அந்த ஜெ இந்த ஜெ!- சிவா கிருஷ்ணமூர்த்தி


சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் சுனில் கிருஷ்ணனும் நண்பர்களும் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு 60 வயது பூர்த்தியாவதையொட்டி அதைக் கொண்டாடும் பொருட்டு அவருடன் பழகிய தருணங்களைப் பற்றியோ, அவரது படைப்புகளைப் பற்றிய அவதானிப்பாகவோ கட்டுரைகளை எழுதித் தொகுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். அதன்படி நான் என்ன எழுதலாம் என்று எண்ணும்போது சற்று திகைப்பாகத்தான் இருந்தது.


வாசகர், விமரிசகர், எழுத்தாளர் ஜெ - எந்த ஜெ? மெய்யியல்? வரலாறு? காந்தியம்? தமிழ்/ இந்திய / உலக இலக்கியம்? இந்தப் பொருள்களை அவர் வெளிப்படுத்தியிருக்கும் வழிகளான - புனைவைப் பற்றி? அபுனைவுகளைப்பற்றி? பயணக்கட்டுரைகளை? பதிவுசெய்யப்பட்டிருக்கும் உரைகளைப்பற்றி?  கற்பனாவாத ஜெ? அல்லது தர்க்க அபுனைவு ஜெ? அந்த ஜெ? இந்த ஜெ? எந்த ஜெ :)


ஒவ்வொரு நாளும் சியமந்தகத்தில்  வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகளை வாசிக்கும்போது மலைப்பாகவும், ஒரு வகையில் பெருமையாகவும் இருந்தது.


ஒரு வளர்ந்த ஆண் யானையை இரு கைகளாலும் முழுவதும் அணைத்துக்கொள்ள முயன்றிருக்கிறார்கள். அல்லது ஓர் பெரும் மரத்தின் அடிப்பாகத்தை இரு கைகளாலும் முழுவதும் அணைத்துக்கொள்ள முயல்வது போன்ற பெருஞ்செயல் ஆற்றியிருக்கிறார்கள். 


ஜெமோவின் எழுத்துகளை இன்னொரு விதத்தில், மற்றுமொமொரு கோணத்தில், இன்னும் கூர்மையாக நோக்கத் தூண்டும் கட்டுரைகள் இவைகள்.


இவற்றையெல்லாம் தாண்டி என்னால் என்ன புதிதாக சொல்லிவிடமுடியும்?


அவருடன் நெருங்கிப் பழகிய தருணங்களை எழுதலாம் என்றால் - அவரை நேரில் சந்தித்த தருணங்கள், பயணங்கள் மிகக்குறைவு. விரல்கள் விட்டு எண்ணிவிடலாம் (ஒரு கை போதும்). எனவே அதுவும் இயலாது…!


இத்தனை சியமந்தக் கட்டுரைகள் தொடாத ஒருசில விஷயங்களை இக்கட்டுரையில் அணுகலாம் என்று தோன்றுகிறது.


***


எல்லாரையும் போலவே, கார் கண்ணாடிகளில் விழுந்து ஒட்டியிருக்கும் மழைச்சாரல் துளிகள் தத்தம் பாதைகளிலிருந்து மெல்ல மெல்ல உருண்டோடி ஏதோ ஒரு புள்ளியில் கலப்பதைப்போலவே நானும் ஏதோ ஒரு வாசிப்பு கட்டத்தில் ஜெமோவிடம் வந்துசேர்ந்தேன். 


முன்னர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்ட குறள் போல், 


‘தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது’


‘தவத்தை’ அடையவதற்கு ஓர் ‘தவம்’ செய்திருக்க வேண்டும். ‘சங்கச் சித்திரங்கள்’, பின்னர் ‘அறம்’ வழியாக நானும் ஜெ தளத்தை அடைந்தேன்.


எழுத்துகளைத் தாண்டி முதலில் கவனத்தை ஈர்த்தது - பயணங்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும் கடைபிடிக்கும் ஒழுங்குமுறைகள். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று தோன்றலாம். இது ஒரு மிக முக்கிய விஷயம்.


பொதுவாகவே இந்தியர்கள் பொது ஒழுங்கு முறைகள் பேணுவதில் சற்று மாற்று குறைந்தவர்கள் என்பது என் எண்ணம். உடனே புருவத்தைச் சுருக்கவேண்டாம்! என் தந்தை இதில் மிக கண்டிப்பானவர்தான். என் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் கொளுஞ்சிவாடி திரு. சேஷன் அவர்களும்தான். நான் சொல்வது பொதுவாக, என் அனுபவத்தில், இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் நேரத்திற்கு வருதல், ஒரு கூடுகையின் பொதுவிதிகளை பின்பற்றுவதில், அஜெண்டா / சப்ஜெக்ட் மாறி rabbit hole போய்விழாமல் இருப்பதில் நமக்கு குறைந்த மதிப்பெண்தான்.


நமக்கு என்றுமே யாராவது அப்பாவோ, அதிகாரியோ, ஆசிரியரோ சற்று குறுக்கிட்டு ‘ஒழுங்கை’ நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டும். எனவேதான் விஷ்ணுபுர நண்பர்களின் கூடுகைகளில் (முன்பு திற்பரப்பு, ஈரோடு, கோவை என்று ஓரிரு இடங்களில் நடந்தன, இன்று அங்கிங்கெனாதபடி எங்கும்!) இவ்விதிகள் கறாராகப் பேணப்படுவது ஒரு மிக முக்கிய விஷயம். எப்படிக் கூட்டங்கள் நடத்துவது என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டு என்று உறுதியாக எண்ணுகிறேன்.


எந்தக் காரியத்திற்காக, நோக்கத்திற்காகக் கூடினாலும் பொது விதிகள் வகுக்கப்பட்டு பேணப்படவேண்டியது முக்கியத் தேவை. அதுவும் இலக்கியம் போன்ற கருவுக்கான கூடுகைகள், பெண்கள் கலந்துகொள்ளும் கூடுகைகளில் இவை இன்னும் தேவையாகின்றன. இத்தனை வருடங்கள் இவை செம்மையாகக் கடைப்பிடிக்கப்படுவது ஓர் அருச்செயலே.


***


பள்ளி நாட்களில் அறிமுகப்படுத்தப்பட்டதாலோ என்னவோ பொதுவாக நம் மரபிலக்கியங்களின் ஒட்டுமொத்த சாரமும் நீதியை நோக்கியே, எது சரி எது தவறு என்ற அளவிலேயே நமக்குத் தெரிகின்றன. அவற்றை நீதி நூல்கள் என்ற அளவிலேயே தொடர்ந்து வைத்திருக்கிறோம்.


அதே சமயம், அவ்விலக்கியங்களில் நுழைய ஜெமோவின் ரசனை சார்ந்த பார்வை நிச்சயம் இன்னொரு கதவு திறப்பு.


உதாரணத்திற்கு, திருக்குறள் பேருந்துகளிலிருந்து  appகள் வரை (நான்குவித உரைகளுடன்!) எளிதில் கிடைக்கக்கூடியது.  இதுவரை கிடைக்கும் அனைத்து உரைகளின் ஒட்டுமொத்த பார்வையும் ‘Do’s and Don’ts’ மட்டுமே. ஆனால் ஜெமொவின் பார்வை, திருக்குறளை ஒரு கவிதை நூலாக அணுகுதல், நீதியை கவிதை வழியாக அறியும் பார்வை, தமிழில் மிக முக்கியமான திறப்பு. இது தமிழ் வாசக உலகில் பெரிதும் பேசப்படவில்லை என்று தோன்றுகிறது.


பத்து வருடங்களுக்கு முன், ஜெமோ, கிருஷ்ணன் மற்றும் நண்பர்களின் பருவமழைப் பயணத்தில் ,


‘விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது’


என்ற குறளைப்பற்றி எழுதியிருந்தது நினைவிற்கு வருகிறது. அந்தப் பார்வை, அதுவரை நான் எதிர்கொள்ளாதது. ஒரு திகைப்பு, பரவசம். தளத்தில் திருக்குறளைப் பொருளாகக் கொண்ட கட்டுரைகளும் அது குறித்த உரைகளும் கிடைத்தாலும் என்னவோ இது பெரிதும் பேசப்படா பொருளாக இருக்கிறது என்ற எண்ணம் உண்டு. இழப்பு ஜெமோவுக்கு அல்ல.


***


தத்துவம், ஆன்மிகம், வரலாறு என்று எத்தனையோ மிக முக்கியத் தளங்களுக்கு அவர் ஏறி மென்மேலும் சென்றாலும் கற்பனாவாதத் தளத்தை ஜெமோ இன்னும் இழக்காமல் இருக்கிறார். இந்தச் சமநிலை வியப்புற்குரியது; அதிகம் இது குறிப்பிடப்படவில்லை (சியமந்தகம்) என்று எண்ணுகிறேன். 



மெலட்டூர் ராமராவ் எனும் கதை நாயகர் தன் இளம் வயதில் நடந்த சம்பவத்தைச் சொல்லுவதிலிருந்து ‘அந்த முகில் இந்த முகில்’ கதை தொடங்குகிறது. அவர் சினிமா எனும் கனவுத் தொழிற்சாலையில் தையல்காரராக நுழைந்து சில காலங்கள் மட்டுமே இருக்கிறார். ஆனால் அதில் தம் வாழ்நாள் முழுவதிற்குமான அனுபவத்தை அடைந்துவிடுகிறார்.


கருப்பு வெள்ளை மட்டும் இருக்கின்ற அந்த உலகின் திரைக்குப் பின் சினிமா எனும் மாபெரும் சக்கரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஏராளமான எறும்புகளின் உலகிலுள்ள ஶ்ரீபாலா எனும் ஒரு சேடிப்பெண் ராமாராவை ஈர்க்கிறார்.


உலகின் எந்த மிக முக்கிய இலக்கியங்களும், உச்ச கவிதைகள் எவற்றாலுமே, இளமைக்காலத்தின் முதல் ஈர்ப்பை / காதலை முழுமையாகச் சொல்லிவிட முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் அந்த நிலவொளி அவ்விருவருக்கும் மட்டுமேயானது. அந்த முகில்கள் அவர்களுக்கு மட்டுமே  தெரிகின்றன.


மற்றவை, இளமை போனபின் கடந்தகாலத்தை நினைத்து எழுதப்படுபவை. அப்படியாப்பட்ட ஒரு நிலவு இரவு ராமாராவிற்கும் ஶ்ரீபாலாவிற்கும் வாய்க்கிறது.


ஹம்பியில் வெளிப்புற சினிமா படப்பிடிப்பிற்காக  அந்த மாபெரும் எறும்புக்காலனி சினிமாக் குழுவினர் ஓர் பண்ணையில் வந்திறங்கியிருக்கிறார்கள். ஓர் இரவில் அப்பண்ணை உரிமையாளனின் கூட்டத்தின் சித்திரவதை தாங்கமுடியாமல் அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவனை ஶ்ரீபாலா கடுமையாக அடித்துவிட, அவளை அக்கும்பல் துரத்திவருகிறது. அவளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்ற கிட்டதட்ட தற்கொலை போன்ற முடிவிற்கு ராமாராவ் தள்ளப்படுகிறார்.


முதலில் அப்பெண்ணின் மேலான ஈர்ப்பு, பின்னர் அவளுக்குத் தேவையான உதவி, பின் ‘குடிகார எருமை மாடுகளை’ இரவுதோறும் எதிர்கொள்ள நேரும் அம்மாதிரியான ‘சேடிப்பெண்களின்’ நிஜ, அவல நிலையை அறிதல் என்று படிப்படியாக ராமராவின் உலகம்  மாறிக்கொண்டேயிருக்கிறது.


ஹம்பியின் சிதலமடைந்த, மனித சஞ்சாரங்கள் அற்ற கோவில் பிரகாரங்களும், அந்த வெயிலும் துங்கபத்திரா நதியும் ஓர் அற்புதப் பின்னணியை, உணர்வை எந்தவொரு இளைஞனுக்கும், ராமராவோ, கிரிதரனோ, எவருக்கும் கொடுத்திருக்கும்.


அப்பெண்ணை தன்னொடு ஒளித்து வைத்திருக்கும் ஓரிரு நாட்களில் பரஸ்பரம் இருவரும் ஒருவரையொருவர் அறிய ஆரம்பிக்கின்றனர்.  பின்னர், ராமாராவின் ஒரே நோக்கம், பின்விளைவுகளை யோசியாமல், அவளை அவ்விடத்திலிருந்து அகற்றி காப்பாற்றி வேறு பத்திரமான இடத்திற்கு அழைத்துச்செல்வது மட்டுமே. முதிரா இளைஞனிலிருந்து ஓர் பொறுப்பான ‘ஆணின்’ பாத்திரத்திற்கு செவ்வெனே மாறிவிடுகிறார்.


அப்பண்ணைவீட்டிலிருந்து படப்பிடிப்புக் குழுவினர் உறங்கும் நிலவிரவில் சைக்கிளில் இருவரும் அருகிலுள்ள நகரத்திற்குத் தப்பிச்சென்று அங்கிருந்து அவளின் சொந்த ஊரின் அருகில் பரஸ்பரம் பிரிந்து அவரவர் பாதைகளில் செல்வதற்கு ஓரிரு பகல்களும் இரவுகளும் ஆகின்றன. ஆனால் அந்த அனுபவம் அவர்களின் அடுத்த முப்பது ஆண்டுகளாக அச்சரிகை போல, அந்த ஶ்ரீராஜவிஜயேஸ்வரி கருப்பு வெள்ளைத் திரைப்படம் போல, புவ்வுல சூரிபாபுவின் குரல் போல என்றென்றும் அவர்கள் நினைவில் இருக்கிறது.

அந்த முகில்களும், ஆ மப்பு, ஈ மப்பு வரிகளும் ஒரு வாழ்நாளுக்குரிய அனுபவத்தை அவர்களுக்கு ஒரு நிலவிரவில் அளித்துவிடுகின்றன. தீரவே தீராத மதுர கலயம் அவர்களுக்குக் கிடைக்கிறது.


அரிதே அரிதான இம்மானுட வாழ்க்கையில் திரும்பிப்பார்க்கையில் இந்த கற்பானவாத அனுபவம் ஒரு சிறு நுரைக்குமிழி மட்டுமே. அவரவருக்கான சிறிதும் பெரிதுமான குமிழிகள். ஊதினால் காற்றில் சற்றுநேரம் மிதந்து செல்லும் குமிழிகள். யதார்த்த, பொருளியல் உலகில், நிலவிரவு முடிந்து மறுநாள் புழுக்க வெயில் நாளில் சிறு தடயமும் இல்லாமல் மறைந்துவிடக்கூடிய குமிழிகள். ஆனால் இலக்கிய உலகில் இதற்கும் இடம் உண்டு. ‘காடு’ நாவலில் சிமெண்ட்டில் உறைந்திருக்கும் மிளாத்தடம் போல். 


ஜெமோ போன்ற, தத்துவம், வரலாறு போன்ற துறைகளில் ஆழ்ந்த, பரந்த வாசிப்பும் கூர்ந்த அறிவும் கொண்ட எழுத்தாளர், தமிழின் மிக முக்கிய, வாராதுபோல வந்த மாமணி எழுத்தாளர் இப்புத்தக முன்னுரையில் சொல்வதுபோல் இக்கற்பனாவாதக் குமிழியை இழக்கவில்லை. இதையும் ஒரு பக்கமாக முன்வைக்கிறார், மெலட்டூர் ராமராவ், ‘காடு’ கிரிதரன்களைக் கொண்டு.


எந்த விஷயத்தின் அருமையும் நிகழ்காலத்தில் முழுமையாக உணர்ந்துகொள்ளப்படுவதில்லை. இருந்தும், திரு. ஜெயமோகன் அவர்களின் அறுபதாம் பிறந்த வருடம் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்நிகழ்காலத்தில் நானும் இருக்கிறேன், அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதன் மூலமாக என் வாழ்க்கையிலும் ஒரு நிறைவை உணர்கிறேன்.


பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெ!


***

No comments:

Post a Comment