ஒன்று
முதலில் ஒருமுறை படித்து விட்டு, அப்புறம் பகுதி பகுதியாக பல முறை படித்து விட்டு, இரண்டாம் முறையாக முதலில் இருந்து படிக்கத் துவங்கும்போது, திருவடி ஆனந்தப் பரவசத்தில் திளைத்திருக்கிற குஷ்டரோகியின் காலை மிதித்து விடுகிறான். எனக்கு அங்கே ஒரு இடைநிறுத்தம் நேர்ந்தது. நான் விஷ்ணுபுரம் நாவல் மிக உயர்ந்த தளத்தில் இருக்கிறது என்பதை அறிந்தேன். ஜெயமோகன் அசாத்தியமான ஒரு எழுத்தாளர் என்பதையும்.இரண்டு
அன்றைய நாளில் குறைந்தது நான் ஒரு அறுபது கதைகளாவது எழுதி வைத்திருந்தேன். ஒரு நாள் எல்லாமே மட்டமாக இருப்பதாகப் பட்டது. அதன் மீது அலட்சியம் கவிழ்ந்தவுடன், அதை எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகம் காணாமல் போயிற்று, அது அதற்கு பொருத்தமாகவும் இருந்தது. அப்புறம் மேலும் மேலும் ஆழ்ந்த படிப்புகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்துக்குப் பிறகு, மெல்ல தன்னம்பிக்கைகள் முகிழ்ந்து கொண்டு வந்து, உறங்கப் போன எழுத்தாளன் மெல்ல எழுந்து, வெளியே உலா செல்லும் நோக்கில் தலை சீவிக் கொண்டிருந்தான். அப்போது தான் திசைகளின் நடுவே படிக்கிறேன். மாஸ்டர்களை ஆமோதித்தவாறே வந்து கொண்டிருந்த வாசக மனம் சீரான சாலையில் மாட்டுவண்டி இடறுண்ட மாதிரி எதிர்பாராமல் குலுக்கப்பட்டது. எனக்கு ஒரு புது எழுத்தாளரைப் பிடிக்கவில்லை. அவன் இளமையாக இருப்பது இன்னும் பிடிக்கவில்லை. நான் அந்த எழுத்தாளரை வெறுப்பதை அறிந்தேன். மகாபாரதத்தில் எல்லாம் ஒருவர் உள்ளே பூந்து வருவதாவது, தருமனைப் போன்றோரை கேள்வி கேட்பதாவது! சுந்தர ராமசாமி கடைசியாகக் கொண்டு வந்த அந்தக் காலசுவட்டில் இந்தக் கதையை திரும்பவும் பலமுறை படிக்க வேண்டி வந்தது. அப்புறம் இவர் நான் எழுதுவது போல எழுதுகிறார், அதனால் தான் எனக்கு இவர் மீது இந்தக் கோபம் வருகிறது என்பதாக ஒரு தற்காலிக சமாதானம் கிட்டியது.
ஒரு கதை தானே, அடுத்து வருவதெல்லாம் ஊற்றிக் கொண்டு விடும் என்கிற சதி எண்ணமும் அப்போதைய நிலைக்கு ஒரு ஆசுவாசம்.
பொதுவாக நாம் நேசிக்கிற ஒரு நண்பனை மறந்தே கூட போகலாம், உள்ளேயிருந்து எல்லாமாக எரிகிறவன் எதிரி அல்லவா? விஷ்ணுபுரம் வெளியான புதிதிலேயே வெகு ஆவேசமாக வாங்கி, அதே ஆவேசத்துடன், யோசிக்கக் கூட அவகாசம் கொடுத்து விடாமல், இடைவிடாமல் படித்து முடித்தேன். இப்போது அவரது எதிரிகள் கண்டெண்டு தேடிப் படிப்பது போலதான். அநேகமாக எங்கே அதன் வீழ்ச்சி இருக்கலாம் என்பதை உள்மனம் தேடிக் கொண்டு இருந்திருக்கும். பெரிய அபிப்ராயம் இல்லை. இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும் போல இருந்திருந்தது. நண்பர்களிடம் நான் சரியில்லை என்று குறைபட்டுக் கொண்டேன். இவரைப் போல உழைக்கிற சித்தம் இருந்திருந்தால், இது நான் எழுதியிருக்க வேண்டிய நாவல் என்றுமே சொன்னேன்.
நான் சொல்லுவதை நாம் நம்பினேனா?
நிம்மதி இல்லாமல் செல்லும் நாட்கள் பெரிய அவஸ்தையாக இருந்தது.
விஷ்ணுபுரத்தின் அதிகாரமாக இருக்கிற அந்த பிரம்மாண்டமான கோவிலை இடித்துத் தள்ளி, அதை வெறும் மண் குவியலாகப் பார்க்கக் காத்திருக்கிற கங்காளரைக் காண, சிற்பியை அழைத்துக் கொண்டு செல்லும் காட்சியைப் படித்தேன். சிகரத்தில் இருந்து பார்க்கும் போது எங்கும் கவிந்த இருளுக்கு நடுவே ஒரு வெளிச்சப் பூச்சியாக ரீங்கரித்துக் கொண்டு கிடக்கிற விஷ்ணுபுரம். தொடர்ந்து, சிற்பி ராஜ கோபுரத்தின் மீது ஏறுவதற்கு செல்லும் காட்சி. மறக்க முடியாத, வெவ்வேறு மாதிரியான உணர்வுகள் கொப்பளிக்கிற மூன்று தந்தை மகன்களின் உரையாடல்கள். யாரையும் அடி பணிய வைக்கிற, யாரையும் கொல்ல முடிகிற அரசியல். சித்தனுடன் தெருவில் அலைகிற ஞானம். மடப்பள்ளிகளின் விருந்து, துறவிகளின் மனம் மற்றும் சாவு. அப்புறம், இதை நான் பலரிடமும் சொல்லியிருக்கிறேன், நாவலின் இறுதிப்பகுதி பிரளயம் அல்லவா, வெள்ளம். கோபுரங்கள் இடிந்து விழுந்து எந்த சலனமும் இல்லாமல் அவை காணாமல் போவதை மலை உச்சியில் ஒரு கரிய பாறையின் மீது நின்று நீலி பார்த்திருப்பது இருக்கட்டும், அதற்கெல்லாம் முன்பே பல தருணங்களிலும் தண்ணீரில் கால் நனைவதைப் போல பல முறைத் திடுக்கிட்டு புத்தகத்தைக் கீழே வைத்திருக்கிறேன். இவைகள் எல்லாம் நடந்த பிறகு, நாவலை முதலில் இருந்து படிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை.
இந்த முறை திருவடி குஷ்ட ரோகியின் காலை மிதிக்கிற வரிகளில், நான் நிதானித்துக் கொண்டேன். அசூயை விலகிக் கொண்ட பொழுதிலிருந்து, நாவல் என்னைப் பொறுத்தவரையில் முழுமையாகத் திறந்து கொண்டது. அதற்கு அப்புறமும் அந்நாவலை பல முறை பல்வேறு உணர்வு நிலையின் பின்னணிகளில் படித்திருக்கிறேன். அதே நண்பர்களிடம், இல்லை, இவரைப் போல என்னால் எழுதவே முடியாது என்பதைக் கூற முடிந்தது.
நானே கூட எதையாவது எழுதுவதாக இருந்த விபரீத முடிவை மேலும் தள்ளிப் போட்டேன்.
ஏனெனில் நான் எத்தனை சிறிய சிமிழிற்குள் அடைபட்டிருந்தேன் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. அதை வைத்துதான் அவரை பல இடங்களில் அளக்கவோ அள்ளவோ தராசில் நிறுத்தவோ முடியாது என்பதை துவக்கத்தில் புரிந்து கொண்டேன். மண்ணின் மீது நின்று எதையோ அளைந்திருந்து கொண்டு, மெல்ல ஒருவர் அதை விட்டு மேலெழுவது என்பது அவரது படைப்பில் பல முறையும் நிகழ்வது பார்த்தேன்.
அது என்னவென்று இன்னமுமே எழுதும் பலருக்கும் தெரியாதது.
இன்று எப்போது ஜெயமோகனை படிக்க, நினைக்க, பார்க்க நேர்ந்தாலும் எனது வாசக மனதின் முன்னால் முதலில் வந்து நிற்பது அவருடைய மீறல்கள் தான். ஒருவன், ஒரு காலத்திலும் தன்னைத்தானே தாண்டிக் குதித்து விட முடியாது என்பார்கள். சர்வ சதா எழுத்திலும் அதற்கு இடைவிடாமல் முயல்கிற கலைஞர் ஜெயமோகன்.
அதில் பலமுறை அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
மூன்று
சமீபத்தில் காடு நாவலைப் படிக்க நேர்ந்து அப்போது எழுதினேன்.
“ஆனால் நீலி வரும் இடங்கள் எல்லாம் வெகு கவனமாக சொல்லப்பட்டிருக்கின்றன. அவை அதிகமோ, குறைவோ என்று சந்தேகம் கொள்ள முடியாத அளவிற்கு கச்சிதம். ஒரு திடுக்கிடலுடன் அவளை முதன்முறை பார்க்கும்போதும், கிரி ஆற்றாமையோடு அவளை தேடி காடு முழுக்க முட்டி மோதி தேடும்போதும், அடுத்த சந்திப்பில் நிலவும் போதும், ஒரு பெரிய இடைவெளியில் மனித வாழ்வு அலசப்பட்டு அதற்குப் பிறகு அவள் அவனைப் பார்த்தவாறு இருந்ததை சொல்லும்போதும் நமக்குள் இருந்து ஒருபோதும் போகாத, சிரஞ்சீவியான, நிர்மலமுள்ள காதல் துடித்ததாக வேண்டும். காதலர்கள் குறிஞ்சி காண செல்லும் அந்த சஞ்சாரம் புனைவின் எல்லை. “
சொல்லி வரும்போது இந்த நாவலில் புனைவின் எல்லைக்கு அப்புறமும் நீலி வளர்ந்து கொண்டே போகிறாள். ஒரு எழுத்தாளன் தனது கட்டுப்பாடுகளை ஊடறுத்து செல்லும் நிலை இதிலேயே தனது பயணத்தை முடித்து விட்டது. ஆனால் கூட அடங்கவில்லை. எழுத்தாளர் அவளுக்குக் கொடுக்கிற முடிவு எழுதினவரையும் கடந்தது என்று நான் துணுக்குற்றேன். இத்தனை மலினமான மரணமா அவளுக்கு? நாவல் முடிவுறும் தருவாயில் திரைச்சீலைக்கு அப்பால் வெறும் ஒரு நிழலாக? இதை எழுதினவரின் திட சித்தம் என்று வரையறுத்து விட முடியாது. இங்கே திடசித்தம் இல்லாதவர் தான் யார்? தான் எழுதுவதற்கே வரவில்லை என்று முழுமையாக உள்ளில் அறிந்திருந்தபோதும், எவ்வளவோ பேர் திட சித்தத்துடன் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மொழியை வைத்து சிலம்பம் ஆடுவதற்கு பழக்கம் இருந்திருப்பதால், துண்டுப் பிரசுரங்களுக்கு பத்திகள் கொடுத்திருந்து, அதையே ஒரு தகுதியாக்கிக் கொண்டு எழுத்தாளர்களாக மாறிவிட்டவர்களைப் பார்த்திருப்போமே? அவர்கள் தங்களுடைய எழுத்தை மக்கள் எழுத்து என்று சொல்லிக் கொள்ளுவதில் இல்லாத திட சித்தமில்லை. அந்தத் திட சித்தம் துணிச்சல் இல்லை. கோழைத்தனத்தை ஒழித்துக் கட்டி முன்னேறுகிற பாய்ச்சல் இல்லை. ஜெயமோகனின் மீறல்களை அசல் கலகம் என்று சொல்ல வேண்டும்.
பின் தொடரும் குரலில் அருணாச்சலம் மனம் பிளவுபட்டு செல்லும்தோறும் அந்நாவலின் வரிகளில் பல முறையும் இடி இடிக்கிறது. எவ்வளவு பெரிய வாசகனும் தொடர்ச்சியாக அவனைப் பின்தொடர்வது ஆகாத செயல். அவன் தன்னுடைய பைத்தியத்தில் உச்ச நிலையை அடைகிறான். ஒருவழியாக அவனை ஆட்டுவித்த அத்தனை கொடுமைகளும் சென்று தேய்ந்துறும் போதுதான் அவருடைய நாயகன் எதிரே அமைதியின் சூரியன் எழுந்து, அவனுடைய மனதில், முகத்தில், வாழ்வில் ஒளியைப் பெற முடியும். ஜெமோ விண்ணுக்கு எழுந்து தனது கலையில் வெற்றி பெறும்போதுதான் மண்ணில் இருக்கிற அவன் அல்லல்பட்டு ஆற்றாத கண்ணீரை சிந்தினவரின் ஆத்மாக்களுக்கு நீத்தார் கடன் செய்ய முடிவெடுக்கிறான். இந்நாவலின் துவக்கத்திலேயே படைப்பு பறப்பதை பின் தொடர முடியாமல் நின்று போகிற பலரும், அது இறங்குகிற இடத்தில் நின்று வேடிக்கை பார்த்து எதையும் புரிந்து கொள்ள முடியாத கோபத்தில் இதையெல்லாம் பரிகாசம் செய்து விட்டு சென்று விட்டார்கள். அது மிகவும் எளிமையான காரியம் அல்லவா? ஒரு கலை நிகழ்கிறது என்று வந்தாலே, அதன் உச்சம் நம்மை நகர்த்திப் பார்ப்பதால் வரும் பரவசம் என்று அவர்கள் கேள்விப்பட்டிருந்தாலும், அவர்கள் அந்த நெகிழ்வுகளின் பக்கம் போகாதவர்கள். பரிகாசமும், வசையும், அவதூறுகளும் கூட போதாமல் போகவே, அதை மக்கள் விரோதம் என்று முடித்துக் கொள்லலாம், வேறென்ன? அப்புறம் எந்தக் காலத்திலும் எல்லாவற்றுக்கும் வீசுகிற ஒரு சரக்கு உள்ளது, மூட நம்பிக்கை !
ஏழாவது உலகம் நாவலில் தனியாய் போகிற ஆளைக் கூப்பிட்டு, ஏதேனும் மறைவிற்கு அழைத்து சென்று, சும்மா பேச்சு கொடுத்துக் கொண்டிருந்து விட்டு, வந்தவர் எதிர்பாராத தருணத்தில் வேஷ்டி விலக்கி, தன்னுடைய விரைக் கொட்டைகளைக் காட்டி பிச்சை கேட்கிற பாத்திரம் ஒன்று உண்டு. ஹிந்து பேப்பர் படிக்கிறவன். மற்றும் மலையாளி. கொட்டைகளைக் கண்டு பீதியுற்று அலறியடித்துக் கொண்டு கையில் கிடைத்த பணத்தை கொடுத்து விட்டு ஓடுவார்கள் யாரும். அவனுடைய அந்த உறுப்பு கால்பந்து அளவில் நீர் நிரம்பி இருக்கக் கூடியது. ஜெமோ பெரும் அவலமுள்ள அவனையும், அவனுடைய வாழ்க்கைப் பற்றின கிண்டல்களையும் மேலும் மேலும் எழுதிச் செல்லும்போது பலரால் அந்த மீறல்களைப் பின்தொடர முடியவில்லை என்பது தான் நிஜம், அது மட்டுமல்ல அந்நாவல் மொத்தமுமே அப்படியாகப்பட்ட மீறல்களின் தொகுப்பு என்றே தான் கொள்ள வேண்டும்.
புரட்சி மற்றும் கலகங்களுக்கான கண்டெண்டுகளைத் துழாவிக் கொண்டிருக்கிற மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்கள் எதுவும் நடக்காதது போல இருந்து கொண்டாலும், வெள்ளை யானை நாவலில் பஞ்சம் வர்ணிக்கப்பட்டது, நல்ல வாசகர்கள் யாருக்கு தான் நினைவிருக்காது?
சமீபத்தில் நோய்தொற்றுக் காலத்தில் அவர் எழுதின மொத்த கதைகளையும் படித்தேன்.
குறுநாவல்களைப் படித்தேன்.
ஆரம்பத்தில் பெரும்பகுதி படித்திருந்தாலும், இடையில் நேர்ந்த தடைகளால் படிப்பதன் தொடர்ச்சி விட்டுப் போயிற்று. இருப்பினும் வெண்முரசைத் தொடர்ந்து அவ்வப்போது படித்துக் கொண்டேதானிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து அதை அனுபவம் கொள்வதற்கான பொக்கிஷங்களாக வைத்திருக்கிறேன். எவ்வளவு மனங்கள், அவற்றின் சஞ்சாரங்கள், இடை வழிகள், மற்றும் நடைவழிகள்? ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்மை சுழற்றித் தள்ளுகிற ஒரு சுழலை மிகவும் கான்ஷியசாக வைத்திருக்கிறார்.
எனக்கு அவருடைய ரீங்காரம் இல்லாத இடமில்லை.
கொஞ்சம் பேருக்காவது தெரிந்திருக்கும், இப்போது நானும் எழுத ஆரம்பித்து ஒரு எழுத்தாளராகி இங்கே வந்து சேர்ந்து விட்டேன். ஒரு பொழுதேனும் நான் என்னைக் கடந்து குதித்து விட மாட்டேனா என்கிற துடிப்பில் ஒவ்வொரு வரியும் நகருகிறது. கூடிய விரைவில் அது சித்திக்க வேண்டும்.
***
No comments:
Post a Comment