் இயலாத, நிராகரிக்கவும் இயலாத கலவையாக இருக்கும் சூழலில் மனமும் அப்படித்தானே இருக்கமுடியும். மனம் என்பது எது என்னும் புதிரான ஒற்றைக் கேள்விக்கு எதார்த்த வாழ்வில் ஏதேனும் ஒரு பதிலைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் கலைஞனால் அப்படி எளிதாக நகர்ந்துவிட முடிவதில்லை. அவன் தன் கலையின் வழியாக வெவ்வேறு வாழ்க்கைத்தருணங்களை அலசி ஆராய்ந்து ஆயிரம் பதில்களைக் கண்டறிகிறான்.
அகச்சித்திரங்களையும் புறச்சித்திரங்களையும் கச்சிதமாக இணைக்கும் ஏராளமான சிறுகதைகளை எழுதியவர் ஜெயமோகன். இந்த இணைப்பின் வழியாக அவர் உருவாக்கும் ஒவ்வொரு சிறுகதையும் மனம் என்பது எது என்னும் கேள்விக்கு அவர் கண்டடைந்து சொன்ன புதிய புதிய பதில்களாகவே உள்ளன. ஒவ்வொரு சிறுகதையையும் அவர் ஓர் ஆய்வுக்குரிய கவனத்துடன் நேர்த்தியாக நிகழ்த்தி ஒரு முடிவை முன்வைக்கிறார். அந்த முடிவு மனத்தில் நிறைந்திருக்கும் தந்திரம், வஞ்சம், தியாகம், நாணயம், நேர்மை, குற்ற உணர்ச்சி, அன்பு என ஏதோ ஒன்றை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அது எதுவாக இருந்தாலும் அந்தப் பின்னணியில் அது உண்மையே என்கிற நம்பகத்தன்மையை ஒவ்வொரு கதையும் வழங்குகிறது.
ஜெயமோகனுடைய முதல் சிறுகதைத்தொகுதி திசைகளின் நடுவே என்னும் தலைப்பில் வெளிவந்தது. கணையாழியில் 1987-இல் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதையான நதி அத்தொகுதியின் முதல் கதையாகவும் இடம்பெற்றிருந்தது. தாயின் பிரியத்துக்குரிய இளையமகன் தன் தமையனோடு சேர்ந்து நதிக்கரையோரம் புரோகிதரின் வழிகாட்டலின்படி செய்யும் இறுதிச்சடங்குகளின் அடுத்தடுத்த கட்டங்களே இந்தக் கதையின் படிகள்.
முதலில் குளியல். பிறகு சிதையிலிருந்து எரிந்து வெளுத்த எலும்புத்துண்டுகளை பானைக்குள் சேகரித்தல். பானைக்கு மாலை சூட்டுதல், ஆழமாக ஒரு குழியை வெட்டி தென்னம்பிள்ளையை நட்டு வணங்குதல். பானையைச் சுமந்துகொண்டு மீண்டும் நதிக்குள் இறங்கும் தமையனைப் பின்தொடர்தல். பானையை முதுகுப்புறமாக நீருக்குள் நழுவவிட்டு திரும்பிப் பார்க்காமல் கரையேறி நடத்தல். சடங்குகளுக்கு இடையிடையில் அசையும் அலைகளாக அம்மாவைப்பற்றிய நினைவுகள் மட்டும் வந்துபோகின்றன. ஒரு தாய்க்குச் செய்யும் இறுதிச்சடங்கு விவரங்களையும் நினைவுகளையும் மாற்றி மாற்றிப் பின்னிச் செல்லும் போக்கில் ஜெயமோகன் அந்த ஆற்றையும் தாயையும் ஒன்றென உணரவைத்துவிடுகிறார். அதுவே அந்தக் கதையின் வெற்றி.
நதி என்பதே அன்னையின் வடிவம். வற்றாத தன் நீரோட்டத்தால் நதி மக்களைக் காப்பாற்றுகிறது. நிலத்தை வளமாக்குகிறது. கால்நடைகளையும் மற்ற உயிரினங்களையும் காப்பாற்றுகிறது. கங்கைத்தாய், காவிரித்தாய் என்று அழைப்பதுதான் நம் மரபில் உள்ளது. காலம்காலமாக இந்த மண்ணை தன் அன்பால் காத்தருளும் நதி என்னும் பேரன்னையின் மடியில் தன்னைப் பெற்ற அன்னையின் சாம்பலைச் சேர்ப்பதுதான் அந்த இறுதிச்சடங்கின் சாரம்.
சடங்குக்காக நதிக்கரைக்கு வந்து சேர்ந்ததும் அந்தக் கதைசொல்லி கரைபுரண்டோடும் ஆற்றைத்தான் முதலில் பார்க்கிறான். அந்த ஆறு பனியில் நனைந்துபோய்க் கிடந்தது என்றும் அசைவற்றிருந்த நீரைப் பார்த்ததும் உடம்பு சிலிர்த்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ள கதைக்குறிப்புகளை கவனமுடன் பார்க்கவேண்டும். ஆற்றைப் பார்த்ததும் அவனுக்குள் மூண்டெழும் அவன் தாயின் நினைவுகளே அவை. உடல் குளிர்ந்து அசைவற்று கிடத்தப்பட்டிருந்த தாயின் தோற்றத்தை அவன் ஆழ்மனம் மறுஆக்கம் செய்துகொள்வதை உணர்ந்துகொள்ளலாம். தொடக்க வரிகளிலேயே அவனுடைய அகச்சித்திரமும் புறச்சித்திரமும் ஒன்றிணைந்துவிடுகிறது. ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பிறகு நதிக்கரையோரம் செய்யப்படும் வேறு வகையான இறுதிச்சடங்குகளை முன்வைத்து ஆழமற்ற நதி என்றொரு சிறுகதையை ஜெயமோகன் எழுதினார். இங்கும் நதி நதியாக மட்டுமில்லை. ஆழமற்ற மனிதர்களின் உருவகமாக மாற்றியிருப்பதை உணரமுடியும்.
பல்லக்கு கேரள தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டியில் அவருக்கு முதல் பரிசைப் பெற்றுத்தந்த சிறுகதை. தாய், மகன், குடும்பம், அன்பு என்னும் தளத்துக்கு முற்றிலும் மாறான வேறொரு தளம். வருமானத்துக்கு வழியில்லாமல் வீட்டிலிருக்கும் தேக்கு உத்தரங்களையும் ஜன்னல் சட்டகங்களையும் அகற்றி விற்றுச் சாப்பிடும் மேனோன் குடும்பத்தின் கதை. அப்படிப்பட்ட நிலையிலும் மேனோன் தன் பழக்கங்கள் எதையும் மாற்றிக்கொள்ளவில்லை. பழம்பெருமைகளில் மூழ்கியிருக்கிறார். கடன் வாங்கி சாராயம் அருந்துகிறார். போதையில் திளைக்கிறார். மேனோன் குடும்பம் செழிப்பாக இருந்த காலத்தில் ஏவல் செய்துவந்தவர்கள் அப்பியும் அவனுடைய அப்பாவும். இப்போது அனைவருடைய வாழ்க்கைமுறையும் மாறிவிட்டது. எதையாவது விற்று பணமாக்கவேண்டிய சூழலில் மட்டும் அப்பி வந்து உதவி செய்துவிட்டுச் செல்கிறான். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவதால் அப்பியின் மீது மேனோனுக்கு அபிமானம் இருக்கிறது. “நீ நன்னி உள்ளவன்டேய் அப்பி” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் மேனோன். அப்பியும் “இந்த அப்பி இஞ்ச வாலாட்டிகிட்டு ஓடி வர நாயாக்கும்” என்று தன்னை முன்னிறுத்திக்கொள்கிறான்.
விலைமதிப்பு மிக்க உத்திரமும் கடப்பைக்கல்லும் அற்பவிலைக்கு விற்றதாக அப்பி சொல்வதை மேனோன் நம்புகிறார். அற்பத்தொகையான நூறு ரூபாய்க் கடனுக்கு தன் வீட்டையே அப்பி பெயருக்கு அடமானப்பத்திரம் எழுதிக் கொடுக்கிறார். அழகான வேலைப்பாடு மிக்க பல்லக்குக்கு ”அஞ்சு ரூபாய் கிட்டினாலே அதிகம்” என்று சொன்னபடி இடுப்புமுடிச்சில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டுச் செல்லும் அப்பியின் சொற்களில் அவருக்கு எவ்வித ஐயமும் எழுவதில்லை. அவன் தனக்காக வேலை செய்துகொடுக்கிற நம்பிக்கைக்குகந்த பணியாள் என்ற எண்ணமே அவரிடம் நிறைந்திருக்கிறது.
கடன் வாங்கிய பணத்தை வைத்துக்கொண்டு சில நாட்கள் உல்லாசமாக சாராயம் அருந்தி பொழுதுபோக்கும் மேனோன் ஒரு நாள் இரவில் வீட்டுக்கு தள்ளாடியபடி நடந்துவரும்போது, எதிரில் ஒரு திருமண ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்று பார்க்கிறார். அது அப்பியின் மகனுடைய திருமண ஊர்வலம். அலங்கரிக்கப்பட்ட மேனோன் வீட்டுப் பல்லக்கில் அவன் உட்கார்ந்துகொண்டு செல்கிறான். ஒப்புக்கு மேனோனை நெருங்கி வரும் அப்பி பணிவோடு குனிந்து ஒரு வார்த்தை பேசிவிட்டு ஓடிவிடுகிறான். ஒரு கணத்தில் ஊர்வலமே அவரைக் கடந்து சென்றுவிடுகிறது. போதையில் பீறிட்டுவரும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கீழே சரிந்துவிழுந்து அழத் தொடங்குகிறார் மேனோன்.
காலமெல்லாம் சேவகனாக இருந்த குடும்பம் உயர்ந்து பல்லக்கில் செல்வதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத உயர்தட்டுக் குடும்பத்தின் சித்திரமென்ற பிழையான பார்வையையே வாசகர்கள் தொடர்ந்து இச்சிறுகதையின் மீது வைத்ததை துரதிருஷ்டம் என்றே சொல்லவேண்டும்.
இக்கதையைப் படிக்கத் தொடங்கும் முன்பாக, பல்லக்கு என்பதை ஒருபோதும் மதிப்பிடும் அலகாக வைத்துக்கொள்ளவேண்டாம் என்னும் திருவள்ளுவரின் வாசகத்தை நினைவில் கொள்வது நல்லதென்று தோன்றுகிறது. பல்லக்கில் அமர்ந்து செல்பவன் புண்ணியம் செய்தவன், பல்லக்கைச் சுமந்து செல்பவன் பாவம் செய்தவன் என்னும் கருத்தின் வழியாக அறத்தை மதிப்பிடக்கூடாது என்பது வள்ளுவர் வாக்கு. பல்லக்கை விற்றவனையும் பல்லக்கை வாங்கியவனையும் முன்வைத்து உயர்வுதாழ்வை மதிப்பிடக்கூடாது என்பதுதான் இந்தக் கதையில் எஞ்சும் உண்மை. காலம் காலமாக நன்றியுணர்ச்சியால் பிணைக்கப்பட்டிருந்த இரு வேறு வகையான மனிதர்களின் உறவு நவீன வாழ்வில் செல்லாப்பணமாகிவிட்டது. அதை திகைப்போடும் வேதனையோடும் மேனோன் உணர்ந்துகொள்வதன் அடையாளமே அவருடைய அழுகை. அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையும் எண்ணமும் சுக்குநூறாக நொறுங்கிவிட்டன என்பதன் அடையாளமே அவருடைய கண்ணீர். ஆனால் அக்கணத்தில் அவர் உணர்ந்துகொண்ட உண்மையின் வழியாக ஒரு பயனும் அடைய முடியாத புள்ளியை நோக்கி ஏற்கனவே அவரை வாழ்க்கை தள்ளிவிட்டது. இனி அடமானம் வைக்க வீடும் இல்லை. விற்பதற்கு உத்திரமோ பல்லக்கோ இல்லை.
மேனோனைப்போலவே காலமாற்றத்தை வாழ்க்கையின் கடைசிக்கணத்தில் உணர்ந்து குலுங்கியழும் நம்பூதிரியை ஜகன்மித்யை சிறுகதையில் பார்க்கமுடியும். அறிவியல் உருவாகி வருவதற்கு முன்பு தத்துவமாக விளங்கிக்கொள்ளப்பட்ட ஒரு கருத்துருவை அறிவியலை வெல்லும் கருவியாக நிறுவுவதற்காக வாழ்க்கையையும் சிந்தனையையும் காலமெல்லாம் செலவு செய்கிறார் அவர். தான் கண்டுணர்ந்த உண்மை தன்னோடு அழிந்துவிடுமோ என்னும் அச்சம் அவரை ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிவிடச் செய்கிறது. இப்படியே மீண்டும் அலைந்து வாழ்ந்து வாழ்ந்து சாவதுதான் தன் பிறவிக்கு வகுக்கப்பட்டிருக்கும் கடமையோ என நினைத்து மனம் கலங்குகிறார்.
மடாதிபதி ஸ்தானத்தை உதறவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சிக்கிக்கொண்டு தவிப்பவராக சித்தரிக்கப்படுகிறார் போதி கதையின் மகாசன்னிதானம். தந்திரமாக அவரை அகற்றிவிடும் வழியை மிகவும் கச்சிதமாக நிறைவேற்றி மடத்தை தன்வசப்படுத்திக் கொள்கிறார் சின்ன சன்னிதானம். எல்லா அடையாளங்களையும் துறந்து அறிவைத் தேடி அடையவேண்டும் என்று வந்தவனுக்கு அறிவுக்கும் அடையாள ஆசைக்கும் ஒரு தொடர்புமில்லை என்னும் ஞானத்தையே அளிக்கிறது இந்த வாழ்க்கை. கதைப்போக்கில் ஆங்காங்கே பழைய ஆலமரம், உளுத்துப்போன மடத்துக்கூரை, செல்லரித்த ஏடுகள், ஒட்டடை என அவர் கொடுக்கும் ஒவ்வொரு புறச்சித்திரமும் பழைமை மாறாத எண்ணமும் தொடர்ந்து இணைந்தே செல்கின்றன.
அஸ்தினாபுரத்தில் நடைபெறும் மகாதானத் திருவிழாவில் அரசரிடம் தானம் பெறுவதற்காக வந்து நிற்கும் சார்வாகனின் கதையை முன்வைக்கிறது திசைகளின் நடுவே. உண்மையைத் தவிர வேறெந்தத் துணையும் இல்லாதவர் அவர். அரசரிடம் தானம் பெற மண்டையோட்டு கப்பரையுடன் வந்து நிற்கிறார். “வேதம் பிடிக்காவிட்டாலும் வேதம் ஓதி அளிக்கப்படும் பிச்சையை ஏற்பது மட்டும் பிடிக்குமோ?” என்று கேட்டு பகடி செய்யும் பார்வையாளர்களை நோக்கி “மலத்தில் முக்கி அளித்தாலும் பொன் பொன்தானே மூடா?” என்று அமைதியாக பதில் சொல்கிறார் சார்வாகன். தன் பாத்திரத்தில் விழுந்த நாணயங்களை குனிந்து முகர்ந்து பார்த்து உதிரவாடை வீசுவதாகச் சொன்னபடி கீழே போடுகிறார். வெகுண்டெழும் பார்வையாளர் கூட்டம் அவரை அடித்து மிதித்து அவர் மீது நெய்யை ஊற்றி எரித்துவிடுகின்றது. ஒருபக்கம் உண்மை மீது கொண்ட நாட்டத்தோடு சார்வாகன் எழுப்பிய கேள்வி திசைகளின் நடுவில் காலம்காலமாக மிதந்தபடியே இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஆள் பலத்தாலும் அதிகாரத்தாலும் உண்மையைச் சுட்டெரித்த அதிகார வெறியும் அதே திசைகளின் நடுவில் மிதந்துகொண்டே இருக்கிறது. வானத்தில் கோள்களின் இடையறாத சுழற்சியென உண்மையும் அதிகாரமும் அலைந்துகொண்டே இருக்கின்றன.
சவுக்கை ஏந்துபவர்களும் அது வழங்கும் அடிகளை வாங்கிக்கொள்பவர்களும் என இரு பிரிவினர் காலம் காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தபடியே இருக்கிறார்கள். மல்கான்சிங் கையில் இருக்கும் சவுக்கு சந்தர்ப்பச் சூழலால் சோட்டேலால் கைக்குச் செல்லும் சம்பவத்தை மட்டுமே சவுக்கு சிறுகதை நம்மிடம் சித்தரித்துக் காட்டுகிறது. அது ஒரு சுழல். சவுக்கு தன் அடியை ஏற்றுக்கொள்ளும் ஆளை தானாகவே தேடிக் கண்டடைந்துவிடுகிறது. .
சிவமயம் சிறுகதையில் காலமெல்லாம் சிவநாமத்தை உச்சரித்தபடியும் தன்னைச் சுற்றி பறந்தபடியிருக்கும் கிளிகளுக்கு சிவநாமத்தைக் கற்பித்தபடியும் கோவில் வளாகத்தில் வாழ்க்கையைக் கழிக்கும் சாமியார் ஒருசில நாட்களில் பெண்பித்து பிடித்தவராக கோவிலைவிட்டு வெளியேறி தெருத்தெருவாக அலையத் தொடங்குகிறார். அதே வேளையில் ஒருபக்கம் பெண்பழக்கத்தையும் கைவிடாமல் இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் இன்னொருபக்கம் வழிபாடுகளையும் கைவிடாமல் தொழில்முறை நேர்த்தியோடு செயலாற்றிவரும் குருக்கள் சிவநாமத்தைத் தவிர வேறெதையும் உச்சரிக்கும் விருப்பமில்லாத துறவியாக மாறி வீட்டையும் கோவிலையும் விட்டு வெளியேறிச் செல்கிறார். ஒரு விலங்கைப் பழக்குவதுபோல மனத்தையும் பழக்கியெடுக்கலாம் என்னும் உண்மை துணுக்குறச் செய்கிறது. அகத்தையும் புறத்தையும் இணைக்கும் மிகச்சிறந்த படிமமாக கிளிகள் கதைநெடுக இடம்பெற்றிருக்கின்றன.
லங்கா தகனம் ஆசான் மிகமுக்கியமான பாத்திரம். ஒருபுறம் அடங்கி கும்பிடு போடும் மனம். மறுபுறம் அணையுடைத்த வெள்ளமென பொங்கிச் சீறும் மனம். காலமெல்லாம் சிறுமையில் அமிழ்ந்திருந்த கதகளி ஆசான் பார்வையாளர்கள் முன்னிலையில் அனுமன் வேடத்தில் ஆடிக் காட்டுவதற்கு கிட்டும் அபூர்வமான ஒரு வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மொத்த இடத்தையும் தகனம் செய்யும் சீற்றத்துடன் மேடையை நோக்கிப் பாய்ந்துவருகிறார்.
மனம் நிலையான ஒன்றல்ல. எண்ண ஓட்டங்களும் நிலையானவை அல்ல. அவை சூடிக்கொள்ளும் புனைவுகள் ஏராளம். அவற்றை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்துகின்றன ஜெயமோகனின் சிறுகதைகள். நியாயம், நேர்மை, ஒழுக்கம், நன்மை போன்ற சொற்கள் உணர்த்தும் பொருள் எதார்த்த உலகில் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துகொண்டிருப்பதை கண்கூடாகக் காணும் சாட்சிகளாக நாம் வசிக்கிறோம். வாழ்தலின் நிமித்தம் எதையும் செய்யலாம் என்பது இன்றைய காலகட்டத்து உண்மையாக மாறிவிட்டது. மனத்தின் திசைகளும் அவற்றின் இலக்குகளும் பயணங்களும் ஒருபோதும் வகுத்துவிட முடியாதவை. வகுக்க முடியாத மனத்தின் ஆற்றலையே திசைகளின் நடுவே தொகுதியில் பதினான்கு வடிவங்களில் உள்ள பதினான்கு சிறுகதைகளும் உணர்த்துகின்றன.
ஏறத்தாழ அவருடைய அடிப்படை வடிவங்களென இக்கதைகள் அமைந்திருப்பதை இப்போது இக்கதைகளை வாசிக்கும்போது உணரமுடிகிறது. இத்தொகுதியை அடுத்து கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக வெளிவந்த தொகுதிகளில் உள்ள எல்லாக் கதைகளுக்கும் ஆதி வடிவங்களாக இவை உள்ளன. கார்த்தவீரியனின் கைகள்போல அவ்வடிவங்கள் காலம்தோறும் வளர்ந்துகொண்டே போகின்றன.
விரிவான வாசிப்புப் பார்வை கொண்டவர் பாவண்ணன். ஜெயமோகன் அவர்களின் ஆதி சிறுகதை வடிவம் மற்றும் சாரத்தை வெகு நேர்த்தியாக இங்கு பதிவாக்கியுள்ளார். இன்றைய ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்கள் அடைந்துள்ள நீட்சியின் தொடக்கப் புள்ளியை நுணுக்கமாக அவதானித்து எழுதபட்டுள்ளது இந்தப் பதிவு. ஜெயமோகனின் வரவுக்கு முந்தைய படைப்பு முகம் கொண்டவர் பாவண்ணன். அவரது இந்தப்பதிவு அவருடைய முதிர்வை காட்டுகிறது. அவருக்கு அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிசைகளின் நடுவே கதைத் தொகுதியை மீண்டும் தேடி எடுத்திருக்கிறேன். பாவண்ணன் கண்டடைந்தவற்றை இன்னொருமுறை அசைபோட. ஜெயமோகனுடைய தொடக்ககாலக் கதைகளின் களத்தையும் போக்கையும் பாவண்ணன் தெளிவாகக் காட்டுகிறார்.
ReplyDeleteஜெயமோகன் கதைகள் மீண்டும் வெளிக்கிளம்பி வரும்வகையில் எழுதப்பட்டுள்ள சிறப்பான எழுத்து,
ReplyDeleteசிறப்பான பார்வை ....கதை நெறிப்படும் இடங்களை மிக நுட்பமாக அணுகி வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்....கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு முந்தையக் கதைகள் என்றாலும் இப்போதும் அவற்றை வாசிக்கும் தேவை இருக்கின்றன....வாழ்த்துகள்
ReplyDelete