பற்றுக பற்று விடற்கு - அஜிதன்


சிவராம காரந்த் அவர் எழுதி இயக்கிய ஒரு நாடகத்துக்கான ஆடை வடிவமைக்கும் பணியில், சுற்றிலும் ஆட்கள் சூழ்ந்து நோக்கியிருக்க வண்ண காகிதங்களை விதவிதமான வடிவங்களாக வெட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அவரை சூழ்ந்து நின்றவர்களில் ஒருவர் நாடகத்தில் நடிக்க வந்திருந்த லீலா. லீலா கத்திரியை ஏந்திய அவரது கைகளையே பார்த்துக்கொண்டிருந்தார். “எவ்வளவு வேகம், எத்தனை நேர்த்தி, என்ன அழகு. நான் அந்த கைகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். இடம் பொருள் மறந்து அதன் அசைவுகளில் லயித்திருந்தேன். வாழ்நாளெல்லாம் அந்த கைகளுக்கு அருகில் இருக்க வேண்டும் என எண்ணினேன்” என்று பின்னாளில் லீலா அந்நிகழ்வை நினைவுகூர்கிறார். லீலா சிவராம காரந்த்தை காதல் திருமணம் செய்துகொண்டவர். ராமசந்திர குஹா சிவராம காரந்த்தை குறித்து எழுதிய சிறிய குறிப்பில் இந்நிகழ்வை வாசித்தபோது அப்பா முதல் முதலாக எனக்கு கலைஞனாக அறிமுகமான கணம் நினைவுக்கு வந்தது.


அப்பாவை நான் எப்போதுமே கலைஞனாக அறிந்திருக்கவில்லை. சிறு வயதில் என்னை பொருத்தவரை அப்பா ஒரு அறிவுஜீவி. உலகத்திலேயே மிகப்பெரிய அறிவுஜீவி. எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் வைத்திருப்பவர். நான் ஒவ்வொரு கணமும் அப்பாவைப் போல ஆக விழைந்தேன். என்னிடம் என்ன ஆகப்போகிறாய் என்று கேட்பவர்களுக்கு நான் சந்தேகமின்றி கூறுவது “அறிவுஜீவி”யாக என்பது தான். “அப்பாவை போல” என்று கூட அதில் இணைத்துக்கொள்வதில்லை, காரணம் “அதில் என்ன சந்தேகம் இருக்கிறது” என்னும் எண்ணம்தான். என் நான்கு ஐந்து வயதில் கூட ஏதாவது பொருள் வேண்டி சிணுங்கினாலோ அடம்பிடித்தாலோ அப்பா என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி “ஒரு அறிவு ஜீவி இப்படி அழலாமா?” அடுத்த நொடியே நான் நிறுத்திக்கொள்வேன். இப்போது வரை எல்லாவற்றுக்கும் இந்த சமாதானம் தான் அப்பா என்னிடம் சொல்லிவருகிறாரா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.


என் சிறு வயதில் அபாரமான கதைசொல்லும் திறனைத்தவிர அப்பா தான் ஒரு கலைஞன் என்பதை நேரடியாக வெளிக்காட்டிய தருணங்கள் மிக அபூர்வம். கவித்துவமான அல்லது தத்துவார்த்தமான மொழியையும் எளிதில் அவர் கையாண்டதில்லை. முதல்முதலாக நான் அப்பாவிடம் “கடவுள் இருக்கிறாரா?” என்று கேட்டபோது அவர் அளித்த பதில் “கடவுள், பேய் எல்லாம் நாம் அறியாதவற்றை, அறியமுடியாதவற்றை நிரப்பும் நமது கற்பனைகள் தான், அவை உண்மையல்ல” என்பதே. இப்போது யோசிக்கும் போது அது அந்த வயதுக்கு எவ்வளவு பொருத்தமான பதில் என்று உணர்கிறேன். ஏனென்றால் நான் அப்போது கேட்டது மிகவும் பொருண்மையான அர்த்தத்தில். அந்த வயதில் அவர் வேறு எந்த பதிலை அளித்திருந்தாலும் அதன் விளைவிலிருந்து நான் என் ஆளுமையை கட்டமைத்திருப்பேன். என் வயதை சேர்ந்த பலர் தங்கள் அறிவாளுமையை கடவுள் ஏற்பு மறுப்பு என்னும் இரு புள்ளியிலிருந்தே கட்டமைத்திருப்பதை காண்கிறேன்.


எனக்கு பத்து வயது இருக்கும்போது ஒரு விநாயகர் சதுர்த்தி நாளன்று நாங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஏரிக்குச்சென்று களிம்மண் எடுத்து வந்தோம். நானும் அப்பாவும் இரண்டு குழுக்களாக பிள்ளையார் செய்வதாக திட்டம். அப்பா எனக்கு அடிப்படைகளை சொல்லிக் கொடுத்தார். தங்கை பாப்பு வழக்கம் போல என் அணியில் சேர்ந்தாள். நாங்கள் செய்ய துவங்கினோம், முதலில் பீடம். நான் நேர்த்தியாக ஒரு செவ்வக வடிவ பீடத்தை வடிவமைத்தேன், அப்பா அருகிலிருந்த ஒரு பெரிய கருங்கல்லை எடுத்து பீடமாக்கினார். நான் உடல், பிறகு அதில் தும்பிக்கையுடன் கூடிய தலை, கைகள், கால்கள் என ஒவ்வொன்றாக அளந்து அளந்து பொருத்தினேன். அருகில் அப்பா மொத்தையாக பெரிய பெரிய உருளைகளாக கைகால்களை உருட்டிக்கொண்டிருந்ததை பார்த்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் இருப்பதாக எனக்கு தோன்றியது. ஆனால் நாங்கள் செய்ய செய்ய தங்கை அப்பாவின் அணிக்கு தாவினாள். நான் கணித கச்சிதத்துடன் ஒவ்வொரு பகுதியாக பொருத்தினேன். இறுதியாக கையளவு வரும் ஒரு பிள்ளையார் அளந்த தொந்தியும், எந்திரம் போல மடக்கிய கைகளுமாக ஆசீர்வதித்து அமர்ந்திருந்தார்.


அப்பாவின் பிள்ளையாரை பார்த்தேன். என்னுடையதை விட நான்கு மடங்கு பெரியதாக, ஒரு பாறை மேல் அப்போது தான் தொற்றியேறி அமர்ந்தது போல கால்களை மடக்கியும் மடக்காமலும் சாவகாசமாக அமர்ந்திருந்தார், மாபெரும் பானை வயிறு ஒரு புறம் சரிந்தது, தொடைமேல் ஏந்திய இடக்கையில் மூன்று மோதகங்கள், வலது கையால் அசிரத்தையாக ஆசீர்வதித்தபடி தலையை சரித்து மோதகத்தில் மூழ்கியிருந்தார். அருகே முன்னங்கால்களால் பாறைமீது தொற்றியேறி மோதகத்தை முகர்ந்து பார்த்தபடி ஒரு மூஞ்சூறு. எல்லாம் செய்து முடித்து அருகில் இருந்து சிறிய நெருஞ்சி பூக்களை பறித்து பிள்ளையார் மீதும் அவர் பாதங்களிலும் உதிர்த்தார். கிரீடமில்லாத இரட்டைமண்டையிலும் தோள்களிலும் பூக்களுடன், ஏதோ பூமரத்தின் கீழ் அமர்ந்தது போல மகிழ்ச்சியாக இருந்தார் பிள்ளையார்.


மொட்டை மாடிக்கு வந்து பார்த்த அம்மா நேராக ஓடிவந்து அதை கையிலெடுத்துக் கொஞ்சினார். எனக்கும் உள்ளூர அதுவே அழகு என தெரிந்தாலும் என்னுடையது தான் கச்சிதமானது சரியானது என்று தரையில் புரண்டு அழுதேன். அப்பாவும் அம்மாவும் என்னை ஆற்றுப்படுத்தினர். பாப்பு குரூரமான சிரிப்புடன் என்னை பார்த்தாள். எங்கள் இருவர் சிற்பமும் வீட்டின் காட்சி அடுக்கில் வைக்கப்பட்டாலும் இரண்டாவது நாள் நான் என் பிள்ளையாரை எடுத்து விட்டேன். அக்கக்காக அதை கழற்றி எறிந்தேன். என்னுடையது எப்படி “தவறானது” என்று எனக்கு புரிய துவங்கியபோது அப்பா என்னும் கலைஞன் எனக்கு அறிமுகமானார். பிள்ளையார் என்ற குழந்தைமையும் பேரார்வமும் கொண்ட இறையும் ஒரு கடவுளாக அல்லாமல் கதாபாத்திரமாக அறிமுகமானார்.


ஏறத்தாழ அந்த வயதில் தான் நான் எனது முதல் கதைப்புத்தகமான ‘பனிமனித’னை படித்தேன். ஐந்தாம் வகுப்பில் தமிழை எழுத்துக்கூட்டி படிக்கத் துவங்கிய நாட்களில் நான் பனிமனிதனை இரண்டே நாட்களில் படித்து முடித்தேன், அதன் பெரும்பகுதியை ஒரே நாளில். தெரியாத வார்த்தைகளை ஊகித்தும், பின் அதன் அர்த்தங்களை விரித்துக்கொண்டும் அப்பாவின் தக்கலை தொலைபேசி நிலையத்தின் அறை மேசைக்கு அடியில் நான் உருவாக்கிக்கொண்ட சிறிய வீட்டில் இருந்து இமையமலையை கற்பனையில் கண்டுகொண்டிருந்தேன். மொத்த நாவலிலும் நான் அப்பாவிடம் சந்தேகமென கேட்டது ஒரே ஒரு வார்த்தை தான். “பிக்‌ஷு” என்ற அந்த வார்த்தையின் அர்த்தம் கேட்க மட்டும் என் சிறு வீட்டில் இருந்து வெளியே வந்தது நன்றாக நினைவிருக்கிறது.


அப்பா பனிமனிதனை எனக்கு பிடிக்கும்படி என் ஆளுமையை ஒட்டியே எழுதியிருந்தார். ஏராளமான அறிவியல் தகவல்கள் அதில் இடம்பெற்றன, கூடவே பாண்டியனின் சாகசமும். டாக்டரும் பாண்டியனும் என் இரு அம்சங்களாக அதில் எதிரொலித்தனர். ஆனால் என்னை மிகவும் பாதித்தது ‘கிம்’மின் பாத்திரமும், டாக்டரும் பாண்டியனும் திகைத்து நிற்கும் யதிகளின் உலகமும்.



சிறு வயதில் ஆற்றல் கொப்பளிக்க நான் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருந்தேன். “அப்பா! ஜாக்கிசானும் டார்சானும் சண்டை போட்டா யாரு ஜெயிப்பா?” “அர்னால்டும் சிங்கமும் சண்டை போட்டா...?” வளர வளர அக்கேள்விகள் உருமாறின, சரித்திரத்தில் நிலைகொண்டன. ஒரு முறை நான் “அப்பா பாகிஸ்தானுக்கும் இந்தியாக்கும் வார் வந்தா நாம தான ஜெயிப்போம்?” என்றேன். அப்பா என்னை அருகமர்த்தி போர் என்பது எப்படி ஒரு மானுடப் பேரழிவு என்று சொல்ல முயன்றார். எனக்கு அது புரியவில்லை, “கெட்டவங்கள அழிக்கிறது தான வீரம், அதானே போர்?” என்றேன். ‘பாகிஸ்தான் நம் எதிரி நாடு’ என்பது போன்ற கருத்துகள் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தன. அப்பா “உனக்கு நான் சொல்றது இப்போ புரியாது, நீ இந்த புத்தகத்த படிச்சு பாரு” என்று என்னிடம் அளித்த புத்தகம் “டோட்டோ சான்”. ஜப்பானின் ஒரு சிறிய அழகிய மாற்றுமுறைக் கல்வி கொண்ட பள்ளி போரில் அழியும் சித்திரம் கொண்ட நூல் அது. கண்ணீருடன் அதை நான் படித்து முடித்தபோது நான் முற்றிலும் மாறியிருந்தேன்.


ஆற்றல், அறிவு இவை இரண்டும் குழந்தை பருவத்தில் அதன் தூய வடிவில் பாசாங்கின்றி வெளிப்படுகின்றன, வெறும் அதிகாரம் என. அதனாலேயே அதன் நேரடித்தன்மை நம்மை வியக்கச்செய்கிறது. அதிகாரம் என்பதன் பல்வேறு வடிவங்கள் எப்படி இளம் மனதில் பதிவாகின்றன என்பது மேலும் ஆச்சரியமானது. ஒரு குழந்தை மிகச் சாதாரணமாக “நான் மட்டும் பணக்காரன் ஆனால்...” என்று சொல்லத் துவங்குகிறது. பணம் என்பது அதிகாரத்தின் ஒரு வடிவமாக அது அறிந்திருக்கிறது. இந்த அதிகாரம் என்பது ஒரு ஆதார உந்துசக்தி. இந்த பேரவா (Pleonexia) தத்துவத்தில் Conatus, Will என்று பல்வேறு வார்த்தைகளால் அடையாளப்படுத்தப்படுவது. ஆற்றலும் அறிவும் அடைவதற்கான பிரதான ஊக்கம் இவையே. ஆனால் ஆற்றலுக்கும் அறிவுக்கும் இவை கடந்து ஒரு நிறைவு நிலை இருக்கிறது, அதையே கிறிஸ்தவத்தில் Grace என்கின்றனர். அது “இயற்கை” அல்ல, இயற்கையை மீறி அதில் வந்து அமைந்திருக்கும் ஒன்று.


அப்பா பனிமனிதனில் எனக்கு முதல் முதலாக அவ்வுலகை அறிமுகப்படுத்தினார். யதிகளின் உலகான அங்கு ஆற்றலும் அறிவும் எங்கும் நிறைந்திருக்கும். யதிகள் பேராற்றல் கொண்டவர்கள், எல்லா பொருளின் இயல்புகளையும் மற்றவர் சிந்தனைகளையும் உள்ளூர அறிந்தவர்கள். ஆனால் அவர்களுக்குள் போட்டிகள் இல்லை, மேல் கீழ் இல்லை, நன்மை தீமை இல்லை. அங்கு எங்கு நோக்கினாலும் தங்கமும் வைரமும் நிறைந்திருக்கும், ஆனால் அவற்றிற்கு அங்கு அழகைத் தவிர எந்த மதிப்பும் இல்லை. ஒரு விதத்தில் அது ஒரு ஆதாரமான மானுடக்கனவு. உலகமெங்கும் ஆதிகாலத்தை இப்படி கற்பனை செய்து பார்த்துள்ளனர். ஜைனர்களின் காலச்சக்கரம் 12 யுகங்களை கொண்டது, ஆறு வளர் யுகங்களும் ஆறு தேய் யுகங்களும் கொண்டது ஒரு சுழற்சி. எல்லா மதங்களை போல அவர்களும் நாம் வாழும் யுகத்தை தேய்ந்து தீமையும் அநீதியும் மேலோங்கும் யுகமாக அடையாளம் காண்கின்றனர். ஒவ்வொரு முந்தைய யுகத்துக்கும் அதில் வாழும் மனிதர்கள் மேலும் பல மடங்காக உயரம் கொண்டிருந்தனர். அவ்வாறு ஐந்து யுகங்கள் முன்பு வாழ்ந்த மனிதர்களை அது மலை அளவு உயரம் கொண்டவர்களாக கற்பனை செய்கிறது. ஆடைகளின்றி நடமாடிய அவர்கள் குனிந்து பெருமரங்களின் கனிகளை பறித்து புசித்தனர். இங்கு நாம் காண்பது மாபெரும் ஆற்றல் குறித்த கற்பனையே. ஆனால் ஆற்றலின் நிறைவை அது தூய இன்பத்திலும் சமாதானத்திலும் அடையாளம் காண்கிறது. அஹிம்சையின் உச்சத்தில் சென்றமைந்த தீர்த்தங்கரரை ‘மகாவீரர்’ என்றழைக்கிறது.


பனிமனிதன் காட்டும் அப்படியான ஓர் உலகம் சாத்தியமா என்று இப்போதும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. சந்தேகம் அல்ல தத்துவார்த்தமாக அது சாத்தியமல்ல என்று மேலும் மேலும் உறுதிப்படுகிறது. உலகின் பெரும் படைப்புகள் அனைத்துமே ஒரு விதத்தில் மாபெரும் வீழ்ச்சியின் சித்திரங்களே. அதில் அப்பாவின் படைப்புகளும் விதிவிலக்கல்ல. மனிதர்களில் எழும் பெரும் தீமையில் துவங்கி அன்றாட கீழ்மைகள் வரை; உயர் விழுமியங்களின் வீழ்ச்சி, அறத்தின் திரிபு, காமம், வன்மம், நுண் அகங்காரங்களின் மோதல், இவையெல்லாவற்றுக்கும் மேல் காலம் கொண்டு சேர்க்கும் வெறுமை. இவையே உயர் கலையின் மாறா பேசுபொருள். ஆகவேதான் கலையின் உச்ச வடிவம் துக்க நாடகமே (tragedy) என்று கிரேக்கர்கள் எண்ணினர்.


அப்பாவின் முக்கியமான படைப்புகள் பல துக்க நாடகங்கள் என்றே சொல்லவேண்டும். கலையின் வளர்ச்சிப்பாதை எப்போதும் ஒற்றைப்படையான வெற்றிக்கதையில் (epic) இருந்து துக்க நாடகம் (tragedy) என்னும் உயர் வடிவத்தை அடைவதாகவே இருந்திருக்கிறது. வான்மீகி ராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடு அதுவே. வெண்முரசு செய்ததும் அத்தகைய ஒரு மாற்றத்தை தான். வெண்முரசு காட்டும் மானுட துக்கம் என்பது அதனால் பன்மடங்கு நுண்மையானது.


துக்க நாடகத்தில் ஷோபன்ஹாவர் மூன்று வகைகளை அடையாளம் காண்கிறார். ஒன்று, மனிதனில் குடிகொள்ளும் அசாத்தியமான தீமையை துக்க காரணமாக அமைத்தல்; மொத்த நாடகத்தையும் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தின் செயலில் மையம் கொள்ளச்செய்வது அது. இரண்டு, அசாத்தியமான விதியின் அல்லது இயற்கையின் துர்கதியை துக்க காரணமாக வைத்தல். மூன்றாவது, மிகவும் சாத்தியமான தளத்தில், மனிதர்களின் உள்ளுறையும் குணவேற்றுமைகளும் அவர்கள் இடையே இயல்பாக அமைந்த சந்தர்ப்பங்களும் மட்டுமே அடிப்படையாக கொண்டு எழும் துக்க நாடகம். சிறிய உரசல்களும், அகங்கார சீண்டல்களும், தேர்ந்த அலட்சியங்களும் பெருகி பெருகி உருவாகும் துக்க நாடகம். ஷோபன்ஹாவர் இதில் மூன்றாவது வகைமையே உயர்வானது என்கிறார். அதுவே வாழ்க்கையின், மானுட நிலையின் (human condition) அடிப்படையை துல்லியமாக தொட்டு காட்டுகிறது என்று எண்ணுகிறார். நம் யாருக்கும் எந்நிலையிலும் நடக்க சாத்தியமானது, பல சமயங்களில் நடப்பதுவும் கூட, ஆகவே அதுவே வாழ்க்கையை குறித்த ஒட்டுமொத்த சித்திரத்தை அளித்து அதன் பற்றுகளிலிருந்து விடுபட செய்கிறது. கலையின் உயர் நோக்கம் பற்றிலிருந்து விடுபட செய்தலே என்கிறார்.


வெண்முரசின் பரந்த அழகியல் கட்டுமானத்திற்குள் முதல் இருவகை துக்க நாடக அம்சங்களும் இடம் பெறுகின்றன. கணிகரின் அதிதீமையில் துவங்கி கர்ணனின் விதியின்பாற்பட்ட துக்கம் வரை. ஆனால் வெண்முரசில் நுண்மையாக நிகழும் தருணங்கள் அனைத்துமே மூன்றாவது வகையை சேர்ந்தவை தான். பீஷ்மருக்கும் அம்பைக்கும் இடையில் தோன்றும் முதற்கனலில் துவங்கி, திருதராஷ்டிரர்-பாண்டு, துரியோதனன்- தர்மன் என்று ஒவ்வொரு உறவிலும் ஏற்படும் நுண்மையான விரிசல்கள், அவை ஏற்படுத்தும் விளைவுகள் ஊடும் பாவுமாக சமைக்கும் நாடகத்தருணங்களே வெண்முரசை ஆழமாக நம்மை பாதிக்கும் உயர் கலைப்படைப்பாக மாற்றுகிறது. பாரத பெருங்கதையில் வீழ்ந்த ஒவ்வொரு உயிருக்கும் கண்ணீர் சிந்தும் போதும், ஒவ்வொரு அவமதிப்பிற்கும், பழிக்கும் அகம் விம்மும் போதும் நாம் வெண்முரசின் மகத்துவத்தை கண்டுகொள்கிறோம்.


சமீபத்தில் எனக்கும் அப்பாவுக்கும் நடந்த ஒரு விவாதத்தில் அப்பா தான் நவீன தமிழ் எழுத்தாளர்களிடம் இருந்து அடிப்படையில் வேறுபடுவதாகவும், அவர்கள் படைப்புகளில் இருக்கும் கசப்பும் வெறுமையும் தன் படைப்புகளில் இல்லை மாறாக மானுடத்தின் மீது நம்பிக்கையும் இலட்சியவாத கனவுமே தன் படைப்பின் அடிப்படை குரல் எனவும் வாதிட்டார். இரண்டு அடிப்படைகளில் நான் அந்த கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்று, நான் மேற்கூறியது போல அப்பாவின் சிறந்த படைப்புகளில் இருக்கும் வீழ்ச்சி சித்திரம். கசப்பும் வெறுமையும் அதில் அடங்கும். ஒரு விதத்தில் மற்ற நவீன எழுத்தாளர்களில் இருந்து அப்பாவின் படைப்புகளில் அது மேலும் பல மடங்கு தத்துவார்த்தமான ஆழம் பெறுகிறது எனலாம். இரண்டாவது, முக்கியமான நவீன எழுத்தாளர்கள் அனைவருமே முழுமையாக இருளையும், கசப்பையும் மட்டுமே காட்டியவர்கள் அல்ல, புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் குழந்தைமையின் பரிசுத்தமும், எளிய மனிதர்களின் தாக்கு பிடிக்கும் குணமும், அறத்தின் இறுதிச்சொல்லும் நிலைப்பதாகவே அமைந்துள்ளது.


ஆனால் ஒரு எழுத்தாளர் அவர் எவ்வாறு வெளிப்படுகிறார் என்கிற அளவுக்கே அவர் எவ்வாறு தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார் என்பதும் முக்கியமான ஒரு அம்சமே. அதேபோல வீழ்ச்சியை சித்தரிப்பது என்பது அவநம்பிக்கைவாதம் அல்ல. நிச்சயமாக அப்பாவின் படைப்புலகில் வேறு எந்த நவீன எழுத்தாளர்களை விடவும் ‘உன்னத’த்திற்கான இடம் உண்டு. இந்த உன்னதம் (sublime) என்னும் உணர்வுநிலை ஐரோப்பிய கலைமரபில் கற்பனாவாத காலகட்டத்தில் பலவாறாக பேசப்பட்டுள்ளது. காண்ட், ஷில்லர், ஷோபன்ஹாவர் என அம்மரபு நீள்கிறது. உன்னதம் என்னும் அனுபவத்தின் அடிநாதம் என்பது அகம் அடிபணியும் மேன்மையான அழகின், அறத்தின் தரிசனம். மேலும் அடுத்த கட்டமாக இவை இரண்டும் இணையும் தருணம். திரும்பத் திரும்ப அப்பாவின் படைப்புகளில் அழகுணர்வும் அறவுணர்வும் அளிக்கும் உன்னதம் இடம்பெறுகிறது. ஆனால் அவ்வுன்னதங்கள் அனைத்தும் போலியாக நிலைநிறுத்தப் படுவதில்லை. மாறும் தேயும் பருவுலகில் மாலை பொன்னொளி போல சில கணங்கள் தங்கி ஆளும் கனவுநிலைகளாகவே அவை தோன்றுகின்றன. அவற்றை சுற்றி அவநம்பிக்கையும் அற்பத்தனங்களும், இவற்றையும் மீறிய தீமையாக வெளிப்படும் மானுடத்தின் நன்மை மீதான இயல்பான ஆர்வமிழப்பும் சூழ்ந்தே அவை வெளிப்படுகின்றன. அதனாலேயே வெண்முரசு போன்ற ஒரு படைப்பின் உயர் நோக்கம் ஒருவனை நம்பிக்கையோடு செயல்படவைப்பது என்பதற்கும் ஒரு படி மேலாக ஆன்மீகமான பற்றற்ற நிலைக்கு செலுத்துவதாகவே இருக்கிறது.


ஆனால் இந்த இரண்டும் வெவ்வேறாக இருக்கவேண்டியதில்லை என்பது ஒரு அடுத்த கட்ட அறிதலாக சொல்லப்படுகிறது. நம்பிக்கையோடு செயல்படுவதும் பற்றற்ற நிலையும் இணையும் புள்ளி ஒன்று உண்டு என்பார்கள். அது பலவிதமாக கேட்டு சலித்த கீதையின் சொல்லே. எனக்கு எப்போதும் “பற்றற்ற செயல்” என்னும் அவ்வுரைத்தல் மேல் நம்பிக்கை ஏற்பட்டதில்லை. செயல் அனைத்தும் ஒரு விளைவை மனதில் கொண்டே ஆற்றப்பட முடியும். அதுவே அச்செயலுக்கு ஒருமையையும், வரைமுறையையும் அளிக்கிறது. விளைவின் மீது பற்றற்ற செயல் என்பது ஒரு முரண். ஆனால் ஷோபன்ஹாவர் சொல்லும் ஒன்று உண்டு, அது பற்றறுத்தலுக்கு இணையான நிறைவேறாத ஒன்றின் மீதான ஒருமுகம் கொண்ட பற்று. வெண்முரசில் ராதையின் பற்று ஒரு துறவே, அதே போல சிகண்டியின் பற்றும். அவர்களுக்கு துக்கம் உண்டு ஆனால் அது நிலையான ஒரு வாழ்க்கை நோக்கத்தில் தோன்றுவது, உன்னதமானது, மேன்மையானது. காந்தியின் துக்கம் துவங்கி பல்வேறு மகத்தான வரலாற்று பாத்திரங்களோடு நாம் அதை பொருத்திப்பார்க்கலாம்.


அப்பாவின் படைப்புகளில் மகத்தானவை அனைத்தும் இலட்சிய மானுடக் கனவை முன்வைப்பவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை அனைத்துமே அவை ‘கனவே’ என்று அடிக்கோடிடுபவை, கசப்புடன் அல்ல, காவிய துக்கத்துடன்.


இதற்கு விதிவிலக்காக சில படைப்புகளை சொல்ல முடியும். குமரித்துறைவி அத்தகையதொரு படைப்பு. அதை எழுதிய பின் அப்பா அடைந்த நிறைவு நிலையை அருகிருந்து பார்த்தவன் நான். குமரித்துறைவியில் அந்த உன்னதம் எழுவதற்கு காரணம் அதில் ஒரு சமூகம் கூட்டாக தன் மகளின் பொலிவையும் மங்கலத்தையும் கனவு காண்கிறது. அது அடுத்த தலைமுறை மீதுள்ள நம்பிக்கை. அது இறைவியே ஆகும்போது அதன் சாத்தியங்கள் மேலும் உன்னதம் கொள்கின்றன. முற்றிலும் துக்கத்தின் நிழல் கவியாது அது வெளிப்படுகிறது.



அதற்கு இணையாக நான் சொல்ல துணிவது ‘பனிமனித’னிலும் ‘உடையா’ளிலும் வெளிப்படும் கனவு. உலகெங்கும் பெரும் இலட்சியவாதிகள் குழந்தைகளை நோக்கி சென்றிருக்கிறார்கள். பனிமனிதன் காட்டும் யதிகளின் உலகம் ஒரு கனவே. பரிணாம ரீதியாக கூட அப்படி ஒரு சூழல் நிலைக்க முடியும் என்று தோன்றவில்லை. மானின் மடுவில் பால்குடிக்கும் புலிக்குருளையும், புலியின் மடியில் பால் குடிக்கும் மான் குட்டியும் என காவியங்களில் கற்பனைசெய்யும் ஒரு உலகு அது. ஆனால் சிறுவயதில் அந்த கனவை ஆழமாக விதைப்பது எவ்வளவு மகத்தான செயல் என்பதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.


பனிமனிதனின் இறுதியில் யதிகளின் உலகில் இருந்து வெளிவந்தபின் அதன் இருப்பை பிறருக்கு தெரிவிக்கவேண்டுமா என்று பாண்டியனும் டாக்டரும் விவாதித்தபடி வருவார்கள். அதை தெரிவிப்பது அதன் அழிவுக்கே வித்திடும் என்பது டாக்டரின் தரப்பு, அது வெளியுலகுக்கு தெரியவேண்டும் அது அறிவிக்கப்படவேண்டும் என்பது பாண்டியனின் தரப்பு. ஆனால் இவர்களுடன் மௌனமாக அவ்வுலகின் சாராம்சத்தை தாமரைப்பூவாக கையிலேந்தி கிம் நடந்து வந்து கொண்டிருப்பான். பௌத்தத்தில் நிர்வாண நிலைக்கு அருகில் சென்றும் அதை கடக்காமல் ஒட்டுமொத்த மானுடத்தையும் கரையேற்ற இறங்கி வரும் நிலையே போதிசத்வ நிலை. அந்நிலையை ஒரு குழந்தையில் காண்கிறது பனிமனிதன்.


இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது எங்கள் பதிப்பாளரான மீனாம்பிகை எதேச்சையாக பனிமனிதனில் இருந்து ஒரு வாசகத்தை அனுப்பினார். “மைத்ரி என்றால் ஒருமை என்று பொருள், மைத்ரேயர் என்றால் ஒருமையே வடிவானவர். நான், நீ, அது, இது என்று பிரித்து பார்க்காமல் இருப்பதுதான் மைத்ரி”.


மைத்ரி என்றால் கருணை, நட்பு என்ற அர்த்தங்களும் உண்டு. பனிமனிதன் பத்து வயதில் எனக்கு அறிமுகப்படுத்தியதை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அது “மைத்ரி” என்பது தான். அது அப்பாவின் எழுத்துலகின் சாரமும் கூட. அது ஒன்றை மட்டும் பற்றிக்கொண்டு இவ்வாழ்நாளை கடக்க விழைகிறேன்.


மேற்கொண்ட அந்த பத்தியை மீனாம்பிகை எனக்கு அனுப்ப காரணம், நான் எழுதி வெளிவர இருக்கும் புதிய நாவலின் பெயர் “மைத்ரி”. அதன் முன்னுரையில் இருந்து சில வார்த்தைகளுடன் இந்த கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.


// உலகம் கண்ட மாபெரும் கலைஞர்களில் ஒருவர் என் அப்பா என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஓரளவுக்கு மேல் இத்தகைய நிகழ்வு என்பது தனிநபரை சார்ந்தது அல்ல. அது மொழியையும் பண்பாட்டையும் சார்ந்தது. ஆகவே அப்பாவை குறித்த இது போன்ற புகழ்ச்சியை கேட்பதற்கோ வழங்குவதற்கோ எப்போதும் நான் கூச்சமடைந்தது இல்லை. அதேநேரம் அப்பா படைப்பு வேறு தான் வேறு என்று நிற்கும் ஆளுமை கிடையாது. ஒவ்வொரு நொடியும் படைப்பாளியாகவே வெளிப்படுபவர். அதன் கம்பீரத்துடனும் நிமிர்வுடனும் நிற்பவர். அவருடன் நான் கழித்த பொழுதுகள் அதனாலேயே விலைமதிப்பில்லாதவை. எனது ஆசிரியராக அவர் எனக்கு என் சூழலில் பலரைவிடவும் சில அடிகள் முன்னால் செல்ல வழிவகுத்தவர். எனது தனிப்பட்ட தேடல்கள் எல்லாம் அவரிடமிருந்து அவர் காட்டிய வழியில் துவங்கியதே. இன்று வரை நான் என் படைப்பூக்கத்தை விட என் கலைரசனையில் பெருமைகொள்ள அவரே காரணம்.



இந்த நாவல் அவரது நல்வார்த்தைகளை பெற்றபோது முழுமையடைந்தது.


இந்த ஆண்டு (22-04-2022) தனது அறுபதாவது வயதை கடக்கும் அப்பாவுக்கு இந்நூலை சமர்ப்பிப்பதில் நெகிழ்ச்சி அடைகிறேன். அவரது படைப்புச்சம் இனிதான் நிகழ காத்திருக்கிறது என்பது என் எண்ணம். குமரித்துறைவி அதற்கான பாதையை அருளியிருக்கிறார்.


தந்தை, ஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு பாதம் பணிந்து சமர்ப்பணம்.  //


அஜிதன்.  

***


14 comments:

  1. பதினாறடி பாயப்போகும் மகன். ஒரு குடும்பமே தற்கால தமிழ் இலக்கியப்படைப்புலகை கலக்கிக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஒளி யினின்றும் ஒளி க்கு..சுடர்க..வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ஆஹா !
    அனாயசமான மொழிநடை.
    ஆழமும் கூட.

    ReplyDelete
  5. அஜிதனின் இதயசுத்தியான எழுத்து நடை, ஆழமான கருத்துக்கள் ஜெயமோகனின் படைப்புகளின் மீதான பக்தியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. மகன் தந்தைக்காற்றும் ...?
    - வாசகன் (கொழும்பு)

    ReplyDelete
  6. Blessed with great father..
    வாழ்க வளர்க

    ReplyDelete
  7. அருமை. உங்கள் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவருவதில் சிறப்பான வெற்றி பெற்றிருக்கிறீர்கள். பொதுவாக பெருமலையின் அடிவாரத்தில் மட்டுமே இருந்துவிட்டவர்கள் அந்த மலையை அறியாமல் விட்டுவிடுவார்கள். அல்லது குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள். ஆனால் நீங்கள் மிகச்சரியாக ஜெயமோகன் அவர்களுடன் அருகமைவதின் சிறப்பை உணர்ந்து கூறியிருக்கிறீர்கள். பிள்ளையார் சிலை செய்வதில் ஜெயமோகன் என்ற கலைஞன் வெளிப்படுவதை நீங்கள் உணர்ந்ததும் அதை எங்களுக்கு கூறியிருக்கும் விதமும் வெகு சிறப்பு. உங்களை உச்சிமுகர்ந்து முத்தமிட்டு அணைத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. Philosophically glowing tributes to Author Jeyamohan Esq.👍 From his endearing Son Ajithan! Sublime occurrence in human aesthetics that such an insightful article happens - for reading by discerning readers. And creates awe and admiration for Ajithan as a budding author. The precision with which some of the observations have been written by him - a very heartwarming development in Jeymo_Arunmozhi family. Team Jeymo in literary circles - looks forward to more such sublime excercises,👍

    ReplyDelete
  9. நல் எழுத்து --அஜிதனை சின்ன பெடியன் என நினைத்சேன்--செல்வம்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சகோ , மகிழ்ச்சியாக உள்ளது .

    ReplyDelete
  11. மிக மிக அருமையாக செதுக்கியுள்ளீர்கள் அஜிதன். உங்கள் முதல் ஆக்கம் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற தமிழ் சொல்வடை குறிப்பது போல் ஐயா ஜெயமோகனின் வழி தோன்றல் என்பதை நிரூபித்து விட்டீர்கள். வாழ்க நின் தமிழ் தொண்டு! காசு , துட்டு என தேடி தேடி எழுதும் உலகில் ஐயா ஜெயமோகன் கட்டணமில்லா ஒரு வலை பக்கம் இந்த அளவு பெருமை சேர்க்கும் வாசகர் வட்டம் கொண்டு உள்ளது தமிழுக்கும் குமரி மண் தக்கலைக்கும் பெருமை! வாழ்க நின் தொல்காப்பிய குமரி தமிழ் தொண்டு...

    ReplyDelete
  12. வாழ்த்துகள் அஜிதன்.மிகவும் சிறப்பான கட்டுரை. நல்ல தொடக்கம்... மனம் கொண்டதனைத்தும் கைவரப் பெறட்டும். வாழ்த்துகள் வாழ்க வளமுடன். 😍அன்பு

    ReplyDelete
  13. Beyond any body's doubt Ajithan proved that he is not only the legal heir to his father,also he is the successor in Tamil literature

    ReplyDelete