1
ஜெயமோகனின் படைப்புகளை விரும்பி தேடிப்படிக்கும் வாசகர்கள் ஈழத்தில் அதிகம் உண்டு என்பது யாழ்ப்பாண நூலகத்தில், இரவல் வாங்கும் பகுதியில் விஷ்ணுபுரம் நூலின் இறுதியட்டைக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த இரவல் பெற்றவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தபோது எனக்கு நன்றாகவே தெரிந்தது. நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த பல வாசகர்கள் ஊமைச்செந்நாய், டார்த்தீனியம், பத்மவியூகம் போன்ற பல கதைகள் தங்களை ஆழமாகப் பாதித்ததாக பகிர்ந்து இருக்கிறார்கள். ஆனால், கலை இலக்கியத்திற்கு சமபந்தமற்ற சிலர் சமூக வலைத்தளங்கள் வழியே இலங்கையில் ஜெயமோகனுக்குப் பலத்த எதிர்ப்பு இருப்பதாக ஓர் பிம்பத்தைக் கட்டமைப்பது வழமை. அதற்கு அவர்கள் கூறும் காரணத்தில் முதன்மையானது உலோகம் நாவல் ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டது என்பதாக இருந்தது. நாவலை வாசிக்காமலே அதனை திரும்பத் திரும்பச் சொல்வது ஓர் வாய்பாடாகவே ஆகிவிட்டது. இந்த நாவலைப் படித்த பல இளைய இலக்கிய நண்பர்கள் என்னுடன் பேசும்போது அப்படி ஏதும் இதில் இல்லையே என்று வியப்புடன் சொல்லி உரையாடி இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு வாசிப்பதில் தனித்துவமான குறைபாடு ஏதும் உள்ளதா என்று தோன்றுவதுண்டு. இலண்டனில் நடக்கும் இலக்கியக் கூட்டங்கள் உட்பட, இலங்கைத் தமிழர்கள் ஒழுங்குபடுத்தும் பெரும்பாலான மெய்நிகர் இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் அரசியல் சரிநிலை சார்பு கொண்ட உரையாடல்களையே மேற்கொள்வது வழமை. அரசியல் சரிநிலை என்பது ஐந்து மாதத்திற்கு ஒருமுறை மாறக்கூடியது என்பது வேறுகதை. இலக்கியத்தின் முதன்மையான இடம் அரசியல் அல்ல என்பதை புரிந்துகொள்ள அந்தத்தலைமுறையால் இயலாது என்றே நினைக்கிறேன்.
படைப்பை அணுகுவதில் இருக்கும் சிக்கல் என்பது வாசிப்புக் குறைபாடு சார்ந்தது. இந்த இடத்தில் தான் நாங்கள் ஈழத்து விமர்சன மரபை ஒருமுறை நோக்குவது பொருத்தம். கைலாசபதி, சிவத்தம்பி தங்களது கலாநிதி ஆய்வை பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், ஜார்ஜ் டெர்வென்ட் தாம்ஸனின் மேற்பார்வையின் கீழே வெவ்வேறு காலப்பகுதியில் செய்தவர்கள். டெர்வென்ட் தாம்ஸன், பண்டைய கிரேக்க இலக்கியங்களை, நாடகங்களை மார்க்சிய அணுகுமுறையில் மீள்வாசிப்புச் செய்தவர். அவர் பண்பாடு, தொன்மம் சார்ந்த வரலாற்று அணுகுமுறையும், மார்க்சியப் பார்வையும் கொண்டவர். அவரிடம் அச்சிந்திக்கும் முறைமையைக் கற்றுக்கொண்டு, அதைத்தான் கைலாசபதி, சிவத்தம்பி இருவருமாக ஈழத்து இலக்கிய விமர்சனங்களில் முன்வைத்தார்கள். இந்த அணுகுமுறை, கலாச்சாரத்தில் உள்ள மரபு, தொன்மம் போன்ற விடயங்களை மறுக்கும் கலகச் சிந்தனை முறைக்கு ஓரளவுக்கு எதிரானது. அதனாலேயே இரஷ்ய சார்பு மார்க்சியரான சிவத்தம்பி நல்ல முருக பக்தராக இறுதிவரை இருக்க முடிந்தது. கைலாசபதியும், சிவத்தம்பியுமாக சமூகத்தை மாற்றும் கருத்தியலைக் கொண்டிருப்பது, வர்க்கம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைப்பவை சார்ந்த ஆக்கங்களை உயர்வான மதிப்பீடுகள் மூலம் முன்னிறுத்தினார்கள். இந்த மதிப்பீடுகள் என்பது இலக்கியத்துக்கு வெளியேயான சமூகம் சார்ந்த மதிப்பீடாகவே இருந்தது. அவர்கள் முன்னிறுத்திய படைப்புகள் பிரச்சாரங்களை மட்டும் முன்வைக்கும் ஆக்கங்களாக இருந்தன. கலையாகக் கூடிவராத ஆக்கங்களை, சிறந்த படைப்புகளாக வறட்டுத்தனமாக முன்னிறுத்தினார்கள். இவர்கள் வழியே வந்தவர்கள் இன்று முன்வைக்கும் ஆக்கங்கள் இவ்வாறானவை என்பதே பெரும் சோகம். அவர்களால் ஈழத்தில் தோன்றிய பெரும் படைப்பாளிகள் அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளைக்கூட சரியாக இனங்காண இயலாமல் தள்ளாட்டம் அடைவதை பார்க்க முடிகிறது. இந்த சூம்பிப்போன வாசிப்பு ஒருபக்கம் இருந்தாலும், அழகியல் சார்ந்த இலக்கிய வாசிப்பு நன்றாகவே இலங்கையில் தற்போதைய தலைமுறையில் துளிர்விட்டு முளைத்து எழுந்து வருவதைப் பார்க்க இயலுகிறது.
இலக்கியத்தின் பிரதான விசையில் ஒன்று நேரில் அறிந்த வாழ்கையின் பல்வேறு தருணங்கள் கோணங்கள், படைப்பில் வெளிப்படும்போது மேலதிக அர்த்தத்தைக் கொடுத்து எம்மை பாதிக்கிறது. தரையில் அலைந்த கால்கள் சட்டென்று எம்பி வானில் மிதக்கின்றன. யதார்த்த வாழ்கையில் சந்தித்து பிடிகொடுக்காத வாழ்க்கையின் பல்வேறு தருணங்கள் சம்பவங்கள் ஏன் இலக்கியப் படைப்புகளில் வரும்போது நமது மனத்தைக் கலைத்துப்போடுகிறது? இலக்கியம் வெறுமே கருத்துகளை உருவாக்குவதில்லை; அதற்குப் பின்னே இருக்கும் வாழ்கைச் சூழலை ஆராய்கிறது. நேரில் அறிய முடியாத ஸ்தூலமான பல்வேறு விடயங்கள், எண்ணங்கள் வழியாக ஊடுருவி மனத்தின் மிக நுண்ணிய இடைவெளிகளை இலக்கிய படைப்புகள் நிரப்புகின்றன. இதுவே இலக்கியத்தின் பயன்பாடுகளில் முதன்மையானது. அது கொடுக்கும் பாதிப்பு என்பது வாசகரின் பார்வையை, சிந்தனையை, மதிப்பீடுகளை அவரை அறியாமலே குலைத்து, இன்னுமொரு வரிசையில் அடுக்குகிறது. இவற்றைத் தெளிவாகச் சொல்வது அல்லது வரையறுப்பது எப்போதும் கடினமானது. ஒருவரின் கனவில் இருந்து இன்னொருவரின் கனவுக்குள் தாவிச் செல்லும் ஒரு தருணம் போன்ற அந்த நுணுக்கத்தைக் கொஞ்சம் பிடிகொடுத்து பிடித்துவிட்டால் இலக்கியம் வசப்படும்.
2
இலங்கைத்தீவில் உள்நாட்டு யுத்தம் நிறைவுற்று ஏறத்தாழ பதின்மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. என்றும் இல்லாதவாறு இந்தச் சின்னத்தீவு வறுமையின் சாவுப் பிடிக்குள் சபிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து மூழ்கி தூக்கிவிடப் போவோர் வருவோரை எட்டிப்பார்த்து பரிதாப ஓலம் எழுப்புகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், உள்நாட்டுப் போர் உருவாகியதற்கான காரணமான இன முரண்பாடு இன்றும் அப்படியே உள்ளது. இந்தியா கொண்டுவந்த பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை எதிர்த்த காரணங்கள் ஒருபுறம் இருக்க, இப்போது அது வேண்டும் என்று அடம்பிடிக்கும் தமிழ்க் கட்சிகள் இந்தியாவுடன் பேசி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முயல்கின்றன. இந்தியாவைத் தவிர்த்துவிட்டு இலங்கை இனப் பிரச்சினையை விளங்கிக்கொள்ள இயல்வது கடினமானது.
இன முரண்பாடு உருவாகி ஆயுதப் போராட்டமாக பரிமாணம் அடைந்தபோது, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து இலங்கை அரசாங்கத்தை எதிர்க்க ஆதரவு கொடுத்தார். இதன் மூலம் தனக்கு ஆதரவு நிலைப்பாடு கொண்டிராத ஜெயவர்த்தன அரசை தன்னுடைய பிடியில் வைக்கலாம் என்று நினைத்தார். தமிழ்நாட்டில் பல இரகசிய முகாம்கள் உருவாக்கப்பட்டு தமிழ் இளைர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்திராகாந்தியின் மறைவுக்குப் பின்னர் இராஜீவ்காந்தி பதவிக்கு வருகிறார். அவரது வெளியுறவுத்துறை கொள்கை இலங்கை விடயத்தில் பாரிய மாற்றங்களைச் சந்திக்கிறது. ஈழ விடுதலையை முன்னிறுத்திப் போராடிய குழுக்கள் தங்களுக்குள் முரண்படத் தொடங்குகின்றன. நீ துரோகி, அவன் துரோகி என்று மாறி மாறி பல்வேறு சகோதரக் கொலைகள் நிகழ்கின்றன. விடுதலைப்புலிகள் தனித்து பென்னம்பெரிய இயக்கமாக எழுந்து வருகிறது. பின்னர் இந்தியப்படை இலங்கைக்கு வருகிறது. இராஜீவ்காந்தி பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் மூலம் காணி, பொலிஸ் அதிகாரம் கொண்ட மாகாண சபை ஆட்சிமுறையை, இலங்கையின் ஒற்றையாட்சிக்கு அமைவாகக் கொண்டுவர முயல்கிறார்; இதனைப் புலிகள் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஒரு பகுதி ஆயுதங்களைக் கையளிக்கிறார்கள். இது சிங்கள ஆட்சியாளர்களைக் கொதிப்படையச் செய்கிறது. மாகாண சபை மூலம் கிடைக்கும் உரிமைகூட தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று அவர்கள் எதிர்த்தார்கள் – இந்த அதிகாரங்கள் தமிழர் தரப்புக்குப் போதாது என்று புலிகள் எதிர்த்தார்கள். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் வரதராஜப் பெருமாள் இராஜீவ்காந்திக்கு ஆதரவாகச் செயல்பட்டு, வடக்கு-கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஆகிறார். இலங்கை அதிபர் ஜெயவர்த்தன பதவிக்காலம் முடிந்து விலகிச்செல்ல பிரேமதாசா அதிபர் ஆகிறார். அவரும் விடுதலைப்புலிகளும் கைகோர்த்து இந்திய இராணுவத்தை முதலில் அனுப்புவோம், பின்னர் நாங்கள் பேசி நமது பிரச்சினையைத் தீர்ப்போம் என்று முடிவெடுக்கிறார்கள். விழைவு எல்லாம் குழம்பிப்போகிறது. இந்திய இராணுவப்படையுடன் மோதல் வருகிறது. இந்தியப்படை திரும்பிச்செல்ல அவர்களுடன் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும் இந்தியா செல்கிறார். அவர் இங்கிருந்தால் துரோகி என்று கொல்லப்படுவார் என்பதில் ஐயம் இல்லை. இதன் பின்னர் இலங்கையில் பல்வேறு யுத்தங்கள் வருகின்றன. ஏகப்பட்ட இன்னல்கள். இறுதியில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த பிரதேசங்கள் அனைத்தும் இலங்கை படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் யுத்தம் முடிவுக்கு வருகிறது. இதன்பின்னர் வரதராஜப் பெருமாள் இலங்கை திரும்பினாலும் அவரால் மக்களின் செல்வாக்கைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை. இவர் இந்தியாவுடன் சேர்ந்து பல்வேறு தமிழர்களின் இன்னல்களுக்குப் பொறுப்பானவர் என்றும், தமிழர்களின் துரோகி என்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் குற்றம்சாட்டப்படுகிறார். அவர் இந்தியப்படையினர் திரும்பிச் சென்றபோது அவர்களோடு கூடவே சென்று ஒரிஸாவில் பல வருடங்கள் வாழ்ந்திருந்தார். விடுதலைப்புலிகளால் துரோகியாக்கப்பட்ட வரதராஜப் பெருமாள் கொலைசெய்யப்பட பெரிய வாய்ப்பு இருந்தது. இந்தியாவுக்கு அவரை விட்டுக்கொடுத்தல் என்பது கௌரவப்பிரச்சினையாக இருந்தது. அவர் பாதுகாப்பாக இந்தியாவில் வசிக்க எல்லா வசதிகளையும் இந்திய அரசாங்கம் செய்துகொடுத்து அவரைக் காவல் காத்தது.
உலோகம் நாவல் ஈழத்தில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டதல்ல. இந்திய நிலத்தில் நடக்கும் களத்தைக் கொண்டது. மேலே நான் குறிப்பிட்ட விடயங்கள் இந்தப் பின்னணிக் களத்தைப் புரிந்துகொள்ள உதவலாம். வரதராஜப் பெருமாள் போன்று இந்திய அரசாங்கத்தால் பாதுக்காக்கப்படும் ஒருவரைக் கொல்ல ஒரு இயக்க உறுப்பினர் முயல்வதே கதை. உண்மையில் நாவலில் மையம் என்பது, ஒரு மனிதன் எப்படி ஆயுதமாக மாறுகிறான் என்பதும், அவன் எவ்வாறு இயக்கப்படுகிறான் என்பதையும் ஆராயும் எத்தனமே. ஓர் இலட்சியத்திற்காகப் போராட வரும் மனித மனம், வெறும் கருவியாக எப்படி மாற்றம் கொள்கிறது என்பதை இலக்கியத்தின் வழியே ஆராயும் சிறிய நாவல்தான் உலோகம். ஈழப் பின்னணி என்பது இக்கதைக்கு ஓர் பின்னணித் திரைதான். ஈழத்தை விலக்கிவிட்டு எதை வேண்டும் என்றாலும் பின்னணியில் வைக்கலாம். இலட்சியத்துக்காகத் தன்னை ஒப்படைத்துப் போராடுபவர்கள் எப்படி மாற்றம் அடைகிறார்கள் என்பது வியப்பே. வாழ்தல் என்பதின் மீது இச்சை கொண்டிருக்கும் உயிர் ஆசை எப்படி அதிலிருந்து இலட்சியத்திற்காகத் தன்னைச் சிதைக்க உருமாறுகின்றது? புறக்காரணிகள் நிறையவே இருக்கலாம். ஆனால் அகத்தில், மனத்தில் என்ன நிகழ்கிறது? நம்பிக்கை, கொள்கைப் பிடிப்புகள் எப்படி ஒரு மனிதனை உணர்ச்சிகளற்ற உலோகமாக உருமாற்றுகின்றது என்பது உளவியலுடன் தொடர்புடையது. ஜெயமோகன், இலக்கியத்தின் வழியே இருண்ட அந்த மனதை நோக்கிச்செல்கிறார்.
உலோகம் நாவலின் கதை சார்ல்ஸ் தன்னிலையில் சொல்லும் கதையூடாக நகர்கிறது. இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் பொன்னம்பலத்தாரை கொலை செய்ய சார்ல்ஸ் அகதியாகத் தமிழ்நாட்டுக்குள் நுழைகிறான். அங்கிருந்து படிப்படியாக பொன்னம்பலத்தாரின் வீட்டுக்குள் அவரின் அழைப்பின் பேரிலே செல்லும் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்கிறான். தன் இயக்கத்தில் இருந்தவாறே இந்திய அரசாங்கத்திற்கு நெருக்கமான இன்னுமோர் இயக்கத்திற்குள் நுழைகிறான். அந்த இயக்கத்தின் நன்மதிப்பைப் பெற்று தன் இலக்கை நோக்கிச் செல்கிறான். தான் செல்லும் பாதையில் எல்லாமே டபிள் ஏஜன்ட் நிலைப்பாட்டிலே இருக்க வேண்டியுள்ளது. கத்தியின் முனையில் நிற்பது போல. சில சமயம் நான் யாருக்காக இயங்குகிறேன் என்ற மெல்லிய அச்சமும், திகைப்பும் கூட சார்லஸ்க்கு ஏற்படுகிறது. பொன்னம்பலத்தாரைக் கொலைசெய்யும் முயற்சி தன்னைவைத்து ‘ரோ’ புலனாய்வு அமைப்பு செய்யும் திட்டமோ என்று கூட ஐயம் வருகிறது; தன்னை இந்திய உளவு நிறுவனமே அவர்களின் திட்டத்திற்கு ஏற்ப இயக்குகிறது என்ற சந்தேகமும் பல இடங்களில் அவனுக்கு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. தியாகி ஆவதும், துரோகி ஆவதும் தனக்கு அப்பாற்பட்ட நெறிமுறைகளால் உருவாக்கப்படுவது என்பது சார்லஸ்க்கு தெரிகிறது. சார்லஸ் கூர் தீட்டப்பட்ட கொலை ஆயுதமாக மாற்றப்பட்டுவிட்டான். அவன் உணர்வுகள் நீக்கப்பட்ட வெறும் உலோகம் மட்டுமே இப்பொழுது.
சார்லஸ் கவிதை, இலக்கியம், காதல் என கலையுள்ளம் கொண்டவனாக இருக்கிறான். இளமையில் சுந்தர ராமசாமியை சந்திக்க விரும்பியவன். அவன் தன் உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் இடங்களில் இருந்து மீண்டு இருக்கலாம். ஆனால் இயக்கத்தின் மீதிருக்கும் விசுவாசம் அவனை இன்னும் இன்னும் கீழே இழுத்துச்செல்கிறது. அவன் கீழே அடர்ந்த இருளில் இருக்கவே விரும்புகிறான். அதுவே அவனைச் சுவையுடன் வைத்திருக்கிறது. அவனுக்குள் இருக்கும் உலோகம் ஒரு படிமமாக விரிகிறது; தன் உணர்வுகளை இறகுகளாக்கிப் பறந்துசெல்ல விடாமல் அவனைக் கீழே பிடித்து வைத்திருக்க இந்த உலோகமே தடையாக இருக்கிறது. அதனை அறுத்து வீசவும் இயலவில்லை. அதுவே அவனை சிறைப்படுத்தி வைத்திருக்கும் இலட்சியமும் கூட. இலட்சியத்திற்கு ஒப்புக்கொடுத்து தன்னை இழந்து செல்லும் உணர்வு நிலைதான் அவனை இன்னும் அது உச்ச ஆற்றல் கொண்ட மனிதனாக உணரச்செய்கிறது. மற்றைய மனிதர்களில் இருந்து வேறுபடுத்திக்கொள்ள தன்னை மேலும் மேலும் வலுப்படுத்த இதுவே அவனுக்கு உதவுகிறது. அந்த சுவையே அவனை இன்னும் இருளுக்குள் வீழ்த்துகிறது.
பொன்னம்பலத்தாரின் மகளுடன் ஏற்படும் உறவு அவனை இதிலிருந்து விடுவிக்க உதவியிருக்கலாம். ஆனால் வைஜெயந்தி வெளியே குழந்தைத்தனமாக நடந்து கொண்டாலும் அவளுக்குள் இருக்கும் வாழ்தல் மீதான ஆசை, எப்படி தன்னை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது என்பதை அறியும்போது அவன் இன்னும் தன் இலக்கின் மீது கூர்மையடைகிறான். பொன்னம்பலத்தாரைக் கொல்வதன் மூலம், தான் யாராலும் எந்தச் சட்டத்தாலும் கொல்லப்படமுடியாத இடத்துக்குச் சென்றுவிடுவேன் என்ற இச்சையைக் கொடுக்கிறது. உயிர்வாழ்தல் என்ற ஆதார விடயத்தைத் தவிர வேறு என்ன இருக்கப்போகிறது மனிதர்களுக்கு? அதைக்கடந்து சென்றவனே அதை வென்றவன். சார்லஸ் அதை நோக்கியே செல்கிறான். அதைக் கடந்துவிட்டால் அவன் இலட்சியம் பூர்த்தியாகிவிடும். ஆனால் அவனும் அதில் தோற்றுப்போகிறான். பொன்னம்பலத்தாரை சுட்ட பின்னர் தப்பித்துச் செல்லவே முயல்கிறான். எப்படித் தப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் அவனது உள்ளம் முன்னரே வகுத்துவிடுகிறது. ஒரு கொலையைச் செய்த பின்னர் ஏற்படும் நிறைவு ஆதியின் சுவையைக் கொண்டது. அந்த சுவையை அனுபவிக்கவே சார்லஸ் விரும்பினான் என்பது பொன்னம்பலத்தாரைக் கொன்றுவிட்டு அவரது தலையை எட்டி உதைத்து மகிழ்ந்ததின் வெளிப்பாடாக இருக்க முடியும். உன்னையும்விட நாம் மேலானவன், உன்னைப் போல அல்ல நான்; வரலாற்றில் ஒருவன் என்று அவன் தன்னைக் கண்டடைந்து கொள்ளும் புள்ளியும் கூட. மனிதர்களின் அடிப்படை மனநிலை உலகம் முழுவதும் ஒன்றுதான். அது குறித்தே உலோகம் நாவல் பேசுகிறது. உண்மையில் இந்த நாவல் ஓர் உளவியல் நாவல் என்றே சொல்லத் தோன்றுகிறது. இலங்கைப் பிரச்சினையில் இந்தியா எப்படி தன் நலனுக்காக ஈழ இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்தது என்பது பற்றியும் இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது.
பொன்னம்பலத்தாரும், சார்லஸும் இருவேறு துருவத்தில் உள்ளவர்கள். இருவருக்கும் இடையிலிருக்கும் முரண் வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் சார்ந்து வேறுபடுகிறது. பொன்னம்பலத்தார் மனிதனுக்கு சிந்தனை முக்கியம், அதுவே மனிதனை வழிநடத்துகிறது; சிந்தனைக்குப் பின்னே மனித உடல் இருக்கவேண்டும் என்று கருதுகிறார். ஓர் ஆயுதத்தைக் கொண்டு கொலை செய்வது சிந்தனைக்கு முரணானது. அங்கே சிந்தனை என்பதே இல்லமால் ஆகிவிடுகிறது; மிருகத்தின் இடத்தை மனிதன் அடைகிறான் என்பது பொன்னம்பலத்தாரின் வாதமாக இருக்கிறது. ஒரு மனிதனைக் கொலை செய்வதின் ஊடாக வரலாற்றில் மீள திருத்த இயலாத ஒரு செயலைச் செய்த இடத்தை அடைய முடியும். அது மிகப்பெரிய ஆற்றல்; அந்த இடத்திற்கு ஆயுதமே மனிதனைக் கூட்டிச்செல்கிறது. முன்னர் ஆயுதம் மனிதனின் சொல் பேச்சைக் கேட்கும், பின்னர் ஆயுதமே மனிதனைக் கூட்டிச்செல்லும், அதன் பின்னே செல்வதும் – வரலாற்றில் இடம்பெறுவதும் மகத்தான அடைவு என்று சார்லஸ் நினைக்கிறான். இந்த முரணே அவர்கள் இருவரையும் எதிர் எதிர் தரப்பில் நிறுத்துகிறது.
சார்லஸ்க்கு ஆயுதம் கொலை செய்வதற்கான கருவி. பொன்னம்பலத்தாருக்கு ஆயுதம் கொல்ல வருவதற்கான கருவி. ஒருவனை ஆற்றல் கொண்டவனாக ஆயுதம் வைத்திருக்கிறது. இன்னொருவரை ஆயுதம் தன்னைக் கண்டு அஞ்சி ஒளிந்து வாழ நிர்பந்திக்கிறது. இரண்டையும் எதிர்கொள்வது மனம் – வாழ்க்கை சார்ந்த கோணம். வாழ்க்கையின் அனுபவம் மட்டும் இதில் எதைத் தேர்வு செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதில்லை. அது உயிர்மீது பிறப்பில் விதிக்கப்பட்டதாக இருக்கும் என்றே இந்த நாவலைப் படிக்கும்போது தோன்றுகிறது. கொலை செய்யும் போது கிடைக்கும் சந்தோஷத்தை என்று மனித குலம் விடுவிக்கிறதோ அன்றே சமூதாயம் நாகரீகம் அடையும் என்று பொன்னம்பலத்தார் ஓர் இடத்தில் சொல்கிறார். மனித உயிர் இச்சைகளில் இந்த வன்முறைக் குணம் ஆதி ருசியாக அப்புறப்படுத்த இயலாதவாறு இருக்கவே செய்கிறது. மனித குலம் இருக்கும் வரை இது இருக்கவே செய்யும் என்பது இந்த நாவல் தொடும் முக்கியமான இடம்.
பொன்னம்பலத்தாருக்கு உயிர்வாழ்தல் மேல் ஆழ்ந்த விருப்பம் உள்ளது. அவரது தேடல் என்பது கணிதத் துறை சார்ந்தது. பல்வேறு ஆய்வுகள் செய்ய வேண்டும், அந்தத்துறையில் சென்று உச்சத்தை அடைவதே அவர் இலக்கு. ஆனால் தேசிய அரசியலுக்கு அவர் தற்செயலாக வர நேர்கிறது. அவர் இயக்கத்துக்காக உரையாற்றச் சென்றபோது எதிர்பார்க்காத வகையில் பிரபல்யம் ஆகிவிடுகிறார். அவரது உரை பல இளைஞர்களை போராட்டம் நோக்கி இழுக்கிறது. அவர் அந்த அலையில் சேர்ந்து மிதக்கிறார். ஆனால் அவர் இராணுவத்துக்குரிய ஆள் அல்ல. அவர் உள்ளூர முற்றிலும் ஆயுத இயக்கத்திற்குப் பொருந்தாத ஒருவர். ஆனால் அவருக்குத் தலைமை பொறுப்பு மீது ஆசைவருகிறது. தானே இயக்கத்துக்கு தலைவன் – அறிவில், ஆங்கில புலமையில் மற்றையவர்களைவிட தனக்கே ஆற்றல் அதிகம் என்பதால் வரும் ஆசையும் கூட. ஆனால், ஆயுதங்கள் மீதிருக்கும் விலக்கம் அவரை இராணுவப் பயிற்சி கொண்ட ஆற்றல் மிக்க போராளியாக மாற்றம் கொள்ளச் செய்யவில்லை. விரைவிலே அவர் இயக்கத்தினரால் உதாசீனப்படுத்தப்படுகிறார்; கோமாளியாக பார்க்கப்படுகிறார். அதைப் பயன்படுத்தி இந்திய புலனாய்வு துறையான ‘ரோ’ இவரை வளைத்துப் போடுகிறது.
யாரையாவது தங்கள் பக்கம் ‘ரோ’ சேர்க்க விரும்பினால், அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் படிச்செய்வார்கள். சந்தேகம் வந்தாலே அவர் துரோகி ஆக்கப்படுவார் என்பது இயக்கத்தின் விதியாக இருந்தபடியால், தங்கள் பக்கம் ஒருவரை வரச்செய்ய ‘ரோ’ அந்த உத்தியைக் கையாள்கிறது. பொன்னம்பலத்தார் இவ்வாறு ரோவினால் பொறிவைத்துப் பிடிக்கப்பட்டவர். அவர் துரோகி ஆக்கப்பட்டபடியால் உயிர்வாழ இயக்கத்துக்கு அஞ்சி ரோவுடன் தன்னை பிணைத்துக் கொள்கிறார். இருந்தாலும், அவருக்கு தாம் கொல்லப்படுவோம் என்ற அச்சம் இருக்கவே செய்கிறது. இந்தியப் பாதுகாப்பை அவர் முற்றிலும் நம்பவில்லை. அய்ம்பது ரூபாய் காசைக் கொடுத்தால், அதனை வாங்கிக்கொண்டு பீரங்கியைக்கூட இந்திய இராணுவம் உள்ளே விட்டுவிடும் என்று பொன்னம்பலத்தாரின் மகள் வைஜெயந்தி ஓர் இடத்தில் சார்லஸிடம் சொல்கிறாள். அவர்கள் உள்ளூர இயக்கத்துக்கு அஞ்சியே இருக்கிறார்கள். சார்லஸை இங்கு பொன்னம்பலத்தார் விரும்பி அழைத்தது, இயக்கத்தைப் பற்றி தெரிந்தவர் தனக்கு நல்ல மெய்ப்பாதுகாவலனாக இருக்க முடியும் என்றே. மிக நுட்பமான திட்டத்தின் மூலம் அவரைக் கொல்ல வந்த சார்லஸ் அவரிடம் நெருங்கி அமர்கிறான். தலைமையின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறான்.
பொன்னம்பலத்தார் கௌரவமான சிறைக்கைதி போலவே இருக்கிறார். அவரால் உயர் குடி வாழ்க்கையை சௌகரியமாக வாழ முடிகிறது. ஆனால் அனைத்தும் கண்காணிப்பில் உள்ளது. இந்த வாழ்க்கை பொன்னம்பலத்தாரின் மகளுக்கு உவப்பாக இல்லை. இந்தச் சிறை வாழ்கையில் இருந்து தப்பித்துச் செல்லவேண்டும் என்ற கனா அவளிடம் இருக்கிறது. அதற்கு ஒரே வழி பொன்னம்பலத்தாரை இயக்கம் கொல்ல அனுமதிப்பதே. சார்லஸிடம் மோகத்தையும், தன்னிரக்கத்தையும் உருவாக்கி தன் தந்தை பொன்னம்பலத்தாரை கொலை செய்யும்படி கேட்கிறாள். நீண்ட காலத்தின் பின்னர் பெண் ஒருவருடன் பழக நேர்ந்த வாய்ப்பு சார்லஸிடம் தன் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிறது. தான் உண்மையில் யார் என்பதை அவளிடம் திறந்து வைக்க விரும்புகிறான். ஆனால், விரைவிலே அவளிடம் இருக்கும் பாவனையையும், சுயநலத்தையும் காணும்போது தன்னை மூடியே வைத்திருக்கிறான். ஒருவகையில் சார்லஸுக்கு அது ஏமாற்றம்தான். தான் இதுவரை அறியாத ஆழம் வைஜெயந்தியிடம் இருக்கிறது என்பதை அறிகிறான்.
எப்படியாவது உயிர்வாழ வேண்டும் என்பதே பொன்னம்பலத்தாருக்கும், வைஜெயந்திக்கும் இருக்கும் ஆசை. தன் மகள் வைஜெயந்தியை வைத்தே ‘ரோ’ தன்னை மடக்கியது என்பதில் பொன்னம்பலத்தாருக்கு அளவற்ற கோபம் இருக்கிறது. தன் இயலாமை வெளிப்பட்டு தான் தோற்றுப்போனது தன் மகளால் என்பது அவரிடம் தொடர்ந்து வெறுப்பை உருவாக்குகிறது. இலங்கை விவகாரத்தில் இந்தியா தன் நலன்களுக்கு ஏற்ப நடந்துகொண்டதை இயக்கத் தலைவர்கள் உட்பட அனைவருமே தெளிவாக அறிவார்கள். ‘ரோ’ எப்படி நடந்து கொண்டது என்பது இந்தநாவலில் தெளிவாகவே சொல்லப்படுகிறது. பொன்னம்பலத்தாரை தமது பக்கம் இழுத்துக்கொள்ள அவரது மகளை எப்படிச் சுயநலமாகப் பயன்படுத்தினார்கள் என்பது நாவலில் அழுத்தமான கற்பனை. சார்லஸ் இலங்கையில் இருந்து அகதியாக படகில் வந்து சிநேகம் கொள்ளும் ஜோர்ஜ் இறந்த பின்னர், அவனது மனைவி ரெஜினாவுடன் உறவு கொள்வது போன்ற சித்தரிப்பு இருக்கும். இது தமிழ் விடுதலைப் போராளிகளை தவறாகச் சித்தரிக்கின்றன என்ற கோணத்தில் உலோகம் நாவல் அணுகப்பட்டிருந்தது. ஆனால் இதன் பின்னே நுட்பமான மனித உறவில் இருக்கும் சிடுக்குகள் இருக்கும். ஜோர்ஜ் என்ற அப்பாவி இளைஞனைத் தங்களது இலக்கிற்கான படைக்காயாக சார்லஸும், ரோவும் பயன்படுத்திக் கொல்வார்கள். அவனது பலியின் பின்னே அடுத்தகட்ட நகர்வு நிகழும். ஜோர்ஜைக் கொன்ற பின் ஏற்படும் உணர்ச்சியைக் கடக்க ரெஜினாவை சார்லஸ் வெல்ல வேண்டும். ரெஜினா உள்ளூர தன்னை அறிந்திருப்பாள்; இக்கொலைக்குப் பின்னே தன் பங்கு இருப்பதை அறிந்திருக்கலாம். அவளின் உள்ளே மெல்லிய இகழ்வு இருக்கும் - அதனை வெல்ல அவளைத் தன் வசப்படுத்த வேண்டும். அவள் தன் முன்னே கண்ணீர்விட்டு அழுதுவிட்டால் அந்த நிறைவு கிடைத்து, அவன் அகம் விடுதலையடையும். மனித மனதின் குரூர பக்கத்தை உளவியலாகத் தொடும் இடம் அது. ரெஜினாவுடன் உறவுகொண்ட பின்னர் குரூரமான விடுதலையை அவன் அடைந்ததாக எண்ணி இருந்தாலும், அவள் இயல்பாகத் தன்னை நேருக்கு நேர் எதிர்கொள்வது கடும் பதட்டத்தை அவனுக்கு தருகிறது. தன்னிடம் ஏற்படும் பயத்தைக் கண்டு அவள் புன்னகை செய்வது அவனைக் கூசச் செய்கிறது. இறுதிவரை ரெஜினாவை அவனால் வெல்லவே இயலவில்லை.
சார்லஸ் ரோவின் சந்தேகத்திற்கு உள்ளாகி சித்திரவதைக்கு உள்ளாகி விசாரிக்கப்படும்போது, அவனுக்கு ஓர் சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது. பொன்னம்பலத்தாரைக் கொல்வது தான் உன் இலக்கு என்பதால், அதை நாங்களே அனுமதிக்கிறோம், அதற்கு பதிலாக ‘நீ மீண்டும் இயக்கத்திற்கு போய் ரோவுக்காக சில வேலைகள் செய்துவிட்டு விலகிச்செல்லவேண்டும், பணம் தருகிறோம் என்பது அது. தமது நலன்களுக்கு முன்னே பொன்னம்பலத்தார் ஒரு பொருட்டே இல்லை என்று உரையாடப்படும் இடங்கள் அவை. இந்த நாவலின் பலமான அம்சம் இந்திய அரசின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த விழையாமல், அதன் போக்கில் நாவலில் பேசியிருப்பதும் கூட என்றே சொல்வேன். இது இன்னொரு பக்கம் ஈழ விடுதலையை இந்தியா கையாண்ட விதத்தைச் சுட்டுவதும் கூட. இதன் பின்னே இருதரப்பும் தம் நலன்களுக்காகச் செய்துகொண்ட வித்தைகள் பல இருக்கலாம். நம் கற்பனைக்கு எட்ட முடியாத சூட்சுமங்களைக் கொண்டிருக்கலாம்; ஆனால் மனித உயிர்கள் பந்தாடப்பட்டன. எவர் யாருக்காக இறந்தோம் என்று அறியாதவாறு நடந்து முடிந்துவிட்டன.
மனித மனம் உயிர்வாழச் செய்யும் சாகசம் என்பது மிகக் குரூரமானது. சாவின் விளிம்பில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த இடத்திற்கும் செல்லும். அதுபோல இலட்சியத்திற்காகத் தன் உயிரைக் கொடுக்கவும் செல்லும். உயிரைக் கொடுக்கவும், எடுக்கவும் இருக்கும் மனநிலைக்குப் பின்னே ஆழமான சந்தோஷம் இருக்கிறது. அது உயிரின் ஆழ்ந்த இச்சையின் வெளிப்பாடாக இருக்கலாம் என்றே உலோகம் உணரச்செய்கிறது.
ஈழ இந்தியப் பிரச்சினை என்பதை விடுத்து இந்த நாவல் படிக்கப்படவேண்டிய இடம் வேறொன்று. அது மனித மனம் சக உயிர்களை அணுகும் விதம் சார்ந்தது. அவ்வாறான வாசிப்புகள் உலோகம் நாவல் மீது மீண்டும் மீண்டும் நிகழவேண்டும் என்பது என் அவா.
அனோஜன் பாலகிருஷ்ணன் - தமிழ் விக்கி பக்கம்
***
அனோஜன் பாலகிருஷ்ணன் |
No comments:
Post a Comment