இணை பயணம் - சாரு நிவேதிதா

புகைப்படம் பிரபு காளிதாஸ். நன்றி  

 ஜெயமோகனின் கருத்துலகுக்கும் படைப்புலகுக்கும் நேரெதிர் நிலையில் இருப்பவனாகக் கருதப்படுபவன் நான். ஜெயமோகனை வியந்தோதும் பல வாசகர்கள் என்னை அடியாழத்திலிருந்து வெறுப்பதையும் நேருக்கு நேர் கண்டவன்.  சமீபத்தில் கூட ஜெயமோகன் சம்பந்தப்பட்ட ஒரு இலக்கிய நிகழ்வில் நான் பேசத் தொடங்கியதும் எழுந்து வெளியே சென்ற பிரமுகர் நான் பேசி முடித்த பிறகே உள்ளே வந்தார்.  இதெல்லாம் எதேச்சையாக நிகழ்வது அல்ல.  ஜெயமோகன் பள்ளியைச் சேர்ந்த இன்னொரு பிரமுகர் என்னை சமீபத்தில் திருடன் என்று சொன்னதும் கூட அவ்வகையானதே.  என் சக எழுத்தாளர்களும் நண்பர்களும் அந்தப் பிரமுகர் மீதே அனுதாபம் கொண்டார்கள்.  பாவம், விட்டு விடுங்கள் என்பதே அவர்கள் எனக்குக் கூறிய அறிவுரையாக இருந்தது.  இது போல் நூறு சம்பவங்கள்.  ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஜெயமோகனையும் என்னையும் எதிரிகளாகக் கட்டமைத்துக் கொள்வதுதான் அவர்கள் எல்லோருக்கும் சௌகரியமானது.  கருத்துத் தளத்தில் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ள முடியாத இரண்டு எதிரெதிர் நிலைப்பாடுகள் சாத்தியம் என்பது கூட தெரியாதவர்கள் அவர்கள்.  இது பற்றியும் - வள்ளலாருக்கும் அவரது சம காலத்திய அறிஞர்களுக்கும் இடையே நடந்த சர்ச்சைகள், சண்டைகளை உதாரணம் காண்பித்து - ஜெயமோகன் நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.  


இரு துருவங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஜெயமோகனுக்கும் எனக்கும் ரசனையிலும் கருத்துத்தளத்திலும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு.  இதற்கும் எங்கள் எழுத்திலேயே பல உதாரணங்களைக் காணலாம்.  


ஆனால், ஒரு இலக்கியப் படைப்பினால் நாம் எப்படி வசீகரிக்கப்படுகிறோம்?  அல்லது, ஒரு இலக்கியப் படைப்பு எப்படி நம்மை ஈர்த்து அதனுள் வாங்கிக் கொள்கிறது?  இந்தக் கேள்விக்கு நான் என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களைச் சொல்ல வேண்டும்.


நான் எழுதத் தொடங்கின காலத்திலிருந்தே என் நூல்களை வெளியிட அப்போது இருந்த எல்லா பதிப்பகங்களுமே மறுத்து விட்ட நிலையில் - மனுஷ்ய புத்திரன் தனியாக ஒரு பதிப்பகம் ஆரம்பித்து, அவர் என்னுடைய புத்தகங்களைப் பிரசுரிக்கத் தொடங்கும் வரை நான்தான் என் புத்தகங்களைப் பதிப்பிக்க வேண்டிய சூழல் இருந்தது.  அவ்வகையில் 1980களில் என் முதல் நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலின் 1000 பிரதிகளை ஒரு விற்பனையாளரிடம் கொடுத்தேன்.  தீவிர இடதுசாரி.  நேர்மை, உண்மை, சத்தியம், தோழமை போன்ற மேன்மையான மதிப்பீடுகளின் அறங்காவலர்.  மார்க்சீயப் புரட்சி மலர்வது பற்றி மேடைகளில் அனல் பறக்கப் பேசுபவர்.  எல்லா பிரதிகளும் மூன்றே மாதங்களில் விற்று விட்டன.  ஆனால் ஒரு பைசா எனக்குக் கிடைக்கவில்லை.  விடாமல் போஸ்ட் கார்ட் எழுதிக் கொண்டேயிருந்தேன்.  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடைசியாக அறம் பாடி ஒரு போஸ்ட் கார்ட்.  அந்த ஆண்டு புத்தக விழாவில் தீப்பிடித்து அவர் கடை முழுசாக எரிந்து போனது.  அப்போது அவர் எனக்கு ஒரு போஸ்ட் கார்ட் போட்டார்.  கடை தீப்பிடித்து விட்டதால் பணம் தருவதற்கில்லை தோழர்.  


20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது.  அப்போது என் வங்கிக் கணக்கில் 1000 ரூ. இருந்தது.  அதற்கும் குறைவாக இருந்தால் கணக்கு வைத்துக் கொள்ள இயலாது.  வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருந்தேன்.  வீட்டில் கடுமையான வறுமை.  அவந்திகாவின் சம்பளம் என் மகனின் படிப்புக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.  ஸீரோ டிகிரி நாவலின் நூறு பிரதிகளை (அல்லது இருநூறா, ஞாபகம் இல்லை) ஒரு விற்பனையாளரிடம் கொடுத்தேன்.  இரண்டே மாதங்களில் புத்தகங்கள் காலி.  ஒரு பைசா வரவில்லை.  எனக்கு போன் வந்து விட்டது.  அதனால் போஸ்ட் கார்டுக்கு பதிலாக போன்.  இதோ அதோ என்றே போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் ஹார்ட் அட்டாக்.  ரத்தக் குழாய்களில் 95 சதவிகித அடைப்பு.  இரண்டே நாளில் அறுவை சிகிச்சை செய்தால்தான் ஆள் பிழைப்பார்.  இரண்டு லட்சம் வேண்டும்.  

புகைப்படம்- அறிவழகன் சேகர். நன்றி 

சென்னையின் நம்பர் ஒன் தொழிலதிபரும் நானும் வாடா போடா நண்பர்கள்.  பணம் கடனாகக் கேட்டேன்.  ”அது கஷ்டம், நீ ஒன்று செய், பேசாமல் அரசு மருத்துவமனையில் போய்ச் சேர்ந்து விடு, நான் ஹெல்த் மினிஸ்டரிடம் பேசி உன்னை ஸ்பெஷலாக கவனிக்கச் சொல்கிறேன்.”  அன்றைய தினம் பேப்பரில் அந்த மருத்துவமனையில் கடைநிலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஏழாவது நாளாகத் தொடர்கிறது என்றும், அதனால் மருத்துவ மனையே நாறுகிறது என்றும் தலைப்புச் செய்தி வந்திருந்தது.  


புத்தக விற்பனையாளருக்கு போன் செய்தேன்.  மீண்டும் இதோ அதோ என்றார்.  நான் மரணப் படுக்கையில் கிடக்கிறேன், இன்று மாலைக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால், நாளைய தினசரியில் உங்கள் பெயரோடு செய்தி வரும் என்றேன்.  (அப்படி வரவழைக்கும் அதிகாரமும் நட்பு வட்டமும் அப்போது எனக்கு இருந்தது.)  சென்னையில் இருந்தால் செய்து விடலாம், சென்னையிலிருந்து ரொம்பத் தொலைவில் இருக்கிறோமே என்று மருகினார் புத்தக விற்பனையாளர்.  அது உங்கள் பிரச்சினை என்று போனைத் துண்டித்து விட்டேன்.  ஒரு மணி நேரத்தில் பணம் வந்து சேர்ந்தது.  


ஜெயமோகனின் அறம் என்ற கதையைப் படிக்கும் என் நண்பர்கள் அது எம்.வி. வெங்கட்ராமின் வாழ்வில் நடந்த சம்பவம் என்பார்கள்.  நானோ அது என் வாழ்வின் சரிதம் என்பேன்.   


 இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.  அது ஒரு தலித் இலக்கிய விழா.  மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் புத்திஜீவியாக அறியப்பட்டவர்.  படிப்பாளி.  இடதுசாரி என்பதால் ஜெயமோகனை அவ்வப்போது விமர்சித்துக் கொண்டிருப்பவர். ஜெயமோகனின் வெள்ளை யானை என்ற நாவலைப் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டார்.  


அதேபோல், ஜெயமோகனின் ஒரு கதையைப் படித்து விட்டு என் ஆன்மா விம்மிய தருணம் ஒன்று உண்டு. இரு நோயாளிகள் என்ற கதை.  அந்தக் கதையில் புதுமைப்பித்தன் ஒரு பாத்திரம்.  புதுமைப்பித்தனுக்கு க்ஷயரோகம் வந்து திருவனந்தபுரம் க்ஷயரோக மருத்துவமனையில் இருக்கிறார்.  அவரைச் சந்திக்கப் போகும் ஒரு நண்பர் அவரிடம் “உங்களுக்கு எப்படி க்ஷயரோகம் வந்தது?” என்று கேட்கும் போது, “ஊரெல்லாம் என் முகத்தில் காறித் துப்பியது, அதனால் வந்தது” என்பார் பித்தன்.


ஒரு சிறுவன் என்னைத் திருடன் என்று எழுதியபோது அதை நான் புன்னகையோடு கடந்து போனது இந்தக் கதையைப் படித்ததனால்தான்.  அல்லது, இந்தக் கதையில் வரும் பித்தனைப் போல் வாழ்வை எதிர்கொண்டதால்தான்.  


ஜெயமோகனையும் விமர்சிப்பார்கள், வசை பாடுவார்கள், வழக்குத் தொடுப்பார்கள்.  தமிழ் எழுத்துச் சூழலில் அதிக வசைக்கு ஆளானவர் ஜெயமோகன்தான்.  ஆனால், அதிலெல்லாம் கடைசியில் ஜெயமோகனின் மணி மகுடத்தில் ஒரு இறகு ஏறும்.  எஸ்.வி. ராஜதுரை தொடுத்த வழக்கில் கூட யார் வென்றார்?  யார் மகுடத்தில் மேலும் ஓர் இறகு ஏறியது? ஆனால், என் விஷயத்தில் அவமதிப்பு மட்டுமே நடந்தேறும்.  நான் எந்தத் தவறுமே செய்திருக்க மாட்டேன்.  ஆனால் சாருவினால்தான் என் பெண்ணுக்குத் திருமணமே தட்டிப் போனது, நாங்களெல்லாம் சாருவை எவ்வளவு சபித்திருப்போம், பெண் சாபம் அவரை சும்மா விடுமா என்று 65 வயதுப் பெண்மணி ஒருவர் சமீபத்தில் என் நண்பரிடம் சொன்னார்.  


அந்த விஷயத்தைத் தோண்டித் துருவிப் பார்த்தால் இரண்டு தேசங்களுக்கு நடுவே நடந்த போரில் சம்பந்தமே இல்லாமல் குறுக்கே மாட்டியவனாக இருந்தேன்.  


மிக விரோதமான ஒரு சூழலை நான் எவ்வித சலனமுமின்றி கடந்து செல்வதற்கு ஜெயமோகனின் கதைகள் எனக்கு உதவுகின்றன என்பதை நிறுவுவதற்காகவே என் கதையை இங்கே சொன்னேன்.  


இப்படியாகவே தமிழ்ச் சமூகத்தில் ஏராளமான வாசகர்களின் வாழ்வில் ஜெயமோகன் நீங்காத ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறார்.  அவருடைய நேரெதிர் துருவத்தில் வாழும் சாரு உட்பட.  


ஜெயமோகனைப் பற்றிச் சொல்ல இன்னொரு முக்கியமான விஷயம் உண்டு.  நமக்குத் தெரிய வந்துள்ள 2000 ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் பொதுச் சமூகத்தை ஜெயமோகன் அளவுக்குப் பாதித்த இன்னொரு எழுத்தாளன் கிடையாது.  பாரதியையும் உள்ளடக்கியே சொல்கிறேன்.  சவத்தைக் கொண்டாடும் மனோபாவம் கொண்ட necrophilic தமிழ்ச் சமூகம் பாரதி இறந்த பிறகுதான் அவரை மாலை போட்டு வணங்கியது.  அவர் உயிரோடு இருந்த போது சோற்றுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் பொதுச் சமூகத்தை அவரெங்கே பாதிக்கப் போகிறார்?  அவரை ராஜாஜியும் மற்ற தலைவர்களும் நடத்திய லட்சணத்தைத்தான் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறாரே? அதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்?  சென்னைக்கு வந்த தாகூர் சென்னையில் வசித்த பாரதியைப் பார்க்காமல் உ.வே.சா.வைத்தான் சந்தித்திருக்கிறார்.  காரணம், அவருக்கு பாரதி பற்றிச் சொல்லப்படவே இல்லை.


தமிழ்ப் பொதுச் சமூகம் தன்னை நிராகரிக்கவே முடியாதபடி தகவமைத்துக் கொண்டது ஜெயமோகனின் இன்னொரு விசேஷம்.  எந்தச் சிறப்பான முயற்சியும் இல்லாமல் அது இயல்பாகவே நடந்தது.  பொதுச் சமூகம், தான் மிக மோசமான அழிவுப் பாதையில் சென்றாலும் ஆசான்கள் மட்டும் நல்வழியிலேயே செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் குணம் கொண்டது.  வள்ளுவர் காலத்திலிருந்து வழங்கி வரும் மரபு அது. அந்த வகையில், சமூகம் வரையறுத்துள்ள ஒழுக்க விதிகளுக்கும் ஜெயமோகன் மிகச் சரியாகப் பொருந்தினார்.  பாரதி கஞ்ஜா குடிப்பார்.  ஜெயமோகனோ புகைக்கவும் மாட்டார்.  குடிக்கவும் மாட்டார்.  பெண்கள் பக்கமோ திரும்பவே மாட்டார்.  ஆக, மது மாது ஆகிய இரண்டு அடிப்படை விஷயங்களில் தமிழ்ச் சமூகத்தை ஜெ. வீழ்த்தி விட்டார் என்றே சொல்லலாம்.  


இப்படியாக, தன்னைத் தாக்குவதற்கான எந்த ஆயுதத்தையும் ஜெயமோகன் தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கவே இல்லை.  ஒரே ஒருமுறை அவரையும் அறியாமல் வழங்கினார்.  சமூகமும் அவரை ஆசான் என்றும் பாராமல் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குத் தாக்கியது.  அது குறித்து என்னைப் பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர் மீண்டும் மீண்டும் ஜெயமோகன் மீது விமர்சன ரீதியாகவே கேள்விகளைக் கேட்டார்.  நான் மீண்டும் மீண்டும் ஜெயமோகனுக்கு ஆதரவாகவே பேசிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் ஊடகங்களையும் தாக்க ஆரம்பித்த பிறகுதான் நிருபர் தன் முயற்சியை நிறுத்தினார்.  எனவே, எழுத்தாளர்களை அடிப்படையிலேயே வெறுக்கும் தமிழ்ச் சமூகம் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்றே காத்துக் கொண்டிருந்தது.  ஆனால் சமூகத்தின் கண்ணிகளையெல்லாம் ஜெயமோகன் மிக எளிதில் கடந்து சென்று விட்டார். 


இங்கே இரண்டு பேரை நாம் நினைவு கூரலாம்.  இருவரில் காந்தி உச்சம்.  ஆடைகளையே களைந்து போட்டு அரை நிர்வாணப் பக்கிரியாக மாறினார்.  இந்தியத் துறவியின் அடையாளம்.  அதைவிட இந்தியச் சமூகத்துக்கு வேறு என்ன வேண்டும்?  காந்தியைத் தங்கள் மகாத்மாவாக ஏற்றுக் கொண்டது சமூகம்.  அதேபோல் அப்துல் கலாம்.  ஒரு முஸ்லிம் இந்தியச் சமூகத்தில் அவர் அளவுக்கு வணங்கப்பட்டது முன்மாதிரி இல்லாதது.  அவருமே பொதுச் சமூகத்தின் சட்ட விதிகளுக்குப் புறம்பாக நடக்கவில்லை.  அவர் மட்டும் வைன் அருந்துவேன் என்றோ, எனக்குப் பிடித்த உணவு மாட்டுக் கறி பிரியாணி என்றோ சொல்லியிருந்தால் அப்படிக் கொண்டாடப்பட்டிருப்பாரா என்பது கேள்விக் குறி.  


ஜெயமோகன் எவ்வித முன் திட்டங்களும் இன்றி இயல்பாகவே மதுவிலிருந்தும் பெண்களிடமிருந்தும் அந்நியமாக இருந்தார்.  அதனாலேயே சமூகம் அவரை கவனித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.  இது எல்லாவற்றையும் விட, அவர் மக்களின் கதைகளைச் சொன்னார்.  அதற்கு மேல் சமூகத்துக்கு எந்த ஆட்சேபணையும் இல்லாமல் போனது.        


எனக்குத் தெரிந்த மேலும் ஒன்றிரண்டு சம்பவங்களைக் குறிப்பிட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னால் எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி ஒரு தினசரியில் கட்டுரை கேட்டிருந்தார்கள்.  நான் ஒன்றை எழுதினால் அது பற்றி யாரேனும் எழுதியிருக்கிறார்களா என்று தேடிப் படித்து விடுவது வழக்கம்.  அப்படிப் பார்க்கும் போது சங்கீதத்துக்கு சம்பந்தமே இல்லாத ஜெயமோகன் ஒருவர்தான் எம்.எஸ். பற்றி விரிவாக – மிக விரிவாக – ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  எம்.எஸ். பற்றி உருப்படியாக வேறு எந்தக் கட்டுரையுமே தமிழில் எனக்குக் கிடைக்கவில்லை.  


Cradle of Filth என்ற மெட்டல் ராக் குழுவின் தீவிர ரசிகன் நான்.  ஒருமுறை அந்தக் குழுவின் Nymphetamine என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோது இந்த இசையை ஜெ. எப்படி எதிர்கொள்வார் என்று தோன்ற, அதை அவருக்கு எழுதினேன்.  பாடல்களையும் அனுப்பி வைத்து விட்டு உறங்கி விட்டேன்.  இரவு இரண்டு மணி இருக்கும். காலையில் எழுந்து பார்த்தால் அவரிடமிருந்து ஒரு நீண்ட மின்னஞ்சல்.  நான்கு மணிக்கு எழுதியிருக்கிறார்.  போன் செய்து ”என்னைப் போலவே அதிகாலையில் எழுந்து விடுவீர்களோ?” என்று கேட்டேன்.  “சே, சே, உறங்கச் செல்வதற்கே நாலு ஆகி விடும்” என்றார்.  


அந்தக் குறிப்பிட்ட மெட்டல் ராக் இசையை அவர் நித்ய சைதன்ய யதியின் ஆசிரமத்தில் கேட்டிருக்கிறார்.  அவர் எனக்கு எழுதிய அந்த பதில் ராக் இசை பற்றிய ஒரு முக்கியமான ஆவணம்.


இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.  


புதுமைப்பித்தன் பற்றிய க்ஷயரோகக் கதை இருக்கிறதல்லவா?  அதற்கான தீர்வையும் ஜெயமோகனே எனக்கு அளித்தார்.  ஊரெல்லாம் தூற்றுகிறது.  யாரைப் பார்த்தாலும், “சாருவின் அ-புனைவு பிடிக்கும், புனைவுகள் இஷ்டமில்லை” என்பார்கள்.  இதைவிட அதிக பட்ச அவமானம் ஒரு எழுத்தாளனுக்கு இருக்க முடியாது.  எழுத்தாளனின் உயிர் மூச்சே அவனது புனைவுகள்தானே?  அங்கேயும் என்னைக் காப்பாற்றியது ஜெயமோகன்தான்.  ’என் எழுத்து ட்ரான்ஸ்கிரஸிவ் தன்மை கொண்டது, அதிகம் பேரால் அதை உள்வாங்க முடியாது’ என்பதோடு நான் நிறுத்திக் கொள்வது வழக்கம்.  ஆனால் ஜெயமோகனோ ‘யாரும் பதற வேண்டாம், சாரு எழுதுவது பிறழ்வெழுத்து (ட்ரான்கிரஸிவ்), இவ்வகை எழுத்தின் முன்னோடி மார்க்கி தெ ஸாத், இவ்வகை எழுத்து இந்தியாவிலேயே வேறு எந்த மொழியிலும் எழுதப்படவில்லை’ என்று மிக விளக்கமாக எழுதினார்.  என் எழுத்தை ஒரு தத்துவத் தளத்தில் வைத்து நிறுவிய ஒரே கட்டுரை இன்று வரை ஜெயமோகனுடையதுதான்.  


கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனி ஒருவனாகச் செய்து கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.  என்னென்னவெல்லாம் செய்கிறார் என்பதை இன்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  ஜெயமோகன் செய்யும் அத்தனை காரியங்களையும் வேற்று மொழிகளில் கோடீஸ்வரர்களும், கோடிகளில் புரளும் நிறுவனங்களும் செய்து கொண்டிருக்கின்றன.  ஆனால் இங்கே ஜெயமோகன் என்ற ஒற்றை மனிதன் ஒட்டு மொத்த சமூகமே செய்திருக்க வேண்டிய அத்தனை கலாச்சார செயல்பாடுகளையும் முன்னெடுத்துச் செய்து கொண்டிருக்கிறான்.  குறைந்த பட்சம் ஒரு பல்கலைக்கழக வேந்தராகக் கூட அவரை அமர்த்தி அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள இந்தச் சமூகம் தயாராக இல்லை.  இழப்பு சமூகத்துக்குத்தானே ஒழிய ஜெயமோகனுக்கு இல்லை.  


இப்படியாகத்தான் அது நடந்தது.  தமிழ்ச் சமூகத்தின் விருப்பு வெறுப்பு பற்றியே அலட்டிக் கொள்ளாமல் – அதற்கான வாய்ப்பையே தமிழ்ச் சமூகத்துக்கு அளிக்காமல் – சுயம்புவாக இந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதித்த ஒரே எழுத்தாளனாக விளங்குகிறார் ஜெயமோகன்.  இது கடந்த 2000 ஆண்டுகளில் நடந்திராத ஒரு அதிசயம். 


அந்த அதிசயம் நூறாண்டுகள் வாழ்ந்து இந்த சமூகத்துக்கும் மொழிக்கும் தன்னிடமிருக்கும் சிறந்தவற்றை மேலும் மேலும் வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.    


6 comments:

  1. ஜெயமோகன் அவர்களுக்கு எதிர் துருவமாக பயணிக்கும் சாரு அவர்களின் இந்தப் பதிவு அவரின் பயண ரேகைகளை காட்சிப்படுத்தியுள்ளது. ஒரு பல்கழைக் கழகம் செய்ய வேண்டியதை தனி ஒருவராக ஜெயமோகன் அவர்கள் செய்து வருகிறார் என்ற சாரு அவர்களின் ஏற்பு குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  2. சாரு, வெகு சிறப்பாக விரிவாக எழுதியுள்ளார். ஜெயமோகனின் அயரா உழைப்பு, கர்வமில்லாமல் விழுமியங்களை பின் தொடர்தல் இவை இரண்டுமே பல வாசகர்களை ஈர்க்கிறது. அவரது எழுத்தின் அழகும், அணுகுதலுக்கு எளிய சுபாவமும் பலரை நண்பர்கள் ஆக்குகிறது. இந்த நிகழ்வை ஒரு பெருங்கூட்டம் களிப்புடன் அனுபவித்து கொண்டிருக்கிறது.

    இலக்கியம் பரவலாக அனுபவிக்க பட முடியுமா? அந்த அற்புதம் நடந்து கொண்டிருக்கிறது.

    இந்த குழுவில் இல்லாதவர்களுக்கு இதனை புரிந்து கொள்வது கடினம். அதனால் அவதூறுகள். இருப்பினும் வாசகர்கள் மிக முக்கியமாக இளம் வாசகர்களிடம் ஈர்ப்பு சற்று அதிகமாகவே இருக்கின்றது.

    எத்தனை வேறு மொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள், எத்தனை நம் தலைமுறை எழுத்தாளர்கள் கவிஞர்கள், அவர்கள் படைப்புகள் சார்ந்து ஆரோக்கியமான விவாதங்கள் - எத்தனை நிபுணர்கள் இந்த இலக்கிய இயக்கத்தை பற்றி வியந்துள்ளனர்.

    வாசகர் ஒவ்வொருவருக்கும் அணுக்கமாக பதிலும் உரையாடலும். இணையத்தின் துணையும் வேகமும் இருந்தால் கூட.. இது எப்படி சாத்தியம் எனும் ஆச்சரியம் மேலோங்கும். தவிர கதைகள், கட்டுரைகள், பயணங்கள்..

    ஜெயமோகன் விவாதங்களை ஆழத்திற்கு தான் கொண்டு செல்வார். தன்னையும் அவர் தெடங்கிய இயக்கத்தையும் பற்றி பேசியதே இல்லை. நயத்தக்க நாகரீகம் அது.

    சிறப்பாக கோடிட்டு காட்டிய சாரு அவர்களுக்கு நன்றி.

    சியமந்தக மணி பெற்ற அனைவரும் சீரும் சிறப்பும் பெற்றதாக ஸ்ரீபாகவத தொன்மம் உண்டு. ஜெயமோகன் மீதுள்ள அன்பினாலும், தொடர்ந்து வாசிப்பதாலும், அந்த மணியே அவர் தானோ என தோன்றுகிறது.

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை. அராத்து புத்தக அறிமுக கூடுதல் ஓர் இல்லாத எதிர்ப்பை நீர்த்த நிலையில் இந்த எழுத்து வலுவூட்டும் உங்கள் எதிர்பார்ப்புகளை.... முன்னெடுப்புக்கு நன்றி.

    ReplyDelete
  4. சாரு,ஜெயமோகன்,எஸ்.ரா மூவரும் ஒன்றாக பயணித்தவர்கள்.மூன்றும் வெவ்வேறு திசைகள்.இவர்கள் பெயரில்லாமல் இலக்கிய பத்திரிக்கைகள் இல்லை.மூவரில் பகடியில் இளையவர்களை கவர்வதில் முன்னவர் சாரு.யதார்த்த சித்தரிப்பில் எஸ்.ரா.காவிய யுகத்தினை மீண்டும் பிறப்பித்ததில் ஆசான்.

    ReplyDelete
  5. படிக்கப் படிக்க ஒருவித நெருக்கம் அணுங்குகிறது.அவர்கள் இருவரும் நெருங்கிக்கொள்கிற அன்பின் நெருக்கம்,பிறகு இரு வேறு துருவங்கள் நம்மை நெருங்கிவருகிற நட்பின் நெருக்கம்,எழுத்துக்களிலெல்லாம் ஒருவித நெகிழ்வின் நெருக்கமும் இருக்கின்றது.அதுதான் கண்களில் நீர்கோர்க்கோர்த்துக் கொள்ளச் செய்கின்றது.ஜெ.மோ என்பது வானுயர பிம்பம்

    ReplyDelete
  6. நவீன தமிழ் இலக்கியத்தின் மும்மூர்த்திகள் ஜெயமோகன், சாருநிவேதிதா மற்றும் ராமகிருஷ்ணன். வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏

    ReplyDelete