ஜெயமோகனின் மீதான வியப்பு - சுப்ரபாரதிமணியன்

ஜெயமோகன், வாஸந்தி, சுப்ரபாரதிமணியன் (படம்: தமிழ் விக்கி)


‘கனவு’ இந்த ஆண்டு நூறாவது இதழ் கொண்டுவந்திருக்கிறது. ‘கனவு’ இதழின் ஐந்து இதழ்களை சிறப்பம்சங்களுடன் ஜெயமோகன் கொண்டுவந்தார் என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். அப்போது ஜெயமோகன் திருப்பத்தூரில் வசித்துவந்தார். நான் பக்கத்து வீட்டில் இருந்தேன்.


சுந்தர ராமசாமி சிறப்பிதழ், அசோகமித்திரன் சிறப்பிதழ் உள்ளிட்டவை அந்த இதழ்கள். கனவின் செயல்பாடுகளில் அவர் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். கனவின் ஆரம்ப இதழ் முதற்கொண்டு அவரின் பார்வைக்குச் சென்றிருந்தது.


கனவின் பல இதழ்களில் அவரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலும் கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.


வேலூர் திருப்பத்தூருக்கு நான் செகந்திராபாத்திலிருந்து மாற்றலாகி வந்து பணிபுரிந்துவந்தேன். அப்போது அருண்மொழிநங்கை அவர்களுக்கு திருப்பத்தூர் தபால் நிலையத்தில் வேலை கிடைத்தது. தர்மபுரி அங்கிருந்து பக்கம் என்பதால் ஜெயமோகன் திருப்பத்தூரில் வீட்டை எடுத்திருந்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் என் வீட்டிற்கு அருகில் அவருடையது. அப்போது அஜிதன் சிறு பையனாகத் துள்ளி விளையாடிக்கொண்டிருப்பான். ஜெயமோகனும் அருண்மொழிநங்கையும் வேலைக்குச் சென்றுவிட குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும் வீட்டைப் பராமரிக்கவும் ஒரு மூதாட்டி இருந்தார். அஜிதன் அப்பெண்மணியின் கட்டுப்பாட்டுக்கெல்லாம் இணங்குபவர் அல்ல. துள்ளி விளையாடி அந்த வீதியையே கலகலப்பு செய்துகொண்டிருந்தார். அவர் துள்ளி விளையாடும்போதுதான் ஜெயமோகன் அவரின் மேஜை அருகில் எழுதிக் குவித்து வைத்திருக்கும் தாள்களை நான் பார்த்திருக்கிறேன். படைப்புகள் சிறு மலையெனக் குவிந்து கிடக்கும். பல சிதறுண்டு கிடக்கும். அவற்றை ஒழுங்குபடுத்தினால் மேசையின் உயரத்திற்கு வந்துவிடும் என்பது போல் இருக்கும். அவரின் எழுத்து வேகமும் ஆர்வமும் அந்தத் தாள்களில் தென்படும். அந்த வேகத்தை அவர் இப்போது இன்னும் அதிகரித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்


அகில இந்திய சுற்றுலாப் பயணத்தின் திட்டத்தில் ஒருமுறை செகந்திராபாத்தில் இருந்த என் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போதுதான் முதல் முறையாக அவரைப் பார்த்த ஞாபகம். அவர் கையில் வாங்கி வைத்திருந்த குழந்தைகளுக்கான சாக்லேட் டப்பா குழந்தைகளுக்கு வியப்பு தந்தது. காரணம் மிகுந்த சிக்கனக்காரன் நான். எனவே உறவினர், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்போதும் ஜாக்கிரதையாகத்தான் செலவு செய்வேன். ஆனால் ஜெயமோகன் கையிலிருந்த சாக்லெட் டப்பா வட்ட வடிவில் நூற்றுக்கணக்கான சாக்லேட்டுகளைக் கொண்டிருந்தது. அந்த டப்பா அப்போதைக்கு வியப்பளித்த விசயம். அந்த டப்பாவின் வியப்பு போலவே வியப்பளிக்கிற சாதனைகளையும் அவர் தொடர்ந்து நிகழ்த்திவந்திருக்கிறார். அப்படித்தான் ஜெயமோகன் தன்னுடைய எண்ணற்ற படைப்புகளால் தமிழ் வாசகர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி தருபவராக இருக்கிறார்.


கதா விருதை டெல்லியில் பெறுவதற்காக இருவரும் ஒன்றாகச் சென்றிருந்தோம். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தோம். அந்தாண்டு கதா விருதை இந்திய ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மா வழங்கினார். அப்போது மலையாளத்திலிருந்து எம். டி. வாசுதேவ நாயர், என். எஸ். மாதவன் ஆகியோர் கதா விருது பெற்றார்கள். அந்த விழாவின்போது கன்னடத்து எழுத்தாளர் ஷான்பாக், டெல்லி தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன் போன்றோர் ஜெயமோகனின் படைப்புகளைப்பற்றி, அவற்றின் தீவிர அக்கறை பற்றி என்னிடம் கூறிய கருத்துகள் அவரின் படைப்புலகம் ஒரு மைல்கல்லாக எடுத்துக்கொள்ளவேண்டியதாக அப்போதே மாறியிருந்ததைக் காட்டின. அந்தச் சாதனைகளை அவர் தொடர்ந்து கைக்கொண்டார் என்பது முக்கியமானது.


நானும் தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்த காரணத்தினால் துறைசார்ந்த இடதுசாரி தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டவனாக இருந்தேன். ஜெயமோகனும் அந்தத் தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது எனக்கு உவப்பானதாக இருந்தது. தொழிற்சங்கம் சார்ந்த பெரிய தலைவர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது எனக்கு ஆச்சரியம் தந்தது. பின்னால் அவரது ஈடுபாடு இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கங்களைத் தவிர்த்துவிட்டது. மார்க்சிய பெரியாரிய படைப்புகள் மற்றும் தலைவர்கள் பற்றிய அவருடைய கருத்துகளும் ஒரு பெரிய பிளவை என்னுள் ஏற்படுத்தின. படைப்பிலக்கியத்தில் அவரின் வேகமும் சாதனையும் எப்போதும் சாக்லெட் டப்பா தந்த வியப்பையேத் தந்துகொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment