2016 விஷ்ணுபுரம் விருது விழாவில் ஜெயமோகன், ஹெச். எஸ். சிவபிரகாஷ், வண்ணதாசன், இரா. முருகன், பவா செல்லதுரை, கு. சிவராமன் |
தமிழில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளாரன ஜெயமோகனின் சில நண்பர்களும் வாசகர்களும் இணைந்து அவருக்காக கொண்டுவர இருக்கும் 60 ஆண்டு நிறைவு மலரில் நானும் அவரைப் பற்றி ஒரு பத்தி எழுதவேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.
முதலாவதாக அவர் இந்த வயதிலும் களத்தில் இருப்பதற்கும் முழு ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் நீளும் மிகப்பெரும் புனைவு குறித்து கேள்விபட்டிருக்கிறேன். அதை முழுமையாக படிக்க வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. அம்மா வழியில் பார்க்கும் போது நான் பாதி தமிழனாக இருப்பினும் கன்னட எழுத்துருக்களை கற்றுக் கொள்ளும் முன்பே நான் தமிழ் எழுத்துருக்களை கற்றுக்கொண்டு விட்டேன் என்ற போதிலும் என்னால் தமிழை ஓரளவு பேசவும் புரிந்து கொள்ளவும் முடியுமேயன்றி எளிதில் வாசிக்க இயலாது. இது பரிதாபம்தான். என்னால் சற்று சிரமப்பட்டு அறிவிப்புப் பலகைகள் அல்லது செய்தித்தாள்களை வாசிக்க முடியும். ஆனால் முழுமையான இலக்கிய ஆக்கங்களை கண்டிப்பாக வாசித்துவிட முடியாது. மேலும் நான் வாசிக்கக்கூடிய மொழிகளான கன்னடம், ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் ஜெயமோகனின் படைப்புகள் கிடைப்பதில்லை. நான் இந்த மலரில் எழுத வேண்டுமென விரும்பிய சுனில், நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மூன்று அருமையான சிறுகதைகளை அனுப்பி வைத்தார். ஜெயமோகனின் கதைகளில் உள்ள அடிப்படையான எளிமையும் வெளிப்படைத்தன்மையும் கண்டு நான் மெய்சிலிர்த்துப் போனேன். குறிப்பாக தேவகியின் டைரி பற்றிய கதை. குளிர்ந்த கனல் போன்றது அக்கதை. ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணின் அவலநிலை குறித்த நேரடியான விவரிப்பில் விரிகிறது. மென்மையான மேற்பரப்பு போல தோற்றமளிக்கும் அவளின் அகம் தீண்டப்படும்போது ஒரு கட்டத்திற்குமேல் அதனடியே கனலும் விரக்தியும் துன்பமும் வெடித்துச் சிதறும் உச்சத்தில் நிலைகொள்கிறது.
கவர்ந்திழுக்கக்கூடிய இந்த எழுத்தாளரை மேலும் எவ்வாறு வாசிக்கப் போகிறேன்! யாரேனும் இதற்கான முன்னெடுப்பை எடுத்து அவர் மேலும் எங்களுக்கு கிடைக்குமாறு செய்து அவருடைய எழுத்துக்கான எங்கள் பசியை தணிக்க வேண்டும்.
ஜெயமோகனை ஒரு புனைவாசிரியராக நான் குறைந்த அளவே வாசித்திருக்கிறேன் என்பதையும் எனவே அதுகுறித்து எழுத என்னிடம் போதுமான தரவுகள் இல்லை என்பதையும் எண்ணி வருந்துகிறேன். பின்னாளில் மேலும் அவருடைய படைப்புகள் எனக்கு வாசிக்க கிடைத்தவுடன் ஜெயமோகன் எனும் புனைவாசிரியர் குறித்து விரிவாக எழுதுவேன்.
இலக்கியக் கூடுகைகளை தவிர்த்துப் பார்த்தால் அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்கு அமைந்ததில்லை. நாங்கள் சந்தித்துக் கொண்ட ஐந்து முறையும் இலக்கியக் கூடுகைகளின் போதுதான். அவை சிறிய உரையாடல்களாக இருப்பினும் நினைவில் நிற்பவை. ஒவ்வொரு தருணத்தின் போதும் இதோ திறந்த உள்ளமும் அறிவார்ந்த மனமும் கொண்ட ஒரு வியப்பிற்குரிய மனிதர் நம்முடன் இருக்கிறார் என்பதை உணர்ந்துள்ளேன்.
எங்கள் முதல் சந்திப்புதான் இருப்பதிலேயே நீண்டது. நாங்கள் அரை நாள் முழுக்க ஒன்றாக இருந்தோம். நஞ்சுண்டனின் கவிதைப் புத்தகம் ஒன்று பெங்களூரில் வெளியிடப்பட்டது. என் நண்பர் கார்லோஸ்* (Carlos) அப்புத்தகத்தை வெளியிடுமாறு என்னை கேட்டுக் கொண்டார். ஜெயமோகன் அப்புத்தகத்தின் மீது பேசுவதாக இருந்தது. அன்று ஜெயமோகன் பேசிய அதே சொற்கள் என் நினைவில் இல்லை. அது என் பலவீனம் மற்றும் பலமும் கூட. அன்று பேசியதன் குறிப்பிட்ட விஷயங்களையும் சொற்களையும் நான் மறந்துவிட்ட போதிலும் அன்று நான் கண்டவை அல்லது கேட்டவை என்னுள் ஏற்படுத்திய உணர்வும் தாக்கமும் மட்டும் நினைவில் உள்ளது. ஜெயமோகனின் உரை எவ்வித வழக்கமான சொல்லாடல்களோ துதிபாடல்களோ இல்லாமல் கவிதையின் நுட்பமான விஷயங்களை தொட்டுச் சென்றது. எளிய தோற்றமளிக்கும் அந்த ஆழமான உரையைக் கேட்டு நான் பிரமித்துப் போனேன். அவருடைய குரல் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் இன்றி நேரடியாக மனதோடு மனம் பேசுவதாக இருந்தது. அன்று இந்த எழுத்தாளரை மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ஏனெனில் நாங்கள் ஒத்த மனம் கொண்டவர்கள்.
பின்னர் தமிழ்நாட்டில் உள்ள இலக்கிய நண்பர்களிடம் விசாரித்தபோது ஜெயமோகன் அவர்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் அல்ல என்றாலும் அவருடைய பரவலான புகழுக்கு அனைவருமே சான்றளித்தனர். அவர்களின் கருத்து வேறுபாடு அவருடைய அரசியல் நிலைப்பாடு சார்ந்தது என்பதை கண்டு கொண்டேன். டி ஹெச் லாரன்ஸ் சொன்னதைப் போல நான் எப்போதும் கதைசொல்லியை அல்ல கதையை நம்புபவன். என் மொழி உட்பட பெரும்பாலான மொழிகளிலும் உள்ள பல்வேறு வாசகர்களும் திறனாய்வாளர்களும் தங்கள் நிலைப்பாடு சார்ந்து ஒரு எழுத்தாளரை குறைத்து மதிப்படுவதைக் கண்டு வியக்கிறேன். ஆனால் என்னளவில் இலக்கியம் என்பது கருத்துகளின் பெட்டகமோ அல்லது கருத்து நிலைப்பாடோ அல்ல. அது ஓர் அனுபவத்தை வெளிப்படுத்துவோடு நில்லாமல் எழுத்தாளன் தன் திறனால் உள்ளிழுத்து அதில் வாழ வைக்கும் பிரத்யேகமான அறிதல் முறையாகும். உதாரணமாக கவிதையில் என்னுடைய ஆதர்சங்களில் ஒருவரான கோபாலகிருஷ்ண அடிகா தீவிர வலதுசாரியாக இருந்தபோதும் அவரது எழுத்து குறித்து எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. என் தலையில் மார்க்சியம் ஓடிக்கொண்டிருந்த நாட்களில் அவருடன் விவாதித்திருக்கிறேன். எங்கள் சமூக அரசியல் நிலைப்பாடுகள் முற்றிலும் நேரெதிரானவை என அறிந்திருந்தபோதிலும் நாங்கள் ஒருவரையொருவர் மதித்தோம். ஆனால் பெரும்பாலும் இவ்வாறு நடப்பதில்லை. ஓர் எழுத்தாளரைப் பற்றி முன்னரே தெரிந்தவற்றைக் கொண்டு முன்முடிவுகளுக்கு சென்றுவிடுகின்றனர்.
அடுத்ததாக கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் சிறப்பு விருந்தினாராக பங்கெடுக்க ஜெயமோகன் என்னை அழைத்தபோது அவரை சந்தித்தேன். இங்கே மீண்டும் எங்கள் உரையாடல் நீளமானதாக இல்லை. நாங்கள் இருமுறை மேடையையும் சில மெல்லிய உரையாடல்களையும் பகிர்ந்து கொண்டோம். ஆனால் வாசகர்களுக்கு அவர் என்னை அறிமுகப்படுத்தும்போது மொழியாக்கத்தில் கிடைத்த என் எழுத்துகளை அவர் எவ்வளவு உன்னிப்பாக பின்தொடர்ந்துள்ளார் என்பதை கண்டுகொண்டேன். நான் பேசும் போது அவருடைய அரசியல் முன்மாதிரிகள் பற்றி போகிறபோக்கில் சில கிண்டல்களை வீசினேன். ஆனால் அவர் இதற்கெல்லாம் எரிச்சலுறவே இல்லை. பிரக்ஞைபூர்வமாக நான் கொண்டிருக்கும் கொள்கைகளை அல்ல என்னுடைய எழுத்து உண்டாக்கும் தாக்கத்தையே அவர் கருத்தில் கொண்டார்.
ஜெயமோகன் மீண்டும் என்னை சென்னையில் நடைபெற்ற இலக்கிய விருதளிக்கும் விழாவிற்கு அழைத்தார். இம்முறை எங்கள் உரையாடல் ஒருவகையில் உளப்பூர்வமானதாக அமைந்தது. நாங்கள் சொற்கள் வழி குறைவாகவும் மெளனங்கள் மற்றும் சைகைகள் வழி அதிகமாகவும் பேசிக்கொண்டோம். இதற்குள்ளாக நாங்கள் நெருங்கிய ஆத்மாக்கள் என்பதை நிச்சயமாக தெரிந்து கொண்டேன்.
ஜெயமோகன் என்னுடைய ‘குரு’ எனும் புத்தகத்தை வாசித்து அது மிகவும் பிடித்துப்போய் விட்டதால் அவர் அதை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டுமென விரும்பிய போது இது உறுதியானது. விரைவிலேயே ஸ்ரீனிவாசன் என்பவர் தொடர்புகொண்டு மொழியாக்கத்திற்கான அனுமதி கோரினார். நான் உடனடியாக சம்மதித்தேன். அப்புத்தகம் பல வாசகர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாக என்னிடம் சொன்னார்கள். நண்பர்களும் தமிழ் இதழ்களில் வந்திருந்த சில நேர்மறையான மதிப்புரைகளை அனுப்பி வைத்தனர். அப்புத்தகம் தற்போது இரண்டாம் பதிப்புக்கு செல்வதாக கேள்விப்படுகிறேன். இவையாவும் நிகழ்ந்ததற்கு ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இத்தனைக்கும் அவரின் அன்பிற்குரிய கவனத்தில் விழும் அளவிற்கு அவருக்காக எதையும் நான் செய்துவிடவில்லை.
மற்றொரு தருணம் கேரளாவில் நடைபெற்ற கவிதை விழாவின் போது. நான் தலைமைதாங்கிய ஓர் அமர்வில் ஜெயமோகன் கவிதைகளின் செல்திசை குறித்து உரையாற்றினார். என்னுடைய கவிதைகள் உட்பட தென்னிந்தியாவின் பல்வேறு தற்கால கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசிய அவ்வுரை அர்த்தம் மிகுந்ததும் குறிப்பிடத்தகுந்ததும் ஆகும். அவர் மேலும் கவிதை விமர்சனங்கள் எழுத வேண்டும், ஏனெனில் தற்கால விமர்சகர்களை அதிகம் வாசித்து நான் மிகவும் சோர்ந்துபோயிருக்கிறேன். அவர்களைப் பற்றி நினைக்கையில் யீட்ஸ் (Yeats) தன் விமர்சகர்கள் குறித்து சொன்னதைத்தான் நினைக்கத் தோன்றுகிறது: ’கடவுளே மனிதர்கள் தனிமையில் தங்கள் மனங்களில் மேற்கொள்ளும் சிந்தனைகளிலிருந்து என்னை காப்பாற்று / அழிவற்ற பாடலை பாடுபவர் தங்கள் ஒவ்வொரு அணுவின் ஆழத்திலிருந்தும் (marrow bones) பாட வேண்டும்’
கடந்த மூன்று தசாப்தங்களிலாக எங்களிடையே ஏற்பட்ட அரிதான ஆனால் நினைவில் நிற்கும் தொடர்புகளின் போது அவர் என்னைக் குறித்து சொன்னவற்றுக்கும் செய்தவற்றுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்றேனும் ஒருநாள் அவரின் அன்பை நான் திருப்பி செலுத்த வேண்டும்.
இக்குறிப்பை முடிப்பதற்கு முன்பாக, ஓஷோவைப் பற்றி ஜெயமோகன் ஆற்றியுள்ள மூன்று விரிவான உரைகளை யூட்யூபில் கேட்டதைப் பற்றி சொல்ல வேண்டும். அது மிகச்சிறப்பாக ஆராய்ந்து செய்யப்பட்ட வாதிடும் உரை. அவ்வுரை எனக்கொரு திறப்பாக அமைந்தது. ஏனெனில் அதற்கு முன்பாக ஓஷோவிற்கு எதிராக பல முன்முடிவுகளை நான் கொண்டிருந்தேன். முக்கியமாக, ஜெயமோகன் எவ்வாறு இந்தியாவின் முற்றிலும் வெவ்வேறான தத்துவப் பள்ளிகளையும் வாசித்து ஆழமாகவும் விரிவாகவும் புரிந்து கொண்டுள்ளார் என்பதையும் அறிந்து கொண்டேன். அவர் ஒரு முதன்மையான தத்துவவாதியும் கூட.
மேலும் ஜெயமோகனை எங்களுக்கு தாருங்கள், தமிழில் அவரை வாசிக்கும் அதிர்ஷ்டம் எங்களுக்கு இல்லாததால் தமிழல்லாத பிற மொழிகளிலும் உங்கள் ஞானத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment