இலக்கியத்தின் ஈற்று வலி – ஜெயமோகனும் வெண்முரசும் - ஜா. ராஜகோபாலன்


வெண்முரசு ஆரம்பித்து சில மாதங்கள் இருக்கும். நண்பர்களுடனும் எழுத்தாளர் ஜெயமோகனுடனும் காஷ்மீர் பயணத்தில் இருக்கிறோம். வெண்முரசு குறித்து  மிக இயல்பாக ஆரம்பித்த உரையாடல் யாருமறியாப் புள்ளியில் ஜெயமோகனை கிளர்ந்தெழச் செய்தது. மொத்தமாக 25 பேர் முழுமையாகப் படித்தால் கூடப் போதும், நான் முழுவதுமாக எழுதி முடிப்பேன், 100 பேருக்காவது போய்ச் சேரும் இன்றைக்கு. ஆனால் நாளை இதற்கான வாசகர்கள் உருவாகி வருவார்கள். நான் அவர்களைப் பார்க்க முடியுமோ, முடியாதோ, ஆனால் இப்படைப்பு இன்று எப்படிப் போய் சேர்கிறது என்பதைப் பார்த்து, பார்த்து எழுதுவதற்கு நான் எழுதுவது தொடர்கதை அல்ல என அவர் தன்வசமிழக்கும் சில நிமிடங்களில் மட்டுமே பேசும் வேகத்தில் பொழிந்தார். பனி சூழ்ந்த மலைப்பாதையில் எங்கள் காருக்குள் மட்டும் சூடாக இருந்தது. வழக்கம் போல ஒரு சாலையோர தேநீர் கடையில் இறங்கி சூடான தேநீருக்குப் பின் குளிர்ந்தோம். இன்று அந்த நிகழ்வை நினைத்தால் காலத்தால் நூறாண்டுகளைத் தாண்டியது போல இருக்கிறது. 


காலம் கலைப் படைப்புகளைப் பொறுத்தவரை ஒரு வரையறையை வைத்திருக்கிறது. கூடவே விதிவிலக்குகளோடு. அதாவது, காலம் படைப்பை என்றுமுளதாக நிறுத்துவதில் காட்டும் அக்கறையை படைத்தவனிடம் காட்டுவதில்லை. படைத்தவன் கால விதியின் துணைவிதியான பெளதீக விதிகளுக்கு ஆட்பட்டவனாகிறான். படைப்பு அவன் பெயரை மட்டும் என்றுமுளதாக்கிக் கொண்டு படைப்பின்போது அவனுக்கு நிகழ்ந்தவற்றை பெளதீகத்தின் கைகளிலேயே விட்டுவிடுகிறது. அதன்பின் படைப்பின் பெயராலேயே அதைப் படைத்தவனும் நிற்க வேண்டியிருக்கும். தொல்காப்பியர், காக்கைப் பாடினியார், கல்பொரு சிறுநுரையார், முடத்தாமக்கண்ணியார்  என நூறு,வ்நூறு படைப்பாளிகள் பெயர் இன்று படைப்பால்  சுமக்கப்பட்டே நம்மிடம் வந்திருக்கிறது. இனி வரும் காலங்களில் வெண்முரசு காலாதீதமான படைப்பாக நின்று அவ்வாறே பேசப்படும். ஆனால் இன்று ஜெயமோகன் வெண்முரசு எழுதினார் என்பது நாளை வெண்முரசு ஜெயமோகனால் எழுதப்பட்டது என்றே மாறும். அதை அறியாத, அதற்கு ஒப்புக்கொடுக்காத படைப்பாளிகள் எவருமில்லை இங்கே.   


வெண்முரசு தன் மீதான பாராட்டுகள், விமரிசனங்கள் என பல்வேறு விதங்களிலும் இன்னும் பேசப்படும். இப்பூமியில் வியாசனின் பாரதம் இருக்குமட்டும் ஜெயமோகனின் வெண்முரசும் இருக்கும். அன்றைக்கு “ஜெய” என்ற பெயரில்  கிருஷ்ண த்வைபாயனரான வியாசர் பாரதத்தை எழுதினார் என்பதை நாம் அறிவோம். ஆனால் எப்படி எழுதியிருப்பார், எழுதுகையில் அவருக்கு என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும் என்பது நாம் அறியாதது. இன்று அதே பாரதம் மறு ஆக்கமாக உருவாகும்போது அதை எழுதுபவருக்கு என்னென்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதைப் பார்க்க முடிந்தது. படைப்பு அதை உருவாக்கியவனிடமிருந்து வெளிப்படுகையில் நிகழ்ந்தவற்றைப் பார்க்க முடிந்தது.

 

ஜெயமோகன் வெண்முரசை எழுதும்போது என்ன நிகழ்ந்தது என்பதை விட நிகழ்ந்தவற்றை ஜெயமோகன் எப்படிக் கையாண்டார் என்பதைச் சொல்வதே முக்கியம் எனக் கருதுகிறேன்.


முதலாவதாகச் சொல்ல வேண்டியது மஹாபாரதத்தை மறு ஆக்கமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் ஜெயமோகன் எழுத ஆரம்பித்து விடவில்லை, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வெவ்வேறு விதங்களில் அதற்கான உழைப்பு அவருக்கு இருந்தது. தொடர்ந்து பாரதம் குறித்த நூல்களின் வாசிப்பு, பாரதம் குறித்த பிற அறிஞர்களின் கருத்துகளை வாசித்தல், அவர்களுடனான உரையாடல், பிற மொழிகளில் பாரதம் குறித்த நூல்கள், கட்டுரைகள், மரபான வழிமுறைகளில் மட்டுமல்லாது நவீன வடிவ மகாபாரதங்களை தேடி வாசித்தல், பெளராணிக, நாட்டார் மரபு, நிகழ்த்து கலை வடிவங்கள் என வெவ்வேறு வடிவங்களிலும் இந்த பரந்த நிலம் முழுதும்  இருக்கும் பாரதத்தை கண்டும், கேட்டும், படித்தும் என 25 ஆண்டுகள். 



மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், அவற்றை ஒட்டிய விவாதங்கள், வெளிநாட்டு அறிஞர்களின் நூல்கள் என ஜெயமோகனின் தொடர் வாசிப்பு அவரது வாழ்க்கையின் ஒரு பழக்கமான செயல்பாடாகவே இத்தனை ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறது.  துணை நூல்கள், புராண கலைக்களஞ்சியம், சமஸ்கிருத அகராதி என ஐயம் நீக்கும் வாசிப்பும் மைய வாசிப்புக்கு இணையாகத் தொடர்ந்தது. தான் பாரதத்தை ஒரு நாவலாக எழுதிவிடுவோம் என்று உறுதியாக நம்பிய ஜெயமோகன் இத்தனை தயாரிப்புகளையும் குறிப்பேடுகளில் எழுதி வைத்துக் கொள்ளவில்லை. மாறாக பாரதம் தொடர்பான அனைத்து வாசிப்புகளையும் தன் நினைவுகள் வழியாகவே கோர்த்துக் கொண்டார். 


மிக முக்கியமாக இந்தியாவின் நீள, அகலங்களில் பாரதக் கதையின் தொன்ம நிலங்கள் பெரும்பாலானவற்றுக்கு  நேரடியாகப் பயணித்திருக்கிறார். இமயம் தொடங்கி குமரி வரை இந்திய நிலப்பரப்பின் நீளவாக்கிலும், வடகிழக்கு முதல் குஜராத் வரை குறுக்காகவும், மைய நிலம் முழுவதும் என இருபதாண்டுகள் வெவ்வேறு காலநிலைகளில், வெவ்வேறு பருவநிலைகளில்  பயணித்திருக்கிறார். அந்தப் பயணங்கள் வழக்கமான சுற்றுலாப் பயணங்கள் அல்ல என்பது ஒருமுறையேனும் அவருடன் சென்றால்தான் தெரியும். வரலாற்றுத் தொல்லியல் முக்கியத்துவம், சிற்ப, கட்டுமான சிறப்பம்சங்கள், இயற்கையின் தனித்தன்மை மிக்க இடங்கள் என கூகிள் வரைபடத்திலும் இல்லாத இடங்களே அதிகம். 


கிடைத்த உணவை உண்டு, வாய்த்த  இடங்களில் தங்கி பயணம் ஒன்றே நோக்கமென அமைந்திருக்கும் பயணங்கள்.  இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு பயணங்களும், இத்தனை வாசிப்புகளும் இணைந்து உருவானதுதான் வெண்முரசு. நாம் “கடும் உழைப்பு” என்ற சொல்லை  அடிக்கடி பயன்படுத்தி அதை தேய்வழக்காக ஆக்கி வைத்திருக்கிறோம். ஆனால் ஒரு படைப்பின் பின்னால் இருக்கும் படைப்பாளனின் தயாரிப்புகள் என்று வரும்போது ஜெயமோகன் இத்தனை ஆண்டுகள் செய்ததை வேறெந்த வார்த்தையால் குறிப்பிட முடியும்? முன்தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை இனி எந்தப் படைப்பை வாசிக்கையிலும் நினைத்துப் பார்த்து படைப்பாளிக்கு நன்றி சொல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன் இப்போதெல்லாம். 


இரண்டாவதாக ஜெயமோகன் வெண்முரசை எழுதுகையில் காட்டிய அர்ப்பணிப்பு. பிற படைப்புகளை எழுதும்போது ஆண்டுக்கணக்கில் நீளும் இவ்வளவு தொடர்ச்சியான தினங்கள் ஜெயமோகனுக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. வெண்முரசு தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் தினமும்  உழைப்பைக் கோரும் ஒரு பணியாகவே இருந்தது. அதற்கு இணையாக பிற படைப்புகளை எழுதுவது, கட்டுரைகளை எழுதுவது, திரைப்படங்களுக்கு எழுதுவது, இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வது, ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வது, பயணங்கள், வாசகர் சந்திப்புகள் என வழக்கமான பணிகளும். ஆனால் ஜெயமோகனுடன் இந்த நாட்களில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன் – தனது வழக்கமான எந்தப் பணிகளும் வெண்முரசில் குறுக்கிட ஜெயமோகன் அனுமதித்ததில்லை. விமான நிலையங்களில், ரயில் நிலையங்களில், விடுதி அறைகளில் (நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சன்னலை நோக்கி அமர்ந்து வெண்முரசை எழுதிக் கொண்டிருப்பார்) என நேரம் கிடைத்த தருணங்களிலெல்லாம் எழுதித் தள்ளியிருக்கிறார். தொடர்ந்து எழுத முடியாத பயணங்களோ, பணிகளோ வருமானால் அந்தத் தினங்களை முன்பே கணக்கிட்டு முன்கூட்டியே எழுதி வைத்துவிட்டுத்தான் செல்வார். உடல்நிலை குறைபாடு, அலைச்சலின் அலுப்பு, தொழில்நுட்பச் சிக்கல்கள் (3 மடிக்கணிணிகள் பழுது நீக்கப்பட்டு தொடர் பயன்பாட்டில் இருந்தன), ஓய்வெடுக்கச் சொல்லும் மனநிலை என கிட்டத்தட்ட வெண்முரசு வெளிவந்த எழாண்டுகளில் எந்த விஷயங்களையும் படைப்பிற்குத் தடையாக இருக்கவிட்டதில்லை ஜெயமோகன்.  ஒரு அத்தியாயத்திற்கு ஒரு லட்சம் என்ற ஊதியம் வாங்கினால் கூட வெளிப்படாத அர்ப்பணிப்பு உணர்வை வெண்முரசை எழுதுவதில் ஜெயமோகன் வெளிப்படுத்தியதை உடனிருந்து பார்க்க நேர்ந்தது ஒரு நல்லூழ்தான். 


மூன்றாவதாக, எழுதத் தொடங்கியதும் அவருக்கு ஏற்பட்ட சவால்கள். எந்த எழுத்தாளரும் தன் படைப்பை எழுதும்போது அப்படைப்பின் புனைவுலகில் ஒரு பாத்திரமாகவே இருந்து வருவான். அவனது அகம் அப்படைப்பின் உலகில் மட்டுமே இயங்கும். அவன் அவ்வுலகில் வசிக்கத் தொடங்கி விடுகிறான். அவனது அனைத்து கவனங்களும் அப்படைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் அக உலகத்திற்கே மடை மாறி விடுகிறது.  இந்த நிலையில் முதலில் சிக்கல் தொடங்குவது படைப்பாளியின் புறவுலகத் தர்க்கங்களில். அவனது தினசரி நடவடிக்கைகளில் தொடங்கி உணர்வு நிலைகளின் உச்சிக்கும், ஆழத்திற்கும் மாறி மாறி இயங்கும் பதட்டமும், செய்தே தீர வேண்டிய புற உலகின் கடமைகள் அளிக்கும் அழுத்தமும், அக  உலகை மொழியாகக் கொண்டு வர வேண்டி செய்யும் முயற்சிகளின் அயர்வும் எழுத்தாளனைப் பலி கொள்ளும் இடம் அவனது புற உலகத் தர்க்கங்கள் வழியேதான்.

    


ஜெயமோகன் பொதுவாகவே செயலுக்கான அக புற வேறுபாடுகளை சரியாகக் கையாளுபவர். காலை நடை, மாலை நடை, அளவு மீறாத உணவு, அவசியமின்றி விழித்திருக்காத உறக்கம், நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது, குப்பியில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அருந்தாமலிருப்பது என உடல்நலன் சார்ந்த புறஒழுங்குகளில் கவனமாக இருப்பவர்.   ஆனால் இந்த உடல்நலன் மீதான கவனத்தோடு முடிந்து போய்விடும் அவரது புற ஒழுங்குகள். தலைமுடியை சரியாக வாராமல் வருவது, சட்டையின் பொத்தான்களை மாற்றிப் போடுவது, அடுத்த மாத தேதியில் வரும் பயணத்திற்கு இந்த மாதத் தேதியில் போய் ரயில் நிலையத்தில் நிற்பது, காலுறைகளையும், டீ ஷர்ட்களையும் மாற்றிப் போட்டுக் கொள்வது, விடுதிகளில் கைகழுவும் இடங்களில் சென்சார் குழாய்கள் முன்பு திகைத்து நின்றுகொண்டே இருப்பது, வந்தவரிடம் அரைமணிநேரம் தத்துவ விசாரம் ஆற்றிய பின்னரே “சார், நான் உங்களக் கூப்டுட்டுப் போக வந்த கார் டிரைவர் சார்” என அவரை கதறலுடன் பேச அனுமதிப்பது என ஒரு ஓடிடி யில் ஆறு பாகங்களாக வருமளவு அவரது சமூக புற ஒழுங்குகளின் பட்டியல் நீளமானது.  


தன்னளவில் தனது படைப்பூக்கம் தடையின்றி வெளிப்பட தகுந்த கவனத்துடன் இருக்கும் ஜெயமோகன் பிறருடன் இலக்கியம், பணி தவிர்த்த நிலைகளில் தடுமாறக் கூடியவர்தான். அரை லட்சம் பக்கங்களுக்கு ஒட்டி எழுதிக் குவித்த எழுத்தாளர் ஜெயமோகன் வங்கி விண்ணப்பப் படிவத்தில் ஒரு கையெழுத்து போடுவதென்றால் விரல்கள் நடுங்குவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் படைப்பின் செயல்பாட்டில் தன்னை ஒப்புக் கொடுத்து உட்கார்ந்தால் அவர் எழுதும் வேகம் பிரமிக்க வைக்கும். முன்பே மனனம் செய்தவற்றை விசைப்பலகை வழியே தட்டச்சுவதைப் போன்ற வேகத்தில் எழுதித் தள்ளுவார். 


மிகக் கவனமாக தன் அக ஒருக்கங்கள் புறத்தில் இருப்பவற்றால் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள முடிந்த எழுத்தாளர்கள் வெகு சிலர்தான். அவ்வகையான எழுத்தாளர்களில் இன்று ஜெயமோகனே முதன்மையானவர். நான்கு கதைமாந்தர்கள் மட்டுமே இருக்கும் சிறுகதை ஒன்றை எழுதினாலே நான்கு பேருக்கும் அடுத்தடுத்து கூடு பாய்ந்து எழுத வேண்டி வருவதால் “ஆவியத்துப்” போய்விடுகிறது. ஆனால் வெண்முரசு போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைமாந்தர்களைக் கொண்ட படைப்பை எழுத ஜெயமோகன் கொண்டிருந்த படைப்பாற்றல் வியக்க வைப்பது.

  

இப்படைப்பாற்றலில் தன்னை ஒப்புக்கொடுத்து புற ஒழுங்குகளின் மீதுள்ள கவனத்தையும் படைப்பூக்கத்திற்கு கூடுதலாகத் தந்தாக வேண்டிய கட்டாயத்தை வெண்முரசு நாவலின் சில நூல்கள் ஜெயமோகனுக்கு கொடுத்திருக்கின்றன. நீலம், இமைக்கணம், போர்க் காட்சிகள் சில ஆகியவற்றை எழுதும்போது ஜெயமோகனை அரைப்பித்து நிலையில் நண்பர்கள் கண்டிருக்கிறோம். குறிப்பாக நீலம் எழுதிய நாட்களில் அவர் அவராகவே இல்லை. ஏதோ பேருந்தில் ஏறி எங்கு செல்கிறோம் எனத் தெரியாமலேயே சென்று யாரிடமாவது வசைகளை வாங்கிக்கொண்டு... சாப்பிட்டோமா இல்லையா எனத் தெரியாமல் பட்டினி கிடப்பது அல்லது இருமுறை உண்பது, உறக்கமில்லாமல் வெறுமே கிடப்பது, கண்மூடாமல் இரவெல்லாம் இசை கேட்பது, ஒரே பாடலை நாட்கணக்கில் விடாமல் கேட்பது, கண்கள் பிதுங்க கன்னங்கள் ஒட்டி கைகால்கள் மெலிந்து வயிறு மட்டும் முன்னுந்தி நிற்கும் ஜெயமோகனை அந்த நாட்களில் பார்க்கவே கவலையாக இருக்கும். ஆனால் எங்கோ  மீதமிருந்த அவரது புற ஒழுங்கின் மிச்சங்கள் வழியே மீண்டு வந்தார் ஜெயமோகன். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் குறித்து அவர் அதிகமும் சொல்லிக் கொண்டதில்லை.  எவரிடமும் சொல்லாமல் தனியே கிளம்பிச் சென்று இமயமலையின் கிராமமொன்றில் சில வாரங்கள் தனியே தங்கியிருந்து தன் அக ஒழுங்கை ஆற்றுப்படுத்தி திரும்பியிருக்கிறார். எவரிடமும் சொல்லாமல்  குமரியின் காலடியில் சில நாட்கள் இருந்து வந்திருக்கிறார். சில பயணங்கள் வழியே மீண்டு வந்திருக்கிறார். ஆனால் இத்தனை மீளலும் படைப்பூக்கத்திற்கு தன்னை புத்துணர்ச்சியுடன் மறுபடி ஒப்படைக்கத்தான். படைப்பின் பித்து நிலையில் தான் அனுபவித்தவற்றைப் பற்றி சிறு குறையும் கிடையாது அவரிடம் என்பதுதான் வியப்பூட்டும் விஷயம். ஒரு சந்தர்ப்பத்திலும் தான் அனுபவித்தவற்றை வருத்தத்தோடோ, தன்னிரக்கத்தோடோ அவர் பேசியதே இல்லை.


நான்காவதாக, எழுதும்போதே வெண்முரசு மீது வைக்கப்பட்ட விமரிசனங்கள். படைப்பின் மீதான விமரிசனங்களாக இல்லாமல் அவற்றில் பெரும்பாலானவை வெறும் வசவுகள். மேலும் சில படைப்பில் உள்ள சிறு தவறுதல்களையும் முதன்மையாக்கி விளக்கம் கோரி நின்றவை, சில விளக்கங்களை முடிந்த அளவுக்கு அளித்துப் பார்த்தார் ஜெயமோகன். ஆனால் அவற்றின் எண்ணிக்கை அதிகமாகும்போது ஒரு முடிவினை எடுத்தார். எழுதியவற்றுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பது இனி எழுத இருப்பவற்றை பாதிக்கிறது. ஆகவே இனி வெண்முரசு எழுதி முடிக்கும்வரை அதன் மீதான எந்த விமரிசனத்திற்கும் பதிலளிப்பதில்லை என. குறை கூறும் பதிவுகளைப் பார்ப்பதைத் தவிர்த்ததோடு மட்டுமன்றி அத்தகைய எந்த விஷயத்தையும் தன் கவனத்திற்கு கொண்டுவர வேண்டாம் என நண்பர்களிடமும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். வெண்முரசு முடியும்வரை படைப்பூக்கத்தின் அக ஒருமையை அவர் கட்டி நிறுத்திக் கொண்டு படைப்பை எவ்வித சமரசமுமின்றி வெளிக்கொணர்ந்த விதம் இனி வரவிருக்கும் எழுத்தாளர்களுக்கு ஒரு சிறப்பான முண்ணுதாரணம். 


எழுத்தாளனைப் பாதிக்காத எதுவும் அவனிலிருந்து படைப்பாக வெளிப்படுவதில்லை. வெண்முரசு போன்ற ஒரு பிரும்மாண்டமான படைப்பு வெளிப்பட அது ஜெயமோகனில் எவ்வளவு ஆழ்ந்த பாதிப்பினைச் செலுத்தியிருக்கும் என்பதை அவர் எழுதும் காலங்களில் உணர முடிந்தது. ஆனால் மனித குலத்திற்கு விதிக்கப்பட்ட உடல்வலிகளிலேயே அதீதமான ஈற்றுவலிக்கு நிகரான ஒரு வலி மிக்க முயற்சியாகத்தான் படைப்பு படைப்பாளியிடமிருந்து வெளிப்படுகிறது. குழந்தையைக் கண்டதும் அதுவரை இருந்த வேதனை பழங்கனவென மறந்தும் போகிறது. இனி படைப்புதான் முதன்மை. ஈன்று புறந்தரும் தாயுமே இனி வலி மறந்து மகவைத்தான் கண்டு மகிழ்வாள். ஜெயமோகன் வழியே உருவான வெண்முரசு இனி தமிழிலக்கியம் என்றென்றும் கொஞ்சி மகிழப்போகும் படைப்பு. 60 ஆம் அகவையைக் காணும் இந்நாளில் ஜெயமோகன் அவர்களை என்றுமுள தமிழிலக்கிய வாசகர்கள் சார்பாக வணக்கத்துடன் வாழ்த்துகிறேன். இன்னுமொரு நூறாண்டிரும்!

***

No comments:

Post a Comment