ஒரு சிறிய சமூகத்தின் புனைபெயர் - பா. ராகவன்

தமிழ்ச் சூழலில் ஒரு சராசரி மனிதன் அறுபதாண்டுகள் நலமாக வாழ்வதற்கும் ஓர் எழுத்தாளன் வாழ்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலொழிய அந்தக் காலப் பரப்பை பெரிய சிக்கல்களின்றிக் கடப்பது சிரமம். ஜெயமோகன், சிக்கலின்றிக் கடந்தார் என்று சொல்ல முடியாது. அவருக்கு பத்தாண்டுகள் சிறியவன் என்ற அளவிலேயே, அவர் மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அக்கப்போர்கள், திரிபுகள், காழ்ப்புகள், வன்ம வெளிப்பாடுகள், ஆவேசத் தாக்குதல்கள், புரணிகள் என பலவற்றை கண்டிருக்கிறேன். நான் கண்டவற்றைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருந்திருக்கும் என்ற ஊகத்தில்தான் அதனை சொன்னேன். போராடித்தான் வந்திருக்கிறார். இருப்பினும் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர். அப்படியே என்றென்றும் இருக்க வேண்டும்.


அடுத்த தலைமுறையை தீவிரமாக பாதிக்கும் எழுத்து என்பது எல்லா தலைமுறைகளிலும் வருவதில்லை. ஒவ்வோர் எழுத்தாளரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், தன்னால் இயன்றதைச் செய்கிறார். அவற்றில் சில சிறப்பாக அமைகின்றன. சில எடுபடாமல் போகின்றன. மிகச் சிலர் மட்டுமே பெற்றோரால் வாசிக்கப்பட்டு சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் நிலையை தொடுகிறார்கள். கல்கிக்கு இது நிகழ்ந்தது. அவருக்குப் பிறகு வந்தவர்களுள் ஞானபீட விருதெல்லாம் பெற்ற அகிலனுக்குக் கூட அமையவில்லை.  சாகித்ய அகடமி விருது பெற்ற ஏராளமான எழுத்தாளர்களின் பெயர்களைக்கூட மக்கள் மறந்துவிட்டார்கள். 


கல்கி எழுதத் தொடங்கிய காலத்துக்கு நெடு நாள்களுக்குப் பிறகு எழுத வந்த ஜெயகாந்தனை அந்த வரிசையில் இரண்டாவதாக சொல்லத் தோன்றுகிறது. ஒரு புயலின் படிமத்தை ஜெயகாந்தனின் எழுத்து பரவலாகத் தொடங்கிய தருணத்துக்கு எளிதாக அளித்துவிட முடியும். தனது கிராமத்தில் வாரம் ஒரு நாள் விடியும்போதே ரயில் நிலையத்துக்கு ஓடிச் சென்று ஆனந்த விகடன் பார்சல் வந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, திரும்ப ஓடி வந்து ஊருக்கு அறிவிக்கும் அந்நாளைய கல்கி வாசகர்களைப் பற்றி என் தந்தை எனக்கு சொல்லியிருக்கிறார். அந்தளவு இல்லை என்றாலும் ஜெயகாந்தனின் வாசகர்களும் ஒரு வகையில் தீவிரவாதிகளே. ஆண்-பெண் பால் பேதமின்றி அவரை விழுந்து விழுந்து படித்த ஒரு பெரும் தலைமுறையை அறிவேன். அந்த அலை ஓய்ந்த பிறகும் வாடகை நூலகங்களில் அவரது புத்தகங்களைத் தேடி எடுத்துப் படித்து ரசிப்போர் குறையவில்லை. கல்கியைப் போல இன்றுவரை அவரும் செல்லுபடியாகக் கூடிய எழுத்தாளராகத்தான் இருக்கிறார்.


கல்கி-ஜெயகாந்தன் அலையை சமாளிக்க முடியாமல்தான் லட்சக் கணக்கான வாசகர்கள் சேரும் எழுத்தை தரமற்றது என்று சொல்லும் கலாசாரம் தீவிரமடையத் தொடங்கியது. வெகுஜன உலகம் ஒன்றை விரும்பினாலே அது தீட்டுப் பட்டது என்று உடனே விரைந்து அறிவிக்கும் குழந்தைத்தனம் அதிகரித்தது. 


ஆனால் அவ்வளவு அச்சம் தேவையில்லை. காலம் தாட்சண்யம் பார்ப்பதில்லை. தரமற்ற எதையும் அது இடக்கரத்தால் புறந்தள்ளிச் சென்றுவிடுவது எப்போதும் நடந்து வருவதுதான். இன்றும் கல்கியை திட்டுகிறார்கள். இன்றும் கல்கி வாசிக்கப்படுகிறார். இன்றும் ஜெயகாந்தனை லவுட் ஸ்பீக்கர் எழுத்து என்கிறார்கள். இன்றும் அவர் கொண்டாடப்படுகிறார். எதில் குறைவு? ஒன்றுமேயில்லை.


இந்த இடத்தில் மிகவும் விழிப்புணர்வுடன் கல்கி-ஜெயகாந்தன் வரிசையில் நான் ஜெயமோகனை வைத்துப் பார்க்கிறேன். கலை என்கிற அம்சத்தில் முந்தைய இருவருக்கும் ஜெயமோகனுக்கும் சம்பந்தமே இல்லை. கல்கிக்கு இருந்த பிரசார நோக்கமும் ஜெயகாந்தனுக்கு இருந்த இயக்கம் சார்ந்த மனத் தகவமைப்பும் ஜெயமோகனுக்கு கிடையாது. தானே உருவாக்கிக்கொண்ட தனது கருத்துலகத்தினை அவர் கதைகளின் மூலமும் முடிவற்ற விவாதங்களின் மூலமும் தொடர்ந்து முன் வைத்துக்கொண்டிருக்கிறார். அதன் அச்சமூட்டக்கூடிய ஆழமும் அகலமும் அந்த அச்சம் தாண்டியதொரு வசீகரத்தை தனது அடையாளமாகக் கொண்டிருக்கின்றன. அந்த வசீகரமே இன்று பல்லாயிரக் கணக்கான வாசகர்களை திரும்பத் திரும்ப அவரது எழுத்தை நோக்கி ஈர்த்துக்கொண்டிருக்கிறது.


அவ்வகையில் முன்சொன்ன இருவரினும் வேகமாகவே ஜெயமோகன் தனது அடுத்த தலைமுறையின் மீது தாக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நாற்பது முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட பெற்றோர் தமது வாரிசுகளிடம் (இவர்கள் இருபது வயதுக்குட்பட்டவர்கள்) ஜெயமோகனை படிக்கும்படி சிபாரிசு செய்வதை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். இதெல்லாம் எந்த விமரிசன அளவுகோலுக்கும் உட்படாத சூட்சுமம்.  விமரிசகர்களால் எக்காலத்திலும் புரிந்துகொள்ள முடியாததும்கூட. எப்படி அவர்களால் ஜெயமோகனின் இலக்கியத் தகுதியை ஜீரணிக்க முடிவதில்லையோ அதே போலத்தான் இந்தப் பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் நிபந்தனையற்ற ஆதரவையும் ஏற்க இயலாது. ஏனென்றால், தீவிர இலக்கியம் இருநூறு பேருக்கு உட்பட்ட தங்கமலை ரகசியம் என்ற வாதம் அடிபட்டுவிடுகிறதல்லவா?


விளம்பரம், சந்தைப்படுத்தல், நிறுவனப் பின்புலம், அமைப்பு சார்ந்த பலங்கள் சிலருக்கு இருக்கும். விருதுகளும் அங்கீகாரங்களும் அவ்வப்போது கிடைத்துவிடும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதிகம் பேசப்பட்டு பிறகு பேசுவதற்கு வேறு விஷயங்கள் வந்துவிடும். அவை எழுத்துடன் தொடர்புகொண்ட செயல்பாடுகள் அல்ல என்பது காரணம். ஆனால், அங்கீகாரங்களை நிராகரிக்கும் அளவுக்கு தனது எழுத்தின் மீது உறுதியாக ஏறி நிற்பது என்பது இங்கே ஜெயமோகனுக்கு முன்னால் எப்போதும் நிகழ்ந்ததாக நினைவில்லை. அவரது பலம், அவரது எழுத்தின் மீது அவருக்குள்ள நம்பிக்கை. அதைவிட அவரது எழுத்தின் மீது வாசகர்களுக்கு உள்ள நம்பிக்கை. அது பெரும்பாலும் பொய்ப்பதில்லை என்பதுதான் தொடக்க காலம் முதலே அவர் ஒரு நிரந்தரப் பேசுபொருளாக இருப்பதன் காரணம்.


***

ஜெயமோகனை எனக்கு தொண்ணூறுகளின் தொடக்கம் முதலே தெரியும். நேர்ப்பழக்கம் அதிகமில்லை. அநேகமாக இல்லவே இல்லை என்று சொல்லிவிடலாம். ஓரிரு முறை சந்தித்திருக்கிறோம். ஒரு சில சொற்கள் பேசியிருக்கிறோம். அவ்வளவுதான். ஆனால் நான் எழுதத் தொடங்கிய ஆரம்ப நாள்கள் முதல் அவரை மிக நெருக்கமாக கவனித்து வந்திருக்கிறேன். எழுதுவது என்ற செயல்பாட்டினை ஒரு யுத்தம் போலவே அணுகும் அவரது இயல்பு அந்நாள்களில் நான் மிகவும் ரசித்தது. ஓரிரு சந்தர்ப்பங்களில் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார். நாவல் கட்டுமானம் சார்ந்து அவர் எனக்கு எழுதிய ஒரு கடிதம் (துரதிருஷ்டவசமாக அது இன்று என்னிடம் இல்லை.) இன்று வரை என் பாடநூல்களுள் ஒன்று. வாழ்வின் மீதான முடிவற்ற வினாக்களை எழுப்பிக்கொண்டே செல்வதுதான் ஒரு நாவலின் கல்யாண குணமாக இருக்க வேண்டும் என்கிற அவரது கருத்தை ஒவ்வொரு மகத்தான பெரும் நாவலுடனும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்து வியந்திருக்கிறேன். எவ்வளவு சரியான கணிப்பு அது! எளிய விடைகளை விதை போலத் தூவிச் செல்வது நாவலாசிரியன் பணியல்ல. ரத்தம் வரும் அளவுக்கு முட்டி மோதிக்கொள்ளச் செய்யும் வினாக்களை விதைத்துச் செல்வதே அவன் சாகசம். சிந்தனை என்ற இயக்கத்தை அறுபடாதிருக்கச் செய்ய வினாக்களாலேயே முடியும். டால்ஸ்டாயும் தாஸ்தாயேவ்ஸ்கியும் இன்றும் உயிருடன் இருக்க அதுவே காரணம்.


நாவலுக்கு அவர் சொன்ன அந்த இலக்கணம், இன்று அவரது இணையதளத்தில் வெளியாகிற அனைத்துக் கட்டுரைகளுக்கும்கூடப் பொருந்துவதை பார்க்கிறேன். கலை, இலக்கியம், சமூகம், பண்பாடு, கலாசாரம், தத்துவம், மதம், பக்தி, சமூகம், அரசியல், அறிவியல் என்று பல்வேறு துறைகள் சார்ந்து அவர் முன்வைக்கும் கருத்துகளும் அவை உருவாக்கும் விவாதங்களும் எழுப்பும் வினாக்களும் இக்காலக்கட்டத்தில் வேறு எங்கும் எவராலும் நிகழ்த்தப்படாதவை. இன்றென்ன. இதற்கு முன் எங்கும், எவராலும். இதனால்தான் பல சமயம் எனக்கு ஜெயமோகன் என்பவர் ஒரு தனி நபரல்ல; ஒரு சிறிய சமூகத்தின் புனைபெயர் என்று தோன்றியிருக்கிறது.


ஒரு மனிதன் இவ்வளவு விஷயங்களின்பால் ஆர்வமும் அக்கறையும் கொள்ள முடியுமா என்ற வியப்பு எனக்கு என்றுமே அவர் விஷயத்தில் உண்டு. யோசித்துப் பார்த்தால் சாத்தியம்தான். ஆனால் ஒரு சிறிய காலகட்டத்துக்குள் அந்த ஆர்வங்கள் வடிந்துவிடும். ஆனால் ஜெயமோகனின் செயல்பாடு குறையே சொல்ல முடியாத மின்சார வாரியம் ஒன்று இருக்குமானால் அது எப்படிப்பட்டதாக இருக்குமோ, அதற்கு நிகரானதாக உள்ளது. ஒரே சீரான வேகத்தில் அமைந்த சப்ளை. தடைபடாத சப்ளை. அவ்வப்போது அதிர்ச்சி மதிப்புகளை உருவாக்கும் அவரது விமரிசனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. தனது விமரிசனக் கருத்துகளை ஆணித்தரமாக நிறுவுவதற்கு அவர் கைக்கொள்ளும் உத்திகளை ரசிப்பேன். ஆனால் அப்படியான தருணங்களில் எனக்கு உறுதியாகத் தோன்றும் - இம்மனிதர் தமது படைப்புகளுக்காக மட்டுமே காலம் கடந்து நிற்பார்.


***

ஜெயமோகனின் மாபெரும் சாதனையாக இன்று வெண்முரசு பேசப்படுகிறது. ஓர் எளிய வாசகனாக அவரது மிகச் சிறந்த படைப்பாக நான் எப்போதும் கருதுவது பின் தொடரும் நிழலின் குரல் நாவலைத்தான். அந்நாவல் விவாதித்த உட்பொருள், அது எழுப்பிய வினாக்கள் சார்ந்து அவரை வெறுத்து ஒதுக்கிய பலரை அறிவேன். வெண்முரசு நீங்கலாக அநேகமாக அவருடைய அனைத்து நாவல்களையும் படித்தவன் என்ற முறையில், அந்நாவலுக்கு நேர்ந்த நிராகரிப்பையே அதன் வெற்றியாகக் கருதுகிறேன். பேசாப் பொருளைப் பேசத் துணிவோருக்கு எக்காலத்திலும் நிகழ்வதுதான். ஆனால் சொன்னேன் அல்லவா? காலம் தாட்சண்யம் பார்க்காது. எதை தக்க வைக்க வேண்டுமென்று அதற்குத் தெரியும்.


ஜெயமோகன் நிறைய எழுதுகிறார். கூட்டங்களில் பேசுகிறார். விழாக்கள் நடத்துகிறார். கருத்தரங்கங்களை முன்னெடுக்கிறார். பயணம் செய்கிறார். திரைப்படங்களில் பணியாற்றுகிறார். தினமும் காலை நடை செல்கிறார். வீட்டை கவனிக்கிறார். சமைக்கிறார். நண்பர்களுடன் உரையாடுகிறார். எனக்குத் தெரியாமல் இன்னும் என்னென்னவோ செய்பவராக இருக்கக் கூடும். ஒரு தனி மனிதராகவும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு எனக்கு நிறைய இருக்கிறது. நானும் எழுதுகிறேன். ஆனால் மேற்படி பட்டியலில் உள்ள வேறு எதையும் செய்வதில்லை. செய்ய முடிவதில்லை என்பதுதான் விஷயம்.


அறுபது வயதில் ஒரு மனிதருக்கு இவ்வளவு ஆர்வங்களும் ஒவ்வொரு ஆர்வத்தின் மீதும் குன்றாத தீவிரமும் இருப்பதை எப்படி விவரிக்க முடியும்? முன் சொன்னதுதான். 


அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர். என்றென்றும் அப்படியே இருக்கட்டும்.


***


3 comments:

  1. லாக்டௌனில் - ஊரடங்கில் - வீடடங்கில், பொழுது போகாமல் பழைய புத்தக அலமாரியைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தபோது, 1992 ஆகஸ்டு கணையாழி இதழில் ஆசான் (ஜெயமோகன்) அவர்களது கட்டுரை ஒன்றில், பின்கண்ட வரிகள், படிக்க நேர்ந்தது.

    (அதற்கு முந்தைய கணையாழி இதழில் இடம் பெற்றிருந்த பாவண்ணனின் 'சாபம்' சிறுகதையைத்தான் இப்படி சரமாரியாக விமரிசித்திருக்கிறார், ஆசான்.)

    "புராண மரபு என்பது செதுக்கி முடிக்கப்பட்ட சிலை. அதில் எதையும் சேர்க்கவோ, விலக்கவோ கலைஞனுக்கு உரிமை இல்லை. அது, அப் புராண மரபின் கலைரீதியான ஒருமையைச் சிதைப்பதாகும். இருபதாம் நூற்றாண்டு மனம் முற்றிலும் மாறுபட்ட ஒரு அழகியல் அஸ்திவாரம் உடையது. புராண அழகியலை அது எவ்வகையிலும் திருத்தியமைக்க இயலாது. இரு உலகங்களின் உரசல் மட்டுமே சாத்தியம்.

    ஒருமை கூடிய கற்கோவில் ஒன்றிற்குள் ஒரு சிமிட்டி அறையை நாம் அமைப்பது தவறு.

    இருபதாம் நூற்றாண்டுக்கே உரிய மதிப்பீடுகள், அபிப்ராயங்கள் ஆகியவை புராண மரபை அறிவதற்காகப் பயன்படுத்தப்படலாமே ஒழிய புராண மரபில் அவை கலக்கப்படக்கூடாது.

    சீதையின் ராணித்தன்மை, பகட்டு விளம்பர மோகம் பற்றி ராமாயணக் குறிப்புகள் ஏதும் இல்லை. சீதை என்னும் படிமத்தைப் சிதைப்பவை அத்தகைய தன்மைகள். அவற்றை சீதை மீது செலுத்த கலைஞனுக்கு அதிகாரமில்லை."

    #நகைமுரண்_வெண்முரசு

    2020

    ReplyDelete