ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன? - பாரதி பாஸ்கர்


எப்படிச் சொல்வது? ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்ற கம்பனின் வரிதான் இதற்கு பதில். 


அதையும் மீறி, விண்டுரைக்க முயலும் முயற்சிதான் இங்கே நான் பதிவு செய்வது. 


ஒரு உள்ளார்ந்த பயணத்தில், திசை தெரியாத குழப்பத்தில் திகைத்து நிற்கும்போது கிடைத்த ஒரு ஒளிக்கீற்று - அதுதான் அவரின் சிந்தனை மரபிலிருந்து, எழுத்திலிருந்து, பேச்சிலிருந்து நான் பெற்றது. 


வழக்கம் போல ஒரு பரபரப்பான அலுவலக நாள் காலை. கிளம்பும் அவசரத்தில் ஆனந்த விகடனைப் புரட்டி என்ன இருக்கிறது என்று பார்த்தேன். ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’ தொடராக வர ஆரம்பித்திருந்த காலம் அது. பள்ளிக்கூட மனப்பாடப் பகுதியான ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ போன்ற புறநானூற்றுப் பாடல்கள் தாண்டி எனக்கு சங்க இலக்கியங்கள் பற்றி எந்த அறிமுகமும் கிடையாது. அதனால் நான் அதுவரையில் சங்கச் சித்திரங்களைப்  படித்திருக்கவில்லை. 


அந்த வாரத்தின் பகுதியை எதனாலோ திடீரென்று படித்தேன். 



ஒரு கல்யாணப் பத்திரிக்கையில் ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ பாடலை அச்சிட்டு இருக்கிறார்கள். பத்திரிக்கை வரப்பெற்ற சாத்தூர் விவசாயி ஒருவருக்கு அந்தப் பாடலின் பொருள் புரியவில்லை. ஒரு தமிழ் வாத்தியாரிடம் போய் கேட்கிறார். அவர் அந்தப் பாடலின் பொருளை  விளக்குகிறார். ‘சிவப்பு மண்ணில் கொட்டிய மழைத் தண்ணிக்கும் அந்த செவப்பு  நெறம் வந்துருமில்ல... - அப்படி மனசு ரெண்டும் கலந்துடுச்சாம்’.


சாத்தூர் விவசாயிக்கு இந்த உவமை சரியாகப் படவில்லை. ‘கொஞ்ச நேரத்தில தண்ணியிலிருந்து நெறம் போயிடுமில்ல?’ என்கிறார். ஜெ.மோ இந்த உரையாடலில் உள்ளே நுழைந்து, ‘செம்புலம் என்றால் பாலை நிலம். பாலை நிலத்தில் பெய்த மழைன்னு பொருள் எடுக்கணும்னு அனந்தராமையர் உரையில் இருக்கே...’ என்கிறார்.


இந்த விளக்கம் விவசாயிக்கு திருப்தி அளிக்கிறது. அவரோ சாத்தூர்க்காரர். வறண்ட மண்ணில் பெய்த மழையை மண் எப்படி உள் வாங்கும் என்று கண்ணால் பார்த்தவர். 


நான் படிப்பதை நிறுத்தி, புத்தகத்தை மூடினேன். அனந்தராமையர் இப்படி உரை எழுதியது எனக்குத் தெரியாது. ஆனால் அனந்தராமையரை எனக்குத் தெரியும். நான் அவரின் கொள்ளுப் பேத்தி. 


என் அம்மாவின் தாத்தா அவர். அவர் கஷ்டப்பட்டு உரை எழுதிய கலித்தொகை நூலின் பற்பல காப்பிகள் விற்காமல் எங்கள் பழைய வீட்டில் மூட்டை மூட்டையாகக் கிடந்ததும், செல் அரித்துப் போனதும், அவர் உழைத்த உழைப்பும், அங்கீகாரங்கள் எதுவுமின்றி மறைந்ததும் மட்டும்தான்  குடும்பத்தில் எங்களுக்கு செவி வழிச் செய்திகளாக வந்திருந்தன.


மற்றபடி அவரின் இந்த ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனை, தமிழில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஆராய்ச்சி சார்ந்த பார்வை இவையெல்லாம்  பற்றி எங்களுக்கு தெரியவே தெரியாது.


‘யார் இந்த ஜெயமோகன்’ என்று எனக்கே கேட்டுக் கொண்டேன். 


அதுதான் ஆரம்பம். என் கொள்ளுத் தாத்தாவை எனக்கு காண்பித்துக் கொடுத்தது ஒரு துவக்கம் மட்டுமே. அதே போல்தான் – என்னை எனக்கு அவரின் எழுத்துக்கள் தாம் காண்பித்துக் கொடுத்தன. அவரிடம் நான் என்ன பெற்றேன்? என்னை எனக்கே காட்டும் கண்ணாடியை அவரிடமிருந்துதான் நான் பெற்றேன். 


படிக்கிற புத்தகத்தை ஒரு நிமிடம் மூடி,  ஒரு சின்னப் புன்னகையையோ, ஒரு துளி கண்ணீரையோ உதிர்த்துவிட்டு, திரும்பவும் விட்ட வரியிலிருத்து துள்ளும் மனசோடு படிக்கும் அனுபவம் - வாசிப்பின் லாகிரி - அவரிடமிருந்து பெற்றதுதான்.  



வெண்முரசில்,  திரௌபதியின் சேலையை துச்சாதனன் உரியும் போது, கௌரவர் அரண்மனைப் பெண்கள் நூற்றுக் கணக்கில் வந்து தங்கள் சேலைகளால் அவளை மூடிய கட்டத்தைப் படித்தபோது அப்படித்தான் இருந்தது. லாகிரி. வாசிப்பின் பேரானந்தம், அந்தத்  தருணத்தின் கொடை – அது ஜெயமோகன் தந்தது. 


அறிந்து  கொள்வதின் பரவசம்,  வாழ்க்கையின் மகத்தான கேள்விகளின் பதில்கள் எல்லாமே எளியவைதான் என்று தாண்டிச் செல்லும் விலகல், ரத்தம் வரும் அளவுக்கு கீறி, வேடங்களை விலக்கி, என்னை நானே பார்த்து, என்னை நானாகவே ஏற்கும் அமைதி... இவையெல்லாம் அவரின் எழுத்துக்களால் நான் பெற்றவையே.


மருத்துவமனையில் அபாயமான கட்டத்தில் நான் இருந்தபோது, ஒரு விளிம்பு நேரச் சிந்தனையாக , வாழ்வில் நான் கடந்து வந்த மகத்தான கட்டங்களை  நினைத்துப் பார்த்தேன். ஒரு பசு மாடு தன்னையே தான் திரும்பிப் பார்ப்பது போல் .. ( இது ஜெ.மோ. பயன்படுத்திய  உவமைதான்) . 


விகடன் யூ ட்யூப் சானலுக்காக அவரை நானும் திரு. ராஜாவும் செய்த நேர்காணல்,  அந்த மகத்தான தருணங்களில் ஒன்று. 


அன்றைய நாளின் படபடப்பை இன்றும் என் மகள்களும் கணவரும் கேலி செய்கிறார்கள். ஒரு மகத்தான ஆளுமையை பேட்டி எடுக்கப் போகும் படபடப்பு அல்ல அது. அவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்ற பதட்டம். 


அன்று அந்த வாய்ப்பு  அமையவில்லை. 


இன்று, அவரது 60 ஆண்டு விழாவில்,  கண்களில் நீருடன், நன்றியுடன்,  நெஞ்சத்தில் அவருக்கான வாழ்த்துகளுடன் -    சொல்லிக் கொள்கிறேன்: ‘குரு வந்தனம், ஆசானுக்கு வணக்கம், அவர்  நூறாண்டு வாழ மனம் கனிந்த வாழ்த்துகள்.’


***

பாரதி பாஸ்கர் (நன்றி: தினத்தந்தி)

No comments:

Post a Comment