அன்பெனும் விருது - கலாப்ரியா

குமரகுருபரன் விருது விழா 2018
சுபமங்களா என்று நினைவு. இரண்டு பக்கத்திற்கு படங்களுடன் ஒன்றோ இரண்டோ, சற்றே நீளமான கவிதைகள் வந்திருந்தன. கவிதையில் என் சாயல் தெரிந்ததாலோ அல்லது எனக்கு புழக்கமான தளங்கள் இருந்ததாலோ, கவிதை எனக்கு பிடித்திருந்தது. அப்போதுதான் ஜெயமோகன் பெயர் மனதில் பதிந்தது. ஆனால் கவிதை அவரையோ அல்லது அவர் கவிதையையோ கை விட்டு விட்டார்கள். (ஆனாலும் தன் மின்னஞ்சல் முகவரியில் writer poet என்ற பதம் இன்னும் இருக்கிறது.) என்னைப் பொறுத்து அது அவருக்கு ஒரு நல்ல விஷயம். வாசகர்களின் கவனம் அவர்பால் குவிய அவர் உரைநடையை தேர்ந்து கொண்டதுதான் சரியான விஷயம் என்று சொல்வேன். சுபமங்களாவில் அவர் நிறைய கதைகள் எழுதினார். `ஜகன்மித்யை’ எல்லார் கவனத்தையும் ஈர்க்கிற  நல்ல கதையாக வந்தது. கணையாழியில் அவரது கதைகள் நிறையவே வெளிவந்தன.


அதில் ’டார்த்தீனியம்’ குறுநாவல் என்னை மிகவும் கவர்ந்தது. அதைப் பற்றிய ஓவியமும் குறிப்பும் அந்த இதழ் அட்டைப்படத்திலேயே வந்திருந்தது. அப்போது கணையாழி அச்சுப் பிழைகளுக்கு பேர் போனதாக இருந்த காலம். (கொஞ்ச காலம் அப்படி இருந்தது.) மேலோட்டமாகப் பார்த்த போது பார்த்தீனியத்தைத்தான் அப்படி போட்டு விட்டார்களோ என்று நினைத்து லேசான கவலையும் கதையில் அதிக ஆவலுமாக புரட்டிப் படிக்க ஆரம்பித்தேன். எதிர்பார்த்தது போலவே என்னை வெகுவாகக் கவர்ந்தது. 


அது மேஜிக்கல் ரியலிசம் தமிழில் அறிமுகமாகிற கோணங்கியின் சிறுகதைகளின் காலம். ஜெயமோகன் அப்போது தர்மபுரி, தொலைபேசி நிலையத்தில் பணியில் சேர்ந்த புதிது என்று நினைவு.  பாலக்கோடு கிராமத்தில் இருந்தார். அந்த முகவரிக்கு டார்த்தீனியத்தைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு மிகவும் மகிழ்ச்சியாக பதில் எழுதியிருந்தார். ஒரு சீனியரிடமிருந்து வந்த அருமையான பாராட்டு என்ற ரீதியில் இருந்தது அந்தக் கடிதம். அது அவருக்கும் எனக்குமான நெருக்கத்தின் முதல் வித்து. அது அந்த டார்த்தீனியம் போலவே வளர்ந்தது. (அதன் வேகத்தையே, இப்படி குறிப்பிடுகிறேன்.) 


அப்புறம் சுந்தர ராமசாமி பொறுப்பில் வந்த காலச்சுவடில் அவரது கதைகள் படித்த நினைவு. அவரது முதல் நாவலான ரப்பர் வெளிவந்ததும் அவசரமாக வாங்குகிற அளவுக்கு அவரது எழுத்தின் மேல் பிரியம் கூடியிருந்தது. ரப்பர், பி.கேசவதேவின் அண்டை வீட்டிற்கு நிகரான நாவல். தமிழுக்கு புதிய வரவு. ஜெயமோகன் என்கையில் அசுரன் என்கிற வார்த்தையை அவரது பல இயக்கங்களுக்கு முன்னொட்டாகச் சேர்க்கலாம். அசுர வாசிப்பு, அசுர நினைவாற்றல், அசுரப் பயணம், அசுர எழுத்து, என்று நிறைய சேர்த்துக் கொள்ளலாம். இதில் மறக்காமல் சேர்க்க வேண்டிய ஒன்று அசுர அன்பு. என்னிடமும் என் எழுத்துக்களிடம் அப்படி ஒரு அன்பு காட்டியவர். அவர் மட்டுமல்ல, அருண்மொழி, அஜிதன் எல்லோரும் எங்கள் குடும்பத்தோடும் என்னோடும் அன்பு காட்டுகிறவர்களாகவே இருக்கிறார்கள். "இப்போது பார்க்கையில் நம்ம  பாரதிக்கு (என் மகள்), அருண்மொழியின் ஜாடை வந்தது போலிருக்கிறதல்லவா’’ என்று நானும் என் மனைவியும் பேசிக் கொள்வோம்.


நான் குற்றாலத்தில் கவிதைப் பட்டறைகளை பிரம்மராஜனுடன் சேர்ந்து நடத்த ஆரம்பித்த பின் எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடக்கிற ஒரு மனோபவத்தை வளர்த்துக் கொண்டேன். (சில விரிசல்கள் இருக்கலாம், நிச்சயமாக உரசல்கள் இல்லை) ஏனென்றால் அந்தச் சந்திப்புகளின் மூலமாக எத்தனையோ பேர் எனக்கும், எத்தனையோ பேருக்கு நானும் நெருக்கமானவர்களாக ஆனோம். முதலில் கவிதைக்கு மட்டுமேயான பயிலரங்காக இருந்த கவிதைப்பட்டறை, 1993-இல் ஒரு மாற்று வடிவம் எடுத்தது. கவிதை சிறுகதை நாவல் என்று விரிவான இலக்கியக் கருத்தரங்காக மாற்றம் பெற்றது. அதில்தான் ஜெயமோகன் கலந்து கொண்டார் என்று நினைவு.


அதற்குப் பிறகு பல குற்றாலம் அரங்கிற்கு அவர் வந்திருக்கிறார். இடைகால் வீட்டிற்கு வந்திருக்கிறார். நாங்கள் அவரது பத்மனாபபுரம் வீட்டிற்கு போயிருக்கிறோம். ஒரு ஜனவரி முதல்தேதி கன்னியாகுமரி சுசீந்திரம் எல்லாம் போய்விட்டு மதிய உணவிற்கு, அசாத்தியப் பசியோடு மிகத் தாமதமாக போனோம். பசியோடு போனது நல்லதாய்ப் போயிற்று. அவ்வளவு பிரமாதமாகவும், விதவிதமாகவும் சமைத்து வைத்திருந்தார்கள் இருவரும். 


மலையாள கவிஞர்களுடன் கலாப்ரியா, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், அருண்மொழி நங்கை


என்னுடைய கவிதைகளின் மொத்தத் தொகுதி ஒன்றை தமிழினி வசந்தகுமார் பதிப்பிக்க முன் வந்தார். அதற்கு ஒரு முன்னுரை எழுதும்படி ஜெயமோகனிடம் கேட்டேன். அவர் என் கவிதைகள் குறித்தும் பொதுவாக கவிதையியல் குறித்தும் நாங்கள் சந்திக்கிற போதெல்லாம் விரிவாகப் பேசுவார். ஆனால் அவர், நீங்க ஒரு சீனியர் உங்க கவிதைகளுக்கு முன்னுரை எழுதுவது சரியானது இல்லை. நான் உங்கள் கவிதைகள் பற்றிய என் மொத்த மதிப்பீட்டைப் பற்றி ஒரு கட்டுரை போல எழுதுகிறேன் என்றார். அதற்காக என் வீட்டிற்கு வந்து ஒரு பகலும் ஒரு இரவும், மறு நாள் மதியம் வரையிலும் பேசிக் கொண்டிருந்தார். குற்றாலம் தரம்ராஜன் நான் அவர் மூன்று பேரும்  அமர்ந்தபடி, குளத்தோரமாக நடந்தபடி, இரவில் மொட்டை மாடியில்  படுத்துக் கொண்டு என்று சுமார் இருபது மணி நேரமாவது பேசியிருப்போம். என்னுடையவும் பலருடைய பல கவிதைகளையும் நினைவிலிருந்தே எடுத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசியது எல்லாவற்றையும் நினைவில்தான் பொதிந்து கொண்டிருக்கிறார் என்பது அந்தக் கட்டுரையை எழுதிய பின்னரே தெரிந்தது.


என் கவிதைகள் குறித்து தமிழவன் படிகள் இதழில் எழுதிய கட்டுரைக்கு அடுத்து இன்றைக்கும் ஜெயமோகனின் கட்டுரை விரிவும் ஆழமுமான ஒன்று. அந்த நூற்றிச் சொச்சம் பக்கங்களில் அவர் எழுதிய கட்டுரையின் கையெழுத்துப் பிரதியினை வசந்தகுமாரிடம் கேட்டு வாங்கி வைத்திருக்கிறேன். அது என்றில்லை, 1997 என்று நினைவு, குற்றாலம் என் வீட்டில் நடை பெற்ற முதல் தமிழ் - மலையாளக் கவிஞர்களின்  கவிதைக் கூடல் குறித்த அனைத்துக் கடிதங்களையும், மொழி பெயர்ப்புகளையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அதற்குத்தான் எவ்வளவு ஈடுபாட்டோடு கடிதங்கள் எழுதி தகவல் பரிமாறிக் கொள்வோம்! பங்கு பெறுவோரின் தமிழ்க் கவிதைகளை மலையாளத்திலும் மலையாளக் கவிதைகளை தமிழிலும்  கையால் எழுதி Manifold sheet-இல் கார்பனை வைத்துப் பிரதியெடுத்து ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைத்து, அவ்வளவு பேரையும் ஒன்று சேர்த்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து... அதுதான் எனக்குப் பிடித்த ஜெயமோகன். அத்தனை பிரதிகள் எடுக்க எவ்வளவு அழுத்தமான கை தேவை என்று நானும் என் மனைவியும் வியந்து போனோம். அந்த ‘அழுத்தமும்’ பிடிவாதமும்தான் ஜெயமோகன்.


ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, தேவதேவன், நான், யுவன், மனுஷ்யபுத்திரன், ராஜீவன், கல்பற்றா நாராயணன், வீரான் குட்டி, அன்வர், பி..பி.ராமசந்திரன், ராமன் என ஒரு இருபது பேர் ஆத்மார்த்தமாக பங்கெடுத்துக் கொண்டதோடு, தமிழ்க் கவித்துவத்தை மலையாள நண்பர்களிடமும் அவர்களது கவித்துவத்தை எங்கள் மத்தியிலும் ஆழமாக விதைக்க வழி செய்தார். தமிழ்க் கவிதைகளின் பாதிப்போடு சென்றவர்கள் மலையாள இதழ்களில் தங்கள் புதிய கவிதைகளை எழுதியபோது அதை 'இது பைத்தியக்காரத்தனம்' என்றே வர்ணித்தார்கள், 'குற்றாலம் எஃபெக்ட்’ என்ற பதச் சேர்க்கையோடு. அந்த மொழிபெயர்ப்பு எல்லாவற்றையும், தமிழினி, வசந்தகுமார், சமீபத்திய மலையாளக் கவிதைகள் என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்தார். அதை அடுத்த ஆண்டு நடை பெற்ற பதிவுகள் பட்டறையில் வெளியிட்டோம். அந்தப் பட்டறையின் முக்கிய அம்சமே, மலையாள, கன்னட, தமிழ்க் கவிதைகளின் மொழி பெயர்ப்புக் கூடுகைதான். அதற்கும் ஜெயமோகனின் உழைப்பும் பிரயாசையும் சொல்லில் அடங்காதது.


அதைத் தொடர்ந்து ஊட்டி நாராயண குருகுலத்தில் ஒரு கவிக்கூடுகை நடத்தினார். அப்புறம் கன்னியாகுமரியில் யுவன் கவிதைகள் குறித்து ஒரு இரண்டு நாள் அரங்கம், நெடுமுடியில் கல்பற்றா நாராயணன் கவிதைகள் குறித்து இரண்டுநாள் அரங்கம் என்று நான் கலந்து கொண்ட அரங்கங்கள் மன நிறைவானவை.


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக கோவையில் நடைபெற்ற முதல்கூட்டமே என்னுடைய படைப்புகள் பற்றிய கூட்டம்தான். அதுதான் பின்னால் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவாக பரிணாமம் அடைந்தது. என்னுடைய கூட்டம் என்பது ‘சீக்கிரமே போடப்பட்டுவிட்ட தமிழ்நாட்டின் பழைய மீட்டர் கேஜ் ரயில்ப் பாதைகள் போல.’ பரிசுத் தொகையோ, விருதோ, கலகலப்பான உரையாடல்களோ இல்லாதது.  எனக்கு அந்த விருது பற்றியோ விழா பற்றியோ ஒரு ஆவலாதியும் இல்லை. ஏனெனில் ஜெயமோகனின், அவரது குடும்பத்தினரின் அன்பும் நட்பும் அவரது அரசியலை மீறிய பெரிய விருது. அதை நான் ஏற்கெனவே பெற்று விட்டேன்.

***

விஷ்ணுபுரம் நாவலும் எனது வாசிப்பு அனுபவங்களும் - ந. முருகேச பாண்டியன்

 


புகைப்படம் நன்றி கீற்று 
"…இந்த விஷ்ணுபுரத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு எண்ணமும் ஒரு சருகு மல்லாந்து படுக்கும் அசைவும்கூட மீண்டும் நிகழும். இந்த விஷ்ணுபுரமே இடைவிடாது காலப்பெருக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தியான மந்திரம்தான். ஒரு சொல் பிறக்கும்; ஒலித்து ஓய்ந்து மௌனத்திற்குத் திரும்பும். மறு சொல் பிறந்து வரும். யாருடைய தியானம் இது?”

                                                                            I

1998-ஆம் ஆண்டு. காலச்சுவடு பத்திரிகை திருநெல்வேலி நகரில் நடத்திய புத்தக விமர்சனக் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் காற்றில் கலந்த பேரோசை, ஜெயமோகனின் விஷ்ணுபுரம், எஸ். ராமகிருஷ்ணணின் காட்டின் உருவம் ஆகிய புத்தகங்கள் இடம் பெற்றன. நான் சு.ரா.வின் கட்டுரைப் புத்தகம் குறித்து பேசினேன். ஜெயமோகன் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்ல. விஷ்ணுபுரம் நாவல் பற்றிய பேச்சுக்களை அங்குதான் முதன்முதலில் கேட்டேன். தாடிக்காரக் கவிஞர் கொஞ்சம் போதையுடன் கூட்ட அரங்கில் நுழைந்து விஷ்ணுபுரம் நாவலின் பெயரைச் சொல்லி, சலம்பிக் கொண்டிருந்தார். நண்பர் கண்ணன் நடத்திய முதல் இலக்கியக் கூட்டம் என்று நினைக்கிறேன். கவிஞரின் செயலால் கூட்டத்தினர் எரிச்சல் அடைந்தனர். கவிஞரை சமாதானப்படுத்தி, அரங்கின் வெளியே அழைத்து வந்தேன். அவர் விஷ்ணுபுரம் நாவலை வாசித்துவிட்டாரா என்று கேட்டேன். 'இல்லை' என்று தலையை அசைத்த கவிஞர், நாவலின் பெயரே தப்பு, பெருமாள்புரம் என்று இருந்திருக்க வேண்டும், விஷ்ணுபுரம் என்ற பெயர் பார்ப்பனியத்தை தூக்கிப் பிடிக்கிறது என்றார். ஒரு பிரதியை வாசிக்காமல் அட்டையைப் பார்த்து அபிப்ராயம் சொல்கிறவர்கள், யாரோ ஒருவர் படைப்பு பற்றிச் சொன்ன மேற்கோளை அப்படியே தன்னுடைய கருத்து போல பொதுவெளியில் உரத்து முழங்குகிறவர்கள்… இப்படி நிறைய பேரை பார்த்திருக்கிறேன். சரி, போகட்டும். பதினான்கு வயதில் நாத்திகனாகி, சாதி, சமயம், சாஸ்திர சம்பிரதாயம், சடங்கு எதிர்ப்புடன் இன்றுவரை செயல்படுகிற எனக்கு விஷ்ணுபுரம் என்ற பெயர் முதலில் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. இந்திய வரலாறு முழுக்க மனித உடல்களுக்கும் மனங்களுக்கும் வைதிக சநாதனம், மனு தருமம், வருணாசிரமம் ஏற்படுத்திய/ ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சேதங்கள் காரணமாக அவற்றை எதிர்க்கிற மனநிலை எனக்குள் இப்போதும் பொதிந்துள்ளது. எனினும் நான் ஏற்கனவே வாசித்திருந்த ஜெயமோகனின் ரப்பர் நாவல் மீதான ஈடுபாடு காரணமாக விஷ்ணுபுரம் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். நாவல் பற்றி நிலவுகிற முன்கூட்டிய அபிப்ராயங்களை பொருட்படுத்தாமல் பிரதியை வாசித்து எனக்கான அசலான கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதுதான் எனது அணுகுமுறை. அந்தமுறையில் விஷ்ணுபுரம் நாவலை வாசித்தேன். நாவலின் பிரமாண்டம் என்னை முடிவற்ற சுழலுக்குள் இழுத்துப் போனது. நந்தனாருக்காக பூதகணங்கள் ஓரிரவில் வயலில் அறுவடை செய்ததுபோல எது ஜெயமோகனுக்குள் புகுந்து வரலாற்றையும் புராணத்தையும் தத்துவத்தையும் கலந்து கவித்துவமான மொழியில் விஷ்ணுபுரம் நாவலை எழுத வைத்தது என்ற கேள்வி தோன்றியது. எண்ணூறு பக்க அளவிலான நாவல் என்பதைவிட நாவலில் விவாதிக்கப்படும் மனித இருப்பு குறித்த முடிவற்ற விஷயங்கள், வாசிப்பில் உருவாக்கிடும் அனுபவங்கள் முடிவற்று நீள்கின்றன.


விஷ்ணுபுரம் நாவல் சித்திரிக்கிற மதத் தத்துவங்கள் சரியானவை அல்ல; பௌத்த மதக் கருத்துகளில் முரண்கள் உள்ளன; நாவலில் வரலாற்றுப் பிழைகள் இருக்கின்றன என்று நாவல் பற்றிய விமர்சனப் பார்வை ஏற்புடையது அல்ல. ஏனெனில் விஷ்ணுபுரம் ஜெயமோகன் கற்பனையில் உருவான நகரம். அங்கு ஹரிததுங்கா மலை, சோனா ஆறு, பழங்குடியினர், வைதீகர்கள், பாண்டிய மன்னன் என புனைவில் விரிந்திடும் கதைக்களத்தில் மாபெரும் கோயில் கோபுரம், மேகத்தைத் தழுவி உயர்ந்து நிற்கிறது. கோவிலின் கருவறைக்குள் கிடந்த கோலத்தில் இருக்கிற சிலையை பெரு மூப்பன் சிலையென்று பழங்குடியினரான காணிக்காரர்களும் விஷ்ணு சிலையென்று வைதீகர்களும் நம்புகின்றனர். அதீத கற்பனைகளும் மிகையான புனைவுகளும் யதார்த்தக் கதைசொல்லல்களும் விநோதங்களும் நிரம்பிய விஷ்ணுபுரம் நாவல் எழுதப்பட்ட முறைமையில் புராணத்தன்மை தோய்ந்துள்ளது. மூன்று பகுதிகளாக சொல்லப்பட்டுள்ள கதைசொல்லலில் தொன்மமும் யதார்த்தமும் விரவியுள்ளன. படைப்பாளிக்குரிய அதிகபட்சமான படைப்பு மனநிலையும் உத்வேகமும் ஒத்திசைந்திட ஜெயமோகன் எழுதியதுதான் விஷ்ணுபுரம் நாவல்.


மதங்கள், தத்துவங்கள் பின்புலத்தில் கடந்த காலத்தை மீட்டுருவாக்கிட முயன்ற ஜெயமோகன் அடிப்படையில் ஆன்மீகத் தேடலுடன் இயங்கியுள்ளார். ஆனால், அவருடைய விருப்பு வெறுப்பற்ற தேடல், ஒருபுள்ளியில் இதுவரை எல்லா மதங்களும் உருவாக்கியிருக்கிற நிறுவனங்களையும் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது; அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒருநிலையில் விஷ்ணுபுரம் நாவலின் கதையாடல், இன்மை அல்லது சூன்யத்தை நோக்கி நகர்ந்திடும்போது நாத்திகத்தை முன்னிறுத்துகிறது. அதுதான் உண்மை. ஜெயமோகன் விஷ்ணுபுரம் நாவலை எழுதத் தொடங்கியபோது இந்திய வரலாறும் மெய்யியலும் ஏற்படுத்திய தாக்கத்தினால் ஏதோ சந்நதம் வந்ததுபோல எழுதிட முயன்றிருக்கிறார். ஒருகட்டத்தில் நாவல் பிரதி அவரிடமிருந்து விலகி, தனித்து, தானியங்கி எழுத்தாக விரிந்துள்ளது. அவருக்குள் கொப்பளித்த ஞானத்தேடல்தான் விஷ்ணுபுரம் நாவலின் மூலவித்து. அதேவேளையில் அவருக்குள் பொதிந்திருந்த படைப்பு நேர்மையினால் கதைசொல்லலில் மதம் சார்ந்த எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அதுதான் விஷ்ணுபுரம் நாவலின் முக்கிய அம்சம். ஜெயமோகன், விஷ்ணுபுரம் நாவல் எழுதிட யோசித்தபோது அவருக்குள் பொதிந்திருந்த நோக்கத்தையும் மீறி நாவல், தனக்கான வெளியில் தன்மூப்பாக விரிந்துள்ளது. அதியற்புத ஆற்றலைப் பற்றி பக்கம் பக்கமாக விளக்கப்பட்டிருந்தாலும் ஒருவிதமான அவநம்பிக்கையும் இன்மையும் பருண்மையாக நாவலின் பக்கங்களில் வெளிப்பட்டுள்ளன. தேர்ந்த வாசகன், ஞானம் என்ற பெயரில் வைதிக மரபு காலங்காலமாக அதிகாரத்துடன் கைகோர்த்துச் செய்கிற மனிதகுல விரோதமான அம்சங்களை நாவலின் கதையாடலில் எளிதில் கண்டறிந்திட முடியும். அதேவேளையில் வேறு வகைப்பட்ட வாசிப்பின்மூலம் விஷ்ணுபுரம் நாவல், வைதிக சநாதனத்திற்கு வக்காலத்து வாங்குகிறது என்று நிறுவிடவும் முடியும். 


காப்பியமாக நூற்றுக்கணக்கான மாந்தர்கள், கிளைக்கதைகள், சம்பவங்கள் என விரிந்திடும் விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பின் வழியாக உருவாக்குகிற கருத்தியல்கள்தான் முக்கியம். தொடர்ச்சியறு எழுத்து விவரிப்பில் நாவல் சித்திரிக்கிற சம்பவங்கள், புனைவு எழுத்துக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிற வேளையில் அதற்கு எதிரான போக்குகளையும் முன்னிறுத்துகின்றன. விஷ்ணுபுரம் நாவல் உண்மையாக நடந்த வரலாற்று நிகழ்வு என்ற நம்பிக்கையில் பலரும் கதைப்பதை கடந்த பதினான்கு ஆண்டுகளாக கவனித்துள்ளேன். அந்தப் பின்புலத்தில் சிலர் நாவலைக் கொண்டாடவும் சிலர் தூற்றவும் செய்கின்றனர். விஷ்ணுபுரம் வரலாற்றை மீட்டுருவாக்கிடும் நாவல் அல்ல. வரலாற்றுப் பின்புலத்தில் கடவுளை முன்னிறுத்தி மெய்யியல் விசாரணையுடன் இப்படியெல்லாம் மனிதர்கள் இருந்தனர் என்று சித்திரிக்கிற ஜெயமோகனின் எழுத்து, உண்மையில் நடந்த சம்பவங்கள் என்ற நம்பிக்கையை வாசிப்பில் ஏற்படுத்துகிறது. பின்நவீனத்துவம் முன்வைக்கிற பல்வேறு வரலாறுகளில் விஷ்ணுபுரம் பிரதி மூலம் ஒருவிதமான வரலாறு வெளிப்படுகிறது. அவ்வளவுதான். 


கடந்த காலத்தின் நினைவுகளாக பதிவாகியிருக்கிற தொன்மக் கதைகள், இலக்கியப் படைப்புகளில் தொன்மங்களாக உறைந்திருக்கின்றன. தொன்மம் என்றால் பழங்கதை அல்லது கட்டுக்கதை என்று பொருள். முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற கடவுளர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற அதியற்புதச் சம்பவங்களை உள்ளடக்கிய புனைவுகளின் தொகுப்பாக விளங்கும் ’புராணம்’ என்ற சொல்லுக்குக் ‘கடந்த காலத்தின் கதை’ என்று பொருள். படைப்புகளின் வழியாக தொன்மக் கதையாடல், அடுத்தடுத்த தலைமுறைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. விஷ்ணுபுரம் நாவல் தொன்மக் கதையாடல்களின் தொகுப்பாக விரிந்துள்ளது. நாவல் கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் பின்புலத்தில் எழுதப்பட்டது என்ற எண்ணம்தான் கதையாடல் பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்கு அடிப்படை. ஆன்மா அழிவற்றது, மறு பிறவி போன்ற நம்பிக்கைகள் அழுத்தமாக நிலவுகிற இந்தியச் சமூகத்தில் மகாபாரதமும் இராமாயணமும் முன்னர் எப்பொழுதோ நடைபெற்றவை என்று நம்புகிற சராசரி இந்தியனின் பொதுப்புத்திதான் விஷ்ணுபுரம் நாவலையும் முன்னர் நடந்த கதை என்று நம்புகிறது. இந்த நம்பிக்கை விஷ்ணுபுரம் நாவலுக்கு இதிகாசத்தன்மையை உருவாக்கியுள்ளது. ஆனால், காத்திரமான வாசிப்பின்மூலம் ஜெயமோகன், நாவலின் கதையாடல் மூலம் சித்திரிக்க விழைகிற உலகை கண்டறிய முடியும். 


கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில்கள், கர்நாடக மாநிலத்தில் ஹம்பி, பாதாமி கோவில்களின் சிதலங்களை இன்று காண்கிறபோது, பண்டைக் காலத்தில் ஏன் மனிதர்கள் இவ்வளவு பிரமாண்டமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர் என்ற கேள்வி தோன்றும். வெறுமனே கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல. கடவுளை முன்வைத்து மத நிறுவனத்தின் மேலாதிக்க அரசியல் உச்சத்தை நிறுவிட கோவில்கள் அடையாளமாக தேவைப்பட்டன. அமானுடம், அதியற்புத ஆற்றல், விநோதம், மர்மம் என்று கட்டமைக்கப்படுகிற சமய அரசியல் காலந்தோறும் தொடர்ந்திடும்போது புதிது புதிதாக கோவில்களும் கட்டப்பட்டன. விளிம்புநிலையினருக்கு உணவு மட்டும் தந்தால் போதும் கோவில்களை கட்டுவதற்கு கொத்தடிமைகளாக கடவுளின் பெயரில் விசுவாசமாக உழைத்தனர். இந்தப் பின்புலத்தில் ஜெயமோகன் சித்திரித்துள்ள பிரமாண்டமான கோவில்கள், கோபுரங்கள் கட்டுமானத்தை புரிந்துகொள்ள முடியும். வரலாற்றில் முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களை ஆராய்ந்திடும்போது அவை நடப்பில் புரியாத புதிர்களாகின்றன. ஒருநிலையில் ஜெயமோகன் துப்பறிவாளர் போல விஷ்ணுபுரம் பிரதியை முன்வைத்து வரலாற்றின் பக்கங்களில் தேடியலைந்து, கோவில் பின்புலத்தில் கண்டறிந்து பதிவாக்கியுள்ள தகவல்கள், சுவாரசியமானவை. 


திருவேங்கட மலையிலுள்ள கோவிலில் காட்சி தருகிற வெங்கிடாசலபதி முன்னர் பழங்குடியினர் வழிபட்ட பெண் தெய்வத்தின் சிலை என்றும் அதை கைப்பற்றிய வைணவர்கள் வெங்கிடாசலபதியாக மாற்றி விட்டனர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. கேரளப் பழங்குடியினரின் கடவுள்தான் ஐயப்பன் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவைபோன்ற கடவுளர் கதைகள் கோவில்களை முன்வைத்து காற்றில் மிதக்கின்றன. கோவில் கருவறைக்குள் நுழைந்து கல்லினாலான சிலைக்கு பூசை செய்கிற உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உண்டு. பார்ப்பனரைத்தவிர பிற சாதியினர் பூசை செய்தால் அது கடவுள் இல்லை, வெறும் கல் என்ற பேச்சு, வரலாறு முழுக்க ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கர்ண பரம்பரைக்கதையான பள்ளி கொண்டிருக்கிற விஷ்ணு திரும்பிப் படுக்கும்போது பிரளயம் ஏற்படும் என்ற தகவலை முன்வைத்து ஜெயமோகன் விஷ்ணுபுரம் நாவலை எழுதியிருப்பது தற்செயலானது அல்ல. காலங்காலமாக பெரும்பாலானவர்கள் எல்லாம் தலைவிதி என்று எளிதில் பிரச்சினையை கடந்து சென்றனர். சிலர் மட்டும் விலகி நின்று காலம், வெளி, பூமி, பிரபஞ்சம், ஐம்பூதங்கள், மனிதன், பிற உயிரினங்கள் என்று யோசித்துக் குழம்பினர். சிலர் கபடமும் சூழ்ச்சியும் தந்திரமும் கலந்து மதத்தைக் கட்டமைத்து அதிகாரத்தை நிறுவினர். மத நிறுவனம் அடக்குமுறையாகவும் அதிகாரமாகவும் மாறிய இன்றைய சூழலில் அதற்கு எதிராகவும் மாற்றாகவும் மெல்லியதாக ஆன்மீகம் என்ற பெயரில் மயிலிறகினால் வருடுவது இன்னொருபுறம் நடைபெறுகிறது. ஜெயமோகன், ஆன்மீகம் என்ற பெயரில் முன்வைத்திட முயலுவது, கதையாடலில் வலுவானதாக இல்லை. 


ஜெயமோகன் விஷ்ணுபுரம் நாவல் மூலம் மதங்களை முன்வைத்து இந்திய ஆன்மீக மரபு, மத வரலாறு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளார். வைதிக சநாதனத்தின் மீது ஜெயமோகனுக்கு கடுமையான எதிர்ப்பு மனநிலை இருக்கிறது. மத அதிகாரத்தின் மூலம் பாண்டிய மன்னனை இரண்டாம் நிலைக்குத் தள்ளுகிற வைதிகத்தின் இன்னொரு முகம் கவனத்திற்குரியது. வைதிகத்தின் உச்சமாக விஷ்ணுபுரம் கோவில் கோபுரங்களை சித்திரிக்கிறவேளையில் இலவசமாக வழங்கப்படுகிற உணவை உண்ணுகிற பார்ப்பனர்களின் அற்பச் செயல்கள் கேவலமான முறையில் நாவலில் பதிவாகியுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட கேரளக் கோவில்களின் ஊட்டுப்புரைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களுக்கு மட்டும் இலவசமாக உணவு வழங்கியதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.


அண்மையில் ஏழெட்டு நாவல்கள் எழுதியுள்ள நாவலாசிரியர் ஒருவர் என்னிடம் விஷ்ணுபுரம் நாவல் வைதிக சநாதனத்திற்கு சார்பாக பார்ப்பனியத்திற்கு வக்காலத்து வாங்கும் நாவல் என்று எரிச்சலுடன் சொன்னார். நான் விஷ்ணுபுரம் வாசித்தீர்களா? என்று கேட்டவுடன் அமைதியானார். ’நாவலை முழுக்க வாசிக்க முடியலை’ என்றார். அந்த நண்பர் இஸ்லாமியர். தமிழ் நாவல்களில் வைதிக சநாதனம், மனுதருமம், பார்ப்பனியத்திற்கு எதிரான நாவல்கள் குறித்து யோசித்தேன். திராவிட இயக்கத்தினர் எழுதியுள்ள நாவல்களில் வைதிக சநாதனத்துக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அது சரி, எத்தனை இஸ்லாமியப் படைப்பாளர்கள் தமிழில் இஸ்லாம் மதத்தை விமர்சித்து எதிர்மறையாக நாவல்கள் எழுதியுள்ளனர் என்று திடீரெனத் தோன்றியது. யாரும் இல்லை. அதிகபட்சம் தர்ஹா வழிபாடு, பட்டானி-ராவுத்தர்-லெப்பை பிரிவு வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பதற்கு அப்பால் இஸ்லாமியர் எழுதிய நாவல்கள் வேறு எதையும் சித்திரிக்காது; இஸ்லாம் மதத்திற்கு எதிரான விவாதம் ஒலிக்காது; நாத்திகம் பற்றிய பேச்சு இருக்காது. மதம் என்பது அபின் போன்ற போதை வஸ்து என்ற புரிதல் இருக்குமெனில் அது இஸ்லாமுக்கும் பொருந்தும்தான். இப்படியான தமிழகச் சூழலில் விஷ்ணுபுரம் நாவல் இளைய தலைமுறையினரிடம் இன்றைக்கும் பேசுபொருளாக இருப்பது, நாவல் தானாக உருவாக்கியதுதான். ஜெயமோகன் என்ற பெயரை நாவலில் இருந்து நீக்கிவிட்டாலும் இதிகாசத்தன்மை காரணமாக நாவல் காலங்கடந்து நிலைத்திருக்கும்.


அகரம் பதிப்பகம் வெளியிட்ட விஷ்ணுபுரம் நாவல், புத்தகக் கண்காட்சியில் ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான விஜயபாரதம் ஸ்டாலில் விறபனையானது; ஆர்.எஸ்.எஸ். நிதியுதவியில் விஷ்ணுபுரம் வெளியானது. ஜெயமோகன் மேனாள் ஆர்.எஸ்.எஸ்.காரர்... இப்படி விஷ்ணுபுரம் நாவலின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை கடந்த ஆண்டுகளில் கேட்டிருக்கிறேன். அவை உண்மையாக இருந்திட வாய்ப்புண்டு. ஜெயமோகன் இந்துத்துவா அரசியலுக்குச் சார்பாக கட்டுரைகள் எழுதுகிறார். எனவே விஷ்ணுபுரம் நாவல் இந்துத்துவாவிற்குச் சார்பான பிரதி. இப்படியான விமர்சனங்களுக்கும் விஷ்ணுபுரம் நாவலுக்கும் தொடர்பு இல்லை. படைப்பாளி இறந்துவிட்டான் என்ற பின்நவீனத்துவக் குரல், விஷ்ணுபுரம் நாவலுக்கும் பொருந்தும். என்னைப் பொறுத்தவரையில் ஜெயமோகன் எழுதி முடித்தவுடன் விஷ்ணுபுரம் பிரதி அவரிடம் இருந்து பிரிந்துவிட்டது. பிரதி என்ற நிலையில் கருத்தியல்ரீதியில் அந்த நாவல் மீதான விமர்சனங்களுக்கு மட்டும் ஜெயமோகன் பொறுப்பு. மற்றபடி கடந்த 14 ஆண்டுகளில் ஜெயமோகன் செய்த/செய்கிற அரசியல் செயல்களுக்கும் கட்டுரைகளுக்கும் பேச்சுகளுக்கும் 1997-ஆம் ஆண்டு வெளியான விஷ்ணுபுரம் நாவல் எப்படி பொறுப்பாகும்?


ஜெயமோகன் 60 சிறப்பு மலரில் வெளியிட சுனில் கிருஷ்ணன் கட்டுரை கேட்டபோது எழுதுவதாக ஒப்புக்கொண்டேன். பதினான்கு வருடங்களுக்குப் பின்னர் விஷ்ணுபுரம் நாவலை மீண்டும் வாசிக்கும்போது புதிய உலகில் பயணித்தேன். நாவலில் முடிவற்று நீள்கிற மொழியிலமைந்த விவரிப்பு முறைக்குள் மூழ்கிட நேர்ந்தது. மொழியின் அலகிலா விளையாட்டுடன் ஜெயமோகன் எழுதியுள்ள விஷ்ணுபுரம் பிரதி, பிரமிப்பையும் வியப்பையும் தந்தது. மெய்யியல் விவரிப்புகள், யதார்த்தச் சம்பவங்கள், இயற்கை வருணனை என ஓவ்வொன்றுக்கும் தனிப்பட்ட மொழியைக் கையாள்வது ஜெயமோகனுக்கு இயல்பாக அமைந்துள்ளது. மொழியின் உச்சபட்ச சாத்தியங்களுடன் நாவல் எழுதுவது எப்படி வாய்த்தது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அப்பொழுது மதுரைப் பக்கத்து வட்டார மொழியில் ’மண்டை’ என்று செல்லமாக சொல்லத் தோன்றியது. 


                                                                                  II

1998-ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் நாவல் பற்றி எழுதிய கட்டுரையை காலச்சுவடு உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு அனுப்பி, பிரசுரிக்க முயன்றது இயலவில்லை. அந்தக் காலகட்டத்தில் இலக்கியப் பத்திரிகைகள் நிரம்ப இல்லை. 2003-ஆம் ஆண்டு மருதா பதிப்பகம் வெளியிட்ட எனது ’பிரதிகளின் ஊடே பயணம்’ நூலில் விஷ்ணுபுரம் கட்டுரை இடம் பெற்றுள்ளது. பதின்மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வாசித்த விஷ்ணுபுரம் நாவல் தந்த மனப்பதிவுடன் முன்னர் எழுதிய விமர்சனத்தை வாசித்தபோது என்னுடைய முந்தைய மதிப்பீடு, இன்றைக்கும் பொருந்துவதை அறிய முடிந்தது. பெரும்பாலான வாசகர்களால் அறியப்படாத அந்தக் கட்டுரை சிறிய திருத்தங்களுடன் இங்கு மறுபிரசுரமாகிறது. விஷ்ணுபுரம் நாவலின் எனது முதல் வாசிப்பும் மறுவாசிப்பும் ஒருவகையில் ஒத்திசைந்து இருக்கின்றன. 


சமயங்களின் புனைவுகளும் தருக்கங்களும்


ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியெனில் புனைவு/நிஜம் கதைசொல்லல் முழுக்கப் பரவியிருக்கும். அதிலும் புராணம் கலந்த கதையெனில் கதையாடல் வரம்பற்றுக் கரை புரண்டோடும். படைப்பாளியின் விருப்பு வெறுப்பினுக்கேற்ப பொய்மான் கரடு உருவாகும். ஜகஜாலக்கதைகள் சொல்லுவதில் கில்லாடித்தனம் இருந்தால் போதும், சொற்களுக்கு சிறகுகள் முளைத்துவிடும். புராணக்கதையின் கூறுகளை நவீனமொழியில் புனைகதையாக்குவது தமிழுக்கு ரொம்பப் பழசு. புதுமைப்பித்தன் தொடங்கி பலரும் நம்பகத்தன்மையற்றதும் வரலாறு சாராததுமான கதைகளை கையாண்டுள்ளனர். பழங்கதைகளும் புராணக் கதைகளும் படைப்பாளிக்கு புதிய அர்த்தங்களை தருகின்றன. புராணமோ வரலாறோ சொல்லின் வழியே பொங்குகிறது. குடுமியான் மலைக்கோவில் முகமண்டபத்துத் தூணில் செதுக்கப்பட்டுள்ள கல்சிற்பம் போதும். கதைக்கான மூலஊற்று கொப்பளிக்கும். உளியால் செதுக்கப்பட்ட கல்லின் வழவழப்பு, உருவங்கள் வரலாற்றின் பக்கங்களுக்கு பார்வையாளனை அழைத்துச் செல்கின்றன. கல் வழியே புனைந்திடும் உலகு தொடர்ந்து கற்பிதமாகிக் கொண்டிருக்கும். நவீனப் புனைகதையுலகு வெளியெங்கும் புகையைப்போல பரவிக்கொண்டேயிருக்கும். 'விஷ்ணுபுரம்’ என்ற பிரதியை முன்வைத்து ஜெயமோகனுக்கு சொல்வதற்குதான் எத்தனை எத்தனை விஷயங்கள்? எவ்வளவு கதைகள்? இந்திய நிலப்பரப்பில் பல்வேறு காலகட்டங்களில் நிலவிய இறையியல், சமய மெய்யியல், சித்தாந்தங்கள், நுண்கலைகள் பின்புலத்தில் நாவலின் புனைவுத்தளம் விரிந்துள்ளது; சுவாரசியமான தகவல்களின் பொதியாகக் குவிந்துள்ளது. மானுடகுல வளர்ச்சியை கருத்தியல்களின் அடிப்படையில், சமூகவியல் நோக்கோடு படைப்பாக்க முயலுவது 'விஷ்ணுபுரம்’ நாவலில் நிகழ்ந்துள்ளது. படைப்பில் கருத்தியல்ரீதியான சொல்லாடலுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நம்பகத்தன்மையைத் தரும் தொடர்ச்சியான சம்பவங்களின் அடுக்குகளும், புனைவுப் பரப்புகளும் கருத்தியல் அழுத்தம் காரணமாக செறிந்துள்ளமையினால் நாவலின் கதையாடல் இறுக்கமாக உள்ளது. 


விஷ்ணுபுரம் நாவலின் பிரமாண்டம், வாசகனை பெருமூச்சடையச் செய்வதுடன் பிரமிப்பையும் தருகிறது. நாளது தேதியில் மெகாசைஸ் குப்பிகள் மூலம் நுகர்வோன் திணறடிக்கப்படும்வேளையில் விஷ்ணுபுரத்தின் பெரிய அளவிலான 800 பக்கங்கள் வாசகனுக்கு ஏற்படுத்தும் உணர்வுகள் முக்கியமானவை. மொழி மீதான ஜெயமோகனின் தொழில்நுட்ப ஆளுகை, நாவலை இலக்கைத் தாண்டியும் இழுத்துச் சென்றுவிட்டது. நாவல் என்பது காப்பிய மரபின் நீட்சி என்ற பார்வையும் காப்பியப் புனைவின் அதீதமும் விஷ்ணுபுரத்தின் ஆக்கத்தில் அடிப்படையாக உள்ளன. 


பாண்டிய மன்னரின் தலைமைக்குருவான அக்னிதத்தர் என்னும் பார்ப்பனர், மேற்குமலைத் தொடர்ச்சிப்பகுதியில் வாழும் பழங்குடியினர் பன்னெடுங்காலம் வழிபட்டு வந்த மூப்பனை, விஷ்ணுவாக்கியதுடன் விஷ்ணுபுரம் என்னும் பிரமாண்டமான நகரையும் உருவாக்குகிறார். வைதிக இந்து சமயம் செழித்தோங்குவதற்கு ஏற்றவகையில் ஐதீகங்களும் அற்புதங்களும் கட்டுக்கதைகளும் தொடர்ந்து கற்பிக்கப்படுகின்றன. பாண்டிய வேந்தர்களின் புனித நகராகக் கருதப்பட்ட விஷ்ணுபுரம் பின்னர் பௌத்தர்கள், ஜைனர்கள் போன்றோரின் ஆளுகைக்குட்படுகிறது. காலச்சுழற்சியில் கைவிடப்பட்டு சிறிய கிராமமான விஷ்ணுபுரம் இறுதியில் சோனா ஆற்று வெள்ளப் பெருக்கில் அழிகிறது. 


வைதிக இந்து சமயம், தனது மேலாண்மையை தக்க வைத்துக்கொள்ளச் செய்திடும் தந்திரங்கள், சூதுக்கள், புரட்டுகள், செயற்பாடுகளின் தளமாக விஷ்ணுபுரம் உள்ளது. குறியீட்டுநிலையில் விஷ்ணுபுரம் என்ற பெயர் பல்வேறு புனைவுகளை தரக்கூடியது. அது வழமையான நகரமல்ல; ஒவ்வொரு நொடியிலும் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் அதிகாரத்தின் வெளிப்பாடு. சூட்சுமமான சக்திகளின் இயக்கத்தில் மொத்த நகரத்தின் இயக்கமும் வலைப்பின்னலாக இணைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் தொன்மமாக மாற்றப்பட்டு மக்களிடையே உறைந்து தொடர்ந்து அழுத்தமான காட்சிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மதத்தை முன்வைத்திட்ட வைதீகர்கள், ஆட்சியாளர்களுடன் சகலவிதமான சமரசங்களையும் செய்து கொண்டிருக்கும் வேளையில் மக்களிடம் சாஸ்திர சம்பிரதாயங்களையும் வலியுறுத்துவதன்மூலம் நகரமானது வலுவாக இயங்குகிறது. வைதிக இந்து சமயத்தின் முதன்மை அங்கமாக விளங்கும் பார்ப்பனியம், பிறரை ஒதுக்குவதுடன், தன்னை பரந்துபட்ட அடித்தட்டு மக்களிடமிருந்து ஒதுக்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆட்சியதிகாரத்தினை தக்க வைத்துக் கொள்வதற்காக கருத்தியல்ரீதியில் மதத்தைப் பயன்படுத்தும் பார்ப்பனியத் தந்திரங்களையும், கபட முயற்சிகளையும் நாவல் முழுக்க நுட்பமாக ஜெயமோகன் சித்திரித்துள்ளார். 


பாண்டிய மன்னரின் ஆளுகைக்குட்பட்ட விஷ்ணுபுரத்தில் வைதிக இந்து சமயப் பிரதிநிதியான சூர்யதத்தரே சகல அதிகாரங்களுமுடையவர். வைதிக நெறியின் பேரில் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் அமல்படுத்தப்படுகின்றன. சமய நெறிகளுடன் இறைப்பணி ஆற்றுவதற்கான களம் போல விஷ்ணுபுரம் காட்சியளித்தாலும், பார்ப்பனிய அதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் திணறுகிறது. தேர்ச்சக்கர முட்டுக்கட்டையை உருவிய யானையினால் ஏற்பட்ட கோரச்சாவுகளுக்கு சூர்யதத்தர் வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. யானையைப் பராமரிக்கும் பார்ப்பனரான பிரம்மராயருக்கு பதினைந்து நாட்கள் சாதி விலக்கமும், பெருந்தச்சனுக்கு கண்கள் தோண்டப்பட்டு கை விரல்கள் நறுக்கப்படுவதும் தண்டனையாக விதிக்கப்படுகின்றன. இந்திய வரலாற்றில் சாதியின் பெயரால் இந்துத்துவம் வழங்கிவரும் தீர்ப்புகளின் தன்மைக்கு இவையே சான்றுகள். 


கவிஞர் சங்கர்ஷணனின் காவிய அரங்கேற்றத்தின்போது, தாசி பத்மாட்சி அவையேறக் கூடாது என முரண்டு பிடிக்கும் வைதிகக்குரல், இறுதியில் வேறு வழியின்றி தாசியின் அந்தரங்கம் சுத்தமானதெனில் அவிஸ் இன்றி ஆகவனீயாக்னி எரியட்டும் என்று நயவஞ்சகமாக பசப்புகிறது. அரக்கு வளையல்கள் மூலம் அக்னி தொடர்ந்து எரிந்தவுடன். பத்மாட்சியிடம் தோற்றுப்போன சூர்யதத்தர், தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக அவளை காவிய தேவதையாக்கி, மகாதர்ம மண்டபத்தில் அவளுக்கு சிலை வைப்பதன் மூலம், புதிய ஐதீகத்தை தோற்றுவிக்கிறார். வரலாறு என்பதே ஐதீகங்களின் குவியலோ என்று ஐயப்படுமளவு சம்பவங்களின் இட்டுக் கட்டுதலே நடைமுறை வாழ்க்கையாக உருவெடுக்கும்போது பகுத்தறிவின் தேவை அற்றுப்போகின்றது. இன்று தகவல்தொடர்பு ஊடகங்கள் வழியே தகவமைக்கப்படும் பொதுக் கருத்தியல்போல, பண்டைக்காலத்தில் சமயமானது, ஒவ்வொரு நிலையிலும் ஐதீகத்தையும் அற்புதத்தையும் வடிவமைத்து தன்னிருப்பை தக்க வைத்துக்கொண்டது. இதன் வெளிப்பாடாகவே விஷ்ணுதத்தன் செயல்பாடுகளை அவதானிக்கலாம். அவர் ஐதீகங்களைப் புனைவதன் மூலம் கட்டுக்கதைகள், போலி பிம்பங்கள் வழியே முன்னர் நடந்ததவை மீண்டும் மீண்டும் விஷ்ணுபுரத்தில் நடக்கும் என்று புதிய வகைப்பட்ட புனைவை உருவாக்குகிறார். காலந்தோறும் சமயத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான நெருக்கமான உறவினை நாவல் அழுத்தமாக பதிவாக்கியுள்ளது. "இந்நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது ஐதீகமாக மாற்றி பழமையில் இணைத்துவிடும்" என்று சூர்யதத்தர் சொல்வது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். 


'பால்வினை நோய் காரணமாக அழுகி துர் நாற்றமடிக்கும் உடலில் களிம்பைப் பூசிக்கொண்டிருக்கும் வேளையில் தாசிகளுடன் சல்லாபிக்கும் பாண்டிய மன்னனுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பார்ப்பனியக் கும்பல் வாழ்த்துவதை எப்படி பார்ப்பது? எந்நிலையிலும் சமூக அடுக்கில் தனது மேலாண்மையை தக்க வைத்துக்கொள்ள பார்ப்பனியம் செய்திடும் இழிநிலையின் வெளிப்பாடாகக் கருத முடியும். வேத அதிகாரம் மூலம் மனிதனை ஞானநிலைக்கு உயர்த்துவதாக பம்மாத்து பண்ணும் வைதிக இந்து சமயம், நடைமுறையில் அதிகாரத்தின் காலை நக்கிக்கொண்டு, சமூகத்தின் புற்றாக புரையோடிக் கிடப்பதனை கதையோட்டத்தில் ஆங்காங்கே விரிவாகச் சித்திரித்துள்ளார், ஜெயமோகன். சமயங்கள் சமூகத்தை சீரழித்ததுடன் மனித குல மேம்பாட்டினுக்கு எதிராக விளங்கிய வரலாற்றைச் சித்திரிப்பதில் ஜெயமோகனின் முயற்சி வெற்றியடைந்துள்ளது. இன்னொருவகையில் அவருடைய நேர்மையான கதை சொல்லலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 


மதங்களுக்கிடையிலான மோதல், வரலாறு முழுக்க முக்கியமான பதிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்கிடையில் மேல்கீழ் அடுக்குகளைக் கற்பிக்கும் இந்துத்துவமானது, ஒவ்வொரு காலகட்டத்திலும் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது. வைதிக இந்து சமயத்திற்கும் பௌத்தத்திற்குமான முரண்பாடு, விஷ்ணுபுரம் நாவலின் கதையோட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பௌத்த சமயத்தைச் சார்ந்த அஜிதர், வைதிக இந்து சமயத்தவரான பவதத்தருடன் ஞான சபையில் வாதப் பிரதிவாதம் செய்கின்றார். பல்வேறு சமயப் பிரிவுகளின் உட்குழுவினரும் கூடி தத்தம் கருத்துகளை உரைக்கின்றனர். அஜிதர் வெல்ல வேண்டுமெனில் ஜோதிபீடம் முழுமையாக எரிந்து சுடர்விட வேண்டுமென்றும் கிருஷ்ணப்பருந்து கொடி மரத்தில் அமர வேண்டுமென்றும் நிபந்தனைகள் சூரியதத்தரால் விதிக்கப்படுகின்றன. விஷ்ணுபுரத்தின் அதியற்புத வேலைகள் அனைத்தும் சிற்பிகளின் கைவேலை என்ற அடிப்படையில் நோக்கினால், அஜிதரின் வெற்றிக்கு பவதத்தரே காரணமாகிறார். அதிகாரத்தின் உச்சியிலிருக்கும் பவதத்தர், தன்னுடைய வீழ்ச்சிக்கு அவராகவே களம் அமைத்துக்கொண்டார் என்பது தருக்கநிலையில் ஏற்புடையதாக இல்லை. அதியற்புதச் செயல்கள் மூலம் விஷ்ணுபுரத்தை மாயவுலகிற்கு இட்டுச் சென்று, ஐதீகத்தை வாழ்வின் பகுதியாக்கிய வைதிக இந்து சமயம், தனது வீழ்ச்சிக்கு தானே வழி வகுக்குமா? யோசிக்க வேண்டியுள்ளது. 


அஜிதர் விஷ்ணுபுரத்தின் ஞானகுருவாகப் பொறுப்பேற்றவுடன் அவரது பெயரில் வணிகர்களின் துணையுடன் சந்திரகீர்த்தி அதிகாரம் செய்கிறான். பார்ப்பனர்கள் கொல்லப்படுவதும் துரத்தப்படுவதும் நடைபெறுகின்றன. அதிகாரத்தை கையிலெடுக்கும் மதம்தான் மாறுகிறது. மற்றபடி வைதிக இந்து சமயத்தின் பெயரால் நடைபெற்ற அடக்குமுறைகள், சட்டதிட்டங்கள், கெடுபிடிகள் போன்றவை தற்சமயம் புத்த மதத்தின் பெயரால் நடைபெறுகின்றன. மதமும் அதிகாரமும் இணைந்தால் நடைபெறும் கொடூரச் சம்பவங்களுக்கு எந்த மதமும் விலக்கு அல்ல என்பதை கதையாடல் நுட்பமாக உணர்த்துகிறது. இது இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாக இருப்பதுதான் யதார்த்த உண்மை. 


சம்பவங்களின் விவரிப்பில் நுணுக்கமாகத் தரப்படும் தகவல்களின் குவியல் வாசிப்பில் பிரமிப்பை தருகின்றன. நாவலின் மொழி ஆளுகையில் ஜெயமோகனின் படைப்புத்திறன் உச்சநிலையை அடைந்துள்ளது. முழுக்க புனைவெனினும், ஒருவித நம்பகத்தன்மை நாவல் வாசிப்பில் தோன்றுகிறது. பல்வேறு நுட்பமான விவரணைகளை புத்தக அறிவு, உற்றுநோக்கல் மூலம் பெற முடியுமாயினும், நாவலாக்குவதில் மிகவும் சாமர்த்தியம் தேவை; நுண்மாண் நுழைபுலம் அவசியம் வேண்டும். அவை, ஜெயமோகனுக்கு இயல்பாக கைவரப் பெற்றிருக்கிறது. இதுவே இந்நாவலின் ஆகப்பெரிய பலம். 


நாவலின் மையமான பவதத்தருக்கும் அஜிதருக்கும் இடையே நடைபெறும் கருத்தியல் வாதங்கள், பிரதிவாதங்கள், பல்வேறு சமயப் பிரிவினர்களின் கருத்து வெளிப்பாடுகள் செயற்கையாக உள்ளன. நூற்றுக்கணக்கான பக்கங்களில் விரியும் வாதங்கள், கதைசொல்லலுக்கு தடையாக இருக்கின்றன. சமய மெய்யியல் முரண்பாடுகளை பத்து பக்கங்களில் சுருக்குவதானால் முரண் எதுவும் ஏற்பட்டு விடாது. நாவலின் படைப்பாக்கத்தில் மத மெய்யியல் ஆலாபனை ஒருவகையில் தடைதான். ஞான அவையில் வெளிப்படும் கருத்துக்களின் காலத்தில் முரண் உள்ளது. நாவலின் காலமும் வெளியும் புனைவெனினும் கதையாடலில் ஒழுங்கும் தருக்கமும் முக்கியமானவை. கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் பக்தி இயக்க மரபில் வந்த சைவ மரபு, சித்தர்கள் போன்றன வைதிக சநாதன சமயம் செல்வாக்கு செலுத்திய தொடக்ககாலத்தில் பேசப்படுவது பொருத்தமன்று. இந்திய சமய மெய்யியல் பற்றி தெளிவுடன் விரிவான புத்தகம் எழுதுவதற்குரிய தகுதி ஜெயமோகனுக்கு உண்டு. ஆனால் நாவலின் கதையாடலுக்கு சமய விவாதங்கள் தடையாக இருக்கின்றன. 


வைதிக இந்து சமயத்தினரான சூரியதத்தர் தன்னுடைய முன்னோரை ’மம்மி’யாக வைத்து வழிபட்டார்; ஸ்ரீபாதத் திருவிழாவின் இறுதிநாளில் குடும்ப நிறுவனத்தைவிட்டு வெளியே வந்து வரன்முறையற்ற புணர்ச்சியில் மக்கள் ஈடுபட்டனர் என்பன போன்ற தகவல்கள் மானுடவியல்ரீதியில் ஏற்புடையன அல்ல. ஏனெனில் இத்தகைய பழக்க வழக்கங்கள் இனக்குழுவினருக்கே உரித்தானவை. விஷ்ணுவை வழிபடும் வைதிக சநாதன சமயத்தினரின் நெறிக்கு முரணானவை. 


பிரமாண்டமான நகராக வருணிக்கப்பட்ட விஷ்ணுபுரம் இறுதியில் வைதீகர்களாலும் பௌத்தர்களாலும் மக்களாலும் கைவிடப்பட்டமைக்கான காரணங்கள் பிரதியில் அழுத்தமாக இல்லை. இஸ்லாமியர்களின் படையெடுப்பு மட்டும் காரணம் அல்ல. மக்களைவிட்டு அந்நியப்பட்ட விஷ்ணுபுரம் சிதலமடைவது இயல்புதான். சமயங்களின் பின்புலத்தில் நிறுவப்பட்ட விஷ்ணுபுரத்தின் வீழ்ச்சியானது, கதையாடலின் உச்சத்திற்காக ஜெயமோகனால் ஏற்படுத்தப்பட்டதா? உலகம் விரைவில் அழிந்து விடும், பிரளயம் வரும், யாரும் தப்ப முடியாது போன்ற கருத்துகள் மனிதர்களால் காலந்தோறும் நம்பப்படுகின்றன. இயற்கையின் உற்பாதத்தினால் விஷ்ணுபுரம் நகரின் கோவில்கள், கட்டடங்கள் பேரழிவுக்குள்ளாயின என்ற தகவலைவிட, மக்கள் அந்நகரினை புறக்கணித்ததுதான் முதன்மையான அழிவு என்று கூற வேண்டும். 


மரபு வழிப்பட்ட புராணங்கள் வாசகனை அதியற்புதக் கனவுலகிற்குள் அழைத்துச் சென்று வாழ்வின் விசித்திரங்களையும் மனதின் சூட்சுமங்களையும் காட்டுகின்றன. விஷ்ணுபுரம் நாவலோ, காரணகாரிய அறிவுடன் சகலவிதமான தொன்மங்களையும் பழம் மரபுக் கதைகளையும் நுணுகி ஆராய்ந்திட வாசகனைத் தூண்டுகிறது. ஒருநிலையில் புத்தர் முன்னிறுத்தும் சூன்யத்திற்குள் கதையாடல் நெருங்க முற்படுகிறது. நாவலில் பறவைகள் சுவரில் மோதி உயிரைத் துறப்பது முதலாகச் சொல்லப்பட்டுள்ள அற்புதக் கதைகள் விந்தை உலகினுக்கு இட்டுச் செல்கின்றன. அதேவேளையில் கதைசொல்லலில் சில விநோதமான செயல்களைக் கண்டும் காணாமல் ஜெயமோகன் விட்டிருந்தால், நாவலுக்கு வேறுவகைப்பட்ட பரிமாணங்கள் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. அவர் எடுத்துக்கொண்ட பிரமாண்டமான கேன்வாசில் எல்லாவிதமான பதிவுகளும் இடம் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. புராண காலத்திலும் அதியற்புதத்திற்கு இடமில்லை என்ற ஜெயமோகனின் பார்வை ஏற்புடையதெனினும் ஏனோ சின்ன நெருடலாக இருக்கிறது.


இந்திய வரலாற்றில் சமய நிறுவனங்களின் மேலாதிக்கத்தினையும், அவை அதிகாரத்துடன் கைகோர்த்துக்கொண்டு, விளிம்புநிலை மக்களை அடக்கியொடுக்கியதனையும் நாவலாக்க முயன்றதில் ஜெயமோகன் வெற்றியடைந்துள்ளார். வழக்கமான தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் நாவல் போக்கில், புதிய போக்கினை முதன்மைப்படுத்தும் 'விஷ்ணுபுரம்’ நாவல் தனித்துவமானது. ஜெயமோகனைப் பற்றி தனிப்பட்ட முறையில் வைக்கப்படும் 'இந்துத்துவவாதி’ என்ற குற்றச்சாட்டுக்கும் நாவலுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. பிரதியானது அறிவுத்தளத்தில் சொல்லாடலை நிகழ்த்த விரும்பும் வாசகருக்காக காத்திருக்கிறது. (1998).

***

மயில் கழுத்தின் நீலம் - சுரேஷ்குமார இந்திரஜித்

                 1

ஜெயமோகனும் நானும் எப்போது முதன்முதலாகச் சந்தித்துக்கொண்டோம் என்று அறிய நினைவைப் பின்னோக்கித் தள்ளிக்கொண்டே சென்றபோது நினைவுகளின் அழிவை உணர்ந்தேன். பாம்பன் விளையில் சு. ரா. கூட்டிய கூட்டத்திலா, மதுரை சதாசிவ நகரில் நான் குடியிருந்த சிறிய வீட்டிலா, மதுரை சிவராமன் வீட்டிலா அல்லது வேறெங்கோவா; ஒன்றும் புலப்படவில்லை. ஆனால், மூன்று நிகழ்வுகள் நினைவில் உள்ளன. அவருடைய மனைவிக்கு அஞ்சல் துறையில் வேலை கிடைத்து மதுரையிலுள்ள பெருங்குடி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார். ஜெயமோகன் மனைவியைச் சந்திக்க அவ்வப்போது வருவார். ஒருநாள் இருவரையும் சந்திக்க நான், என் மனைவி, மகள்கள் ‘இந்திரஜித்’ என்ற பெயர் தரித்த ஆட்டோவில் சென்றோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து தூரமான இடத்தில் இருந்தது பயிற்சி நிலையம். சென்றோம். அவர்கள் வெளியே சென்றிருந்தார்கள். காத்திருந்து பார்த்து ஆட்டோவில் திரும்பினோம். நீண்ட தூர ஆட்டோ சவாரி மகள்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


குற்றாலத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்திருந்தார். இப்போது நினைவில் அவர் உருவம் தெளிவாகத் தெரிகிறது. வேட்டியோ லுங்கியோ மடித்துக் கட்டி கழுத்தில் துண்டை மாலையாக அணிந்து பேசிக்கொண்டிருந்தார். சொற்பொழிவாற்றிக்கொண்டிருப்பதுபோல் சிலர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் நெடுஞ்சாலைத்துறை டிராவலர்ஸ் பங்களாவில் ஓர் அறையைப் பெற்றிருந்தேன். நிகழ்ச்சிக்கு கவிஞர் பிரமிள் வந்திருந்தார். எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு பழைய லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அறையில் துர்நாற்றம். மெத்தை கறைகளுடன் இருந்தது. எனக்குப் பதட்டமாக இருந்தது. அறையைக் காலி செய்து என்னுடன் தங்கிக்கொள்ள அழைத்து வந்துவிட்டேன். இரண்டு கட்டில்கள் தனித்தனியே உள்ள ஒரே அறை அது. நடுவில் டீப்பாய். காற்றோட்டமான வெளிச்சமான அறை. அவர் முகத்தில் தெளிவைக் கண்டேன். ‘அஸ்வமேதா’ பத்திரிகையில் பிரமிள் பற்றிய ஒரு கட்டுரையை எம். டி. எம். எழுதியிருந்தார். அக்கட்டுரை மீது சினம் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தில் அவருடன் சண்டை போடக் காத்திருந்தார். அச்சந்தர்ப்பம் வந்ததும் ஆங்கிலத்தில் ஏதோ உரக்கப் பேசி சண்டைக்கு இழுத்தார். சண்டையும் போட்டார். பிரம்மராஜன் கூட்டத்தைக் கலைத்துவிட்டார். அந்தக் கூட்டத்தில் ஜெயமோகன் இருந்தாரா என்று தெரியவில்லை. என்னிடம் அறைச்சாவி வாங்கிக்கொண்டு பிரமிள் அருவிக்குச் சென்றுவிட்டார்.


பின்னர், பிரமிளும் நானும் அறைக்குத் திரும்பி பேசிக்கொண்டிருந்தோம். ஜெயமோகனும் அவருடன் இருவரும் வந்தார்கள். அவர்கள் யாரென்று தெரியவில்லை. “சச்சிதானந்தன் எழுதிய ‘மார்க்ஸிய அழகியல்’ படித்திருக்கிறீர்களா” என்று பிரமிளிடம் ஜெயமோகன் கேட்டார். “அழகியல் என்று சொல்லுங்கள் அதென்ன மார்க்ஸிய அழகியல். மயிர்ல மார்க்ஸிய மயிர்னு இருக்கா” என்றார் பிரமிள். வாக்குவாதம் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத்து பேச்சை மாற்றினேன். சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஜெயமோகன் சென்றுவிட்டார்.


மதுரை சிவராமன் வீட்டில் சிலருடன் சு. ரா. கூட்டம் கூட்டியிருந்தார். மனுஷ்யபுத்திரன் வந்தார். ஜெயமோகன் வந்தார். வேறு நபர்கள் நினைவில்லை. நான் அப்போது போக்கிரிக் குணங்களுடைய மனிதனாக பாவலா காட்டிக்கொண்டிருந்தேன். ஜெயமோகன் லட்சியவாதி போல் தெரிந்தார். பின்நவீனத்துவ, உணர்ச்சிகளற்ற, வர்ணனை குறைவான கதைகளின் மீது நாட்டம் குறைவாக இருந்தவர் போல் தோன்றினார்.


சிவராமன் வீட்டில் சு. ரா. தங்கியிருந்தார். என்னுடைய கதைத் தொகுப்பு ‘மறைந்து திரியும் கிழவன்’ ஏற்கெனவே வந்திருந்தது. சு. ரா. மதுரைக்கு வந்தால் சிவராமன் வீட்டில் தங்குவார். பின்னாளில் ஓட்டல்களில் தங்கினார். சிவராமன் வீட்டில் இருந்தபோது எனக்கும் அவருக்குமிடையே நடந்த பேச்சில் ‘காலச்சுவடு’ இதழில் ஜெயமோகனின் ‘பத்ம வியூகம்’ கதை பிரசுரமாகியிருந்தது பற்றிப் பேச்சு வந்தது. அக்கதை பற்றி, குறிப்பாக கதையில் அடுத்த ஜென்மம் வருவது தொடர்பாக சந்தேகங்கள் கேட்டுக்கொண்டிருந்தேன். “ஜென்மம் ஜென்மமாகத் தொடருவதில் கதை நகர்ந்துகொண்டிருக்கிறது. இதைப் பார்க்க பகுத்தறிவு தேவையில்லை. இது மரபு சார்ந்த கதை. கிருஷ்ணனும் திரௌபதியும் சற்று விமர்சனத்திற்குரியவர்களாக, நிழல் விழுந்த பாத்திரங்களாக இருக்கிறார்கள்” என்றார். அக்கதை அவருக்குப் பிடித்திருந்தது. சுபத்திரையின் ஆவலையும் பதைபதைப்பையும் அவர் நன்றாகச் சித்தரித்திருந்ததாக நினைத்திருந்தேன். பிரசுரமான ஆண்டு 1997. அதற்குச் சற்று பின்னர் இந்த உரையாடல் நிகழ்ந்திருக்கும்.


நான் சொன்னேன். “எனக்கு மரபு தெரியாது. சொற்பமாக ஏதாவது அறிந்திருப்பேன். சிறுபத்திரிகை உலகம் மரபின் இடத்தை வகிக்கிறது. உங்களுக்கும் இந்திய மரபில் பெரிய நெருக்கம், அட்டாச்மெண்ட் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்திய மரபிலிருந்து ஒரு எழுத்தாளர் வந்திருக்கிறார்” என்றேன். “ஜெயமோகன்” என்றார். “ஆமாம்” என்றேன். “அவர் காவிய மரபுன்னு தோன்றது” என்றார்.


“அவர் படைப்பாளி. ஆனால், அவரைப் படிப்பவர்கள் பழமையை நோக்கிச் செல்லும் வாய்ப்பு ஏற்படுமா” என்றேன்.


அவர் பதில் சொல்லவில்லை. ‘தெரியவில்லை’ என்ற பாவனையில் கையை அசைத்துவிட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தார்.


சு. ரா.விற்கும் ஜெயமோகனுக்கும் தத்துவார்த்தமாக நெருக்கம் ஏற்படவில்லை என்றும் நவீனப் படைப்புகள் பற்றி ஒற்றுமையான அபிப்ராயங்கள் ஏற்படவில்லை என்றும் சரியாகவோ தவறாகவோ நான் நினைத்தேன். இருவருக்கும் இடையே விலக்கம் ஏற்பட்டுவிட்டதைக் கண்டேன். சு. ரா. வழக்கம்போல் மௌனம் காத்தார். எனக்குத் தெரிந்து சுஜாதாவிடமும் அசோகமித்திரனிடமும் மட்டும்தான் அவர் மோதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.


இந்திய மரபு, இந்து மெய்யியல், மதப் பிடிப்பு, மார்க்ஸியப் பிடிப்பு ஆகியவற்றை இணைக்க கற்பனை உள்ளம் கொண்டிருந்த நல்ல மனிதராக கோவை ஞானி இருந்தார். மரபார்ந்த நவீன இலக்கியங்கள் மீது அவருக்கு நாட்டமிருந்தது. ஜெயமோகனுக்கும் அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ஜெயமோகன் ஒரு காலத்தில் படைப்புலகில் அடையப்போகும் பிரதான இடத்தை அவர் கணித்திருந்தார் என்றே நினைக்கிறேன். ஜெயமோகனின் ‘படுகை’ கதையை அவர் பிரசுரித்தார்.


விஷ்ணுபுரம் வந்துவிட்டது. ஒருநாள் முழுக்க இரவு நெடுநேரம் படித்தேன். சரியாக என்னால் கணிக்க இயலவில்லை. வர்ஷா விஜயகுமார் அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றுவிட்டார்.

கோவையில் கூட்டம் நடந்தது. எஸ். ராமகிருஷ்ணன் விஷ்ணுபுரத்தைத் தாக்கிப் பேசினார். சி. மோகன், ரமேஷ் பிரேதன் நாவலின் மீது அபிமானமுடையவர்களாக இருந்தார்கள். தனிப்பேச்சில் பிறரிடமிருந்து தெரிந்துகொண்ட அபிப்பிராயங்களைக் கூறியதன்றி, சு. ரா. அந்நாவலைப் பற்றி அபிப்பிராயம் ஏதும் கூறியதாக எனக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் அவர் பேசவில்லை என்று நினைக்கிறேன். இப்படி இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். இன்று ஜெயமோகன் ஒரு நிலையை அடைந்துள்ளார். இவை அனைத்துமே அவர் படைப்புகள் சார்ந்த விஷயம்.


அனைத்து விஷயங்கள் பற்றியும் அவருக்குக் கருத்து உண்டு. அதைப் பற்றி எழுத என்னால் ஏலாது. தவிர அந்தக் கருத்துலகம் பிரம்மாண்டமான நிலப்பரப்பு. சர்ச்சைக்குரியது. நான் வேற்று ஆளும்கூட.


விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது, மனைவியுடன் 


2

இந்தக் கட்டுரையில் ஜெயமோகனின் ஒரு கதையை எடுத்து எழுதலாம் என்று நினைத்தபோது, ‘படையல்’ என்ற கதைதான் மேல் எழுந்து வந்தது. இன்றைய சூழ்நிலையில் இந்திய சமூகத்தில் மதம் வகிக்கும் நிலை; மதத்தின் மீது புதிய கோணத்தில் ஏற்பட்ட பற்று; காந்திஜியின் இந்து, முஸ்லிம் சமரசப் பண்பு; பழமையிலிருந்து மீண்ட மனத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் சூழ்நிலை; இந்திய நிலப்பரப்பில் ஏற்பட்ட படை மோதல்கள்; மக்களின் துயரம்; இரக்கமற்ற கொலைக்களனாக நிலப்பரப்பு மாறியது பற்றி; மதராசும் பாண்டிச்சேரியும் புகலிடமாக மாறியது பற்றி; இன்றைய மத ஆவேசம், பிற மத வெறுப்பு பற்றி; எறும்பு பாவா என்னும் எலிக்கண்களுடைய சிறுவனின் உருவம் கொண்ட பச்சைத் தலைப்பாகை கட்டிய முஸ்லிம் பெரியவர்; அவரைக் காப்பாற்றும் ஆணைப்பிள்ளைச்சாமி மற்றும் இரு இஸ்லாமியர்கள்; மனித ரத்தத்தினால் ஊறிய அரிசிக்கட்டியைத் தவிர வேறெதுவும் உண்ண முடியாத நிலை; எறும்பு பாவா பேசும் ஒரே வார்த்தை “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”; ரத்த அரிசிக்கட்டியை சமைக்கத் தயங்கும்போது பாவா கூறுகிறார் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”.


மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

(திருமூலர்)


பார்முதல் பூதம் = நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ. வேறு உரை தேவையில்லை. இக்கதை பற்றி எழுதுவதில் எனக்கு வலி உள்ளது; அலுப்பு உள்ளது; துயரம் உள்ளது; பிறிதொரு நேரத்தில் எழுதலாம். “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”



நாஞ்சில்நாடன், தேவதேவன், தெளிவத்தை ஜோசெப், சுரேஷ்குமார இந்திரஜித், ஜெயமோகன், 2013 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழா 


3

‘அறம்’ தொகுப்பில் எவ்வளவோ கதைகள் இருக்க எனக்கு ஒரு திறப்பைத் தந்தது ‘மயில் கழுத்து’ என்ற கதை. போதங்களும் மனிதாபிமானங்களும் அற உணர்வுகளும் உள்ள கதைகளின் ஊடே அதிலிருந்து விலகி நிற்கிறது இந்தக் கதை. விசித்திரமான கலவை மனங்கொண்ட எனக்கு இந்தக் கதை தனித்துத் தெரிந்தது. இக்கதையில் சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன், மதுரை மணி அய்யர், ஒரு நடனமங்கை ஆகியோர் வருகிறார்கள். புனைவான கதை. கதையில் வரும் பாலு என்ற பால சுப்பிரமணியன், சு. ரா.வின் பதிப்பு; ராமன் தி. ஜா.வின் பதிப்பு; சுப்பு அய்யர், மதுரை மணி அய்யர் மற்றும் மரப்பசு நாவலில் வரும் கோபாலியின் பதிப்பு; சந்திரா, (நடனமங்கை) யாரென்று தெரியவில்லை.


சுப்பு அய்யர் கர்நாடக சங்கீதக் கச்சேரி செய்வதற்காக மிராசுதாரின் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காகவும் கச்சேரி கேட்பதற்காகவும் பாலுவும் ராமனும் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். சுப்பு அய்யர் நடுக்கூடத்தில் பாயில் உட்கார்ந்திருக்கிறார்.


பாலுவை (சு. ரா.) சுப்பு அய்யரிடம் ராமன் (தி. ஜா.) அறிமுகப்படுத்துகிறார். “பாக்கத்தான் இப்படி இருக்கார். பிளேடு மாதிரி ஆளு. நேக்கெல்லாம் இவரப் பாக்கறச்சே வயத்துக்குள்ளே சில்லுனு இருக்கும். கிழிச்சுடுவார்.”


நடனமங்கை சந்திரா வருகிறாள். ‘பொன்மூங்கில் போல இறுக்கமான உடம்பு. நீளமான மெல்லிய கழுத்தில் பச்சை நரம்புகள் ஓடின. அழுத்தமான உதடுகள். பெரிய கண்கள். தலைமுடியை இரு நெற்றியோரங்களையும் மறைப்பது போலச் சீவித் தளர்வாக பின்பக்கம் கட்டிவிட்டிருந்தாள்.’


கச்சேரி ஆரம்பமாகப்போகிறது. சந்திரா புடவை சரசரக்க வந்து பாலுவின் அருகே அமர்கிறாள். நீலக்கலரில் புடவை. ஆகாய நீலம். ‘சந்திரா கழுத்தைத் திருப்பியபோது பாலசுப்ரமணியன் தன் நெஞ்சில் ஒரு கன்றுக்குட்டி உதையை உணர்ந்தார். அத்தனை நளினமாக ஒரு பெண் கழுத்தைத் திருப்ப முடியுமா என்ன? ஓர் அசைவு ஒரு மாபெரும் கலை நிகழ்வாக ஆகமுடியுமா என்ன? எப்படி அதை வார்த்தையாக்குவது?’


சுப்பு அய்யர் ‘அலர்ஸர பரிதாபம்’ பாட்டைப் பாடுகிறார். பரவசத்தில் ராமன் மூர்ச்சையாகிவிடுகிறார். அவரைத் தனியாகக் கொண்டுபோய் மூர்ச்சை தெளியவைக்கிறார்கள். “இப்ப அண்ணா சொல்லிட்டார். என்ன சொன்னார்னு என்னால சொல்ல முடியலை. ஆனா எனக்குள்ள இந்த வெஷமில்லேன்னா நான் யாரு, வெறும் சோத்துப்பிண்டமில்ல? இந்த வெஷம் ஏறி எரியறதனாலேதானே என் வெரல்நுனியெல்லாம் சங்கீதமா அதிருது… என் மனசிலே இந்த வேதனையெல்லாம் சங்கீதம்தானே? ஒளறிண்டிருக்கேனா? சொல்ல முடியல பாலு. நான் இதுநாள் வரை சொல்லமுடியலேன்னுதான் சொல்லிண்டே இருக்கேன். அதான் என்னோட எழுத்து. முடியல பாலு… நெஞ்சு முட்டுது. வாங்கடீ ஒலகத்திலே உள்ள அத்தன பேரும் வாங்கடீ. உங்க வெளையாட்டயும் வெஷத்தையும் முழுக்க எம்மேலே கொட்டுங்கடீன்னு எந்திரிச்சு நின்னு கத்தணும்போல இருக்கு. என்னை குளுந்து போக விடாதீங்க. என்னை பற்றி எரிய விடுங்க.” சட்டென்று முஷ்டியால் தன் மார்பை அறைந்தார் ராமன். “எரியறது…எரியறது” என்றார்.


சுப்பு அய்யரின் குரல் பற்றி: “அது இசைவாணனின் குரலே அல்ல. குழறும் உச்சரிப்பு. வரிகளை ஆங்காங்கே விட்டுவிட்டு பாடும் முறை. ஆலாபனையேகூட கோலத்துக்கு புள்ளி வைப்பதுபோல அங்கு தொட்டு இங்கு ஊன்றி தாவிச்செல்வதுதான். ஆனால் கோலத்தை மனது போட்டுக்கொள்கிறது. நட்சத்திரங்கள் கரடியாக, பாயும் குதிரைகளாக ஆவது போலவா?”


- இதுதான் கதை. அதாவது கதையின் சில தருணங்களைத் தந்துள்ளேன். வித்தியாசமான, குழறுவது போலப் பாடும் சங்கீதப் பாடகர். பிளேடு போன்ற ஓர் எழுத்தாளர். பொன் மூங்கில் போல இறுக்கமான உடல் கொண்ட ஓர் அழகி. சங்கீதத்தையும் அழகிகளையும் நெஞ்சில் வைத்து எரிந்துகொண்டிருக்கும் ஓர் எழுத்தாளர். இவர்கள் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கதையாக உருவாகியுள்ளது. வசீகரமான கதை. ‘அலர்ஸர பரிதாபம்’ என்ற சுருட்டி ராகப் பாடலை இங்கு தமிழ்நாட்டில் யாரும் பாடி நான் கேட்டதில்லை. ஆனால், கேரளத்தில் பிரபலம்.


இந்த வசீகரக் கதை நான் எழுதிக்கொண்டிருந்த பாணியை மாற்றும் திறப்பை எனக்குக் கொடுத்தது. இக்கதை பிப்ரவரி மாதம் 2011ல் பிரசுரமாகியுள்ளது. 2011-2012ஆம் ஆண்டில் நான் 12 கதைகள் எழுதினேன். ‘நானும் ஒருவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பாக அது வெளிவந்தது. அக்கதைகளுக்கு ‘மயில் கழுத்து’ கதை ஆதர்சமாக இருந்தது. அந்த 12 கதைகளுக்கும் ‘மயில் கழுத்து’ கதைக்கும் தொடர்பில்லையே என்று கேட்கக் கூடாது. என் வழக்கமான பாணி இக்கதைகளில் இல்லாதிருந்ததால், அல்லது குறைந்திருந்ததால், உங்கள் கதை மாதிரி இல்லையே என்று சிலர் கேட்டிருக்கிறார்கள்.


ஜெயமோகன் வற்றாது படைப்புகளைத் தந்துகொண்டிருக்கிறார். தினம் ஒரு கதை என நூறு கதைகள் எழுதியது ஆச்சரியமானது. வித்தியாசமான களங்கள், செய்திறன் அக்கதைகளில் ஒளியைத் தருகின்றன. பல கதைகள் எனக்குப் பிடித்திருந்தன.


ஜெயமோகனுக்கு 60 வயது நிறைவடையவுள்ளது. அவரிடமிருந்து வெளிவர படைப்புகள் காத்திருக்கின்றன. என் வாழ்த்துகள்.

***

இணை பயணம் - சாரு நிவேதிதா

புகைப்படம் பிரபு காளிதாஸ். நன்றி  

 ஜெயமோகனின் கருத்துலகுக்கும் படைப்புலகுக்கும் நேரெதிர் நிலையில் இருப்பவனாகக் கருதப்படுபவன் நான். ஜெயமோகனை வியந்தோதும் பல வாசகர்கள் என்னை அடியாழத்திலிருந்து வெறுப்பதையும் நேருக்கு நேர் கண்டவன்.  சமீபத்தில் கூட ஜெயமோகன் சம்பந்தப்பட்ட ஒரு இலக்கிய நிகழ்வில் நான் பேசத் தொடங்கியதும் எழுந்து வெளியே சென்ற பிரமுகர் நான் பேசி முடித்த பிறகே உள்ளே வந்தார்.  இதெல்லாம் எதேச்சையாக நிகழ்வது அல்ல.  ஜெயமோகன் பள்ளியைச் சேர்ந்த இன்னொரு பிரமுகர் என்னை சமீபத்தில் திருடன் என்று சொன்னதும் கூட அவ்வகையானதே.  என் சக எழுத்தாளர்களும் நண்பர்களும் அந்தப் பிரமுகர் மீதே அனுதாபம் கொண்டார்கள்.  பாவம், விட்டு விடுங்கள் என்பதே அவர்கள் எனக்குக் கூறிய அறிவுரையாக இருந்தது.  இது போல் நூறு சம்பவங்கள்.  ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ஜெயமோகனையும் என்னையும் எதிரிகளாகக் கட்டமைத்துக் கொள்வதுதான் அவர்கள் எல்லோருக்கும் சௌகரியமானது.  கருத்துத் தளத்தில் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ள முடியாத இரண்டு எதிரெதிர் நிலைப்பாடுகள் சாத்தியம் என்பது கூட தெரியாதவர்கள் அவர்கள்.  இது பற்றியும் - வள்ளலாருக்கும் அவரது சம காலத்திய அறிஞர்களுக்கும் இடையே நடந்த சர்ச்சைகள், சண்டைகளை உதாரணம் காண்பித்து - ஜெயமோகன் நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.  


இரு துருவங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஜெயமோகனுக்கும் எனக்கும் ரசனையிலும் கருத்துத்தளத்திலும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு.  இதற்கும் எங்கள் எழுத்திலேயே பல உதாரணங்களைக் காணலாம்.  


ஆனால், ஒரு இலக்கியப் படைப்பினால் நாம் எப்படி வசீகரிக்கப்படுகிறோம்?  அல்லது, ஒரு இலக்கியப் படைப்பு எப்படி நம்மை ஈர்த்து அதனுள் வாங்கிக் கொள்கிறது?  இந்தக் கேள்விக்கு நான் என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களைச் சொல்ல வேண்டும்.


நான் எழுதத் தொடங்கின காலத்திலிருந்தே என் நூல்களை வெளியிட அப்போது இருந்த எல்லா பதிப்பகங்களுமே மறுத்து விட்ட நிலையில் - மனுஷ்ய புத்திரன் தனியாக ஒரு பதிப்பகம் ஆரம்பித்து, அவர் என்னுடைய புத்தகங்களைப் பிரசுரிக்கத் தொடங்கும் வரை நான்தான் என் புத்தகங்களைப் பதிப்பிக்க வேண்டிய சூழல் இருந்தது.  அவ்வகையில் 1980களில் என் முதல் நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலின் 1000 பிரதிகளை ஒரு விற்பனையாளரிடம் கொடுத்தேன்.  தீவிர இடதுசாரி.  நேர்மை, உண்மை, சத்தியம், தோழமை போன்ற மேன்மையான மதிப்பீடுகளின் அறங்காவலர்.  மார்க்சீயப் புரட்சி மலர்வது பற்றி மேடைகளில் அனல் பறக்கப் பேசுபவர்.  எல்லா பிரதிகளும் மூன்றே மாதங்களில் விற்று விட்டன.  ஆனால் ஒரு பைசா எனக்குக் கிடைக்கவில்லை.  விடாமல் போஸ்ட் கார்ட் எழுதிக் கொண்டேயிருந்தேன்.  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடைசியாக அறம் பாடி ஒரு போஸ்ட் கார்ட்.  அந்த ஆண்டு புத்தக விழாவில் தீப்பிடித்து அவர் கடை முழுசாக எரிந்து போனது.  அப்போது அவர் எனக்கு ஒரு போஸ்ட் கார்ட் போட்டார்.  கடை தீப்பிடித்து விட்டதால் பணம் தருவதற்கில்லை தோழர்.  


20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது.  அப்போது என் வங்கிக் கணக்கில் 1000 ரூ. இருந்தது.  அதற்கும் குறைவாக இருந்தால் கணக்கு வைத்துக் கொள்ள இயலாது.  வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருந்தேன்.  வீட்டில் கடுமையான வறுமை.  அவந்திகாவின் சம்பளம் என் மகனின் படிப்புக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.  ஸீரோ டிகிரி நாவலின் நூறு பிரதிகளை (அல்லது இருநூறா, ஞாபகம் இல்லை) ஒரு விற்பனையாளரிடம் கொடுத்தேன்.  இரண்டே மாதங்களில் புத்தகங்கள் காலி.  ஒரு பைசா வரவில்லை.  எனக்கு போன் வந்து விட்டது.  அதனால் போஸ்ட் கார்டுக்கு பதிலாக போன்.  இதோ அதோ என்றே போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் ஹார்ட் அட்டாக்.  ரத்தக் குழாய்களில் 95 சதவிகித அடைப்பு.  இரண்டே நாளில் அறுவை சிகிச்சை செய்தால்தான் ஆள் பிழைப்பார்.  இரண்டு லட்சம் வேண்டும்.  

புகைப்படம்- அறிவழகன் சேகர். நன்றி 

சென்னையின் நம்பர் ஒன் தொழிலதிபரும் நானும் வாடா போடா நண்பர்கள்.  பணம் கடனாகக் கேட்டேன்.  ”அது கஷ்டம், நீ ஒன்று செய், பேசாமல் அரசு மருத்துவமனையில் போய்ச் சேர்ந்து விடு, நான் ஹெல்த் மினிஸ்டரிடம் பேசி உன்னை ஸ்பெஷலாக கவனிக்கச் சொல்கிறேன்.”  அன்றைய தினம் பேப்பரில் அந்த மருத்துவமனையில் கடைநிலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஏழாவது நாளாகத் தொடர்கிறது என்றும், அதனால் மருத்துவ மனையே நாறுகிறது என்றும் தலைப்புச் செய்தி வந்திருந்தது.  


புத்தக விற்பனையாளருக்கு போன் செய்தேன்.  மீண்டும் இதோ அதோ என்றார்.  நான் மரணப் படுக்கையில் கிடக்கிறேன், இன்று மாலைக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால், நாளைய தினசரியில் உங்கள் பெயரோடு செய்தி வரும் என்றேன்.  (அப்படி வரவழைக்கும் அதிகாரமும் நட்பு வட்டமும் அப்போது எனக்கு இருந்தது.)  சென்னையில் இருந்தால் செய்து விடலாம், சென்னையிலிருந்து ரொம்பத் தொலைவில் இருக்கிறோமே என்று மருகினார் புத்தக விற்பனையாளர்.  அது உங்கள் பிரச்சினை என்று போனைத் துண்டித்து விட்டேன்.  ஒரு மணி நேரத்தில் பணம் வந்து சேர்ந்தது.  


ஜெயமோகனின் அறம் என்ற கதையைப் படிக்கும் என் நண்பர்கள் அது எம்.வி. வெங்கட்ராமின் வாழ்வில் நடந்த சம்பவம் என்பார்கள்.  நானோ அது என் வாழ்வின் சரிதம் என்பேன்.   


 இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.  அது ஒரு தலித் இலக்கிய விழா.  மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் புத்திஜீவியாக அறியப்பட்டவர்.  படிப்பாளி.  இடதுசாரி என்பதால் ஜெயமோகனை அவ்வப்போது விமர்சித்துக் கொண்டிருப்பவர். ஜெயமோகனின் வெள்ளை யானை என்ற நாவலைப் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டார்.  


அதேபோல், ஜெயமோகனின் ஒரு கதையைப் படித்து விட்டு என் ஆன்மா விம்மிய தருணம் ஒன்று உண்டு. இரு நோயாளிகள் என்ற கதை.  அந்தக் கதையில் புதுமைப்பித்தன் ஒரு பாத்திரம்.  புதுமைப்பித்தனுக்கு க்ஷயரோகம் வந்து திருவனந்தபுரம் க்ஷயரோக மருத்துவமனையில் இருக்கிறார்.  அவரைச் சந்திக்கப் போகும் ஒரு நண்பர் அவரிடம் “உங்களுக்கு எப்படி க்ஷயரோகம் வந்தது?” என்று கேட்கும் போது, “ஊரெல்லாம் என் முகத்தில் காறித் துப்பியது, அதனால் வந்தது” என்பார் பித்தன்.


ஒரு சிறுவன் என்னைத் திருடன் என்று எழுதியபோது அதை நான் புன்னகையோடு கடந்து போனது இந்தக் கதையைப் படித்ததனால்தான்.  அல்லது, இந்தக் கதையில் வரும் பித்தனைப் போல் வாழ்வை எதிர்கொண்டதால்தான்.  


ஜெயமோகனையும் விமர்சிப்பார்கள், வசை பாடுவார்கள், வழக்குத் தொடுப்பார்கள்.  தமிழ் எழுத்துச் சூழலில் அதிக வசைக்கு ஆளானவர் ஜெயமோகன்தான்.  ஆனால், அதிலெல்லாம் கடைசியில் ஜெயமோகனின் மணி மகுடத்தில் ஒரு இறகு ஏறும்.  எஸ்.வி. ராஜதுரை தொடுத்த வழக்கில் கூட யார் வென்றார்?  யார் மகுடத்தில் மேலும் ஓர் இறகு ஏறியது? ஆனால், என் விஷயத்தில் அவமதிப்பு மட்டுமே நடந்தேறும்.  நான் எந்தத் தவறுமே செய்திருக்க மாட்டேன்.  ஆனால் சாருவினால்தான் என் பெண்ணுக்குத் திருமணமே தட்டிப் போனது, நாங்களெல்லாம் சாருவை எவ்வளவு சபித்திருப்போம், பெண் சாபம் அவரை சும்மா விடுமா என்று 65 வயதுப் பெண்மணி ஒருவர் சமீபத்தில் என் நண்பரிடம் சொன்னார்.  


அந்த விஷயத்தைத் தோண்டித் துருவிப் பார்த்தால் இரண்டு தேசங்களுக்கு நடுவே நடந்த போரில் சம்பந்தமே இல்லாமல் குறுக்கே மாட்டியவனாக இருந்தேன்.  


மிக விரோதமான ஒரு சூழலை நான் எவ்வித சலனமுமின்றி கடந்து செல்வதற்கு ஜெயமோகனின் கதைகள் எனக்கு உதவுகின்றன என்பதை நிறுவுவதற்காகவே என் கதையை இங்கே சொன்னேன்.  


இப்படியாகவே தமிழ்ச் சமூகத்தில் ஏராளமான வாசகர்களின் வாழ்வில் ஜெயமோகன் நீங்காத ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறார்.  அவருடைய நேரெதிர் துருவத்தில் வாழும் சாரு உட்பட.  


ஜெயமோகனைப் பற்றிச் சொல்ல இன்னொரு முக்கியமான விஷயம் உண்டு.  நமக்குத் தெரிய வந்துள்ள 2000 ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் பொதுச் சமூகத்தை ஜெயமோகன் அளவுக்குப் பாதித்த இன்னொரு எழுத்தாளன் கிடையாது.  பாரதியையும் உள்ளடக்கியே சொல்கிறேன்.  சவத்தைக் கொண்டாடும் மனோபாவம் கொண்ட necrophilic தமிழ்ச் சமூகம் பாரதி இறந்த பிறகுதான் அவரை மாலை போட்டு வணங்கியது.  அவர் உயிரோடு இருந்த போது சோற்றுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் பொதுச் சமூகத்தை அவரெங்கே பாதிக்கப் போகிறார்?  அவரை ராஜாஜியும் மற்ற தலைவர்களும் நடத்திய லட்சணத்தைத்தான் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறாரே? அதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்?  சென்னைக்கு வந்த தாகூர் சென்னையில் வசித்த பாரதியைப் பார்க்காமல் உ.வே.சா.வைத்தான் சந்தித்திருக்கிறார்.  காரணம், அவருக்கு பாரதி பற்றிச் சொல்லப்படவே இல்லை.


தமிழ்ப் பொதுச் சமூகம் தன்னை நிராகரிக்கவே முடியாதபடி தகவமைத்துக் கொண்டது ஜெயமோகனின் இன்னொரு விசேஷம்.  எந்தச் சிறப்பான முயற்சியும் இல்லாமல் அது இயல்பாகவே நடந்தது.  பொதுச் சமூகம், தான் மிக மோசமான அழிவுப் பாதையில் சென்றாலும் ஆசான்கள் மட்டும் நல்வழியிலேயே செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் குணம் கொண்டது.  வள்ளுவர் காலத்திலிருந்து வழங்கி வரும் மரபு அது. அந்த வகையில், சமூகம் வரையறுத்துள்ள ஒழுக்க விதிகளுக்கும் ஜெயமோகன் மிகச் சரியாகப் பொருந்தினார்.  பாரதி கஞ்ஜா குடிப்பார்.  ஜெயமோகனோ புகைக்கவும் மாட்டார்.  குடிக்கவும் மாட்டார்.  பெண்கள் பக்கமோ திரும்பவே மாட்டார்.  ஆக, மது மாது ஆகிய இரண்டு அடிப்படை விஷயங்களில் தமிழ்ச் சமூகத்தை ஜெ. வீழ்த்தி விட்டார் என்றே சொல்லலாம்.  


இப்படியாக, தன்னைத் தாக்குவதற்கான எந்த ஆயுதத்தையும் ஜெயமோகன் தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கவே இல்லை.  ஒரே ஒருமுறை அவரையும் அறியாமல் வழங்கினார்.  சமூகமும் அவரை ஆசான் என்றும் பாராமல் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குத் தாக்கியது.  அது குறித்து என்னைப் பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர் மீண்டும் மீண்டும் ஜெயமோகன் மீது விமர்சன ரீதியாகவே கேள்விகளைக் கேட்டார்.  நான் மீண்டும் மீண்டும் ஜெயமோகனுக்கு ஆதரவாகவே பேசிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் ஊடகங்களையும் தாக்க ஆரம்பித்த பிறகுதான் நிருபர் தன் முயற்சியை நிறுத்தினார்.  எனவே, எழுத்தாளர்களை அடிப்படையிலேயே வெறுக்கும் தமிழ்ச் சமூகம் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்றே காத்துக் கொண்டிருந்தது.  ஆனால் சமூகத்தின் கண்ணிகளையெல்லாம் ஜெயமோகன் மிக எளிதில் கடந்து சென்று விட்டார். 


இங்கே இரண்டு பேரை நாம் நினைவு கூரலாம்.  இருவரில் காந்தி உச்சம்.  ஆடைகளையே களைந்து போட்டு அரை நிர்வாணப் பக்கிரியாக மாறினார்.  இந்தியத் துறவியின் அடையாளம்.  அதைவிட இந்தியச் சமூகத்துக்கு வேறு என்ன வேண்டும்?  காந்தியைத் தங்கள் மகாத்மாவாக ஏற்றுக் கொண்டது சமூகம்.  அதேபோல் அப்துல் கலாம்.  ஒரு முஸ்லிம் இந்தியச் சமூகத்தில் அவர் அளவுக்கு வணங்கப்பட்டது முன்மாதிரி இல்லாதது.  அவருமே பொதுச் சமூகத்தின் சட்ட விதிகளுக்குப் புறம்பாக நடக்கவில்லை.  அவர் மட்டும் வைன் அருந்துவேன் என்றோ, எனக்குப் பிடித்த உணவு மாட்டுக் கறி பிரியாணி என்றோ சொல்லியிருந்தால் அப்படிக் கொண்டாடப்பட்டிருப்பாரா என்பது கேள்விக் குறி.  


ஜெயமோகன் எவ்வித முன் திட்டங்களும் இன்றி இயல்பாகவே மதுவிலிருந்தும் பெண்களிடமிருந்தும் அந்நியமாக இருந்தார்.  அதனாலேயே சமூகம் அவரை கவனித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.  இது எல்லாவற்றையும் விட, அவர் மக்களின் கதைகளைச் சொன்னார்.  அதற்கு மேல் சமூகத்துக்கு எந்த ஆட்சேபணையும் இல்லாமல் போனது.        


எனக்குத் தெரிந்த மேலும் ஒன்றிரண்டு சம்பவங்களைக் குறிப்பிட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னால் எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி ஒரு தினசரியில் கட்டுரை கேட்டிருந்தார்கள்.  நான் ஒன்றை எழுதினால் அது பற்றி யாரேனும் எழுதியிருக்கிறார்களா என்று தேடிப் படித்து விடுவது வழக்கம்.  அப்படிப் பார்க்கும் போது சங்கீதத்துக்கு சம்பந்தமே இல்லாத ஜெயமோகன் ஒருவர்தான் எம்.எஸ். பற்றி விரிவாக – மிக விரிவாக – ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.  எம்.எஸ். பற்றி உருப்படியாக வேறு எந்தக் கட்டுரையுமே தமிழில் எனக்குக் கிடைக்கவில்லை.  


Cradle of Filth என்ற மெட்டல் ராக் குழுவின் தீவிர ரசிகன் நான்.  ஒருமுறை அந்தக் குழுவின் Nymphetamine என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோது இந்த இசையை ஜெ. எப்படி எதிர்கொள்வார் என்று தோன்ற, அதை அவருக்கு எழுதினேன்.  பாடல்களையும் அனுப்பி வைத்து விட்டு உறங்கி விட்டேன்.  இரவு இரண்டு மணி இருக்கும். காலையில் எழுந்து பார்த்தால் அவரிடமிருந்து ஒரு நீண்ட மின்னஞ்சல்.  நான்கு மணிக்கு எழுதியிருக்கிறார்.  போன் செய்து ”என்னைப் போலவே அதிகாலையில் எழுந்து விடுவீர்களோ?” என்று கேட்டேன்.  “சே, சே, உறங்கச் செல்வதற்கே நாலு ஆகி விடும்” என்றார்.  


அந்தக் குறிப்பிட்ட மெட்டல் ராக் இசையை அவர் நித்ய சைதன்ய யதியின் ஆசிரமத்தில் கேட்டிருக்கிறார்.  அவர் எனக்கு எழுதிய அந்த பதில் ராக் இசை பற்றிய ஒரு முக்கியமான ஆவணம்.


இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.  


புதுமைப்பித்தன் பற்றிய க்ஷயரோகக் கதை இருக்கிறதல்லவா?  அதற்கான தீர்வையும் ஜெயமோகனே எனக்கு அளித்தார்.  ஊரெல்லாம் தூற்றுகிறது.  யாரைப் பார்த்தாலும், “சாருவின் அ-புனைவு பிடிக்கும், புனைவுகள் இஷ்டமில்லை” என்பார்கள்.  இதைவிட அதிக பட்ச அவமானம் ஒரு எழுத்தாளனுக்கு இருக்க முடியாது.  எழுத்தாளனின் உயிர் மூச்சே அவனது புனைவுகள்தானே?  அங்கேயும் என்னைக் காப்பாற்றியது ஜெயமோகன்தான்.  ’என் எழுத்து ட்ரான்ஸ்கிரஸிவ் தன்மை கொண்டது, அதிகம் பேரால் அதை உள்வாங்க முடியாது’ என்பதோடு நான் நிறுத்திக் கொள்வது வழக்கம்.  ஆனால் ஜெயமோகனோ ‘யாரும் பதற வேண்டாம், சாரு எழுதுவது பிறழ்வெழுத்து (ட்ரான்கிரஸிவ்), இவ்வகை எழுத்தின் முன்னோடி மார்க்கி தெ ஸாத், இவ்வகை எழுத்து இந்தியாவிலேயே வேறு எந்த மொழியிலும் எழுதப்படவில்லை’ என்று மிக விளக்கமாக எழுதினார்.  என் எழுத்தை ஒரு தத்துவத் தளத்தில் வைத்து நிறுவிய ஒரே கட்டுரை இன்று வரை ஜெயமோகனுடையதுதான்.  


கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனி ஒருவனாகச் செய்து கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.  என்னென்னவெல்லாம் செய்கிறார் என்பதை இன்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  ஜெயமோகன் செய்யும் அத்தனை காரியங்களையும் வேற்று மொழிகளில் கோடீஸ்வரர்களும், கோடிகளில் புரளும் நிறுவனங்களும் செய்து கொண்டிருக்கின்றன.  ஆனால் இங்கே ஜெயமோகன் என்ற ஒற்றை மனிதன் ஒட்டு மொத்த சமூகமே செய்திருக்க வேண்டிய அத்தனை கலாச்சார செயல்பாடுகளையும் முன்னெடுத்துச் செய்து கொண்டிருக்கிறான்.  குறைந்த பட்சம் ஒரு பல்கலைக்கழக வேந்தராகக் கூட அவரை அமர்த்தி அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள இந்தச் சமூகம் தயாராக இல்லை.  இழப்பு சமூகத்துக்குத்தானே ஒழிய ஜெயமோகனுக்கு இல்லை.  


இப்படியாகத்தான் அது நடந்தது.  தமிழ்ச் சமூகத்தின் விருப்பு வெறுப்பு பற்றியே அலட்டிக் கொள்ளாமல் – அதற்கான வாய்ப்பையே தமிழ்ச் சமூகத்துக்கு அளிக்காமல் – சுயம்புவாக இந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதித்த ஒரே எழுத்தாளனாக விளங்குகிறார் ஜெயமோகன்.  இது கடந்த 2000 ஆண்டுகளில் நடந்திராத ஒரு அதிசயம். 


அந்த அதிசயம் நூறாண்டுகள் வாழ்ந்து இந்த சமூகத்துக்கும் மொழிக்கும் தன்னிடமிருக்கும் சிறந்தவற்றை மேலும் மேலும் வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.    


'இரவு’ எனக்கானது, நமக்கானது- பெருந்தேவி









ஜெயமோகனை அவருடைய ஆக்கங்களின் வாயிலாக அன்றி நேர்முகமாகச் சந்திக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் அமைந்ததில்லை. எப்போதாவது இலக்கியக் கூட்டங்களிலும் சில சமயம் கடிதங்கள் வாயிலாகவும் சந்திருக்கிறோம்.  கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவின்போது (2019) என்னுடைய அமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவையிலிருந்த இரண்டு நாட்களில் அவருடன் உரையாடும் பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. மூன்று வருடங்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு லஷ்மி மணிவண்ணனுடனும் போகன் சங்கருடனும் சென்றிருந்தேன். அருண்மொழி நங்கையின் இரவுணவு விருந்தோம்பலுடன் சில மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். 


ஒவ்வொரு முறையும் ஜெயமோகன் என்னிடம் பேசும்போது ஏதோ தினமும் காலையில் நாங்கள் டீக்கடைக்குப் போவதைப் போல, இன்று நான் வராமல் விட்டதைப் போல, பேசிக்கொண்டிருந்தபோது விட்ட இடத்திலிருந்து இயல்பாகத் தொடங்குவதைப் போல என்னிடம் விசாரிக்க ஆரம்பிப்பார். தன்னோடு பேசத் தொடங்குபவரை சௌகரியமாக உணரவைக்கும் அவரது இயல்பு அது. ஒருமுறை கன்னியாகுமரியில் காலச்சுவடு நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் சந்தித்தபோது—அது ஒரு காலை வேளை—பார்த்தவுடனேயே “எப்படியிருக்கீங்க? கன்னியாகுமரியைத் திட்டினீங்களாம், கேள்விப்பட்டேன்” என்றார் சிரித்துக்கொண்டு. அவர் குறிப்பிட்டது  ‘கன்னியாகுமரி’ நாவலை. என் காரணங்களை அடுக்கத் தொடங்குவதற்கு முன்பு ஒரு வாசகர் பட்டாளம் அவரைச் சூழந்துகொண்டுவிட்டது.


 ‘கன்னியாகுமரி’ வேண்டுமானால் எனக்கு அத்தனை சுவாரசியம் தராது இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய பல நாவல்கள், சிறுகதைகள் எனக்குப் பிடித்தவை. பின்தொடரும் நிழலின் குரல், ஊமைச் செந்நாய், காடு, டார்த்தீனியம்…. இப்படிப் பல. சமீபத்தில் கொரானா காலகட்டத்தில், இரண்டு அலைகளிலும் ஏற்பட்ட முடக்கத்தின்போது அவர் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் உலகத் தரமான சிறுகதைகள் பல உண்டு. அவருடைய சிறுகதைகளுக்காகக் காத்திருந்த நாட்கள் அவை. அப்போதுதான் நான் குறுங்கதைகள் எழுதத் தொடங்கியிருந்தேன். நான் எழுதியது கொஞ்சம் என்றாலும் அவருடைய படைப்பூக்கத்தின் வேகம் எனக்குத் தந்த ஊக்கம் மிகப் பெரிது.


அதற்கு முன் அவருடைய எழுத்துக்காகக் காத்திருந்த இன்னொரு காலகட்டமும் உண்டு.  ‘இரவு’ நாவலின் அத்தியாயங்களை அவர் தனது இணையதளத்தில் பகிர்ந்துகொண்ட காலகட்டம் (2010) அது. ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் அவர் தளத்தில் அத்தியாயங்கள் ஏற்றப்படும். ஒவ்வொரு மதியமும் அமெரிக்க நேரத்தில் அவற்றை நான் வாசித்துவிடுவேன். மனக்கிளர்வையும் வினோதப் பரவசத்தையும் தந்த நாவல் அது. பல முறை அந்த நாவல் குறித்த என் ஈடுபாட்டை நான் நண்பர்களோடும் சமூக வலைதளத்திலும் பகிர்ந்திருக்கிறேன். அந்த நாவலைக் குறித்து எப்போதோ எழுதியிருக்க வேண்டும். நடக்கவில்லை. ஜெயமோகனின் அறுபதாவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படும் இத்தருணத்தில் அந்த நாவலை நினைவுகூர்வது எனக்கு மகிழ்வளிக்கிறது. தனிப்பட்ட முறையிலுமானது இந்த மகிழ்வு. 

ஜெயமோகனின் இந்த நாவலைப் பற்றி நான் எழுதுவது, ஏன் இந்தப் பிரதி என்னைக் கவர்ந்தது என்பதையும் எழுதிப் பார்ப்பதாகும்.  ஒவ்வொரு அத்தியாயத்தின் முகப்பாகவும் இடம்கொண்டிருக்கும் கவிதைகள், கவிஞராக என் கரத்தைப் பற்றி இழுத்ததாலா?   “கங்குல் வெள்ளம் / கடலென அலைக்கும் / நெஞ்சப் புணை என் / கைநழுவிச் செல்லும்,” போன்ற கவிதை வரிகள் தந்த அக அலைக்கழிப்பா? அல்லது தூலமாக வரும் கவிதை வரிகளைத் தாண்டியும் கவித்துவத்தில் மெருகேற்றப்பட்ட கனவுச் சித்திரங்களாக விரியும் கதைக் காட்சிகள் அளித்த வாசிப்பின்பமா?   “எதிர்த்திசையில் இருந்து சுழற்றி எறியப்பட்ட முல்லைமலர்ச் சரம் போல நெளியும் அரைவட்டமாக [கொக்குகள் பறந்தன],”   “காயல் கரும்பச்சைத் தைலம் போல நெளிந்தது”  போன்ற உவமைகளின் சௌந்தர்யமா? ஒன்று மட்டும் நிச்சயம். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து இக்கட்டுரைக்காக நாவலை வாசிக்க எடுத்தபோது முதன்முதலில் வாசிக்கையில் கிட்டிய குறைவுபடாத அதே பூரிப்பு ஏற்பட்டது. கிளாசிக்ஸ் என்று கருதத்தக்க நாவல்கள் மட்டுமே  இம்மாதிரியான உணர்வுநிலையைத் தருகின்றன. 


இந்த உணர்வுநிலையை மேன்மையை, உன்னதத்தைத் தொட்டுவிடும் ஒன்றாக sublime என்பதாகக் கூற முடியும். அது நாவலில் கதையாடலுக்கு உள்ளே தோய்வதாகவும், அதே நேரத்தில் வாசிக்கையில் பிரதியின் ஊடாக வாசகர் அடையக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. ஒருவர் அடையக்கூடியது என்ற விவரணைகூட அத்தனை சரியில்லை. ஏனெனில் ஒருவர் தன்னை இழத்தலின்றி அடைதல் நடக்காது.  “ஆழ்தல் என்பது ஒவ்வொன்றாகக் கைவிடுதல்தான். ஏனென்றால் நாம் அப்போது அவையனைத்தையும் நம்முடையனவாக்கியிருக்கும் நம்மையே படிப்படியாகக் கைவிடுகிறோம்” என்று நாவலின் தொடக்கத்தில் வரும் ஆழ்தலையே வேறு வார்த்தையில் நான் இங்கே குறிப்பிடுகிறேன். கதைப் பிரதியின் உள்ளுக்குள் நிகழும் ஆழ்தல் வாசிப்பிலும் நடக்கிறது. கதாபாத்திரத்தைப் போலவே உன்னத உணர்வுக்குள் வாசகர்களும் உள்ளிழுக்கப்படுகிறார்கள். 


தன்னை இழத்தலே, கைவிடுதலே ஆழ்தலுக்கு ஒருவரைத் தயார்படுத்துகிறது. ஆனால் அது எளிதல்ல; தன்னை இழத்தலைப் பற்றிய அச்சம் நாவல் நெடுகிலுமே விரவி வருகிறது.  கதாநாயகனான சரவணனை முன்வைத்து இடையறாது இந்த அச்சம் பேசப்படுகிறது.  அச்சத்தின் உச்சகட்ட நிகழ்வென்பது பிரசண்டானந்தாவின் ஆசிரமத்தில் நடக்கும் நள்ளிரவு பூஜையில் சரவணன் மயங்கி விழுதல். நிலவொளியற்ற நடு யாமத்தில் முக்கோணங்களும் சதுரங்களும் கொண்ட கோல வடிவம் போன்ற மண்டலத்தின் மீது சக்தி கரகம் போன்ற கும்பமும் மாவும் செம்மலர்களும் பலியும் கொண்ட பூஜையில் குறும்பாட்டுக் குட்டி பலிதரப்படும்போது, சரவணனின் உடல் அந்த ஆட்டின் உடலாகவே சிலிர்த்து தன்னைப் பலிதரத் துடிக்கிறது:  “அந்தக் கத்தியை என் கழுத்தில் உணர்வது போலிருந்தது. வெட்டு வெட்டு என்று என் அகம் பொறுமையிழந்து எம்பியது.”  ஆட்டின் குருதி சிந்தப்படும்போது சரவணனின் குருதியும் சிந்தப்படுகிறது. அப்போது அவன் எண்ணங்கள் வடிந்துவிடுகின்றன.   “மனம் காலியானது” என்று விவரிக்கப்படுகிறது. தன்னைக் கைவிட முனைந்த, அதற்குத் தயாரான ஒரு கால-இட வெளியில் சரவணன் அப்போது நிற்கிறான்.


தாந்திரீக (குலாச்சார?) வழிபாடு என்றே கொள்ளத்தக்க அந்தப் பூஜையில், அதன் பின்னர் யோகினியை ஒப்ப வெளிநாட்டுப் பெண் சாதகரான லிஸ் வழிபடப்படுகிறாள். அஸ்ஸாம் காமாக்யாவில் கோவில் கருவறையில் நடைபெறும் பூஜையை ஒரு விதத்தில் நினைவுகூர வைக்கும் பஞ்ச மகார பஞ்ச தத்துவ பூஜையின் அம்சமான யோனி தத்துவ வழிபாடு.  இறை-பெண்ணின் யோனியின் விழியால் பார்க்கப்படும்போது சரவணன் மயங்கி விழுகிறான். 


இப்பூஜையின் இரு காட்சிகள் — முதலில் பலி, அடுத்தது யோனி தத்துவ வழிபாடு — தொடர்ச்சியாக வருகின்றன. யோனியின் விழியால் பார்க்கப்படும் காட்சி மட்டுமே கதையாடலில் கூறப்பட்டிருந்தால் ஆணுக்கு பெண்ணுக்கும் இடையிலான போராட்டமாக மாத்திரமே, அப்போராட்டத்தில் பெண்ணால் விழுங்கப்படுகின்ற ஆணின் அச்சத்தை விவரிப்பதாக மட்டுமே அது வாசகர் மனதில் தங்கிவிட்டிருக்கக்கூடும். மேலும், சரவணனுக்கும்  யட்சி நீலியுடன் அடையாளப்படுத்தப்படுகிற நீலிமாவுக்கும் இடையில் ஏற்படும் ஊடல்கள், ஒரு கணம் மனுஷியாகவும் இன்னொரு கணம் யட்சியாகவும் அவள் அவனுக்குத் தோன்றுவது, அவளது ”வினோதப்” பழக்கங்கள் முதலியவை இத்தகைய மேலோட்டமான வாசிப்பை நோக்கி வாசகரை நகர வைக்கலாம். 


ஆனால் ஆண் x பெண் என்ற முரணை மையப்படுத்தி இரு பால்களுக்கு இடையிலான பாலினப் போராட்டமாக மட்டும் நாவலின் இயங்கியலைப் புரிந்துகொள்ள முடியாது. ஆசிரமப் பூஜையில் சரவணன் தன்னை இழப்பது மாத்திரம் நடப்பதில்லை; இழத்தலைத் தொடர்ந்து ஒரு மேம்பட்ட இருப்போடு, தாய்மையாக உருவகப்படுத்தப்படும் ஆதி ஆற்றலை நோக்கி அவன் நகர்கிறான் / நகர்த்தப்படுகிறான்.  தன்னை இழத்தலும் ஆதி ஆற்றலை நோக்கிய நகர்தலும் அடுத்தடுத்து வரும் தருணங்களாகக் காட்டப்படுகின்றன. ஆதி ஆற்றல் நாவலின் சில இடங்களில் பெண் தெய்வத் தன்மையுடன் சமானப்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நாவலில்  பிரபஞ்சத்தின் படைப்புக் காரணமாகவும் விளைவாற்றலாகவும் பால் அடையாளம் களைந்தும் அது காட்டப்படுகிறது. பெண்ணாகவும் பிறிதொன்றாகவும், பிரபஞ்சக் காரணமாகவும் விளைவாகவும் துலங்கும் எல்லையிலா ஆற்றல் அது. ஆதி ஆற்றலை நோக்கிய நகர்தல் என்பது அதில் கலந்துவிடும் விழைவோடு, அதில் ஒரு பகுதியாகத் தன்னுணர்வின்றி மாறியேவிடுவது. சரவணனை முன்வைத்து இதைப் பற்றிச் செல்லும் கதையாடலில் நீலிமாவுக்கு அதையொட்டிய பங்களிப்பு மாத்திரமே வெளிப்படையாகத் தரப்படுகிறது. எர்ணாகுளத்தில் நீலிமா சாதகராக இருந்தாளா, சாதனைக்கான கருவியாக இருந்தாளா, அல்லது இரண்டுமாகவா? எர்ணாகுளத்திலிருந்து சென்னைக்கு ’அழைத்து’வரப்பட்ட பின் அவள் ஏற்ற இந்த பாத்திரங்களில் எது நிலைத்தது? எது மாறியது? நீலிமாவின் பார்வையிலிருந்து வேறொரு நாவலை எழுதுவதற்கான சாத்தியம் இந்த பிரதியில் உள்ளுறையாகத் தரப்படுவதே இந்த நாவலின் வலிமை.


 ‘இரவு’ கதையாடலின் ஒட்டுமொத்த விசையை, ஆதி ஆற்றலுக்கும் மனிதனுக்கும் இடையிலான இடைவெளியை அழிப்பதை நோக்கிய விசை என்று நம்மால் கருத முடியும். ஒட்டுமொத்த விசையை முன்நகர்த்த சில முரண்களைக் கதையாடல் கட்டியமைத்துக் கலைத்துப் போடுகிறது. பகல் x இரவு, மேல் சருமம் x உயிரியக்கம்,  பெண் x யட்சி,  ஜாக்ரத் நிலை x ஸ்வப்ன நிலை என்று அடுக்கிக்கொண்டே, அவற்றின் ஊடாகப் பின்னிப் பிணைந்து செல்கிறது கதையாடல். இந்த எதிர்வுகளின் முதல் பதங்கள் குறிப்பவை எல்லாம் பரிச்சயமானவை, எல்லைகளுக்குள் அடங்குபவை அல்லது புரிபடும் எல்லைகள் கொண்டிருப்பவை. இவற்றின் இரண்டாவது பதங்கள் குறிப்பவை சட்டெனப் புரிபடாதவை, ஆழத்தையோ உக்கிரத்தையோ பரவசத்தையோ கொண்டிருப்பவை. உதாரணமாக, இரவைப் பற்றி நாவலின் ஒவ்வொரு அத்யாயத்துக்குள்ளும் முகப்புக் கவிதைகள் இரவின் முடிவிலித் தன்மையையும் பகலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அதன் பரிணாமங்களையும் பேசுகின்றன. 


//பதில் இல்லாத வினா

இவ்விரவு

பதிலற்றவை முழுமையானவை

முடிவிலாதவை//

//எல்லையற்ற தூரிகையொன்றின் நுனியில்

சொட்டி நிற்கும் கரும் சாயம்

இந்த இரவு//

போன்ற கவிதை வரிகளை எண்ணிப் பார்க்கலாம். 


மேல் பத்தியில் நான் குறிப்பிட்ட எதிர்வுகளில் வருகின்ற பதங்கள் குறிக்கின்ற பொருள்களை மிக மெல்லிய கோடுகளே பிரிக்கின்றன. இவை மெல்லிய கோடுகள் மாத்திரமே. மற்றபடி இந்த வகைமைகள் மூடிய பெட்டிக்குள் அடைபட்டவை இல்லை. இதைப் புரிந்துகொள்ளாதபோது வேறொரு ஒழுக்க மனோபாவம் பற்றிக்கொண்டுவிடும். அப்படியொரு ஒழுக்க மனோபாவத்தைப் பற்றிக்கொண்ட முகர்ஜியின் மதிப்பீட்டில் யட்சியாக இருந்த கமலா பிரசண்டானந்தாவுடன் பகலில் உறவுகொள்ளும்போது சாதாரண மனுஷியாக வீழ்ந்துவிடுகிறார். தண்டனை தரும் உரிமையை முகர்ஜி கையிலெடுத்துக்கொள்கிறார். மாறாக, சரவணனைப் பொறுத்தவரை  முதல் வகைமைகளுக்கும் இரண்டாம் வகைமைகளுக்கும் இடையிலான அலைக்குறுதலுக்கு அவன் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். முதல் வகைமைகள், அதாவது பகலில் வாழ்வது, அன்றாடம் அவன் பார்க்கும் பெண்கள், ஜாக்ரத் நிலை முதலியவை அவனுக்கு வெகுவாகப் பரிச்சயமானவை. ஆனால் இரண்டாம் வகைமைகளான இரவு, யட்சி முதலியவை அவனைக் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்துபவை. 


அச்சம் எதனால்?“இரவுக்கு ஆயிரம் கண்கள்” என்ற பி.சுசீலாவின் பாடல் refrain ஆக நாவலில் தொடர்ந்து வருகிறது. ரொமாண்டிக் ஆக இரவை விவரிக்கும் பாடல் மட்டுமே அல்ல இது. பகலின் பார்வையை விட இரவில் பார்வை பன்மடங்கு கூர்மையானது. பகலைவிட இரவு பன்மடங்காக நம்மைப் பார்க்கிறது. பார்ப்பதிலிருந்து பார்க்கப்படுவதற்கு இரவில் நாம் நகர்த்தப்படுகிறோம். Gaze இங்கே தலைகீழாகிறது. இரவின் இருள் மாத்திரமே நம்மைப் பார்ப்பதில்லை; இரவில் காயல் நம்மைப் பார்க்கிறது; கோயில் குளத்தில் பூத்திருக்கும் அல்லிகள் கண்விழித்துப் பார்க்கின்றன; ஏன், சாக்கடைக்குள்ளிருந்து மினுமினுத்து எலிகள் பார்க்கின்றன; பச்சைக் கண் ஜொலித்து மரநாய் பார்க்கிறது; காடு பார்க்கிறது. இப்படி பற்பல கண்களால் இரவு நம்மைப் பார்ப்பதால் நாம் அச்சப்படுகிறோம். ஆனால் பகலில் இரவு இருந்த தடமே இல்லை. இரவுக் காட்சிகள் கனவாகக் கலைந்து கரைந்தேவிடுகின்றன.


சரவணனின் அச்சத்துக்கு ஒரு காரணம் இரவு வாழ்க்கையின் அங்கத்தினனாக அந்த வாழ்க்கை சொப்பனம் போல என்று வேண்டுமானாலும் கலைந்துவிடலாம் என்பதால் மட்டுமல்ல, அந்த சொப்பனம் போன்ற இரவு வாழ்க்கை அவன் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதாலும்தான். இதைப் பிரசண்டானந்தா சரவணனிடம் தெரிவிக்கிறார்.  சொப்பனத்தில்தான் எல்லாமே உண்மை வடிவில் உள்ளன என்றும் கூறுகிறார். சரவணன் இரண்டாம் வகைகளையே, அதாவது அவற்றை உள்கொண்ட வாழ்தல் முறையையே தேர்ந்தெடுக்கிறான். நாவலாசிரியரின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்  “உண்மையை” நோக்கிச் செல்லும் வாழ்தல் அது.  


 “உண்மை”யை நோக்கிய வாழ்தலை ஒருமையான ஆதி ஆற்றலில் தன்னை இழந்து அதில் கரைதல் என்று கதையாடல் சுட்டுகிறது. திட்டமிட இயலாத, கடும் சவால்களை நம் முன் எறியக்கூடிய வாழ்தல் முறை அது. புலன்களுக்குத் தெரியாத ஆழத்தில் தன்னைக் கைவிட்டுவிட்டு மூழ்கியாக வேண்டும். அடுத்தடுத்த நிலைகள், கதவுகள் திறக்கலாம். திறக்கப்படாவிட்டால் திரும்பவும் ஒருவர் நீரில் மேற்பரப்புக்கு எண்ணெய் நுரையாக, உடையும் குமிழியாக, பிளாஸ்டிக் உறையாகத் தூக்கியெறியப்படலாம். சாதகரின் சாதனைப் பாதையில் எந்த உள்ளுணர்வும் பிறர் அனுபவமும் உதவப்போவதில்லை. உபதேசங்கள் ஓரளவுக்கு மேல் செல்லாதவை.


எளிதான, பழகிய, உலகியலில் லாபகரமான பயணத்திலிருந்து முற்றிலும் விலகி புதிரான, சிக்கலான, உக்கிரமான பயணத்தைச் சரவணன் ஏன் தேர்ந்தெடுக்கிறான்? ஏனெனில் ஹெரால்ட் ப்ளூம் ஷெல்லியின் வரிகளைச் சுட்டிக் கூறுவதைப் போல  “உன்னதம் என்பதன் பணி  கடினமான ஈடுபாடுகளுக்காக அவற்றைவிட எளிய இன்பங்களைத் துறப்பதற்கு ஒருவரை இணங்கச் செய்வது.” நாவலில் ஓரிடத்தில்,  “என் ஒற்றை வரியே இதுதான். நான் நெடுஞ்சாலையில் நடக்க விரும்பவில்லை. இழுத்துக் கட்டிய கம்பிமீது அந்தர வெளியில் நடக்க விரும்புகிறேன்” என்கிறான் சரவணன். இழுத்துக் கட்டிய கம்பிமீது அந்தர வெளியில் நடப்பது உச்சபட்சமான விழிப்பு நிலையில் வாழும்போது நடப்பது மாத்திரமல்ல; அதே விழிப்பு நிலையில் சாவை எதிர்கொள்ளும் சாதனை நிலையும் அதற்கான தயாரிப்பும் அது. 


கட்டுரையின் தொடக்கப் பகுதியில் உன்னதம் என்பது பிரதிக்குள் இயங்குவது மட்டுமல்ல, வாசகர் அடைகின்ற, ஆழ்கின்ற ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்நாவலைப் பொறுத்து இரு தளங்களில் ஒரு வாசகரிடத்தில் அது நடக்கக்கூடும். ஒன்று, கதைசொல்லியான சரவணனுடன் வாசகர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது. அவனோடுகூட அவனுடைய அல்லாட்டங்களையும் அச்சங்களையும் அவனுக்கேற்படும் அதிர்ச்சிகளையும் பரவசங்களையும் வாசகர் அதே அளவில் உணர்வது. வாசிப்பில் அவனுடன் சேர்ந்து அந்தர வெளியில் நடப்பது.  “நான்” என்று தன்மையிடத்தில் வரும் கதைசொல்லியின் தன்னிலையில் வாசகர் பங்கெடுத்துக்கொள்ளத் தடையேதுமில்லை. 


மற்றொரு தளத்தில் காட்சி விவரிப்புகளின் அழகியல் தாளகதியோடு, சமயத்தில் சன்னதத் தன்மையோடும் இருப்பதாலும் உன்னதம் மேலிட்ட உணர்வு வாசகருக்குக் கிட்டக்கூடியதாக உள்ளது.  குறிப்பாகக் கதை நிகழ்வுகளோடு இயைந்து வரும் வண்ணமயமான, ஒளியும் இருளும் முயங்கும் இயற்கைக் காட்சிகள் அத்தகைய உணர்வைக் கிளர்ந்த்துகின்றன. உதாரணமாக, மேலே விண்மீன்கள் மின்ன, காயலில் மீன் கூட்டம் பளபளத்திருக்கையில் படகில் நீலிமாவும் சரவணனும் செல்லும்போது வரும் விவரிப்பு. “மீன்படலம் ஒற்றை உடலாக ஒற்றை உயிராகத் தெரிந்தது. ஒரே கணத்தில் தலைமுதல் வால்வரை அசைவதுபோல ஆயிரக்கணக்கான மீன்கள் சுழன்று திரும்பின. திரும்பவும் ஒரு கணத்தில் மொத்த மீன்களும் காணாமலாகி மறு கணத்தில் ஒளியுடன் மீண்டன.  சட்டென்று ஏதோ அந்தரங்க நினைவுக்குச் சென்றவை போல மீன்கள் அனைத்துமே குப்புறச் சரிந்து ஆழத்தில் மறைய விண்மீன்கள் மட்டும் நலுங்கி நலுங்கி நின்றன. சிம்பனி இசை முடிந்த பின் ஒற்றைத் தந்தி போல ஒரேயொரு வெள்ளி மீன் மேலே வந்து தயங்கி நின்று பின்பு சுழன்று கீழிறங்கியது….” என்று போகிறது அந்த விவரிப்பு. 


தன் இருப்பை மறந்து பிரபஞ்சத்தின் ஒற்றை இருப்பாக சரவணன் உணர்கின்ற தருணம் அது. நீலிமாவும் சரவணனும் படகில் உறவுகொள்கிறார்கள். நாவலில் பின்னர் இந்தத் தருணத்தை ஒப்பிடத் தக்க கனவுத் தருணத்தை தாமஸிடம் நினைவுகூர்கிறான் சரவணன். காயலும் இரவும் மனிதர்களும் பிற உயிரிகளும் ஒன்றோடு ஒன்றாகும் இந்தப் பகுதியைப் பல தடவை நான் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் விண்மீன்களில் ஒன்றாக, மீன் கூட்டத்தின் பகுதியாக, அவற்றின் ஒளிர்கண்களாக, சரவணனாக, படகாக, நீலிமாவாக, காயலாக, அது சென்று சேரும் கடலாக மாறும் உணர்வு. இதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வது? உன்னதம் என்பது சொற்களுக்குள் அடங்குவதில்லை. அதை சரவணனைப் போல கனவாகக் கண்டு கண்டு மீட்டலாம். வாசகராக சாட்சி கூறலாம். ஆனால் மொழி கைவிட்டுவிடும் பிரதேசம் அது. அதனால் இந்த இடத்தில் நிறுத்திக்கொள்கிறேன்.


 ‘இரவு’ இதைவிடவும் நீண்ட வாசிப்பை, ஒரு நூலுக்கான வாசிப்பைக் கோருவது. பொன் வைக்க வேண்டிய இடத்தில், பக்க எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, ஒரு மலரை வைப்பதே என்னால் ஆனது. ஜெயமோகனும் அவர் படைப்புகளும் அவர் உற்றாரும் சுற்றமும் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.  



வரப்புயர்த்தி உயரும் கோன் - எம்.கோபாலகிருஷ்ணன்

வழக்கம்போல ஒரு சனிக்கிழமையன்று கோவையில் விஜயா பதிப்பகத்துக்குசென்றபோது வேலாயுதம் நிலைகொள்ளாத பரவசத்திலிருந்தார். ‘வாங்க கோபால், இந்த நாவலைப் பாருங்க’ என்று உற்சாகத்துடன் ஒரு புத்தகத்தைக் கையில் தந்தார். நான் புரட்டிக் கொண்டிருக்கும்போதே தொடர்ந்து பேசினார் ‘என்னமா எழுதிருக்கான்யா. சின்ன வயசுதான். ஆனா எழுத்து எப்பிடி பேசுது பாருங்க. எத்தனையோ நாவலை நானும் படிச்சிருக்கேன், ரசிச்சிருக்கேன். இப்பிடி ஒரு நாவலைப் படிச்சு ரொம்ப வருஷமாயிருச்சு. நீங்க அவசியம் படிக்கணும்.’


‘அடுத்த வாரம் இங்க ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணிருக்கேன். அவசியம் வந்துருங்க’ என்றும் சொன்னார். 


அந்தக் கூட்டத்துக்கு சற்று தாமதமாகச் சென்றேன். நாவலாசிரியர் மிகுந்த நம்பிக்கையுடன், அந்த வயதுக்கேயுரிய துடுக்குத்தனத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. 


அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழ் நாவல்கள் குறித்த அவரது கருத்து தமிழகமெங்கும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 


வேலாயுதம் பரிந்துரைத்த அந்த நாவல் ‘ரப்பர்’. 


அன்று கோவையில் ஜெயமோகனை அந்தக் கூட்டத்தில் பார்த்தபோதும் சந்திக்கவோ அறிமுகப்படுத்திக் கொள்ளவோ இல்லை. கொஞ்சம் தயக்கமாக இருந்தது, பயமாகவும். தன் கருத்துகளை எடுத்துரைக்கும்போது எந்தத் தயக்கமும் இல்லை. கோவை ஞானி, நாஞ்சில்நாடன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று யோசிக்கவில்லை. இத்தனைக்கும் மூத்த எழுத்தாளர்கள் பலரையும் அன்றுதான் அவர் முதன்முதலாகச் சந்திக்கிறார். 


***

அதே காலகட்டத்தில் சேலத்தில் ஒவ்வொரு மாதமும் நண்பர்களின் ஏற்பாட்டில் எழுத்தாளர் சந்திப்பு நடப்பதுண்டு. வெவ்வேறு துறைகளில் வேலை பார்க்கும் நண்பர்கள் தங்குவதற்கான வீடு அது. நண்பர்களுடன் சேர்ந்து எழுத்தாளரும் தரையில் அமர்ந்திருக்க காலை முதல் மாலை வரையிலும் உரையாடல் தொடரும். சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், தேவதச்சன், ஆகியோர் அந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். ஜெயமோகன் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டேன். 


அன்றைய சந்திப்பில் அவசியம் வாசிக்கவேண்டிய மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியலைக் குறிப்பிட்டார் ஜெயமோகன். அவ்வளவு எளிதில் புத்தகங்களைக் கண்டடைய முடியாத காலம் அது. அந்த நூல் பட்டியலை வைத்துக்கொண்டு வெவ்வேறு ஊர்களில் நூலகங்களில் அலைந்ததுண்டு. நண்பர்களிடம் சொல்லிவைத்து கடனாகப் பெற்று வாசித்ததுண்டு. ‘நீலகண்ட பறவையைத் தேடி’, ‘ஆரோக்கிய நிகேதனம்’, ‘கறையான்’, ‘தர்பாரி ராகம்’, ‘அக்னி நதி’, ‘ஒரு குடும்ப சிதைகிறது’ போன்ற நாவல்களை அறிந்ததும் பிறகு தேடி வாசித்ததும் அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான். 


தமிழில் வாசிக்கவேண்டிய புத்தகங்களை சீராகவும் திட்டமிட்டும் வாசித்தால் அதிகபட்சம் ஒரே வருடத்தில் முக்கியமான அத்தனை நூல்களையும் வாசித்துவிட முடியும் என்ற தெளிவு கிட்டியது. கூடவே, எழுத்தாளனாகும் எண்ணமிருந்தால் இதைச் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் புரிந்தது. 


***

ஜெயமோகனின் வளர்ச்சிக்கு தொடக்கத்தில் உறுதுணையாக அமைந்தவை என்று மூன்று பத்திரிக்கைகளைக் குறிப்பிடலாம். முதலாவது, கோவை ஞானியின் ‘நிகழ்’ காலாண்டிதழ். ஜெயமோகனின் முக்கியமான சிறுகதைகளான ‘படுகை’, ‘திசைகளின் நடுவே’, ‘போதி’ உள்ளிட்ட கதைகளை ‘நிகழ்’ வெளியிட்டது. தொடர்ந்து கடிதங்களின் வழியாக ஞானிக்கும் ஜெயமோகனுக்கும் இடையே பல விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. 


அடுத்தது, கோமல் சுவாமிநாதனின் பொறுப்பில் வெளிவந்த ‘சுபமங்களா’ மாத இதழ். தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் ஜெயமோகனின் எழுத்துகள் இடம்பெற்றன. வரலாறு, தத்துவம், ஓவியம், மேற்கத்திய சிந்தனை மரபு, புகழ்பெற்ற நாவல்கள் என பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் செய்வதற்கு இடமளித்தது. ராஜன், கெ.விஸ்வநாதன் உள்ளிட்ட பெயர்களில் அவரது ஆக்கங்கள் வெளியாயின. ‘ஜகன்மித்யை’, ‘வெள்ளம்’, ‘ரதம்’ போன்ற புகழ்பெற்ற கதைகளும் வெளியாயின.


மூன்றாவது ‘இந்தியா டுடே’ தமிழ் மாத இதழ். ‘விஷ்ணுபுரம்’ நாவல் வெளியான சமயத்தில் ‘தமிழ் இலக்கியத்தின் நம்பிக்கை நட்சத்திரம்’ என்று குறிப்பிட்டது. ‘ஆயிரம் கால் மண்டபம்’, ‘நாகம்’, ‘தாண்டவம்’, ‘காடேற்றம்’ உள்ளிட்ட கதைகளை வெளிட்டது. 


அதே சமயத்தில் அப்போது வெளியான எல்லா இதழ்களிலுமே அவர் எழுதியிருக்கிறார். கதைசொல்லி, சதங்கை, புதிய நம்பிக்கை, ஓம் சக்தி, கணையாழி, கனவு போன்ற இதழ்களில் அவரது கதைகள் வெளிவந்துள்ளன. 


ஆரம்பத்தில் அவர் கவிதைகள் எழுதியதுண்டு. காலச்சுவடு சிறப்பு மலர், மீட்சி இதழ்களில் வெளியாயின. தொகுப்பாக்கப்படவில்லை. ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் உள்ள கவிதைகள் அவர் எழுதியவையே. 1990களில் சுப்ரபாரதிமணியன் தொகுத்த ’12 நெடுங்கவிதைகள்’ தொகுப்பில் ஹம்பியைக் குறித்து ஒரு நெடுங்கவிதை எழுதியிருக்கிறார். 


நாடகங்கள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. ‘வடக்கு முகம்’ என்ற நாடகத் தொகுப்பு முக்கியமானது. 


***

1995ம் ஆண்டில் மருத்துவர் ஜீவா உதகையில் ஏற்பாடு செய்த ‘சோலைச் சந்திப்பு’ ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தது. கோவை ஞானி, எஸ்.என்.நாகராசன், நாஞ்சில்நாடன், நம்மாழ்வார் என முக்கியமான ஆளுமைகள் பலரும் அதில் பங்கேற்றிருந்தனர். அப்போது ஜெயமோகன், பாவண்ணன், செல்வராஜ், கோவிந்தராஜ் ஆகிய நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்து உரையாடவும் விவாதிக்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது. 


சோலை சந்திப்பு

நிர்மால்யா உதகை நாராயண குருகுலத்தைப் பற்றியும் குரு நித்ய சைதன்ய யதியைப் பற்றியும் சொல்கிறார். ஆனால், அப்போது சந்திக்க வாய்க்கவில்லை. 


உதகை சந்திப்பைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் தர்மபுரியில் நண்பர்கள் ஒன்றுகூடினோம். செங்கதிர், ஆர்.குப்புசாமி, ரிஷ்யசிருங்கர், செல்வராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்ட நண்பர்கள் ஒன்றுகூடினோம். 


அந்தச் சந்திப்பு சனிக்கிழமைக் காலை பத்து மணிக்குத் தொடங்கும்.  ஒரு புத்தகத்தை அல்லது ஒரு கட்டுரையை வாசிப்பது, புதிதாக வெளியான நாவலைப் பற்றிய விவாதம், பிற மொழி நாவல்கள் கவிதைகளை சிறுகதைகள் குறித்த உரையாடல் என்று திட்டமிட்டபடி நகரும். இரண்டு நாட்களுக்கான வரைவுத் திட்டம் முன்பே கடிதம் வழியாகச் சொல்லப்பட்டிருக்கும். பதினோரு மணிக்கு தேநீர், உணவு இடைவேளை, மூன்றரை வரைக்கும் மீண்டும் வாசிப்பு, மாலை ஐந்து மணிக்கு நீண்ட ஒரு நடை, ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை வாசிப்பு, இரவு உணவு, அதன் பிறகு தூக்கம் வரும்வரை உரையாடல் விவாதம் அனுபவப் பகிர்வுகள் என்று நீளும். 


காலையிலேயே அருண்மொழி எல்லோருக்கும் சமைத்து வைத்திருப்பார். இரண்டு நாட்களும் தேநீர், உணவு எல்லாம் வீட்டில்தான். அஜிதன் அப்போது சிறு குழந்தை. ஆனாலும், எந்தத் தடங்கலும் இல்லாமல் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும்.


மறுநாள் மதியம் நான்கு மணிவரையிலும் தொடரும். பிறகு நண்பர்கள் ஊருக்குப் புறப்படுவோம். அடுத்த வாரத்துக்கான திட்டங்கள் தயாராகி இருக்கும். அந்த நாட்களில் நாங்கள் வாசித்த மிக முக்கியமான கட்டுரை டி.எஸ்.எலியட்டின் Tradition and Individual Talent என்ற நீண்ட கட்டுரை. தொடர்ந்து நான்கு வாரங்கள் அதை வரிவரியாக வாசிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது. அப்போது ஒளிநகல் வசதிகள் அவ்வளவாக இல்லை. எனவே, எழுதும்போதே கார்பன் வைத்து எழுதப்பட்டது. பிறகு நண்பர்கள் அதை பிரதியெடுத்துக்கொள்வார்கள். 


அந்தக் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்ட பிறகு இரண்டு நாட்கள் விவாதங்கள். முடிவில், அந்தக் கட்டுரையை ஒட்டி ஆளுக்கொரு கட்டுரை எழுதவேண்டும் என்பது வீட்டுப்பாடமாக அமைந்தது. ‘கலாச்சாரம் என்றால் என்ன?’ என்ற தலைப்பில் எழுதினேன். அந்தக் கட்டுரையைப் பற்றி ஜெயமோகன் யாரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, சில நாட்கள் கழித்து பாவண்ணன் அதை அனுப்பச் சொன்னார். சில மாதங்கள் கழித்து அவரே தகவல் சொன்னார், கனடாவிலிருந்து வெளியான ஒரு மலரில் அது பிரசுரிக்கப்பட்டிருப்பதாக. அந்தக் கட்டுரைக்கான சன்மானமாக நான் பெற்றது பத்தாயிரம் ரூபாய்.


ஊட்டி முகாம் 

அதே சமயத்தில், நித்ய சைதன்ய எழுதிய ஈஸா வாஸ்ய உபநிஷத் – ஓர் அனுபவம் என்ற நூலை நான் மொழிபெயர்த்தேன். நண்பர்களுடன் சேர்ந்து நூலை ஒப்புநோக்கி மொழியாக்கத்தை செப்பனிட்டோம்.


இந்தச் சந்திப்புகள் இலக்கியம், வாசிப்பு என்பதைப் பற்றிய தெளிவைத் தந்ததோடு எழுத்தைக் குறித்த தீவிரத்தை நோக்கி நகர்த்தியது. அதுவரை எந்த இலக்கோ தீவிரமோ இல்லாமல் மனம்போன போக்கில் புத்தகங்களை வாங்குவேன், வாசிப்பேன். அதை ஒருமைப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் உதவியாக அமைந்தன. மொழிபெயர்ப்பின் சில அடிப்படைகளை அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு கட்டுரையை மொழிபெயர்ப்பதற்கும் கவிதையை மொழி மாற்றம் செய்வதற்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடிந்தது. 


எழுதவேண்டும் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியதோடு அந்த எண்ணத்தை தீவிரமாக மாற்றியது தர்மபுரி சந்திப்புகள்தான். 


பகல் முழுக்க வாசிக்கும்போதும் விவாதிக்கும்போதும் இருந்த தீவிரமான ஜெயமோகன் உருமாறி வேறொரு ஆளாக இருப்பார். மலையாள, தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய நினைவுகள், சுவாரஸ்யமான சம்பவங்கள், பகடி, கிண்டல், விமர்சனம் என்று வெடிச் சிரிப்புடன் உற்சாகம் பெருக்கெடுக்கும். அடுத்தடுத்து உரத்த சிரிப்பலைகள். சமயங்களில் பக்கத்து வீட்டிலிருந்து யாரும் ஆட்சேபிக்கக்கூடும் என்று பயமாகவும் இருக்கும். ஒரு சனிக்கிழமை இரவில் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். 


கோணங்கியைப் பற்றிப் பேச்சு வந்தது. பல்வேறு ஊர்களில் அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களைப் பற்றி சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார். 


ஒரு இலக்கிய வாசகர், நண்பரின் வீடு. ஒண்டுக்குடித்தனம். மிகச் சிறிய வீடு. வசதிகளை எப்போதும் பொருட்படுத்தாத கோணங்கியிடம் மறுநாள் காலையில் எழுந்ததும் நண்பர் கேட்கிறார் ‘கோணங்கி, உங்களுக்குப் பாடத் தெரியுமா?’


‘இல்லையேப்பா. என்ன விஷயம்?’


‘இல்லேன்னாலும் பரவால்ல. உங்களுக்குத் தெரிஞ்சதை சத்தமா பாடுங்க.’


‘எதுக்கு?’


‘இந்த டாய்லட் கதவுக்கு தாப்பாழ் இல்ல.’


ஓயாமல் அலைந்து திரியும் கோணங்கியின் சாகசக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இரவு ஒரு மணிக்கு உள்ளே செல்கிறோம். வாசல் விளக்கு அணைக்கப்பட்டது. கதவைச் சாத்திவிட்டு படுத்தோம். இன்னும் பேச்சு ஓயவில்லை. அரைமணி நேரம் கடந்திருக்கும். வாசலிலிருந்து ஒரு குரல். செங்கதிர் என் தோளைத் தொட்டு கவனிக்கும்படி சொல்கிறார். மீண்டும் அந்தக் குரல் ஜெயமோகனின் பெயரைச் சொல்லி அழைக்கிறது. எழுந்தேன். விளக்கைப் போட்டுவிட்டு கதவைத் திறக்கிறேன். 


மடித்துக் கட்டிய வேட்டியும் தோளில் ஜோல்னா பையுமாய் வாசலில் நின்றார் கோணங்கி.


‘என்னடா நடக்குது இங்க?’ ஆச்சரியத்துடன் எங்களைப் பார்த்தார்.


வாசலில் அப்படியே அமர்ந்தோம். சொம்பு நீரை முழுக்கக் குடித்துவிட்டு ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்துவிட்டு மறுபடி கேட்டார் ‘எல்லா ஒண்ணா சேந்துட்டு என்னடா பண்றீங்க?’


சத்தத்தையும் சிரிப்பொலியையும் கேட்டு தூக்கக் கலக்கத்துடன் அருணா வெளியில் வந்தார் ‘இன்னும் தூங்கமா இப்பிடி அரட்டையடிச்சிட்டிருந்தா நாளைக்கு காலையில என்ன…’. கோணங்கியைப் பார்த்ததும் திகைத்து நின்றார். 


‘நீங்க எப்ப?’


‘வாம்மா. இந்தக் கூட்டத்துல நீயும் ஒருத்தியா?’


அருணாவுக்கு தூக்கம் போய்விட்டது. ‘டீ போடவா?’


கோணங்கி சந்தோஷத்துடன் தலையாட்டினார் ‘பசிக்குது’ என்றவர் உடனடியாகவே ‘இதுக்காக நீ அடுப்பு மூட்டாதம்மா. எதாவது இருந்தா சொல்லு. இல்லேன்னா டீ போடு. போதும்.’


அருணாவுடனே உள்ளே சென்றவர் ஒரு பாத்திரத்தில் சோறும் குழம்புமாக வந்தார். ‘அருணாவுக்கு தெரியும், இன்னிக்கு வருவேன்னு. அதான் எடுத்து வெச்சிருக்கு’ பிசைந்து அள்ளித் தின்றபடியே பேசலானார். 


சற்று நேரம் ஓய்ந்திருந்த சிரிப்பும் சத்தமும் மீண்டும் அந்த இரவில் ஒலிக்கத் தொடங்கிற்று.


இரவு முழுக்கப் பேச்சு. விடிந்ததும் அப்படியே எழுந்து நடந்தோம். தர்மபுரி ரயில் பாதையோரமாய் நீண்ட நடை. ஓயாத பேச்சு. உற்சாகம். சிரிப்பு. வீட்டுக்கு திரும்பியபோது வாசல்களில் கோலங்கள் பூத்திருந்தன. 


குளித்துவிட்டு எங்களுடன் சாப்பிட்டதும் பையைத் தூக்கித் தோளில் போட்டார் ‘உங்களுக்கு தொந்தரவு வேணாம். நான் கௌம்பறேன்.’


எங்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அவர் போன பின் வருத்தத்தைச் சொன்னதும் ஜெயமோகன் சிரித்தார் ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. இன்னொரு நா இதேமாதிரி அர்த்தராத்திரில வந்து கதவைத் தட்டுவார். சொல்லிட்டு சரியான நேரத்துல வந்துட்டு ரெண்டு நா தங்கிட்டுப் போனா அது கோணங்கி இல்ல.’


அந்தச் சந்திப்புகள் நடந்த சமயத்தில் அதைக் குறித்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லத் தவறியதில்லை. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, கோமல் சுவாமிநாதன், நாஞ்சில்நாடன் என்று எல்லோரிடமும் குறிப்பிட்டிருக்கிறார். 


இதன் நீட்சியாக உதகையில் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தோம். திருக்குறள், சங்கப் பாடல்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் நித்யா. தமிழ் இலக்கிய ஆர்வம்கொண்ட இளைஞர்களைச் சந்திப்பது அவருக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருந்தது. இன்னும் பல இளைஞர்கள் அங்கு வரவேண்டும், கவிதையும் இலக்கியமும் பேசவேண்டும், அங்குள்ள நூலகத்தை அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டார். கவிதை வாசிப்பு, விவாத அரங்குகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 


ஊட்டி அரங்கம் 

தொடர்ச்சியாக அவரைச் சந்தித்து உரையாடினோம். சுபமங்களா இதழில் ஓவியங்கள் குறித்த நித்யாவின் சில கட்டுரைகளை நிர்மால்யா மொழிபெயர்த்திருந்தபோதும் தமிழில் அவரைப் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம்கூட இல்லை என்பதை அறிந்தோம். அதற்கென ஒரு இதழைத் தொடங்கலாம் என்று ஜெயமோகன் தீர்மானித்தார். கூடவே, அப்போதைய தமிழ் சிறுபத்திரிக்கைகளின் பொதுவான சில அம்சங்கள் அல்லாமல் அமைந்த இதழாகவும் அமையவேண்டும் என்று எண்ணினார்.  குருகுலத்திலிருந்து அதை வெளியிடலாம் என்று யோசனை.


உதகையில் நித்யாவிடம் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தினார் ஜெயமோகன். அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. “பத்திரிக்கை நடத்துவது என்பது ஒரு புனைவாசிரியனின் வேலையல்ல. கடுமையான உழைப்பைக் கோருவது. அது அவனது கற்பனையாற்றலை, படைப்பாற்றலை உறிஞ்சிவிடும். படைப்பாளனாக இருக்க வேண்டுமா, பத்திரிக்கையாளனாக இருக்கவேண்டுமா என்று நீயே முடிவு செய்துகொள்” என்று கறாராகவே சொல்லிவிட்டார். 



நித்யாவின் இந்த முடிவு எல்லோரையும் சோர்வடையச் செய்தது. ஆனால், ஜெயமோகன் பின்வாங்கவில்லை. பத்திரிக்கையைக் கொண்டு வருவது என்பதில் உறுதியாக இருந்தார். உதகையிலிருந்து திரும்பி வருகையில் பேருந்திலேயே ஈரோடு ராஜேந்திரன், தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ‘எழுத்து’ இதழின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்ற பொருளில், இதழுக்கு  ‘சொல் புதிது’ என்ற பெயரை முன்மொழிந்தார். ஆசிரியர் குழுவில் ரிஷ்யசிருங்கர், க.மோகனரங்கன். செந்தூரம் ஜெகதீஷ், யூமா வாசுகி, அருண்மொழிநங்கை ஆகியோர். தன்னுடைய பெயர் இடம் பெறவேண்டாம் என்பதை முதலிலேயே சொல்லிவிட்டார் ஜெயமோகன். 


இதழ் குறித்து விரிவான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஈரோட்டில் இரண்டு முறை சந்திப்பு, எண்ணற்ற கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் வழியாக செம்மைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு இதழிலும் நேர்காணல், இதழ் முகப்பில் படைப்பாளியின் முகம், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இயல் சார்ந்த புத்தகப் பகுதி, பிற அறிவுத்துறைகள் சார்ந்த செறிவான கட்டுரைகள், மொழியாக்கங்கள், ஒன்றிரண்டு சிறுகதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் என்று மாதிரி இதழ் உருவாக்கப்பட்டது. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டன. நேர்காணல்கள் திட்டமிடப்பட்டன. படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கேட்டுப் பெறப்பட்டன. சந்தாதாரர்களை சேர்க்கும் முயற்சியும் நடந்தது. 


இதழ் அச்சாக்க வேலையை வசந்தகுமாரிடம் ஒப்படைக்கலாம் என்று சொன்ன ஜெயமோகன் ‘தமிழினி’ புத்தக வெளியீட்டுக்காக கோவை வரும் அவரை சந்திக்கவேண்டும் என்று தெரிவித்தார். கோவை ஆருத்ரா ஹால் அருகிலுள்ள கொடீசியா அரங்கில் புத்தக வெளியீடு நடந்தது. தமிழினி முதன்முதலாக வெளியிட்ட புத்தகங்களின் அறிமுகம். எனக்கு வசந்தகுமாரைத் தெரியாது. விழா முடிந்து அனைவரும் உணவுக்காக ரயில் நிலையம் அருகில் உள்ள கீதா கபேவுக்கு நடந்தார்கள். கோவை நண்பரிடம் வசந்தகுமார் யார் என்று விசாரிக்க அவர் அடையாளம் காட்டினார். சாப்பிட்டு முடித்துவிட்டு கீதா கபே வாசலிலிருந்த வேப்பமரத்தின் அடியில் அமர்ந்தோம். சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு விசாரித்தார். ‘விஷ்ணுபுரம்’ நாவலைப் பற்றிக் கேட்டார். அடுத்தடுத்து கேள்விகள், அதைப் பற்றிய என் அபிப்ராயங்கள் என்று சிகரெட்டுகள் புகையாகிக் கொண்டிருக்க உரையாடல் நீண்டது. கடைசியில் கையிலிருந்த ஒரு கடித உறையின் பின்பக்கத்தில் இதழ் அச்சாக்கத்துக்கான செலவைப் பட்டியலிட்டுக் கொடுத்தார். ஆயிரம் பிரதிகளுக்கான செலவு ரூ.16670. 


முதல் இதழின் வேலைகள் உற்சாகத்துடனே நடந்தன. ஜெயமோகனிடமிருந்து அன்றாடம் கனத்த கடித உறைகள் வரும். கட்டுரைகள், மொழியாக்கங்கள் என்று எண்ணற்ற ஆக்கங்கள். எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகள். எல்லாவற்றையும் படித்து, தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்பவேண்டும். சில நாட்களில் மெய்ப்பு பார்ப்பதற்காக அவை திரும்ப வரும். ஒவ்வொன்றையும் படித்து மெய்ப்பு நோக்கவேண்டும். கடைசியில் இறுதி வடிவத்தை தீர்மானிப்பதற்காக இரண்டொரு நாள் சென்னைக்கு செல்ல வேண்டும். அப்போது ராயப்பேட்டையில் இருந்த பஷீரின் அலுவலகத்தில் தங்கி இதழ் வேலையை முடித்துவிட்டு திரும்புவேன். 


1999 ஜுலை ஏழாம் தேதி என் மனைவியை தலைப் பிரசவத்துக்காக ஈரோடு மருத்துவர் அம்சா சுப்ரமணியத்தின் மருத்துவமனையில் சேர்த்தேன். காலை பதினோரு மணிக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், இரவான பின்னும் சுகப்பிரசவத்துக்காக மருத்துவர் காத்திருந்தார். அன்று மாலை மருத்துவமனைக்கு வந்த ராஜேந்திரன் அஞ்சலில் வந்திருந்த உறையைத் தந்தார். உள்ளே நித்ய சைதன்ய யதியின் முகப்புப் படத்துடன் ‘சொல்புதிது’ முதல் இதழின் இரண்டு பிரதிகள். மருத்துவமனை வாசலில் வைத்து இதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். கவனம் குவியவில்லை. ஆனாலும் மனம் நிறைந்திருந்தது. எட்டாம் தேதி விடிகாலையில் மகன் பிறந்தான். 


இதழின் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. 1999, ஜுலை பத்தாம் தேதி மயிலாப்பூர், கற்பகாம்பாள் நகரில் உள்ள கோகலே சாஸ்திரி இன்ஸ்டிட்யூட்டில் விழா நடந்தது. சுந்தர ராமசாமி முதல் பிரதியை வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக்கொண்டார். ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, மருத்துவர் ஜீவா, பிரேம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். விழா நாளில் ஜெயமோகன் கோவையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கெடுக்க நேர்ந்ததால் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. 


சொல்புதிது இதழ் வெளியீட்டு விழா 

எதிர்பார்த்தபடியே இதழுக்கு இரண்டு விதமான எதிர்வினைகளும் இருந்தன. ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி இதழ் வடிவமைக்கப்பட்டது. ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், முத்துலிங்கம் உள்ளிட்ட முன்னோடிகளின் பேட்டிகளும் பாவண்ணன், யுவன் சந்திரசேகர் ஆகிய முன்னணி எழுத்தாளர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றன. மொழி, அறிவு, தொல்படிமம், மானுட உணர்வுகள், விஞ்ஞானப் புனைவு அறிவியல், தத்துவம், வரலாறு எனும் தேடல் போன்றவற்றை மையமாகக் கொண்ட புத்தகப் பகுதிகள் வெளியாயின. நித்ய சைதன்ய யதி, ஜெயகாந்தன், ஓஷோ, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன், பாவண்ணன், யுவன் ஆகியோரின் படங்கள் முகப்பில் இடம்பெற்றன. குறிப்பிடத்தக்க புத்தக மதிப்புரைகள், கவிதைகள், சிறுகதைகள் இடம் பெற்றன. ஒவ்வொரு இதழிலும் எம்.எஸ் அவர்களின் மொழியாக்கக் கதை இடம்பெற்றது. 


அலுவலகப் பணிச் சூழல், கோவைக்கு இடமாற்றம் என்று பல்வேறு காரணங்களால் தொடர்ந்து இதழை நடத்த முடியாத சூழலில் ஐந்தாவது இதழுக்குப் பின் பொறுப்பிலிருந்து நான் விலக நேர்ந்தது.


ஈரோட்டில் அந்த இதழை பொறுப்பெடுத்து நடத்திய காலகட்டம் உண்மையிலேயே மிகுந்த நெருக்கடியான சமயம். அன்றாடம் தீராத வேலைகள். சந்தாதாரர்களுக்கு இதழை அனுப்பவேண்டும். மணியார்டரில் பணம் அனுப்புவோர்க்கு தபாலில் அனுப்பவேண்டும். இதழ் எனக்கு வரவில்லை என்று புகார் வரும். உடனே அவருக்கு மாற்று இதழை ஏற்பாடு செய்யவேண்டும். கட்டுரைகள், கதைகளை படித்து தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்பி அவற்றை மெய்ப்புப் பார்த்து இதழை அச்சுக்கு அனுப்பவேண்டும். உடனே அடுத்த இதழ் வேலை தொடங்கிவிடும். அந்த காலகட்டத்தில் என்னால் வேறு எந்த வேலையையும் செய்ய இயலவில்லை. அப்போது நித்யாவின் சொற்களை அடிக்கடி நினைத்துக்கொண்டதுண்டு. 


இதழ் நடத்தும் பணி கடுமையான உழைப்பையும் அதனால் மன நெருக்கடியையும் அளித்திருந்தது என்றாலும் இன்று திரும்பிப் பார்க்கும்போது முக்கியமான பல அனுபவங்களை அளித்திருக்கிறது என்பதை உணர்கிறேன். 


சொல்புதிது - முதல் இதழ் 

இதே காலகட்டத்தில் இன்னொரு முக்கியமான பணியைத் தொடங்கினார் ஜெயமோகன். தமிழ் மலையாளக் கவிஞர்கள் பங்கேற்ற ஒரு கவிதை அரங்கை குற்றாலத்தில் ஏற்பாடு செய்தார். குற்றாலத்தில் உள்ள கலாப்ரியாவின் இல்லத்தில் 1999 நவம்பர் 20, 21ம் தேதிகளில் நடந்தது. மலையாளத்திலிருந்து டி.பி.ராஜீவன், கல்பற்றா நாராயணன், ஆற்றூர் ரவிவர்மா, பி.ராமன், அன்வர், பி.பி.ராமச்சந்திரன், கெ.ஆர்.டோனி, ஜோசப் ஆகிய கவிஞர்கள் பங்கேற்க தமிழிலிருந்து சுந்தர ராமசாமி, கலாப்ரியா, தேவதேவன், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன், பிரேம், க.மோகனரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர். இன்றும் வியப்பையளிக்கும் முக்கியமான சந்திப்பு அது. மலையாளத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து மலையாளத்துக்கும் கவிதைகளை மொழிபெயர்த்து பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியிருந்தார் ஜெயமோகன். அத்துடன் இரண்டு நாட்களும் தொடர்ந்து கருத்துகளை மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார். மலையாளக் கவிஞர்கள் கவிதைகள் சந்தத்துடன் பாடியது தமிழ்க் கவிஞர்களுக்கு வியப்பை அளித்தது. அப்படியல்லாது சொல் ஒழுங்கையும் உள்ளார்ந்த இசைமையையும் கொண்ட தமிழ்க் கவிதைகள் அவர்களுக்கு ஆச்சரியம் தந்தன. ஆனால், அந்தச் சந்திப்புக்குப் பின் மலையாளக் கவிதைகளில் தமிழ்க் கவிதைகளின் பாதிப்பு கணிசமாக அமைந்தது. இன்றும் மலையாளக் கவிதை உரையாடல்களில் ‘குற்றாலம் எஃபக்ட்’ என்று குறிப்பிடப்படுகிறது. 


குரு நித்யாவுடன்
‘நித்யா ஆய்வரங்கம்’ என்ற பெயரில் நடந்த இருமொழிக் கவிஞர்களின் இந்தச் சந்திப்பும் பரிமாற்றமும் தொடர்ந்தது. உதகை நாராயண குருகுலத்திலும் இத்தகைய சந்திப்புகள் நடந்தன. கல்பற்றா நாராயணன், கெ.ஆர்.டோனி, டி.பி.ராஜீவன், அனிதா தம்பி ஆகியோரும் தமிழிலிருந்து நிஷா மன்சூர், முகுந்த் நாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 


இவை தவிர, நாஞ்சில்நாடன், மு.தளையசிங்கம் உள்ளிட்ட பல மூத்த படைப்பாளிகளின் எழுத்துகள் குறித்த உரையாடல்களும் உதகையில் ஏற்பாடு செய்யப்பட்டன.


உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ‘காவிய முகாம்’ என்பது இந்தச் சந்திப்புகளின் தொடர்ச்சி என்றே குறிப்பிடலாம். பத்து அல்லது பதினைந்து பேர் என்ற அளவில் தொடங்கி இன்று நூற்று ஐம்பது நபர்கள் பங்கேற்கும் பெரிய சந்திப்பாக மாறியிருக்கிறது. 


ஒழுங்கான திட்டமிடல், கால அளவுகளுடன் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல், உணவு இருப்பிடம் பயணம் என எல்லாவற்றிலும் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் என ஒவ்வொன்றுமே முன்பே தெரிவிக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டன. செலவு செய்து அத்தனை தொலைவு வந்தவர்கள் அதிலிருந்து பெற்றுக்கொள்ள நிறைவான ஒரு அனுபவத்தை இந்த நெறிப்படுத்தல்கள் உறுதிப்படுத்தின. திட்டமிடப்பட்ட ஒரு சந்திப்புக்கென குருகுலத்துக்கு முதலில் வருபவர் ஜெயமோகன்தான். வந்ததிலிருந்து தொடங்கி அன்றிரவு தூங்கும் வரைக்கும் பிற எவரையும்விட அதிகமாய் பேசுவது அவராகத்தான் இருக்கும். ஆனால் ஒருபோதும் அவரிடம் அந்தக் களைப்பைப் பார்க்க முடியாது.  எல்லோரும் தூங்கச் சென்ற பிறகும்கூட, ஒவ்வொருவருக்கும் வசதிகள் சரியாக உள்ளனவா என்று சரிபார்ப்பார். தேவதேவன், நாஞ்சில்நாடன் போன்ற மூத்த படைப்பாளிகள் தலைக்கு குல்லா அணிந்திருக்கிறார்களா, காதுகளை மூடியிருக்கிறார்களா, காலில் சாக்ஸ் அணிந்திருக்கிறார்களா என்று தனிப்பட்ட முறையில் ஒவ்வொன்றிலும் அக்கறை எடுத்துக் கொள்வார். 


தொடக்கத்தில் ஐந்து அல்லது ஆறு பேராக குருகுலத்துக்குப் போகும்போது அங்குள்ள சாமியார்கள் சமைக்கும் உணவையே நாங்களும் எடுத்துக்கொள்வோம். பெரும்பாலும் கஞ்சி, கிச்சடி போன்ற உணவு. கட்டன்சாயா எப்போதும் உண்டு. திடீரென்று ஒரு சில நாட்களில் தம்பான் சாமிகள் அவியல் சமைத்துத் தருவார். ஆனால், பிற நண்பர்கள் வரத் தொடங்கியபோது அவர்களின் வசதியைக் கருதி உணவு முறையில் சிறிய மாற்றங்களைச் செய்ய நேர்ந்தது. முன்பே நிர்மால்யாவுக்கு குறிப்பிட்ட தொகையை அனுப்பி சமையலுக்கு வேண்டிய பொருட்களை ஒழுங்கு செய்து அதற்கான ஆட்களையும் ஏற்பாடு செய்தார். பின்னர், அதுவே ஒரு கல்யாண விருந்துபோல அறுசுவை பந்தியாக மாறிவிட்டது. தங்குவதற்கு அருகிலிருந்த சில விடுதிகளில் அறைகள் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தது. 


அதுவரையும் தமிழில் பெரும்பாலான இலக்கிய கூட்டங்கள் அல்லது சந்திப்புகள் என்றால் அவை சுதந்திரமானவை. எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அரங்கில் இருக்க விருப்பமில்லை என்றால் வெளியில் எழுந்து சென்றுவிடலாம். புகைக்கலாம். அரட்டை அடிக்கலாம். கூட்ட அரங்குக்கே வராமல்கூட இருக்கலாம். அரங்கினுள் பத்துபேர் இருந்தால் வெளியில் அதற்கும் கூடுதலான ஆட்கள் இருப்பார்கள். உதகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் இதற்கு நேர்மாறானவை. கலந்து கொள்வோர்க்கு முதலிலேயே எல்லா விதிகளும் தெரிவிக்கப்பட்டுவிடும். விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம். பலரும் அவ்வாறான கட்டுப்பாடுகளைக் குறித்து விமர்சனங்கள் சொன்னதுண்டு. இப்போதும் சொல்வதுண்டு. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து இன்று இலக்கியத்துக்கென இரண்டு நாட்கள் சரியாக திட்டமிடப்பட்ட, கச்சிதமான முறையில் ‘விஷ்ணுபுரம் விருது’ விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இளைஞர்களை இலக்கியத்தின் பக்கமாக ஈர்க்க இந்த நடைமுறை மிக முக்கியம். இந்த நடைமுறை முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிறிய அளவிலிருந்து திட்டமிடப்பட்டு இன்று எல்லோரும் ஒப்புக்கொள்கிற வழக்கமாக மாறியிருக்கிறது. 


***

ஈரோடு இடையங்காட்டு வலசில் நான் குடியிருந்தபோது ஜெயமோகன் பல நாட்கள் அங்கு வந்து தங்கியிருக்கிறார். ஒரு முறை அவர் வந்திருந்தபோது இமயத்தின் ‘ஆறுமுகம்’ நாவல் என் மேசையில் இருந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவையில் நடந்த ஒரு கண்காட்சியில் அதை வாங்கி வந்திருந்தேன். மறுநாள் காலையில் நடைப் பயிற்சிக்குப் பின் அந்த நாவலை கையில் எடுத்துக்கொண்டு வாசலில் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தார். வாசிக்கத் தொடங்கினார். இரண்டு மணி நேரம் எந்தச் சலனமும் இல்லை. எதிலும் கவனம் சிதறவில்லை. இடையில் என்னுடைய அம்மா இரண்டு முறை தேநீர் மட்டும் கொடுத்தார். நாவலைப் படித்து முடித்துவிட்டுத்தான் அங்கிருந்து எழுந்து வந்தார். 


விறுவிறுவென ஒரு குளியல். எப்போதும் அவர் குளிப்பதற்கும் உடுத்திக்கொள்ளவும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. சாப்பிட உட்கார்ந்தவர் அந்த நாவலைப் பற்றிப் பேசலானார். 


ஊருக்குச் சென்றவரிடமிருந்து மறுநாள் தபால் வந்தது. அந்த நாவலைப் பற்றிய கட்டுரை. 


‘ஒரு புத்தகத்தைப் படித்ததும் நம்மைத் தொகுத்துக் கொள்ளவேண்டும், ஏற்கெனவே நம் அனுபவ அடுக்கை அது குலைத்துப் போடக்கூடும் என்பதால் மீண்டும் ஒருமுறை தொகுத்துக்கொள்வது முக்கியம், அதன் பிறகு அந்த நாவல் எந்த வரிசையில் எப்படிப்பட்ட இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது என்பதை எப்போது வேண்டுமானால் நீங்கள் எந்த குறிப்பும் இல்லாமல் சொல்ல முடியும்’ என்பதை பலமுறை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு படைப்பாளியைப் பற்றியும் இவ்வாறான பகுப்பும் தொகுப்பும் நமக்குள் உறுதிப்படும்போதுதான் நமக்கான ஒரு தேர்வை தெளிவாக அடையமுடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 


***

சந்திப்புகளில்போது காலையிலும் மாலையிலும் நடப்பது வழக்கம். அன்று முதல் இன்றுவரை அந்தப் பழக்கம் தொடர்கிறது. நடக்கும்போது ஓயாமல் பேசிக்கொண்டே நடப்பார். அந்த சமயத்தில் தான் ஆழ்ந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட பொருளைக் குறித்ததாகவே அந்த உரையாடல் இருக்கும். ஏதேனுமொரு கட்டுரையை எழுதுவதற்கு முன்பு அதைப் பற்றிய பல்வேறு தரப்புகளைத் தெரிந்துகொள்ளவும் அவற்றிலிருந்து கட்டுரையில் முன்வைக்க வேண்டியவற்றை தொகுத்துக் கொள்ளவும் இத்தகைய உரையாடல்கள் அவசியம் என்பதைச் சொல்வார். 


ஒரு குறிப்பிட்ட கருத்தைக் குறித்தோ அல்லது எண்ணத்தைக் குறித்தோ யோசித்துக்கொண்டிருக்கும்போது சந்திக்கும் அனைவரிடமும் அதைக் குறித்து விவாதித்து தன் கருத்தை அல்லது எண்ணத்தை செறிவாக்கிக் கொள்வதுண்டு. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, கோவை ஞானி, சேலம் ஆர். குப்புசாமி, நாஞ்சில்நாடன், ராஜமார்த்தாண்டன், வசந்தகுமார் ஆகியோரிடம் அவர் தொடர்ந்து உரையாடுவதுண்டு. தன் சமகாலப் படைப்பாளிகள் பலரிடமும் விவாதிப்பார். கவிதையைப் பற்றிய நீண்ட இவ்வாறான உரையாடலை அடுத்தே ‘நவீன தமிழ்க் கவிதை-தேவதேவனை முன்வைத்து’, ‘நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’, ‘நாவல்’ உள்ளிட்ட நூல்களை எழுதினார். 


நண்பர்கள், மூத்த படைப்பாளிகள், துறைசார் அறிஞர்களுடனான இவ்வாறான உரையாடுவதை அறிதலின் ஒரு முறையாகவே கடைபிடித்தார். இப்போது காவிய முகாம், விஷ்ணுபுரம் விருதுவிழா ஆகிய நிகழ்வுகளில் அதுவே தொடர்கிறது. 


***

உதகையிலிருந்து மசினகுடி செல்லும் சாலையில் கல்லட்டி என்றொரு இடம் உண்டு. அடர்ந்த வனத்துள் அருவி கொட்டுவதை மலைப் பாதை வளைவுகளில் திரும்பும்போது பார்க்கலாம். கல்லட்டி பள்ளத்தாக்கில் அமைந்த எஸ்டேட்டில் ஒரு பழைய கால கல் கட்டடம். குருகுலத்துக்கு அடிக்கடி வரும் ஒருவருக்கு சொந்தமானது. அதைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பிரபு தத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரபு தத்தா பிரம்மச்சாரி. அப்போது குருகுலத்தில் தங்கியிருந்தார். அமைதியான தனியான ஓர் இடத்தில அவர் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அங்கே அனுப்பினார் நித்யா. குருகுலத்தில் சந்திக்க நேரும்போதெல்லாம் கல்லட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 


கல்லட்டியில்- இடமிருந்து வலமாக- பிரபு தத்தா, மோகனரங்கன், மகாலிங்கம்,, ஜெயமோகன், பாவண்ணன், எம். கோபாலகிருஷ்ணன்  

ஒரு முறை உதகை குருகுலத்தில் இரண்டு நாள் தங்கிவிட்டு மாலையில் கல்லட்டிக்குப் புறப்பட்டோம். நிர்மால்யா அழைத்துச் சென்றார். அந்த கல் பங்களாவுக்கு செல்ல மசினகுடிக்குப் போகும் சாலைதான் சரியான பாதை. ஆனால், அந்தப் பாதையைவிட தூரம் குறைவு என்று சொல்லவும் எதிர்த்திசையில் இருந்த மலைப் பாதையை அடைந்தோம். இரண்டு மலைச் சரிவுகளுக்கு நடுவே பள்ளத்தில் இருக்கிறது அந்தக் கட்டடம். மேலேயிருந்த பார்ப்பதற்கு அத்தனை ஒன்றும் தொலைவோ சிரமமோ இல்லை என்றுதான் தோன்றியது. ஜெயமோகனும் நானும் மட்டுமே. நிர்மால்யா எங்களிடம் இப்படியே சரிவில் இறங்கிப் போய்விடலாம் என்று சொன்னார். ஆழத்தில் கட்டடம் கண்ணுக்குத் தெரிந்தது. சற்று நேரம் நின்று உற்றுப் பார்த்தபோது சிறிய அசைவு தென்பட்டது. பிரபுதத்தா எங்களைப் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்து வரச் சொல்கிறார் என்று புரிய சிறிது நேரம் பிடித்தது. தோளில் பையை மாட்டிக்கொண்டு சரிவில் இறங்கலானோம். முன்பின் பழக்கமில்லாதது. நேராக தலைக்குப்புற அல்லாது திரும்பி இறங்கவேண்டும் என்பதே தெரியவில்லை. நான்கைந்து எட்டுகள் வைத்த பிறகுதான் தவறு புரிந்தது. பின்னர் திரும்பி புதர்ச் செடிகளைப் பற்றிக் கொண்டு இறங்க முயன்றோம். புதர்ச் செடிகள் பலதிலும் முட்கள் இருந்தன. ஆனால் வேறு வழியில்லை. பற்றிக்கொள்ளாவிட்டால் சரியும் அபாயம். மூச்சு வாங்க ஒவ்வொரு எட்டாய் வைத்து இருவரும் இறங்கினோம். எதுவும் பேசவில்லை. முகம் பார்க்கவில்லை. அந்தி மயங்கிவிட்டது. ஆனால், சிறிது நேரத்தில் பிரபு தத்தாவின் குரல் செவிகளை எட்டியதும் தெம்படைந்தோம். 


ஒருவழியாக அடிவாரத்தை எட்டி சிறிய ஓடையைக் கடந்து மேட்டில் இருந்த கல் பங்களாவை அடைந்தோம். 


“இதுல எதுக்கு வந்தீங்க? மசினகுடி பஸ்ல வந்து எறங்கிருக்கலாமே?” என்று கேட்டபோது இருவரும் பதில் சொல்லும் தெம்புடன் இல்லை. உள்ளங்கைகளில் முட்கள் கீறியதில் ரத்தம். தலை கை கால்களில் புழுதி. தொட்டியில் நிறைத்திருந்த தண்ணீரை இறைத்து முகம் கழுவினோம். படிகளில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு இறங்கி வந்த மலை உச்சியை ஏறிட்டுப் பார்த்தோம். அப்போதுதான் பயம் அதிகமானது. 


பிரபு தத்தா இரண்டு தம்ளர்களில் எலுமிச்சை பானத்தைக் கொடுத்தார். அப்போதுதான் செடியில் பறித்த எலுமிச்சைகள். தேவாமிர்தமாக இருந்தது. ஒடுங்கிய முகத்தை முற்றிலும் மூடிய தாடி. அதையும் மீறிய துலக்கமான வெள்ளைச் சிரிப்பு. 


சட்டென்ற இருட்டிவிட ஓடையருகே மரங்களுக்கு நடுவே மின்மினிக் கூட்டம். காற்றில் குளிர் ஏறியிருந்தது. ஒரு கணத்தில் காடும் இருளும் ஒன்றரக் கலந்துவிட பூச்சிகளின் இரைச்சல் கூடியது. பிரபுதத்தா பேசியபடியே சமைக்கத் தொடங்கினார். 


“வாசல்ல எதுக்கு இரும்பு பைப் போட்டிருக்கு?” நான் கேட்டதும் சிரித்தார். 


“ராவுல ஆனெ வரும்.”


ஒருகணம் வெளியில் எட்டிப் பார்த்தேன். கம்பி வேலிகள், குறுக்காகப் போடப்பட்ட இரும்புக் குழாய்கள், மூங்கில் கழிகள். இதெல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்த கணத்தில் சொன்னார் “இதெல்லாம் யானைக்காக இல்ல. நமக்கொரு தைரியம் வேணுமில்ல.” 


சமையலின் மணம் திரண்டு வந்தபோது ஜெயமோகன் ஓடையருகே மினுமினுத்த அசைவுகளைச் சுட்டிக் காட்டினார். 


“என்னன்னு தெரியுதா?”


“பல்புமாதிரி தெரியுது.”


“காட்டெருமைக நிக்குது. நாலஞ்சு இருக்கும்.”


அந்த பங்களாவுக்கு மின்சாரம் கிடையாது. பழைய கால கல் கட்டடம். ஆனால், பிரபுதத்தா தங்குவதற்கு தேவையானவற்றை ஒழுங்கு செய்திருந்தார். தொலைதூர அருவியிலிருந்து சிறிய குழாய்களை இணைத்து தண்ணீரை சேமித்து, விறகு அடுப்பைக் கொண்டு சூடுபடுத்தி குளியலறையில் வெந்நீரையை வரவழைத்திருந்தார். மாதமொரு முறை உதகைக்கு வரும்போதுதான் அவர் பிற மனித முகங்களையே பார்ப்பார். 


அங்கே விளைவித்த காய்கறிகளைக்கொண்டு அருமையாக சமைத்திருந்தார். வாசலில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தபடியே அவருடைய கதையைக் கேட்டுக்கொண்டிருந்தோம். காடு மேலும் உயிர்த்திருந்தது. 


காட்டுக்குள் இருக்கும் அருவியைப் பார்ப்பதற்காக விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து தயாரானோம். சிறிய பையில் அவல், நெல்லிக்காய்கள், வாழைப்பழம், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டவரின் கையில் நீண்ட கத்தி ஒன்றும் இருந்தது. எங்கள் இருவரிடமும் நன்கு செதுக்கிய பிரம்பு போன்ற மரத்தடிகளைக் கொடுத்தார். தேவைப்படும் இடத்தில் ஊன்றிக்கொள்ளலாம், முட்செடிகளை விலக்கிக் கொண்டு நடக்கவும் உதவும் என்றார். முழங்கால் வரைக்குமான கம்பூட் அணிந்திருந்தார் பிரபு. ஜெயமோகன் கால்களில் கனத்த பூட்ஸ். நான் அலுவலகத்துக்கு அணியும் ஃபார்மல் ஷுவைப் போட்ருந்தேன். கீழே இறங்கி ஓடையருகே வந்தோம். பிரபு தத்தா ஒரே எட்டில் தாண்டினார். ஜெயமோகன் ஓடைக்கு நடுவிலிருந்து கல்லில் கால்வைத்து மறுபக்கம் தாவினார். நானும் அவரைப்போலவே கல்லின் மேல் கால்வைத்தேன். மறுகணம் ஓடையில் விழுந்திருந்தேன். கல் புரண்டிருந்தது. ஜீன்ஸ் நனைந்திருந்தது. 


“பரவால்ல. இப்பவே விழுந்துட்டீங்க. இனி ஜாக்கிரதையா இருப்பீங்க” என்று ஜெயமோகன் கைகொடுத்துத் தூக்கினார். 


உண்மையில் அதன் பிறகு நான் எந்த இடத்திலும் தடுமாறவில்லை. கால் சறுக்கவில்லை. 


அடர்ந்த காடு. அதற்குள் நுழைந்து அருவியை அடையும் பாதை பிரவுக்கு மட்டுமே தெரியும். ஒழுங்கான பாதையல்ல. பாறையில் தாவி, மரங்களுக்கு நடுவில் புதர்களை வெட்டிக் கடந்து ஏறியும் இறங்கியும் சென்றபடியே இருக்கவேண்டும். சிறிது நேரத்திலேயே வேர்க்கத் தொடங்கிவிட்டது. இருள் கலைந்து இளவெயில் துளைத்தக் காட்டின் வாசனையும் நிறங்களும் களைப்பைப் போக்கின. விதவிதமான ஓசைகள். பறவைகளின் சத்தங்கள். விலங்குகளின் கூச்சல். காலடியோசை கேட்டு சரசரத்து நகரும் பாம்புகள். சிற்றுயிர்கள். சிறகடித்து முகத்தில் மோதும் பட்டாம்பூச்சிகள். காட்டின் ஒவ்வொரு அடியிலும் விநோதங்கள். இதுவரை அறியாத உயிர்களின் ரகசியங்கள். பிரபுதத்தா ஓயாமல் பேசிக்கொண்டே வந்தார். மரங்களைப் பற்றிச் சொன்னார். புதர்ச் செடிகளில் அடைந்த பறவைகளைப் பற்றிக் கூறினார். மூலிகைகள், மலர்கள், பூச்சிகள், பழங்கள் என காட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் விவரித்தபடியே வந்தார். அவரது கையிலிருந்த கத்தி வழிமறித்த தாவரங்களின் கிளைகளை வெட்டும்போது பச்சை வாசனை. சில இடங்களில் பால் தெறித்து வழிந்தது. சில இடங்களில் நாசியைத் துளைக்கும் வாடை.


இடையே ஓய்வெடுக்க ஓர் இடத்தில் அமர்ந்தோம். நெடிய மரங்கள் சூழ்ந்து நின்றன. ஓடையில் பளிங்கு நீர் பெருக்கெடுத்தது. ஜெயமோகனுக்கு குளியல்போட ஆசை. பிரபுதத்தா தடுத்துவிட்டார். நீரின் தணுப்பு ஒத்துக்கொள்ளாதுபோகும் என்றார்.


அந்த வேளையில் பிடி அவலும் நெல்லிக்காயும் அத்தனை சுவை. 


‘நெறைய சாப்பிட்டா நடக்க முடியாது. இது அளவாவும் இருக்கும். எனர்ஜியும் கொடுக்கும்’ பிரபுதத்தா முகத்தைக் கழுவிக்கொண்டு எழுந்தார். 


பாறைகள் செறிந்த இடமொன்றை அடைந்தபோது பொந்துபோலிருந்த இடைவெளியை எட்டிப் பார்த்தார். உள்ளேயிருந்து ஒரு பொருளை எடுத்தார். நீரில் அதை அலசிவிட்டு பாறையின் மேல் வைத்தார்.


சிறிய மண்டையோடு. 


‘குரங்கோட மண்டையோடு. சிறுத்தை சாப்பிட்டுட்டு மண்டையோட்டை இந்த இடுக்கில போட்டு வெச்சிருக்கு.”


எட்டிப் பார்த்தோம். எட்டு பத்து மண்டையோடுகள் கிடந்தன. 


‘சிறுத்தை இருக்குமா?’ கண்களால் காட்டைத் துழாவியபடியே கேட்டேன். 


‘அது இருக்கற எடத்துக்கு வந்துட்டு இருக்குமான கேட்டா எப்பிடி?’ ஜெயன் என் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். 


கழுவி வைத்த அந்த மண்டையோட்டை ஜெயன் எடுத்து பையில் போட்டுக்கொண்டார். 


நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடந்து ஒரு பாறை முகட்டை எட்டினோம். சிறிது தொலைவில் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாது. அப்படியே பார்த்துக் கொண்டு நின்றோம். செறிந்த காட்டின் நடுவே கரும்பாறைகள். கொட்டும் அருவி. யாரும் எதுவும் பேசவில்லை. 


ஒரு மணி நேரத்துக்குப் பின் பிரபுதத்தா புறப்படலாம் என்றார். 


நாம் நினைத்துப் பார்ப்பதற்குள் இருட்டிவிடும் என்றபோது ஜெயன் சொன்னார் ‘காட்டுக்குள் இருக்கும் காலமும் காட்டுக்கு வெளியில் இருக்கும் காலமும் வேறுவேறு.’


திரும்பி நடந்து கல் பங்களாவை அடையும்போது அந்தி மயங்கியிருந்தது. ஓடை நீரில் கால் நனைத்துவிட்டு படிகளில் அமர்ந்தபோது காட்டின் இரைச்சல் தொடங்கியிருந்தது. 


பிரபுதத்தா ஓய்வெடுக்காமல் இரவு உணவை சமைத்தார். யானை வந்து கட்டடத்தை மோதிய இரவின் அனுபவத்தைப் பற்றி உற்சாகத்துடன் கூறிக்கொண்டிருந்தார். ஜன்னலுக்கு வெளியே அசையும் இருள் எனக்கு யானைகள் போலவே தோற்றமளித்தன. எதுவும் பேசவில்லை. 


அந்த இரண்டு நாட்கள் கல்லட்டியில் கழித்த பொழுதுகள் வாழ்வின் மறக்க முடியாத பேரனுபவம். 


அதன் பிறகு இரண்டு முறை இன்னும் சில நண்பர்களை அழைத்துச் சென்றோம். ஜெயமோகனின் பழக்கம் அது. தான் அறிந்த ஒன்றை நண்பர்களும் அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கில் அழைத்துச் செல்வார். ஒருமுறை மோகனரங்கன், பாவண்ணன், மகாலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர். 


மின்சார வசதியில்லாத, ஆள் நடமாட்டமில்லாத காட்டுக்குள் இரவு என்பது வேறொரு அனுபவம். கல்லட்டியில் வாய்த்த அந்த இரவுப் பொழுதுகளும் பிரபுதத்தா எங்களுக்காக காட்டிய அக்கறையும் நினைவில் உறைந்திருப்பவை. 


கல்லட்டி அருவி அருகே சென்றடைந்த சமயம். காட்டின் நடுவே வெப்பம் தகிக்காத மதிய வெயில். பாறைகள் பளபளக்கின்றன. அங்கங்கே பொங்கியும் வழிந்தும் தாவியோடும் தண்ணீர். நானும் பிரபுதத்தாவும் ஓரத்தில் இருந்த பாறையின் மீது நின்றிருக்க ஜெயன் சட்டென்று அடுத்தப் பாறைக்குத் தாவினார். ஒருகணம் அவரது கால் வழுக்கியது. பற்றிக்கொள்ள எதுவுமில்லை. இடது காலை ஊன்றி சமாளிக்க முயன்றார். நிலைகொள்ள முடியவில்லை. வலதும் இடதுமாய் கால்கள் தடுமாற ஊன்றிக்கொள்ளும் பொருட்டு கைகளை உயர்த்தி சமநிலைகொள்ள முயன்றார். இருவரும் பார்த்துக்கொண்டே நிற்கிறோம். எதுவும் செய்ய முடியாது. பிரபு தத்தா பதற்றமின்றி எச்சரிக்கிறார் “கம்பை சரியா பிடிச்சுட்டு பேலன்ஸ் பண்ணுங்க. ஒண்ணுமில்லை.” அவரது காலடியில் வெறும் பாறை. விழுந்தால் நிச்சயம் அடிபடும். எலும்புகள் முறியலாம். எதுவும் நடக்கலாம். காட்டுக்குள் எங்கோ யாரும் எளிதில் வந்து சேர முடியாத இடத்தில் இருக்கிறோம். பாதைகள் கிடையாது. பாதுகாப்பும் கிடையாது. 


சில நொடிப்பொழுதுதான். என்னவோ நடந்தது. எதுவோ கைகொடுத்ததுபோல் கால்களை ஊன்றியபடி குனிந்து நிமிர்ந்தார். சிரித்தார்.


கைகளை உயர்த்தியபடி கால்களை மாற்றி மாற்றி தடுமாறிய நிமிடத்தில் என்னென்வோ எண்ணங்கள் மின்னலிட்டு மறைந்ததை மீண்டும் நான் எண்ணிப் பார்க்க விரும்பாதவனாய் பாறையில் அமர்ந்து தலை குனிந்தேன். 


மாலையில் களைத்துப்போய் வீட்டுக்குத் திரும்பி வந்தபின் சாப்பிடும்போது பிரபுதத்தா சிரித்தபடியே சொன்னார் “வல்லிய டான்ஸ் அல்லே.”


பாறை இடுக்கிலிருந்து எடுத்த அந்த குரங்கு மண்டையோடு சிலகாலம் தர்மபுரி வீட்டில் இருந்தது. 


***

தர்மபுரி வீட்டின் முன்னறையின் மூலையில் அவர் எழுதும் மேசை உண்டு. அதையொட்டி சுவரில் அலமாரி. அதன் கீழ் தட்டின் இடது ஓரத்தில் ஒரு இரும்புப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். சிறிய கனமான பெட்டி. ஏதேனும் ஒரு சிறுகதையையோ கட்டுரையையோ எழுதி முடித்த பின் அதை அடுக்கி, மூலையில் துளையிட்டு, நூல் கோர்த்து கட்டிய பின் அந்தப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்து தபாலில் சேர்ப்பார். 


வெள்ளைத் தாளில் சீரான இடைவெளியில் திருத்தமான கையெழுத்தில் எழுதுவார். ஒரு பக்கத்தில் அதிகபட்சம் இருபத்தி நான்கு வரிகளே இருக்கும். அடித்தல் திருத்தல் இருக்காது. எழுதிக் கொண்டிருக்கும்போது பதினைந்தாவது வரியில் பிழை ஏற்பட்டால் அந்தப் பக்கத்தை அப்படியே கிழித்துப் போட்டுவிட்டு புதிதாகவே எழுதுவார். சில சமயங்களில் மொத்தமாக எழுதி முடித்த பின் ஏதேனும் ஒரு பக்கத்தில் பிழை இருந்ததைக் கண்டுபிடிக்க நேர்ந்தால், சரியான வார்த்தையை ஒரு சிறிய துண்டுத் தாளில் எழுதி தவறான சொல்லுக்கு மேலே அதை கச்சிதமாக ஒட்டிவிடுவார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ‘விஷ்ணுபுரம்’ நாவல் முழுக்க அவ்வாறு கையால் எழுதப்பட்டது. சில முறை திருத்தியும் எழுதப்பட்டது. 


கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்களின் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட அந்த இரும்புப் பெட்டி காலியாக இருந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் அதில் மூலையில் நூலால் கட்டப்பட்ட  தாள்களுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் இருக்கும். இப்போது அவரிடம் அந்த இரும்புப் பெட்டி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பெட்டியின் இடத்தை கணினி பிடித்துக்கொண்டுள்ளது. அதற்குள் எண்ணற்ற சொற்களையும் வரிகளையும் கொண்ட ஏராளமான புத்தகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்ந்து கொண்டே உள்ளன. வற்றாத ஊற்றாக புனைவுகளும் புனைவல்லாத எழுத்துகளும் பெருகி வழிகின்றன. 


***

இன்று பின்னோக்கிப் பார்த்து, தர்மபுரி நாட்களை யோசிக்கிறேன். அப்போது ‘ரப்பர்’ நாவலும் சிறுகதைகளும் நாவல் பற்றிய விவாதங்களும் அவரை அறியச் செய்திருந்தன. விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்தார். தொடர்ந்து எழுதவேண்டியவற்றைப் பற்றிய தெளிவான வரைபடம் இருந்தது. அத்துடன், இலக்கியச் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பது, ஒத்த நண்பர்களுடன் இணைந்து ஒரு இலக்கிய இயக்கத்தை உருவாக்குவது பற்றிய ஒரு தீர்க்கமான வரைபடமும் இருந்தது என்பது தெளிவாகிறது. 


எழுத்தில் அவரது சாதனைகள் அனைவரும் அறிந்ததே. தமிழில் நாவல்களைக் குறித்த தெளிவான பார்வையை உருவாக்கியதோடு புதிய ஒரு நாவல் அலை உருவாகக் காரணமானவர் ஜெயமோகன். ரப்பர், விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, காடு ஆகிய நாவல்களைத் தொடர்ந்து ‘வெண்முரசு’ எனும் சாதனையை முடித்திருக்கிறார். 


கவிதை, இலக்கிய வரலாறு ஆகிய வகைமைகளில் அடிப்படையிலிருந்து தொடங்கி அதன் பல்வேறு தரப்புகளை தீர்க்கமாக முன்வைக்கும் அறிமுக நூல்களை எழுதியிருக்கிறார். நவீன கவிதை ஓர் அறிமுகம் (தேவதேவனை முன்வைத்து), தமிழ் நவீன இலக்கிய அறிமுகம், இலக்கிய முன்னோடிகள் ஆகிய மூன்று நூல் வரிசைகளும் அந்த வகையில் முக்கியமானவை. தமிழ் சங்கப் பாடல்களின் சிறப்பை நடைமுறை அனுபவங்களோடு இணைத்துச் சொன்ன ‘சங்கச் சித்திரங்கள்’ புதிய வாசகர்களை ஈர்க்கும் தன்மைகொண்டது. பல்வேறு வடிவங்களையும் மொழியமைப்பையும் கொண்ட எண்ணற்ற சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஒருவகையில் கடந்த முப்பதாண்டு சிறுகதைப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை இவற்றிலிருந்து அறிந்துகொள்ள முடியும். அங்கதமும் பகடியும் மிகுந்த அனுபவக் கட்டுரைகள் அடங்கிய ‘அபிப்ராய சிந்தாமணி’ நூலுக்கு தனித்த இடம் உண்டு. இவை தவிர வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான பல்வேறு இடைவெளிகளை நிரப்பும்பொருட்டு கேள்வி பதில்களாக எழுதப்பட்ட நூல்கள் உண்டு. 


ஒரு காலகட்டத்தில் எழுத்து என்பது தாளிலிருந்தும் பேனாவிலிருந்தும் விலகி கணினியை நோக்கி நகர்ந்தபோது அதன் வீச்சையும் ஆற்றைலையும் கண்டுணர்ந்து உடனடியாய் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டது ஒரு திருப்புமுனை. 2005ம் ஆண்டுக்கு பின்  வலைப்பூக்கள் பிரபலமான போது சிறிய கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். ‘திலகமும் தொப்பியும்’ போன்ற கட்டுரைகள் கவனம் பெற்றபோது அவரது வலைப்பூ பிரபலமானது. ஒரே சமயத்தில் உலங்கிலுமிருந்து பல நூறு வாசகர்கள் அதை வாசித்தபோது அதன் வீச்சை புரிந்துகொண்டு தொடர்ந்து இன்னும் விரிவான அளவில் அதை தன் எழுத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கினார். கணினித் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் அவரைப் பின்தொடர்ந்தனர், வாசித்தனர். அதுவே ‘விஷ்ணுபுரம்’ அமைப்பு உருவாகக் காரணமானது. பெரும் வாசக எண்ணிக்கையுடன் வளர்ந்து நிற்கிறது. தொடர்ந்து வாசகர் சந்திப்புகளையும் கவிதை, சிறுகதை அரங்குகளையும் ஒழுங்கு செய்கிறது. 


கடந்த முப்பதாண்டு காலகட்டத்தில் நுட்பமும் செறிவும் மொழியழகும் கொண்ட பல்வேறு புனைகதைகளை எழுதி தமிழின் முதன்மை படைப்பாளியாகத் தன்னை நிறுவிக்கொண்டதோடு இதற்கு இணையாகவே தமிழகத்தில் கட்டுப்பாடும், நெறிமுறைகளும், தீர்க்கமான இலக்கும் கொண்ட, இலக்கியத்தின் மேலும் எழுத்தின் மீதும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான ஒரு இலக்கிய இயக்கம் உருவாகவும் காரணமாகியிருப்பதே ஜெயமோகனின் சாதனை. மொழியின் மீதும் இலக்கியத்தின் மீதும் அக்கறைகொண்ட ஒரு எழுத்தாளன் தன் படைப்புகளைத் தாண்டி செய்யவேண்டிய அர்த்தமுள்ள காரியமும் அதுவாகத்தான் இருக்கும். 

***