அ.கா.பெருமாள், ஜெயமோகன், எம். வேதசகாயகுமார், மா.சுப்ரமணியம் |
சுந்தர ராமசாமி ஜெயமோகனிடம் என்னை அறிமுகப்படுத்திய போது கிராமத்துக் கலைகள் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்; கன்னியாகுமரி மாவட்ட வரலாறு பற்றி சிறுநூல் எழுதியிருக்கிறார் என்றார். ஜெயமோகன் என் நூலை சு.ரா விடம் வாங்கியது பற்றி சொன்னார். நான் அப்போது மதுரைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. பட்டத்திற்காக ஆய்வு செய்து கொண்டிருந்தேன். விடுமுறையில் வந்த சமயம் அது.
என் பால்ய நண்பரும் ஒரே வகுப்பில் படித்தவருமான வேதசகாயகுமார், 47 வருஷம் பழக்கம் உடையவரான நாஞ்சில் நாடன் இருவரும் ஜெயமோகனிடம் நெருக்கம். இதனால் ஜெயமோகனிடம் என் உறவு மேலும் நெருக்கமானது. சுந்தர ராமசாமியின் வீட்டின் அருகே குடியிருந்த சமயம் அது. பெரும்பாலும் தினமும் சு.ரா வை சந்திப்பேன். அதனால் அங்கே அடிக்கடி வரும் ஜெயமோகனைச் சந்திக்க வாய்ப்பு நிறையவே கிடைத்தது.
ஜெயமோகன் அருண்மொழியுடன் பத்மநாபபுரத்தில் குடியேறிய போது சதங்கை மாத இதழ் ஆசிரியர் வனமாலிகை, எம். எஸ் ஆகியோருடன் சிலமுறை சென்றேன். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் சொந்த வீடுகட்டி அவர் வந்த பின் தனியாகவோ நண்பர்களுடனோ அடிக்கடி போவேன். அவரது வீட்டிலிருந்து கணியான்குளம் சாலைவழி நடப்பது என்பது வழக்கமாய் இருந்தது.
நாஞ்சில் நாடன் நாகர்கோவில் வந்தால் வேதசகாய குமாரின் காரில் பத்மநாபபுரம், திற்பரப்பு, கன்னியாகுமரி என சிறு பயணம் போவதுண்டு. பகவதி கோவிலைப் பார்க்க தமிழினி வசந்தகுமாருடன் மதுரை சண்முகசுந்தரத்தின் காரில் மொத்த கேரளத்திற்கும் செய்த பயணம் வேறு பயணங்கள் என்னும் சமயங்களில் நான் பெரும்பாலும் வரலாறு, பண்பாட்டு வழக்காறுகள் பற்றித்தான் பேசுவேன்.
ஜெயமோகன் பேசும்போதெல்லாம் யட்சி வருவாள், யானையும் வரும். ஒரு முறை(1996) கன்னியாகுமரி மாவட்ட தொல்லியல் அதிகாரி தே. கோபாலனும் நானும் வீரப்புலிக்காடு – வெள்ளிக்கோணம் குக்கிராமத்திலிருந்து யானைசாஸ்திரம் என்னும் ஓலைச்சுவடியை எடுத்தோம். கோபாலன் அதைப் படித்து பெயர்த்துவிட்டார். நான் அதில் சொன்ன விஷயங்களை ஜெயமோகனிடம் சொன்னபோது, அவர் விளக்கமளித்ததுடன் மேலும் சில விஷயங்களைச் சொன்னார். அவர் சொன்ன சில சிஷயங்கள் ஏட்டில் இருந்தன. ஒரு முறை தமிழினி வசந்தகுமாருடன் பத்மநாபபுரம் கோட்டையின் பின்புறம் வழியாகச் சென்ற போது அங்கு காடாய் வளர்ந்து கிடந்த தருவைப் புல்லைப் பார்த்து இருட்டில் இதைப் பார்த்தால் யானை மாதிரி இருக்கும் என்றார். வசந்தகுமார் பக்கத்தில் நீலியா என்று சொல்லிச் சிரித்தார்.
தமிழ்ப் படைப்பாளிகளில் நாட்டார் வழக்காற்றியல் விஷயத்தில் ஆர்வமுடையவர்களை மிகக் குறைவாகவே சந்தித்திருக்கிறேன். சுந்தர ராமசாமியின் வீட்டிற்கு வந்த எல்லா எழுத்தாளர்களையும் சந்தித்தேன். 1972 முதல் 2005 வரை பலரின் சந்திப்புகள். நா. பார்த்தசாரதி, க.நா.சு., செல்லப்பா, வல்லிக்கண்ணன், ஆ.மாதவன், நகுலன், நீல பத்மநாபன், ந. முத்துசாமி, அசோகமித்திரன் என இந்தப் பட்டியல் நீண்டது. சு.ராவுடன் திருநெல்வேலி, மதுரை, திருச்சி என்னும் இடங்களுக்குச் சென்றபோதும் பலரைச் சந்தித்தேன். இவர்களில் பலரும் தங்கள் பண்பாடு சார்ந்த இளம் அனுபவங்களை மட்டுமே தெரிந்தவர்களாய் இருந்தார்கள். மிக அபூர்வமாக சிலரே வழக்காறு பற்றிப் பேசினார்கள் (எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, பூமணி).
ஜெயமோகன் ஆரம்பத்திலிருந்தே மரபு வழக்காறுகளை, இலக்கியங்களில் தன் சொந்தக் கருத்தை, படிப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். என் நூலுக்கு அவரிடம் அணிந்துரை வாங்கியதும் அதனால்தான்.
மாடன் மோட்சம் கதை கிடைக்குமா என்று ஆங்கில இந்து நாளிதழின் மூத்த நிருபர் என் தம்பி கோலப்பன் கேட்டான். ஏற்கனவே அவன் அதை படித்துவிட்டான். புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதைக்கு இணையானது என்றான். அந்தக் கதையை இந்து ராம் படிக்கக் கேட்டார்; என்னிடம் இல்லை; அனுப்ப முடியுமா என்று கேட்டான். அனுப்பினேன்.
ராம் அந்தக் கதையைப் படித்துவிட்டு இந்து அலுவலகத்தில் கோலப்பன் இருந்த இடத்திற்கே வந்து விட்டாராம். அவன் மேஜையின் முன்னே நின்று அந்தக் கதையைப் பற்றிப் பேசினாராம். அலுவலகத்தில் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்களாம். இது போன்று நாகர்கோவில் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் கவுதமன் மாடன் மோட்சம் கதையைப் படித்துவிட்டு புளகாங்கிதம் அடைந்தார்.
மாடன் மோட்சம் கதை வெளிவந்த (1991) பின்பு 12 ஆண்டுகள் கழித்து தெய்வங்கள் முளைக்கும் நிலம் என்ற என் நூலுக்கு (தமிழினி 2003) அணிந்துரை கேட்டேன். ஜெயமோகன் “நகர்நடுவே நடுக்காடு” என்ற தலைப்பில் ஒரு அணிந்துரையை வசந்தகுமாருக்கு அனுப்பிவிட்டதாகச் சொன்னார். என் நூல் வந்த பிறகு அந்தக் கட்டுரையைப் படித்தேன்.
மாடன்மோட்சம் கதையில் ஜெயமோகன் சொல்லியதைத்தான் ஆய்வாளனுக்குரிய போக்கில் என் நூலில் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தேன். நூல் வந்த சில மாதங்களில் நாகர்கோவிலிலிருந்து வந்த ஒரு மாத இதழ் என்னை மிக இழிவாகச் சித்தரித்து எழுதியது. அதை ஒருவர் தன் வலைத்தளத்தில் எழுதி பாராட்டியிருந்தார்.
நான் நாட்டார் தெய்வத்தின் மாற்றத்தை சமஸ்கிருத வயப்படுத்தல் என்னும் கருத்தாக்கம் வழி விளக்கியிருந்தேன். இது ஸ்ரீநிவாசன் என்பவரின் கருத்தாக்கம். குடகு மக்களை ஆய்வு செய்ய அவர் பயன்படுத்தியது. பெரும்பாலான நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் இதே சொல்லை எடுத்துக் கொண்டனர்.
இதை நான் ஆய்வுக் கட்டுரையாக எழுதியிருந்தேன், ஜெயமோகன் மாடன் மோட்சம் என்னும் கதையாகப் படைத்திருந்தார். இந்த இடத்திலிருந்துதான் படைப்பாளனுக்கும் ஆய்வாளனுக்கும் உள்ள வேறுபாடு ஆரம்பமாகிறது. மாடன் மோட்சம் கதையில் ஸ்ரீநிவாசனின் சமஸ்கிருத வயப்படுத்தலைத் தேட முடியும். இந்தக் கதை வெளிவந்த 11 ஆண்டுகள் கழித்து என் புத்தகத்திற்கு ஜெயமோகன் எழுதிய முகவுரை படைப்பாளியின் தொனியில் உள்ளதல்ல; ஆய்வாளன் தொனியில் உள்ளதுமல்ல; இரண்டுக்கும் இடைப்பட்டது. நாட்டார் தெய்வங்கள் பற்றிய பல விஷயங்களை நுட்பமாகச் கோடிட்டுக் காட்டும் 26 பக்கக் கட்டுரை.
எனக்குத் தெரிந்து தமிழ்ப் படைப்பாளிகளில் நாட்டார் தெய்வம் பற்றி தீவிர ஆழ்ந்த பார்வையுடன் எழுதப்பட்ட கட்டுரை இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் கட்டமைத்த நாட்டார் வழக்காற்றியல் சொல்லை ஜெயமோகன் ஒப்புக் கொள்கிறார். அவரது கட்டுரைகளிலும் பேச்சிலும் இதே சொல்லையே பயன்படுத்துகிறார்.
ஜெயமோகன் வலைதளப் பேச்சிலும் தனிக் கட்டுரைகளிலும் நாட்டார் வழக்காறு பற்றி கூறுவதன் சாராம்சம், நம்முடைய சூழலில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு என்பது ஆழமான சுயகண்டடைதலுக்குரிய பயணம். இது தனிக்கல்வி நெறியாக இயங்கவில்லை. வரலாறு முதலானவற்றைத் தொட்டு விரியும் துறையாக ஆகியுள்ளது. சாதிகளின் பழைய உயர்ந்த அடையாளங்களை வழக்காற்றியலிலிருந்து தேடமுடியும். நாட்டாரியல் தரவுகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருப்பவை.
தாய்த்தெய்வம் தொடர்பான செய்திகள் நம் பண்பாட்டில் எந்த அளவுக்கு காலூன்றி உள்ளன என்பதை நம் வழக்காறுகளிலிருந்து தேடமுடியும். சமண பவுத்தம் அழிந்த பின்னர் அந்தச் சமய மக்களின் வழிபடு தெய்வங்கள் என்ன ஆயின? (இப்படி ஒரு கேள்வியை படைப்பாளிகளில் ஜெயமோகனே முதலில் எழுப்புகிறார்) மயிலை சீனி வேங்கடசாமி இது பற்றி யோசித்தாலும் நாட்டார் வழக்காறுகளிலிருந்து தேட முற்படவில்லை.
நாட்டார் வழக்காற்றுக் கோட்பாடுகளோ கருத்தாக்கங்களோ ஜெயமோகனுக்குக் தெரிந்திருக்க நியாயம் இல்லை. தேவையுமில்லை. வரலாற்று மீட்டுருவாக்கக் கோட்பாடு பற்றியும் அவர் அறிந்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. ஆனால் அவர் பண்பாடு தொடர்பாகப் பேசிய வலைத்தளப் பேச்சுகளில் வழக்காற்றிலிருந்து பண்பாட்டை உருவாக்குவது பற்றி ஆழமாய் சிந்தித்தது தெரிகிறது.
விஷ்ணுவின் உடல் பிரபஞ்ச ரூபனாய் மல்லாந்து கிடக்கிறது. இது விஷ்ணுபுரம் நாவலின் மையம். இவ்வுடலை புத்தரின் தர்மகாய உடலாகவும் காண்கிறார் நாவலாசிரியர். இது பழங்குடி மரபின் தொடர்ச்சி என்றும் நம்புகிறார். தென்மாவட்ட நாட்டார் தெய்வங்களான வண்டி மலையனும், வண்டி மலைச்சியும் மல்லாந்து கிடப்பவை; இவை மிகப் பெரிய உருவங்கள். இந்தத் தெய்வங்களின் சிற்ப அமைப்பு வடிவங்களை விஷ்ணுவுடன் சேர்த்துப் பார்க்கலாமே என்று நான் ஒருமுறை ஜெயமோகனுடன் சொன்னபோது அவரது கருத்தை விரிவாக முன் வைத்தார். அது விரிவாகப் பேச வேண்டிய விஷயம் என்றார்.
தெய்வங்களின் சிற்ப வடிவங்கள் (Iconography) பற்றி ஜெயமோகனுக்கு ஆழ்ந்த புரிதலுண்டு. நாட்டார் மரபில் சிற்பங்களைப் பற்றி எழுதலாமே என்றார் ஒருமுறை. நாட்டார் தெய்வ வடிவம் பற்றி அவர் உரையாடிய விஷயங்களின் அடிப்படையில் ஒரு கட்டுரை எழுதினேன் (குமரி நாட்டுப்புறவியல், காவ்யா 2003).
ஜெயமோகனின் படைப்புகளில் மாடன் மோட்சம் (1991), கடைசி முகம் (2011), படுகை (2011), காடன்விளி (2012), செண்பகயட்சி (2000) ஆகியனவும் 2020ல் எழுதப்பட்ட விலங்கு, பொலிவதும் கலைவதும், வனவாசம், நற்றுணை, தூவக்காளி, கழுமாடன், பீடம் ஆகிய கதைகளையும் காடு நாவலையும் மாதிரிக்கு எடுத்துக் கொண்டேன்.
நாட்டார் வழக்காற்றியல் வகைமைகளில் நாட்டார் தெய்வம் பற்றிய கணிப்பும் அறிவும் அனுபவமும் செல்வாக்கும் பிரக்ஞையும் ஜெயமோகனுக்கு அதிகம். நாட்டார் கலைகள் பற்றி சொல்ல எனக்கு பழக்கமில்லை என்று அவரே ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறார். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களில் பலரும் கதைப் பாடல்கள் பக்கம் அதிகம் திரும்பவில்லை. ஜெயமோகன் காவியங்களே கதைப் பாடல்களாகும்; அவற்றின் தொடர்ச்சி இவை என்கிறார்.
இங்கு எடுத்துக் கொண்ட கதைகளில் நாட்டார் தெய்வம் பற்றிய இவரது ஆளுமை அதிகம். மாடன்மோட்சம், செண்பகயட்சி, படுகை, நற்றுணை, கடைசிமுகம், கழுமாடன், பீடம் என்பவற்றில் ஆட்சி செய்பவை யட்சி அல்லது மாடன் என்னும் தெய்வங்களே.
மாடன் மோட்சம் கதையைப் படித்த வழக்காற்றியல் ஆய்வாளனின் வாயில் முதலில் வரும் சொல் மானிடவியல் ஆய்வாளரான ஸ்ரீநிவாசன் உருவாக்கிய சமஸ்கிருத வயப்படுத்தல் என்பதுதான். இதற்கு விரிவாக விளக்கமும் கொடுப்பார்கள். மாடன் மோட்சம் கதையில் வரும் மாடன் யாரிடமும் நான் சமஸ்கிருதவயப்பட வேண்டும் என்று விண்ணப்பம் கொடுக்கவில்லை.
பூசாரி அப்பியிடம் அவர் கேட்பது கொடை கழிக்க வேண்டும்; பலி வேண்டும் என்று தான். ஆனால் மாடனின் பிரஜைகளில் பலர் இரட்சண்ய சேனைக்கு மாறியதால் பிரச்சனை வந்தது. மீதிப் பிரச்சனை மாடன் வேறு சாதியினரின் கைகளில் அகப்பட்டது. இப்போது மாடன் வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். மஞ்சணை களபம் எல்லாம் அவருக்கு அணிவிக்கப்படுவதில்லை.
சமஸ்கிருத வயப்படுத்தல், பிராமண வயமாக்கல் என்னும் சொல்லாட்சியைப் புறக்கணித்து மேல்நிலையாக்கம் என்று சொல்ல ஆரம்பித்த காலகட்டத்தில் மாடன் மோட்சம் கதை வந்தது. ஒரு முறை பாளையங்கோட்டை கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை இயக்குனர் அருட்பணி பிரான்சிஸ் ஜெயபதி ஒரு கருத்தரங்கில் சிறுதெய்வம் என்னும் சொல்லை ஒதுக்கிவிட்டு நாட்டார் தெய்வமென்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்த தெய்வ வழிபாடு மாற்றத்தை மேல்நிலை ஆக்கம் என்று சொல்ல வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்; ஆனால் பதில் கிடைக்கவில்லை. ஆனால் மாடன் மோட்சம் கதை மட்டும் நிலைபேறாய் மாற்றமடையாமல் இன்றும் புதிதாக வந்த படைப்பு போல் உள்ளது.
ஜெயமோகனின் மாடன், சமூகச் சூழலால் மாற்றம் பெற்றார். கிழக்கிந்திய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் இந்தியப் பண்பாட்டில் முற்பட்ட மாற்றத்திலும் சமஸ்கிருத மயமாக்கத்திலிருந்தும் தமிழ் தப்பித்து விட்டது; ஆனால் வட்டார ரீதியான பன்முகப் பண்பாடுதான் சலித்து ஒற்றைப் பண்பாட்டை நோக்கிச் சென்றது. இதுதான் ஜெயமோகனின் மாடன் மோட்சம்.
மாடன் இப்போது பண்பாட்டு மாற்றம் பெற்றது சூழ்நிலையால் சாதிய மாறுபாட்டால்தான். மாடனுக்கும் பூசாரி அப்பிக்கும் உள்ள உறவும் இருவரின் அந்தஸ்தும் மெல்ல கழன்றுவிடுகின்றன. மாடன் எப்படி புதிய பக்தர்களால் கட்டுப்படுத்தப்பட்டு செயலிழக்கிறார்றோ அதுபோல அப்பியும் ஆகிறார். அப்பியின் உரிமையும் பறிக்கப்படுகிறது.
கழுமாடன், பீடம் என்னும் இரண்டு கதைகளும் அண்மையில் எழுதப்பட்டவை. குற்றவாளியைக் கழுவிலேற்றி தண்டனை கொடுத்தல் என்னும் வழக்கம் தொடர்பானவை இக்கதைகள். கழுவேற்றல் தமிழகத்தில் பரவலான தண்டனை முறை. ஆனால் இது பற்றிய வரலாற்றுப் பதிவுகள் குறைவு.
கழு ஏற்றும் தண்டனை பற்றிய விரிவான செய்திகள் கதைப்பாடல்களில் வருகின்றன (காத்தவராயன் கதை, உடையார் கதை). திருச்சி மாவட்டத்தில் கழுவேற்ற விழாக் கூத்து என்னும் நாட்டார் கலை நிகழ்கிறது; இது சடங்கு வழிபாடு சார்ந்தது. குற்றவாளியை கழுவில் ஏற்றும் நிகழ்ச்சியை நாடகியப்படுத்திக் காட்டப்படுவது. கழுமரம் வெட்டி வருதல் இக்கலையின் ஆரம்பம், கழுவில் இருப்பவனுக்கு மோர் கொடுத்தல் அவன் தெய்வமாதல் இதன் நிகழ்வுகள்.
காணிசாவு கதைப்பாடல் அச்சில் வராதது; இதில் திருவிதாங்கூரில் கழுவேற்றப்பட்ட செய்தி உள்ளது. கழுவுக்காக தயாரிக்கப்படும் மரம் கூட முதலிலேயே பூசனைக்கு உரியதாக இருந்தது என்பது இதன் செய்தி. கழு ஏற்றப்படும் முறை வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபடும். ஆனால் கழுவேற்றப்படுபவன் மட்டும் தெய்வமாக மாறுதல் ஒரு பொதுச் செய்தி.
கழுவேற்ற நிகழ்வை முதலில் விரிவாகப் படைப்பில் கொண்டு வந்தவர் கி.ராஜநாராயணன் (கோபல்ல கிராமம்) அவர் கூறும் வருணனை பாளையப்பட்டுகளில் இருந்ததுதான். ஜெயமோகனின் கழுமாடன், பீடம் என்னும் இரண்டு கதைகளில் வரும் குற்றவாளிகளும் புலையர் சாதியினர்.
இந்தக் குற்றவாளிகளில் ஒருவர் செய்த குற்றம் உயர்குலப் பெண்ணுடன் தொடர்பு கொண்டதாகக் கருதப்பட்டது. இன்னொரு குற்றவாளி தன் இன அடிமைகளை விடுவிக்கப் போராடியது. கழுமாடன் குற்றவாளியை தப்புவிப்பதற்காகச் சொன்ன வழியை அவன் ஏற்க மறுக்கிறான். தன்னை குற்றவாளியாக்கிய குடும்பம் காலங்காலமாக இழிவாய் பேசப்பட வேண்டும்; அதற்காக நான் கழுவிலேறி தெய்வமாகி வழிபாடு பெற வேண்டும் என்கிறான். அவனுடைய லட்சியம் அது. கதையின் உன்னதமே குற்றவாளிப் புலையனின் வைராக்கியம்தான்.
ஜெயமோகனின் படைப்புகளில் முந்தி நிற்கும் நாட்டார் தெய்வம் யட்சி. இவள் நீலி எனவும் படுகிறாள். ஜெயமோகனின் வலைத்தளப் பேச்சு ஒன்றில் அவரது அம்மாவுடன் குலசாமியை வழிபடப் போன செய்தியைக் குறிப்பிடுகிறார். அந்தத் தெய்வம் நீலி; காலங்காலமாக வழிபடப்படுவது; இவள் ஓவியமாக இருக்கிறாள்.
இந்த நீலி பற்றிய கதை 2000 ஆண்டுகள் வாய்மொழியாக வருகிறது. திருஞானசம்பந்தர் திருஆலங்காடு திருப்பதிகத்தில் நீலியைக் குறிப்பிடுகிறார். பிங்கல நிகண்டு, சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டுகளிலும். பெரியபுராணம், சேக்கிழார் புராணம் என்னும் நூற்களிலும் நாட்டார் பாடல்களிலும் விடுகதை பழமொழி கதைப்பாடல் என்னும் வகைமைகளிலும் நீலி வருகிறாள்.
இப்போது இவள் நாட்டார் தெய்வம். காடு நாவலில் குட்டப்பன் கிரிதரனுக்கு சொல்லுவதாக நீலி கதை ஒன்று வருகிறது. இந்த நீலி காஞ்சிர மரத்தில் குடியிருக்கிறாள். கட்டில் செய்ய இந்த மரத்தை வெட்டிய போது அதனுடன் குடிபெயருகிறாள். அதில் படுத்திருந்த திருவிதாங்கூர் அரசருடன் சல்லாபிக்கிறாள். நம்பூதிரி மந்திரவாதி அவளை மறுபடியும் காஞ்சிர மரத்தில் அறைந்து நிலைநிறுத்துகிறான்.
நீலி பற்றி 4000 க்கு மேற்பட்ட வரிகள் கொண்ட கதைப்பாடல் உண்டு. வாய் மொழியாகவும் நிறையக் கதைகள் உள்ளன. நீலி உறைந்த மரத்தில் செய்த கட்டில் வழி நீலி பலரைக் கொன்ற கட்டிலவதாளம் என்றும் அச்சில் வராத கதைப்பாடலின் ஏடு என்னிடம் உள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அச்சில் வந்த திருச்செந்தூர் கொடிமரப் பாட்டு இது போன்றதே.
கிரிதரன் கேட்கும் கதை தென்கேரளத்தில் பரவலாகப் பேசப்பட்ட கதை. மலையன் மகள் நீலி கிரியின் காதலியாக இருந்தாலும் அவள் இறந்தபின் யட்சி நீலியாக மாறி அவனைத் தேடி வருகிறாள். ஜெயமோகனின் படுகை சிறுகதை 1989-இல் வந்தது. ஒருவகையில் வாய்மொழியாகப் பேசப்பட்ட நடந்ததாக நம்பப்படுகின்ற கதையின் மாற்று வடிவம் இது.
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள (1908) பேச்சிப்பாறைக்கென்றே கதைகள் உண்டு. இந்த அணையை வடிவமைத்துக் கட்டியவர் ஹாம்பரி அலக்சாண்டர் மிஞ்சின். இவரது சமாதி அணையின் கரையில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. மிஞ்சின் துரையை வட்டார மக்கள் மூக்கன் துரை என்று பட்டப்பெயரால் அழைத்தனர். இவரது மூக்கு சப்பையாக இருந்தது; அது பேச்சியம்மனால் வந்தது என்று மலைமக்கள் நம்பினர்.
இந்த அணை கட்ட ஆரம்பித்த போது மலையில் வாழ்ந்த காணிக்கார மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அது சூழலியல் தொடர்பானதல்ல; கோதையாற்றின் கரையில் இருந்த பேச்சிக்கு கோபம் வரும் என்பதுதான் காரணம்.
மிஞ்சின் துரை பேச்சிக்கு வழிபாடு செய்ய அனுமதி கொடுத்தார்; பலியும் கொடுத்தார்கள். இப்போதும் அந்த அணைக்கட்டில் பேச்சி வழிபாடு பெறுகிறாள். படுகை சிறுகதையில் கோதையாறு வள்ளியாறாகிவிட்டது. மிஞ்சின் துரை செம்பந்துரையாகி விட்டான்.
சிங்கி செம்பந்துரையைப் பாடுகிறான்; உடுக்கை அடிக்கிறான். இந்திராணியின் அந்தப்புரத்தில் காவலாக இருந்தவன் சாபத்தால் இங்கே வந்துவிட்டான் என்கிறான்.
பேச்சியம்மன் சோயல்லோ
பேய்ஞ்சதுர மலை மேலே
பேச்சியம்மன் முடியல்லோ
பிறதெறிஞ்சான் செம்பந்தொரே
என உடுக்கடித்துப் பாடுகிறான்.
படுகை கதையில் வள்ளியாறு யட்சியாகி விட்டது; யட்சியை அடக்கினால் திமிறத்தான் செய்வாள். ஒருவகையில் எல்லா ஆறுகளும் யட்சிகள்தாம்; யட்சிகள் உறைந்த இடத்தை மாற்றினால் என்ன ஆகும். எல்லா பெண்களுமே யட்சிகள்தாம்; அடக்கி அடக்கி வைத்த பெண்கள் திமிறும் போது யட்சிகள் அவர்கள் மேல் குடியேறி விடுவார்கள். கிரியின் மனைவியிடம் மேலாங்கோடு நீலி ஏறி ஆர்ப்பாட்டம் செய்வது அதனால்தான். படுகையில் ஆறு யட்சியாகி விட்டது.
சுகுமாரன் நாயர் ஜெயமோகனின் அப்பாவின் நண்பர். ஓமனக்குஞ்சம்மாவின் பள்ளியில் படித்த கதை ஜெயமோகனுக்கு சிறுவயதிலேயே தெரிந்திருக்கலாம். இதனால் ஓமனக்குஞ்சம்மா நற்றுணை கதையில் அம்மணித் தங்கச்சி ஆகிவிட்டாள். ஆரம்பகாலத்தில் கல்லூரிக்குப் படிக்கப் போன பெண்களின் நிலை பற்றிய பதிவுகள் பெரிய அளவில் இல்லை. முத்துலட்சுமி ரெட்டி பயிலகம் போன நிகழ்வு பில்கணன் காவியம் போன்றது.
ஜெயமோகனின் நற்றுணைக் கதைகளில் அம்மணியின் படிப்புக்கு உதவியாக யட்சி வருகிறாள். அருமையான கற்பனை. இந்த யட்சியை சரஸ்வதி தேவியாக பெண்ணியல்வாதியாக எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம். திருவிதாங்கூரில் பெண்கள் படிக்கத் தடையாக இருந்தவர்கள் உயர்சாதிக் கனவான்களே. சாமுவேல் மேட்டீர் என்பவர் எழுதிய (1870) The Hand for charity என்ற நூலில் (பக்கம்-210) திருவிதாங்கூரில் 98 விழுக்காடு பெண்கள் படிப்பற்றவர்கள் என்கிறார்.
பெண் கல்வியை பரவலாக்கியவர்கள் லண்டன் மிஷன் கிறித்தவர்களே. மீட், மால்ட் என்பவர்கள் 1819-1823 ஆண்டுகளில் பெண் கல்விக்கு தீவிரம் காட்டினர். 1840-இல் குமரி மாவட்டப் பள்ளிகளில் 361 மாணவிகளே படித்தனர். இந்தச் சூழ்நிலையில் அம்மணி படிக்க யட்சி உதவி செய்கிறாள். இந்த யட்சியை காட்டிலிருந்து ஜெயமோகனே அழைத்து வருகிறார்.
பொதுவாக காட்டு மரங்களுடன் வரும் யட்சி கொடூரமாக இருப்பாள் என்பது பொதுவிதி. அவள் நீண்ட நகங்களும், கோரைப் பற்களும் கொண்டவளாய் இருப்பாள். ஆனால் நற்றுணை யட்சி சிலசமயமே அப்படி இருக்கிறாள். இந்த யட்சி வித்தியாசமானவள். காலங்காலமாக பெண்கல்விக்கு எதிர்வினையாற்றுபவள்.
இந்த யட்சி ஜெயமோகனின் கற்பனை. இதில் நவீன கருத்தாக்கங்களைத் தேடுவதை விட கதைப்பாடல்களின் கற்பனையைத் தேடலாம். மதுரை காட்டுப் பகுதியில் உள்ள காளி கோவிலின் புதையலை எடுக்க குதிரையில் போகும் கிழக்கிந்திய வீரன் குதிரையுடன் விழுந்து இறப்பது (சோமாண்டி கதை) பெண் தெய்வத்தைப் பழித்து கோவிலை உடைக்கப் போன வெள்ளைக்காரனின் கண்கள் குருடாவது (மூன்று முண்டாத்தா கதை) தமிழ்நாட்டுக் காடுகளில் மரம்வெட்டிய வெள்ளைக்காரனின் கப்பலைக் கவிழ்த்தும் செங்கிடாக்காரன் (வெள்ளைக்காரன் கதை) என அடுக்கிக் கொண்டே போகலாம். ஜெயமோகனின் கற்பனையும் இது போன்ற மரபுவழி கற்பனையே.
யட்சி இளைஞர்களை போகிக்க அழைப்பாள்; பசப்பு மொழி பேசி கவர்ந்து விடுவாள் என்பது வாய்மொழி மரபிலும் எழுத்திலும் உள்ள கதை. காட்டு வழிச் செல்லும் ஆனந்தன் செட்டி என்ற இளைஞனை அழகிய பெண்வடிவில் நீலி அழைக்கும் நிகழ்ச்சி இசக்கியம்மன் (நீலியம்மன்) வில்லுப்பாட்டில் விரிவாக வருகிறது. நீலி செட்டியின் நெஞ்சை வகிர்ந்து குடலை எடுக்கும் காட்சியை சாமியாடியின் அருள்காட்ட இன்றும் பாடுகின்றனர். இது போன்று வேறு நிறைய கதைகள் உண்டு.
கடைசி முகம் சிறுகதையில் இதே விஷயம் படைப்பாளிக்கே உரிய புனைவுடன் வெளிப்படுகிறது. விஷ்ணு நம்பூதிரி கடைசியாக ஒருமுறை தன் முகத்தைக் காட்டிவிட்டு அழிந்து போகிறான். சஞ்சலம் இல்லாமல்தான் நம்பூதிரி செல்லுகிறான். ஆனால் அவனது பலவீனத்தை நீலி பயன்படுத்தும் முறையே இக்கதையின் உச்சம். செண்பக யட்சி கதையிலும் ஒரு யட்சி வருகிறாள். இவள் நிறைவேறாத ஆசையால் கொலைப்பட்டு யட்சியானவள். இவளைப் புணரும் இளைஞன் பயந்தே செத்துப் போகிறான்.
நாட்டார் தெய்வங்கள் பூசாரி அல்லது கோவிலின் மரபுவழியான பக்தரின் மேல் இறங்கி தெய்வ அருள் வந்து ஆடுதலை சாமியாட்டம் என்று பொதுவாகச் சொல்லுகின்றனர். இப்படி ஆடுபவரை மருளாயி, சோமரத்தாடி, மருளாடி என வேறு வேறு பெயர்களில் வழங்குகின்றனர். இந்த ஆட்டம் வட்டார ரீதியாக வேறுபடுவது. இதுவும் பன்முகத்தன்மை கொண்டது.
தெய்வம் மனிதர் மேல் இறங்கி ஆடுதல் என்னும் செய்தியை சங்கப்பாடல்களில் கூடக் காணலாம் (வேலன் வெறியாடல்). நாட்டார் தெய்வங்களுக்குச் சாமியாடிகள் ஆடுவது பற்றிய தகவல்களை கள ஆய்வுவழி உற்று நோக்கிச் சேகரித்த ஆய்வாளர்கள் முழுமையான கருத்தைச் சொல்லாமல் கருத்தாக்கங்களைப் பொருத்தி நகர்ந்து சென்று விடுகின்றனர்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு செண்பக நீலி கோவில் ஒன்றில் மராட்டியை தாய்மொழியாகக் கொண்ட கணிகர்சாதி இளம்பெண் ஒருத்தியின் மேல் நீலி ஏறி ஆடியதைக் கண்டேன். அப்போது அவள் மலையாளம் பேசினாள். அவளுக்கு மலையாளம் கொஞ்சமும் தெரியாது என உறவினர்கள் சாதித்தனர். பின் இது பற்றி எனக்குத் தெரிந்த மனநல மருத்துவர் ஒருவரிடம் விவாதித்தபோது அப்படிப் பேசியதற்குரிய காரணங்களை தொழில்நுட்ப ரகசியச் சொற்களைக் கலந்து சொற்பொழிவாக மாற்றினார்.
தெய்வமேறி ஆடுதல் (Trance) என்பதற்கு தர்க்கரீதியாக பதில் சொல்ல முடியாது. சாமியின் வடிவத்தை பொறுத்து அதுவாகும்; கொடுங்களூர் பகவதிக்கு ஆண்களும் ஆடுகின்றனர். அப்போது பெண்வேடமிட்டு அணிகள் அணிந்து ஆடுகின்றனர். விலங்குவடிவ நாட்டார் தெய்வத்திற்காக ஆடுபவர் அந்த விலங்குபோல் சேட்டை செய்து ஆடுதல் இன்றும் நடைமுறையில் உள்ளது (ஆரல்வாய்மொழி கரடிமாடன்).
இந்த மாதிரியான Trance-ஐ இன்னும் விளக்கமுடியவில்லை. ஆராய்ச்சியாளர்கள் ஊகங்களை நிறையவே விட்டெறிந்துள்ளனர். ஜெயமோகனின் காடன்விளி, விலங்கு, தூவக்காளி ஆகிய மூன்று சிறுகதைகளும் இந்த மாதிரியான நம்பிக்கைகள் தொடர்பானவை. தூவக்காளி தெய்வமேற்று ஆடுதல்தான் இது அதுவாதல்.
ஆப்பிரிக்கப் பழங்குடியினர் சிலரிடம் கள ஆய்வு செய்து நாட்டார் வழக்காற்றுப் பண்பாட்டை ஆராய்ந்த ரூத் பெனடிக் (பண்பாட்டுக் கோலங்கள்) அதுவாதல் காரணமாய் தெய்வமேறி ஆடியவன் பாம்பாய் மாறிய ஒரு நிகழ்வை கூறுகிறார்.
பாபநாசம் சொரிமுத்தையனார் கோவில் சங்கிலிபூதத்தான் கோவிலுக்காக ஆடிய ஒருவர் தனிமனிதர் தூக்க முடியாத இருப்புச்சங்கிலியை போட்டுப் பிடிப்பது நடந்த நிகழ்ச்சி. தூவக்காளி அது போன்ற ஒரு Trance தான். ஆனால் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களில் முற்போக்கு சிந்தனை உடையவர்களில் பலர் இதுபற்றி முன்முடிவுடன் கட்டுரையை ஆரம்பிப்பர். படைப்பாளி ஆய்வாளரிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான்.
நாட்டார் நிகழ்த்து கலைகளில் அதிகம் பரிச்சயம் இல்லை என்பதை ஒரு வலைப்பேச்சில் ஜெயமோகன் சொல்லியிருக்கிறார் என்றாலும் நாட்டார் கலைகள் தொடர்பாய் பொலிவதும் கலைவதும், வனவாசம் என்னும் இரண்டு கதைகள் எழுதியிருக்கிறார்.
பொலிவதும் கலைவதும் என்ற கதை களமெழுத்தும் பாட்டு என்னும் கலை தொடர்பானது. இது கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லைக் கிராமங்களில் இப்போதும் நிகழ்கிறது. விழாச் சடங்கு அல்லது நேர்ச்சையாக நிகழ்வது.
காளியின் படத்தை ஐந்து வண்ணங்களில் வரைவது இக்கலையின் தாத்பரியம்; பின்னணி நந்துனி; சடங்குகளுக்கு பஞ்ச வாத்தியங்கள், களப்படம் தூளிச்சிற்பம் எனப்படும்; இதற்கும் பூசை உண்டு. இறுதியில் கமுகம் பூவால் களப்படத்தை அழிப்பர். சூரியக் கதிர்கள் பூமித் தோலில் படும் முன்பு களப்படம் அழிக்கப்பட வேண்டும் என்பது ஐதீகம்.
வனவாசம் என்ற கதை தலைவன் கோட்டை சாமியப்பா என்னும் கலைஞனின் கதை; இவர் அர்ஜுனன் வேடம் தரிப்பவர். மாபெரும் கலைஞன். இவர் ஆடிய கூடத்தின் சரிவு வனவாசம் செல்லும்படியாயிற்று. கலைஞனின் சரிவு நுட்பமாகக் காட்டப்படும் கதை.
***
அருமையான கட்டுரை. நான் பல இலக்கிய விமர்சன கட்டுரைகளை படித்திருக்கிறேன். அவை பெரும்பாலும் எழுத்தாளர்கள் அல்லது வாசகர் எழுதியதாக இருக்கும். ஆனால் இதுபோல துறை வல்லுனர் எழுதும் கட்டுரை நம்மை கொண்டு செல்லும் தூரமும் ஆழமும் அந்த படைப்புகளை இன்னும் ஆழமாக மீள் வாசிப்பு செய்ய உதவும்.
ReplyDeleteநன்றி ஐயா.