மூர்த்தி விஸ்வநாதன்,
2010ஆம் ஆண்டு வரை இலக்கியத்தில் பிசிறுகளை மட்டுமே வாசித்து கொண்டிருந்த வணிக எழுத்துக்களை தாண்டாமல் இருந்த எங்களை தீவிர இலக்கியத்துக்குள் இழுத்துப் போட்டவர் ஜெயமோகன்.
விஷ்ணுபுரம் வாசிக்க முயன்று உள்ளே நுழைய முடியாமல் பரிதவித்து நின்று அறம், இன்றைய காந்தி,காடு ஏழாம் உலகம், அனல் காற்று, கன்னியாகுமரி, மற்றும் அவரது ஏராளமான கட்டுரைகள் கேள்வி பதில்கள் வாசிக்க வாசிக்க ஆசானின் எழுத்து வசப்பட்டது.அதன்பின் விஷ்ணுபுரமும் கொற்றவையும் வசப்பட்டது.
அவரின் கட்டுரைகள் எங்களுக்கு வினையூக்கி.நண்பர்களிடம் பேசும்போது ஜெயமோகன் இந்த இடத்தில் இதைச் சொல்கிறார் அந்த இடத்தில் அதைச் சொல்கிறார் என்று பேசும்போது நாங்கள் மதிக்கப்படுகிறோம்.எங்கள் இருப்பை வலுவாக்கிக்கொள்கிறோம்.
ஆசிரியரின் பருந்துப்பார்வையில் இலக்கியத்திலிருந்து எதுவும் தப்பாது.அவரிடம் எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டு.ஜெமோவுக்கு மீண்டும் மீண்டும் சன்னதம் வரவேண்டும் பித்து நிலைகொண்டு இன்னும் இன்னும் எழுதி உச்சமளிக்க வேண்டும்.
ஜெமோ இன்னும் நூறாண்டு காலம் வாழவேண்டும்.
அன்புடன்
மூர்த்தி
விஸ்வநாதன்
வாழப்பாடி.
***
யோகேஸ்வரன் ராமநாதன்
அலைகழிப்புகள் மிகுந்த துயரமிகு நாள் ஒன்றில் திருவான்மியூர் சிக்னல் அருகே ஊர் திரும்ப நின்று கொண்டிருந்த உச்சிபொழுதில், 'அருகில் தானே பனுவல் புத்தக நிலையம்' என்ற சிந்தனை நினைவில் எழுந்தது.
தலைச்சங்காடு திரும்புவதற்குள் அறம் வழி அகத்தில் நுழைந்திருந்தார். சொற்களை திரட்டிக்கொண்டு இருக்கும் இந்நொடி வரை, சிந்தனையில், செயலூக்கத்தில்,உரையாடல்களில், உன்னத தருணங்களில், அவரை நினைக்காமல் ஒரு தினமும் முடிவதில்லை.
அவருடைய புத்தகங்கள் வழி கற்றதை விட, உரையாடல்கள் வழி பெற்றவை அதிகம். செயல்புரிவதன் தீவிரத்தை, அது தரும் உளஎழுச்சியை கண்டுகொண்ட தருணங்கள் அவரின் அருகாமையால் கிடைத்த கொடைகளில் மிக முக்கியமானது.
"எப்போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை கொள்க...." ஆசானின் ஆப்த வாக்கியங்களில் என்னளவில் முதன்மையானது.
அவர் அளித்துக்கொண்டிருக்கும் அறிவுக் கொடையை பெற்றுக் கொண்டு இருப்பவர்கள் பாக்கியவான்கள். எனக்கும் அந்த நல்லூழ் வாய்த்து இருக்கிறது.
அகவை அறுபதை அடைந்திருக்கும் ஜெவிற்கு வணக்கங்களை தெரிவித்துக்கொள்வதோடு, உடல் நலம், மன நலத்தோடும், அதே உளவிசையோடும் அருஞ்செயல்களை தொடர, இந்த தருணத்தில் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
- யோகேஸ்வரன் ராமநாதன்.
***
உயரப்பறக்கும் ஜெயக்கொடி லெட்சுமிநாராயணன்
சியமந்தகம் தளத்தில் உள்ள கட்டுரைகளை படித்த பின்பு எனக்கும் ஜெயமோகனை குறித்து எனது எண்ணங்களை தொகுத்து அவருக்கு சமர்ப்பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வந்தது. ஏனெனில், அறுபது வயதில் இன்னும் அவர் செயலூக்கத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பது, முன்னோடி செயல்பாடு (Pioneer).
இத்தளத்தில் முன்னர் கட்டுரை எழுதியுள்ளோர் போல் இன்னபிற தகுதிகளையோ, நேரிடை அனுபவங்களையோ நான் பெற்றிருக்கவில்லை. கடந்த நான்காண்டுகளாக ஜெயமோகனின் தளத்தை பின்பற்றி வருபவன் என்கிற முறையிலும், அவரது படைப்புக்களை படித்தவன் என்கிற முறையில் மட்டுமே. சொல்லப்போனால் அனைவரிலும் கடையன் நான். வயதிலும் கூட. ஆயினும், ஜெயமோகனில் இருந்து எனது இலக்கிய பயணத்தை தொடங்கிவன் என்கிற முறையிலும், அஜிதனின் வயதொத்த மற்றுமொரு "பொடிப்பயல்" என்கிற முறையிலும் எழுதுகிறேன். இது ஒரு இளம் வாசகனின் சமர்ப்பணம்.
அறுபது. இந்திய மரபில் ஐந்து வியாழவட்டம் என்பர். பிறக்கும் போது வானில் இருந்த அதே கிரகநிலைகள் மீண்டும் அமைத்திருக்கும். அவர் பிறக்கும் போதும் சுபகிருது ஆண்டாகவே இருந்திருக்கும். ஜெயமோகன் எனும் சூரியன், ஒரு முழு வட்டம் முடித்து மீண்டும் "தமிழ்விக்கி" மூலமாக தனது புதுப்பிறப்பை அறிவித்துள்ளது. சென்ற அறுபது ஆண்டு சுழற்சியில் அச்சூரியனைப் பார்த்து கண் கூசியோர் ஏராளம். அதன் தகிப்பை பொறுக்க இயலாதோர், அதன் தூய பிரகாசத்தால் கண் இருண்டவர்கள் ஏராளம் என இருந்தாலும், அவ்வொளி மூலம் விளைந்த பயிர்நிரை உண்டு. அதன் ஆற்றல் மூலம் தனக்கான சக்தியை பெற்று முன் உந்திக்கொண்டோர் உண்டு.
ஜெயமோகனுக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு பத்தாண்டுகளும் ஒரு பிறப்பு, ஒரு புதிய பரிணாமம் என வரையறுக்கலாம். சீரியவாசகன், இலக்கியவாதி எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், இப்போது வரை அறிவியக்கவாதி என நீளும் பரிணாமங்கள். ஒரு தொடர் அறைகூவல் மூலம் மக்கள் திரளை அறத்தின் பக்கம் இழுக்க முனைவது எனக்கு நாளும் வியப்பளிப்பது. ஊடகம் (Medium) எதுவானாலும் சரி, எனது அறைகூவல் ஒன்றுதான். அறத்தின் குரல், மரபின் நீட்சி நான், என்னைப்பற்றி மேலெழு. உனக்காக ஒரு போதும் வீழாத ஏணி செய்து தருவேன் என்பதே. அப்படி அந்த ஏணியை பற்றிகொண்டவரில் நானும் ஒருவன். கடையன். எளியன்.
சராசரி சழக்குப் புத்தி கொண்ட ஒருவனை, தான் அமர்ந்திருக்கும் அறத்தின் பீடத்தில் இருந்து சற்றும் அசையாமல், டேய் பொடிப்பயலே! இதைப் படி என்ற சிறு அரட்டல் மூலமாக வாழ்வின் நிதர்சனங்களையும், தரிசனங்களையும் நோக்கி உந்தித்தள்ளிய ஆளுமை. எனக்கும் அவருக்குமான கடிதங்களில் அவரை ஆசான் என அழைப்பதே வழக்கம். அவ்வாறு அழைக்க பிறருக்கு என்னென்னவோ காரணங்கள் இருக்கலாம். எனக்கும் அவர் "ஆசான்" என்ற ஒன்று மட்டுமே காரணம். சிறுவயதில் தந்தையை இழந்த எனக்கு உலகம் பற்றிய புரிதலையும், அது என்ன என்பதையும் கற்றுத்தந்தவர்களுள் ஒருவர். முதன்மையானவர். வெற்றுத்தாளில் எழுதப்படும் எழுத்து, ஒருவன் வாழ்வில் அப்படி என்ன செய்துவிட முடியும் என என்னிடம் கேட்பவர்களுக்கு நான் பரிந்துரைப்பது எனது ஆசானையே.
அவரது எழுத்து மற்றுமின்றி, தீர்க்கமான உரைகளின் ரசிகன். "கல்லெழும் விதை" உரையில் சாரமான "அறத்தின் பயன் யாதெனில், நிமிர்வு" மனதுள் ஒலிக்காத நாட்கள் குறைவு. ஜெயமோகன் தனது உரைகளில், அடிக்கடி ஆப்தவாக்கியம் எனும் பதத்தினை பயன்படுத்துவது உண்டு. அவரது உரைகளிலும், எழுத்திலும் நம் மனதோடு பேசும் ஆப்த வாக்கியங்கள் மலினம். உயிரோடிருத்தல் வேறு, வாழ்தல் வேறு என இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஆசான். அறத்தை குறித்து வரும் தலைமுறை வேட்கை கொண்டு தேடித்திரியும் எனில், அந்தத்தேடல் ஆசானின் பெயரன்றி நிறைவுபெறப்போவது இல்லை. அறம் எனும் உயரப்பறக்கும் விழுமியத்தின் ஜெயக்கொடி அவர். அக்கொடியை பற்றிகொண்டு முன்னேறுவதும், அதனை இலக்காகக்கொண்டு பயணிப்பதுமே இளையதலைமுறை செய்ய வேண்டியது.
தவழுகின்ற குழந்தை ஒவ்வொரு பொருளையும் தொட்டுணர்ந்து, துய்த்து பின்னர், பட்டற்று விட்டுவிட்டு அடுத்த பொருளுக்குத் தாவும். அது போலவே ஜெயமோகனும். இப்போது அக்குழந்தை அயராத பயணத்திற்கு மத்தியிலும், “தமிழ்விக்கி” எனும் பெரும் முன்னெடுப்புக்கு மத்தியிலும், தனது அதரத்தில் கோழை ததும்ப ததும்ப கபிலரைத் துய்த்து திளைத்துக்கொண்டு இருக்கிறது.
( பொன்வெளியில் மேய்ந்தலைதல் , வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை
உச்சிமலை குருதிமலர் )
இதுவே அக்குழந்தை மீண்டும் மீண்டும் உலகிற்கு உணர்த்த விழைவது. "செயல்படு" என்பதே அதன் விளி.
காடு, கடல், சூரியன், யானை, குழந்தை மற்றும் ஜெயமோகன்.
ஆரத்தழுவ காத்திருக்கும்,
லெட்சுமிநாராயணன்
திருநெல்வேலி
No comments:
Post a Comment