பீஷ்மன் - ஜீவ கரிகாலன்


தமிழின் ஐகானிக் எழுத்தாளர்களையும் முன்னோடி எழுத்தாளர்களையும் போற்றிட, பாராட்டிட, வாழ்த்திட அல்லது அன்பைப் பொழிய கட்டுரைகள் எழுதும் சந்தர்ப்பம் ஒவ்வொரு எழுத்தாளருக்குமே வாய்க்கிறது. அதில் எழுதப்படுபவரைவிட எழுதுபவருக்கே நிறைய அனுகூலங்கள் தரவல்லது என்பதும் சிறப்பம்சம். அதற்கு விதிவிலக்கு ஜெயமோகன். இந்த உதாரணம் மட்டுமல்ல, தமிழ் இலக்கியச் சூழலில் பல விதிவிலக்குகள் உண்டு.


சுதேசிச் செய்தியில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அந்தப் பாதையின் தவறுகளைச் சுட்டிக்காட்டியது இரு நூல்கள். ஒன்று பி.சாய்நாத்தின் “everybody loves a good drought” மற்றொன்று ஜெயமோகனின் “இன்றைய காந்தி”. காந்திக்குப் பின்னால் இருந்து பரப்புரை செய்த தெங்காடிக்கும், குருமூர்த்திக்கும் மயங்கிவிடாமல் வெளியே வந்தேன். ஈழ விடுதலைப் போராட்டங்கள் தொடர்பான கருத்துகளால் ஜெயமோகன் அவர்களுடனும் முரண்பட்டே இருந்தேன். முரண்படுவதற்கான காரணங்கள் இல்லை என்று மொழிபெயர்ப்புகள் குறித்தோ, அரசியல் குறித்தோ பட்டியல் போட ஆரம்பித்தால், என்னை விட அதிகம் முரண்படுபவர்களும் அந்த அமைப்பில் இருப்பது ஆச்சரியமாக இருந்தது! நேற்றைக்கு என் அம்மா குமரித்துறைவியை வாசித்ததும், இன்னும் சில நூல்களை வாங்கி வா என்று சொல்வது கூட ஆச்சரியம் இல்லை.


அரசியலிலிருந்து இலக்கியம் என்னை மீட்டது, எனது தோழர்கள் என்னுடன் இருந்தார்கள். பயணம் வேறு திசையில் அடியோடு மாற்றிவிட்டது, முழுநேர பதிப்பாளனாக என்னையே சூதில் ஒப்புக்கொடுத்து விட்டேன். உடன் இருந்த நண்பர்களுக்கு நான் கர்ணனாகக் கடன்பட்டவன். முகவரியும் கிடைத்தது. 


இந்த வரலாறெல்லாம் என்ன பயன் எனக்கேட்க வைக்கும் பல அவலச் சூழல்களை இலக்கியத்தில் சந்தித்திருக்கிறேன். இந்தக் கட்டுரையை நான் அன்று எழுதத் தொடங்கிய நாளில்தான், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


ரமேஷ்பிரேதனை இன்று வரை மிகவும் கவனத்தோடு பார்த்துக் கொண்டிருப்பது விஷ்ணுபுரம் நண்பர்களின் முயற்சியாலே என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். வேறு சிலரும் உதவுகிறோம் என்றாலும், எல்லோராலும் இத்தனை நேரம், பணம், அலைச்சல் என ஒதுக்கிட முடியாது என்கிற யதார்த்தத்தைத் தாண்டி எப்படி இவர்கள் உதவுகிறார்கள். அந்த mechanism என்னவென்று தேடுகிறேன். அவரோடு உடன் பயணித்த பல ஆளுமைகள் அவர் எப்படி இருக்கிறார் என்று கூட விசாரிக்காத நிலையில் தான் இவற்றை எல்லாம் எழுதுகிறேன். 


ஜெயமோகனின் இணையதளத்தில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை, லிபிக்கள் குறித்த அவரது பதிவுக்கு கண்டனக் கடிதங்களில் என் பெயரையும் இணைத்துக் கொள்ள விண்ணப்பித்திருந்தேன், ஆனால் அந்த விண்ணப்பத்தையே நான் சம்பந்தப்படாத பல கடிதங்களிலும் இணைத்திருந்தார்கள். விஷயம் அதுவல்ல. ஒருநாள் நான் ‘ஜெ’வை அழைத்து, வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசத்தெரிந்த எழுத வாசிக்கத் தெரியாத மக்களுக்காய் ஆங்கில எழுத்துருக்களைப் பயன்படுத்த உருவாகிவந்த அகராதி மற்றும் இதர சிறுவர் நூல்களுக்கு உங்களது கட்டுரையை முன்னுரையாகப் பயன்படுத்த அனுமதி வாங்கித்தர கேட்டதைத் தெரிவித்தேன். ஆச்சரியம் கலக்காத தொனியில் சம்மதித்தார். 


‘ஜெ’யிடம் எனது தனிப்பட்ட விசயம் ஒன்றைப் பகிரும்பொழுது கிடைத்த ஆலோசனை என் வாழ்க்கை முழுக்கவும் பயன் தரத்தக்கது. அவ்வண்ணமே என்னைப் போல பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்வின் துயர்களை, பதட்டங்களை, குழப்பங்களை ’ஜெ’யிடம் பகிர்கிறார்கள். எந்தவித இலக்கிய வாடையும் இல்லாத உரையாடலாக இருந்தாலும் கூட அவர்களுடனும் உரையாடுகிறார். 


தனது எழுத்துப் பயணத்தில் வெண்முரசு போல, ஊரடங்கு கால கதைத் திருவிழா போல எத்தனை மைல் கற்களையும் கண்டடைந்து கொண்டிருக்கலாம். அதற்கு இணையாக ஒரு கம்யூனாக உருவெடுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், அவர்கள் முன்னெடுக்கும் இலக்கியத் திருவிழா, கருத்தரங்கங்கள், ஆவணப்படங்கள், பிற படைப்பாளுமைகளுக்கு உதவி செய்தல் எனவும், மேலும் தமிழ் மொழியில் வேறு யாருக்கும் வாய்க்காத வாய்ப்பாக விஷ்ணுபுரம் இலக்கியத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கின்ற ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கின்ற அமர்வு அவனது பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை உண்டு. தற்போது விஷ்ணுபுரம் நண்பர்கள் மேற்கொண்டு வரும் கலைக்களஞ்சியப் பணியானது தமிழில் அரசாங்கங்கள், பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணி.


இத்தனை விஷயங்களையும் செய்திட ‘ஜெ’ சொல்லும் மரபு ஒரு அடிநாதமாய் இருக்கிறது. அந்தச் சங்கிலியால் பிணைக்கப்பட்டதாலேயே இத்தனை அரும்பணிகள் நடைபெறுகின்றன. மரபு என்கிற கருத்தாக்கத்திற்கு எதிர்திசையில் பயணிக்கின்ற ரமேஷ் பிரேதனுக்கோ, ஜீவ கரிகாலனுக்கோ அனுகூலம் மரபால் விளைகின்றன. அதனால்தான் நான் பீஷ்மன் என்று மேடையில் வரவேற்புரை அளித்தேன். (அம்புப்படுக்கை தயாரித்தவன் என்கிற கூடுதல் உரிமையும்). 


ஜெ எனும் ஆளுமையைப் பற்றி பேசுவது அவரது எழுத்தைப் பற்றி மட்டும் பேசுவது ஆகாது. மொழி குறித்தும், லட்சியவாதங்கள் குறித்தும் எந்த வியப்புமற்ற ஒரு கௌரவ சேனை பீஷ்மரைப் போலவே ஆகிருதியுடன் அதே மொழிக்கும் மரபிற்கும் பெரிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறது. வியாபாரம் செய்ய வந்த பரிபாலனங்களுக்கு அப்பாலும் கடன்பட்டவனாய் இருக்கிறேன்.


***


ஜீவ கரிகாலன் - தமிழ் விக்கி பக்கம்

No comments:

Post a Comment