காலம் செல்வம் ஜெயமோகனுடன் |
எனக்கு சகோதரர்கள் இல்லை. நான் பிறப்பதற்கு முன் ஒரு அக்காவும் நான் பிறந்தபின் ஒரு தம்பியும் பிறந்து கொஞ்ச நாளிலேயே இறந்து போனார்கள் என்று அம்மா சொன்னா.
எனக்கு ஒரு சகோதரரும் இல்லாவாழ்வு. ஆனால் நண்பர்களால் என் வாழ்வு காலம் முழுக்க ஆசிர்வதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் ஜெயமோகன் நான் அடைந்த நண்பர்களில் முக்கியமானவர்.
நட்புக்கு அவர் கொடுக்கும் முக்கியம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.
சமீபத்தில் என் நண்பரும் கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் இயக்குனருமாகிய அ. முத்துலிங்கம் “வெண்முரசு” ஆவணப் படத்தை ரொறோன்ரோவில் வெளியிடும் பொறுப்பை, என்னிடமும் நண்பி உஷா மதிவாணனிடமும் கொடுத்துவிட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் அமெரிக்கா சென்றுவிட்டார்.
படம் ஓடுவதற்கு சினிமா கொட்டகையும் வாடகைக்கு எடுத்தாயிற்று. வரக்கூடியவர்களை தெரிவு செய்து பல்வேறு வழிகளில் அழைப்புக்களை அனுப்பியாயிற்று.
படம் ஓடும் நாள் நெருங்க, நெருங்க எனக்கு பதட்டம் தொடங்கியது.
முதலாவது பெரும்வியாதி பேரிடர் காலம்.
இரண்டாவது எங்களுக்கு இருக்கும் ஆதரவை போல் தொடரும் எதிர்ப்பு.
இந்த எதிர்ப்பு கொடுக்கல்,வாங்கலாலோ அல்லது பெரிய கொள்கை பிரச்சனையாலோ வருவதில்லை.
யேசுபிரான் கடல் மீது நடந்தார் என்று சொன்னால் அவருக்கு நீந்தத் தெரியாதோ எனக் கேட்கும் விதண்டாவாத மனநிலை.
யார் என்ன செய்தாலும், சொன்னாலும் அதற்கு எதிராக ஒன்று சொல்லாமல் படுத்து நித்திரை கொள்ள முடியாமல் இருக்கும் தமிழ் மரபின பாரம்பரியத்தால் வரும் எதிர்ப்பு.
ஒரு குறிப்பிட்ட தொகை மக்கள் இந்த படத்திற்கு வராவிட்டால் அது ஜெயமோகனுக்கோ அல்லது அந்த படத்தை தயாரித்தவர்களின் தோல்வியல்ல. என்னுடைய வாயும் என்ரை செய்கைகளும் தான் காரணமாய் இருக்கும் என்று எண்ணத் தொடங்கினேன்.
கடுமையாக பேசத்தெரியாத முத்துலிங்கம் மென்மையாக “ஜ ரோள் யு” செல்வம் …..என ஏதாவது சொல்லுவார் என பயம் வந்த்து
உஷா நம்பிக்கையுடன் இருந்தார்.
நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்த பேரிடர் காலத்திலும் அதிக மக்கள் வந்தார்கள். படம் முடிய பலர் வந்து மிக அழகாக எடுக்கப்பட்ட ஆவணப்படம் என பாராட்டிச் சென்றார்கள்.
படம் முடிந்து கோப்பிக் கடையில் இருந்து கதைத்த நண்பனுக்கு சொன்னேன். ஜெய மோகனுக்கு இந்த வருடம் வயது அறுபது ஆகப் போகின்றது என்று.
“இப்பத்தான் அறுபது வயதோ, நான் நினைச்சேன் ஒரு எண்பது வயதாவது இருக்கும் என்று அவர் சொல்ல”.
ஏன் அப்படி நினைச்ச நீ என்று நான் கேட்க.
“தான் தமிழ் வாசிக்க தொடங்கிய நாள் முதல் அறிகின்ற பெயர். இதைவிட அவர் எழுதிய புத்தகங்களின் பெயரை பட்டியலிடத் தொடங்கினான்.
நீ ஆளை நேரே பார்க்கவில்லையோ? இங்கே கனடாவுக்கு இரண்டு மூன்று தடவை வந்தாரே என.
ஒரு எழுத்தாளனை நேரே பார்க்கப்படாது என்ற கொள்கை தனக்கு இருக்கு. புத்தகங்களோடையே உறவு முடிந்து போகவேண்டும் என்றுவிட்டு, அதைவிட ஜெயமோகனுடன் பழக்கம் வைச்சால் எங்களில் ஒரு பகுதி ஆட்கள் முகநூலில் வாட்டி எடுப்பாங்கள்
நீ அவரை அடிக்கடி சந்திக்கிறவர்தான். ஆள் எப்படியிருப்பார் எனக் கேட்டார்.
எங்களைப் போலத்தான் இருப்பார். வெளிநாட்டிற்கு போறதற்கு காசுகட்டி போட்டு காத்திருக்கிற யாழ்ப்பாண பொடியங்களின் அப்பாவி முகம் தான் அவருக்கும்.
காசும் தர மாட்டான், வெளிநாட்டுக்கும் அனுப்பமாட்டான் என்ற இழுபறிபட்ட பின் எங்களுக்கு வரும் அந்த கோப முகத்தையும் பார்த்திருக்கிறேன் என அவர் சிரித்தார்.
2001 ஆம் ஆண்டு கோடை முடிகின்ற காலத்தில் ரொரண்டோ பியர்சன் விமான நிலைய வாசலில் நானும் முத்துலிங்கமும், மகாலிங்கமும் அவருக்காக காத்திருந்தோம்.
எங்கள் ஒருவருக்கும் அவரை முன்பு தெரியாது. முத்துலிங்கமும், நானும் வருகின்ற தென்னாசிய முகங்களுக்கு எங்கள் சிரிப்பை அளித்துக் கொண்டிருந்தோம். யார் திருப்பி சிரிக்கிறாரோ அவரை ஜெயமோகன் எனக் கட்டிப்பிடிப்போம் என எங்கள் மனதில் திட்டம். மகாலிங்கம் நிதானமாக இருந்து தூரத்தில் வந்த ஜெயமோகனை அடையாளப்படுத்தினார்.
அன்று செல்வம் என்று அவர் பிடித்த கை இன்று வரை விடவில்லை.
ஜெயமோகனின் பெயரை பார்த்தது, காலச்சுவடு சஞ்சிகையில். அதன்பின் காலம் சென்ற என் அன்பு நண்பன் குமாரமூர்த்தி பின்தொடரும் குரலின் நாவல் பற்றி எங்கையோ கேள்விப்பட்டு அதை சென்னையில் யாரிடமாவது சொல்லி வேண்ட வேண்டும் என வற்புறுத்தினார்.
புத்தகமும் வந்தது. அதை பங்காய் வாசிப்போம் என முடிவு செய்தோம். இரண்டு பேரும் 5 மைலுக்கு குறைந்த தூரத்தில் தான் இருந்தோம். ஓர் இரவு அவர் வாசித்து தந்தால் அடுத்த இரவு நான் வாசிப்பது.
ஒரு நாள் மகனை விளையாட விட்டுவிட்டு ஒரு பூங்காவில் இருக்கையில், குமார்மூர்த்தி புத்தகத்தை கொண்டு வந்து தந்துவிட்டு அதை திரும்பவும் வேண்டி, பூங்காவின் புல்தரையில் அமர்ந்து ஒரு பக்கத்தை தேடி அதை வாசித்துவிட்டு கண் கலங்கியபடி திருப்பித் தந்தான். நான் சிரித்துக் கொண்டு ஏன் மூர்த்தி அழுகின்றீர்கள்? விட்டுவிட்டு வந்த இயக்க ஞாபகம் வருகிறதோ என கேட்டேன்.
அருணாசலத்தின் மனைவி நாகம்மை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் எனக் கேட்க?
நான் வாசித்து முடித்து சொல்கிறேன் என்றுவிட்டு, நீங்கள் ஏன் கண்கலங்கினீர்கள்? எனத் திரும்ப திரும்ப கேட்க – இதில் ஒரு கடிதம் இருக்கு. திரும்ப திரும்ப அதை வாசிக்க எனக்கு ஆறுதலாக இருக்கு. அந்த ஆறுதல் தான் கண்ணீரை வரவைக்குது என்று சொன்னார்.
இது நடந்து ஒரு ஐந்தாறு மாதத்துக்குள் மூர்த்தி இறந்து போகிறார். அப்போது அவர் பல்வேறு பிரச்சனைகளில் அலைக்கழிந்து கொண்டிருந்தார். நோய் ஒரு பக்கம், அதனால் வந்த குடும்ப சிக்கல், காணாமல் போன இரண்டு தம்பிமார் என உடைந்து போய் இருந்தார். இந்த புத்தகம் அவரை பெரிதாக பாதித்து இருந்தது. எப்படியும் இதை எழுதியவரை தமிழ்நாட்டிற்கு போய் சந்திக்கவேணும் என திட்டமிட்டு இருந்தார். அதெல்லாம் சரிவரவில்லை.
பின்தொடரும் குரலின் நிழலை வாசிச்சுவிட்டு ஜெயமோகனின் விலாசத்தை தேடிப்பிடித்து ஒரு கடிதம் போட்டேன். வெறும் உணர்ச்சி வரிகள். ஜெயமோகனுக்கு அந்த நாள்களில் கிடைத்த மிக மோசமான கடிதமாக இருக்கலாம். ஆனால் அவர் பதில் போட்டிருந்தார்.
என் நண்பன் குமார்மூர்த்திக்கு கிடைக்காத வாய்ப்பு ரொறோன்ரோவிலேயே அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
விஷ்ணுபுரத்தை படித்த முத்துலிங்கம் அந்த மொழியில் மயங்கி போயிருந்தார். இதைவிட மணிவேலுப்பிள்ளை என்கின்ற என் இன்னொரு நண்பர் மொழியென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், நோபல் பரிசு பெறக்கூடிய எழுத்து என சிலாகித்துக் கொண்டிருந்தார்
ஜெயமோகனை இங்கு வரவழைப்பது என முத்துலிங்கம் முடிவெடுத்துவிட்டு நான் ஜெயமோகனை கனடாவுக்கு கூப்பிடுவதற்காக முயற்சி செய்யப் போகிறேன். மகாலிங்கமும் நீங்களும் தான் எனக்கு துணை எனச் சொன்னார்.
அதுதான் ஜெயமோகனின் முதல் வெளிநாட்டு பயணம் என நினைக்கின்றேன். வந்து எங்களை கட்டியணைத்து கைகுலுக்கி சில நிமிடங்களிலேயே பேசத் தொடங்கிவிட்டார்.
இந்த நீண்ட பயணத்தில் அவர் பார்த்த முகங்களை, எத்தனை எத்தனை விதமான மானிடம் என்று பேசிய வண்ணமே என் காரில் ஏறும்போது ஓட்டுநர் இருக்கையில் ஏற வெளிக்கிட்டார். நீங்கள் கார் ஓட்டப் போறிங்களோ என திறப்பை கொடுக்க வெளிக்கிட, மகாலிங்கம் தான் இந்தியாவில் ஓட்டுநர் இருக்கை பக்கம் மாறித்தானே இருக்கிறது எனச் சொல்லி அவரை பயணிகள் பக்கத்தில் அமரச்செய்தார்.
ஆனால் இங்கிருந்த மூன்று கிழமையும் காரில் ஏறும் போது முதலில் ஓட்டுநர் இருக்கைக்குத்தான் ஏற வெளிக்கிடுவார். இதை நான் சிரித்துக் கொண்டு முத்துலிங்கத்திடம் சொன்ன போது, பெரிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் இப்படித்தான் வேறு சிந்தனையில் இருப்பார்கள்.
என் மனைவி டைனிங் ரூமில் இருந்து சாப்பிட அழைக்கும் போது எல்லாம், ஒவ்வொரு அறையாய் தேடி தேடித்தான் வருவார். ஆகவே நானே போய் அவரின் அறையில் இருந்து அழைத்து வருவேன் என்றார்.
அவர் வந்த நாட்களில ஒரு புத்தகக் கண்காட்சியும், கூட்டமும் நானும் ரதனும் ஒழுங்கு செய்தோம்.
அக்கூட்டத்தில் அவர் பேசிய சங்க இலக்கியம் பற்றிய பேச்சு பெரும் பாராட்டை பெற்றது. அப்பேச்சுதான் ஆனந்த விகடனில் சங்க இலக்கியம் பற்றிய முதாவதாக வந்து பெரும் பிரபல்யம் பெற்றது.
ஜெய மோகனின் எல்லா நாவல்களும் வாசித்தேன். காடு, கொற்றவை, ஏழாவது உலகம், இவையெல்லாம் தவம் வேண்டி வந்த எழுத்து. ஆனால், மற்றவர்களால் கொஞ்சம் எதிர்ப்பை சம்பாதித்த நாவலான பி.தொ. குரல் நாவல் என் மனத்தில் நின்றுவிட்டது. இன்றுவரை அந்நாவலை தொடர்ந்து என்மனதில விரிந்துகொண்டேயிருக்கும். இந்திய தமிழ் வாசகர்களால் அது புரியப்பட்டது எப்படியோ தெரியாது…ஒரு ஈழத்தவனான என் அனுபவங்களூடாக அது ஒரு பெரிய தாக்கத்தை இன்று வரை தருகின்றது.
“ஒரு சிறு ஆயுதம் போதும் நம்மை மண்டியிட வைப்பதற்கு”
பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் சுரண்டப்பட்டோம். ஆனால் நீதி நம் பக்கம் இருந்தது. நாம் தலை நிமிர்ந்து நின்றோம். அந்த நீதியை நாம் இழந்து விட்டோமெனில், இவ்வுலகையே வென்றாலும் எந்த பலனும் இல்லை’.
அது பற்றி இப்படியே சொல்லிக் கொண்டுப் போகலாம்.
அவர் முதல் தடவை வந்தபோது ஒருகிழமை என் வீட்டில் நின்றார். என் குடும்பமே அவருக்கு பழக்கமானது. அன்று விஷ்ணுபுரம்தான் அவருடைய பெரிய முகவரி. அவர் இன்னும் பெரிதாக பிரபலய்மாகவில்லை. இன்று அவர் எல்லாவிதங்களிலும் பெரிதாக அறியப்பட்ட எழுத்தாளர்.
இன்றும் அதே நட்பான ஜெய மோகன்தான்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் தான் ஒரு தடவையும் இந்தியா பார்க்கவில்லை என்ற நச்சரிப்பு தாங்காமல் மனைவியை சென்னைக்கு அழைத்துச் சென்றேன். நான் போவது சென்னை புத்தகக் கண்காட்சிக்குத்தானே. இரண்டு நாள் மனைவியை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல, கொழுவலை போடத் தொடங்கி விட்டா. இந்த புத்தகங்கள் தானே எங்கடை பேஸ்மனிலும் படுக்கை அறையிலும், சாப்பாட்டு மேசையிலும் பாத்ரூமிலும் கிடக்கு. அதுக்கேன் இஞ்சை கூட்டிவந்தனி என கொழுவல் பெரிதாக வந்து கொண்டிருந்தது. சரி நாகர்கோயில் போய் சு. ரா.வின் அன்பு மனவி கமலா அம்மாவையும் பார்த்து அப்படியே ஜெயமோகனையும பார்த்து எங்களுக்கு விருப்பமான புனிதர் தேவசாகயம்பிள்ளை கோயிலுக்கும் போய், அப்படியே வேளாங்கண்ணிக்கும் போய் என புளுகத தொடங்கினேன்.
நானும் மனைவியும் சென்னையில் நிற்பதாக சொன்னபோது அடுத்த நாளே வேளாங்கண்ணி போவதற்குரிய முன்பதிவு செய்யப்பட்ட ரிக்கற்றுடன் நண்பர் ஓருவரை அனுப்பி வைத்தார்.
வேளாங்கண்ணிக்கு போய் இறங்க இன்னொரு நண்பர் காருடன் காத்திருந்தார். கோயில் கோபுரத்தையும் கடலையும் பார்க்கும் வண்ணம் ஒரு பெரிய தங்கும் விடுதியில் எங்களை அந்நண்பர் கொண்டே விட்டார்.
இது கொஞ்சம் பெரிய விடுதிதான். பணம் பெரிதாக வரும் என்று எண்ணிக்கொண்டு என்னுடை விசா கார்டை கவுண்டரில் கொடுத்தபோது, அதற்கு ஏற்கனவே காசு கட்டியாச்சு எனச் சொன்னார்கள்.
இதேபோல் கன்னியாகுமரியில் கடலையும், சூரிய உதயத்தையும் பார்க்கிற மாதிரி விடுதி. மனைவி சொன்னா. கண்விழித்தவுடன் கடலையும் சூரியனையும் பார்த்த மனைவி சொன்னா இந்தியாவென்றால் இந்தியா தான். இப்படி ஒரு சூரியனை பாரிசிலோ, ரொறொன்ரோவிலோ, ஜெயர்மனியிலோ பார்க்க கிடைக்கவில்லை. வெள்ளைக்காரன் நாடெல்லாம் அரைச்சூரியன் தான் – என்றா.
ஐந்து சதத்திற்கு பிரயோசனம் இல்லா இலக்கிய வேலை என்று கிழமைக்கு இரண்டு தரம் பேகின்ற மனைவி, நான் சும்மா பேசறதுதான் உங்கடை வேலைகளால் தானே. ஜெய மோகன் போன்றவர்களுக்கு உங்களை தெரிய வந்தது.
உங்களுக்கும் ஏதோ மதிப்பு இருக்குத்தான். அதைவிட வேளாங்கண்ணி கோயில் அடியில்வைத்து ஜெயமோகனின் நண்பர் ஒருவர்,நான் எழுதிய “எழுதித்தீரா பக்கம்” புத்தகத்தை புகழ்ந்து பேசி, இரண்டுபேருக்கும் பொன்னாடை போர்த்தினார். நாங்கள் திடுக்கிட்டுப் போனோ ம்.
பொன்னாடையுடன் நிற்கும் படம் சமூகவலைதளங்களிலும் பரவ விட்டார். எனக்கு பெரிய வெட்கம். இந்த பொன்னாடை போர்த்தலை – பன்னாடைக்கு பொன்னாடையென ரொறொன்ரோவில் எத்தனை தரம் நக்கல் அடித்து பேசியிருப்பேன்.
அவர் ஒழுங்கின்படி தஞ்சாவூர் பெரிய கோயில, முள்ளிவாய்க்கால் நினைவு ஆலயம், இப்படியே மதுரை, திருச்சி போய் சென்னை வந்தடைந்தோம்.
மனைவி கனடா வந்தவுடன் தன் சகோதரிகளுக்கும், நண்பிகளுக்கும் இந்தியாவின் பல பகுதிகளைப் பார்த்ததாக சொல்லத் தொடங்கினா., புளுகாதையுங்கோ தமிழ்நாட்டில் சில பகுதிகளைத்தான் பார்த்தானங்கள் என்று நான்சொல்ல வெளிகிட அதுக்கென்ன. மற்றப் பகுதிகளும் இப்படித்தான் இருக்கும்.. அதுவும் ஜெயமோகன் புண்ணியத்தால்தான் இவ்வளவாவது பார்த்தோம் .
அல்லாவிடுல் நீ அந்தபத்துநாளும் புத்தகக் கண்காட்சியில் நின்று அவிந்துகொண்டிருப்பாய் நானும் சரவண பவனில் சாப்பிட்டுவிட்டு சாந்தோம் கோயிலையும் ரங்கநாதன் தெருவையும் பார்த்து விட்டு இது தான் இந்தியா என்றுதான் வந்திருக்க வேண்டும்.
வீட்டில நண்பர்கள் வந்தால் இலக்கியம் பேசாமல் விடமாட்டோம். இலக்கியம் பேசினால் ஜெய மோகனின் பெயர் வராமல் போகாது.
அப்படி வரும்போது ஜெயமோகன் பற்றி ஈழக்கவிதை, இந்தியராணுவம் என ஜெயமோகன் இப்படி சொல்லுகிறார் என யாரும் மாறி பேச வெளிக்கிட்டால் நான் ஒன்றும் பேசத் தேவையில்லை. மனைவியே அந்த விவாதத்தை பார்த்துக் கொள்வா
நான் எத்தனையோ தடவை சொல்லியாயிற்று. எனக்கு ஜெய மோகன் சொந்தக்காரர் இல்லை. ஒன்றாய் படித்தவர் இல்லை.
எப்படி சு.ரா. பிடித்ததோ அப்படி அவரைப் பிடித்தது. தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஒருவரிசை மனத்தில் இருக்கு. கம்பன், பாரதி, புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி அந்த வரிசையில் வந்தவர் ஜெய மோகன்.
ஜெய மோகன் ஈழம்பற்றி அல்லது ஈழத்து எழுத்தாளர்கள் பற்றி ஏதாவது சறுகின்ற மாதிரி எழுதினால், சொன்னால் நான் அதை வாசிக்க தேவையில்லை.
டெலிபோனில் மங்களம் வரும் ஏன் என்சாதியை, இழுத்துகூட வாழ்த்துகள் வரும். முகநூலில் புகழாஞ்சலி நடக்கும்.
சமீபத்தில் பார்த்து மகிழ்ந்தது. மலேசியாவில் ஜெய மோகனின் பேசிய பேச்சு தொடர்பாக பெரும் வம்புகள் ஈழத்து எழுத்து போரளிகள்இடையே நடந்துன
முன்நாள் விடுதலைபுலிகளின் ஆதரவாளர் என தன்னை நம்பும் ஒருவர் முன்னாள் “புளட்” அமைப்பு முக்கியஸ்தருக்குஒரு புகைப்படம் அனுப்பி உதவினார். அவர் அதை முக நூலில் போட்டிருந்தார், நான்எங்கையோ நண்பர்களுடன் இருந்து தண்ணி அடிச்சுக்கொண்டு மொட்டைத் தலையுடன் ஒரு அழகற்ற நிலையில் இருக்கும் படத்தைப் போட்டு அதில் என் தலைக்கு மாத்திரம் சிவப்பு வட்டம் போட்டு, பொலிசாரால் தேடப்படும் குற்றவாளி போல் – இவர் தான் செல்வம்… ஜெயமோகனின் நண்பர். (ஜெயமோகனையோ .என்னையோ தமிழ் இலக்கிய வாசிப்போ அறியாத ஒருவர் அந்த சிவப்பு வட்டம் போட படத்தை பார்த்தால் கனகாலமாய் ரொரன்ரோ போலிஸ் தேடிதிரிந்த ஆள் கடசியில்பிடிபட்டுவிட்டான் என நினைப்பார்கள்) இதில் அர்த்தம் இவரைக் கண்டால் விடாதேயுங்கோ என்ற மாதிரி
எனக்கு சமத்துவமான ஓர் ஈழக் கனவு இருக்கு அது போல அவருக்கும் அவர் நாடு சார்ந்த பெருமையும் கனவும் இருக்கு. இவை முரண்களை கொடுத்தாலும் அவர் கருத்து அவரோடை என்னுடைய கருத்து என் கருத்து என்னோடை .
என்ரை பிள்ளைகள் கூட என் எண்ணங்கள் வழி வரமாட்டார்கள். இரண்டு பேர் ஒன்றாய் சேர்ந்து செபிக்கலாம். சல்லாபிக்கலாம் ஆனால் ஒரு கருத்தில் இருக்க முடியாது. இது வாழ்வனுபவம். இன்றைய தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் ஜெயமோகன் தான் தலைமகன் என்ற நினைப்பு இருக்கு. தனிப்பட்ட நட்பையும் தாண்டி என்னை அவருடன் இணைக்கும் ஒற்றைச்சொல் இலக்கியம். அவர் சொல்வது எல்லாம் சரியென்று நான் சொல்ல வரவில்லை.
என் நண்பர் என் கே மகாலிங்கம் நான் மதிக்கும் ஒரு பெரிய ஆள். தளைய சிங்கத்துடன் சேர்ந்து இயங்கியவர். நான் கூட வெண்முரசை இப்பவும் வாசித்துக் கொண்டிருப்பவன். வெண்முரசு எழுதி முடியக்கே அவரும் வாசிச்சு முடித்தவர். ஜெயமோகன் இன்றைய காலத்தின் கம்பர் எனச் சொல்வார்.. ஜெயமோகன் முதல் தடவை வந்தபோது நான் ஒழுங்கு செய்த இரண்டாவது கூட்டத்தில் பேசும்போது பேச்சோடு பேச்சாக பாரதி, மகாகவி என்ற வரிசையில் வரமாட்டார் என சொல்ல எனக்கு பக்கத்தில் இருந்த மகாலிங்கம் கொஞ்சம் நடுங்கிப் போனார். விஷ்ணுபுரம் என்ற மகத்தான நாவல் எழுதினாலும் சின்ன பெடியன் தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது போல் இருந்தார். ஆனால் கூட்டம் முடியும் மட்டும்
“ நிற்பதுவே, நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ?”
என்ற மாதிரி விரக்தியுடன் இருந்தார். நானெல்லாம் இலக்கியத்தால், நட்பால் ஜெயமோகனை பின்தொடருபவன். அவரோ ஜெயமோகனை ஒரு அறமாக நினைப்பவர்.
அந்நாள்களில் எனக்கும் ஒரு பிரச்சனை வந்தது. அம்மா வந்தாள், மோகமுள் நாவல்களை கொண்டாடி ஜானகிராமன் பற்றி ஜெயமோகனுடன் பேசியபோது ‘அசோகமித்திரனை படித்திருக்கின் -றீர்களா?’ என்று கேட்டுவிட்டு ‘அசோகமித்திரன் தமிழ் கண்ட பேரிலக்கியவாதி. ஜானகிராமன் நல்ல கதைகளை எழுதிய சற்று மேம்பட்ட வணிக எழுத்தாளர்’ என்றார். எனக்கு காதைப் பொத்தி அடித்த மாதிரி இருந்தது. இவை எல்லாவற்றையும் தாண்டி ஜெயமோகன் எனக்கு ஒரு ஆசிரியர் தான். எனக்கு மிகவும் பிடித்த அவருடைய நாவல் கொற்றவை. அதை அவருடைய அன்பு தாயார்
“காளி வளாகத்து வீட்டில் பத்மாவதி அம்மா விசாலாட்சி அம்மாவுக்கு படைக்கிறேன்” என சமர்ப்பணம் செய்து
“ அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்”
“ நீலத்தின் எல்லை இன்மை வானம், நீலத்தின் அலைகளே கடல் எனக் கவிதையாக போகும்–
காடு நாவல் வாசித்து கன காலத்திற்குப் பின்னும் ”, தம்புரானே, தம்புரானே” என்ற நீலியின் ஒற்றைச் சொல் என்னைக்கலைத்துக்
கொண்டு வாற மாதிரி இருக்கு.
சாகறதுக்கு, எப்போ நாங்கள் வாழ்ந்தோம்? - வெள்ளை யானையில் ஒரு வரியை வாசிச்சு- எத்தனை மனிதர்களை நினைத்தேன்.
வாசிச்ச சிறுகதைகளில் மனதை விட்டு அகலாது ‘நூறு நாற்காலிகள்’. “இப்போது ஒரு ஊகக் கேள்வி. நீங்கள் அதிகாரியாக இருக்கும் வட்டத்தில் நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி. ஒரு பக்கம் நியாயம் இருக்கின்றது. இன்னொரு பக்கம் உங்கள் சாதியினர் இருக்கின்றார்கள் என்றால் என்ன முடிவு எடுப்பீர்கள்.
நியாயம் என்றால் என்ன? வெறும் சட்ட விதிகளும் சம்பிரதாயங்களுமா நியாயத்தை தீர்மானிப்பது? சமத்துவம் தான் விழுமியங்களிலே மகத்தானது, புனிதமானது. ஒரு நாயாடியையும் இன்னொரு மானுட உயிரையும் இரு பக்கங்களில் நிறுத்தினால் சமத்துவம் என்ற தர்மத்தின் அடிப்படையில் அப்போதே நாயாடி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டவன் ஆகிறான். அவன் என்ன செய்தாலும் அது நியாயப்படுத்த பட்டு விடுகிறது.
அவன் கொலை செய்திருந்தால்?
சார் கொலையே ஆனாலும் நாயாடி தான் பாதிக்கப்பட்டவன்.”
இப்படியே ஞாபகத்திலிருந்து எழுதிக் கொண்டே போகலாம். திரும்பவும் சொல்கிறேன். இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த வரம் ஜெயமோகன்.
அவர் சோர்ந்து போய் யாரும் பார்த்ததில்லை என்பார்கள். நான் அவர் சோர்வையும், கவலையையும் ஒருதடவை உணர்ந்திருக்கிறேன்.
சு.ராவின் இறப்பை அறிந்தவுடன் சு.ராவின் மகன் என் நண்பர் கண்ணனுக்கு தொலைபேசி எடுத்தேன். உடனே கண்ணனை பிடிக்க முடியவில்லை. அடுத்துஜெயமோகனுக்கு எடுத்தபோது பெரும் சோகத்துடனும் சோர்வுடனும் என்னிடம் பேசினார். அப்படிஓரு சோர்வான குரலை அதற்க்கு முன்னும் பின்னும் நான் கேட்க்கவில்லை
பெரிதாக எழுதத்தெரியாத நான் இக்கட்டுரையை எழுதுவது ஒரு நன்றிக்கடன். காலம் சஞ்சிகை வருடத்தில் 2, 3 தான் இப்போது வருகின்றது. எல்லோராலும் பெரிதாக அறியப்பட்டது இல்லை. ஆனாலும் ஏதாவது எழுதுங்கள் என்று கேட்டால் எவ்வளவு வேலைகள், நெருக்கடிகளிலும் கட்டாயம் ஆக்கம் தருவார் . தமிழ்நாட்டில் ஈழத்து இலக்கியவாதிகளை பெரிதாக அறிமுகப்படுத்தியதில் ஜெயமோகனின் பங்கு முக்கியமானது. அதில் பல கட்டுரைகள் காலத்தில் வந்தது.
அடுத்தது என் ”எழுதித்தீரா பக்கங்கள்’ என்ற புத்தகத்திற்கு முன்னுரை தந்தது. அதன் புகழுக்கு ஜெயமோகனின் முன்னுரையும் ஒரு காரணம்.
தேவத்தாய் மரியாளைப் பற்றி இப்படி எழுதும் என் நண்பனும் அவர் குடும்பமும் சந்தோஷமாகவும் சுகமாகவும் வாழ என் பிறந்தஊராகிய சில்லாலை கதிரைமாதாவே- , கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!
உம்மை வேண்டுகின்றேன்!
அருமையான பதிவு சார்
ReplyDelete