விஷ்ணுபுரம் விருது விழா, 2016 |
ஓர் ஆண்டுக்கான குறுநாவல் தேர்வில் என் குறுநாவல் விஷம், ஜெயமோகனின் சவுக்கு இரண்டும் தேர்வாயின. பாவண்ணன் குறுநாவலும் அதேபடித் தலைப்பு கொண்டது என நினைவு. கணையாழி தேர்வுக்குழுவில் ‘என்ன ஒரே நெகட்டிவ் கதைகளாக இருக்கு இந்த வருடம்’ என்று கதையைப் பற்றி இல்லாமல் தலைப்பை வைத்து முணுமுணுப்பு கேட்டதாக பின்னால் அறிந்தேன்.
ஜெயமோகனின் சவுக்கு பிரசுரமானபோது அந்த இதழில் முதலில் அதை வாசித்தேன். குறுநாவல் எனக்கு பிடித்திருந்தது. தன் மார்பிலும் முதுகிலும் தானே கனமான மிளார்ச் சவுக்கால் அடித்துத் துன்புறுத்திக்கொண்டு பிச்சையெடுக்கும் ஒருவனையும் அவன் மேலதிகாரம் செலுத்தும் அவனுடைய மகனையும் பற்றிய நல்ல படைப்பு. அந்தச் சிறுவனுக்கு தந்தை மேல் எவ்வளவு விரோதம் என்றால், அவனுக்குக் குடிக்க சாராயம் வாங்கி வரும்போது போத்தலைத் திறந்து சிறுநீர் கழித்து கலக்கிக் கொண்டுபோய் கொடுப்பான். சவுக்கு குறுநாவல் எழுதிய ஜெயமோகனுக்கு விலாவாரியாக சவுக்கு பற்றி பாராட்டி எழுதினேன். அதை அனுப்ப, தேர்வுப் பட்டியல் வந்த கணையாழி இதழில் விலாசம் தேட, பெயர் மட்டும்தான் இருந்தது. கணையாழி பத்திரிகை ஆபிசுக்கு ஸ்கூட்டர் விட்டுக்கொண்டு போய் ”இந்தக் கடிதத்தை ஜெயமோகனுக்கு அனுப்ப வேணும். விலாசம் தர்றீங்களா?” என்று கேட்டேன். ”அதைக் கொடுங்க, நாங்களே அனுப்பறோம்” என்று வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஏனோ அனுப்ப மறந்து போனார்கள்.
அப்புறம் ஒரு வருஷம் போட்டிக்கு வராத, தனியாகப் பிரசுரம் கண்ட அம்மன் மரம் என்ற குறுநாவல், எட்டு வீட்டுப் பிள்ளைமார் வரலாற்று அடிப்படை விரவிவர கணையாழியில் பிரசுரமானது. கதை நல்லா வந்திருக்கு என்று ஒரு சனிக்கிழமை ஆபீஸ் முடித்து விட்டுப் போகும்போது அம்புஜம்மாள் தெருவில் சுஜாதா சார் வீட்டுக்குப் போய் இதுவும் அதுவும் பேசும்போது அவரிடம் தெரிவித்தேன். ”அது யார் பாலசங்கர்னு தெரியலே சார் ரொம்ப நல்லா எழுதியிருக்கார்” என்றேன். ‘ஜெயமோகன்’பா. அவர் தான் பாலசங்கர்’ என்றார் சுஜாதா. ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக இருந்தது. ஆனாலும் எதற்காக ஜெயன் ஒரு நல்ல குறுநாவலை அவர் பெயரில் வெளியிடாமல் இன்னொரு பெயரில் எழுதி அனுப்பணும் என்று இன்று வரை தெரியவில்லை.
”குறுநாவல் நல்லா இருக்குன்னு ஜெயமோகன் கிட்டே சொல்லணும். உங்களுக்கு அவர் நண்பர்னு சொன்னீங்களே. அட்ரஸ் கொடுங்க ப்ளீஸ்” என இரைஞ்சினேன் சுஜாதாவிடம்.
”அதெல்லாம் தெரியாது. அவர் அப்பப்போ டெலிபோன்லே பேசுவார்” என்றார் சுஜாதா.
”அப்போ தொலைபேசி எண்ணாவது கொடுங்க சார்”. அவர் இல்லை என்று தலையாட்டினார்.
“பின்னே எப்படி சார் பேசறீங்க?”
“அவர் தருமபுரியிலே டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆப்பரேட்டர் உத்தியோகத்திலே இருக்கார். திடீர்னு பேசுவார், நம்பர் தெரியாது. எப்படி என் நம்பர் கிடைச்சதுன்னு கேட்டேன். கிடைச்சதுன்னார்”.
எப்படி? இது நான் கேட்டது.
“சொன்னேனே டெலிஃபோன் டிபார்ட்மெண்ட். உலகத்திலே எங்கே நம்பர் இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு கனெக்ட் பண்ணிடுவாங்க. நமக்குன்னா அடுத்த தெரு நம்பர் கூட கிடைக்காது”.
மொபைல் தொலைபேசிகளின் புரட்சி வெடிக்காத காலம் அது. சுஜாதா அவருடைய ட்ரேட் மார்க் காலே அரைக்கால் செகண்ட் புன்சிரிப்பை வெளியிட்டு கையில் வைத்திருந்த ஏதோ கவிதைத் தொகுதியைப் படித்து, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சிரிக்கத் தொடங்கினார்.
ஆக, ஜெயமோகனைப் பார்க்காமலேயே ரொம்ப நாள் கடந்து போனது. கணையாழி குறுநாவல் தேர்வு வருடாவருடம் தொடர்ந்தது. நான் ராத்திரி வண்டி எழுதித் தேர்வானால், ஜெயமோகன் டார்த்தீனியம், நான் படம் குறுநாவல் எழுதினால், ஜெயமோகனின் கிளிக்காலம், நான் விஷ்ணுபுரம் எழுதித் தேர்வானால், நிற்க. தமிழ்நாட்டில் ஒரு சிறு நகரத்தில் நடைபெற்ற நகரசபைத் தேர்தல் பற்றி ஒரு பத்து வயதுப் பையனின் கண்ணோட்டத்தில் எழுதிய குறுநாவல் விஷ்ணுபுரம். ஜெயமோகனும் ஒரு விஷ்ணுபுரம் அந்தக் காலகட்டத்தில் எழுதியிருந்தார். அவருக்கு ரப்பர் ஜெயமோகனிலிருந்து விஷ்ணுபுரம் ஜெமோவாகப் பதவி உயர்வளித்து அழியாப் புகழ் கொடுத்த ஐகானிக் நாவல் அது. என் விஷ்ணுபுரத்தை அண்மையில் இரண்டாம் பதிப்பு குறுநாவல் தொகுப்புப் புத்தகமாக வந்தபோது விஷ்ணுபுரம் தேர்தல் ஆக்கி விட்டேன்.
அப்புறம் யார்க்ஷையரிலும் ஸ்காட்லாண்டிலும் நான் பணி நிமித்தம் நீண்ட காலம் வசித்த போது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு ஜெயமோகனோடான நட்பு மெல்ல வளர்ந்தது. அவர் திண்ணையில் எழுதிய துப்பறியும் நீண்ட கதையில் என்னையும் கதாபாத்திரமாக்கி கிண்டல் செய்திருந்ததை முழுக்க ரசித்தேன்.
நண்பர் கமல்ஹாசனோடு ’உன்னைப்போல் ஒருவன்’ மூலமாக சினிமாவுக்குப் போனபோது ஸ்மைலி போடாமல், ”முருகன், உங்களைப் பார்த்தா பொறாமையாக இருக்கு” என்று உண்மையான அன்போடு வாழ்த்திய ஜெயமோகனை அப்போது எனக்குப் பழக்கமாகி இருந்தது.
கமல்ஹாசன் அறம் படித்தார். உண்மை மனிதர்களின் அந்தக் கதைகள் பிடித்திருந்தன அவருக்கு. யானை டாக்டரையும், அற்பத் தொகையாகப் பேசி வைத்த ராயல்டி கூடக் கிடைக்காத மூத்த எழுத்தாளரையும், நூறு நாற்காலி தேவைப்படும் தள்ளி வைக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, படித்துப் பதவி நாற்காலி கிட்டிய அரசு அதிகாரியையும் யாருக்குத்தான் பிடிக்காது?
கமல்ஹாசனின் பிறந்த நாள் விருந்துக்கு அழைத்தபோது சொன்னார் – "நீங்க சண்டை போட ஒருத்தர் வரப்போறார்”. ஒரு மாதிரி ஊகித்திருந்தேன். அப்போது ஜெயமோகன் tongue in cheek ஆக கம்ப்யூட்டரில் பயன்படுத்த வேண்டிய எழுத்துரு பற்றி கருத்து தெரிவித்து சகலரும் ஜெயமோகனை எதிர்த்த காலம். அவர் எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தபடி நம்பூதிரி ஜோக் எழுதிக் கொண்டிருந்தார் - நம்பூதிரி ஆங்கிலம் படிக்கச்சென்று திரும்பிவிட்டார். ‘என்ன பாஷை, ஒண்ணும் சுகமில்லை. சி ஏ டீன்னு எழுதணும். கேட்னு வாசிக்கணும். அர்த்தம் பூனை. மலையாளத்திலே பூனைன்னு எழுதலாம். பூனைன்னே வாசிக்கலாம். அர்த்தமும் பூனைதான்’ என்றாராம்.
நவம்பர் 7 நடு இரவு கடந்து பிறந்தபோது வாழ்த்து சொல்ல நானும் நண்பர் காலம் சென்ற கிரேசி மோகனும் ஈ சி ஆர் என்ற ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் கமல்ஹாசனின் இல்லத்துக்குப் போனோம்.
”அறம் ரொம்ப நன்னாயிருக்கு முருகன், நான் அந்த எழுத்தாளர் பணம் கிடைக்காமல் சாபமிடும் காட்சியை, தார் உருகிட்டிருக்கும் பகல் வெய்யில் ரோட்டிலே பெரிய ஆச்சி உட்கார்ந்திருக்கும் காட்சியை அறம் கதையிலே படிச்சு அழுதிட்டேன்”. கிரேசி மோகன் கண்ணைத் துடைத்துக்கொண்டு அடுத்த ஈடு வெற்றிலை பாக்கு சுவைக்க ஆரம்பித்தார். எனக்கும் பிடித்த கதையல்லவோ அறம். அந்தத் தொகுதிக் கதைகள் பனிரெண்டுமே தாம்.
கமல்ஹாசன் இல்லம் போய்ச் சேர்ந்தோம். அவரை சந்தித்தோம். ”உங்களோடு சண்டை போட இதோ ஜெயமோகன் இருக்கார்” என்று கையைப் பிடித்து ஜெமோவிடம் ஆற்றுப் படுத்தினார் கமல். இரண்டு சாதுப் பிராணிகள் என்ன சண்டை போட?
ஜெயமோகன் பழரசம் வகையறா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். உணவும் ஐஸ்கிரீமும் இனிப்புகளுமாக அடுத்து வந்தது விருந்து. எல்லோரும் நின்றும் நகர்ந்தும் பேசியும் உண்டுகொண்டிருக்க, ஜெயமோகன் இலை தழை என்று அங்கே வைத்திருந்த பச்சைக் காய்கறிகள், கீரைகளில் கொஞ்சம் எடுத்து மென்றார். அந்தக் கூட்டத்தில் ஆகார அடிப்படையில் அவர் அந்நியமாக உணர்ந்திருக்கக் கூடும்.
ஜெமோ அபூர்வமாக ஈமெயிலில் கேட்டிருந்தார் – நம்ம வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப் போறோம். கலந்துக்கறீங்களா?
அன்பு நண்பர் கல்யாண்ஜி வண்ணதாசனுக்கு வழங்கப்படும் விருது. வழங்கும் நண்பர் ஜெயமோகனைச் சந்தித்து உரையாட வாய்ப்பு. சரி என்றேன். விஷ்ணுபுரம் நண்பர்கள் குழுவின் விருந்தோம்பல் அந்த நிமிடத்திலிருந்து மறக்க இயலாத அனுபவமானது.
வண்ணதாசனுக்கு விருது என்றாலும் என் நாவல்கள் பற்றியும் ஓர் அமர்வு. ’முருகன், இங்கே இருக்கறவங்கள்ளே உங்க அரசூர் வம்சம் மற்றும் விஸ்வரூபம் நாவல்களை எத்தனை பேர் படிச்சிருப்பாங்கன்னு நினைக்கறீங்க?” என்று கேட்டார் ஜெயன். என்ன, ஒரு நாலைஞ்சு பேர் இருப்பாங்களா என்று அவரையே திரும்பக் கேட்டேன்.
“அதான் இல்லை, இந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட தொண்ணூறு பெர்சண்ட் நண்பர்கள் படிச்சுட்டுத்தான் உங்க அமர்வுலே பேச வந்திருக்காங்க”.
அவர் சொன்னது உண்மைதான். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் ஆழ்ந்த வாசிப்பை அடிப்படையாகக் கொண்டவை. அந்த அமர்வில் மேஜிக்கல் ரியலிசம் பற்றி சூடாக எழுந்து நட்போடு நிகழ்ந்த சில விவாதங்களை மேடைப் பக்கம் நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் ஜெயன் என்று கடலூர் நண்பர் புன்னகையோடு நிகழ்வு முடிந்து கனகாலம் சென்று அறிவித்தார்.
பாவண்ணன், சுப்ரபாரதிமணியன் போன்ற நண்பர்களோடு அடுத்தடுத்த அமர்வுகளில் பங்குபற்றுவது என்று நேரம் அருமையாகப் போனது.
ஜெயமோகன் என்ற நல்ல நண்பரின் அன்பும், நட்பும் அவர் மூலம் காலம் சென்ற ஆற்றூர் ரவிவர்மா போன்ற மலையாள எழுத்தாளர்களின் பரிச்சயத்தை சம்பாதித்துக் கொடுத்தது. என்.எஸ்.மாதவனின் லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள் avant-garde நாவலை மொழிபெயர்க்க ஊக்கமும் உற்சாகமும் அளித்தது. “ரெண்டு பேருமே கொஞ்சம் cynical perspective உள்ளவங்க”! சினிக்கல் என்ற சொல்லாடலின் நற்பொருளைச் சுட்டிய கருத்தாக்கம் அது.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி போல் வற்றாத கற்பனை வளம். சிறந்த படைப்பாற்றல். அயராத உழைப்பு. இதுதான் ஜெயன். மாதக் கணக்கில் நீண்ட முதல் கொரோனா லாக் டவுன் காலத்தில் நான் எழுநூறு பக்கம் வரும் ராமோஜியம் நாவலும் ஏழெட்டு சிறுகதைகளும் எழுதி நூலாக வெளியான திருப்தியை நண்பர் கமல்ஹாசனோடு பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்னார் – ”நல்ல சாதனைதான். ஜெயமோகன் தினம் ஒரு சிறுகதையாக நூறு கதை எழுதி, அதோடு கூட வெண்முரசு தினம் ஒரு அத்தியாயமாக, 26 நூல்களில் 1932 அத்தியாயங்களை எழுதி முடித்திருக்காராமே”.
“ஆமா சார், அந்த மனுஷர் மகா ராட்சசர்” என்றேன். செயல் மறந்து வாழ்த்துதுமே வகை ராட்சசன். வேறென்ன சொல்ல!
எத்தனை எழுத்தாளர்கள் சக எழுத்தாளர்களின் படைப்புகளைக் கொண்டாடுவதோடு அதிகம் விரும்பிப் படிக்கப்படும் தன் இணைய தளத்தில் விரிவாகப் பாராட்டியும் எழுதுவார்கள்? ஜெயமோகன் செய்வார். சளைக்காமல் சக எழுத்தாளர்களின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளை கைசுட்டுவார். அறியப்பட வேண்டிய அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை இனம் கண்டு சலிக்காமல் பாராட்டுவார்.
ஜெயமோகனைப் போற்றுதும்.
***
ஜெயமோகனுக்கும் உங்களுக்கும் உள்ள பரஸ்பர நல்லுணர்வும், நல்மதிப்பீடும் மகிழ்ச்சி அளிக்கிறது. கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கும் போதே இமயம் போல் உயர்ந்து விட்டவர்கள் நீங்கள் இருவரும். தமிழ்ச் சமுதாயம் உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர் பார்த்துக் கொண்டே இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
ReplyDelete