2012 விஷ்ணுபுரம் விருது விழாவில் சுகா, கல்பற்றா நாராயணன், இளையராஜா, ஜெயமோகன் |
ஒரு பயணத்தில் பாதிவழியில் என் பயண உற்சாகம் வடிந்துவிட்டது. மகனுக்கு
உடல்நலமில்லை என்று அறிந்தவுடன் நான் பயணத்தில் எதையும் பார்க்கவில்லை, எதையுமே கேட்கவில்லை. அதுவரை நான் ஒரு
புன்னகைக்கும் இருப்பு என பயணத்தில் இருந்தேன். மகனுக்கு உடல்நலமில்லையென்ற
செய்தியை கேட்டவுடன் நனைந்து உப்பிய மூட்டையாக ஆகிவிட்டிருந்தேன். என் பயணம்
திரும்புதலாக மாறிவிட்டது. ஜெயமோகனுக்கும் அந்த பயணத்திலிருந்த மற்ற
நண்பர்களுக்கும் எங்கும் நீளக்கூடியது ‘வழி’. எனக்கு ‘வழி’ என்பது என்னிலேயே
சுருங்கிக்கொள்வதாக ஆகிவிட்டது. அவர்களுடையது எதிர்பாராமையின் இனிமைகள் கொண்ட
பயணம். எனக்கு பயணம் திட்டவட்டமானது, சலனமற்றது. “வீட்டிற்கு சென்றபின் வீடு திரும்பினால்
போதும், அதுவரை இந்த பொருளற்ற
அலைக்கழிப்பை ஏன் சுமக்கவேண்டும்?” என ஜெயமோகன் எனக்கு நினைவுபடுத்தினார். ஜெயமோகன் பயணத்தின் கடைசி கணம்வரை
பயணித்தார். ஒவ்வொரு முறையும் அதுவரை செல்லாத வழியில்தான் ஜெயமோகன் பயணித்தார்,
பயணம் முடிந்து வீட்டிற்குத்
திரும்பும்போதுகூட. பயணத்தின் கடைசி சுற்றிலும் (Lap) கொஞ்சம்கூட தளர்வில்லாமல் பயணித்தார். வெளிநாடுகளில்,
இந்தியாவில், மகாபாரதத்தில், நாவல்களில், கதைகளில், ஆராய்ச்சிகளில்,
சொற்பொழிவுகளில்... இப்படி எத்தனை
எத்தனை பயணங்கள். ஜெயமோகனுக்கான பாதை நடக்க நடக்க உருவாகிவரக்கூடியது. அவருடைய கைகள் நீட்ட நீட்ட நீளுக்கூடியது. அது எப்போதுமே எதிர்ப்பாராத
இடங்களுக்குச் சென்றது. ஜெயமோகனுடையது இல்லறத்தானின் (க்ருஹஸ்தன்) எழுத்தல்ல,
வீட்டை விட்டு வெளியேறியவனின்
எழுத்து. அந்த வெளியேற்றத்திற்கு இரவு தேவைப்படவில்லை, வெளியேறியவரின் யசோதரை தூங்கியிருக்கவேண்டுமென்பதில்லை.
அவள் நள்ளிரவில் தூக்கத்திலிருந்து எழுந்து முற்றம்வரை வந்து விடைகொடுத்தாள்.
அரசப் பொறுப்புகளை தனியாகவே ஆற்றினாள். அந்த யசோதரைக்கு ஜெயமோகனில் நிகழும்
மெய்மைகள் (enlightment) சார்ந்த
விவரணைகளை சரியான தருணங்களில் கேட்டுக்கொண்டால் மட்டும் போதும். காதலி மனைவியானபின்
காதல் மங்குவதைப் பார்த்திருக்கிறோம்.
அருண்மொழியில் காதல் இரண்டு மடங்காக
அதிகரித்திருக்கிறது. ஜெயமோகன் எழுதியதை வாசித்துக் காதலித்த அருண்மொழி ஜெயமோகன்
எழுத்தை இன்னும் சிறப்பாகத் தொடரும்போது காதலிக்காமல் இருப்பதற்கான அவகாசம்
கிடைக்காமல் போயிருக்கலாம். காதலிக்காமலிருக்க முயற்சி செய்யலாம், முடியவேண்டுமே?
விஷ்ணுபுரம் விருது விழா 2012 |
‘ஒரே இரவில் விதைகள் அனைத்தும் பூமரங்களாகின’ என்று ஒரு மலையாளக் கவிஞர்
எழுதியிருக்கிறார். அந்தப் பூக்கும் பருவத்தை நான் ஜெயமோகனில் பலமுறை
கண்டிருக்கிறேன். இன்மையிலிருந்து விழுந்த ஒரு விதை கணநேரத்தில் முளைக்கிறது,
செடியாகிறது. செடி மரமாகிறது, கிளைகள் என பரவி காடாகிறது. எதற்காக என்று
புலப்படாத ஒன்று பரிணமித்து என்னவெல்லாமோ ஆகிவிடுகிறது. அந்தப் பரிணாமத்தின்
ஊடகமாக தான் ஆவதன் இன்பம்தான் ஜெயமோகனை எப்போதுமே ஆற்றலுடன் வைத்திருக்கிறது.
செலவழிக்கப்படும் ஆற்றலே அந்தச் செயல்பாட்டைத் தொடரவைக்கும் எரிபொருளாகவும்
மாறிவிடுகிறது. அதுதான் ஜெயமோகனுக்கும் அவரது வாசகர்களுக்கும் ஆதலின் (becoming)
இன்பத்தை அளிக்கிறது. நேற்றுவரை
இல்லாமல் இருந்தது, இந்த
வரிவரை இல்லாமல் இருந்தது, சட்டென
நிகழ்ந்துவிடுவதன் விந்தைதான் ஜெயமோகனுக்கே உந்துதலாக இருக்கிறது. ஜெயமோகன்
உறவிடம் (ஊற்றுமுகம்)[1] அல்ல,
உறவிடங்கள் (ஊற்றுமுகங்கள்). அவர்
தன்னைத்தானேகூட முழுமையாகப் பார்த்து முடிக்காத, தோண்டி முடிக்காத ஒரு சுரங்கம்.
தன் படைப்புகளின் ஆற்றலை மட்டுமே வைத்து மலையாள வாசகனை அமைதியாக்கியவர்
ஜெயமோகன். மலையாள வாசகன் ஒரு படைப்பைத் தவிர்க்கவோ, அதைப் புறக்கணிக்கவோ, அதில் பிழைகளைத் தேடும் அவநம்பிக்கைவாதி. இரக்கம்
என்பதை ஏறி நிற்கும் படியென ஆக்கிய வாமனின் வழிவந்தவன். வாசகர்களின் இரக்கம்
தனக்கு வேண்டாம் என ஜெயமோகன் அவர்களை ஒவ்வொரு முறையும் வென்றார். ஜெயமோகன்
ஒட்டுமொத்தமாக எழுதியதில் பத்து சதவிகிதம்கூட மலையாளத்திற்கு வரவில்லை. ஆனாலும்,
ஜெயமோகன் எங்கள் மொழியிலுள்ள மிகச்சில
சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் So called இடதுசாரியும் அல்ல, பொஹீமியன் (Bohemian) அல்ல, positive thinker அல்ல, யாரின் பரிந்துரையும் அல்ல. மலையாளச் சூழலில் எதையெல்லாம் செய்தால் புகழ்பெற
முடியுமோ அது எதையும் செய்யும் விருப்பம்கொண்டவர் அல்ல. ‘ஒழிமுறி’ திரைப்படத்தால்
அடைந்த புகழையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ‘நெடும்பாதையோரம்’, ‘அறம்’, ‘யானை டாக்டர்’, ‘நூறு நாற்காலிகள்’, ‘உறவிடங்கள்’ (ஊற்றுமுகம்), சமீபத்தில் ‘மாயப்பொன்’ சிறுகதைத் தொகுப்பு என இந்தப்
படைப்புகள் ஜெயமோகனுக்குத் தேவையான, விஸ்தாரமான இடத்தை அளித்தன.
கல்பற்றா நாராயணன் (அருகில் கே. பி. வினோத்) |
ஜெயமோகன் வித்தியாசங்களை அறிந்தவர். ‘மாயப்பொன்’ சிறுகதையில் சொல்வதுபோல
மல்லிகைக்கும் செம்பகப்பூவிற்குமான வேறுபாடு அல்ல, ஒரு மல்லிகைப்பூவிற்கும் இன்னொரு மல்லிகைப்பூவிற்குமான வேறுபாடு. கலையில்
நிபுணத்துவம் என்பது நுட்பமான வேறுபாடுகளை அறிவதுதான். ஜெயமோகனின் படைப்புகளில்,
அவரது விவரணைகளில் உள்ள அதிநுண்மை
அவரது நம்பமுடியாத நினைவாற்றலையும், அவர் பயணித்த வழிகளில் உள்ள எல்லா காட்சிகளிலும் இருக்கும் உற்சாகத்தையும்,
எதையும் முளைக்க வைக்கும் செழிப்பான
மனப்பரப்பையும் நமக்குக் காட்டுகிறது. அந்தப் பரப்பில் விழுந்தவை அனைத்தும்
முளைத்தன, செழித்துப் பரவின.
***
[1]‘உறவிடங்கள்’: ஜெயமோகன் மலையாளத்தில் எழுதிய அனுபவக்குறிப்புகளின் வடிவில் உள்ள கட்டுரைத்தொகுதியின் பெயர்.↩
(மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தவர்: அழகிய மணவாளன்)
Beautiful sir.
ReplyDelete