ஈழம் தொடர்பான அவருடைய கருத்துக்களை குறித்து எனக்கு வருத்தம் இருக்கிறது. இது பொதுவாக அவர் மேல் வைக்கப்படும் வசை மொழியுடன் தொடர்புடையதல்ல. இரண்டு தரப்பாக அல்லது இரண்டு தலைமுறையாக நின்று உரையாடும் சூழலில் ஏற்படக்கூடிய வருத்தம் அது. ஆனால் அது ஆரோக்கியமான சூழலை நோக்கி திரும்பி இருக்கிறது என்றே நம்புகிறேன். காலம் எல்லாவற்றையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் தன்மையை ஏற்படுத்தும்.
இலக்கியம் சார்ந்த அவருடைய கறாரான மதிப்பீடுகள் எனக்கு சவாலாக இருந்திருக்கின்றது. நான் அதை ஒரு பரீட்சை போல எடுத்துக் கொண்டு முன்னகர்கின்றவன். எப்போதும் இதுபோன்ற இலக்கிய கருத்துக்களை உள்வாங்க வேண்டும் என்பது என்னுடைய பண்பாக இருக்கிறது. மலேசியாவில் அவர் நவீன இலக்கியம் மற்றும் மரபு இலக்கியம் சார்ந்து பேசிய பேச்சுகள் எனக்கு பல திறப்புகளை தந்தது. இப்போதும் வலையொளியில் நீங்கள் அவற்றை கேட்கலாம். இளைய தலைமுறை படைப்பாளிகள், இலக்கிய துறையில் நுழைகின்ற அனைவரும் தவற விடக்கூடாது உரை.
புதிய தலைமுறையினரை ஊக்குவிப்பதில் ஈழ படைப்பாளிகள் திரு.ஜெயமோகனிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. என்னுடைய படைப்புகளை படித்து நேர் பேச்சில் அவற்றை ஞாபகப்படுத்தி உரையாடுவதை அவர் ஒருபோதும் மறந்ததில்லை. இப்படி என்னுடைய படைப்புளை அறிந்த எத்தனை (ஈழ) படைப்பாளிகள் இருக்கிறார்கள் ?. இது குற்றச்சாட்டல்ல நியாயமான ஒரு படைப்பாளியின் எதிர்பார்ப்பு.
அவருடைய பின்தொடரும் குரல் என்ற நாவல் என்னுடைய பைபிள் அல்லது கீதை ஏன் மூலதனம் என்று கூட துணிந்து கூறுவேன். அவருடைய உச்சமான படைப்பு பின்தொடரும் நிழலின் குரல்தான் என்பது என்னுடைய உறுதியான கருத்து. அவ்வளவு கட்டுறுதியான பாத்திரங்கள் வாயிலாக எடுத்து வைக்கக்கூடிய தத்துவார்த்த உரையாடல்கள் அனைவருக்குமானது. குறிப்பாக போராட்ட பின்புலத்தை & சமூக பங்களிப்பை செய்ய விரும்புகிறவர்கள் அதை படிப்பது கட்டாயம் என்றே கூறுவேன். நடந்தவை நடக்காமல் இருக்க ஒரு கைவிளக்கு வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஏன் வரலாறு படிக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை காரணம் அது ஒரு கை விளக்கு. விளக்கை வைத்துக் கொண்டும் குழியில் விழுகின்றவர்கள் உண்டு. அவர்களைக் குறித்து நாம் கவனம் கொள்ளத் தேவையில்லை.
பின் தொடரும் நிழலின் குரலில் வரும் வீரபத்திர பிள்ளை - அருணாசலம் என்ற பிரதான பாத்திரங்கள் இரண்டையும் என் மதிப்புக்குரிய சிலருடன் இன்றைக்கும் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களில் சிலர் அடிப்படையில் மார்க்சிஸ்டுகள். பொது சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தாலும் தற்போதும் இடதுசாரிகள் என்று எங்காவது சொல்லாமல் இருக்க அவர்களால் முடிவதில்லை!. அவர்களுக்கு அரசியல் நம்பிக்கைகள் பற்றிய பார்வை சற்று மாறியிருக்கின்றது. ஆனால் அந்த மாற்றங்களும் கூட ஒரு வட்டதின் சுழற்சி போல மறுபடியும் அதே புள்ளிக்கு மிக குறுகிய காலத்தில் திரும்புவதையும் அயர்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் இருந்து விடுபட்டு உரையாடும் வாய்வை அவர்களில் பலரும் தருவதில்லை. ஒரு சிலர் உறவை முறித்தும் இருக்கிறார்கள். நான் ஒரு எழுத்தாளர் என்ற இடத்தில் இருப்பதால்தான் உரையாடவே முடிகின்றது என்பது இன்னொரு உண்மை!. ஆனால் இவர்களின் இந்த வறட்டுத்தனம் சோவியத்தில் இருந்து வந்திருக்கும் என்று தோன்றவில்லை அது இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது என் புரிதல். ஈழத்தில் உரையாடக்கூடிய மார்க்சிஸ்டுகளும் இருந்தார்கள் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். ஈழப் போராட்டத்தில் மாற்று இயக்கங்ளில் இருந்து போராட புறப்பட்ட பலருடைய கடந்தகால நிலைப்பாடுகள் பற்றி எனக்கு இருந்த விமர்சனங்கள் அதே அளவுக்கு தற்போது கூர்மையாக இல்லை. அதன் நெகழ்வு தன்மை என்பது காலமும் மனமுதிர்ச்சியும் கொண்டு வந்து சேர்த்ததுதான். ஒரு பிரதி என்பது வெறுமனே படித்து விட்டு கடந்து செல்லும் ஒன்றா மட்டுமே எடுத்துக் கொள்ளும் வட்டத்திற்குள் நான் ஒரு போதும் இருப்பதில்லை. அவ்வாறு கூறுவது என்பது அதிகபட்ச போலித்தனம்.
நான் எப்போதும் அவருடைய உரையாடல்களை தீவிரமாக ஆழ்ந்து கவனிப்பவன். ஒரு நாவலில் நூறு சிறந்த தருணங்களை அடையாளம் காணலாம் என்றால் அவருடைய உரையாடல்களில் அதற்கு குறைவில்லாமல் நல்ல கருத்துகள் இருக்கிறது. இது சற்று அபூர்வமானது. அனைவருக்கும் இந்த தகைமை அமைவதில்லை. ஒரு படைப்பாளி என்பதை தாண்டி ஜெயமோகன் ஒரு சிந்தனாவாதி என்ற இடத்திலும் வைத்து அணுகப்பட வேண்டும். சிந்தனாவாதிகள் உங்களை சீண்டுவதும் உண்டு அது மேலும் பல வாசல்களை திறந்து விடுவதற்கான உத்தி என்பதை மறந்து விடக்கூடாது.
தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அவர் தொடர்ந்து அயராது ஆற்றி வரும் பணிகள் ஒரு பெரும்பாச்சல். நானும் இந்த முக்கியமான காலகட்டத்தில் அவருக்கு வெகு தூரத்தில் நின்றாலும் கூட மானசீகமாக துணையாக நிற்கிறேன் என்பதையிட்டு மகிழ்ச்சி கொள்கிறேன்.
- வாசு முருகவேல்
31/07/2022
***
No comments:
Post a Comment