கோமரத்தாடி - அனீஷ் கிருஷ்ணன் நாயர்




பள்ளி இறுதித் தேர்வு எழுதி முடித்ததும் அடுத்தது என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. எனது குடும்பம் ஒரு வழியாக வரும் பொருளாதார சிக்கல்களிலிருந்து ஓரளவு மீண்டு எழுந்திருந்தது. மருத்துவக் கல்வி உட்பட எதற்கும் செல்லமுடியும் என்ற அளவிற்கு பொருளாதார பலம் மீண்டிருந்தது. ஆனால் எனக்கு ஒருவிதமான சலிப்புதட்டிபோயிருந்தது. பதினேழு வயதிற்குள் வாழ்க்கையில் நான் சந்தித்த பிரச்சனைகளும் அலைக்கழிப்புகளும் என்னை மரத்துப்போகச் செய்திருந்தன. பொதுவாக அனைவருக்கும் கல்லூரி வாழ்க்கை என்பது கனவுகளுடன்தான் தொடங்கும். ஆனால் எனக்கு அது நடந்த விஷயங்களை அசைபோடும் ஓய்வெடுக்கும் காலமாகத்தான் தோன்றியது. அதனால் எந்த தொழிற்கல்விக்கும் செல்ல நான் விரும்பவில்லை. ஏதாவது கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து முடிந்த அளவிற்கு வாசிப்பு, ஜபம், இத்யாதிகளைச் செய்துகொண்டு எளிமையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன். இளங்கலை வேதியியல், வரலாறு, ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தேன். அதிகம் சிரமப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று தீர்மானித்த பிறகு வேதியியலுடன் எதற்கு மல்லுக்கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனது வீட்டிற்கு அருகே உள்ளே கல்லூரியில் இளங்கலை வரலாறு தமிழ் வழியில்தான் இருந்தது. தமிழில் ஏராளமாக வாசித்திருந்தேன். ஓரளவு எழுதவும் செய்திருந்தேன். ஆனால் தமிழில் வரலாறு தொடர்பான கலைச்சொற்களை எல்லாம் இனிமேல் புரிந்துகொண்டு தேர்வுகளைத் தமிழில் எழுதமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதனால் இளங்கலை ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தேன். பள்ளியில் நான் விரும்பிப் படித்த வெகுசில பாடங்களுள் ஆங்கிலமும் ஒன்று. (பிற பாடங்கள் வரலாறும் வேதியியலும்). எனது பள்ளி ஆசிரியருள் இன்றளவும் நான் மதிப்பவர் எனது ஆங்கில ஆசிரியை ஒருவரை மட்டும்தான். கையில் கிடைத்ததை எல்லாம் நான்கு / ஐந்து வயதிலிருந்து வாசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இலக்கியம் தரும் நுண்ணுணர்வு என்பதற்கு ஓரளவாவது அருகில் வரும் ஒரு அனுபவத்தை நான் அடைந்தது ஆறாம் வகுப்பில் ஆங்கிலத் துணைப்பாட நூலான ‘A Tale of Two Cities வாசித்த பிறகுதான். அந்த நாவலில் கதாநாயகனின் தியாகமும் Martyr என்ற சொல்லும் என்னைப் பாதித்தன. வாழ்க்கையில் முதல் முறையாக இலக்கின்றி, காரணமுமின்றி அந்த நாவல் சுருக்கத்தைக் குறித்து சிந்தித்தாவாறே ஒருமணிநேரம் நடந்தேன். அதனால் ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தெடுப்பதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை.

 

கல்லூரி தொடங்கி ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே நான் எனது முடிவை மறுபரீசிலனை செய்யத் தொடங்கியிருந்தேன். அந்த அளவிற்கு ஏமாற்றம். Spencer-ன் Prothalamion-ஐ வைத்து சாத்தத் தொடங்கியிருந்தார்கள். பேராசிரியர் வின்ஸ்டன் சாமர்வெல் Dr. Faustus-ன் chorus பகுதியையே ஒரு வாரம் எடுத்தார். அதன் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் திறன் எங்களுக்கு இல்லை. பேரா. ஜனார்த்தனனின் மொழியியல் விரிவுரைகள் மட்டும்தான் ஆறுதலாக இருந்தன. எந்த விதத்திலும் எனக்கு உணர்வு ரீதியான இணைப்பையோ அறிவெழுச்சியையோ தராத இந்த வகுப்புகளில் இருந்து என்ன பயன் என்ற எண்ணம் வந்தது. எல்லாம் இப்படி வறட்சியாகத்தான் இருக்கும் என்றால் ஏதாவது தொழிற்கல்விக்குச் சென்றால் என்ன என்ற எண்ணமும் வந்தது. அந்த நேரம் சென்னை செல்லவேண்டிய அவசியமும் ஏற்பட்டதால் நான் ஒரு வாரம் சொல்லாமல் கொள்ளாமல் கல்லூரியிலிருந்து தலைமறைவானேன். ஒரு வார விடுமுறை எந்த தெளிவையும் ஏற்படுத்தவில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு கல்லூரிக்கு சென்றபோதும் மனதிருப்தி இல்லாமல்தான் சென்றேன். எனது பேராசிரியர்கள் யாவரும் நான் உருப்படியான வேறு ஏதோ ஒரு படிப்பில் சேர்ந்திருப்பேன் என்று நம்பியிருந்தார்கள். திரும்பி வந்ததும் என்னவாயிற்று என்று கேட்டார்கள். நான் அரைமனதாக ஏதோ கூறி சமாளித்தேன். அன்று மதியம் ஏகப்பட்ட அதிருப்தியுடன் இந்திய ஆங்கில இலக்கிய விரிவுரை வகுப்பில் அமர்ந்திருந்தேன். அதுவரை நான் பார்த்திராத எட்வின் சிங் ஜெயச்சந்திரா என்னும் பேராசிரியர் விரிவுரையாற்ற வந்தார். நான் விடுப்பில் இருந்த நாட்களில் ஒரு நாடகத்தை நடத்தத் தொடங்கியிருந்திருக்கிறார். பூர்வாங்க அறிமுகங்கள் முடிந்து அந்த நாடகத்தின் ஆரம்பக் காட்சிகளை விளக்கத் தொடங்கினார். கல்லூரிக்கு வந்த பிறகு முதல் முறையாக நான் மெய்மறந்து கேட்ட வகுப்பு அது. நாடகத்தின் பெயரோ அதன் ஆசிரியர் பெயரோ எதுவும் தெரியாது. ஆனால் அதில் வந்த கதாபாத்திரங்களின் குணங்களும் குணக்கேடுகளும் ஈர்த்தன. வகுப்பு முடிந்ததும் அருகில் அமர்ந்திருந்த நண்பனிடம் பாடநூலை கடன் வாங்கிப் புரட்டினேன். மராட்டியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட விஜய் டெண்டுல்கரின் ‘Silence! The Court is in session என்னும் நாடகம் அது. அன்று இரவே அந்த இருப்பில் வாசித்து முடித்தேன். மறுநாள் காலையில் மீண்டும் வாசித்தேன். ஓர் இரவிற்குள் அந்நாடகத்தில் உள்ளடக்கம் மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பான பார்வை மாறியிருந்தது. நீதி x அநீதி, சரி x தவறு இவற்றை எல்லாம் கறுப்பு வெள்ளையாக எப்போதும் சுருக்கிவிட முடியாது என்று புரிந்தது. அலாதியான வாசிப்பின்பமும் கிடைத்தது. பேராசிரியர் அந்த நாடகத்தை எடுக்கத் தொடங்கிய நிமிடத்திலேயே இப்படிப்பட்ட புத்தகங்களை வாசிப்பதுதான் இந்தக் கல்வி எனில் இதிலே இருந்துவிடுவது, இத்துறையிலேயே வாழ்க்கையை அமைத்துவிடுவது என்று தீர்மானித்திருந்தேன். அந்தத் தீர்மானம் மறுநாள் இன்னும் உறுதியானது. பின்னாட்களில், “எனது வாழ்க்கை உருப்படியானத்திற்கு பேராசிரியர் எட்வின் சிங் ஜெயசந்திராதான் காரணம்” என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. ‘Tale of Two Cities’-ஐ வாசித்து முடித்த தருணத்திற்கும் ‘Silence, The Court is in Session நாடகம் தொடர்பான முதல் விரிவுரையைக் கேட்ட தருணத்திற்கும் இணையானது ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கத் தொடங்கிய தருணம்.

 

||

 

ஜெயமோகனின் படைப்புலகில் நான் நுழைந்தது மற்ற பலரைப்போல ‘சங்கச் சித்திரங்கள்’ வழியாக அல்ல. குமுதம் தீராநதி இதழில் அவரது சிறுகதை ஒன்றை வாசித்தேன். உடல் ஊனமுற்ற நபர் ஒரு ரெளடியை அடித்து வீழ்த்துவதை மையமாகக் கொண்ட கதை அது. அதில் வந்த நுட்பமான வர்ணனைகளால் கவரப்பட்டேன். குறிப்பாக அடிமுறை ஆசானின் உபதேங்கள் இவ்வளவு நுட்பமாக கவனித்து எழுதியிருக்கிறாரே என்ற வியப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது தீவிர வாசகனாக மாறியதற்கு காசிரங்கா காட்டு தத்துவ விவாதப் பகடிகள்தான் காரணம். தீராநதி இதழில் ‘உட்கார்ந்து யோசிக்கும்போது’ என்பது போன்ற தலைப்பில் இந்தியத் தத்துவப் பிரதிநிதிகளை பகடி செய்து சில கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகள் இப்போது ‘அபிப்ராய சிந்தாமணி’ தொகுப்பில் வாசிக்கக் கிடைக்கின்றன. அந்த வரிசையில் நான் முதலில் வாசித்தது ‘சைவ சித்தாந்தம்: ஒரு விவாதம்’ என்னும் கட்டுரையை. தச்சநல்லூர் சங்கர நயினார் பிள்ளை படும் பாடுகளை எளிதில் விவரிக்க முடியாது. நக்கலும் நையாண்டியும் நிறைந்த பகடிக் கட்டுரை. வெடித்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். வரிக்கு வரி கிண்டல். வாசித்துச் சிரிக்கும்போதே ஒரு விஷயத்தை உணர்ந்தேன். மேற்படி பகடிக்கட்டுரை / கதை வெறுமே நக்கல் செய்ய எழுதப்பட்டதல்ல, சைவ சித்தாந்தம் என்னும் மதப்பிரிவின் நுட்பங்களும் அச்சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இடையே உள்ள விவாதங்களும் எல்லாம் தெரிந்த நபர் ஒருவரால் எழுதப்பட்ட பகடி அது என்று புரிந்துகொண்டேன். சைவ சித்தாந்தத்தத்தின் அடிப்படைகள் தெரியாதவர்களுக்கு அந்தப் படைப்பை ரசிக்க முடியாது. அத்தனை நுட்பமானது. ‘மாலை முரசு’ மாலை இதழினை விரித்து தூங்கும் தொழிலாளியை சுரா ‘மோசக்கீரனார்’ என்று அழைத்ததை ஜெ வேறொரு கட்டுரையில் எழுதியிருப்பார். சங்க இலக்கியம் தெரியாதவர்களுக்கு சுரா ஏன் அப்படிச் சொன்னார் என்று புரியாது. அது போன்ற விஷயம் இது. மேலும் இனவரைவியலிலும் ஜெக்கு நல்ல பரிச்சயம் இருப்பது புரிந்தது. அம்மாவும் தம்பியும்கூட அக்கட்டுரையை ரசித்து வாசித்தார்கள். அதிலிருந்துதான் ஜெயமோகன் என்னும் பெயர் மனதில் தங்கியது. இந்த அளவிற்கு நுட்பமாக எழுதியிருக்கிறாரே யார் இவர் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

 




பிற்காலங்களில் ஒருவேளை நாம் வேறு சமயப்பிரிவைச் சார்ந்தவர் என்பதால்தான் அப்படி நகைத்து மகிழ்ந்தோமோ? ஒருவேளை சைவர் ஒருவர் இதை வாசித்தார் எனில் அவர் இதனால் புண்பட்டிருப்பாரோ என்ற எண்ணம் எழுந்தது. சித்தாந்த சைவப் பிரிவைச் சார்ந்த, ஆனால் இலக்கிய வாசிப்புப் பழக்கம் இல்லாத இரண்டு நண்பர்களுக்கு அந்தக் கட்டுரையை அனுப்பி வைத்தேன். இருவரும் தொலைப்பேசியில் அழைத்து, “யாருய்யா இது? புட்டு புட்டு வச்சிருக்கான். சிரிப்பு தாங்கல” என்றே சொன்னார்கள். உண்மையில் நம் ஊரில் கிடைக்கும் தத்துவப் பாடப்புத்தகங்களில் உள்ளதைவிட அதிகம் தகவல் அந்தப் பகடிப் படைப்புகளில் இருந்தது.

 

அதன் பிறகு ‘விஷ்ணுபுரம்’ கையில் கிடைத்தது. AVS என்றொரு தனியார் நூலகத்தில் கோட்டயம் புஷ்பநாத் நாவல்களிடையே இருந்து எடுத்தேன். ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காகப் படித்துக்கொண்டிருந்த நாட்கள் என்று எண்ணுகிறேன். ஒரே இருப்பில் ஒன்றரை நாட்களில் அந்த நாவலை வாசித்து முடித்தேன். இன்றளவும் ‘விஷ்ணுபுரம்’ ஏன் பலருக்கும் வாலி ஏறா மலையாக இருக்கிறது என்று புரியவில்லை. எனக்கு அதனை வாசிப்பதில் எந்தத் தடையும் இருக்கவில்லை. ஒருவேளை எனக்குப் பழக்கமான தளம் என்பதாலாகக்கூட இருக்கலாம். வாசித்து முடித்ததும் நூலாசிரியரைச் சந்தித்துப் பல விஷயங்கள் பேசவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஏற்றுக்கொள்ளவும் முரண்படவும் விவாதிக்கவும் ஆயிரம் விஷயங்கள் அதில் இருந்தன. ஜெயமோகன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவரை நேரில் சென்று சந்திப்பதில் எனக்குப் பல மனத்தடைகள் இருந்தன. இத்தனைக்கும் குறுக்கு வழியில் நடந்தால் என் வீட்டிற்கும் அவர் வீட்டிற்கும் இடையே அரை மைல் தொலைவுகூட இருக்காது. மனத்தடைக்கு முக்கியக் காரணம் சிற்றிதழ் இலக்கியச் சூழல் குறித்து எனக்கு இருந்த பிம்பம். குடிகாரர்களாக, கலகக்காறார்களாக ஒரு வார்த்தைக்கு மறுவார்த்தை அடிக்கப் பாய்கிறவர்களாக இருக்கும் ஒரு குழுவினர்தான் இலக்கியத்தையும் பேணிக் காக்கிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. மேற்படி குணாதிசயங்கள் உள்ள நபர்களுடன் நித்ய ஜீவனம் நடத்திய எனக்கு அத்தகையவர்களைத் தேடிச்சென்று பார்க்கும் எண்ணம் வரவில்லை. ஆனால் ஜெயமோகனது படைப்புகளைத் தொடர்ந்து தேடிப்பிடித்து வாசிக்க ஆரம்பித்தேன். ரப்பர், ஏழாம் உலகம் என அந்த வாசிப்பு தொடர்ந்தது. ஒரு புத்தகக் கண்காட்சியில் அவரது சிறுகதைத் தொகுப்புகளும் கிடைத்தன. இவை எல்லாம் நடந்துகொண்டிருந்த காலத்திலும் நான் அவரது இணையதளத்தைக் குறித்து அறிந்திருக்கவில்லை. 2008-லோ 2009-ன் ஆரம்பித்திலோதான் அவரது இணையதளத்தை வாசிக்கத் தொடங்கினேன். இணையதளம் ஜெயமோகனின் ஏனைய பரிமாணங்களையும் புரியவைத்தது.

 

III

 

ஓரளவிற்கு அவரது படைப்புகளை எல்லாம் வாசித்து பிறகுதான் அவரைச் சந்தித்தேன். ஆனால் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் ஏறத்தாழ ஒவ்வொரு வாரமும் ஜெயைக் குறித்த பேச்சோ அவரது படைப்புகளைக் குறித்த விவாதங்களோ நடக்கும். எனது நண்பர்கள் லக்ஷ்மி நாராயணனும் (வெங்கடேஷ்) பிரதீப்பும் சிறந்த வாசகர்கள். எங்களிடையே புத்தகப் பரிமாற்றம் உண்டு. புத்தகங்களைக் குறித்து விவாதிப்பதும் உண்டு. இதில் பிரதீப்பிற்கு பல வருடங்களாக ஜெயமோகனை நன்றாகத் தெரியும். ஆனால் வாசகர் என்ற முறையில் அல்ல. பிரதீப் வன்பொருள் விற்பனை மற்றும் பழுது நீக்குதல் செய்யும் நிறுவனத்தை நடத்திவந்தார். ஜெயமோகன் அவரது நெடுநாள் வாடிக்கையாளர். வாரம் ஒருமுறையாவது ஜெயின் கணினிக்கு சிகிச்சை செய்ய ஜெ வீட்டிற்கு அவர் செல்வதுண்டு. அவர் வாயிலாக ஜெயின் தினசரி வாழ்க்கை, வாடிக்கை, செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். ஆனாலும் நேரடியாகச் சந்திக்க ஒரு தயக்கம் இருந்தது.

 

நேரடியான சந்திப்பு என்பது 2012/13 இல் நடந்தது. ஓர் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவிற்காக எழுத்தாளர் ஒருவரை அழைக்க வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் பொறுப்பில் இருந்த மாணவர்கள் விரும்பினார்கள். புத்தகங்களை வாசிப்பவன் என்ற அடிப்படையில் என்னிடம் தலைசிறந்த எழுத்தாளர் ஒருவரை அடையாளம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்கள் இலக்கியவாதிகளை கல்வி நிறுவனங்களுக்குக் கொண்டுவருவது என்பது யானையைப் பூங்காவிற்குள் நடைபயிற்சிக்குக் கொண்டுவருவதைப் போன்றது. நேரங்களில் மக்கள் இம்சை செய்வார்கள். நேரங்களில் யானை கடுப்பாகி நாலு பேரைத் தூக்கிப்போட்டு மிதிக்கும். அபூர்வமாக யானைக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படும். எதற்கும் தயாராக இருக்கவேண்டும். சரி, நடப்பது நடக்கட்டும் என்று எண்ணி ஜெயமோகனது வீட்டு விலாசத்தைக் கொடுத்தேன். அதனை வாங்கிச்சென்ற மாணவர்கள் 30 நிமிடங்களுக்குள் திரும்பி வந்துவிட்டார்கள். டோரா விரட்டிவிட்டிருக்கும் என்றுதான் எண்ணினேன். ஆனால் மாணவர்கள் வெற்றிப் பெருமிதத்துடன் திரும்பி இருந்தார்கள். ஜெயைச் சந்தித்துவிட்டதாகவும் எந்தவிதமான பிகுவும் செய்யாமல் தமிழ் மன்றத் தொடக்க விழாவிற்கு வரச் சம்மதித்துவிட்டார் என்றும் சொன்னார்கள். மொய் வைத்து அழைத்தாலே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வர சுணக்கம் காட்டும் சில பேராசிரியப் பெருந்தகைகளையே பார்த்துச் சலித்துப்போயிருந்த எனக்கு ஜெயின் அணுகுமுறை மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. அவர் மீதான மதிப்பு இன்னமும் அதிகரித்தது. அந்த விழா மேடையில் வைத்துதான் ஜெயை முதலில் சந்தித்தேன். புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். நாமம் அணிந்த நாயர் என்னும் அபூர்வ ஜீவியாக என்னை அவர் அன்று கண்டிருக்க கூடும். அந்த நிகழ்ச்சி நடந்த அன்று மாலையில் முதன்முதலாக தமிழில் தட்டச்சு செய்தேன். கூகுள் விசைப்பலகையைப் பயன்படுத்தினேன். ஜெக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனடியாக பதில் வந்தது. அன்றுமுதல் அடிக்கடி அவருக்கு மின்னஞ்சல் அனுப்பத் தொடங்கினேன். சாலையில் வைத்துச் சந்தித்தால் அவரது நடைபயிற்சியைப் பாதிக்காத அளவிற்கு ஓரிரு நிமிடங்கள் பேசவும் தொடங்கினேன்.

 


இக்காலக்கட்டத்தில் நடந்த மற்றொரு முக்கியமான விஷயம் அவர் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல்’ புத்தகத்தை வாசித்தது. ஜெயின் இணையதளம் வாயிலாகவே சக்தி நூலகமும் கவிஞர் பாலா கருப்புசாமியும் அறிமுகமானார்கள். அது ‘பின்தொடரும் நிழலின் குரல்’ அச்சில் இல்லாத காலம். எனக்கோ அதனை வாசித்தே ஆகவேண்டும் என்ற அபார ஆவல். சக்தி நூலத்திலும் அந்த நூலின் பிரதி இல்லை. ஆனால் எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட பாலா அவர் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்த அவரது தனிப்பட்ட சேகரிப்பில் உள்ள பிரதியைத் தந்தார்.

 

எங்கள் பராபர குருவின் ஆராதனைக்கு கும்பகோணம் செல்லும் வழியில் நெல்லையில் இறங்கி பாலாவிடமிருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு சென்றேன். நாகர்கோவிலிலிருந்து நெல்லை, நெல்லையிலிருந்து மதுரை என்று கையில் கிட்டிய பேருந்துகளில் பயணித்து கும்பகோணம் செல்வதுதான் அந்நாட்களில் என்னுடைய வழக்கம். நெல்லை - மதுரை பேருந்தில் ஏறியதும் லேசாகப் புரட்டிப் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். பேருந்துகளிலும் பேருந்து நிலையங்களிலுமாக மறுநாள் கும்பகோணத்தைச் சென்றடைவதற்குள் நாவலை வாசித்து முடித்தேன். மனதிற்குள் ஏராளமான கேள்விகளை, உணர்வுக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்திய படைப்பு அது. இன்றளவும் ஜெயின் ஆகச்சிறந்த நாவலாக நான் கருதுவது ‘பின்தொடரும் நிழலின் குர’லைத்தான். உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் சொல்பொருளிலும் நிகரற்ற படைப்பு என இதனைக் கருதுகிறேன். என்றாவது ஒருநாள் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ தந்த வரசிப்பு அனுபவத்தைக் குறித்து விரியாக எழுதுவேன் என்று நம்புகிறேன். அறமும் அரசியலும் விழுமியங்களும் மோதி முரணியங்கி மானுடம் எழும் களமாக அந்நூலைக் காண்கிறேன். ‘பின்தொடரும் நிழலின் குர’லை வாசித்த பிறகு ஜெ காலாதீதமான படைப்பாளி என்ற எண்ணம் உறுதியானது.

 

IV

 

இத்தனையும் ஆனபிறகும் ஜெயை அடிக்கடி சந்திக்கத் தொடங்கவில்லை. அவரது நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதிலும் மிகக்கவனமாக இருந்தேன். ஜெயுடன் சகஜமாகப் பேசுவதற்கு ஒரு சிறிய தயக்கம் இன்றளவும் இருக்கிறது.

 

அக்காலக்கட்டத்தில் சக்தி நூலகம் பாலா வாயிலாக எனக்கு அறிமுகமான மற்றொரு படைப்பாளி போகன். அவர் குடியிருந்ததும் பார்வதிபுரத்தில்தான். எனது நண்பரான வைத்தியர் ஒருவரால் போகனது உடல்நலச் சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் முகநூல் உள் டப்பியில் பேசி நேரில் சந்தித்தேன். எனக்குக் கவிதை எழுதுவது, கதை எழுதுவது போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை என்று உறுதிபடுத்தியதும் நண்பரானார் (“நீங்க வேணா கதை, கவிதை எல்லாம் எழுதிக்கிடுங்க நாயர். ஆனா ஏன் கண்ணில் படாம பாத்திகிடுங்க” என்று சில நாட்களுக்குப் பிறகு சிறப்புச் சலுகை அளித்தார்).

 

போகனுடன் உலாவத் தொடங்கிய பிறகுதான் ஜெயமோகனுடன் அதிகமாக உரையாடத் தொடங்கினேன். ஜெயமோகனும் போகனும் உரையாடுவதைக் கேட்டதே ஒரு அறிவுச் செயல்பாடுதான். போகன் உடனிருக்கும்போது ஜெயுடன் இன்னமும் சுதந்திரமாகப் பேச முடிந்தது என்று உணர்ந்தேன். எனக்கும் போகனுக்கும் இலக்கியம் தாண்டி சில விஷயங்களில் பொதுவான ஆர்வம் இருந்தது. அதனால் போகனுடன் இயல்பாகப் பழக முடிந்தது. போகனுக்கும் ஜெயமோகனுக்கும் இடையில் படைப்பாளிகள் என்ற அடிப்படையில் பரஸ்பர மரியாதை இருந்தது. அதனால் போகனுடன் ஜெயைச் சந்திப்பது என்பது எளிதாக இருந்தது. (“நான் என்ன கும்கி யானையா?” என்று போகன் கேட்பார்) இக்காலக்கட்டங்களை ஒரு பொற்காலம் என்று கூறலாம். ஏறத்தாழ ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒருநாள் மாலை நடையின்போது சாலையில் வைத்து சந்திப்பதுண்டு. நலம் விசாரித்துவிட்டு ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து பேசத் தொடங்குவோம். பேச்சு குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஓடும். இந்த நடுத்தெரு விவாதங்களின்போது அடிபடும் புத்தகங்களின் பெயர்களைக் குறித்துக்கொள்வேன். அடுத்த வாரத்திற்குள் அவற்றில் வாசிக்க முடிந்தவற்றை வாசித்துவிடுவேன். அந்தக் காலக்கட்டத்தில் போகனுக்கும் ஜெயமோகனுக்கும் இடையே கடுமையான முரண்கள் இருந்தன. இருந்தாலும் விவாதங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாகதான் நடந்தன.

 

IV

 

2010 முதலே உயர்கல்வி நிறுவங்களில் நடைபெறும் ஊழல் குழுச்செயல்பாடுகள் ஆகியவற்றிக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தேன். பல நேரங்களில் இப்போராட்டங்களால் புதிய பகைவர்களை உருவாக்குவது தவிர எந்தப் பலனும் இருந்ததில்லை. கல்விப்புலத்தில் (Academic) இருந்து உருப்படியாக எதுவும் செய்ய முடியாதோ என்ற எண்ணம் ஏற்படும். ஒருநாள் இது தொடர்பான பேச்சு வந்தபோது ஜெ அ. கா. பெருமாளின் சாதனைகளைச் சுட்டிக்காட்டினார். “அ. கா. பெருமாள் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனம் எதிலும் பணிபுரிந்தவர் அல்ல. கல்வி நிறுவனங்களிலிருந்து எந்தப் பெரிய அங்கீகாரமும் அவருக்குக் கிடைக்கவில்லை. பேராசிரியராகவோ, துறைத் தலைவராகவோ, முதல்வராகவோ அ. கா. பெருமாள் பொறுப்பு வகிக்கவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான புத்தங்களையும் ஆயிரகணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவரது பல ஆய்வுக் கட்டுரைகளும் புத்தகங்களும் முன்னோடிப் படைப்புகள். வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான ஆணித்தரமான தரவுகளைத் தருபவை. அவரது பெயரைக் குறிப்பிடாமல் தமிழக வரலாறு, நாட்டார் இயல் போன்றவற்றில் யாரும் எதுவும் எழுத முடியாது.” இதனை எல்லாம் ஜெ உணர்வெழுச்சியுடன் சொன்னார். இறுதியாக, “கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் அரசியல் செய்து பணி உயர்வையும் பதவியையும் கைப்பற்றிக்கொண்டவர்கள் எல்லாம் ஓய்வு பெற்ற பிறகு சீந்துவார் இன்றி நடைப்பிணங்களாக இருக்கிறார்கள். ஆனால் அ. கா. பெருமாள் ஓய்வு பெற்று பத்து வருடங்கள் ஆன பிறகும் அவரைத் தேட உலகெங்கிலிருந்தும் ஆய்வாளர்களும் ஆய்வு மாணவர்களும் வருகிறார்கள். நிருவனங்களைத்தாண்டிய அறிவு செயல்பாடு இருக்கிறது. காலவெளியில் அது மட்டும்தான் எஞ்சி நிற்கும். மற்றவை மட்கிப் போகும்” என்றார். இந்த வார்த்தைகள் இன்றளவும் எனக்கு மிகுந்த ஊக்கத்தைத் தருபவை. அதன் பிறகும் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடினாலும் உயர்கல்வி நிறுவனச் சூழல் எனது கல்விச்செயல்பாடுகளைப் பாதிக்காதவாறு கவனமாக இருந்தேன்.

 

ஜெயுடனான விவாதங்கள் வழியாக அழகியல் திறனாய்வு, செவ்வியல் தன்மைத் திறனாய்வு போன்றவற்றின்பால் திருப்பப்பட்டேன். நவீன இலக்கியக் கோட்பாடுகளில்தான் வல்லவனாக இருந்தேன். எனது கல்விப்புல ஆய்வுகளும் அவற்றை மையமாகக் கொண்டவையே. முதுகலை மாணவர்களுக்கு நான் கற்பித்ததும் கோட்பாடுகள் சார்ந்த திறனாய்வுகளைத்தான். கோட்பாடு சார்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதில் ஒரு வசதி உண்டு. கோட்பாட்டில் ஒருவருக்கு நல்ல பாண்டித்தியம் இருந்தால் எந்தப் படைப்பை வாசித்தாலும் அதில் கோட்பாட்டைப் பிரயோகப்படுத்தி ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதிவிடலாம். ஜெ இதற்கு நேர் மாறான திறனாய்வு முறையில் ஆர்வம் கொண்டவர். ஒரு படைப்பாளியின் படைப்புகள் அனைத்தையும் வாசித்து அவர் எந்த மரபின் நீட்சியாக வந்திருக்கிறார். அதே நேரம் அந்த மரபிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார் என்று நிறுவும் திறனாய்வு முறையை ஜெ முன்னெடுத்தார். இது Harold Bloom போன்றவர்களது பாணி. இந்த வகையிலான திறனாய்வுக் கட்டுரைகளை வாசிக்க வாசிக்க எல்லாவற்றையும் கோட்பாடுகளைக்கொண்டு சுருக்குவது அராஜகமானது என்று புரிந்துகொண்டேன். அழகியல் விமர்சனம் கடும் உழைப்பையும் ரசனையையும் கோரும் செயல்பாடு. ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்திருந்தால்தான் ஒரு படைப்பாளியின் இடம் என்று வாதிட முடியும். ஒரு சிறுகதைத் தொகுப்பை திறனாய்வு செய்கிறோம் என்றால் அது எந்த மரபின் நீட்சி / நீட்சி அல்ல என்று வகைப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு மரபு தெரியவேண்டும். மரபு தெரியவேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஆயிரம் சிறுகதைகளையாவது வாசித்திருக்க வேண்டும். குறுக்கு வழிகள் ஏதும் இல்லை. இதற்குச் சோம்பியே பலரும் கோட்பாடுகளின் உலகிற்குள் சரணடைகிறார்கள் என்று புரிந்தது. இன்றும் திறனாய்வு செய்ய கோட்பாடுகளை பயன்படுத்தத்தான் செய்கிறேன். ஆனால் அவற்றின் போதாமைகளை உணர்ந்துகொண்டு பயன்படுத்துகிறேன். இலக்கியக் கோட்பாடுகளின் மாய உலகிலிருந்து அழகியல் மற்றும் செவ்வியல் மரபு சார்ந்த திறனாய்வு நோக்கி வந்தேன். ஜெக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுவது வாயிலாக எழுத்துச் சோம்பலிலிருந்து வெளியே வந்தேன்.

 

V

 


ஜெயுடன் முரண்பட்டதே இல்லையா? என்று கேட்டால் ஏராளமான நேரங்களில் எக்கச்சக்கமான விஷயங்களில் முரண்பட்டிருக்கிறேன் என்பதே பதில். அவர் அத்வைதி. நான் த்வைதி. இதில் தொடங்கி நூற்றுக்கணக்கான விஷயங்களில் அவருக்கு நேர் எதிரான தரப்பைச் சார்ந்தவனாக இருக்கிறேன். ‘விஷ்ணுபுரம்’ நாவலிலும், ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலிலும் அவரது படைப்புகள் பலவற்றிலும் எனக்குச் சற்றும் பிடிக்காத, நான் கடுமையாக எதிர்க்கும் விஷயங்கள் உள்ளன. இவ்வளவு ஏன், ‘அறம்’ சிறுகதையில் வரும் அந்த வசைச்சொல் என்னை ஆத்திரமடையச் செய்தது. அது கதாபாத்திரத்தின் குரல், அத்தகைய கையறு நிலையில் ஏமாளியாக நிற்கும் எழுத்தாளன் அப்படிப் பேச வாய்ப்பு உண்டு என்றெல்லாம் எனது போதமனது சொன்னாலும் அதையும் தாண்டி அந்த வசை என்னை அமைதியிழக்கச் செய்கிறது.

 

இத்தகைய ஒவ்வாமைகளைத் தாண்டி அவரது வாசகராக எப்படி நீடிக்க முடிகிறது? 100% நாம் நினைப்பதை, நம்புவதைத்தான் ஒரு படைப்பாளி எழுதவேண்டும் என்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று எனக்குத் தெரியும். ஓர் இலக்கியப் பிரதி என்பது வாசகனுக்காகத் ‘தயாரிக்கப்படும்’ நுகர்வுப் பொருள் அல்ல என்று நம்புகிறேன். அவ்வாறு சொல்லித் தைக்கப்படும் சட்டையைப் போன்ற பிரதிகள் பரப்புரை கோஷமாகவே எஞ்சும். படைப்பு என்பது எழுத்தாளனின் அந்தரங்கச் செயல்பாடு. தேக்கி வைத்த விஷத்தை நாகமணியாக மாற்றி அரவம் துப்பும்போது அதனைப் பிறரும் காண்கிறார்கள். பிறருக்கும் அது வெளிச்சம் தருகிறது. அரவத்திற்கு ஆசுவாசம் உபரி பலன். பிறருக்கு வெளிச்சம் உபரி பலன். அதுபோலத்தான் ஓர் இலக்கியப் படைப்பும். வந்ததை வந்தது போலத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் எனக்கு உண்டு.

 

தவிரவும் படைப்பாளியின் உயிர்நாடியே படைப்புச் சுதந்திரம்தான். இப்படி எழுது, இப்படி எழுதாதே என்றால் வலுவற்ற படைப்பாளி எழுதுவதை நிறுத்துவான். வலுவான படைப்பாளி அதனால் சீண்டப்பட்டு எதை செய்யக்கூடாது என்று சொன்னோமோ அதனை அதிகமாகச் செய்யத் தொடங்குவான். இது பாலபாடம்.

 

ஜெ ‘வெண்முரசு’ எழுதத் தொடங்கியபோது எனக்கு இரண்டு விதமான கவலைகள் ஏற்பட்டன. முதல் விஷயம் ஜெ எழுதும் ‘வெண்முரசு’ வேறு மஹாபாரதம் வேறு என்று புரிந்துகொள்ள முடியாமல் பலருக்கு ஏற்படும் குழப்பங்களைக் குறித்தது.

 

அந்தப் பிரதியை எழுதுவது வாயிலாக அவர் செய்யப்போகும் செயல் தெய்வ நிந்தனையை ஒத்தது. தெய்வங்களை தெய்வங்களாகச் சித்திரிக்க வேண்டும் என்றால் புராணங்கள்தான் எழுதவேண்டும். தெய்வங்களை மானிடர் நிலைக்கு இறக்கினால்தான் இலக்கியம், காவியம் எல்லாம் படைக்க முடியும். வால்மீகி காலத்திலிருந்தே இதுதான் வழமை.

 

இரண்டாவது கவலை ஜெயின் படைப்பாளுமை தொடர்பானது. இவ்வாறான ப்ரும்மாண்ட முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பலரும் அதனை முடித்தது இல்லை. ஒருவேளை முடித்திருந்தாலும் அத்துடன் அவர்களது பேனா முனையின் கூர் மழுங்கிப்போயிருக்கும். ஆனால் கொஞ்சமாவது படைப்பாற்றல் உள்ள நபரால் மஹாபாரதத்தை வாசித்த பிறகு சும்மா இருக்கமுடியாது. நல்ல பாட்டைக் கேட்டால் முணுமுணுக்கத் தோன்றாமல் இருக்குமா? அதனால் ஜெயின் எண்ணம் புரிந்தது.

 

முதல் விஷயம் நினைத்தது போலத்தான் நடந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு விஷயமும் நடந்தது. ஜெ ‘வெண்முரசு’ எழுதத் தொடங்கியதும் மஹாபாரதம் மீது பலருக்கும் ஆர்வம் வந்து வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்புகளைத் தேடத் தொடங்கினர். பழைய கும்பகோணம் பதிப்பின் மென் பிரதி உலவத் தொடங்கியது. பிறகு அது புதிதாக அச்சிடப்பட்டது. அருட்செல்வப் பேரரசனின் மொழிபெயர்ப்பும் பலரைச் சென்றடைந்தது. இந்த அலையை பயன்படுத்தி மூல நூலை அனைவரிடமும் எடுத்துச் செல்வது ஆத்திகர் வேலை.

 

மற்றொரு பதற்றம் அர்த்தமற்றதானது. ‘வெண்முர’சை முழுமையாக எழுதி முடித்ததும் அல்லாமல் தனது எழுத்தாற்றலுக்கு எந்தப் பாதிப்பும் வரவில்லை என்று அதற்குப் பிறகு நூற்றுக்கணக்காக படைப்புகளை எழுதி ஜெ நிறுவிவிட்டார். ஜெ எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அப்படைப்பை முழுமையாக மறுதலிக்கும், அதன் அபாயங்களை உரத்துச் சொல்லும் நான் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். எனது மத நம்பிக்கையின் அடிப்படையில் ‘வெண்முர’சை நான் முழுதாக நிராகரிக்கிறேன் என்பதும் அதற்கு எதிராக பரப்புரை செய்கிறேன் என்பதும் ஜெக்கு நன்றாகவே தெரியும். இக்காலகட்டத்தில் அவர் சிறிது பாராமுகமாக இருந்திருந்தால்கூட நான் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்திருப்பேன். ஆனால் ஜெ அதனைச் செய்யவில்லை. ‘வெண்முர’சைத் தவிர்த்து பிற விஷயங்களைக் குறித்து என்னுடன் தொடர்ந்து உரையாடினார்.

 

மேலும் மதத்தை மார்க்சியச் சட்டகத்தில் வைத்துப் பார்ப்பவர் ஜெ. ஆனால் மதத்தை மத நூல்கள், சடங்குகள் மற்றும் ஆப்த வாக்கியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புரிந்துகொள்பவன் நான். அவரது பல கட்டுரைகளுக்கு பேச்சிலும் எழுத்திலும் எதிர்வினையாற்றியிருக்கிறேன். சிறிதும் தயக்கம் இல்லாமல் அவற்றை ஜெ ஆவணப்படுத்தியுள்ளார். Alexi Sanderson என்னும் ஆய்வாளர் சண்டிகேச்வரர் வழிபாடு என்பது முன்னர் தனி மதமாக இருந்து பிறகு சைவத்துடன் இணைந்தது என்ற வாதத்தை ஒரு கட்டுரையில் வைத்திருப்பார். அந்த வாதத்தின் அடிப்படையில் ஜெ ஒரு பதிவு / பதில் எழுதியிருந்தார். அதனை மறுத்து தரவுகளுடன் நான் எழுதிய கடிதத்தை அவரே தட்டச்சு செய்து தனது இணையதளத்தில் வெளியிட்டார். இன்றளவும் Sanderson கருத்தை இந்த விஷயத்தில் மறுக்கும் ஒரே கட்டுரை ஜெ வெளியிட்ட அந்தக் கடிதம்தான். எதிர் தரப்புகளை சார்ந்தவர்கள்கூட பகையின்றி உரையாடலாம் என ஜெ நிரூபித்தார்.

 

சமூக ஊடகங்களுக்குள் நுழைந்த உடனே ஜெ மீது கடும் கசப்பு இருக்கும் நபர்கள் பலர் இருப்பதைக் கண்டேன். அவர்களில் பலர் ஒரு காலத்தில் அவரை குருவே, தந்தையே என்றேல்லாம் அழைத்தவர்கள். கூத்தாடிக் கூத்தாடி இட்டு உடைப்பது என்பதுதானே நம்மவர்கள் வழக்கம். அதற்கு ஜெ மட்டும் விதிவிலக்காக முடியுமா. “ஜெயன் என்பவர் எழுதிய ‘வெற்றித்திருநகர்’ என்னும் தொடரின் தாக்கத்தால்தான் எனது வாழ்க்கையை இந்த அரசியல் இயக்கத்திற்கு அர்ப்பணித்தேன்” என்று சொல்லியவர்கள்தான் ஜெ கசப்பான சில உண்மைகளைச் சொன்னதும் அவரைத் துரோகி என்று முத்திரை குத்தி தங்களது இயக்க விசுவாசத்தை நிரூபித்துக்கொண்டனர் அதிகம் ஏசுபவர்கள் ஒரு காலத்தில் அவரைப் போற்றிப் புகழ்ந்தவர்கள்தான்.

 

இது, ஜெ என்றில்லை, அனைத்து காத்திரமான படைப்பாளிகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைதான். ஒரு நல்ல படைப்பாளி என்பவன் சன்னதம் கொண்டாடும் மருளாடியை ஒத்தவன்.

 

சன்னதம் கொள்ளும் வேளையைத்தவிர பிற நேரங்களில் கோமரம் சாதாரண மனிதன்தான். ஆனாலும் அவரை மரியாதையுடன் நடத்துவதே பழங்குடிப் பண்பு. படைப்பு விசை என்பது சன்னதத்தை ஒத்தது. எழுத்தில் இருக்கும் நபர் வேறு என்ற புரிதல் வாசகர்களுக்கு இருக்கவேண்டும். சாதாரண வேளைகளிலும் கோமரத்தாடிக்குச் சில சலுகைகளைக் கொடுப்பது போல எழுத்தாளனுக்கும் கொடுத்தே ஆகவேண்டும். தந்தையை / குருவை / உற்ற தோழனைப்போல எல்லாம் ஓர் எழுத்தாளனை உருமாற்றி வித்தை காட்டச் சொன்னால் கால ஓட்டத்தில் கசப்புதான் எஞ்சும். இப்படித்தான் பதில் வரவேண்டும் என்று சொல்லிச் சொல்ல வைத்தால் அது அருள்வாக்காக இருக்காது. அதே விஷயம் படைப்பிற்கும் பொருந்தும்.

 

இதுவரை பிறர் ஆடாத அளவிற்குச் சன்னதம் கொண்டு ஆடும் ஜெக்கு வாழ்த்துக்கள்.

2 comments:

  1. இதுவரை பிறர் ஆடாத அளவிற்குச் சன்னதம் கொண்டு ஆடும் ஜெ- classic choice of words, அபாரமான சொல்லாடல் & வார்த்தை ஜாலம்....i think no-one can explain Jeyamohan sir's personality & literary contribution in a better way... Thanks, Anish sir

    ReplyDelete
  2. //100% நாம் நினைப்பதை, நம்புவதைத்தான் ஒரு படைப்பாளி எழுதவேண்டும் என்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று எனக்குத் தெரியும். ஓர் இலக்கியப் பிரதி என்பது வாசகனுக்காகத் ‘தயாரிக்கப்படும்’ நுகர்வுப் பொருள் அல்ல என்று நம்புகிறேன். அவ்வாறு சொல்லித் தைக்கப்படும் சட்டையைப் போன்ற பிரதிகள் பரப்புரை கோஷமாகவே எஞ்சும். படைப்பு என்பது எழுத்தாளனின் அந்தரங்கச் செயல்பாடு. தேக்கி வைத்த விஷத்தை நாகமணியாக மாற்றி அரவம் துப்பும்போது அதனைப் பிறரும் காண்கிறார்கள். பிறருக்கும் அது வெளிச்சம் தருகிறது. அரவத்திற்கு ஆசுவாசம் உபரி பலன். பிறருக்கு வெளிச்சம் உபரி பலன். அதுபோலத்தான் ஓர் இலக்கியப் படைப்பும். // ஒரு நல்ல விளக்கம்

    ReplyDelete