உடன் பிறந்தவர் - லக்ஷ்மி மணிவண்ணன்

 


ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் இருக்கும். சுந்தர ராமசாமி பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றினை எதேச்சையாகப் படித்தேன்.யார் எழுதினார்கள் என்பது  என்னுடைய நினைவில் இல்லை.ஆனால் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது நினைவில் தங்கியது.சுந்தர ராமசாமியின் மாணவர்கள் இருவர் ,ஒருவர் ஜெயமோகன் .மற்றொருவர் லக்ஷ்மி மணிவண்ணன் என்று அதில் சொல்லப்பட்டிருந்தது.அப்படிகூட இல்லை.சரியாக சொல்வதாயின் ஜெயமோகன்,லக்ஷ்மி மணிவண்ணன் ஆகிய இருவரின்  குரு சுந்தர ராமசாமி என்று ஆங்கிலத்தில் அதில் சொல்லப்பட்டிருந்தது.யோசித்துப் பார்த்தால் சுந்தர ராமசாமி தன்னுடைய வாழ்நாளில்  பல்வேறு துறை சேர்ந்தவர்களையும் என எடுத்துக் கொண்டால் ஐநூற்றுக்கும் அதிகமானவர்களைப் பார்த்திருப்பார்.அதில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு எங்களை ஒப்ப அணுக்கம் இருந்திருக்கும்.பிற்காலங்களில் அவரிடம் ஏராளமானோர் வந்து தங்களை புதிதாகவும் ஒட்டிக் கொண்டார்கள்.அது இயல்பானதும் தானே? அதிலிருந்து எங்கள் இருவரையுமே அந்த குறிப்பை எழுதியவரின் மனம் சேகரித்திருக்கிறது.அடையாளம் கண்டிருக்கிறது.காலம் கண்டறியும் அடையாளம் என்பது இதுதான்.


இத்தனைக்கும் சுராவின் காலத்திற்கு பிறகு அவருடைய நண்பர்கள் பற்றி ,அவருக்கு அணுக்கமானவர்கள் பற்றி ,ஆதாரபூர்வமானது என்கிற அழுத்தத்துடன் எழுதப்பட்ட எல்லா குறிப்புகளிலும் என்னுடைய பெயர் விலக்கப்பட்டிருந்தது .ஜெயமோகன் தவிர்க்கப்பட்டிருந்தார்.அப்படி விழிப்புணர்வுடன் விலக்கப்படும் பிரதிகள் நிச்சயமாக நாம் விரும்பாதிருந்தாலும் கூட ,நம் கண்களில் முன்னே வந்துநிற்கும் வினை கொண்டவை.அதற்காகவே அவை பிறப்பெடுக்கின்றன. அவற்றின் கர்மா அவ்வாறானது.ஜெயமோகன் சுந்தர ராமசாமியிலிருந்து விரிந்து பெருவிருட்சமாக எழுந்து நிற்பவர்.சூரிய நிழல் கூட  தமிழ் இலக்கியத்தில் இருந்து அவரை இனி மறைக்க இயலாது.அவர் கம்பனை விட சிறந்தவர்.நான் சுராவில் கிளைத்த சிறு மலர்தான்.பலாவின் அடித்தண்டில் முளைக்கும் மலர் மொக்கு.சின்னஞ்சிறு மலர்.காலத்தின் மனம் எங்கள் இருவரையும் அருகருகே வைத்திருக்கிறது.புரிந்து கொள்ள முடியாத ஆச்சரியங்களில் ஒன்று இது.புனைவெழுத்தாளர்கள்,முக்கி முக்கி ஏலம் கேட்கும் அகப்பொருளை ஒரு ரூபாய் அதிகம் வைத்து ஏலத்தில்  தட்டிச் செல்பவன் கவிஞன். எப்படியிருந்தாலும் எங்கள் இருவரிலும் தன்னை ஆழமாக,வசதியாக,அழகாக இறக்கி வைத்துக் கொண்டவர் சுந்தர ராமசாமி.


இப்போதும் ஏறிட்டு ஒருவரை நான் காணும்போது ,ஏதேச்சையாக நிமிர்ந்து  பார்க்கும் போது உள்ளிருந்து சுரா தான் காண்கிறார். தரையில் ஒருகால் மடித்து நான்   அமரும்போது அவர் என்னுடலுக்குள்ளிருந்து வெளியில் வந்து அமர்ந்து கொள்கிறார்.சில கணங்களில் எனக்கு இது உறுத்திவிடும், தலைதாழ்த்திக் கொள்வேன்.நான் எழுந்து நடக்கும் விதங்களில்,அமரும் விதங்களில் ,கைகளை அசைக்கும் விதத்தில் இன்னமும் சுரா இருக்கிறார்.அவர் என்னிலிருந்து அசைவதை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.செய்யவும் இயலாது.சத்தியத்தின் அசல் அம்சம் அவர்.அந்த அம்சம் உள்வந்து இறங்கிவிட்டால்,நாம் தகாதோராய் இருப்பினும் கூட அந்த அசல் அம்சம் வெளியேறுவதில்லை.ஜெயமோகனிடம் இப்படி சுரா வெளிப்படும் தருணங்கள் இப்போதும் உண்டு.சுராவை எழுதாமல் ஜெயமோகனை எழுத முடியாது.இருவரும் இல்லாமல் என்னையும் ஒருவர் ஓரிரு வாக்கியங்களுக்கு மேல் சிந்திக்க இயலாது.சித்திக்காது.இன்று சுரா வைக் காட்டிலும் பல மடங்கு பெரிய படைப்பாளி ஜெயமோகன்.சுராவும் அதையே விரும்பியிருப்பார்.அவரில் தொடங்குபவர்களை அவரிலும் விரிய கனவு காண்பவர் அவர்.ஆனால் எங்கள் இருவரைக் காட்டிலும் சுந்தர ராமசாமியே பெரியவர்,மேலானவர்.சான்றோர் சுந்தர ராமசாமிதான்.மலரோ மலையோ அவரே எங்கள் அடிமரம்.எங்கள் இருவருடைய ஆன்மாவைக் காட்டிலும் சுந்தர ராமசாமியின் ஆன்மா பரிசுத்தமானது.சந்தேகமே வேண்டாம்


எனக்கு இயல்பிலேயே அமைந்த ஒரு குணம் உண்டு.முன்வைப்பதில்லை.என்னையும் முன்வைப்பதில்லை.என்னை படித்துப் பாருங்கள் என எவரையும் கேட்டுக் கொண்டதில்லை.சுராவும் அவ்வாறு கேட்பவர் அல்ல.படித்தேன் என்றால் ஆர்வமுடன் நிமிர்ந்து பார்ப்பார்.என்னைச் சார்ந்தவற்றையும் வலிந்து முன்வைப்பதில்லை.முன்வைத்துக் கொண்டேயிருப்பவர்களுக்கு பின்பக்கமாக நுழைந்து அவர்களே அறியாத ஒரு நாளில் வெளியேறி விடுவேன்.சுராவிடமிருந்தும் கூட பின்னாட்களில் விலகி ஓடியிருக்கிறேன்.அவர் மிஷினரியாக மாறும் காலங்களில் நான் ஒளிந்து கொண்டேன்.இது எளிதல்ல,தலைமறைவாதல் என்பதே தனியாக வெளியேறுவதுதான்.நெரிபடும் கூட்டத்தினர் உங்களை கசந்து துப்பிக் கொண்டிருப்பார்கள்.கிசுகிசு பேசுவார்கள்.திரும்பிப் பாராமல் ஓடி விட வேண்டும். நான் என்னை முன்வைப்பது என்பது குறைவாக எழுதும் எழுத்துகளால் மட்டுமே,கவிதைகளால் மட்டுமே,சில எதிர்வினைகளால் உள்ள அளவே.என்னுடைய வாழ்க்கை மிகவும் சாமானியன் ஒருவனுடைய வாழ்க்கை.அங்கே நான் மிகவும் சாதாரணன்.நான் விரும்பக் கூடியதும் சாதாரணனையே. ஆனால் என்னுடைய சிறு வயது முதற்கொண்டு குடும்பங்களில் இருந்து தொடங்கி புகைப்படங்களில் வெட்டப்படுபவனாக ,சாட்சியங்களில் பெயர் அழிக்கப்படுபவனாக ,நினைவுகளில் பிறரால் அகற்றப்படுபவனாக  இருக்கிறேன்.நான் இல்லாமலும் முடியாது.நானில்லாத இடங்கள் குடும்ப விழாக்கள் பெரும்பாலும் வெறுமை சூழும்.நான் கண்டிப்பாக இருந்தாக வேண்டிய இடங்களில் இல்லை எனில்  வெறுமை சூழும்.அதனை விலக்குபவர்களும் அறிவார்கள்.சிறுவயதில் முற்போக்கு கலையிலக்கிய அமைப்புகளில் குழு புகைப்படங்களில் என்னைத் துண்டித்துவிடுவார்கள். என்னை வெட்டி எடுத்து விட்டுத் தயாரிப்பார்கள்.அவை ஊனமுற்று இருக்கும்.பார்த்தாலே தெரியும்.நான் வெட்டப்படும் படங்களில் உண்மையாகவே நான் அதனினும் பெரிதாக  இருப்பதையே சம்பந்தமுடையவர்கள் காண்கிறார்கள். அதிலுள்ளவர்களுக்கு வலுவாகப் பதிவாகிறேன்.ஆந்தாலஜிகளிலும் இவ்வாறே.பெருந்தொகுப்புகளில் இல்லாதவன் என பதிவாகிறேன்.தொகுப்போர் இல்லாமைக்கான காரணங்களை தொடர்ந்து பேசி வலுவூட்டுகிறார்கள்.தமிழில் அவர் என்ன நினைப்பார் ? என நினையாத செயல்களே இல்லை.ஒரு பதிப்பகத்தோடு தொடர்பு உள்ளவர் என்றால் பதிப்பகத்தின் நிறுவனத்தின் உரிமையாளர் என்ன நினைப்பாரோ என்பதாக அந்த எண்ணம் இருக்கும்.ஒரு இதழ் ஆசிரியரைச் சார்ந்தவர் என்றால் ,அவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ ? என்ற நோக்குடன் செயல்படுவார்கள்.ஒரு ஆசிரியனைச் சார்ந்திருப்பவர் ,அந்த ஆசிரியருக்கு தவறாக ஆகிவிடுமோ? என்று பார்ப்பார்கள்.நாம் இலக்கியத்திலும் ஒரு பின்தங்கிய சமூகத்தின் உளநிலையை பிரதிபலிப்பவர்கள் தாம்.சார்ந்திருப்பின் காரணங்களை வலிமைப் படுத்துவதில் வல்லவர்கள்.ஒரு உண்மையை மறைப்பதன் பொருட்டு பேசப்படுகிற அனைத்து பிற உண்மைகளும் பொய்யாகிவிடுகின்றன.ஒன்றும் செய்வதற்கில்லை.ஆனால் அனைத்திற்கும் பதில் காரணங்களை அடுக்கிக் கொண்டே இருப்பவர்களிடம் எனக்கு முகச் சுளிப்பு உண்டு.இப்போது இவையெல்லாம் நன்றாகப் பழகி விட்டன.வெட்டப்பட்டவற்றை அறிவதற்குண்டான தொழில் நுட்பங்களும் வந்து விட்டன.வெட்டப்பட்டவற்றைத் தேடுபவர்களுக்கு இதில் யார் வெட்டப்பட்டிருப்பார் என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.




ஆனால் ஜெயமோகனின் ஸ்திதி நிலை வேறு.எந்த இடத்தில் விலக்கப்பட்டாலும் அந்த இடத்தில் அவ்வாறே உயிருடன் விளங்குவார்.விலக்கப்பட்ட இடத்தில் அவர் பூரணமாக நின்று தெரிவார்.அவரை மறைக்க இயலாது.துண்டித்தல் சாத்தியமற்றது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு பெரிய கருத்தரங்கு நிகழ்த்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்.ஏராளம் நிறுவன பணம் கொண்டவர்கள் திட்டமிட்ட கூட்டம் அது. ஆலோசனை செய்வதற்கே சம்பளப்பணம் கொட்டப்படுகிறது.முதல் கூட்டம் சிறப்பாக நடந்தது பத்துப் பதினைந்து பேர் கலந்து கொண்டோம்.ஆயிரக்கணக்கில் சம்பளம்.அடுத்த ஆலோசனை கூட்டத்திற்கு ஒவ்வொருவரும் அழைக்க வேண்டியவர்களின் பட்டியல் கொண்டுவர கேட்டுக் கொள்ளப்பட்டோம்.நிறுவனங்கள் பலவற்றிலும் நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது.அங்கிருப்போருக்கு எதுவுமே தெரிவதில்லை.இடைத்தரகர்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள்.இங்கு யார் தரகர் ,யார் தரகர் இல்லாதவர் என்பதையெல்லாம் அறிந்து கொள்வது மிகவும் கடினம்.சிடுக்கு.அதனையும் தரகர்களே தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.ஒன்றில் தரகராக இல்லாதவர் மற்றொன்றில் தரகராக செயல்படுவார்.பண்பாட்டுத் தரகர்கள் இப்படித்தான் தமிழ்நாட்டில் பெருத்திருக்கிறார்கள்.ஊடகங்கள் எனில் முதன்மை நிலையில் இதழியலாளர்கள் ஐந்தாறு தரகர்களை கையில் வைத்திருக்கிறார்கள்.இந்த தரகர்களை மோதி எவருமே வெற்றி பெற இயலாது.பதவிப் பயமும் அறியாமையின் பயமும் ஒருங்கிணைந்தவர்கள் தமிழ் இதழியலாளர்கள். நான் ஜெயமோகனில் இருந்து  தொடங்கி என்னுடைய பட்டியலைத் தந்தேன்.அந்த பட்டியலில் இன்னும் பத்தொன்பது பேர் இருக்கிறார்கள்.பட்டியலைப் பெற்றுக் கொண்டதும் கூட்டத்தில் அசுவாரஸ்யம் ஏற்படத் தொடங்கியது.சிறுவயது முதற்கொண்டு கவனித்து வருகிறேன்.மடையர்கள் ,தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவன அதிகாரத்தின் உணர்வு நிலையில் வலிமையாகப் பங்கெடுப்பார்கள். இத்தகைய அசுவாரஸ்யத்தை கிளப்புவதில் மன்னர்கள் அவர்களே. கைதேர்ந்தவர்கள்.ஒருங்கிணைப்பாளர் என்னருகே வந்தார்.அந்த பட்டியலில் எல்லாமே எங்களுக்கு உடன்பாடே.உங்களுடைய பட்டியலில் அந்த முதல் பெயரை மட்டும் நீக்கி விட்டு பிற எல்லாவற்றையும் அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்றார்.இந்த பட்டியலில் உள்ள பிற பெயர்களை நீங்கள் ஒருவரையெனும் அறிவீர்களா? என்று கேட்டேன்.இல்லை என்றே பதில் வந்தது.அந்த பட்டியலில் உள்ள பிறர் இருந்தாலும் இல்லையென்றாலும் கூட சமகால தமிழ் இலக்கிய கருத்தரங்கு ஒன்றினை நடத்திவிட முடியும்.ஆனால் ஜெயமோகன் அழைக்கப்படாமல் அப்படியொரு கருத்தரங்கு நடத்துவது குறைபாடானது ,பூரணமற்றது என்று பதில் கூறி திரும்பி விட்டேன்.பின்னர் அந்த கருத்தரங்கும் நடைபெறவில்லை என்றார்கள். அது நடந்திருந்தாலும் ஒன்றுமில்லை,இல்லாதிருந்தாலும் ஒன்றுமில்லை.ஏன் இதனை இங்கே சொல்கிறேன் என்றால் என்னுடைய இருப்பிற்கு விலையற்ற இடத்தில் என்னால் இருக்க முடியும்.வலிந்து அழைத்து கடினப்பட்டு வரவழைத்து என்னைப் பேசவிடாமல் பார்த்துக் கொள்கிற கூட்டங்கள் பல உண்டு. பங்கேற்பற்ற இருப்பை வெறுப்பவன் நான்.அது ராஜ்ய சபையாக இருப்பினும் சரிதான்.தெய்வ சபையாக இருப்பினும் சரிதான்.பலசமயங்களில் அவ்வாறான கூட்டங்களிலேயே கலந்தும் கொள்கிறேன்.இடைமறித்துப் பேசிவிடுவானோ பதற்றத்திற்குள்ளாவார்கள்.கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.அதில் எனக்கு எவ்விதமான பிரச்சனைகளோ ,இடர்பாடுகளோ கிடையாது.பூஞ்சைகளின் பயம் அது.பெரும்பாலும் என்னுடைய வாழ்வே கூட ,எனக்கு எவ்வித முக்கியத்துவங்களும் இல்லாத இடங்களில் இருப்பதாகவே அமைந்திருக்கிறது.அசோகமித்திரனின் வாழ்வு போல,ஞானக்கூத்தனின் வாழ்வு போல.அதனால் ஒன்றுமில்லை.ஆனால் தமிழ் இலக்கியச் சூழலில் சுந்தர ராமசாமிக்கும்,ஜெயமோகனுக்கும் இடமற்ற இடங்களில் என்னால் இருக்க முடியாது.அங்கே எனக்கு பேசவோ உரையாடவோ ஒன்றுமே கிடையாது.இத்தனைக்கும் ஜெயமோகனும் நீங்களும் ஒத்த கருத்துடையவரா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்வேன்.தமிழில் எனக்கு ஆகக் குறைவான வேறுபாடுகள் கொண்டவர் ஜெயமோகன் என்று வேண்டுமானால் அதனை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.அதுவே உண்மையும் கூட .அவருடைய விசையை எடுத்து கொண்டு ஆற்றுவதற்கு எனக்கு  எதுவுமே இல்லை.அவருடைய முறைமைகள் எனக்கு பயிற்சியற்றவை.பயிற்சியைக் கூட விடுங்கள் அவை எனக்கு இன்பமற்றவை.அவருடைய பயணமும் என்னுடைய பயணமும் ஒன்றல்ல. அது வேறொரு விசை நான் வேறுவகை விசை.அவரிலிருந்து அனைத்திலும் வேறொன்றானவன் நான்.ஆனால் நாங்கள் இருவரும் ஒட்டிப் பிறந்தவர்கள் ,உடன்பிறந்தவர்கள்.ஒரு சூலில் உண்டானவர்கள்.அந்த சூலின் பெயர் சுந்தர ராமசாமி.ஒரே சூலில் அவர் கொஞ்சம் முந்திப்பிறந்தார்.நான் கொஞ்சம் தங்கிப் பிறந்தேன்.



என்னைக் காட்டிலும் பல விஷயங்களில் ஜெயமோகன் முப்பதாண்டுகள் தாண்டி யோசிப்பவராக இருக்கிறார்.முப்பதாண்டுகள் வாழ்ந்து கடந்து சென்று அதனைத் தொடுகிறேன்.அதனை எட்டிப் பிடிக்கும் போது ஐந்தாண்டுகளுக்கு அப்பால் போய் நிற்கிறார்.2015 முதற்கொண்டு தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்து இப்போது  ஓரோர் ஆண்டாகக் குறைத்து வருகிறேன்,சிறுவயதில் அவர் எனக்குச் சொன்ன பல விஷயங்களை மிகப்பெரிய தாமதத்திற்குப் பிறகே எட்டிப் பிடித்தேன்.ஒருசமயம் நேர்ப்பேச்சின் போது " நீங்களும் நானும் வேறில்லை இல்லையா ? என்று என்னைக் கேட்டார் அவர்.பதினைந்து ஆண்டுகளை நீங்கள் தொலைத்து விட்டீர்கள் ,அந்த இடைவெளி இருக்கிறது.ஐந்தாண்டுகள் பொறுப்பேற்று நடந்தால் கடக்க இயலக் கூடியது அந்த இடைவெளி என்றார். நான் மனதிற்குள் இல்லை என்றே அவருக்கு பதில் சொன்னேன்.அவருக்கு என்ன சப்தம் கேட்டது என்பது எனக்குத் தெரியாது.ஒரே சூலில் பிறந்தாலும் முற்றிலும் வேறொன்றாக இருக்க முடியும்.


தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதியில் ஜெயமோகன் எனக்கு அறிமுகமானார்.சுந்தர ராமசாமி மூலமான அறிமுகம் தான்.சுராவும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தான் எனக்கு அறிமுகம்.எல்லோரையும் போலவே ஜே.ஜே.சில குறிப்புகள் படித்த கையோடு அவரைச் சென்று பார்த்தேன். என்னுடைய அத்தனை இலக்கிய அறிமுகங்களுமே சுராவால் ஏற்பட்டவை.ஆனால் ஜெயமோகனை சந்திப்பதற்கு முன்பாகவே ரப்பர் நாவலைப் படித்திருந்தேன்.அந்த வகைப்பட்ட சமூக சரித நாவல்களில் இப்போது வரையில் எனக்கு ஈர்ப்பு கிடையாது.புத்தம்வீடு கூட எனக்கு பிடித்த நாவல் இல்லை.என்னுடைய அகம் படைப்பில் தேடுவது இதனை அல்ல.அந்த வகைகளில் படித்தவற்றில் என்னை கவர்ந்தவை புளிய மரத்தின் கதையும் ,ரப்பரும் மாத்திரமே.ரப்பரில் வரும் பிரான்ஸில் என்கிற குடியழிவுப் பாத்திரம் வளரும் குடும்பங்களின் ஒரு குறியீடு போன்றது.இந்தியாவில் சாதிய குடும்பங்களில் மூன்று தலைமுறைகளில் ஒரு குடும்பம் அடையும் சமூக மாற்றத்தைப் பற்றிய நாவல் அது.இன்று யோசித்துப் பார்க்கும் போது அந்த நாவலில் ஒரு தெளிவு இருப்பதைக் காண்கிறேன்.கதாபாத்திரமாக அடிபடாமல் ஜெயமோகன் தன்னுடைய பயணத்தை தொடங்க  அந்த நாவலில் அவர் அடைந்த தெளிவு உபயோகப்பட்டிருப்பது தெரிகிறது.இப்போதும் அது அந்த தெளிவினை போதமுள்ள ஒரு இளைஞனுக்கு  வழங்கக் கூடியதே.அது அவனை அவன் சமூகச் சுழலில் கதாபாத்திரமாக அடிபடாது காக்கும்.திசைகளின் நடுவே சிறுகதைத் தொகுப்பு பின்னர் வெளிவந்தது என்றே நினைக்கிறேன்.அப்போதெல்லாம் நான் எத்தகைய தெளிவுகளையும் எட்டியிருக்கவில்லை.ஒவ்வொன்றாக அறிமுகம் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.


விஷ்ணுபுரம் நாவல் அவருள் உருவாகும் காலங்களில் அவருடன் இருந்தேன்.அப்போது என்னுடைய ஒரு பாதி அகம் சுந்தர ராமசாமியாலும்,மீதி ஒரு பாதி அகம் ஜெயமோகனாலும் நிரம்பியிருந்தது.உடன் பயணங்கள் சென்றேன்.அவருடைய ஓயாத உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.ரப்பர் நாவலின் தளம் வேறு.ரப்பர் எழுதிய காலம் மாடன் மோட்சம் அவர் மனதின் தளமாக இருந்த காலம்.அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, யதார்த்த சொல்முறையிலிருந்து புனைவின் மொழிக்குள் அவருடைய மனம் உருமாறிய காலம் அது.அந்த சந்தர்ப்பத்தில் அவர் அருகமைவு எனக்கு இருந்ததை மிகவும் முக்கியமான பேறு என்றே எடுத்துக் கொள்கிறேன்.ஒரு அண்ணனின் பாங்குடன் ஸ்ரீவைகுண்டம்,ஆழ்வார் திருநகரி என அவர் அழைத்துச் சென்று காட்டிய காலம் அது.அவர் மனப்பாங்கை எனக்கு திறந்து காட்டிய காலம்.அல்லது முதலில் பார்த்த காலம்.பத்பநாபபுரம் அருங்காட்சியகத்தில் இருந்த குபேரனைச் சுட்டி இவன் ஒரு குஷ்ட ரோகி என்று காதில் சொன்னார்.


விஷ்ணுபுரம் வெளிவந்த பிற்பாடும்  நானும் ஜெயமோகனும்  அது பற்றி பேசிக் கொண்டேயிருந்தோம். எனக்கு எப்போதுமே அவருடன் பயணிப்பது ஒரு புனைவை வாசிக்கும் அனுபவத்தைத் தருவதாக அமைந்திருந்தது.அவருடன் பயணம் சென்றால் அது நல்ல சிறுகதையாகவோ அல்லது நெடுங்கதையாகவோ இருக்கும்.அத்தகைய அனுபவத்தை உடன் செல்லும் பயணங்களில் ஒருவருக்குத் தரக்கூடியவர் அவர்.அந்த அனுபவம் நாவல் போல் ஆகும் வாய்ப்பும் உண்டு.சிறந்த எழுத்தாளர்கள் இப்படி படைப்பூக்கத்துடன் பாதிக்கும் வலிமை கொண்டவர்களே.ஆனால் எவர் எதைக் காட்டித் தரும் போதும் அதன் தலைகீழ் தன்மையை பார்த்துவிடுவதே என்னுடைய வழிமுறை.வலிந்து அப்படி பார்த்துவிட வேண்டும் என்பதால் அல்ல.என்னுடைய அகமனம் அத்தகையது.


விஷ்ணுபுரம் நாவல் தமிழில் பெரிய நிகழ்வு.ஜெயமோகனும் தமிழில் பெரிய நிகழ்வே என்பதைப் பிரகடனம் செய்த நிகழ்வு விஷ்ணுபுரம்.அப்படியான ஒரு நாவல் தமிழில் முன்னர் இல்லை.இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நாவலை சமீபத்தில் படித்துப் பார்த்தேன்.அந்த நாவல் என் மதிப்பில் மேலும் மெருகேறிற்று .அப்போது புரிந்து இயலாதவற்றை இப்போது புரிந்து கொண்டேன்.சிறந்த படைப்புகள் ,காலத்தில் வளரும் தன்மை கொண்டவை. 


2


பத்பநாபபுரத்தில் அவர் தங்கியிருந்த நாட்கள் எனக்கும் அவருக்குமான நட்பில் மிகவும் இதமானவை.அது என்னுடைய அகம் உருவாகத் தொடங்கியிருந்த காலம்.தக்கலை தொலைபேசி நிலையத்திற்கும், பத்ப நாபபுரத்தில் தெருவில் அமைந்திருந்த அவரது வீட்டிற்கும் மீண்டும் மீண்டும் சென்று கொண்டிருந்தேன்.பத்பநாபபுரத்தில் வாடகைக்கு அருண்மொழி நங்கையும் அவரும் தங்கியிருந்த வீடு ஒரு குளிர்ந்த வீடு.அரண்மனைத் தெருவை ஒட்டி அமைந்த கம்பி வாயிலைக் கடந்து உள்ளே செல்ல வேண்டும்.நீல வண்ண கேட் அது என நினைக்கிறேன். அரண்மனையில் எறிச் சென்றும் அங்கிருந்தும் மாடம் வழியே அந்த வாயிலைக் காண முடியும்.பத்பநாபபுரம் அரண்மனைக்கு பல தடவைகள் பல காரணங்களுக்காக சென்றிருக்கிறேன்.இன்றுவரையில் அந்த அரண்மனை முன்ஜென்மத்தில் எனக்கு அணுக்கமாக அமைந்தது என்னும் பழகிய உணர்வைத் தருகிறது. அரண்மனையுடன் சேர்த்து ஜெயமோகன் இல்லத்தையும் உடன் வருபவர்களுக்கு காட்டித் தருவதுதான் என்னுடைய வேலை. உடன் வந்த ஒவ்வொருவரிடமும் சுட்டிக் காட்டி அந்த வாயிலைக் கடந்துதான் ஜெயமோகன் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொல்லுவேன்.அதில் ஒரு சிலரைத் தவிர்த்து பலருக்கு ஜெயமோகனைத் தெரியாது.அது பற்றி எனக்கு கவலைகளும் இல்லை.எனக்கு அவருடன் இனிய நினைவுகள் உள்ள இல்லம் அது.பேசுவதற்கென்றாலும் அப்போது அதிகம் பேர்கள் கிடையாது.சொல்லும்படியாக ஒன்றிரண்டு பேர்களே .  நான் அவரைப் பார்ப்பது போல மேலும் ஒன்றிரண்டு பேர் பார்த்திருக்கக் கூடும்.எனக்கு அவருடன் தனித்து இருந்த நினைவுகள் அப்போது உள்ளவை.என்னுடைய தனிமையின் வளைந்து உருவான பாதைகள் அவை. 


அதுபோல அவரும் தேடி வரக் கூடியவர்.ஒரு சமயம் என்.ஜி.ஓ காலனியில் இருந்த எனது வீட்டின் கதவில் ஒரு துண்டு காதிதம் ஒட்டப்பட்டிருந்தது.அவர் வந்து திரும்பி சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்த துண்டு காகிதத்தைப் பார்த்து விட்டேன்.வீட்டுக்கு வந்திருந்தேன்,மதியம் ஒரு மணிவரையில் ஒழுகினசேரி நூலகத்தில் இருப்பேன் என பென்சிலால் எழுதப்பட்டிருந்தது.அன்று தீராத குடும்ப அல்லல் ஒன்றில் சிக்கியிருந்தேன்.அனுபவமும் தெளிவும் இல்லாமலே நானாகவே கையாளும்படி விதியால் பணிக்கப்பட்டிருந்த வேலை அது. அந்த துண்டு காகிதத்தை நெடுநாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன்.எதற்கு அதை பத்திரமாக வைத்திருந்தேன் என்றால் தெரியாது.அதுபோல பின் தொடரும் நிழலின் குரல் நாவல் வெளிவந்த காலம், அவரில் இருந்து விலகத் தொடங்கியிருந்த காலம்.அந்த விலக்கம் அந்த நாவல் கொண்டிருந்த கருப்பொருளால் அல்ல.தமிழில் நிறைய விவாதங்களை அடைந்த நாவல் அது.இன்றும் அது மிகமுக்கியமான நாவலே.மார்க்ஸியர்களின் ,கம்யூனிஸ்ட்களின் பின்னணியில் இருந்து அந்த நாவல் சுட்டப்பட்டிருந்தாலும் அமைப்புகளின் அகம் குறித்த பெரு நாவல் அது என இன்று மீண்டும் அதை வாசிக்க முடியும்.எனவே அந்த நாவலின் கருப்பொருளால் ஒரு இடர்பாடும் எனக்கு இல்லை.பிறருக்கான இடைவெளியே இல்லாதவராக அவர் இருந்தார்.கேட்கும் திறன் கிடையாது.பொறுமை கிடையவே கிடையாது.முந்திக் கொண்டே இருப்பவர்.இப்படி ஒருவர் இருந்தால் எப்படியாயினும் உறவில் கசப்பு வந்து விடும்.இதுபோலவே தான் சுந்தர ராமசாமிக்கும் இருந்தது.அவரும் ஜெயமோகனில் விலகத் தொடங்கியிருந்த காலம்.அவருக்கும் ஜெயமோகனின் சுபாவம்தான் தாங்க முடியாததாக இருந்தது.ஜெயமோகன் பேரில் மகிழ்ச்சி உள்ளவர் சுந்தர ராமசாமி.ஆனால் அவருக்கும் விலகல் உண்டானது.சுராவுடனான விலகலுக்கு  தத்துவார்த்த ரீதியிலான காரணங்கள் எல்லாம் சொல்லி ஜெயமோகன் தொடர்ந்து எழுதியிருக்கும் பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.இப்போது கூட  அப்படி முன்வைப்பதையே அவர் விரும்புவார் ஆனால் அவை துளி உண்மையும் அற்றவை.ஜெயமோகன் அப்போது நாலு கைலாஷ் சிவனாக,நாலு நம்பியாக ,பத்துபதினைந்து மணிவண்ணனாக இருந்தார்.சுடலை பற்றி எரியும் நெருப்பு நான் அவரில் கண்டது.அனைத்து விதமான குணக்கோளாறுகளும் கொண்டவராக அவர் அப்போது இருந்தார்.அறிவுச் சூழல்களுக்குள் குணக் கோளாறுகள் கூட பெரிய தடையாக ஆவதில்லை.ஜெயமோகன் தன்னைத் தவிர்த்து பிறருக்கு இடமற்றவர்.அதுவே பிரதானமான பிரச்சனை.பிறருடைய பங்கேற்பு என்பது என்ன என்பதை இன்றுவரையில் அவர் அறிய மாட்டார்.இன்று அறிந்து ஒன்றும் ஆகப்போவதில்லை.இனி மாற்றியமைக்கவும் முடியாதது அது.இனி தேவையும் இல்லாதது.கோவை ஞானி இதனை முன்வைத்தே ஜெயமோகனை சுயமோகன் என்று அப்போது திட்டி எழுதினார்.  


பின் தொடரும் நிழலின் குரல் நாவல் அளவில் பெரிது என்றாலும் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலின் வால் நீண்டு பெருத்த நாவல் தான் அது.எனவே சுரா விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான நாவல் அது என்னும் எண்ணம் கொண்டிருந்ததை நான் அறிவேன்.அந்த நாவல் பற்றி நானும் சுராவும் பலமுறை உரையாடி இருக்கிறோம்.விஷ்ணுபுரத்தில் இருந்து ஒரு படி இறங்கிய மொழியில் அது எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல் என்று நான் சுராவிடம் சொல்லியிருக்கிறேன்.ஆனால் அது அப்படியல்ல.அந்தந்த நாவல்களுக்கு உரிய மொழியை ,மாறுபட வேண்டிய அம்சத்தில் தன்னை மாற்றி எடுத்துக் கொள்ளக் கூடியவர் ஜெயமோகன்.அப்படியான மொழி மாறுபாடே விஷ்ணுபுரத்திற்கும் பின் தொடரும் நிழலின் குரலுக்கும் இடைப்பட்டது


ஜெயமோகனின் ஆணவம் என்று இன்று பார்க்கிற ஒருவர் ஒரு எரிமலை தணிந்து ,தன் படைப்பால் தான் கடந்து ,கடந்து இன்றொரு சிற்பமாக அவர் நிற்பதையே காண்கிறார்.பலவாகி பலவாகி இன்று அது தணுத்திருக்கிறது என்றாலும் எப்படித் தணுத்தாலும் அதன் மேலுதட்டில் நெருப்புண்டு.எழுத்தாளர்களின் ஆணவத்தை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பவர்கள் உண்டு.அவர்களின் படைப்பின் சாரத்தையும் உண்டு கொளுத்து அது வெளிப்படுமாயின் அது கொஞ்சம் தாங்கும் தன்மையோடு இருக்கும்.வெறுமனே வெளிப்படுகையில் அருவருப்பூட்டும்.எழுத்தாளர்களின் பிள்ளைகளிடம் இவ்வாறு வெளிப்படுதல் உண்டு.அதிர்ஷ்டவசமாக அஜிதனிடம் இந்த குறை வெளிப்பாடு இல்லை.இவ்வளவு  பெரிய படைப்பாளியின் அண்மையில் இருந்த வண்ணம் சுய தீபத்தை காக்கும் திறன் அஜிதனிடம் இருப்பதைப் பார்க்கிறேன்.மிகப் பெரிய ஆசிர்வாதம் அது.பல எழுத்தாளர் குழந்தைகளுக்கு இது வாய்ப்பதில்லை .அப்படியே பிரதிபலிப்பார்கள். ஜெயமோகனின் ஆணவத்தின் நகலை அப்படியே வெளிப்படுத்துபவர்கள் சூழலில் இன்று பலபேர் இருக்கிறார்கள்.சாராம்சம் இல்லாமல் ஆணவப் போலி மட்டும் செய்பவர்கள்.முந்துவார்கள்,கேட்க மாட்டார்கள்,இடைமறிப்பார்கள்.இடைமறிப்பில் மூன்று நான்கு விதங்கள் இருக்கின்றன.சிலர் பேசத் தொடங்கும் போதே ,தொடர்ந்து அவர்கள் என்ன பேசுவார்கள் என்பது நமக்கு ஒட்டுமொத்தமாக விளங்கி விடும்.இத்தகைய நெருக்குதலில் தப்பிக்க ஒவ்வொருவருக்குமென அறிந்த வழிகள் பல உண்டு.வேறொன்றை பேசி இவர்களை இடைமறிக்கலாம்.தலைப்பை மாற்றி இடைமறிக்கலாம்,சாதாரண ஜனங்கள் இவர்களை அப்படியே குப்புற கவிழ்த்து விடுவார்கள்.எதிராளி என்ன பேசுகிறான் என்பதை புரிந்து கொள்வதற்கு முன்னரே இடைமறிப்பவர்கள் இரண்டாவது வகை.நான் என்ன பேச வந்தேன் சொல்லுங்கள் என்றால் தெரியாது,விழிபிதுக்குவார்கள்,கேட்பதற்கு முன்னரே தன்னை முன்வைக்க திரளும் மனம் இவர்களுடையது.மூன்றாவது வகை நீங்கள் சொல்ல முயலும் விஷயத்தின் நுனியை அதன் மொட்டில் மறுத்து,அதில் எதிர்நிலை பாவித்து, அதிலிருந்து வேறொன்றை உரையாடலில் உருவாக்கி அடைய விரும்பும் மனம்.இந்த வகைக்கு நீங்கள் உங்களை ஒப்புக் கொடுத்தால் அவர்கள் சில விஷயங்களை கண்டடைய உதவும் எந்திரமாக மாறிவிடுவீர்கள்.முதல் இரண்டு விதங்களிலும் உள்ளது ஒருவகையில் சொன்னால் அப்பாவித்தனமே.அறியாமையே.மூன்றாவதில் வெளிப்படும் ஆணவம் அவ்வாறானதல்ல.அபாயகரமான விளையாட்டு அது.இது அபாயகரமான விளையாட்டு என்பதை இருதரப்பும் புரிந்து கொண்டு ஈடுபட்டால் அதனால் ஊனமில்லை.புரிந்து கொள்ளாத தரப்பு ஊனமடையும் விளையாட்டு இது.எதிராளியின் நுனியில் இருந்தே மறுத்து வேறொன்றை பரீட்சித்து பார்ப்பது.தந்திரமாக ஒடுக்கும் முறை. கிராமப் புறங்களில் அடிப்பது என்று முடிவு செய்து விட்டால் யோசிக்கவே கூடாது முதலில் அடித்துவிட வேண்டும் என்பார்கள்.பல சண்டிகளில் உள்ளபழக்கம் இது.எதிரி யோசிப்பதற்கு முன்பாகவே கனத்த அடி விழுந்து விடும்.சுதாரிப்பதற்குள் உள்ளம் வீழ்ந்து விடும்.ஜெயமோகனிடம் கற்கவும் இந்த இணங்குதல் ஒன்றே வழி.வேறு வழிகள் எதையுமே அவர் வைத்திருக்கவில்லை.அவரிடம் கேட்டால் கற்பதற்கே இது ஒன்றுதான் வழி என்பார்.அது பொய்.ஒரு ஆசிரியன் உங்களுக்குள் இறங்கி வர எராளம் வழிகள் உண்டு.ஜெயமோகனைப் பொறுத்தவரையில் அவருடைய கடுமையான ஆணவத்தை பௌதீகமாக உடைத்தவர்களிடம் மாத்திரமே அவர் கற்கவும் செய்திருக்கிறார்.ஜெயமோகனின் இதே ஆணவத்தை பதில் செய்பவர்களை இரண்டொரு முறை பொறுத்துக் கொள்வேன்.அப்படி முன் நிற்பவரை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டிய தேவை வராது எனில் நிச்சயமாக பொறுத்துக் கொள்வேன்.இல்லையெனில் பாடம் செய்து அனுப்புவேன்.உண்மையாகவே அன்பானவர்கள் எவரும் அசடானவர்கள் இல்லை என்பதை அவர்கள் விளங்க நேர்ந்து விடும்


கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்பநாபபுரத்திற்கும் மேற்கே கேரளம் வரையிலான பகுதிகள் நாடன் தன்மை கலந்த புராதனத் தொன்மை கொண்டவை.மலைத் தன்மை என இதனைச் சொல்லலாம்.அவற்றுக்கு ஆழம் அதிகம்.அதனாலேயே சிடுக்கும் அதிகம். ஆறுகள் ,ஏரிகள்,குளங்கள் ,மலைகள் என ஒன்றை ஒன்று பற்றி ஏறிப் பிணைந்து ஒரே உயிரென திரண்டு நிற்கும் மலைத்தன்மை அது.ஆங்காங்கே எழும்பி நிற்கும் குருசுத் தூண்கள்,பழைய மசூதிகள் என சின்னங்களில் மாறுபாடுகளும் தோற்றங்களும் உண்டு.அவை புறவேறுபாடுகள் மாத்திரமே.ஆனால் பழமையில் எல்லாம் ஒன்றே.உருமாற்றி எடுத்துக் கொள்ளும்  புதுமையிலும் ஒன்றே.மனோபாவத்தில் ஒரு மாறுபாடும் இல்லாத கிழங்கன்களின் தேசம் அது.அங்கே மகா ராஜாக்களும் கிழங்கன்மார்களாகத் தான் இருந்திருக்கிறார்கள் ,பாட்டாளிகளும் கிழங்கன்மார்கள் தாம்.எண்ணற்ற பஷீர்கள் ,எண்ணற்ற இசக்கியர் என சூழ்ந்து நிற்கும் நிலம்.அங்கே நிலமே அரசி.நிலத்தில் உள்ள அனைத்தும் பிள்ளைகள்.பஷீர் எப்படிப் பார்த்தாலும் கிழங்கு மூப்பன் தானே இல்லையா?  நிலத்தின் முதன்மை பிள்ளை அனந்த பத்பநாபன்.அந்த பகுதியில் கொஞ்சம் நாடன் தன்மை குறைந்தவர் திருவனந்தபுரம் அனந்த பத்ப நாபன் ஒருத்தர் மாத்திரமே..மீதமுள்ள அனைத்திலும் நாடன் தன்மை உண்டு.நாராயன குருவிடம் உள்ளதும் இந்த நாடன் தன்மையே.பத்பநாபபுரம் கோட்டைக்கு உள்பக்கமாக மட்டுமே நூற்றுக்கணக்கான இசக்கியர்,கன்னியர் உண்டு.இசக்கியர் எழாமல் ஒரு நீரூற்றைக் காண முடியாது.ஒரு இசக்கிக்கு ஐந்து சுடலை காவலென்றால் பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்.ஒருசமயம் கோட்டைக்கு உள்ளாக ஒரு உயரத்தில் நிஜமான சுடலைச் சாம்பலை நீறு பாவிக்கும் சுடலை மாடனிடம் ஜெயமோகன் என்னை அழைத்துச் சென்றார் .அந்த நீறு உண்மையாகவே நீறல்ல பூசிக் கொள்ளும் தணல்


ஜெயமோகனிடமும் இந்த கிழங்கன் தன்மை உண்டு.நாடன் தன்மை.அவரது புனைவுகளில் அவருக்கு அது உச்சபட்ச சாத்தியத்தை வழங்கியிருக்கிறது.ஆனால் அவரது உரைநடைகளில் காணும் குறைகளுக்குக் காரணமாகவும் ஆகிறது. .ஒரு உண்மையைக் காணும் சந்தர்ப்பங்களில் பிற உண்மைகளை உக்கிரமாக மறுத்துவிடும் உரை நடைத்தன்மை ,நாடன் தன்மைக்கு உரியது.ஜெயமோகன் உரைநடைகள் உருவாக்கும் சீண்டல் தன்மைக்கு நாடன் தன்மை ஒரு காரணம்.ஜெயமோகன் அவருடைய படைப்புகள் வழியாக வேறொரு பேருருவை காண்பவர் என வைத்துக் கொண்டால் , உரைநடைகள் வழியாக  ,தன் பிசிறுகளை கடந்து செல்கிறார் எனலாம்.மரச் சீவுளியில் சுருண்டு சுருண்டு விழும் செதில்கள் போல.அவர் உரைநடைகள் மூலமாக தன் பிசிறுகளைக் களைந்து புனைவுக்குள் நுழைகிறார்.புனைவுக்குள் நுழைய உபயோகமாகும் வழிமுறையாக இது ஆகிறது. தன்னை தோலுரித்து ,தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் உரைநடைகளில் தன் விஷம் கக்குகிறார். நான் விஷமெனச் சொல்வது அவருடைய உரைநடைகளின் உள்ளடக்கத்தை அல்ல.ஒரு உண்மையை முன்வைக்கும் போது பிற உண்மைகளை மறுத்துவிடும் பாங்கினையே விஷம் என்கிறேன்.அவருடைய உரையாடல்களுக்கும்,பயணங்களுக்கும் கூட அவர் பழகியிருக்கும் இந்த உரைநடையின் தன்மை உண்டு.அவற்றை அவ்வாறே எவரும் தன்னிறக்கிக் கொள்ளக் கூடாது. அவர் மேலேறிச் செல்கையில் திருகி வீழும்  பிசிறுகள் உங்களில் தங்கி விடும் தன்மை கொண்டவை.அவரது உரைநடைகளில் படைப்பைப் போல அவர் நிரந்தரமானவர் இல்லை.அவரையே காலால் மிதித்து ஏறிச் செல்லும் இடங்கள் அவருடைய உரைநடைகள்.அவற்றுக்கு மிகவும் தற்காலிக முக்கியத்துவங்கள் மாத்திரமே உண்டு.ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் அவை எதையும் தராதவையாகவும் இருப்பதில்லை என்பதுதான்.எனவே நிராகரிக்கவும் வாய்ப்பு கிடையாது.பாம்புச் சட்டையில் வஸ்திரம் செய்வது போல அதனை உபயோகிக்க வேண்டும்


அவருடைய உரைநடைகளில் இரண்டு காரியங்கள் நடைபெறுகின்றன.முதலில் அவரே அவரை மறுத்துச் சாடும் இடங்கள் அவை.தன் ஆணவத்தின் தீமைகளை அவற்றினூடாக அவர் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.தான் கடந்தவற்றையும்,கடந்து கொண்டிருப்பவற்றையும் அவற்றில் திரும்பி நின்று தாக்கி அழிக்கிறார் அவர்.அப்படி நின்று அழிக்கையில், அப்படி முழுமையாக அழிக்கப்பட வேண்டியவை அல்ல அவை என்பதை அவர் உணர்வதில்லை.ஆனால் அவற்றில் உண்மைகள் வெளிப்படுமா என்றால் வெளிப்படும்.அப்போது சொல்லப்படும் உண்மைக்கு ,மாற்றாக உள்ள உண்மைகள் அனைத்தையும் மறுத்து உருவாகும் உண்மை அது.யோசித்துப் பார்த்தீர்கள் எனில் ஒன்று புரியும்,தன் ஆணவம் பற்றி யாரும் எழுதிவிட முடியாத அளவுக்கு ஜெயமோகன் ஒருவரே எழுதியிருக்கிறார்.ஆணவ மனதின் அனைத்து சந்து பொந்துகளும் எழுதபட்டுள்ளன.மாபெரும் தன் ஆணவகாரர் ஒருவரால் அன்றி எழுத முடியாதவை அவை.இரண்டாவது விஷயம் அவருடைய உரை நடைகளில் உருவாகும் உண்மைகள்,அப்போது அந்த உண்மை வெளிப்பட வாகாக பிற உண்மைகள் அனைத்தையும் மறுக்கும் தன்மை கொண்டவை.இதற்காக தேவையெனில் ஏற்கனவே அவர் அடைந்த உண்மைகளையும் ,முன்வைத்த உண்மைகளையும் கூட அவரது உரைநடை மறுத்து, சிறுமை செய்து, தாழ்த்தும்.மிஷினரி தன்மையும் அவருடைய உரைநடைக்கு உண்டு.திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சிறிய சிறிய இடைவெளிகள் விட்டு அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.வாசகனுக்கான சிறைகள் அவை.நூதன அரண்கள்.


சுராவை அதிகம் ஜெயமோகன் நினைவுப்படுத்தி எழுதியிருக்கிறார்.அவர் எழுதாமலும் முடியாது.சுந்தர ராமசாமியின் அளவிற்கு இளமையிலேயே ஜெயமோகனை ஆழமாக அறிந்த பிறிதொருவர் உண்டு என்றால் நான் நம்ப மாட்டேன். சுராவைப் பற்றிய எழுத்துகளில்  பெரும்பாலும்  சற்றே பிசிறு சேர்த்தே ஜெயமோகன் எழுதியிருக்கிறார் .ஒரு கரித்துண்டையும் சேர்த்து ஒரு கவிதைக்குள் எழுதி விடுவது போல.அவருடைய இளம்பிராயத்து நெருப்பின் மேலே அவர் இன்று நின்று வீசியெறிகிற கரித்துண்டே அது.சுராவுக்கு ஜெயமோகன் இனிமையானவரே.ஆனால் இவருடைய தன்னாணவத்தையும் சேர்த்து அறிந்தவர் சுரா.ஜெயமோகனிடம் இதுவரையில் சுராவை நீங்கள் எழுதும் சித்திரங்களில் சிறிய கரி எழுத்து ஒன்று படிகிறது என்று நான் பேசியதில்லை.மறுத்து மறுத்து காரணம் காரணமாக பதிலுக்குச் சொல்லும் இயல்பு கொண்டவர் ஜெயமோகன்.பேச முடியாது என்பதே உண்மை ,சொன்னால் அவருடைய ஆணவம் நமக்கு எதிரானதொரு கரியை  கொஞ்சம் காலம் தாழ்ந்தேனும் கையில் எடுத்து வைத்துக் கொள்ளும்.பெரும்பாலும் அவருடைய புனைவுக்கு வெளியில் உள்ள எழுத்துகளில் ,அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து உண்மைகளுக்கும் புறத்தில் இப்படியொரு கரியெழுத்தும் உண்டு.இந்த கரியெழுத்தின் கறையை அகற்றி வாசிக்க இயல்பவனே அவருடைய புனைவுக்கு வெளியில் உள்ள எழுத்துக்களை வாசிக்கும் தகுதி கொண்டவன்.


ஜெயமோகன் எழுத்துகள் வழியே வாசகனைச் சென்று சேரும் சுரா ஒரு ஐயராக இருக்கிறார் .எட்டாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமியுடன் நெருங்கியிருந்த எனக்கு அறிமுகமே இல்லாதவர் அந்த ஐயர் ; ஜெயமோகனால் வெளிப்படுத்தப்படுகிற ஐயர் சுரா. நான் ஒருபோதும் அறிந்திராதவர்.சுரா பேசும் பாஷையாக ஜெயமோகன் சொல்லும் பேச்சு மொழி சுராவிடம் இல்லாதது. ஞானக்கூத்தனுக்கு ,நகுலனுக்கு,அசோகமித்திரனுக்கு எல்லாம் அவர் சொல்வது பொருந்தக் கூடியதே.ஆனால் சுந்தர ராமசாமிக்கு ஒருபோதும் பொருந்தாதது அது.அப்படி அவர் ஐயராக வெளிப்பட்டிருந்தாலும் எனக்கு அதனால் ஒன்றுமில்லை.ஒருவரிடம் சாதி வெளிப்படுமேயானால் அதனால் ஒன்றுமில்லை.அது இயல்பானதும் தான்.சுராவிடம் அப்படி வெளிப்பட்டதில்லை ஒருபோதும். அதனை அவர் நாடகமாகவும் செய்வதில்லை.அவரிடத்தே சாதியின் ரேகைகள் வலுப்படவே இல்லை.இயல்பிலேயே சுரா அதற்கு வெளியில் இருந்தார். ஜெயமோகனும் இயல்பில் இல்லையெனினும் கூட இப்போது சாதிக்கு வெளியில் உள்ளவர்தான்.சாதியில் இருந்து சாதி கடந்தவர் ஜெயமோகன்.சாதியால் அவரைக் குறுக்க முடியாது.


ஒரு சமயம் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னதை பற்றி அப்படியிருக்குமா ? என என்னைக் கேட்டார் சுந்தர ராமசாமி.நான் சுராவை "சர்" என அழைப்பேன்.இவர் ஒருவரின் பொது நடத்தையைக் கொண்டு சாதியைக் கண்டுபிடித்து விடுவேன் என்கிறார் .முடியுமா ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றார்.நான் அப்போது முடியாது "சர்" என்றேன்.உண்மையாகவே அப்போது எனக்கும் முடியாது அல்லது கண்டுபிடிக்கத் தெரியாது என்பதே உண்மை.ஒருவர் நெருங்கிய பிறகே ரொம்ப கொஞ்சமாக சாதி மணம் பிடிக்கும். ஆனால் இப்போதெனில் ஓரளவு முடியும் "சர்" என்றிருப்பேன். சுரா என்னிடம் இதனைச் சொல்கையில் அவருடைய வயது அறுபத்தியொன்பது இருக்கும்.


3


2015 முதற்கொண்டு மீண்டும் ஜெயமோகனை பின்தொடரத் தொடங்கினேன்.ஏகதேசம் பத்தாண்டுகள் கழித்து மீண்டும்.அவ்வளவு தூரத்திற்கு இல்லையாயினும் கூட, எனக்கு விலகல் தேவையாகவே இருந்தது. கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் கொஞ்சம் முன்னதாக மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்திருக்கலாம்.ஆனால் விலகல் தேவைப்பட்டது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.அவருடன் இணைந்திருந்த காலத்தைப் போன்றே,விலகியிருந்த காலமும் எனக்கு முக்கியமானதே.அது நான் தனித்து ஒரு பார்வையை உருவாக்கிக் கொள்வதில் பெரும்பங்காற்றியிருப்பதை இப்போது உணர்கிறேன்..ஒருவரிடமிருந்து விலகும் போது, முற்றிலும் அவர்களைக் குறித்து சிந்திப்பதை நிறுத்திவிடுவேன்.என்னுடைய விலகல் என்பது அத்தகையது.விலகலின் போது என்னுடைய உணர்ச்சிகள் விலகியவரை முன்னிட்டு வேலை செய்ய அனுமதிப்பதில்லை.இருந்தாலும் தமிழ் கலையிலக்கிய சூழலில் இருக்கும் ஒருவரிடம் ஜெயமோகன் ஊடுருவி வருவதை தவிர்க்க இயலாது.அவருடைய பின் தொடரும் நிழலின் குரல் நாவல் வரையிலான கணிப்பும் எனக்கு உண்டு.அறம் கதைகள் மீண்டும் ஜெயமோகனை நான் நாடிவர காரணமாக அமைந்தன .


பொதுவாக தமிழ் எழுத்தாளர்களுக்கு இரண்டாம் பிறப்பு என்பது கிடையாது.ஆரம்பத்தில் ஒன்றில் ஊன்றி எழுந்து வந்திருப்பார்கள்.அதுவே கடைசி வரையிலும்.ஜரிகைகள்,தோரணங்களில் சில மாறுபாடுகள் செய்து முந்தைய பளுவை இழுத்துக் கொண்டே வருவார்கள்.இதுவே வழக்கம்.முற்றிலுமாக தன்னை மறுபடி மறுபடி புதுப்பித்த வண்ணம் உள்ள ஒரு எழுத்தாளர் தமிழில் ஜெயமோகன் ஒருவரே.சுந்தர ராமசாமி ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் எழுந்து வந்திருக்கிறார்.கவிதையில் தேவதச்சன் அவ்வாறானவர்.மீண்டெழும் தன்மை கொண்டவர்.வண்ணதாசனின் தற்போதைய கவிதைகளிலும் தன் தொடர்ச்சியில் மீண்டும் எழும் உத்வேகம் இருக்கிறது.இவற்றை விதிவிலக்கான உதாரணங்களாகச் சொல்லலாமேயொழிய இவை தமிழின் பொதுவான ஒரு அம்சம் அல்ல.சிறந்த ஒரு தமிழ் எழுத்தாளனின் ஒன்றிரண்டு சிறந்த நூல்களை படித்து விட்டு ஒரு கணிப்பிற்கு வந்து விட முடியும்.பிறகு அவன் மாறிவிடுவான்  என சொல்வதற்கில்லை.அப்படி வந்து சேரும் கணிப்பு பெரும்பாலும் தவறுவதும் இல்லை.ஆனால் சமபாதிக்கு பிறகு ஜெயமோகன் முற்றிலும் புதியவராக மீண்டும் இருந்தார்.


வெள்ளை யானை நாவலெல்லாம் மிகவும் முக்கியமான ஒரு வைப்படி.ஒரு நாவல் எவ்வாறாக வாசகனின் மன அமைப்புக்கு அருகில் சத்தியத்தை கொண்டு போய் நிறுத்தி வைக்க முடியும் என்பதற்கு உதாரணம் சொல்லத் தகுந்த நாவல் அது.அந்த நாவல் நமது சூழல் வழங்குகிற அரசியல் அறிவை முற்றிலும் தலைகீழாக்குகிறது.அதன் பொய்யை ,வேடத்தை ,நடிப்பை நவீனமான ஒரு வடிவின் மூலமாக ,நூதனமான புனைவு வழியே ,மிகவும் சுலபமாக அகற்றி வைக்கிறது.ஒருவாறாக நானூறு ,ஐநூறு ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு தொடர்ந்து முன்வைக்கப்படும் அரசியல் அறிவை ,ஒரு சூழல் தருகிற பொதுப்புத்தியை ஒரு நாவலில் கடந்து செல்வது என்பது உண்மையாகவே மிகவும் ஆச்சரியமானது.இந்த ஒரு நாவலுக்காக மட்டுமே ஒரு சமுகம் அவரை குருவாக ஏற்று வழி நடக்கலாம்.வெண்முரசு அதிகபடியானதொரு போனஸ் போல.படைப்பு அனுபவம் என்பதை அழுத்தமாகவும்,அதிகமாகவும்,அழகாகவும் வழங்கக் கூடியவர் ஜெயமோகன்.படைப்பு அனுபவம் இல்லாத எதையும் அவர் வழங்குபவர் அல்லர்.புனைவுக்குருதி அவர்.


வெண்முரசிற்கு பிறகு அவர் எழுதிய நூற்றுக்கும் அதிகமான கதைகள் புதுமைப்பித்தனுக்கு பிறகு தமிழில் நிகழ்ந்த அற்புதங்கள்.சடம் போன்று ஒன்றிரண்டு சாதாரண கதைகளும் அவற்றில் இருக்கின்றன.குமரித்துறைவி போல அழியா வரம்பெற்ற கதைகள் அதிகம்.கொதி,வலதும் இடதும் என பல கதைகள் அவர் உள்ளத்தில் இருந்து மட்டுமே வெளிவரும் ஆழம் நிரம்பியவை. இந்த கதைகள் வெண்முரசு என்ற மிகப்பெரிய படைப்பு உயரத்திற்கு சென்று திரும்பும் போது வழியில் எழுதப்பட்டிருக்கின்றன .அதனாலேயே என்னவோ அவை மிக மிக மிருதுவாக ,எளிமையாக ஆனால் பெரிய ஆழங்களை நமக்கு உணர்த்துகின்றன.எளிமையின் ஆழங்கள் என இக்கதைகளைப் பற்றி சொல்லலாம்.இந்த ஆழங்கள் மொழிபெயர்ப்புகள் முலமாகவோ ,பிற படைப்பாளிகள் வழியாகவோ நாம் பெற முடியாதவை.



பொதுவாக ஜெயமோகனைப் பற்றிச் சொல்ல எனக்கு மேலதிகமாக இரண்டு விஷயங்களே உள்ளன.தமிழ் இலக்கியத்தின் சராசரி உயரத்தை அவர் கணிசமான அளவிற்கு அதிகப்படுத்தியிருக்கிறார்.அடுத்த அடுத்த தலைமுறையில் வரும் எழுத்தாளனுக்கு இது ஆகப்பெரிய சவால்.அவன் மெய்யாகவே எதிர்கொண்டாக வேண்டிய சவால்.பொது உயரம் அவரால் இன்று விரிவடைந்திருக்கிறது.புதுமைப்பித்தன் முலமாக முன்பு தமிழில் நிகழ்ந்ததும் இதுவே.இரண்டாவது விஷயம் .அவருடைய ஏற்ற தாழ்வுகள்,குறைகள் அனைத்தையும் தாண்டி அவருடைய படைப்புகள் வாயிலாக, புனைவின் தனித்துவமான அழகு கொண்டவர்.டால்ஸ்டாய் போல ,தாஸ்தாவெஸ்கி போல அவ்வளவு உயரத்தில்; அதற்கும் மேலான உயரத்தில் நம்முடன் இருப்பவர்.நமக்கு இதனைக் காணத் தெரிந்திருந்தால் நாமும் பாக்கியசாலிகளே.ஜெயமோகனை அறியாமல் ஒருவர் இங்கே ஆற்றுவதற்கு இலக்கியத்தில் ஒரு காரியமும் இல்லை.இந்த நூற்றாண்டு தமிழுக்கு வழங்கியிருக்கும் பெருமிதம் அவர்.அதில் விவாதிக்கவும்,வேறுபடவும் ,ஒன்றுசேரவும் என பல இடங்கள் உண்டு.ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அவரைப் புறக்கணிப்பவர்கள் ஆற்றுவதற்கு இங்கே ஏதும் கிடையாது என்பதே உண்மை.

லக்ஷ்மி மணிவண்ணன் - தமிழ் விக்கி பக்கம்

1 comment:

  1. இதனால்தான் கவிஞர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பது. அபாரமான ஆளுமைச் சித்திரம் சார்.

    ReplyDelete