ஜெயமோகனின் குமரித்துறைவியை முன்வைத்து- அ.வெண்ணிலா



புகைப்படம்  நன்றி tamilwriters.in

வளர்ந்து வளர்ந்து நிற்கும் காலத்தின் நீள்சுவரில், ஒற்றைக் கல்லை உருவி எடுத்து, மெய் சுருக்கி, சுவரின் உள்ளூர்ந்து இறங்கினால் பதினான்காம் நூற்றாண்டு. கச்சிப்பேட்டின் பொன்மாளிகை. நுண் அலங்காரங்கள் நிறைந்த சந்தனக் கட்டிலில் ஆரைவீட்டு இளவரசி, புக்க நாயக்கரின் மருமகள், குமாரகம்பணனின் ஆனைக்குந்தி அரசி மதுரசொப்பனமொன்று காண்கிறாள். சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்தவள், ’வேணாட்டு அரசருக்கு நமச்சிவாய சொல்லிப் பணியும், சிவதாசி ஆரைவீட்டாள் கங்கம்மா’ எனச் சொல்லி ஓலை அனுப்புகிறாள். ஒற்றன் கொண்டுவரும் ஓலையில் காட்சி உயிர்பெற்று எழுகிறது. 


ஜெயமோகன் சமகாலத்தின் ஒரு சொல்லையும் குமரித்துறைவியில் தவறவிட்டு, வாசிப்பவர்களை சமகாலத்திற்குக் கொண்டு வரவில்லை. மலையாண்மையும் தமிழும் சம்ஸ்கிருதமும் உருதுவும் கலந்த மொழியில், அக்காலத்தின் சொல்லெடுத்து சொல்லெடுத்து, சொல்லின் கூர்முனையால் பதினான்காம் நூற்றாண்டில் வேணாட்டின் ஆரல்வாய்மொழியில் நடக்கும் வைபவமொன்றை நம்முன் நிகழ்த்துகிறார். மொழியின் சாத்தியத்தில் காலத்தின் திரையை விலக்கி நிறுத்துகிறார் ஜெயமோகன். குமரித்துறைவியின் கதை, ஒற்றை வரிதான்.  


மலைமேட்டின் உயரத்திற்கும், நதி தீரத்துக்கும், காடு மேட்டிற்கும், குறுங்காடுகளின் வழியாக சோழர்களின் வண்டிப்பாதையில், ஆரல்வாய்மொழியின் காற்றினூடாக அலையும் வால் உயர்த்திய குதிரையொன்றில் நாமும் விரைகிறோம். 


‘மீனாட்சி’ இந்த நாமம் எத்தனை கோடி நாவினால் சொல்லப்பட்டிருக்கும்? எத்தனை யுகங்களாய்? அவளின் நாமம் சொல்லி, துன்பக்கடலை நீந்தி மீண்டவர்கள் எண்ணிலடங்கா. அவளின் குமிழ்ச் சிரிப்பில் மயங்கிய மனங்கள் எத்தனை லட்சம் கோடிகள். கறுத்த தேகத்தில் ஒளிரும் குறு புன்னகை, அகல் விளக்கிலிருந்து பற்றிப் படரும் தீபமாய்ப் பற்றிக்கொண்ட இதழ்கள் இத்தனை நூற்றாண்டுகளில் எண்ணி முடியுமா?


மீனாட்சி நாம் வணங்கும் தெய்வமா? மடிபுரளும் நம் வீட்டுக் கடைகுட்டிச் செல்ல மகளா? நம் அன்னையா? துவளும் இதயத்தில் பற்றியெரியும் உத்சாகமா? 


பதின்பருவத்திற்குப் பிறகான வாழ்க்கையில், “கடவுளே” என மனம் ஓர்மைபட்டு எந்தவொரு தெய்வத்தின் முன்னும் நின்றதில்லை. கடவுளை மறுத்தல் கொள்கையாக உள்நுழைந்திருந்தாலும், பழக்கப்படுத்தப்பட்ட கட்டாயமாக இருந்ததில்லை. மனம் கடவுள் வழிபாட்டிற்குள் உருகி நின்றதில்லை.


‘கங்காபுரம்’ எழுதுவதற்காக தொடர் பயணங்களில், முன்பொரு நாள் திருவாரூர் சென்றிருந்தேன். அந்தி சாய்ந்த கருக்கிருட்டில், திருவாரூரில் வெள்ளிப் பேழையிலிருந்து எடுக்கப்பட்ட மரகத லிங்கத்திற்கு, கருவறையின் முன்னால் அபிஷேக ஆராதனைகள். பாலும் தேனும் வழிந்தோடி தேய்ந்த மரகதக் கல். பச்சை நிறம் தேய்ந்து, கருமை கூடியிருக்கும் சிலை. நான்கு கோபுர வாசலிலும் மக்கள் கூடிநின்று உத்சவரை சேவிக்க கண்மூடி நிற்கும் வேளை. மரகத லிங்கத்திற்குள் மடிந்து மடிந்து மறைந்திருந்த காலத்தை மனம் தேடியது. மரகத லிங்கம் செய்த சிற்பி, முதல் பூஜை செய்தவர், மரகதத்தின் உயர்வை வெள்ளிப் பேழைக்குள் வைத்திட்டவர், ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அதன்முன் கண்மூடி நின்றவர்கள், எத்தனை பிரார்த்தனைகளைக் கேட்ட மூர்த்தமோ? சின்னஞ்சிறிய மூர்த்தத்தின் முன்னால் கரைபுரண்ட கண்ணீரும், வடிந்தோடிய துயரங்களும் என்னென்னவோ? சிந்தனைகள் அன்று முழுக்க எழுச்சியிலேயே இருந்தன. 


கோயில்களும் சிற்பங்களும், கருவறை தெய்வங்களும் மறைந்தோடிய யுகாந்திரங்களின் சித்திரங்கள். சித்திரத்தின் சிறு வண்ணத்தைத் தொட்டெடுத்தால் விரல்களுக்குள் விரிகிறது, கடந்த காலத்தின் பல்லாயிரம் ஆண்டு வாழ்வு. தொல் எச்சத்திலிருந்து கைதொடும் சிறு பாசிக்குள் கடல் அலையின் பேரொலியை செவி கேட்கும்.


தெய்வங்கள்முன் எம்மக்கள் நெக்குருகி நின்றிருக்கிறார்கள். ரேகைகள் மறைய, நிலம் தேய தெய்வங்களின் கருணை வேண்டி, நடந்து அலைந்திருக்கிறார்கள். மனித வாழ்வை வீழ்த்திய பேரிடர்களிலெல்லாம் தெய்வத்தின் கரம்பற்றி மேலேறி வந்திருக்கிறார்கள். தங்களின் எல்லா நொய்மைகளையும், ஆரவாரங்களையும், கொண்டாட்டங்களையும் தெய்வங்களுக்குமானதாக மாற்றியிருக்கிறார்கள்.


மனிதன் முந்தியா? கடவுள் முந்தியா? என ஆய்ந்தால் மனிதன்தான் முந்துகிறான். மனிதனின் விடை தெரியாத கேள்விகளின் தொகுப்பாக கடவுள் உருப்பெறுகிறார். தன்னால் பிரித்துணர முடியாத, தன்னால் உய்த்துணர முடியாத எல்லா முடிச்சுகளையும் கடவுளின்மேல் போட்டுவிட்டு, கண்டறிந்து சொல்லட்டும், அல்லது அதாகட்டும் என்று மனிதன் விட்டு விட்ட இடமே கடவுளின் இடம்.


கடவுளென்ற அதியற்புதக் கற்பனையை தமிழ் வாழ்வியல் பிரதானப்படுத்தியிருக்கிறது. தனக்கு நடக்குமெல்லாம் பன்மடங்கு மேன்மையாக தன் தெய்வத்திற்கு நடக்க வேண்டும். தன் தெய்வத்தை நிறைவுசெய்து, சாந்தி செய்து வைத்துக்கொண்டால் மட்டுமே தனக்கு நல்லது நடக்குமென்ற நம்பிக்கை. கடவுளர்களுக்கு மனிதர்கள் கொடுத்த ஆகச் சிறந்த இடம். தன் குடும்பத்து உறவுகளில் செல்வாக்கு நிரம்பியவர்களிடம் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் நடந்துகொள்ளும் முறைமைதான், கடவுளர்களிடம் நடந்துகொள்வதும்.


கடவுளுக்கும் குடும்பம் தந்து, சராசரி மனித வாழ்வின் நியதிகளை, கடவுளுக்காக விமரிசைகளுடன் செய்து பார்க்கும் மனம். கடவுளைத் தொழுதல், தன்னையே ஒப்புக்கொடுத்தல். இழுத்து நிறுத்த முடியாத மனத்தின் பின்னால் ஓடுபவர்களின் சேணம் பிடித்து நிறுத்த எழுந்த இடம்தான் வழிபாடு. 


கோயிலின் இறை மூர்த்தங்களைக் காணும்தோறும் மனம் ஒன்றி, கண்களில் நீர்கோர்க்க, மனம் காலத்தின் பின்னோடி நிற்கிறது. இவ்வுருவம் எம் கொடியின் எந்தக் கிளை? எம் மக்களெல்லாம் மண்ணில் ரேகைபோல் விரவிக்கிடக்கும் இத்தெய்வங்களை அடைக்கலம் கொண்டிருக்கிறார்கள். எம் மொழி இச்சிலையின் உள்ளுறையும் தெய்வத்தில் உருக்கொள்கிறது. ஒரு கல், எம் கலையின் சிலையுருக் கொண்டு உயிர்த்தெழுகிறது. இம்மண்ணில், கடந்துபோன வாழ்வில், தெய்வமொன்றில்லா ஓரணுவும் இல்லை. ஆலயத்தின் கருவறைகளின் இருளிலும் ஒளிரும் புன்னகைகளோடு அமர்ந்திருக்கும் இறைவனைக் கைப்பிடித்தே இம்மக்கள் வாழ்ந்து கடந்திருக்கிறார்கள்.


மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணமும் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும், அந்த மண்ணின் வைபோகம். திருமலை நாயக்கர் காலத்தில் மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் திருவிழாவும் ஒரே வைபவமாக்கப்பட்டது என்பது வரலாறு. அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு வருவதற்கு இரண்டு புராண வழக்கு புழங்குகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுக்கும் மலர்மாலையை ஆண்டுக்கொரு முறை சூடிக்கொள்ள, அழகர் மதுரைக்கு வருகிறார் என்றொரு ஐதீகம். வைணவ முதல்வனான கள்ளழகர், திருத்தங்கை மீனாட்சியை, ஆதியும் அந்தமும் இல்லா சைவ முதல்வன் சுந்தரேசனுக்குத் தாரை வார்த்து மணம் முடித்து வைக்க, மதுரைக்கு கிளம்பி வருகிறார். அவர் மதுரைக்கு வருவதற்கு முன்பே, நன்முகூர்த்தம் வந்துவிடுவதால் குறித்த நேரத்தில் திருமணம் முடிந்துவிடுகிறது. சகோதரனுக்கான மரியாதையை முறையாகத் தரவில்லையென்று கோபித்துக்கொண்டு மதுரைக்குள் வராமல் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதாகவும் ஒரு ஐதீகம். 


திருமலை நாயக்கருக்கு முன்னால் விஜயநகர நாயக்கர் ஆட்சி. அதற்கும் முன்னால் தில்லி சுல்தான்களின் தென்னகப் படையெடுப்பு. திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கத்தைக் கொள்ளையடித்த துலுக்கர்கள் படை, மதுரையை நோக்கி வருகிறது என்றறிந்த எட்டு சிவாச்சாரியார்கள், மீனாட்சியைக் காக்க, பல்லக்கில் தூக்கி வைத்து வைகை நதியோரம் செல்கிறார்கள். மூர்த்தி பெரிதாக இருந்த சுந்தரேசுவரரைத் தூக்க இயலாததால், வைகையில் சுந்தரேசரின் மூர்த்தத்திற்கு குறியீடாக, ஒரு கல்லெடுத்து உடன் கொண்டு செல்கிறார்கள். 


சேர நாடு நோக்கிச் செல்லும் சிவாச்சாரியார்களோடு, மீனாட்சியின் பாதுகாப்புக்காக மறவர்களும் கோனார்களும் பிற சாதியினரும் ஆங்காங்கே இணைகிறார்கள். தம் தெய்வத்தை, தம் மகளை, தம் ஐசுவரியத்தை தோளில் சுமந்து நிலத்திற்குள் ஊர்ந்து செல்லும் மண்ணுளிப் பாம்பாக ஊர்கிறார்கள். அவர்களின் கால் சோரவில்லை. நா வறண்டு, மெய் சோர்ந்து நிற்கவில்லை. வேணாடு செல்லும்வரை மீனாட்சி அவர்களை இயக்குகிறாள். 


ஆரல்வாய்மொழியில் வாடாக் கொன்றை பூத்திருக்கும் வனத்தில் கோயிலமைந்த மீனாட்சி எழுபதாண்டுகளாக வேணாட்டில் இருக்கிறாள். சுல்தான்களைத் தோற்கடித்து, மதுரையில் நாயக்கராட்சியை அமைத்த குமார கம்பணனின் அரசி கங்காதேவியின் கனவில், சிற்றாடை கட்டிய கனிக்கறுப்பு சிறுமி, “என் வீட்டுக்கு நான் போவதெப்போ?” என்று கேட்கிறாள். 

ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொகுதி வெளியீட்டு விழா 

சுல்தான்களால் மதம்மாற்றம் செய்யப்பட்டு, டெல்லிக்கு அழைத்துச்செல்லப்பட்ட அரிகரரும் புக்கரும், ஆனைகுந்தியை நிர்வகிக்கும் தளபதிகளாக வருகிறார்கள். சிருங்கேரி மடத்தின் ஜகத்குரு வித்யாரண்ய சங்கராச்சாரிய சுவாமிகளால் தீக்ஷை பண்ணுவித்து, துங்கபத்திரை நதிக்கரையில் விஜயநகர ஆட்சியை அமைத்த அரிகரர், புக்கரின் ஆட்சி, திருவாழிமார்பனின் ஆட்சி. ஆதிகேசவனை முதல்வனாகக் கொண்டவர்களிடம், சுடுகாட்டுறையும் ஆலமர்ச்செல்வனின் மனைவி, உமையவள், தன் வீட்டிற்கு அழைத்துச் செலக்ச் சொல்கிறாள்.


வேணாடே சேர்ந்து குமரித் துறைவியை அவள் வாழப்போகும் மதுரைக்கு அனுப்பி வைக்க தயாராகிறது. ஆனைகுந்தியின் அரசி, மதுரையின் தெய்வத்தை, மதுரைக்கே வர வைக்கிறாள். மதுரையின் புராணங்களோடு, சுல்தான்களிடமிருந்து பாதுகாக்க, வேணாட்டில் மறைத்து வைக்கப்பட்ட மீனாட்சி, வெற்றியின் வாகை தரித்து, நிலைமை சீரான தன் மண்ணுக்கு புத்தம் புதிய மணமகளாக திரும்பப் போகிறாள். மதுரையின் புராணத்திற்கும் முந்தைய புனைவொன்றை குமரித்துறைவியாக்கி இருக்கிறார். மீனாட்சி கல்யாண வைபோகம் துவங்கிய புள்ளி, இப்படியிருந்தால் என்றொரு புனைவாசிரியர் எழுதிப் பார்க்கவில்லை, அக்காலத்தையே கண்முன் விரிக்கிறார். 


பித்து நிலையில் மக்கள். முகம் காய்ச்சலின் செம்மை படர, மீனாட்சியின் தேவகணங்களைப்போல் ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள். யார் கட்டளையிடுகிறார்கள்? யார் குற்றேவல் செய்கிறார்கள்? தீர்மானமாக யாரும் எதுவும் சொல்லாமல் எல்லாம் வரிசைக்கிரமத்தில் நடக்கிறது.


எழுபதாண்டுகளாக வேணாட்டில், ஆரல்வாய்மொழியின் யாருமறியா சன்னதியில் குடியமர்த்தப்பட்ட மீனாட்சியை திரும்ப அனுப்புவதா?


வேணாட்டு மகாராஜா வலிய உடையது ஆதித்யவர்மா பொன்னுதம்புரானைச் சந்திக்க சென்றுகொண்டிருக்கும் சர்வாதிக்காரன் தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன், மதுரையில் நிலைகொண்ட மீனாட்சியை, மதுரைக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டதை உணர்கிறான். கேட்பது மதுரையின் பெரிய நாயக்கன் குமாரகம்பணனின் மனைவி கங்கம்மா தேவி. மறுக்க முடியாது. கப்பம் கட்டும் சிற்றரசர், போரிட்டு வெல்ல முடியாது. அவர்கள் சொல்லில் மிரட்டல் இல்லை. தங்களின் தெய்வத்தை அனுப்பிவைக்கக் கோரும் நெகிழ்வுதான். பாதுகாப்பிற்காக ஊர்விட்டு வந்தவள், நிலைமை சரியானவுடன் அவளூர் சென்று சேர்வதுதானே நீதி? நீதியின்பால் நிற்க விரும்பலாம்.


வேணாட்டு அரசருக்கோ, தங்கள் பூமிக்கு வந்த தெய்வத்தை திருப்பியனுப்புவதா? தெய்வம் வெளியேறிய தேசம் வெறும் பாழ் நிலமல்லவா? பருவம் தப்பாமல் பொழியும் மாமழை, பயிர்களின் பச்சை, பசி தீர்க்கும் அமிழ்தம் எல்லாமாக இருப்பது அன்னை மீனாட்சிதானே? அம்மை இம்மண்ணில் குடி கொண்டதில் இருந்து, மக்கள் பசித்துச் சாகவில்லை. பயிர் பச்சைகள் வாடியதில்லை. மண்ணில் விளையும் ஒவ்வொரு தானியமும் அவளின் அருட்கொடை. அன்னலெட்சுமி இம்மண்ணைவிட்டு வெளியேறினால், வேணாடு வெறும் காடாகும். மழையின்றி பச்சையம் அழியும். இனி தான் உயிர்வாழ்வதில் அர்த்தமில்லையென்று மருகும் அரசருக்கு, செண்பகராமன் வழி சொல்கிறான்.


லௌகீகம் தவிர்த்த சிவீந்திரம் ஆலயத்தின் தலைமை நம்பி சிறமடம் ஸ்ரீகண்டன் நம்பூதிரியிடம் சொல்கிறான். பரதவக் குலத்தில், குமரித் துறையில் பிறந்த மீனலோசனி, அவள் மனம் விரும்பிய மணாளனுடன் சேர்வதுதானே முறை? “உம் அரசர் தந்தையாக, ஆதிகேசவன் சகோதரனாக நிற்க, அம்மையை வலத்தொடையில் அமர்த்தி, சுந்தரேசருக்கு மணம் முடித்து, மாமங்கலையாக அவளை மதுரைக்கு அனுப்பி வையுங்கள். பிறந்த வீட்டிலிருந்து பெண், கணவனுடன் மனம் குளிர்ந்து சென்றால், பிறந்த வீட்டின் வளம் குன்றாது. இருமடங்காக வளரும். ஒரு குறையில்லாமல் அவளின் திருமணத்தை நடத்தி வையுங்கள்” என்கிறார்.


வேணாட்டு அரசர் அதிர்கிறார். ‘அவள் என் அம்மைடே. அம்மைக்கு மணமுடிக்கும் மகனுண்டா பூமியில்?’ எனக் குழம்புகிறார். அம்மைக்கு அம்மை. பிள்ளைக்குப் பிள்ளை. உலகாளும் மீனாட்சிக்கே தந்தையாகும் பேறு யாருக்கு உண்டென்று, அரசரை அமைதிப்படுத்தி, திருக்கல்யாணத்திற்கான பரவசம் அப்போதே தொடங்குகிறது.


எட்டு நாள்கள். ஒவ்வொருவருக்கும் எட்டானை பலம். “ஆனை பலம் கொண்ட ஆரல்வாய்மொழி”யில் காற்று கைபொத்தி நிற்கிறது. மலைமேலுள்ள சுனைநீர் கமுகுப்பாளை பாதையாகச் சொட்டு நீர் வீணாகாமல் ஊட்டுப்புரையையொட்டிய குளங்களில் சேர்கிறது. குதிரைகளும் யானைகளும் பல்லக்குகளும் காற்றில் மிதப்பதுபோல் ஓடிக்கொண்டிருக்க, மக்கள் அம்மை அப்பனின் திருக்கல்யாணம் பார்க்கத் திரள்கிறார்கள்.


தென்காசி, செங்கோட்டை தொடங்கி, வேணாடு தங்கள் வீட்டு லெட்சுமியாக இருந்த மீனாட்சி, திருமணமாகிப் போகப் போகிறாள் என்று தவிக்கிறது. மீனாட்சி மதுரையில்தானே இருக்க வேண்டும் என்று தவிப்பையடக்கிச் சமாதானம் சொல்லி, நல்லபடியாக அவளையனுப்பி வைக்க வேண்டும், வாழ்வதற்குச் செல்கிறவளுக்கு ஒரு குறையும் வந்துவிடக் கூடாது என்று அவரவர்களால முடிந்ததை சேகரிக்கிறார்கள்.


ஒவ்வொருவர் உதட்டிலும் மீனாட்சி, மீனாட்சி. திருவாழிமார்பனை முதல்வனாக ஏற்றுக்கொண்டவர்களின் தேசத்தில், மீனாட்சியின் திருநாமம். ‘விளையாட்டுச் சிறுக்கியவ, அவ ஆட்டி வைக்கிறா, நாம ஆடுறோம். மனுஷ ஜென்மத்துக்கு என்ன தெரியும், அவளோட திருவிளையாடல் எல்லாம்’ என்று எத்தனை வார்த்தைகள். மாமங்கலையாக அவள் ஊருக்கு வழிகூட்டி அனுப்பிவைக்க மக்கள் தயாராகிறார்கள். அலைகடலின் பேரொலிகளில் பிறந்து வளர்ந்த குமரித்துறைவியான மீனாம்பாள், தான் வாழப்புகுந்த மதுரைக்குப் பயணமாக ஆயத்தமாகிறாள். 


பிறந்து வளர்ந்த வீட்டைவிட்டு, மகள் புகுந்தகம் செல்வது பிறந்த வீட்டின் மங்கலத்தை, குதூகலத்தை, ஐசுவரியத்தை எடுத்துச் செல்வது. பெண்ணில்தான் குதூகலம் இருக்கிறது. பெண்ணில்தான் செல்வம் இருக்கிறது. பெண்ணில்தான் விளையாட்டும், சீண்டலும், ஆற்றலும் இருக்கின்றன. பெண்ணுக்கு மணமுடிக்கும் நிறைவும், மகளின் பிரிவும் பரவசமும் உயிர் பிரியும் வலியும் ஒன்றிணைந்து, மனம் ஒரு கணத்தில் மகளின் புதுவாழ்விற்கு விம்மி மேலெழும். அவளின்றி வீட்டில் பெருகப்போகும் வெறுமை நினைவுக்கு வர, கண்களில் கண்ணீர் பெருகும். வேணாட்டு அரசரும் விம்மலும் கண்ணீருமாக உடல் தளர்ந்து நிற்கிறார். மனத்தின் சுமை உடலில் இறங்க, வயோதிகம் உடலைச் சுமக்கவிடாமல் அவரில் தளர்வைத் தருகிறது. 


மீனாட்சிக்கும் வேணாட்டு முறைப்படி திருமண வைபோகம் ஏற்பாடாகிறது. மணவிழாவுக்கு மணமண்டபத்திற்கு வரும் அம்மைக்கு, முதற்காவலுக்கு உரிமைமுறை கொண்ட கொண்டையத் தேவன் வம்சத்து நூற்றெட்டு குடும்ப மறவர்கள் அருகில் நிற்கிறார்கள். மதுரையில் இருந்து மீனாட்சியைக் கொண்டு வருகையில், களவாட வந்து காவலாகச் சேர்ந்தவர்கள். செண்டையும் இடைக்காவும் திமிலையும் இலைத்தாளமும் கொம்பும் குழலும் ஊதும் மாரார்கள் மணப்பந்தலுக்கு வருகிறார்கள். நாயர்படையும் மறவப்படையும் வெளிக்காவலுக்கு நிற்கிறது. திருப்பாம்பரம், திருப்பாப்பூர், ஜயத்துங்க ராஜ்யம் முதல் கொடுங்கல்லூர் வரையுள்ள சிறந்த சமையல்காரர்கள், கன்யாகுமரியில் இருந்து, அம்மைக்கு திருமஞ்சன நீர் கொண்டுவரும் கடல்குடியின் ஏழுபட்டக்காரர்கள், மணமகனின் பல்லக்கு அலங்காரம் செய்ய திருவண்பரிசாரத்தவர்கள், காவலர் தலைவன் மல்லன் பிள்ளை. எல்லாம் வந்து நிற்கிறார்கள். 


ஆரல்வாய்மொழியில் மணப்பந்தல்? ‘காத்தில்லா அங்கு எமராஜா?’ என்று ஆனைபலம் கொண்ட காற்றை, மணல்மேட்டில் முட்டிக்கொள்ளும் யானையைப்போல், மூங்கிலால் பிணைந்து பிணைந்து காற்று குலைக்க முடியா கெட்டுப்போட்டு, கொடிபோல் வளைந்தாடி நிற்கும் மணப்பந்தல். கனிகொண்ட பலாமரத்தை வெட்டி அறுத்துச் செய்யப்பட்ட தேர்போல் மணவறை அலங்காரம். உலகையாளும் அம்மைக்கு என்ன தாலி? தாலிக்குச் சாதியுண்டே என்று ஆளாளுக்குப் பதறும்போது, “அம்மைக்கு முக்குவத்தாலிதான், அவள் தென்குமரித் துறையமர்ந்த தெய்வமல்லவா?” என ஆசாரி முடிவு செய்கிறார். 

மானுட திருமணத்தின் அத்தனை சடங்குகளும் நடக்கிறது. பெண் கேட்டு வரும் ஈசனிடம் அரசர், “உன் பெயர் என்ன? நீயென்ன குலம்?” என்று கேட்கிறார். “என் பெயர் அழகேசன். நான் குலமிலி. பெற்றோர் எனக்கில்லை. என் தலையில் நிலவும், காலடியில் மானும், கைகளில் உடுக்கும் தீயும் உள்ளது. நான் வாழுமிடம் சூரையங்காடு” என்கிறார் சுந்தரேசர். 


மகளைக் கொடுக்க மறுக்கும் அரசரை, ஆதிகேசவப் பெருமாள் சமாதானம் செய்கிறார். வெட்கம் குமிழ்விட, குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருக்கும் துர்க்கையின் வடிவான மீனாட்சியை முத்தாலம்மை முகவாய்த் தொட்டு, வெட்கம் களைகிறார். 


“ஒண்ணும் குறையக்கூடாது. கூடட்டும், குறைஞ்சிரப்பிடாது. இதில்லாம ஒருத்தி எப்டி குடும்பம் நடத்துவான்னு ஒரு சொல் வந்திரப்பிடாது” என எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என மறுகுகிறார் தந்தையாகி நிற்கும் அரசர்.


மணாளனோடு மதுரைக்குச் செல்ல இருக்கும் மீனாட்சிக்கு வேணாட்டின் சீராக ஏற்றப்பட்ட பொருட்களோடு, கண்ணுக்குத் தெரியா தூரம் வரை வண்டிகள்  நிரையாக  நின்றிருந்தன.  அத்தனை வண்டிகளும் புதிதாக வண்ணம் பூசப்பட்ட மூங்கில்பாய்களால் செய்யப்பட்ட கூண்டு கொண்டிருந்தன. எல்லாக் காளைகளுமே நல்ல வெண்ணிறமான உடலும் பெரிய அரக்குநிறக் கொம்பும் கொண்டவை. அவற்றுக்குள்  ஒரு பெண் வாழ்நாள் முழுக்க குடும்பம் நடத்தத் தேவையான அத்தனையும் இருந்தன.


“என்னோட தெய்வத்தை அனுப்பிட்டு, நானெப்படி உயிரோடு இருப்பேன்” என்று மருகும் அரசருக்கு நாடி தளர்கிறது. உடலில் இருந்து உயிர் நரம்பை உருவியெடுத்ததுபோல் சுவாசிக்கத் தடுமாறுகிறார். ‘பொண்ணும் நாத்தும் இடம் மாறாம வளர முடியுமா?’ என அரசரை சமாதானப்படுத்துகிறார்கள். ஸ்ரீதேவி இடம் பெயரும் இடத்தில் மூதேவி குடிகொண்டு, அவரின் உடைவாளாலேயே அவரை வீழ்த்திக்கொள்ளத் தூண்டுகிறாள். விடிய விடிய நடக்கும் கோலாகலங்களுக்கிடையில் தன்னையே பலியாக்கிக்கொள்ள உஜ்ஜயினி மாகாளி கோயிலுக்குச் செல்லும் அரசரை மீட்டுக்கொண்டு வரும் சர்வாதிக்காரன். திவானும் தளவாயும் ஆளுக்கொரு திசையிழுக்க, சர்வாதிக்காரன் தன் சொல்கொண்டு கட்டுப்படுத்துகிறான். 


எல்லாம் சரியாகப் போனாலும், உள்ளுக்குள் ஏதோ ஒரு தவறு நடக்கப் போகிறது, தெய்வச் செயலைச் செய்யும் தன்னை, அற்ப மானுடன்தானே நீயெனக் காட்டப் போகிறாள் அம்மை என்று உள்ளே ஒரு குரல் கேட்கிறது. “வரட்டும்… நாமென்ன சொல்ல? தெய்வங்கள் ஆடுற விளையாட்டு” எனத் துணிந்து நிற்கும் சர்வாதிக்காரனின் மனத்தில், மனச்சுமை இத்தனை இனிதாக இருக்குமென்று உணர்ந்ததே இல்லையே என்ற நிறைவும் எழுகிறது. 


கொன்றைச் சுடர் அணையா காட்டுக்குள் குடியமர்ந்தவளை, வைகை நதிதீரத்துக்கு மணமுடித்து அனுப்பும் வைபோகத்தில் கலந்துகொண்ட போது (அப்படித்தான் இருந்தது. சர்வாதிக்காரன் குடித்த பிரதமனின் முறுகிய காய்ந்த தேங்காய்ப்பூவின் வாசத்தை நானும் நுகர்ந்தேனே?) மனம் பதைபதைத்தது. ஒரே மகளை, குடும்பத்தின் அன்னலட்சுமி எனும் மகளை மணமுடித்துக் கொடுக்கும் தந்தையின் பதற்றத்தில் கொஞ்சமும் குறைந்ததில்லை என் பதற்றம். விசிறி மடிப்பாகச் செம்பட்டு உடுத்தி, மணவறைக்கு வரும் மீனாட்சியைப் பார்த்தபோது மனம் கசிந்தது. அவள்மேல் மின்னிய சுத்தமான நீரோட்டமிக்க வைரங்களை மிஞ்சி ஒளிர்ந்த அவளின் கருணை நிரம்பிய புன்னகை, முதுகுத்தண்டை சில்லிட வைத்தது. அவள் இதழின் குறுஞ்சிரிப்பு அசையாச் சுடராக, அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் பற்றிக்கொள்வதை உணர்ந்தேன். 


பெற்ற மகளின் பேரழகில் கருக்கொள்ளும் பெண் அன்பின் முழுமை என்னைச் சூழ்ந்தது. கூடியிருந்தவர் எண்ணங்கள் அழிந்திருந்தன. 


வைபோகத்தில் குறையிருப்பின் காளியின் திருமுன் என் சங்கறுத்துக்கொள்வேன் என தளவாயிடமும் திவானிடமும் சவால்விடும் சர்வாதிக்காரனின் மனமும் முள் நீங்கிய ரோஜா போல் கனிந்து திரள்கிறது.


இந்தக் குறுநாவல் முழுக்க, ‘மீனாட்சி, மீனாட்சி’ என ஓர்மைபட்டு நின்ற மனத்தின் பேரெழுச்சியைப் பார்க்கிறேன். பூக்கட்டுவோர், பா புனைவோர், பானை செய்வோர், சங்கு நாதமெழுப்புவோர், பறையடிப்போர், கொம்பூதுவோர், தாகம் தீர்க்க பானகம் தருவோர் என அவரவர் கலையை மீனாட்சியின்முன் நிகழ்த்துகிறார்கள். கூடிக் கூடி நின்று தனித்த உணர்வோடு கலந்துபோகும் சங்கமம். பெருங்கூட்டத்தின் சிறு துளியாக தன்னை உணரும் ஆத்மானுபவம்.


தந்தை - மகள், அண்ணன் – தங்கை, பிறந்த வீடு – புகுந்த வீடு இதன் பின்னால் ஆழமான பெண் சக்தி ஆராதனை உள்ளது. பெண்ணென்ற பிரபஞ்ச சக்தியைக் கொண்டாடி வணங்கி ஏற்கும் பரவசம் உள்ளது. பரவசத்தின் முடிச்சுகள் இந்நிலத்தில் நரம்புகளாகப் பரவியிருக்கின்றன. பெண் சக்தியின் பரவசம் கூடி, பெண் உடைமையாகிவிட்டாள். உடைமையைக் காப்பாற்ற, புதுப்புது கோட்பாடுகள். 


பல்லாண்டுகளின் சிந்தனை மேம்பாட்டில் உடைமையின் தொடர்ச்சியாய் அறியப்படும் இவ்வுறவுகளின் உரிமைகளை ஏற்க முடிவதில்லை. கொண்டாட மனம் தயங்குகிறது. சிந்தனையின் முகிழ்த்தலில், பாரபட்சங்கள் முன்னிலைப்படுகின்றன. பாகுபாடுகள் சுரீரென்று உரைக்கின்றன. இன்றைய கோணல்களுக்கு இதிலொன்றுதானே வேர் என்று மனம் ஆராய்கிறது. மேல் – கீழ், உள்ளே – வெளியே, உயர்வு – தாழ்வு என்ற மதிப்பீடுகளின் ஆழ்கருத்தியலுக்கு அடித்தளம் இங்குதானே இருக்கிறது என்று மனம் உவப்பின்மையை உணர்கிறது. அசமத்துவத்துவமென்னும் நஞ்சு கலக்கப்பட்ட இவ்வமிர்தம், சமத்துவமே மனிதகுல ஆன்மீகமாக இருக்க முடியுமென்று எண்ணும் மனத்தினால் பருக இயலாதது. 


தெய்வமென்னும் பிரபஞ்சப் பேருருவாக இறைமையை உருவாக்கும் மனித மனம், வாழ்தலில் உள்ள தன் கீழ்மைகளையும் தெய்வத்தின்மேல் சுமத்தியிருக்கிறது. தெய்வத்திற்குள்ளும் பாகுபாடில்லை. தெய்வங்களிலும் பாகுபாடில்லை. பல்வேறு தெய்வங்களென்றாலும் அதனிலிருந்து பெருகும் கனிவு ஒன்றாகத்தான் இருந்திருக்கும். மது அருந்தும் தெய்வம், காடேகி நிற்க ஒரு தெய்வம், ஆகம ஆசாரங்களோடு கோலாகலமாக ஒரு தெய்வம் என்று மனிதனின் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் தெய்வங்களுக்கும். 


ஒரு நாத்திகவாதிக்கு தெய்வங்களுடன் என்ன உறவு இருக்க முடியும்? தெய்வங்களிடமிருந்து தன்னை முற்றாக விலக்கிக் கொண்டவர்தான் நாத்திகவாதியா? நாத்திகவாதிக்கு தெய்வங்களுடன் வரும் முதல் பிணக்கு, தெய்வங்களும் மனிதர்களின் அசமத்துவத்திற்குத் துணை போகின்றன என்பதுதான். தெய்வங்களின் பெயரால் சிலரிடம் அதிகாரம் குவிக்கப்படுவதையும், சிலர் சுரண்டப்படுவதையும்தான் சிந்தனையாளர்கள் எதிர்க்கிறார்கள். சமூகத்தின் ஒழுங்கற்ற அதிகாரப் பரவலுக்கு மனிதர்கள்தான் காரணம். தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் நிறுவனங்களாக தெய்வங்களையும், தெய்வங்களுக்கான கோயில்களையும், தெய்வங்களுக்கான சடங்கு சம்பிரதாயங்களையும், அதைத் தீர்மானிக்கும் மத நிறுவனங்களும்தான் சமூகச் சிந்தனையாளரின் எதிர்ப்புக்குரியவை. ஆழ்ந்து யோசித்தால் தெய்வங்களும், பலகீனமானவர்களைப்போல் சிக்கித் தவிக்கின்றன. சமத்துவ பீடத்தின்மேல் அமர்ந்து புன்னகைக்கும் மந்தகாசத்தைத்தான் தெய்வங்களும் விரும்பும். ஆன்மீகவாதிகள் தெய்வங்களின் அருட்கருணையினால் மனம் கனிந்து தங்களை தாசர்களாக்கிக் கொள்கிறார்கள், நாத்திகர்கள் தெய்வங்கள்மேல் சுமத்தப்பட்ட அசமத்துவம் நீங்க கனிந்து வேண்டும் தாசர்களாகிறார்கள்.


தமிழகத்தின் கோயிலெங்கும் சிலை கொண்டுள்ள தெய்வங்களின் இதழ்களில் உறைந்துள்ள அணையாச் சிரிப்பு, என் மூதாதையரின் சிரிப்பு. அச்சிரிப்பை வடிக்க முயன்ற சிற்பி என் முன்னோன். தெய்வம் போற்றும் எம் மொழியின் சொற்களில்தான் என் எழுத்து உயிர்பெறுகிறது. 


சிற்பியினால் கல்லுக்குள்ளும் குமிழ் சிரிப்பை படரவிட முடிகிறது. வண்ணக்காரரால் சிறு தீற்றலில்கூட தன் உள்ளக்கிடக்கையை கடத்திவிட முடிகிறது. நாட்டியக்காரர்களின் விழியசைவு போதும், பிரபஞ்சத்தின் பேரசைவைச் சொல்ல. பரு வடிவில், மெய்களால் நுகர்ந்துவிடக்கூடிய கலைகளுக்கு இல்லாத சவாலும் வாதையும் எழுத்துக்கு இருக்கிறது. புலன்களால் மட்டுமே உருவகித்துக்கொள்ள முடிந்த மாயச் சொற்களைக் கோர்த்துக் கோர்த்து, எழுத்தாளர் புலனுக்கெட்டாத உணர்வுகளை, வலிகளை, பேருண்மைகளை உணர்த்த முற்படுகிறார். மொழிக்கும் அது அர்த்தப்படுத்தும் உண்மைக்கும் இடையில் தான் உணர்த்த விரும்பும் உணர்வைக் கடத்துதல் மாபெரும் சவால். குறிப்பாக, வரலாற்றைப் புனைவாக்குதலில். 


குமரித்துறைவியை ஜெயமோகன் எழுதவில்லை. மாயாவிபோல் காலத்தின் பக்கங்களுக்குள் நுழைந்து, நேரடியாக விவரிக்கிறார். அதில் உயிர்பெறுவது கதையல்ல. இம்மண்ணின் தெய்வம். மதுரையின் நந்தா விளக்காய் விகசித்திருக்கும் மீனாட்சி. 

  

  


No comments:

Post a Comment