இப்படியாக, இன்று உருவெடுத்து நிற்கும் ஆளுமைகள் பலரையும் அவர்களுடைய முதல் படைப்பின் வழியே அறிந்துகொள்வதும் அதை ஆய்ந்துணர்வதும் எழுத்தைப் பழகும் ஒருவனுக்கு முக்கியமானதொரு பயிற்சி. அப்படி இதுவரை வாசித்த முதல் தொகுப்புகளின் அடிப்படையில் இரண்டு முக்கிய அவதானங்களை என்னால் முன்வைக்க முடியும். அசோகமித்திரன், கி.ரா. போன்று பிரசுரமான முதல் கதையிலிருந்து தங்களின் கடைசிக் கதை வரை தாங்கள் பற்றிக்கொண்ட மொழி, நடை மற்றும் இயங்குதிசையில் ஒரே விதமான நிதானத்தையும் தரத்தையும் கைக்கொள்பவர்கள் ஒரு சாரர். மறுபக்கத்தில் கோணங்கி போல ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கி படிப்படியாகத் தீவிரத்தை கைக்கொண்டு தனக்கென்று தனிப் பாதை வகுத்துக்கொண்டவர்கள் அல்லது அதற்கு எதிராகத் தீவிரமாகத் தொடங்கி பின்னர் வலுவிழந்து தணிந்து தேங்கி நின்றுவிட்டவர்கள் என்று மொத்த பயணத்திலும் ஒருவித லீனியரான வளர்ச்சியையோ வீழ்ச்சியையோ கண்டவர்களாக இருக்கிறார்கள். ஜெமோ இவ்விரு சாரர்களிடமிருந்தும் வேறுபடுகிறார். முதல் தொகுப்பிலேயே தன் வருகையைத் தீர்க்கமாக ஆழப் பதித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக இயங்கத் தொடங்கி, இந்த முப்பது வருடங்களில் அத்தீவிரத்தன்மையை சிறிதும் தணியவிடாத வேட்கையுடன் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் செயல்பட்டுவருகிறார்.
இன்று, ஜெமோவைக் கண்டடைந்த பலரும் அவருடைய புகழ் பெற்ற அறம் தொகுப்பு வழியாகவோ, அவர் தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் மூலமாகவோ, சமீபத்தில் வெளியான புனைவுக் களியாட்டுக் கதைகளை வாசித்தோ வந்தவர்களாகவே அதிகமிருப்பர். சமகாலத்தில் எழுதத் தொடங்கிய ஒரு படைப்பாளியைத் தவிர மற்றவர்களை அவர்களின் முதல் நாவல் / முதல் சிறுகதை/கவிதைத் தொகுப்பின் வழியாக அறிந்துகொள்வது அத்தனை சுலபமில்லை. அதுவும் ஜெமோவைப் போன்று காத்திரமாகச் செயல்படும் ஒரு படைப்பாளி தன் படைப்பூக்க காலத்தின் உச்சத்தில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளில் திகைத்து நின்றவர்களே அதிகம். அதே நேரத்தில், ஒரு படைப்பாளியின் ஆரம்பக்காலக் கதைகளைத் தேடி வாசிப்பதின் வழியே, அங்கிருந்து அவர் வந்து சேர்ந்திருக்கும் தூரம், தேர்ந்துகொண்ட பாதை, பற்றிக்கொண்ட கொள்கைகள், கண்டடைந்த மொழி, முரண்பட்டு நிறுவிய தர்க்கங்கள் என்று அப்படைப்பாளியின் ஒட்டுமொத்த ஆளுமை உருவாகி வந்த படிநிலைகளை அறிந்துகொள்ள இயலும். அப்படியாக ஜெமோவின் முதல் தொகுப்பான ‘திசைகளின் நடுவே’ வழியே அவர் உருவாகி வந்த பாதையை வாசித்தறிந்து மதிப்பீடு செய்யும் சிறு முயற்சியே இக்கட்டுரை.
இத்தொகுப்பு 1987–இல் தொடங்கி 1992 வரையிலான ஆறு வருட காலத்தில் எழுதப்பட்ட பதினாறு கதைகளைக் கொண்டது. இதற்கு முன்பே பல்வேறு புனைபெயர்களில் வேறு சில இதழ்களில் அவர் கதைகள் எழுதியிருந்தாலும், கணையாழியில் வெளியாகி இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ள ‘நதி’ என்ற சிறுகதையையே தன்னுடைய முதல் கதையாகக் குறிப்பிடுகிறார். கரோனா காலத்துப் புனைவுக் களியாட்டில் நாளொன்றுக்கு ஒரு கதை, இருபத்து இரண்டாயிரத்துச் சொச்சம் பக்கங்களைக் கொண்ட வெண்முரசு, மகத்தான புனைவுலகை கட்டமைக்கும் விஷ்ணுபுரம், கொற்றவை ஆகிய நாவல்கள் என்று பிரமாண்டங்களின் வழியே ஜெமோவை அறிமுகம் செய்துகொண்ட பலருக்கும் அவர் தன் முதல் தொகுப்புக் கதைகளுக்கு எடுத்துக்கொண்ட காலமான ஆறு ஆண்டுகளைக் காணச் சற்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இன்றும்கூட அவரின் சிறந்த கதைகளைப் பட்டியலிடும் ஒருவரால் இத்தொகுப்பிலுள்ள ‘படுகை’, ‘மாடன் மோட்சம்’, ‘போதி’, ‘லங்காதகனம்’ ஆகிய கதைகளைப் புறக்கணித்துத் தேர்ந்தெடுத்துவிட முடியாது என்பதே இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற போதுமானது.
கொஞ்சம் கூர்ந்து வாசித்தால், அவர் பிற்காலத்தில் எழுதிய பல்வேறு சாதனைப் படைப்புகளுக்கான ஊற்றுமுகம் இத்தொகுப்பில் இருப்பதை அறிந்துகொள்ளலாம். ‘படுகை’ கதையை வாசித்த ஒருவருக்கு ‘காடு’ம், ‘ஊமைச் செந்நாயு’ம் இயல்பாகவே மனதுள் எழுந்து வரும். ‘விசும்பி’ன் ஒரு துண்டு வானத்தை ஜகன்மித்யையிலும், வெண்முரசை ‘திசைகளின் நடுவே’யிலும் கண்டுகொள்வது அத்தனை சிரமமில்லை. புனைவுக் களியாட்டுக் காலத்தில் எழுதிய நூற்று இருபத்தாறு கதைகளையும் பல்வேறு தலைப்புகளில் விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாகச் சமீபத்தில் கிண்டில் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். அப்படிப் பதிப்பிக்கும்போது அக்கதைகளின் மையப் பொருளை முன்வைத்து ஒவ்வொரு தொகுப்புக்குமான கதைகளை வகை பிரித்திருந்தார்கள். அப்படிப் பிரிக்கப்பட்ட தொகுப்புகள் ஒவ்வொன்றிலும் சேர்க்கத் தகுதிகொண்ட ஆரம்பக் கதை ஒன்று இந்த முதல் தொகுப்பில் உண்டு.
இத்தொகுப்பின் பதினாறு கதைகளும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்டவை. இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ‘படுகை’, ‘லங்காதகனம்’, ‘போதி’ போன்ற கதைகள் நாவலாக எழுதப்படுவதற்கான விரிவும் செறிவும் கொண்ட களங்களைக் கொண்டவை. வார்த்தைச் சிக்கனம், குறிப்பால் உணர்த்துதல், தொடக்கம்-முடிச்சு-முடிவு என்று நான்கு பக்க அளவுக்குள் கதை சொல்லும் நவீனத்துவ பாணி கதைகளே கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அப்போக்கிலிருந்து முற்றிலும் விலகி வெளிவந்த ஒரு தொகுப்பாக இதைக் காணலாம். இதிலுள்ள கதைகள் பலவும் விரிவான உரையாடலை வாசகனிடத்தில் நிகழ்த்துகின்றன. மேலும் அவை எடுத்துக்கொண்ட களங்கள், சொல் முறை, தேர்ந்துகொண்ட வடிவ உத்தி என அனைத்தும் நவீனத்துவ பாணி கதைகளுக்கு மாறானவை. நவீனத்துவம் மூடி மறைத்தளிக்கும் ஒன்றை இவர் விரித்தெடுத்து விளக்குகிறார். அதன் வழியே வாசகனிடத்தே உரையாடலை நிகழ்த்துகிறார். தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவரான சுந்தர ராமசாமியின் பள்ளியிலிருந்து வந்தாலும் அன்னார் நம்பிய இலக்கியத்துக்கு எதிராக வந்து நின்று மற்றொன்றைப் படைத்து நிறுவுவது சாதாரணமானதல்ல. அதுவும், அவர் கோலோச்சிய ஒரு காலத்தில். அப்படி நிறுவுவது ஒரு பக்கம் இருந்தாலும் தான் அப்படி நிறுவுவேன் என்று முன்கூட்டியே கணித்து அதையும் தன் முதல் தொகுப்பின் முன்னுரையிலேயே குறிப்பிடுவதற்கு அசாத்திய தன்னம்பிக்கை வேண்டும்.
“இக்கதைகளின் பின்புலமாக உள்ள என் சமூக இலக்கிய பிரக்ஞைகளின் ஆக்கத்தில் சுந்தர ராமசாமிக்கும், மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவுக்கும் முக்கியமான பங்கு உண்டு. அவர்களை முற்றிலுமாக மறுப்பவனாக நான் ஆனால்கூட, அவர்களுடைய தொடர்ச்சியே ஆவேன்.”
முதலாம் உலகப் போர் காலத்தில் கலை இலக்கியத்தில் ஏற்பட்ட போக்கில், யாருமற்ற தனிமையை, நம்பிக்கை பிறழ்ந்த வெறுமையை என்று வாழ்வின் தீராத கசப்புகளை, அவிழ்க்க முடியாச் சிக்கல்களை முன்னிறுத்தி எழுதப்பட்ட படைப்புகளை நவீனத்துவப் படைப்புகள் என்று வரையறுக்கலாம். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மையத்தைக் கட்டுடைத்து, கவனத்தை விளிம்புக்கு எடுத்துச் சென்று அதன் வழியே முற்றிலுமாக புதியதொரு வாசிப்பைச் சாத்தியப்படுத்திய படைப்புகளை பின் நவீனத்துவப் படைப்புகள் எனலாம். இந்த அளவுகோல்களின் வழியே இத்தொகுப்பின் கதைகளை மதிப்பிடும்போது அவை அதிகமும் பின் நவீனத்துவத்தின் கூறுகள் வெளிப்படும் கதைகளாகவே இருக்கின்றன.
பின் நவீனத்துவம் அதிகாரம் ஓரிடத்தில் குவிவதை எதிர்க்கிறது. மையத்தைத் தகர்த்தல் அதன் முக்கிய கூறுகளில் ஒன்று. அப்படியான அதிகார மையம் செயல்படும் முக்கிய இடங்களாக அரசியல், மதம் போன்றவை இருக்கின்றன. அவ்வாறான அதிகாரத்தைக் குவித்து இயங்கும் ஒரு மடத்தின் கதை ‘போதி’. அங்கே அதிகாரத்தை இழந்துவிடாதிருக்க நடக்கும் போட்டி, வெளியே புனிதமாகவும் வணக்கத்துக்கு உரியதாகவும் இருக்கும் ஓர் இடத்துக்குப் பின் நிகழும் அருவருப்பான அரசியல் என்று அக்கதை விரிகிறது.
ஒரு மையத்துக்கு எதிராக மற்றொரு மையத்தை நிறுவுதல், மையத்தையே கேள்விக்கு உட்படுத்தி விசாரணை செய்வதன் வழியே புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றை பின் நவீனத்துவத்தின் முக்கிய அம்சங்களாக முன்மொழிகிறார் பின் நவீனத்துவ காலத்தின் மிக முக்கியமான தத்துவவாதியான தெரிதா. காடுகளை அழித்து, ஆற்றின் போக்கை மறித்து அணையெழுப்புவதையும் தேவைக்கு நீரைத் திறந்து மின்சாரம் எடுப்பதையும் அதன் வழியே அடையும் வளர்ச்சியையும் நவீனத்துவம் பாராட்டுகிறது. இது முழுக்க முழுக்க மனிதனை மையமாகக்கொண்ட ஒரு பார்வை. ஓடும் ஆற்றுக்கு ஒரு குரல் இருந்தால்? அது புரண்டோடும் மலைக்கும் காட்டுக்கும் தனியே ஒரு மொழியிருந்தால்? அதுவே ஜெமோவின் ‘படுகை’. இரண்டாயிரத்துப் பிறகு சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் உலகெங்கும் இக்குரல் ஓங்கி ஒலித்தாலும் அதை 1989-லேயே புனைவில் எழுப்பிய வகையில் ‘படுகை’ மிக முக்கியமான கதை. ஒரு வகையில் இன்று எழுதப்படும் சூழியல் புனைவுக்கெல்லாம் முன்னோடி.
பின் நவீனத்துவம் புனிதங்களைப் பகடி செய்கிறது. பன்மைத்துவத்தைக் கொண்டாடுகிறது. அப்படியாக மகாபாரதத்தின் பஞ்ச பாண்டவர்களின் வெற்றியைப் புகழாமல் – போரும் வெற்றியும் அந்தக் காலத்தில் ஒருவகையில் தர்மம் – மாறாக, அதை இன்றைக்கு மறு வாசிப்புக்கு உட்படுத்தி, குருஷேத்திரப் போருக்குப் பின்னால் நிகழ்ந்திருக்கக்கூடிய அழிவின் குரலை ஒரு எளிய பிரஜ்ஜையின் பார்வையில் சொல்கிறது ‘திசைகளின் நடுவே’ கதை. பாகவதத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒட்டுமொத்த மகாபாரதத்தையே ஒரு பின் நவீனத்துவப் படைப்பாக அணுக முடியும். மேலும், பின் நவீனத்துவம் வரலாற்றை மறுவாசிப்பு செய்யக் கோருகிறது. பிரதிகளை மீட்டுருவாக்கம் செய்வதையும் ஆதரிக்கிறது. அதை ஜெமோ தன்னுடைய முதல் தொகுப்பிலேயே தொடங்கிவிட்டார். இதன் தொடர்ச்சியை, பின்னர் எழுதப்பட்ட விஷ்ணுபுரம், கொற்றவை, வெண்முரசு வரைக் காணலாம். இதே போலப் புனிதத்தைப் பகடி செய்யும் மற்றொரு கதை இத்தொகுப்பிலுள்ள ‘சிவமயம்’.
மெட்டா நரேட்டிவ் என்னும் பெருங்கதையாடலுக்கு எதிராக மைக்ரோ நரேட்டிவ் என்னும் சிறு கதையாடலை பின் நவீனத்துவம் அங்கீகரிக்கிறது. அதன் வழியே குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கிறது. ஆகமம் வழி வேளைக்கு ஒரு பூஜை, படையல், பக்தர்களின் வருகை, திருவிழா, உற்சவம் என்று சகல செளபாக்கியங்களும் பெற்றுத் திகழும் பெருந்தெய்வங்கள் ஒரு பக்கம் இருக்க, வருடத்துக்கு ஒரு பலி என்றிருந்து அதுவும் கிடைக்காத எளியவர்களின் தெய்வமாக விளங்கும் மாடனின் கதையைப் பேசுகிறது “மாடன் மோட்சம்”.
இத்தொகுப்பில் உள்ள லங்காதகனம் கதையை அசோகமித்திரனின் புலிக்கலைஞனுடன் ஒப்பிடலாம். முன்னது அனுமார் வேஷம் கட்டும் அனந்தன் ஆசானின் கதை. பின்னது புலி வேடமிடும் டகர் பாயிட் காதரின் கதை. இவ்விரு கதைகளுமே கலைஞனே கலையாக மாறி நிற்கும் தருணத்தைப் பேசுகின்றன. இருவரும் தத்தம் கலையின் உச்சத்தைத் தரிசிக்கும் புள்ளி, அந்த உன்னதத்தை உணரவியலாத அற்பர்களால் அவர்கள் அடையும் அவமானம் என்று ஒப்பிட்டு வாசிக்கப் பல புதிய பரிமாணங்களைத் திறந்துகொள்ளும் தமிழின் மகத்தான கதைகள்.
மையத்திலிருந்து ஒட்டுமொத்த பார்வையை விளிம்புக்கு நகர்த்துவதின் மூலமாக அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கவும், அதன் வழியே பிரச்சினைக்கான தீர்வைச் சொல்லாமல் அப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களின் வழியே அவற்றை அணுகவும் புரிந்துகொள்ளவும் பின் நவீனத்துவம் கற்றுத் தருகிறது. அப்படி எழுதப்பட்ட ஒரு கதையாக சவுக்கு கதையைக் கூறவியலும். அதில் வரும் சோட்டேலாலுக்கு எந்தத் தீர்வையும் கதை சொல்வதில்லை. சமூகத்தின் கீழ்மைகள் பற்றி பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால் அவர்களின் வாழ்வை எந்த பக்கச் சார்பும் இன்றி காட்சிப்படுத்துகிறது. அவர்களுடைய மீறல்களுக்குப் பின்னிருக்கும் நியாயங்களை உணரும் வாசகனுக்குத் திறப்பதோ ஒரு புதிய உலகு.
சமீபத்தில் எழுத்தாளர் மாமல்லன் கிண்டிலில் வெளியிட்ட ‘கசடதபற 16’ ஆம் இதழில் தமிழின் ஆரம்பகாலச் சிறுகதைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரையில் எழுத்தாளர் சா.கந்தசாமி ‘தொடக்கம்’ என்பதற்காகவே எந்தவிதச் சலுகையையும் ஓர் இலக்கியப் படைப்புக்குத் தர வேண்டிய அவசியமில்லை என்பதாகக் குறிப்பிட்டிருப்பார். அதையே அடிப்படையாகக்கொண்டு இத்தொகுப்பை அணுகினால் இதிலுள்ள நதி, வீடு, கண், போன்ற கதைகள் (அவரின் சிறந்த கதைகளை முன்வைத்து விமர்சித்தால்கூட) புதிதாக நிகழ்த்தப்பட்ட முயற்சிகள் என்ற அளவில் நின்றுவிடுகின்றன. இவை அக்காலத்தில் அதிகமும் எழுதப்பட்ட கதைகளின் சாயல் கொண்டவை.
இத்தொகுப்புக்குப் பின்னர் ஜெமோ நூற்றுக்கணக்கான கதைகளை எழுதிவிட்டார். பேய்க் கதைகள், அறிவியல் புனைவு, மாய யதார்த்தக் கதைகள், வரலாற்றுப் புனைவு, புராணக் கதைகள், லட்சியவாதக் கதைகள், துப்பறியும் கதைகள் என்று புனைவில் சாத்தியமுள்ள அத்தனை எல்லைகளையும் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.
***
கார்த்திக் பாலசுப்ரமணியன் |
No comments:
Post a Comment