பொதுவாக எனக்கு வாசிப்பு என்பது சிறு வயதில் பொது புத்தகங்கள் அறிமுகமான காலங்களிலிருந்தே தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. ஆனால் அந்த காலத்தில் பலருக்கும் இருந்தது போல் புத்தகம் படிக்கும் இன்னொரு ஜீவனை பழக்கப்படுத்திக் கொள்ளும், கலந்துரையாடும், விவாதிக்கும் வாய்ப்பு மிக அரிதானதாகவே இருந்தது. எனது மாஸ்டர் டிகிரி எல்லாம் முடித்து பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் வேலைக்கு சேர்ந்த போதுதான் தீவிர இலக்கியம் படிக்கும் இன்னொருவரை சந்தித்தேன். எனவே சிறு வயதில் நூலகம் சென்று சிறுவர்களுக்கான உபதேச நீதிநெறிப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து பின் அப்படியே சுஜாதா, லக்ஷ்மி, பாலகுமாரன், ஜெயகாந்தன், இந்துமதி, அசோகமித்திரன், அனுராதாரமணன், கி.ரா,, ராஜேஷ்குமார், சு.ரா, நாஞ்சில் நாடன், சுபா..... இந்த வரிசை இப்படித்தான் இருந்தது. நண்பர்கள் "வெகுஜன எழுத்துக்களை படிக்க ஆரம்பித்து அப்படியே தீவிர இலக்கியத்துக்குள் வந்தேன்" என்று சொல்லும் அந்த "படிநிலை" எனது வாசிப்பில் வரவில்லை, அப்படி வகைமை பிரித்தறியும் அறிவு எல்லாம் இல்லை. நூலகத்தில் கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் படிப்பது, எல்லாமே “கதைப்புத்தகங்கள்”தான். சில நேரங்களில் சில மனிதர்கள் படித்து அதன் தாக்கம் மிக தீவிரமாக மனதில் உழன்று கொண்டே இருந்ததால் அது “நல்ல கதை”, எனவே படித்துகொண்டேயிருந்தேன். எனினும் படிப்பவை எல்லாம் "கடந்து சென்று" கொண்டேயும் இருந்தது. அதனால் அவற்றில் மனதில் தாக்கத்தை உருவாக்கிய படைப்புகள் ஏன் அந்த அளவு பாதித்தது, இலக்கிய எழுத்து என்பது என்ன, அதற்கும் அப்படி அல்லாததற்குமான வித்யாசம் என்ன என்பதையெல்லாம் புறவயமாகச் சொல்லத் தெரியாது. இதையெல்லாம் எனக்கு முதன்முதலில் சொல்லித்தந்தது ஜெமோதான். ஜெமோவைப் படிக்க ஆரம்பித்தபின்தான், ஒரு வாசகனாக வாசிப்பு சார்ந்த சிந்தனை, தரம்பிரித்தல் மனதில் நிகழ்ந்தது. ஒன்றை ஏன் என் மனம் ஏற்கிறது, இன்னொன்றால் ஏன் என் மனதை தீண்ட முடியவில்லை என்று உணர முடிந்தது. இலக்கியம் என்பது அகம் சார்ந்ததுதான். ஆனால் அது அறிவார்ந்ததும்தான். அதன் அறிவார்ந்த தளத்தை பேசி அதை நோக்கி அறிவை செலுத்த வைத்தது, சிந்திக்க வைத்தது, ஒன்றை ஏற்க அல்லது மறுப்பதற்கான காரணங்களை உணர வைத்தது ஜெமோதான். அதன்பின்தான் ஒரு வாசகனாக இலக்கியம் சார்ந்து புறவயமாக பேசுவதற்கான நம்பிக்கை வந்தது. இதுவேதான் அறிவியல் புனைகதைகளுக்கும். அறிவியல் புனைகதைகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தமிழ் வாசகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முன்வைத்ததுதான் ஜெமோவின் "விசும்பு" என்றே கொள்கிறேன்.
ஜெமோவை முதலில் படிக்க ஆரம்பித்தது அவரது கட்டுரைகளில் இருந்துதான். 1999-களில் எங்கள் ஊர் நூலகத்தில் இருந்த ஒரு சிறுபத்திரிகையில் விஷ்ணுபுரம் சார்ந்து, அது ஒரு இந்துத்துவ பிரதி என்று நிறுவும் ஒரு கட்டுரையை படித்ததுதான் ஜெமோ பெயரை முதலில் அறிந்தது என்று நினைவில் இருக்கிறது. அது பாபர் மசூதி இடிப்பு நடந்ததற்கு பின்பான இந்துத்துவ அரசியல் பரவலாக ஆரம்பித்த காலம். மசூதி இடிப்பு கலவரங்கள் மூலம் இயல்பாகவே தமிழகத்தில் இந்துத்துவத்திற்கு எதிரான மனநிலை சாதாரண மற்றும் அறிவார்ந்த சமூகப்பரப்பில் உருவாகி இருந்தது. இந்தியாவின் பெரும்பான்மையினரான இந்துக்களின் ஒரு பகுதியினர் தம் மதத்தை அரசியல் முகமாக்கும் சூழலில், இந்துமதம் சார்ந்து பேசுவதே பெரும்பான்மைவாதமாக, இந்துத்துவ அரசியலுக்கு ஏதுவானதாகவும், சிறுபான்மையினருக்கு எதிரானதாகவும் ஆகிவிடும் என்ற அச்சத்தை பொதுவெளியில் உருவாக்கி இருந்த காலத்தில், "விஷ்ணுபுரம்" என்ற தலைப்பில் ஒரு நாவல் என்பதை, அதை படிக்காமலேயே அது ஒரு இந்துத்துவப் பிரதி எனும் விமர்சனத்தை, "அப்படிதான் இருக்கும்" என்று என்னை ஏற்க வைத்தது. எனவே ஜெமோவை படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏதும் அப்போது இல்லை. எனவே அவரது கட்டுரைகளை நான் பின்பு படித்தது என்பது அவைகளை இயல்பாக நான் கண்ணுற்றபோது, அவை என்னை கடந்து போனபோதுதான்.
ஜெமோவின் கட்டுரைகள் மிகக் கச்சிதமானவை. தர்க்கபூர்வத்தையும் அறிவார்ந்த தன்மையையும் ஒருங்கே கொண்டவை. அதை இப்படி சொல்லலாம், ஒரு முகவுரையை கொடுத்துவிட்டு பின் கட்டுரையை தொடர்ந்து படிக்கும் ஒரு வாசகனுக்கு அவன் மனதில் கட்டுரையின் பாடுபொருள் சார்ந்து என்னவெல்லாம் சிறு சிறு சந்தேகங்கள், கேள்விகள் எழுமோ அந்த சந்தேகங்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக பதில் சொல்லிக் கொண்டே போவது போல் அந்த கட்டுரை தன்னை தொகுத்துக் கொண்டு, முடிவுரையை நோக்கி நம்மை கடந்து சொல்லும். ஒருவகையில் அவர் கட்டுரைகள் அவர் அவருக்கே சொல்லிக் கொள்பவைகள்தான். அந்த வாசக எதிர்தளத்தில் அவர் தன்னையே வைத்துக்கொள்வதால், அவரது அறிவார்ந்த தன்மையின் உச்சத்தில் அந்தக் கட்டுரை இருக்கும். அது தனக்கே சொல்லிக்கொள்பவை என்பதால் அதில் பூசி மழுப்பல்களோ, வசதியற்ற கேள்விகளை தாண்டிச் செல்லுதல்களோ இருக்காது. முற்றிலும் எதிர்க்கருத்துதளத்தில் இருந்து நாம் ஒரு கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தாலும், நம் மனம் கட்டுரைக்கு எதிரான கேள்விகளை தொடர்ந்து உற்பத்தி செய்தாலும், எல்லாவற்றுக்குமான பதில்கள் கட்டுரை வழியெங்கும் சிதறிக்கிடப்பதை பார்த்து இறுதியில் ஒரு கேள்விகளுமற்று, எதிர்நிலையில் இருந்து மனம் கொஞ்சம் கொஞ்சமாக இன்னொரு தளத்துக்கு பயணப்பட்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருப்போம். ஜெமோவின் அறிவார்ந்த தன்மையாலும் அவரே அந்த எதிர் வாசக தளத்தில் தன்னை வைத்துக் கொள்வதாலும் அவரது வாதங்கள் மிக தீர்க்கமாகவும் உறுதியாகவும் இருக்கும். அதை படிக்கும் வாசகர்களுக்கு அவர் கற்றுக் கொடுப்பது அந்தக் கூர்மையும், அறிவார்ந்த தன்மையும், அதை பயன்படுத்துவதற்கான உச்சபட்ச சாத்தியங்களையும் சேர்த்துதான். வாசகனுக்கு அது ஒரு சவால், ஒருவகையில் வாசகனுக்கு மட்டுமல்ல ஜெமோவுக்கே அது ஒரு சவால்தான். அந்த தர்க்க கட்டுமானத்தில் அல்லது அதற்குமேலான ஒரு தர்க்க கட்டுமானத்தில்தான் அவர் இன்னொரு கட்டுரையை எழுத முடியும் எனும் சவால். ஒரு அறிவியலாளனாக அல்லது விஞ்ஞானி எனும் ஒரு நிலைக்கு நான் செல்வதற்கு முன்பே ஜெமோ வாசகனாக நான் கற்றுக்கொண்டது அப்படி அறிவார்ந்த தளத்தில் தர்க்கபூர்வமாக ஒரு விஷயத்தை சிந்திப்பதுதான். பெரியார் - வைக்கம் வீரர் விவாதத்தில் "உங்கள் தர்க்கம் என் அறிவுக்கு ஏற்புடையதாக இல்லை, ஜெமோ" என்று அவருக்கு நேரிடையாக எழுதவைத்ததும் அவர் கொடுத்த அந்த நம்பிக்கைதான். பல்வேறு விவாதங்களில் என் தரப்பு அல்லது எனக்கான தர்க்கம் என்று ஒன்று உள்ளது எனில் அதை எந்த தயக்கமும் இல்லாமல் ஜெமோவுக்கு எழுதத் தூண்டுவதும் ஜெமோவின் அறிவார்ந்ததன்மை மட்டும்தான்.
ஜெமோவை சந்தித்த இரண்டாவது சந்திப்பிலேயே எனக்கான மனத்தடைகள் என்று எதையும் உணர முடியவில்லை. இரண்டாம் சந்திப்பில் சிங்கப்பூரில் 5 நாட்கள் முழுவதும் ஒரு ஹோட்டலில் ஜெமோவுடன் தங்கி இருந்தேன். காலையில் எழுந்து "ஜெமோ, டி போடவா?" என்று கேட்டு ஆரம்பிக்கும் பேச்சு இரவு தூங்கப் போகும் வரைக்கும் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஜெமோவுடன் இருக்கும் கணங்களில் அவரின் அண்மையை மனம் உணர்ந்துகொண்ட இருக்கும். அதற்கு தடைகள் என்று ஏதும் இல்லை, எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலைக்கு அது இயல்பாகவே தன்னை வைத்துக்கொண்டது. அவரை நட்பார்ந்து மட்டுமே அதனால் உணரமுடிந்தது. ஆனால் எனக்கு அதில் ஆச்சரியங்கள் என்று ஏதும் இல்லை. அதற்கு முதல் காரணமாக நான் உணர்ந்தது அவரது எழுத்துக்கும் அவருக்கும் தூரம் அதிகமில்லை என்பதைத்தான். அவரது இணையதளத்தை 2000-களில் இருந்து ஒவ்வொரு நாளும் படித்துக்கொண்டிருக்கிறேன். பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் வேலைக்கு சேர்ந்த ஆரம்ப காலங்கள் அவை. அவர் வார்த்தைகளுக்கும் அவருக்கும் தூரம் அதிகமில்லை எனும்போது அவ்வளவு காலங்கள் அந்த வார்த்தைகளை தொடர்ந்த எனக்கும் அவருக்கும் தூரம் அதிகமில்லை என்றாகியதே மனம் அந்த அண்மையை உணர்தல். ஆனால் கட்டுரைகளில், பேச்சுக்களில் அவ்வளவு வார்த்தைகளை அவர் பேசிய பின்னும் நேரில் பார்க்கும்போது புதிது புதிதாகவே அவரால் பேச முடிந்தது. அதற்கு பின் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் விழா, சிங்கப்பூர் தேசிய கல்விக்கழக ஃபெல்லோஷிப் பெற்று 3 மாதங்கள் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் தங்கி இருந்தது, பின்பு எங்களது மலேசியா, இந்தோனேஷியா, கம்போடியா போன்ற நாடுகளுக்கான பயணங்கள் என்று எல்லா சந்திப்புகளிலும் ஜெமோ நாட்கணக்கில் பேசிக்கொண்டே இருந்தாலும், அதை உற்சாகமாக கேட்டுக்கொண்டு, விவாதித்துக்கொண்டே இருக்க முடிந்தது. ஒரு நீ...ண்ட உரையாடல். ஜெமோவின் கட்டுரைகளுக்கே இந்தப் பண்பு உண்டு. எந்த ஒரு கட்டுரையும் தனித்த ஒரு கட்டுரை இல்லை. அவை ஒரு நீண்ட தொடர்ச்சியின் ஒரு கண்ணி மட்டும்தான். அவர் கட்டுரைகளை தொடர்ச்சியாகவே எழுதுகிறார், வெண்முரசு போல். ஒரு கட்டுரை இன்னொரு முந்தைய கட்டுரையின் நீட்சி, வரப்போகும் இன்னொரு கட்டுரைக்கான தொடர்ச்சி.... எனவே ஒரு கட்டுரையை படிக்கும்போது இதற்கு முன் அவர் சொன்னவை எல்லாம் சேர்ந்து அது ஒரு முழுமையை நோக்கி இன்னொரு அடி எடுத்து வைக்கிறது என்றே புரிந்து கொள்ள முடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே அவருடனான நேரடி பேச்சுகளும் இருப்பதால் அவரை முதல்முறை சந்தித்து பேசும்போதும், விட்டதில் இருந்து தொடர்ந்த ஒரு நீண்ட உரையாடலாக அது இருக்கிறதே தவிர அது முதல் சந்திப்பாகவோ அல்லது சந்திக்காமல் நீண்ட இடைவெளி இருந்ததாகவோ தோன்றுவதில்லை. அவரது எல்லா வாசகர்களுடன் அவர் வருடங்களாக தொடர்ந்து பேசிக்கொண்டேதான் இருக்கிறார். இதனால் ஒரு வாசகனாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்வதில் எங்களுக்கு சிரமமே இருந்ததில்லை. அதில் முரண்பாடுகளோ சிக்கல்களோ இல்லை. 2010-களில் முகநூல்களில் ஜெமோ சர்ச்சைகள் சார்ந்து பொது வாசகர்களுடன் விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலங்களில் இதை அதிகமாக உணர்ந்திருக்கிறேன். அப்போதைய விவாதங்களில் ஜெமோ என்ன சொல்லவருகிறார் என்பதை அவர் முன்சொன்னவற்றோடு சொல்லி, கருத்துக்களின் வளர்ச்சிப்பாதையை அறியா புது வாசகர்களுக்கு ஒரு புரிதலை கொடுப்பதாக, ஒரு முரண்பட்ட புரிதல்களோடு இருபவர்களுக்கு, நாம் எவ்வாறு அதை புரிந்துகொண்டோம் என்று விளக்கி அந்தக் கோணத்தில் அந்த எழுத்தாளனின் கருத்தை புரிய வைக்கும் ஒரு முயற்சியாக மட்டும் அது இருந்தது. அப்போது எழுந்த கருத்துக்களை முன்வைத்துதான் "எழுத்தாளர்களை எதுவரை ஆதரிப்பது?" என்ற கட்டுரையை ஜெமோவுக்கு எழுதினேன். ஜெமோ சார்ந்த எதிர்மறை புரிதல் கொண்ட பெரும்பாலானவர்களுக்கான ஒத்ததன்மை என்பது ஒன்றை கருப்பு-வெள்ளையாக மட்டுமே புரிந்துகொள்வது அல்லது ஒரு தரப்பை புரிந்துகொள்வதற்கான உழைப்பை கொடுக்காமல் தனது அறிவுசேகரத்தில் இதுவரை எது அறிவாக இருக்கிறதோ அதையே முழுமை என்று கொண்டு இன்னொரு தரப்பை அணுகுவது. அதுவே அவர்களுக்கு எளிமையாக இருக்கிறது அல்லது இயல்வதாக இருக்கிறது. இன்னொன்றின் நுண்மைகளை சொல்வது ஒரு ஏமாற்று என்பதாக புரிந்துகொள்கிறார்கள். அதேபோல் ஒருவரின் தரப்பை ஆதரித்து நூறு வார்த்தைகள் சொன்னபின் எதிர்த்து சொல்லப்படும் ஒரு வார்த்தை அவர்களை தீவிர மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிடுகின்றது என்பதையும் கவனித்திருக்கிறேன்.
ஜெமோ சார்ந்த கற்பிதங்கள் அப்போதே பொது வாசகபரப்பில் நிறைய இருந்தது. பொதுவாக அந்த கற்பிதங்கள் எல்லாம் அவரோடு பழகாதவர்களால் உருவாக்கப்படுகிறது, மற்றவர்களால் நம்பப்படுகிறது, பரப்பப்படுகிறது என்று நினைக்கிறேன். ஞாநியும் நானும் அவர் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, என்னையறியா அவர் நண்பர் ஜெமோ சார்ந்த ஒரு கற்பிதத்தை சொல்ல, இன்னொரு அறையில் இருந்த ஞாநி அங்கிருந்தபடியே "அவரே ஜெயமோகனின் நண்பர்தான். நீங்கள் அவரிடமே நீங்கள் சொல்வது உண்மையா என்று கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்" என்றார். ஞாநியுடன் ஜெமோ சார்ந்த, அவர் கருத்துக்கள் சார்ந்த விவாதம் எப்போதும் இருக்கும். தொடர்ச்சியாக ஜெமோவைப்பற்றி ஞாநியிடம் பேசிக் கொண்டே இருந்திருக்கிறேன். ஜெமோவும் ஞாநியும் முரண்பட்ட காலங்களில் கூட இருவரைப் பற்றி இருவரிடமும் பேச எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை அந்தத் தயக்கத்தை இருவரும் என்றும் கொடுத்ததில்லை. ஜெமோவுடன் பழக ஆரம்பித்தபின் நான் அவரைப் பற்றி சொல்லும் எதையும் நண்பர்கள் நம்பவில்லை அல்லது நம்ப விரும்பவில்லை. அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் விவாதங்கள், பேச்சுக்களுக்கு பின் எவ்வளவு குதூகலமாக, கேலி கிண்டல் என்று நகைச்சுவையாக, உற்சாகமாக இருக்கும், எப்படி அவரை சுற்றி எப்போதும் சிரிச்சுகிட்டே இருப்போம் என்று சொல்லும் எதையும் நண்பர்கள் நம்ப தலைப்படவில்லை. அது ஜெமோவை எனக்கு பிடிக்கும் என்பதாலேயே நான் செய்யும் விதந்தோதுதல் என்று நம்புவது அவர்கள் "கேட்டு தெளிந்த" கற்பிதங்களுக்கு நியாயம் செய்வதாக இருந்தது. அவரது கருத்துக்கு தர்க்கத்துடன் கூடிய எதிர்க்கருத்து இருந்தால் அவரை மறுத்து நேரடியாக அவருடன் உரையாடுவது எவ்வளவு இயல்பாக இருக்கும் என்பதை அவருடன் நேரடியாக உரையாற்றாதவர் எவரிடமும் சொல்லி நம்பவைப்பது சிரமமாகவே இருக்கும். எந்த விவாதங்களிலும் தர்க்கபூர்வமாகவும் அறிவார்ந்தும் தன் கருத்தை எடுத்து வைக்கும் ஜெமோ பாணி அவருக்கு ஒரு தீவிரமான பிம்பத்தை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அது மட்டுமேயல்ல அவர்.
அதேபோல் ஜெமோவை மரபார்ந்த ஒழுக்கவாதியாக அல்லது ஒழுக்கத்தை மற்றவர்கள் மேல் திணிப்பவராக அல்லது அதை எதிர்பார்ப்பவராக ஒரு கற்பிதம் இருக்கிறது. ஜெமோவிடம் நிறைய பேசி இருக்கிறேன், பொது விஷயங்கள் மற்றும் எனது தனிப்பட்ட வாழ்வு சார்ந்த விஷயங்கள், சமூகம் ஒழுக்கமாக கற்பித்திருக்கும் விஷயங்களிலான எனது எல்லா மீறல்களையும். ஆனால் அது எதுவொன்றிலும் ஒழுக்கத்தை ஒரு காரணமாக முன்வைத்து அவர் எப்போதும் பேசியதே இல்லை. ஒன்றை ஏற்க அல்லது மறுக்க ஒழுக்கத்தை ஒரு காரணமாக முன்வைக்கமாடடார் என்ற எனது முன்னறிவுதான் ஒன்றை அவரிடம் பேச மனத்தடை இல்லாமல் செய்தது என்றும் சொல்லலாம். எதையும் அறிவார்ந்த தளத்தில் மட்டுமல்லாமல் உணர்வுத்தளத்திலும் அவரிடம் பேசலாம், அதை நாம் பேசும் அந்த அந்த தளங்களில் அப்படியே எடுத்துக்கொண்டு அந்தத் தளத்தில் இருந்து நம்மிடம் பேசுவார். அதுவே மனத்தடைகள் அற்று அவரிடம் எந்தத் தயக்கமுமில்லாமல் எதையும் பேசும் உரிமையை கொடுக்கிறது. அதனாலேயே அவரை எப்போதும் நண்பராகவே மனம் உணர்கிறது. ஒன்றின் சரி/தவறுகளை தனிமனித அகத்தை தன் உள்ளுணர்வால் வருடிப் பார்த்து அதை மொழிபெயர்க்கிறார் என்றே தோன்றியிருக்கிறது. இரண்டாம் மனிதருக்கு பிரச்சனை தராத, நம் அகத்தில் கருமை படியச் செய்யாத எந்த ஒன்றையும் அவர் தவறென்று சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. சமீபத்தில் எனது தார் குழையும் தருணம் என்ற கடிதத்திற்கு அந்த மாலை குழைவது எப்படி, அது ஒரு நுண்நிகழ்வு, ஓர் அந்தரங்கமான இழப்பு என்று சுட்டிக்காட்டி அந்தக் கவிதையை மேலெழச்செய்தது போல. அவர் "சரியான, மனிதாபிமானமுள்ள, ஒழுக்கமான, அழகான, சிறந்த விஷயங்களாலானதல்ல இலக்கியம், அது உண்மைகளால் ஆனது" என்றே சொல்கிறார், ஜெமோவை பொறுத்தவரை அதுவே எவரொருவருக்குமான வாழ்க்கைக்குமானது என்றே நினைக்கிறேன்.
அதேபோல் ஜெமோவிடம் நான் இதுவரை கடவுள் பக்தி சார்ந்தும் ஏதும் பார்த்ததில்லை. இந்தோனேஷியாவில் பரம்பனான், போராப்புதூர் போன்ற கோயில்கள் மற்றும் கம்போடியா அங்கூர்வாட் கோயில் தொகுதிகள் என்று சுற்றி இருந்தாலும் அது சார்ந்த எந்த பேச்சுகளிலும் அவரிடம் இருந்து பத்தி சார்ந்து எந்த வார்த்தைகளும் வந்த நினைவில்லை. சிங்கப்பூரிலும் அவர் எந்த கோயிலுக்கும் சாமி கும்பிட என்று சென்றதில்லை. சிங்கப்பூரில் ஒரு முறை சவுத்பிரிடஜ் மாரியம்மன் கோயில் எங்களது "மீட்டிங்பாயிண்ட்" ஆக இருந்தது. முன்பே வந்து கோயிலுக்குள் நண்பர்களுடன் இருந்தேன், கோயிலுக்கு அருகில் வந்துவிட்டு ஜெமோ கால் பண்ணினார், நான் வெளியில் வந்து, "சரி, கோயிலுக்குள்ளே வாங்க, ஜெமோ" என்றழைத்தேன். "இல்லை சரண், நாம் போகலாம்" என்றார். "இது 100 வருட பழமையான கோயில் ஜெமோ, உள்ள வாங்க" என்றேன். வெளியில் இருந்து சும்மா இப்படி எட்டிப் பார்த்துவிட்டு, அவசியமில்லை, சரண், நீங்கள் போய் நண்பர்களை கூட்டிவாருங்கள், நாம் போகலாம் என்று கோயிலுக்குள் வர மறுத்துவிடடார். (அருணாவிடமும் கோயில், பக்தி, சடங்குகள் சார்ந்து ஏதும் பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை :-))
ஜெமோவிடம் இருந்து மற்ற எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும் அவர் ஒரு மிகச் சிறந்த நண்பர். இலக்கியம் மட்டுமல்ல அவரது நட்பார்ந்த தன்மைதான் அவரைச் சுற்றி இவ்வளவு பெரும் ஆத்மார்த்தமான நண்பர்கள் மற்றும் வாசகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறது. 2016-ல் ஒருநாள் அரங்கா எனக்கும் ஜெமோவுக்கும் ஒரு மெயில் அனுப்பி இருந்தார், "நாம் ஏன் இந்த வருட ஊட்டி முகாமை சிங்கப்பூரில் நடத்தக்கூடாது?" என்று. 30 பேர் இந்தியாவில் இருந்து, 20 பேர் சிங்கப்பூரில் இருந்து, 10 பேர் மலேசியாவில் இருந்து என்பதுதான் திட்டம். ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள 30 பேர் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வருவார்களா? என்று நான் ஒருநொடியும் யோசிக்கவே இல்லை. "கண்டிப்பாக செய்யலாம்" என்று உடனே பதிலனுப்பினேன். விஷ்ணுபுர அமைப்பின் எல்லா நிகழ்வுகளுக்குமான ஒரு நியதியான "குறைந்த செலவில் நிகழ்வை நடத்துவது" என்பதை இதற்கும் நியதியாகக் கொண்டு விமான பயணச்சீட்டு செலவு மட்டும் பங்கேற்பாளர்களுக்கு என்ற அளவில் கிடடத்தடட 60 பேர் கொண்ட அந்நிகழ்வை நடத்தினோம். சிங்கப்பூரில் இரண்டு நாள் காவிய முகாம் நடத்துகிறோம் என்றவுடன் 30 பேரை இந்தியாவில் இருந்து விமானம் பிடித்து வந்து ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு பின் திரும்பிப் போகச் செய்ததற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான், அது ஜெமோ என்பது மட்டும்தான் காரணம். இதற்கு முன்னும், இப்போதும் வேறு ஒருவருக்கும் அது சாத்தியமில்லை.
அவரின் நண்பர்கள் ஒவ்வொருவரையும் அவருக்கு முக்கியமானவராகக் கருதச் செய்வதில் ஜெமோவுக்கு இணையாக அவரையேதான் வைக்க வேண்டும். அவரைச் சுற்றி ஒரு பெரும் நண்பர்கள் கூட்டமும் வாசகர்கள் கூட்டமும் எப்போதும் இருப்பதற்குக் காரணம் ஜெமோவின் நண்பர்களை முன்வைத்த இந்த பண்பு. விஷ்ணுபுர வட்டம் என்ற ஒரு அமைப்பில் இவ்வளவு வேறுபட்ட சித்தாந்தங்கள் கொண்ட நண்பர்கள் உலகெங்கிலும் இருந்து இங்கு ஒருங்கிணைந்து இருப்பதற்கு காரணமும் அதுவே என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் மிகச் சிறந்து விளங்குபவர்கள், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்தும் வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் ஜெமோ சார்ந்த ஏற்பும் மறுப்பும் இருக்கும். தமது சிந்தனையை ஜெமோவை ஒட்டியோ அல்லது வெட்டியோ வளர்த்தெடுப்பவர்கள். ஆனால் இதையெல்லாம் மீறி ஒரு அமைப்பில் எல்லோரும் ஒன்றிணைந்து இருப்பதற்கு ஒரே காரணம் ஜெமோ "ஜெமோ" வாக இருப்பது மட்டுமே என்றே நினைக்கிறேன். "உனது கருத்தை நான் முற்றிலும் மறுக்கிறேன், ஒரு காபி சாப்பிடலாம் வா..." என்பதே இலக்கியத்துக்கான மிகச் சிறந்த மனநிலை" என்பது ஜெமோவின் எண்ணம். அதுதான் ஜெமோ அவர் வாசகர்களுக்கு கொடுத்த மிகச்சிறந்த மனநிலையும் என்றே நினைக்கிறேன். இலக்கியம் சிந்தனையின் விளைவல்ல, சிந்திக்கவைக்கும் ஒரு களம் மட்டுமே. தெளிவு அல்ல, தெளிவின்மையே அதன் இயல்பு. அர்த்தம் அல்ல, அர்த்தங்களே அதன் இயல்பு என்று ஜெமோ உணர்த்தியதே பல்வேறு சித்தாந்த நம்பிக்கை கொண்ட அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு நாளும் பேசிக்கொள்ளும் ஒரு நண்பர் குழுமமாக இயங்குவதற்கான காரணம். அதுவே ஒரு அறிவியக்கத்துக்கான அடையாளமும் கூட.
இந்த நண்பர்கள் கூட்டத்தில் எவரொருவரும் வேறுபட்டவர்கள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் ஜெமோவுக்கு முக்கியமானவர்கள், அதை அவர்களுக்கு வெளிப்படுத்துவதிலும், அதை அவர்கள் உணரச் செய்வதிலும் ஜெமோ தயங்கியதே இல்லை. இலக்கியம் சார்ந்த அல்லது கவனிக்கத் தக்க ஒரே ஒரு கருத்தை/கடிதத்தை எப்போதோ ஒரு முறை சொன்ன/எழுதிய ஒரு வாசகரின் பெயரை பலப்பல வருஷங்கள் கடந்தும் மிகச் சரியாக நினைவில் வைத்திருக்கும் ஜெமோவை தொடர்ந்து கவனித்துக்கொண்டே வந்திருக்கிறேன். ஒருமுறை இங்கிதமே இல்லாமல் மிகத் தவறாக நடந்து கொண்ட ஒரு நண்பரிடம் சட்டென்று கோபப்பட்டு பேசிய ஜெமோ, ஒரு ஐந்து நிமிடம் கழித்து "ஒருவேளை நான் கோபப்பட்டு இருக்கக்கூடாதோ, சரண்?" என்று என்னிடம் தனியாக கேட்டார். "இல்லை ஜெமோ, இதற்கு கோபப்படாமல் ஒருவர் இருக்க முடியாது, நீங்கள் கோபப்பட்டது சரிதான். கோபம்தான் இதற்கு சரியான எதிர் வினையாகவும் இருக்கும்" என்றேன். "இருந்தாலும் அப்படி கோபப்பட்டிருக்கக் கூடாது, சரண், தவிர்த்திருக்கலாம், தவறுதான்" என்று சொல்லி உடனே அந்த நண்பரிடம் சென்று, "அவர் கையைப்பிடித்து, சாரி, மன்னித்துவிடுங்கள், நான் அப்படி கோபப்பட்டிருக்கக் கூடாது" என்றார். அந்த நண்பர் அப்படியே நெகிழ்ந்துவிடடார். சார், நீங்கல்லாம் என்னிடம் இப்படி மன்னிப்பு கேட்கலாமா சார்?" என்று. பின்பு அவரிடம் நீண்ட நேரம் பேசி இருந்து சகஜமாக்கிவிட்டு அப்புறம் கிளம்பிச் சென்றோம். அதேநேரத்தில் ஒரு எழுத்தாளனாக தன்னை ஒரு சிறுமைக்கு அருகில் கூட யாரும் வைத்துவிடக் கூடாது என்ற கவனமும், தனக்கு சம்பந்தேமேயில்லாத ஒரு நிகழ்ச்சியில் யாரோ ஒரு எழுத்தாளன் சிறுமைபடுத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டபோது கொண்ட சீற்றத்தையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். இன்று விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு இலக்கிய விழாக்களை நடத்துவது, விருதளிப்பது, சமகால படைப்பாளிகளை கௌரவிப்பது, எழுத்தாளர்களுக்கும் பொது சமூக செயல்பாடுகளுக்கும் தனிப்பட்ட நிதியுதவிகள் செய்வது என்று வெளியே தெரிந்தும் வெளியே தெரியாமலேயும் பல்வேறு தளங்களில் மிகத் தீவிரமாக தொடர்ந்து செயல்படுவதற்கு ஜெயமோகன் என்ற மனிதர் மீதான அவர் நண்பர்களின், வாசகர்களின் அன்பு மட்டுமே காரணம் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
......."ஸ்வயமேவ ம்ருகேந்திரதா"........
சிம்மத்தை மிருகராஜன் என்பது யாரும் போட்டி வைத்து தேர்ந்தெடுப்பது அல்ல.... சிம்மம் இயல்பிலேயே, அதன் இயல்பான வல்லமையால் அது மிருகராஜனாக இருக்கிறது......
***
No comments:
Post a Comment