பெருங்களிறின் வருகை - ம.நவீன்


மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்கு மலேசியாவுக்கு வெளியில் இருந்து வந்து பங்காற்றியவர்களில் கு.அழகிரிசாமியின் இடம் தனித்துவமானது. ஐம்பதுகளில் (1952-1957) மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு அவர் கிடைக்கப்பெற்றார். ‘தமிழ் நேசன்’ எனும் நாளிதழுக்குப் பணி நிமித்தமாக வந்தாலும் மலேசியாவில் இலக்கியச் சூழல் வளரவேண்டுமென ‘இலக்கிய வட்டம்’ என்ற குழுவை அமைத்து, எது நல்ல இலக்கியம்? என உலக இலக்கியங்களுடன் ஒப்பிட்டு கலந்துரையாடல்கள் செய்தார். அதற்கு முன்பே மலேசியத் தமிழ் இலக்கிய போக்கை முன்னெடுக்க பலரும் முனைப்பு காட்டினர். அவர்களில் மிகத்தீவிரமாக உழைத்த சுப.நாராயணன், பைரோஜி. நாராயணன் ஆகியோரும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஆனால் ந.பாலபாஸ்கரனின் ஆய்வுகள் மற்றும் அக்கால இலக்கிய முன்னெடுப்புகளில் நேரடியாகப் பங்கெடுத்தவர்களின் நேர்காணல்களை ஆராயும்போது, அம்முயற்சிகள் எதுவும் புனைவு எனும் கலையின் நுட்பங்களை உரையாடுவதாக இருந்ததில்லை என்றே புலப்படுகிறது.

 

மலேசிய இலக்கியத்தில், இந்த பலவீனத்தைக் கண்டடைந்தவராக கு.அழகிரிசாமி இருந்தார். பத்து ‘இலக்கிய வட்ட’ சந்திப்புகளின் வழி அவர் சிறந்த இலக்கிய வாசிப்பை மலேசிய எழுத்தாளர்களிடம் அறிமுகம் செய்தார். சிறந்த எழுத்தாளர்களை உள்ளூரில் அடையாளம் கண்டதோடு, அவர்களது படைப்புகளைத் திருத்தி தமிழ் நேசனில் வெளியிட்டார். இதை மலேசிய இலக்கியத்தின் ஒரு மகத்தான தொடக்கம் எனச் சொல்லலாம். தமிழின் தலை சிறந்த எழுத்தாளர் ஒருவரின் வழிகாட்டலில் மலேசிய நவீன இலக்கியத்தின் போக்கு தொடங்கியது.

 

மலேசியாவில் இயங்கிய தமிழ் நாளிதழ்கள், மலாயா பல்கலைக்கழகம் போன்ற கல்விக்கூடங்களில் தமிழகத்தின் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆளுமைகளும் ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட பங்களிப்பைச் செய்தனர். முருகு.சுப்பிரமணியம், தனிநாயக அடிகள் போன்றவர்கள் ஒரு பக்கம் மொழியும் இலக்கியமும் ஆழமாக மலேசிய மண்ணில் வேரூன்ற உழைத்தார்கள் என்றால், நா.பார்த்தசாரதி, அகிலன் போன்ற எழுத்தாளர்களின் அவ்வப்போதைய வருகை மலேசியாவின் இலக்கியத்தை வடிவமைப்பதில் பங்காற்றியது. ஆனால் அவை லட்சியவாத குரல்களாகவும் நல்லொழுக்க இலக்கியங்களாகவும் தேங்கி நின்றன.


1970களில் தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு வந்த பேராசிரியர் இரா.தண்டாயுதம் அவர்கள் மலாயா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றியதோடு தன்னை அன்றைய மலேசிய இலக்கியச் சூழலுடன் பிணைத்துக்கொண்டார். மு.வரதராசனின் மாணவரான அவரது செயல்பாடுகள் அன்றைய நவீன இலக்கிய வளர்ச்சியில் பங்களித்ததை பல்வேறு நேர்காணல்களிலும் கட்டுரைகளிலும் காணக்கிடைக்கிறது. ஆனால் இவர் அன்றைய தீவிர எழுத்தாளர்களைவிட வெகுசன எழுத்தாளர்களையே முன்னிருத்துபவராக இருந்துள்ளார்.

 

1980களுக்குப் பிறகு தமிழகத்தின் தீவிர இலக்கியப் போக்கை அறிந்த எழுத்தாளர் குழுவால், மலேசியாவுக்கு அழைக்கப்பட்டவர் சுந்தர ராமசாமி. 50களில் கு.அழகிரிசாமியின் வருகைக்குப் பிறகு நடந்த முக்கியப் படைப்பாளியின் வருகை என அதைச் சொல்லலாம். தன் குறுகிய கால பயணத்தில், மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என உழைத்த இளைஞர் குழுவுடன் அவர் நெருக்கமான உரையாடல்களை மேற்கொண்டார். நவீன இலக்கியம் தொடர்பாகவும் தீவிர இலக்கியப் போக்கு சார்ந்தும் தனிப்பட்ட உரையாடல்கள் சில நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து 90களில் ஜெயகாந்தனின் வருகை அமைந்தது.


2000க்குப் பிறகு மலேசிய எழுத்தாளர் சங்கம் பல எழுத்தாளர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்தது. அதற்கான பொருளாதார பலமும் தொடர்புகளும் அவர்களுக்கு இருந்தன. வைரமுத்து, சிவசங்கரி, மாலன், பா.விஜய், சினேகன், என ஜனரஞ்சக எழுத்தாளர்களையும் பிரபஞ்சன், திலீப்குமார், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற தீவிர எழுத்தாளர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்த இருநிலை போக்கு இயக்கத்தின் தேவையைப் பொறுத்து அமைந்தாலும் அது ஆரோக்கியமானது இல்லை என்ற எண்ணம் அக்காலகட்ட இளைஞர்கள் மத்தியில் எழுந்தது. இந்தச் சூழலில்தான் அவ்விளைஞர் குழுவால் பிப்ரவரி 2006இல் ‘காதல்’ என்ற இலக்கிய இதழ் தொடங்கப்பட்டது.



மலேசியாவின் இலக்கியச் சூழலை மாற்றியமைக்க முடியும் என்ற நோக்குடன் உருவான இளைஞர் குழு பத்து மாதங்கள் அந்த மாத இதழை முன்னெடுத்தது. நான், மணிமொழி, பா.அ.சிவம், சு.யுவராஜன் ஆகியோர் ஆசிரியர் குழுவிலும் மஹாத்மன், பூங்குழலி, தோழி, சந்துரு, கி.உதயகுமார் போன்றவர்கள் படைப்பு ரீதியாகவும் இவ்விதழில் பங்களிப்பு செய்தோம். தமிழ்மணி என்ற மூத்த பத்திரிகையாளர் இவ்விதழின் பொருளாதார பின்புலமாகத் திகழ்ந்தார். இந்த இளைஞர் குழு உருவாகவும் சிந்திக்கவும் எழுத்தாளர் மா.சண்முகசிவா மையமாக இருந்தாலும் அவர் படைப்பு ரீதியாக எந்தப் பங்களிப்பும் வழங்கவில்லை. சிற்றிதழ் வழியாக மட்டுமே மலேசியத் தீவிர இலக்கியத்தின் திரண்ட குரலை உருவாக்க முடியும் என்ற நோக்கில் பல்வேறு சாத்தியமற்ற சூழலிலும் காதல் இதழ் வழி சிறு சிறு உரையாடல்களை அவ்வப்போது நிகழ்த்தினோம். அதன் நீட்சியாக தமிழகத்தின் அன்றைய இலக்கிய ஆளுமைகளை அழைத்து வருவதையும் அவர்களுடனான உரையாடல்களை உருவாக்குவதையும் முக்கியமென கருதி மனுஷ்ய புத்திரனை அழைத்தோம். அதற்கு கவிஞர் அகிலன் முதன்மை காரணமாக இருந்தார்.


கவிஞர் அகிலனின் ‘மீட்பு’ என்ற கவிதை வெளியீட்டுக்காக மனுஷ்ய புத்திரன் அழைக்கப்பட்டார். பின்னர் ‘காதல்’ இதழின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் அவருடைய பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. நவீன கவிதை குறித்த விரிவான உரையாடல்கள் காதல் இதழ் வழி சாத்தியமானது. மலேசிய எழுத்தாளர் சங்கம் பல ஆண்டுகளாக பேணிக்காத்து வந்த வானம்பாடி ரக கவிதைகளின் குரல்கள் மெல்ல மெல்ல அமிழத்தொடங்கியது அந்தக் காலத்தில்தான்.


15.5.2006இன் நள்ளிரவு அது. கவிஞர் அகிலன் வீட்டின் எதிர்ப்புறம் இருக்கும் சிறிய திடலில் நாங்கள் கவிஞர் மனுஷ்ய புத்திரனுடன் அமர்ந்திருந்தோம். நாங்கள் என்பது, மணிமொழி, யுவராஜன், தோழி, சந்துரு, யோகி, உதயா, சூரியகலா, பூங்குழலி, அகிலன், நவீன் என அப்போது மலேசிய இலக்கியச் சூழலை மாற்றிவிட வேண்டும் என்ற தணியாத வேட்கையில் இருந்த இளம் படைப்பாளிகள் குழு. 'காதல்' என்ற இலக்கிய இதழ் தொடங்கி அப்போதுதான் நான்கு மாதங்கள். பூச்சோங் என்ற பெருநகரத்தில் இருந்து சற்று தள்ளி அமைந்திருந்த அகிலனின் குடியிருப்பு அமைதியில் நிறைந்திருந்தது. 


மனுஷ்ய புத்திரன் இங்குள்ள இலக்கியச் சூழலை மாற்ற மலேசியாவுக்கு யாரெல்லாம் வருவது முக்கியம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் திரும்பத் திரும்ப உச்சரித்த பெயர் ஜெயமோகன். ஜெயமோகன் என்பவர் தமிழிலக்கியத்தின் போக்கை மாற்றி அமைத்த பெரும் சக்தி என்பதாக மனுஷ்ய புத்திரனின் பேச்சு இருந்தது. அப்போது உயிர்மையில் ஜெயமோகன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். அவரது குறுநாவல், சிறுகதை தொகுப்புகளை உயிர்மை வெளியிட்டிருந்தது.


எனக்கு ஜெயமோகன் என்ற பெயர் திண்ணை தளம் மூலமே தெரியும். அதுகூட அவர் விவாதங்களில் ஈடுபடுபவர் என்ற அளவில். விவாதங்கள் என்பதை சண்டை என புரிந்து வைத்திருந்ததால் "அவர் வேண்டாம் சார். சண்டையெல்லாம் போடுவார்" என்றேன். மனுஷ்ய புத்திரன் "ச்சீ ச்சீ" என உடனடியாக மறுத்தார். "அவர் ரொம்ப அன்பானவருங்க. பேசிக்கிட்டே இருப்பாரு. ரொம்ப தீவிரமா உரையாடுவாரு. ஆனா ரொம்ப அன்பானவரு. அவரோட வருகை மலேசிய இலக்கியத்துக்கு முக்கியம்" என்றார். 


ஜெயமோகன் மலேசியா வந்தால் எங்கள் யாரையும் திட்ட மாட்டார். கடுமையாகப் பேச மாட்டார் என்ற நம்பிக்கையை மனுஷ்ய புத்திரன்தான் விதைத்துவிட்டுச் சென்றார். ஜெயமோகன் மிகப்பெரிய எழுத்தாளர் என்ற தொனி அவரது பார்வையிலும் சொல்லிலும் வெளிபட்டபடி இருந்தது. "இந்தக் காலத்தில் அவர்தான் மிகப்பெரிய எழுத்தாளர்" என்பதை பலவாறு மனதில் பதிய வைத்தார். 


'காதல்' இதழ் வழியாக நாங்கள் மலேசியாவில் தீவிரமான இலக்கியப் போக்கை உருவாக்க முனைப்பு காட்டினோம். அவ்வகையில் கவிஞர் சேரன், லீனா மணிமேகலை, நா.முத்துக்குமார், அறிவுமதி என யார் எதன் பொருட்டு மலேசியாவுக்கு வந்தாலும் அவர்களைத் தேடிப்பிடித்து அழைத்து வந்து உரையாடல்கள் நிகழ்த்தினோம். சில சமயம் விவாதங்கள் செய்தோம். நேரடியாகத் தமிழகத்தில் இருந்து அழைக்க அப்போது எங்களிடம் பொருளாதார வசதி இல்லை. இந்த நிலையில்தான் ஜெயமோகன் சிங்கப்பூருக்கு வருவதாக ஒரு தகவல் கிடைத்தது. சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர் வந்திருந்தார். எனவே அங்கிருந்த நண்பர்களின் தொடர்புகள் வாயிலாக ஜெயமோகனை மலேசியாவுக்கு அழைப்பது எனத் திட்டமிட்டு அமுல்படுத்தினோம். 


ஜெயமோகனின் வருகை


1.8.2006இல் நள்ளிரவை தாண்டியப்பின் ஜெயமோகன் மற்றும் அருண்மொழி நங்கை அவர்களை முதன் முறையாக கோலாலம்பூரில் உள்ள புடுராயா பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். என்னுடன் அகிலன் இருந்தார். உண்மையில் எனக்கு அப்போது விபரம் பத்தாது. அகிலன்தான் அனைத்தையும் ஏற்பாடு செய்தார். நான் உடன் இருந்தேன். எதையும் பெரிதாக செய்யாவிட்டாலும் பரபரப்புடன்தான் இருந்தேன். இதற்கிடையில் உயிர்மை பதிப்பில் வாங்கிய ஜெயமோகனின் சிறுகதைகள், குறுநாவல்கள் என வாசித்திருந்ததால் அவரிடம் உடனடியாக ஏதாவது பேச மனம் துடித்தது. அகிலனும் வாசித்திருந்ததால் அவருடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொழுதில் உரையாடிக்கொண்டிருந்தேன். அகிலன் என் ஆர்வக்கோளாறை அறிந்திருக்க வேண்டும். முதல் அறிமுகத்தில் ஒருவரின் படைப்புகள் குறித்து பேசுவது சரியல்ல எனக் கூறி என் துடிப்பை கட்டுப்படுத்தினார்.


காதோர நரை. கட்டை மீசை. நேர்த்தியான சிகையுடன் இருந்தார் ஜெயமோகன். மலையாளப் படங்களில் எதிர்ப்படும் சராசரி மனிதரின் தோற்றம் சட்டென மனதில் வந்துபோனது. அருண்மொழி நங்கை அவர்களுக்கு தமிழ் முகம்.


"நான் நினைச்சத விட இளமையா இருக்கீங்க" 


இதுதான் ஜெயமோகன் என்னிடம் முதலில் சொன்ன வார்த்தை. நான் சிரித்துக்கொண்டேன். கையுடன் காதல் இதழைக் கொண்டு சென்றிருந்தேன். அதுதான் மலேசியாவின் சமகால இலக்கியத்தின் அடையாள அட்டை என்பதாக கையில் வைத்து ஆட்டிக்கொண்டே இருந்தேன். ஜெயமோகன் அதை வாங்கி புரட்ட ஆரம்பித்தார். இதழை ஒட்டி சில கேள்விகள் கேட்டார்.  


“நான் சொல்புதிது என்ற இலக்கிய இதழை நடத்தினேன். பின்னர் நிறுத்திவிட்டேன். எனது துடிப்பான  இளமை காலத்தில் இதழ் நடத்தி சக்தியை விரையம் செய்வதை விட, நான் எழுதுவதே முக்கியமென தோன்றியதால் அவ்வாறு செய்தேன். உங்களுக்கும் அதையே சொல்வேன்” என்றார். அது முதல் நாள் சந்திப்பு. தங்கும் விடுதியின் முகப்பில் வைத்து அதை சொன்னார். கசப்பாகத்தான் இருந்தது.


மறுநாள் ஜெயமோகனுடனான பயணங்கள் அவரை மேலும் அறிந்துகொள்ள உதவியது. இயல்பாக அவரிடம் வெளிப்பட்ட நகைச்சுவை நெருக்கமான உரையாடலுக்கு வழியமைத்தது. பத்துமலையின் சுண்ணாம்பு மலையும் குகைக்குள் கீழ் நோக்கி இறங்கும் சுண்ணாம்பு கற்களும் அவரை அதிகம் கவர்ந்தபடி இருந்தன. நான் அப்போது ‘காடு’ நாவலை வாசித்து முடித்திருந்தேன். எனவே மலையில் ஏறியபடி ‘காடு’ நாவலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நான் 'மிளா' என்ற விலங்கை அறிந்து வைத்திருக்கவில்லை. "மிளாங்கறது ஒருவகையான மான் இனம். சாது பிராணிதான். ஆனா காட்டுல பாக்கும்போது காட்டுத்தன்மை கூடிய ஒரு முரட்டு சுபாவம் தெரியும். காட்டுல பொதுவா முயல பாத்தாலும் ஒருவகையா பயம் வரும். என்னோட 18ஆம் வயசுல, ஏறக்குறைய ஏழு மாசம் காடுகளுல சுற்றித் திரிஞ்சேன். இப்போ புகுந்து நடக்கச் சொன்னா நிச்சயம் தயக்கம் இருக்கும்" என்றார். குறுக்கிட்ட அருண்மொழி அக்கா, "நல்ல வேளையா அவர் நீலிய பார்க்கல" என்றார்.


தத்துவங்களை வாசிப்பது, பேரிலக்கியங்களை வாசிக்கும் முறை, சுந்தர ராமசாமி சிறுகதை எழுதும் போக்கிலிருந்து தான் மாறுபடும் இடங்கள், பெற்றோர்களின் தற்கொலை, அவசரமற்ற அவரது வாழ்க்கை முறை என ஜெயமோகனுடனான உரையாடல்கள் அவருடன் பயணித்த இலக்கிய நண்பர்களுக்கு பல்வேறு புரிதல்களை உருவாக்கிய வண்ணம் இருந்தன. 


2.8.2006இல் கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடந்த இலக்கிய உரைதான் ஜெயமோகன் மலேசியாவில் ஆற்றிய முதல் சொற்பொழிவு. 'நவீன இலக்கியம் என்றால் என்ன?' எனும் தலைப்பில் அவர் உரை அமைந்திருந்தது. நவீன இலக்கியம் என்ற சொல்லுக்கு தர்க்க பூர்வமான தெளிவு மிக அவசியம் என்ற அறிவிப்புடன் அவர் ஆற்றிய உரை அன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய தெளிவை ஏற்படுத்தியது. அன்றைய கூட்டத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவா, ரெ.கார்த்திகேசு, சாமி மூர்த்தி, ரெ.சண்முகம், கோ.புண்ணியவான், டாக்டர் சொக்கலிங்கம் என நாட்டில் பல்வேறு மூத்த எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர். ஜெயமோகன் தன் உரையில் மரபிலக்கிய வாசிப்பு குறித்து கூறியது எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் மலேசியாவைப் பொறுத்தவரை மரபிலக்கியம் பயின்றவர்கள் நவீன இலக்கியத்திற்கு எதிர்ப்பாகவே இருந்தனர். மனுஷ்ய புத்திரன் வருகையை மனநோயாளியின் வருகை எனத் தங்கள் இதழ்களில் கேலி செய்தனர். ஆனால் ஜெயமோகன் "எவன் ஒருவனால் கம்பனையும் ஆழ்வாரையும் படிக்க முடிகிறதோ அவனுக்கு நவீன இலக்கியத்தின் வாசல் வெகு எளிதாகத் திறக்கும்" என அழுத்தமாகக் கூறினார். பல்வேறு கேள்விகளை மிக எளிதாக எதிர்க்கொண்டார். நிகழ்ச்சியில் இறுதியாக வந்த கேள்வி. "விமர்சகர் ஜெயமோகன் எழுத்தாளர் ஜெயமோகனைப் பற்றி கூறிவது என்ன?" ஜெயமோகன் சட்டெனக் கூறினார் "மிக நீண்ட ஆய்வுக்குப் பிறகு தமிழில் மிகச்சிறந்த இலக்கியவாதி என்பதுதான்."


ஜெயமோகன் எல்லோரிடமும் நட்பாகவே பேசினார். இவ்வளவு சமத்தான மனிதரா இணையத்தில் அப்படி விவாதம் செய்கிறார் எனக் குழம்பினேன். எங்களுக்குள் கிசுகிசுத்தும் கொண்டோம். ஆனால் எங்கள் சந்தேகத்துக்கு 3.8.2006 சோமா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பதில் கிடைத்தது. தமிழ் இளைஞர் மணிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது. திராவிட மொழிக்குடும்பம் குறித்த கேள்வி எழ அதற்கு தெலுங்கு தமிழில் இருந்து பிரிந்த மொழியாக இருக்காது எனச் சொல்லப்போக தமிழின் பழமை குறித்து சர்ச்சை எழுந்தது. ஒருவர் தமிழ் பல லட்சம் வருடங்கள் பழமை வாய்ந்தது என உரக்கச் சொல்ல அதன் எதிரொலிகள் ஆங்காங்கே கிளம்ப, ஜெயமோகன் "நான் ஒரு மொழி ஆய்வாளன் அல்ல. உலக மொழி ஆய்வாளர்கள் எதை கூறுகிறார்களோ அதை ஒரு சில ஆய்வுகளுக்கு உட்படுத்தி நான் ஏற்றுக்கொள்கிறேன். மற்றபடி உணர்ச்சிவசப்பட்ட ஒரு புலவனின் வரிகளை வரலாற்றுத் தரவாக என்னால் ஏற்க முடியாது" எனக்கூறியவர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார். நான் அவசரமாக அவரை காருக்கு அழைத்துச் சென்றேன். கடுகடுப்பான ஜெயமோகனை முதன் முறையாகப் பார்த்தேன். 


4.8.2006 ஜெயமோகன் மறுபடியும் சிங்கப்பூருக்கு புறப்பட்டார். காரில் ஏறிய அவர் "இந்த இரண்டு நாட்களில் பல தரப்பினரிடமிருந்து பல வகையான கேள்விகளை எதிர்கொண்டேன். நான் கூறிய பதில்கள் அனைத்தும் கேள்வி கேட்பவருக்கு மட்டுமல்ல. பொதுவாக கேள்வி கேட்பவர் அதற்கான பதிலை மனதில் வைத்திருப்பார். ஆனால் எங்கோ ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருக்கும் ஒருவர் ஆழமாய் இந்த விளக்கங்களை கவனிக்கிறார். அவருக்கு இந்த பதில்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்நாட்டில் நல்ல இலக்கியம் வளர்வதற்கான எல்லா சூழலும் தெரிகிறது. இன்னும் 20 வருடங்களில் இந்நாட்டில் நல்ல இலக்கியம் உருவாகும் என நம்புகிறேன்" என்று விடைபெற்றார்.



ஜெயமோகன் சென்ற பிறகு இலக்கிய விமர்சனத்தின் தேவை குறித்த எண்ணம் மட்டுமே மனதில் பதிந்திருந்தது. அடுத்த காதல் இதழில் அவர் வருகையைப் பற்றிய பதிவை எழுதும் போது ‘விமர்சனத்தில் தன்னைக் குளிப்பாட்டிக் கொள்வதுதான் நவீன இலக்கியம்’ எனத் தலைப்பிட்டேன். ஜெயமோகன் அப்படித்தான் சொன்னார். தனிப்பட்ட முறையில் எங்களிடம் உரையாடும்போதும் ஒரு படைப்பை விமர்சனத்துடன் அணுகுவதன் தேவையை எடுத்துரைத்தார். அதற்குத் தேவையான பரந்த வாசிப்பை விளக்கினார். மலேசியாவில் அப்படியான இலக்கிய விமர்சனங்கள் உருவாக வேண்டும் என்பதையும் அதற்கான கடும் உழைப்பும் வாசிப்பும் அவசியமென்றும் கூறினார். ஓர் எழுத்தாளன் இலக்கியத்திற்கு தர வேண்டிய  உழைப்பும் அர்ப்பணிப்பும் அச்சத்தை மூட்டியது. அந்த இயலாமையின் பதற்றம் அவர் மேல் கசப்பு ஏற்பட காரணமாக இருந்தது.

 

***


ஜெயமோகன் மலேசியாவுக்கு வந்து சென்ற மூன்று மாதங்களில் காதல் இதழ் பொருளாதார சிக்கலால் நிறுத்தப்பட்டது. 2006இல் நான் ஒரு மாத தமிழகப் பயணம் மேற்கொண்டபோது சந்தித்த பல எழுத்தாளர்கள் மத்தியிலும் ஜெயமோகன் என்ற பெயர் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அடிபடவே செய்தது. தமிழினி வசந்தகுமாரை சந்தித்தபோது என் பட்டியலில் இல்லாத ஜெயமோகன் நூல்களை என் முன் அடுக்கி, ‘இலக்கியத்தில் உருப்பட இது மட்டுமே வழி’ என்பதாகப் பேசினார். அது நவீன இலக்கிய வரிசை என்ற ஏழு நூல்கள்.

 

2007இல் வல்லினம் அச்சு இதழ் தொடங்கப்பட்டது. இலக்கியத்தைக் குறித்த ஜெயமோகனின் பார்வைகளை அறிந்துகொள்ள அவரைத் தொடர்ச்சியாக வாசித்த காலமது. வல்லினம் நண்பர்கள் மத்தியில் ஜெயமோகன் எப்போதும் ஒரு பேசுபொருளாகவே இருந்தார். கோட்பாடுகள் சார்ந்த ஈர்ப்பு, குறிப்பிட்ட அரசியல் சார்ந்த பிடிப்பு என ஜெயமோகனுக்கு எதிரான மனநிலை வளர்ந்து வந்த காலமும் அதுதான். ஜெயமோகனின் இலக்கிய அபிப்பிராயங்களுக்கு எதிராக மனதைத் திருத்துவதை ஒரு பயிற்சியாகவே மேற்கொண்டேன். சில நண்பர்களின் இணைவுடன் அவர் மேல் ஒரு கூட்டான கற்பனை கசப்பை உருவாக்கிக்கொள்ள முயன்றேன். ஜெயமோகன் ஒரு சாதிய வெறியர். அவர் ஓர் இந்துத்துவா. ஆர்.எஸ்.எஸ்ஸில் பயிற்சிகள் எடுத்தவர். இலக்கியம் என்பதை மேட்டுக்குடி மக்களுக்கானது என நிறுவ முயல்பவர். அவரது விமர்சனங்கள் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டவை. கடும் வன்மம் கொண்டவர். இப்படி பலவாறாகக் கட்டமைத்துக்கொண்டேன். சில நண்பர்களும் அவ்வெண்ணத்துடன் ஒத்திருந்தனர். இவ்வெண்ணம் வலுவாக அவ்வப்போது மலேசியாவுக்கு வரும் தமிழக எழுத்தாளர்கள் முக்கியப் பங்காற்றினர்.

  

வல்லினம் அச்சு இதழை இடது சாரி மனநிலையுடன்தான் உருவாக்கினோம். அதன் கடைசி இதழை ‘ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்’ என்ற அடைமொழியுடனேயே வெளியிட்டோம். வல்லினத்தில் இருந்த சில நண்பர்கள் அவ்வாறு குறிப்பிட்ட ஓர் அரசியலை கையில் எடுப்பதை தவறென கூறியுள்ளனர். குறிப்பாக மஹாத்மன். தனிப்பட்ட முறையில் நிறைய குழப்பமும் அதை எதிர்க்கொள்ள மனமில்லாத தீவிரமான செயல் வேட்கையும் என்னை அலைக்கழித்த காலமது. பல்வேறு தரப்புடன் எதிர்கருத்துகள், விவாதங்கள், முரண்பாடுகள் என நீடித்தது. யாரின் துணையும் இல்லாமல் வல்லினத்தை நடத்த வேண்டுமென முடிவெடுத்தேன். 2009இல் வல்லினம் அச்சு இதழ் நிறுத்தப்பட்டு இணைய இதழ் 2009இல் தொடங்கப்பட்டது. 


ஜெயமோகனின் இரண்டாவது மலேசிய பயணம் 27.1.2010இல் நிகழ்ந்தது. மலேசியாவின் அன்றைய துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களது அழைப்பின் பெயரால் மரபின் மைந்தன் முத்தையா ஏற்பாடு செய்த ஒரு பண்பாட்டுப் பரிமாற்ற பயணத்தில் அவரும் இடம்பெற்றிருந்தார். உடன் நாஞ்சில் நாடனும் வந்திருந்தார். ஜெயமோகனின் வருகையை எனக்கு டத்தோ சரவணன் அவர்களே தொலைபேசியில் தெரிவித்தார். ஒரு உணவு வேளையில் அவர்களைச் சந்தித்து நானே காரில் ஏற்றிக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த விடுதியில் சேர்த்தேன். ஒரு மணி நேரம் மட்டுமே அந்தச் சந்திப்பு. அதன் பிறகு மலேசிய துணையமைச்சர் ஏற்பாட்டில் ஏறக்குறைய ஏழு நாட்கள் மலேசியாவை முழுமையாகவே பார்த்துவிட்டுச் சென்றனர். மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்திய ஒரு கூட்டத்தில் மட்டும் பிப்ரவரி 1ஆம் திகதி கலந்துகொண்டார்.


எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளில் வல்லினம் குழுவினர் கலந்துகொள்வதில்லை என்பதால் நானும் பிற நண்பர்களும் அந்த நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை. அதன் பிறகும் ஜெயமோகனைச் சந்திக்க முயலவில்லை. எனக்குள் இருந்த மனத்தடையை நான் விசாரிக்கவும் இல்லை. இப்போது யோசித்தால் ஜெயமோகனின் முன் நான் மிக மிகச் சிறியவனாகி விடுவதே காரணமாக உணர்கிறேன். அந்த வயதில், ஓர் இதழாசிரியனாக இயக்க செயல்பாட்டாளனாக நான் என்னைப் பற்றி கட்டமைத்திருக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஜெயமோகன் என்ற பெரும் படைப்பாளியின் முன் சுக்குநூறாகச் சிதைவதை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. 


இதே காலகட்டத்தில் ஜெயமோகனை தீவிரமாக வாசிக்கும் ஒரு குழுவினர் கெடா மாநிலத்திலும் உருவாகியிருந்தனர். எனவே, ஜெயமோகனை மீண்டும் அழைக்கும் திட்டம் அவர்கள் வழி உருவானது. இணைந்தே ஜெயமோகனை அழைத்துவந்து இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதெனத் திட்டமிட்டோம்.  அதற்கேற்ப செப்டம்பர் மாதம் நாங்கள் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.


***


செப்டம்பர் 5 2010 இல், ஜெயமோகனின் மூன்றாவது வருகை நிகழ்ந்தது. மலேசிய இலக்கிய வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த வருகை அது. வல்லினத்தில் பெரும்பாலும் இளைஞர்களாக இருந்தோம். இளைஞர்களுக்கே உரிய தத்தளிப்புகளும் கொதிப்பு நிலைகளும் கொண்டிருந்தோம். திடமான முடிவுகளும் தீர்க்கமான பார்வையும் இல்லாமல் படபடப்பான மனதுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தோம். ஜெயமோகன் என்ற ஆளுமை குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல்வேறு எண்ணங்கள் இருந்தன. 


ஜெயமோகன் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பினாங்கிற்கு விமானம் வழி சென்றார். அங்கு அவர் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டார். கெடாவில் அவருக்கான நிகழ்ச்சிகள் தொடர்ந்து திட்டமிடப்பட்டிருந்தன. துங்கு பைனும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, சுங்கை பட்டாணி ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆகியவற்றில் ஜெயமோகன் ஆற்றிய உரைகளும் நவீன இலக்கியம் குறித்த அறிமுகமும் முக்கியமானவை. அப்போது அந்தக் கல்லூரியில் பயிற்சி மாணவனாக இருந்த அரவின் குமார் பின்னாளில் நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளராக உருமாற ஜெயமோகனின் அந்த வருகையும் அவரது மேற்கோள்களும் பெரும் உதவியாக இருந்தன.


நான் ஜெயமோகனை நான்காம் நாள் காணச் சென்றேன். அங்கிருந்து அவரை கோலாலம்பூருக்கு அழைத்து வருவதென திட்டம். என்னுடன் மணிமொழியும் வந்திருந்தார். நாங்கள் சென்றபோது தியான ஆசிரமத்தில் ‘கீதையும் யோகமும்’ என்ற தலைப்பில் ஆசிரமத்துக்கு வரும் இருநூறுக்கும் அதிகமான பக்தர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்து ஜெயமோகனிடம் ‘மலேசிய சிங்கப்பூர் 2010’ சிறப்பிதழை வழங்கினேன். வல்லினம் இணைய இதழாக வந்த பிறகு அதில் தேர்ந்தெடுத்த பகுதிகளை அச்சில் கொண்டு வரும் திட்டத்தால் உருவான இதழ் அது. அதன் வெளியீடு கோலாலம்பூர் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மறுநாள் கெடா மாநில எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறிய சர்ச்சை எழுந்திருந்தது. ஜெயமோகன் தன் உரையில் மலேசிய இலக்கியத்தில் தரமான நாவல்கள் இன்னும் வரவில்லை எனக் குறிப்பிட்டார். அவர் உரைக்குப் பிறகு மலேசிய எழுத்தாளர்களை ஏன் தமிழக இலக்கியவாதிகள் / விமர்சகர்கள் ஏற்பதில்லை என்பதாகக் கேள்விகள் எழுந்தன. எப்படி அனைத்துப் படைப்புகளையும் வாசிக்காமல் மலேசியாவில் நல்ல நாவல்கள் இல்லை எனச் சொல்கிறீர்கள் என அழுத்தமாகக் கேட்கப்பட்டது. மலேசியத் தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, எந்த மொழி இலக்கியம் பற்றியும் அச்சூழலின் அனைத்து ஆக்கங்களையும் வாசித்து ஒருவர் கருத்து சொல்ல முடியாது என்பதை ஜெயமோகன் விளக்கினார். அச்சூழலின் இலக்கியவெற்றிகளாக சில ஆக்கங்கள் காலப்போக்கில் அச்சூழலாலேயே முன்னிறுத்தப்படும். அவற்றை வைத்தே வெளிநாட்டில் உள்ளவர்கள் கருத்துக்களை உருவாக்குவதை சுட்டிக்காட்டினார். ஆனால் அதை யாரும் ஏற்பதாக இல்லை. நிகழ்ச்சி முடிந்தபிறகும் எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. அனைத்தும் ஜெயமோகனை வசைபாடியவை. 



11.9.2010 ஆம் திகதி அதிகாலையில் ஜெயமோகனை காரில் ஏற்றிக்கொண்டு கோலாலம்பூர் புறப்பட்டோம். ஐந்து மணி நேர பயணத்தில் ஜெயமோகனுடனான உரையாடல் எனக்கு பல வகையிலும் திறப்புகளை ஏற்படுத்தின. அவர் மீது பொதுவில் வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து அவரிடமே கேட்டுத் தெளிவடைந்தேன். எந்தக் கேள்விக்கும் ஜெயமோகன் கோபம் அடையவில்லை. தணிந்த குரலிலேயே பதில் சொல்லி வந்தார். அவர் சொல்வதை அறியவும் மீளாய்வு செய்யவும் நான் அதிகம் வாசிக்க வேண்டி இருந்தது. கோலாலம்பூரை அடைவதற்குள்ளாக என் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. அது என்ன மாற்றம் என அப்போது நான் உணரவில்லை. அவர் ஏன் என் மீது கோபப்படாமல் இருக்கிறார்; என் சொற்களால் சீண்டப்படாமல் இருக்கிறார் என்பதும் எனக்குப் புரியவில்லை.


கோலாலம்பூரில் இரண்டு நிகழ்ச்சிகளில் ஜெயமோகன் கலந்துகொண்டார். எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதை பட்டறை மற்றது வல்லினத்தின் நிகழ்ச்சி. இது தவிர முன்னாள் சிறைக்கைதி ஒருவர் தொடங்கியிருக்கும் இலவச கல்விப்பயிற்சி நிலையத்தின் துவக்க விழாவுக்கும் அழைத்துச் சென்றோம். வல்லினம் நிகழ்ச்சியில் ஜெயமோகன் ‘நாவல்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை அவரது உரைகளில் சிறந்தது என்று பலராலும் சொல்லப்படுவதுண்டு. அந்த உரைக்குப் பின்னால் ஒரு ரகசியம் உண்டு.


நிகழ்ச்சி தொடங்க இரண்டு மணி நேரம் இருக்கும் வரை நான் அவரிடம் ‘சிற்றிதழ்’ என்ற தலைப்பையே வழங்கியிருந்தேன். ஆனால் அவருடன் இருந்த சில நாட்களில் நாவல் குறித்த பல குறிப்புகளைத் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருந்ததால் தலைப்பை மாற்றிச் சொன்னேன். “சிற்றிதழ்னு சொன்னீங்க?” என்றார். நான் ஏதோ உளறவே அங்கிருந்து வெளியேறினார். நான் கொஞ்சம் வெலவெலத்து போனேன். முடிந்தது கதை என நினைத்தேன். அதன் பின்னர் அவர் பக்கமே செல்லவில்லை. ஜெயமோகன் உரையைத் தொடங்கி நாவலுக்குச் சென்றார். அது ஓர் அதிசயமான தருணம். அம்மேடையில் அவர் வேறொருவராக மாறியிருந்தார். 


நிகழ்ச்சிகளைத் தவிர நான், சிவா பெரியண்ணன், யுவராஜன் ஆகியோர் அவருடனேயே அதிக நேரம் செலவழித்தோம். 13.9.2010 அவர் தமிழகம் புறப்படும்வரை அதிகாலைவரை அவருடன் இருந்து உரையாடல்களை நீட்டித்துக்கொண்டோம். எங்கள் யாருக்கும் அப்படியான ஓர் தீவிரமான உரையாடல் அனுபவமே இல்லை. ஓர் இளம் எழுத்தாளனுக்கு நூல்கள் கற்பிக்காதவைகளைக் கூட அவ்வாறான உரையாடல்கள் கொடுக்கின்றன.


ஜெயமோகன் புறப்படும் முன்னதாக ஓர் சீன சைவ உணவகத்தில் சாப்பிடலாம் என முடிவெடுத்தோம். அப்போது தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த இளம் எழுத்தாளர்கள் அனைவரும் உடன் இருந்தனர். ஜெயமோகன் தீடீரென என்னைப் பார்த்து சொன்னார். “நீங்க யார எவ்வளோ திட்டுனாலும் கோவிக்க மாட்டாங்க. நீங்க பேசும்போது கொஞ்சம் திக்குறீங்கல்ல. அது எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் உங்கள என்னோட மகன் போல ஓர் நெருக்கத்த உருவாக்குது. அப்படிதான் எல்லாருக்கும் இருக்குமுன்னு தோணுது. அதனால நீங்க எவ்வளோ கடுமையா பேசினாலும் கோவிக்க மாட்டாங்க” என்றார்.


பின்னர் சுவாமி பிரம்மானந்தா அவர்களின் சீடர் வழி விமான நிலையம் செல்வதாகப் புறப்பட்டார். எனக்குள் என்ன மாற்றம் நிகழ்ந்தது என அப்போதுதான் அறிந்தேன். அது நானாக உருவாக்கிக்கொண்ட சுயபெருமிதமும் அதனால் உருவான அகங்காரமும். ஜெயமோகன் என்ற பெரும் ஆளுமைக்கு முன் கரைந்து காணாமல் போயிருந்தது. அதன் விளைவாக அதுவரை மனவிலகலில் இருந்த பாலமுருகன், நான், யுவராஜன் ஆகியோர் மீண்டும் நண்பர்களாகியிருந்தோம். 


ஜெயமோகனின் இந்த வருகைக்குப் பிறகு வாசிப்பில் நானும் சக நண்பர்களும் பெரிதும் தீவிரம் காட்டினோம். தமிழில் வந்துள்ள மிகச்சிறந்த நாவல்களை வாசித்து முடித்தோம். நான் அவை குறித்த கட்டுரைகளைத் தொடராக எழுதினேன். நாவல் குறித்த ஜெயமோகனின் மேடை உரையும் அதற்குப் பின்பான உரையாடல்களும் ஓர் இலக்கிய வாசகன் வாசிப்புக்கு தன்னை எவ்வாறு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. எனவே அதை ஒரு பாடமாகக் கொண்டு பின்பற்றினோம்.


***


ஜெயமோகன் வந்துவிட்டுப் போனதன் விளைவாக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி மற்றும் சு.யுவராஜன், கோ.புண்ணியவான் அவரது தீவிர வாசகர்கள் ஆகியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஜெயமோகன் முன்னின்று நடத்தும் ஊட்டி முகாமில் இரண்டு முறை கலந்துகொண்டனர். அந்த முகாம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மலேசியாவிலும் அப்படி ஒரு முகாம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென முடிவு செய்தனர். சுவாமியை மையமாகக் கொண்டு செயல்பட்ட ‘நவீன இலக்கிய களம்’ வழியாக அந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இலக்கிய களம் எழுத்தாளர் கே.பாலமுருகனின் பரிந்துரையில் கெடாவில் தொடங்கப்பட்ட அமைப்பு. முகாமை ஜெயமோகனே முன்னின்று வழிநடத்த வேண்டுமென திட்டமிட்டதால் 2014இல் அவர் மீண்டும் அழைக்கப்பட்டார்.


16.3.2014 இல் ஜெயமோகனோடு ஈரோடு கிருஷ்ணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் கோலாலம்பூர் வந்து இறங்கினர். முகாம் பினாங்கில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்பாகவே வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இரு கவிதை நூல்கள் (வெறிநாய்களுடன் விளையாடுதல் - ம.நவீன், தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் - கே.பாலமுருகன் ) வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் கலந்துகொண்டு ‘நவீன கவிதைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அது மிக முக்கியமான காலகட்டம். வல்லினத்தில் வந்த ஒரு சிறுகதை சர்ச்சையாகி எல்லா ஊடகங்களும் கிட்டத்தட்ட வல்லினத்தைப் புறக்கணித்துவிட்ட ஒரு சூழலில் அந்த நிகழ்ச்சி, முகநூல் அறிவிப்பின் வழியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வல்லினம் அச்சிதழின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது. கதை எழுதிய தயாஜிக்கு வானொலி அறிவிப்பாளர் பணி நீக்கப்பட்டிருந்தது. எல்லா இடத்திலும் எதிர்மறையான நிலை வெளிப்பட்டது. பலமுனை தாக்குதல்களும் நிகழ்ந்தன. அனைத்தையும் கடந்து எண்பது பேர் எங்களுடன் அந்த நிகழ்ச்சியில் இணைந்திருந்தனர்.


ஜெயமோகனின் அன்றைய உரை கவிதையின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்தது. கவிதை கொண்டுள்ள தனித்த மொழியை பண்டிதர்களால் அறிந்துகொள்ள முடியாததைக் குறித்து பேசினார். இலக்கியம் கொண்டுள்ள மொழி ஏன் சாமனியர்களை அச்சுறுத்துகிறது என்பதை சொன்னார். மறுநாள் இரவு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த ஒரு சந்திப்பில் கலந்துகொண்டார். ஆறேழு பேர் அதில் பங்கெடுத்தனர். ஜெயமோகனுக்கு மலேசியாவில் உள்ள இரட்டை கோபுரத்தின் மீது விருப்பம் அதிகம். இரவில் வெள்ளிக்கூம்புகளாக நிற்கும் அதனை பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார் என்பதால் இரவுலா சென்றோம். 


18.3.2014இல் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சு.யுவராஜனுடன் கெடாவுக்குச் சென்றனர். மறுநாள் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு ஜெயமோகன் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார். அது திரு குமாரசாமி அவர்களின் ஏற்பாடு. நவீன இலக்கிய களத்தில் அங்கத்தினரான அவர் பினாங்கு ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் விரிவுரையாளர். ஜெயமோகன் இம்முறை நன்கு அனைவராலும் வாசித்து அறியப்பட்ட எழுத்தாளராக இருந்தார். அவரைப்பற்றிய அறிமுகமாக ஒரு காணொளியுடன் வெண்முரசு நாவல் வரிசையில் முதற்கனல் நாவலில் உள்ள பீஷ்மர் - அம்பை சந்திப்பை நாடகமாக நிகழ்த்தினர். நாவலில் உள்ள வசனங்களையே எடுத்தாண்டனர். நான் பின்னர் ஜெயமோகனைச் சந்தித்தபோது கல்லூரி மாணவர்கள் குறித்து நேர்மறையான கருத்துகளைச் சொன்னார். உரையை உள்வாங்கி மாணவர்கள் கேள்விகள் கேட்ட விதத்தையும் அவர்களில் சிலர் வெண்முரசு வாசகர்களாக இருப்பதையும் சிலாகித்துப்பேசினார். அதுபோலவே சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பணியாற்றும் தமிழ்மாறன் அவர்களாலும் தன் கல்லூரியில் ஜெயமோகனுடனான ஓர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்மாறன் அவர்களும் நவீன இலக்கிய களத்தில் அங்கத்தினர். இப்படிக் கல்லூரியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இரு இலக்கிய ஆர்வளர்களால் அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய கொடை கிடைத்தது.


கெடாவுக்குச் சென்றால் வழக்கமான சில சுற்றுலா பகுதிகளுக்குச் செல்வது உண்டு. அப்படி பினாங்கு தீவு மற்றும் பூஜாங் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களுக்கு இம்முறையும் ஜெயமோகன் நண்பர்களுடன் சென்று வந்தார்.


22.3.2014 இலக்கிய முகாம் தொடங்கியது. ‘பிரதர்ஸ் பங்களா’ என்ற கொடி மலையில் அமைந்திருந்த பங்களாவில்தான் முகாம் ஏற்பாடாகியிருந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் உரையாடல். இன்று மலேசிய இலக்கியத்தில் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கும் அ.பாண்டியன், சு.யுவராஜன், கே.பாலமுருகன், பூங்குழலி வீரன், விஜயலட்சுமி, கோ. புண்ணியவான், தினேஸ்வரி, மணிமொழி, தயாஜி என பலரும் அதில் பங்கெடுத்தனர். விவாதித்தனர். சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டனர். 24.3.2014 ஆம் திகதி காலை பதினொரு மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது.


இந்த முகாமில் சில பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டாலும் அன்றைய சூழலில் இலக்கியத்தில் இயங்கிய ஓர் இளைஞர் குழு மேலும் தீவிரமாகச் செயல்பட பெரும் ஊக்கத்தையும் தீவிரத்தையும் அந்த முகாம் வழங்கியது. இலக்கியத்தை ஒட்டிய பல்வேறு குழப்பங்களும் தடுமாற்றங்களும் ஜெயமோகனால் களையப்பட்டன. அல்லது சுயமாகத் தேடி கண்டடைவதற்கான குறிப்புகள் வழங்கப்பட்டன. ஜெயமோகன் ஒவ்வொன்றையும் பாடம் போல நடத்தினார். அவர் ஒரு கருத்தைச் சொல்லும் விதம் முதல் வருகையில் இருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது. ஒவ்வொன்றாக அடுக்கிச் சொல்லும் முறையும் பின்னர் வகுத்து தொகுத்து வழங்கும் பாங்கும் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது. 


ஜெயமோகன் மீதிருந்த கற்பனையான கசப்புகள் அனைத்தும் நீங்கிய இடம் இது. தனிப்பட்ட முறையில் நான் என் பலவீனத்தை புரிந்துகொண்டேன். பலவீனத்தை அறிவது என் இருப்பை அழிப்பதாக நினைத்ததால் அதை எதிர்கொள்ளாமல் தவிர்த்திருந்தேன். ஆனால் இலக்கியத்தின் ஆதாரமான உண்மையை அடைய முழுமையாக ஒப்புக்கொடுத்தல் மட்டுமே வழி என்பதை ஜெயமோகன் உணர்த்தினார். மலேசியாவுக்கு அதுவரை நான் அழைத்து நிகழ்ச்சிகள் நடத்திய பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஜெயமோகன் குறித்து சொன்ன நண்பர்கள் வட்டத்தில் சொன்ன அவதூறுகளும் கட்டமைத்த கதைகளும் ஒன்றுமே இல்லாமல் சிதைந்து சிதறின. அவதூறுகளை நாங்கள் நம்ப விரும்பியது எங்களை உண்மையிடம் இருந்து காத்துக்கொள்ள மட்டுமே. உண்மையை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் மனத்திடம் வந்தபோது வெறுப்புகள் அவசியமாக இருக்கவில்லை.


***


11.9.2016 -இல் ஜெயமோகனின் ஐந்தாவது வருகை நிகழ்ந்தது. ஆனால் அது கொஞ்சம் பரபரப்பான வருகை. வல்லினம் மூலம் ஒரு சிறுகதை போட்டியை ஏற்பாடு செய்திருந்தோம். அந்தப் போட்டியில் பங்கு பெற ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி வழங்க ஜெயமோகனை அழைத்திருந்தோம். ஜெயமோகன் அப்போது சிங்கப்பூரில்தான் இருந்தார். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றமும் தேசிய கல்விக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘உடனிருந்து பயிற்றுவித்தல்’ திட்டத்தின் கீழ் இருமாத காலம் சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.


பட்டறை ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெள்ளிக்கிழமை இரவே அவர் சிங்கப்பூரில் இருந்து பேருந்தில் புறப்படுவதாகத் திட்டம். உடன் அருண்மொழி நங்கையும் வருவதாக முடிவு. வரிசையாக ஊர்ந்து செல்லும் பேருந்துகளின் புகையினுள் நெடுநேரம் காத்திருந்ததால் ஜெயமோகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கே காத்திருக்க முடியாமல் வீட்டுக்கே திரும்பிவிட்டனர். 


மறுநாள் அதிகாலையில் கைப்பேசியை எடுத்துப் பார்த்த எனக்கு அவர்கள் வருகை கைவிடப்பட்டது அதிர்ச்சியளித்தது. காரை எடுத்துக்கொண்டு அவரை நானே அழைத்துவர புறப்பட்டேன். ஜெயமோகனின் வழி கிடைக்கும் சிறுகதை குறித்த அறிமுகம் தரமான எழுத்தாளர்களை உருவாக்கும்; அவர்கள் வழி சிறந்த கதைகள் கிடைக்கும் என திண்ணமாக நம்பியதால் பங்கேற்பாளர்களின் ஆர்வத்தைக் கெடுக்கத் தயாராக இல்லை. இடையில் ஒருநாள் இருந்தது வசதியாகப்போனது. மறுநாள் இரவு ஒன்பது மணிக்கு அவர் கோலாலம்பூரில் இருந்தார். ஞாயிற்றுக்கிழமை முப்பது பேர் கொண்ட எழுத்தாளர்கள் மத்தியில் ஜெயமோகன் சிறுகதை எழுதும் உத்தி முறைகளை விளக்கினார். அன்றிரவே வழக்கறிஞர் பசுபதி மற்றும் சண்முகசிவா வழிநடத்தும் மை ஸ்கில்ஸ் கல்வி நிறுவனத்திற்குச் சென்றார். அது அவருக்கு உற்சாகமூட்டும் நிகழ்வாக அமைந்தது. 



குறுகிய கால வருகை என்றாலும் தரமான சிறுகதை கிடைக்க ஜெயமோகனின் அந்தப் பட்டறை துணைபுரிந்தது. நாட்டின் சில முதன்மை எழுத்தாளர்களும் அப்பட்டறையில் பங்கெடுத்துப் பலனடைந்தனர்.    


***


மறுவருடமே ஜெயமோகனை நீண்ட பயணத்திட்டத்தின் அடிப்படையில் அழைத்திருந்தோம். இம்முறை எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் உடன் இருந்தார். இருவரையும் பயிற்றுனர்களாகக் கொண்டு குறுநாவல் பட்டறை ஒன்றை வல்லினம் மூலம் ஏற்பாடு செய்திருந்தோம். பட்டறை 27.5.2017 – 28.5.2017 என இருநாட்கள் நடந்தது. 55 பேர் பங்கெடுத்தனர். கிராண்ட் பசிப்பிக் விடுதியிலேயே தங்கி பங்கேற்பாளர்கள் இரண்டு நாட்களும் பட்டறையில் ஆர்வமாகப் பங்கெடுத்தனர்.


அதோடு மறுவாரம் வெள்ளிக்கிழமையே ஜெயமோகனுக்கு கெடாவில் முகாம் இருந்ததால் கோலாசிலாங்கூர், கேமரன் மலை, எனப் பல்வேறு இடங்களைச் சுற்றிக்காட்டினோம். ஜெயமோகன் அப்போது வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தார். எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அவர் மனதில் அது மட்டுமே இருந்தது. கிடைக்கும் இடைவேளைகளில் எழுத ஆரம்பித்தார். முற்றிலும் சூழலில் இருந்து விடுபட்டு அவராக இடைவேளைகளை எடுத்துக்கொண்டார். எழுத்தாளரிடம் பழகி கற்பது ஒன்றென்றால் பார்த்து கற்பது ஒன்று. எழுத்தாளனிடம் இருக்க வேண்டிய தவமனதை ஜெயமோகன் ஒவ்வொரு நிமிடமும் உணர்த்திக்கொண்டே இருந்தார். 


2.6.2017 – 4.6.2017 (வெள்ளி – ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் நவீன இலக்கிய களம் ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக இலக்கிய முகாம் நடைபெற்றது. இப்போது சுங்கை கோப் மலையில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ‘பிரஹ்ம வித்யாரண்யம்’ என்ற விசாலமான ஆசிரமத்தை அமைத்திருந்ததால் அங்கேயே இலக்கிய முகாம் நடைபெற்றது.


தமிழ்நாட்டில் இருந்தும் சிங்கையில் இருந்தும் கணிசமானோர் இந்த முகாமில் கலந்துகொண்டதால் வலுவான கலந்துரையாடல்களும் தீவிரமான எதிர்வினைகளும் நுட்பமான கருத்துப்பரிமாற்றங்களும் பகிரப்பட்டன. நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ஜெயமோகன் நான், சு.யுவராஜன், கோ.புண்ணியவான், சீ.முத்துசாமி ஆகியோர் ஓர் அமர்வில் பேச வேண்டுமென கூறிவிட்டார். 


ஜெயமோகனிடம் எப்போதுமே இந்த பண்பு இருப்பதை அவதானித்துள்ளேன். அவர் மலேசியாவுக்கு வரும் ஒவ்வொரு முறையும் தன் சக எழுத்தாளர்களை பேசுவதற்கும் கருத்து பரிமாறலுக்கும் தூண்டுகிறார். மெல்ல சீண்டி விவாதத்தை முன் வைக்க அழைக்கிறார். தீவிரமான ஓர் உரையாடலை உருவாக்குவதே அவரது நோக்கமாக உள்ளது. 


நிகழ்ச்சியின் முடிவில் ஜெயமோகன் யாரும் எதிர்பார்க்காத வகையில் சீ.முத்துசாமிக்கு அவ்வாண்டின் விஷ்ணுபுரம் விருதை வழங்குவதாக அறிவித்தார். அது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அவரது முந்தைய நான்கு வருகையின் போதும் சீ.முத்துசாமியை அவர் சந்தித்ததே இல்லை. அவரது நூல்களை மட்டுமே வாசித்திருந்தார். வாசிப்பின் வழியாகவே அவர் முத்துசாமியிடம் உரையாடிக்கொண்டிருந்தார் எனத் தெரிய வந்தது. ஜெயமோகனின் மீதான மதிப்பு பலமடங்கு அதிகரித்த தருணம் அது. மலேசிய இலக்கியம் உலகம் முழுவதும் சென்று சேர வேண்டும் என்ற எங்கள் கனவை ஜெயமோகன் ஒரே நிமிடத்தில் நிகழ்த்திக்காட்டினார்.


ஜெயமோகன் இங்கிருந்த காலங்களில் நான் அறிந்த ஒன்றுண்டு. எந்த எழுத்தாளரைப் பற்றிய தனி வாழ்க்கை குறித்தும் ஒரு வார்த்தை பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது ஏற்கனவே எங்காவது அவரால் பதிவு செய்யப்பட்டதாகவே இருக்கும். அவரை பலவாறான அவதூறு செய்யும் எழுத்தாளர்கள் குறித்த பேச்சு வரும்போது கூட அவர்களது படைப்புகள் குறித்த கறாரான பார்வையை மட்டுமே முன்வைத்தார். அதுபோல நான் காணாத இன்னொரு அதிசயமும் நடந்தது.


மலேசியாவுக்கு வரும் தமிழக எழுத்தாளர்களில் பலர் இங்குள்ள தனவந்தர்கள் அல்லது தமிழ் அமைச்சர்களின் நட்பை நாடுவதுண்டு. தங்கள் இரவுகளை அவர்களுக்கு வழங்கி நட்பை நெருக்கமாக்குவதுண்டு. ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் வந்திருக்கும் தகவலை அறிந்த துணை அமைச்சர் சரவணன் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை என்னிடம் தொலைபேசியில் கூறினார். துணையமைச்சர் ஏற்கனவே ஜெயமோகனையும் நாஞ்சில் நாடனையும் அறிந்தவர். அவரது அழைப்பின் பேரில் இருவருமே மலேசியாவைச் சுற்றி வந்துள்ளனர். இத்தருணத்தை ஜெயமோகன் எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அடுத்த நிமிடமே ஜெயமோகன் சொன்னார், “சந்திப்பதானால் அவர் இங்கு வரட்டும். அல்லது எங்காவது பொது இடத்தில் பார்க்கலாம். அவர் அலுவலகத்தின் முன் சென்று காத்திருப்பதெல்லாம் கூடாது” 


ஜெயமோகன் அன்றி இன்னொரு எழுத்தாளர் இப்படிக் கூறுவாரா என்று தெரியாது. அப்படியே அந்தச் சந்திப்பு ஓர் உணவகத்தில் நடந்தது. எப்போதும் தீவிரமாக உரையாடும் ஜெயமோகன், தேநீரில் மிதந்த எலுமிச்சையை சிறிய கரண்டியால் முப்பது நிமிடமாக உருட்டி விளையாடிக்கொண்டிருந்தார். அவ்வளவு மௌனமான ஜெயமோகனை அன்றுதான் முதன்முறையாகப் பார்த்தேன்.


***


16.12.2017 முதல் 18.12.2017 வரை கோவையில் ராஜஸ்தானிசங் அரங்கில் நடந்த விஷ்ணுபுரம் விழா மலேசிய நவீன இலக்கியத்தில் முக்கியமான வரலாற்றுத்தருணம். வேறு எந்த நாட்டில் இலக்கியம் படைப்பவர்களும் அதன் அவசியத்தை அறிந்திருப்பார்களா எனத் தெரியாது. மலேசியாவில் கூட அதன் முக்கியத்துவத்தை அறியாமல் இருக்கலாம்.


2006இல் காதல் இதழ் தொடங்கப்பட்ட முதன்மையான காரணம் இளம் படைப்பாளிகளுக்கான களம் அமைத்துக்கொடுப்பதுதான். முற்றிலும் நாளிதழ்களை மட்டுமே படைப்பாளிகள் நம்பியிருந்த சூழலில், படைப்புச் சுதந்திரத்தை விரும்பிய இளம் தலைமுறைக்கு காதல் இதழின் வருகை பெரும் வீச்சை ஏற்படுத்தியது. பல மூத்த படைப்பாளிகளும் காதல் இதழில் தங்களை இணைத்துக்கொண்டனர். மலேசியாவின் தமிழ் இலக்கியத்தை முன்னெடுப்பதாகக் கூறிக்கொள்ளும் அமைப்புகளும் கல்விக்கூடங்களும் தங்களுக்கு விசுவாசமான வெகுசன படைப்பாளிகளையும் ஒழுக்கவாத  சிந்தனையாளர்களையும் முன்வைத்துக்கொண்டிருந்த சூழலில் காதல் இதழ் மலேசியாவில் யார் முதன்மையான படைப்பாளிகள் என அடையாளம் காட்ட வேண்டியிருந்தது. சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கோ.புண்ணியவான், ஓவியர் சந்திரன் என பலரையும் முகப்பில் அட்டைப்படமாகப் போட்டு கவனப்படுத்தப்பட்டது. இந்தப் போக்கு வல்லினம் இதழிலும் தொடர்ந்தது.


ஆவணப்படங்கள், நேர்காணல்கள், வல்லினம் விருதுகள், நூல் பதிப்பு என மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தின் முகங்களைக் கட்டமைக்க 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் கல்விக்கூடங்கள், எழுத்தாளர் சங்கம் போன்ற அரசாங்க நிதி உதவி உள்ள அமைப்புகள், நாளிதழ்கள் போன்ற பெரும் சக்திக்கு முன்பு எங்கள் முன்னெடுப்புகள் பல சமயங்களில் கவனப்படுத்தப்படாமல் இருந்தன. 2017 விஷ்ணுபுரம் விருதுவிழா அனைத்தையும் மாற்றியது. ஜெயமோகன் தன் மாயக்கரங்களால் மலேசிய இலக்கியத்தை உலகம் முழுவதும் உள்ள தனது வாசகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். சீ.முத்துசாமிக்கான விருது வழங்கும் விழாவாக மட்டுமல்லாமல் மலேசிய இலக்கியத்தை அறிந்துகொள்வதற்கான தனி அமர்வுகளையும் உருவாக்கிக்கொடுத்தார். அது ஒரு வரலாற்றுத்தருணம் என நான் அப்போது உணரவில்லை. மெல்ல மெல்ல மலேசியத் தமிழ் இலக்கியத்தின் சத்தான பகுதியின் மீது கவனம் குவிந்ததை நான் ஒரு சில மாதங்களில் அறிந்துகொண்டேன்.



நான், சண்முகசிவா, சுவாமி பிரம்மானந்தா, விஜயலட்சுமி, தயாஜி என மேடையில் ஏற்றப்பட்டு மலேசிய இலக்கியம் குறித்த விளக்கங்கள் வழங்க பணிக்கப்பட்டது. அதன் வழி தமிழகத்தில் மலேசிய இலக்கியம் குறித்து இருந்த மனநிலையில் மெல்லிய மாற்றங்கள் நிகழ்த்தொடங்கின. அதன் உச்சமாக சீ.முத்துசாமியின் விருதுவிழா அமைந்தது.


***


ஜெயமோகன் மலேசியாவின் தரமான இலக்கியத்தை மலேசிய எழுத்தாளர்களைக் கொண்டே முன்னெடுக்கும் ஆர்வத்தைக் கொண்டிருந்தார் என்பதை எனக்கு ஊட்டி முகாமே தெளிவுபடுத்தியது. 3.5.2019 - முதல் 5.5.2019 வரை நடைபெற்ற அந்த முகாமில் மலேசியாவின் தரமான சிறுகதை குறித்த உரையாடல் ஒன்றையும் உருவாக்கினார். நான் அதில் சீ.முத்துசாமியின் ‘இரைகள்’ சிறுகதையை ஒட்டி பேசினேன். 


மலேசியாவுக்கு வரக்கூடிய பல எழுத்தாளர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் உபசாரத்தில் மயங்கி குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்களை வாயார புகழ்வதுண்டு. அவர்களின் பலவீனமான படைப்புகளை ஒட்டி பதிவு செய்வதுண்டு. ‘மலேசியாவுக்கு இது போதும்’ என்பதாக அவர்கள் பேச்சு இருக்கும். அப்படிப் பாராட்டுபவர்கள் பெரும் ஆளுமைகளாக இருக்கும்போது அவர்கள் கருத்துகளே இங்கு மறுபடி மறுபடி இலக்கியச் சூழலில் முன்வைக்கப்படுவதுண்டு. ஜெயமோகன் அதில் தெளிவாக இருந்தார். மூன்று நான்கு முறை வந்தபோதும் என் படைப்புகள் உட்பட பலருடைய ஆக்கங்களையும் கறாராகவே விமர்சனம் செய்தார். தனது நவீன இலக்கிய வரலாறு நூலில் காதல் இதழின் வருகை குறித்து சிறு குறிப்பொன்றையும் இணைத்தார். மலேசியாவில் அவ்வப்போது வரும் நல்ல படைப்புகளைத் தொடர்ந்து அடையாளம் காட்டிக்கொண்டே இருந்தார். மலேசியாவில் எழுதப்பட்டாலும் அது தமிழ் இலக்கியம்தான். அதனை கறாரான விமர்சனத்தின் அளவுகோளிலேயே மதிப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்,


ஒரு நிலத்தில் உருவாகும் நல்ல இலக்கியங்கள் அந்த நாட்டில் உள்ள படைப்பாளிகளால், விமர்சகர்களால் மேலெடுத்து வரப்பட வேண்டும் என்பதில் ஜெயமோகன் தெளிவாக இருந்தார். 2010இல் அவர் வந்தபோது, மலேசியாவில் தரமான நாவல்கள் உருவாகவில்லை என்ற கூற்றின் அடிப்படை உண்மையை உணர்ந்துகொண்டு நான் ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ என்ற மலேசியாவின் தரமான நாவல்களை அடையாளம் காட்டும் கட்டுரை நூல் ஒன்றை வெளியீடு செய்தேன். சு.யுவரஜான், கே.பாலமுருகன் போன்றவர்களும் அப்போது புனைவிலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர்.


ஜெயமோகன் ஒரு நாட்டில் நல்ல இலக்கியம் உருவாவதற்கான வழிகளை மட்டுமே உருவாக்கிக்கொடுத்தார். அது அடர்காட்டில் ஒரு பெரும் யானை நடந்து செல்வதுபோல. மெல்லிய வழித்தடம் ஒன்று அதையொட்டி உருவானது. நம்பிக்கை கொண்ட சில இளைஞர்கள் அப்பாதையில் பயணித்தனர். ஒரு சிறந்த ஆசிரியர் செய்யக்கூடியது அதுதான்.


***


ஜெயமோகனின் ஏழாவது மலேசிய வருகை 2019இல் ஏற்பாடு செய்யப்பட்டது. 20.12.2019 (வெள்ளிக்கிழமை) முதல் 22.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) வரை வல்லினம் மற்றும் நவீன இலக்கிய களம் இணைவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில் கோலாலம்பூரைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவு கலந்துகொண்டனர். இம்முறை ஜெயமோகனோடு சு.வேணுகோபால், சாம்ராஜ் மற்றும் அருண்மொழி நங்கை ஆகியோர் பங்கெடுத்தனர்.


2006இல் தான் சந்தித்த மலேசிய இலக்கிய வாசகர்களுக்கும் 14 ஆண்டுகளில் அவர்கள் அடைந்துள்ள மாற்றங்களையும் ஜெயமோகனால் உணர முடிந்திருக்கும். தற்கால உலக இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், மரபு இலக்கியம் என பல புதிய தலைப்புகளில் உரைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இம்முறை தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.எஸ்.வி நவீன், சைதன்யா, ஸ்வேதா ஆகியோர் இணைந்திருந்தனர். உரையாடல்கள் அனைத்திலும் கேட்கப்பட்ட கேள்விகள் முன்பிலும் மாறுபட்டிருந்தன. மெல்ல மெல்ல நகர்ந்து வந்துள்ள தடயம் அது.


நிகழ்ச்சியின் இறுதியில் சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருதை ஜெயமோகன் எடுத்து வழங்கினார். மலேசிய இலக்கியத்தின் மீதான அவர் நம்பிக்கை ஒவ்வொரு சொல்லிலும் உதித்தது.


23.12.2019 – 24.12.2019 (திங்கள் – செவ்வாய்) ஆகிய இருநாட்கள் நடைபெற்ற அருள் விழாவில் ஜெயமோகனும் சு.வேணுகோபாலும் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சுவாமி முன்னெடுத்து வரும் அருள் விழா ஆன்மிக முகாமாக நடைபெறுகிறது. அந்த முகாமின் உச்சமாக ஒரு துறையில் பெரும் சாதனை படைத்தவர்களுக்கு ‘அருளாளர் விருது’ வழங்கப்படுகிறது. அப்படி அதுவரை பத்துப் பேருக்கு மட்டுமே அருளாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகளுக்கே சுவாமி இவ்விருதை அறிவிக்கிறார். குறிப்பிட்ட ஒரு துறையில் தொடர்ச்சியாகப் பெரும் பங்களிப்பை வழங்கியவர்களின் வாழ்நாள் சாதனையைப் போற்றி விருதுத் தொகையாக ஐயாயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஓர் அறிவார்ந்த சமூகம் இதுபோன்ற விதி சமைப்பவர்களைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் மிகக் கவனத்துடன் சுவாமி இதை முன்னெடுத்து வருகிறார்.


இசை கலைஞர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என பலருக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ள சூழலில் இம்முறை ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. 24.12.2019 திகதி, இரவில் ஜெயமோகன் இவ்விருதைப் பெற்றார்.


ம. நவீன்


***


முதல் முறை 2006இல் ஜெயமோகனைச் சந்தித்ததற்கும் இப்போது உரையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அரங்கிலோ தன் புனைவுலகத்திற்குள்ளோ ஓர் உக்கிரமான களிறின் வீரியத்துடன் இருப்பவர் அங்கிருந்து இறங்கி வந்தவுடன் கனிந்து சிரிக்கும் குழந்தையாகிவிடுவார். பல சமயம் அவர் எனக்கு போர்க்கள யானையை நினைவு படுத்துவதுண்டு. புறநானூற்றில் ஒரு காட்சி உண்டு. மன்னன் அதியமானால் வளர்க்கப்பட்ட யானை போர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்தி விட்டு, நீர் நிரம்பிய குளத்தில் விளையாடுகிறது. அதைக் கண்ட சிறுவர்கள் யானையின் மீது தண்ணீரை தெளித்தும், அதன் வெண்ணிறத் தந்தங்களைக் கழுவியும் மகிழ்கிறார்கள். வீரஞ்செறிந்த யானையோ சிறுவர்களின் மகிழ்ச்சி ததும்பும் செயலை விரும்பி ஏற்று அமைதியாக அவர்களோடு உறவாடுகிறது. போரின் உக்கிரம் இல்லாமல் அன்புடன் தன்னை வரவேற்கும் அதியமானை ஔவை யானையுடன் ஒப்பிடுகிறார். 


அந்த யானைதான் ஜெயமோகன். 


50களில் கு.அழகிரிசாமி மலேசிய இலக்கியத்திற்கு செய்த பெரும் பணிக்கு நிகரானது ஜெயமோகனின் பங்களிப்பு. நன்கு சிந்தித்தால் அதற்கு மேலும் வலுவான விளைவுகளை உருவாக்கியுள்ளது. தொடர் பட்டறைகள், விவாதங்கள், முகாம்கள் என ஒரு பக்கம் இணைந்திருப்பதுடன் அவர் ஏற்கனவே உலகம் முழுவதும் உருவாக்கி வைத்துள்ள பெரும் வாசகர் பரப்பிடம் விருதுகள் வழியும், மலேசிய இலக்கியத்தின் அறிமுக கட்டுரைகள் மூலமும் கொடுக்கும் பங்களிப்புக்கு மலேசிய இலக்கிய உலகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.


***


ம. நவீன் - தமிழ் விக்கி பக்கம்

4 comments:

  1. மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஒரு மடைமாற்றம் நிகழவேண்டும் என்பதற்கு , ஜெயமோகனின் பங்களித்து என்னவெல்லாம் செய்தார் என்று துல்லிதமான விவரணைகளுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலக்கட்டத்தைச் சுட்டிச் செல்கிறது இக்கட்டுரை.

    ReplyDelete
  2. மலேசிய தமிழ் இலக்கிய சூழலில் நான் எந்த அமைப்பு சார்ந்தும் இயங்காமல் தனித்தே இருந்திருக்கிறேன். எனவே பதிவில் காணும் பல விபரங்களை இப்போதே முதல்முறையாக அறிந்துக்கொண்டேன். நவீன் மற்றும் அவர்தம் குழுவினரின் முன்னெடுப்பும் அர்ப்பனிப்பும் வணக்கத்திற்குரியது. ஜெமோவின் அங்கீகாரமும் தான்.

    ReplyDelete
  3. நவீன்,
    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. கட்டுரைத் தலைப்பு மிகப்பொருத்தம்.
    யானையொத்த ஆற்றல் திறன்மிக்க ஓர் எழுத்தாளரின் வருகை ஒரு நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வகைகளிலெல்லாம் பயன்மிக்கதாய் அமையும் என்பதை கட்டுரை துல்லிதமாக விவரிக்கிறது. ஒரு நல்ல முன்மாதிரியான கட்டுரை.

    ReplyDelete