ஜெயமோகனின் சிறார் உலகம் - கே. ஜே. அசோக்குமார்


1

எழுத்தாளர் ஜெயமோகனின் முழு படைப்புகளையும் வாசித்து ஒரு கட்டுரை எழுத முடிவு செய்தால் அது அவரது வாழ்நாள் சாதனையாக அமைந்திருக்கும் எனத் தோன்றுகிறது. ஜெயமோகன் தன் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே எழுத தொடங்கிவிட்டதாகக் கூறியிருக்கிறார். தனது பள்ளி கல்லூரி காலங்களில் எழுதியது, ஆவணமாக ஆகாததுகூட பல பக்கங்கள் இருக்கும். இருபத்தி நாலாம் வயதில் எழுத ஆரம்பித்தபோது அவர் புனைவுலகத்தை முழுமையாக உள்வாங்கி படைக்கத் தொடங்கிவிட்டிருந்தார். அந்த வயதிலேயேகூட தீவிரமான எழுத்து எல்லோருக்கும் அமைவது கடினம். அன்றிலிருந்து தொடங்கி தனது 60வது வயது இன்று வரை வந்திருக்கும் அவரின் இலக்கியப் பணி, பல்லாயிரக்கணக்கான பக்கங்களைப் படைத்திட்ட, மிகப்பெரிய வெற்றிகளையும் அளப்பரிய சாதனைகளையும் கொண்டிருக்கிறது என்று தைரியமாகச் சொல்லாம்.


இலக்கியத் தேடலின் எல்லையை அவர் ஒரு வரையறைக்குள் வைத்துக்கொண்டதில்லை. மிக நீண்ட இலக்கிய உரையாடல்கள், முடிவுறா இலக்கிய சர்ச்சைகள், சலிக்காத பதில்கள் என்று பல்வேறு வழிகளில் தன்னை எப்போதும் முன்நிறுத்திக்கொள்கிறார். அந்த உரையாடல்களின் வழியே அவர் இப்போதும் தன்னை செம்மைப்படுத்திக்கொள்கிறார். அவற்றை ஒரு விளையாட்டுக் களமாக, தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் தளமாக, எப்போதும் அதிலிருந்து விலகிக்கொள்ளாத மனதிண்மையுடன் ஆட்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிறார்.


கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல், காப்பியம், மகாபாரதத் தொடர், கட்டுரை, சிறார் இலக்கியம், உடல்நலம், பயணம் என்று பல இலக்கிய வகைமைகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். எமிலி டிக்கின்சன் கூறும் மிதமிஞ்சிய பித்துநிலை கொண்ட தெய்வீகமான அறிவு அவரது எல்லா புனைவு நிலைகளிலும் வெளிப்படுகிறது. அவற்றில், ஆன்மிகம், தத்துவம், அறிவியல், நாட்டாரியல் என்று பல்வேறு கூறுகள் இருப்பதையும் காணலாம். சொல்லாத விஷயங்கள் என்று எதுவுமில்லை, வேறு யாரும் சொல்லத் துணியாத விஷயங்கள்தாம் அதிகம்.


இன்று தொடர் விவாதங்கள் வழியே தமிழிலக்கியத்தில் பங்காற்றிவருவது, இதற்கு முன் செய்த க.நா.சு., சி. சு. செல்லப்பா, சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய ஆளுமைகள் செய்த பங்களிப்பைவிட பல படிகள் மேலானது. இவற்றோடு இலக்கிய நண்பர்களைப் பேணுவதையும், வருடத்திற்கு ஒருமுறை கூடி இதுவரை அங்கீகரிக்கப்படாத சிறந்த பங்காற்றல் செய்தவர்களைக் கொண்டாடி கெளரவிப்பதையும் செய்கிறார்.


கூர்ந்து நோக்கும்போது, இந்தச் செயல்பாடுகளுக்குள் தன்னை இறுத்திக்கொள்ள அவர் பயணித்த பாதை எளிமையானதாக இருக்கமுடியாது என நினைப்போம். எளிய வாழ்க்கை லட்சியங்களையும் கொண்டிருக்க முடியாது என்று தோன்றும்.


கடினமாக பாறையில் விழுந்து வேர்விட்டு தொடர் தேடல்களுடன் மற்ற மரங்களின் கிளைகளை ஊடுருவி தன்னை நிறுத்திக்கொண்ட ஆலமர விதை போலத்தான் ஜெயமோகனின் இளம்வயது வாழ்க்கை இருந்திருக்கிறது. அப்போது அவர் அடைந்த துயரங்கள், அககொந்தளிப்புகள், தற்கொலை முயற்சிகள் நிறைந்த இருபது வயதிற்குள்ளான அவரது வாழ்க்கை மிக முக்கியக் காரணம். பல திசைகளில் கிளை பரப்பி விரிந்து நிற்கும் ஆலமரத்தின் வெளித்தோற்றத்தில் அவை தெரிவதில்லை, அதன் வேர்களில் பின்னல்களில் தெரிவது துயரங்களும் துன்பங்களும்தாம்.


ஜெயமோகன் எழுதும் பல்வேறு வகை எழுத்துகளுக்கும், அவர் கொண்டிருக்கும் அவதானிப்புகளுக்கும் சிந்தனைகளுக்கும் இடைநில்லா புனைவுகளுக்கும் இருபது வயதிற்குட்பட்ட இளம்பருவத்தில் அவர் அடைந்த 'விழிப்புணர்வு'தான் காரணம். சரியாகச் சொல்வதென்றால் அந்த காலகட்டத்தில் அவர் கண்கொண்டு பார்த்த, அனுபவித்த அனைத்துமே அவர் மனதில் ஆழப்பதிந்துவிட்டிருக்கின்றன. அனைத்தையும் பிரித்தறியக்கூடிய வெளிச்சம் அப்போதே அவருள் பாய்ந்திருக்கிறது. பட்டறியவேண்டிய விஷயங்கள் அனைத்துமே மிகச் சிறியவனவாக மாறி உள்ளத்தில் அமைந்துவிட்டன. சிலகாலம் கழித்து உணரக்கூடிய கீழ்மையும் உன்னதங்களும், பார்த்ததுமே, அனுபவத்தைக் கண்டறிந்தவுடனேயே உணரக்கூடியதாக அவருக்கு அமைந்திருக்கின்றன.


அந்த விழிப்புணர்வின் காரணமாகவே மிகத் தீவிரமான செயல்பாடுகளில் தன்னை முன்நிறுத்திக்கொள்வதிலும், பிற அனைத்து உலகியல் விஷயங்களிலிருந்து தன்னை விலகி வைத்துக்கொள்வதிலும் துல்லியமான வெற்றியை அடைந்திருக்கிறார் போலும். துயரங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொள்வதும், கடின இளமைப் பருவத்தைக் கடப்பதும் எளிதல்ல. அவ்வயதுக்கு இயல்பான வேடிக்கைகளை விடவேண்டியிருக்கும். அவ்வயதில் நிகழாத குழந்தைத்தனம் வயதானபின் பலநூறு வழிகளில் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும். அதாவது நிகழாத குழந்தை மனக் குறும்புகள் உக்கிரமான குரூர எண்ணங்களாக ஆகிவிடும் அபாயம் உண்டு. அவற்றை கவனமாக சதுரங்க விளையாட்டின் புத்திக்கூர்மையுடன் கடந்துவரவேண்டும். உலகியல் விஷயங்களில் அக்கறையற்ற இளம்பருவத்துக் குழந்தை மனம் ஜெயமோகனின் உள்ளில் இப்போதும் இருக்கிறது. அவரது படைப்புகளின் வழியே வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. மிகத்தீவிரமான ஒன்றைகூட அதன் உண்மைதன்மை கெடாமல் தீவிர பாவனையுடனும் நகையாடும் மனோபாவத்துடனும் சொல்லமுடிகிறது. அவர் எழுதிய ‘டார்தீனிய’மும் ‘பல்லக்கு’ம் இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்.


ஜெயமோகனின் சிறார் வாழ்க்கை பற்றிய படைப்புகள் மிகுந்த உற்சாகத்துடன் நாமறியா ஆழ்மனச் செறிவுடன் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். சிறார் வாழ்க்கை பற்றிய கட்டுரைகள்கூட ஆழ்ந்த அனுபவத்தை எளிமையுடன் சொல்லும் படைப்புகள்தாம். இந்தப் படைப்புகள் அவரது உண்மையான சிறார் பருவத்தை ஓரளவிற்கு நமக்கு வெளிக்காட்டுகின்றன. எல்லா சிறார் வாழ்க்கையும் மெல்லிய திரை கொண்டு மூடப்பட்டு நம் மனதிலிருந்து அதிக தூரத்தைக் காட்டுபவை. சாதாரண மனம்கொண்டு எளிதில் அறிந்துக்கொள்ள முடியாதவை. ஜெயமோகனின் சிறார் வாழ்க்கை பற்றிய படைப்புகளில் இத்திரையை விலக்கி அவர் காட்சிப்படுத்துவது தம் ஆழ்மனதின் அதிர்ச்சியூட்டும் தரிசனங்களைதாம். சிறார் வாழ்க்கை படைப்புகள் குறித்தும், அதன் உள்ளோட்டமாகச் செல்லும் துயரத்தையும் நகைச்சுவையையும் குறித்து விரிவாகப் பார்க்கவேண்டும் என நினைத்துக்கொள்வேன்.




2


அவர் படைப்புகளில் வெளிப்படும் பலநூறு விஷயங்கள் அவர் அறியாத, அறிய விரும்பும் ஞானத் தேடலின் ஒரு பகுதிதான். இளம்பருவத்தைச் சொல்லும் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் அவர் இதுவரை சென்றடையாத மற்றொரு உண்மையின் தரிசனம்தான். இலக்கியத் தேடல் அப்படித்தான் அமையும் என்றாலும், ஜெயமோகனின் உண்மை தரிசனம் தேடல்களில் அரிதானதாக அமைந்திருக்கிறது.


சிறுகதைகளில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர் ஜெயமோகன். அவரது பல கதைகள் எழுதிய காலங்களிலேயே விவாதங்களை உருவாக்கியவை. சில சிறுகதைகள், குறுநாவல்கள் பதின்பருவத்தின் முடிவில்லாத துயரத்தை விளக்குபவை.


சிறுகதை, குறுநாவல்களில் சிறார்களைப்பற்றிப் பேசும் கதைகளில் தெரியும் அழுத்தம் வேறுமாதிரியானவை. மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் எழுதப்பட்டவை எனத் தோன்றும். அப்பாவின் கண்டிப்பையும் அம்மாவின் கனிவையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் கூடவே அப்பாவின் அக்கறையையும் அம்மாவின் சூழ்ச்சியையும் விவரிப்பவை.


மற்ற கதைகளில் தெரியும் இலகுத்தன்மை இக்கதைகளில் எச்சரிக்கை உணர்வு கொண்டுவிட்டதைப்பற்றி வேறு எவ்வகையிலும் பிரித்தரிய முடிவதில்லை. சவுக்கு, ஆயிரம்கால் மண்டபம் போன்ற கதைகள் குழந்தை மனதை விவரிக்கும்போது அடையும் எல்லையின்மையை நாமும் உணரமுடிகிறது. அப்படியான சிறுகதைகள் சில உண்டு. அதில் 'வீடு'ம் ஒன்று.


‘வீடு’ கதை மிக இளமைப் பருவத்தை நினைவுகூரும் கதை. இளம்பருவத்தில் அடைந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு கணம் அச்சிறுகதை. ஒரு பெண்ணைத் தன் காதலியாகக் கொள்ளும் முதல் சந்திப்பு அவனை இளம்பருவத்தில் தந்தையையும் தாயையும் இழந்த சோகத்தை நினைக்க வைக்கிறது. இளம்பருவத்தில் பெற்றோரைப் பிரிந்த அதிர்ச்சி அவனை தன் காதலியுடன் இணைய முடியாமல் உதறலான தவிப்புக்கு உட்படுத்துகிறது. இளம்பருவத்துக் காதலை, மகிழ்வான ஒரு தருணத்தை, அனுபவிக்க முடியாமல் தவிக்க விடுகிறது. அந்த அதிர்ச்சி இன்னும் அழகான சிறார் பருவம் அமைந்திருக்கக்கூடாதா எனும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது.


‘படுகை’யில் கொச்சேமான் கதைசொல்லியும் அவன் நண்பன் ராதாகிருஷ்ணனும் அடையும் எல்லையின்மையின் காதலை நாமும் உணர்வோம். கொச்சேமானுள் இருக்கும் கலங்கமின்மையை உறுதிப்படுத்த தன் கலங்கமின்மையைக் கடத்துகிறான் சிங்கி. ‘சவுக்கு’ ஒருவகை பயஉணர்ச்சிச் சிறுகதை. அதை வெல்வது இளமனதிற்கு எளிதானதல்ல. உணர்ச்சிகளைக் கொட்டி, இதுதான் என அறியமுடியாத தூரத்தில் இருக்கிறது கதைசொல்லியான சிறுவனின் ஆழ்மன பயம். தன் வயதொத்த வித்தைகாரச் சிறுவன் சோட்டேலாலுக்கு, தனக்கு இல்லாத துணிச்சலும் பொறுக்கித்தனமும்தான் இருப்பது அவன்மேல் ஈர்ப்பை உண்டாக்கிகொண்டிருக்கிறது. சோட்டேலால் தந்தையை நடத்தும் விதம், தந்தை -மகன் என்கிற மிகக் கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ்ந்துவரும் கதைசொல்லியை அதிர்ச்சி அடையச்செய்வதுடன் சோட்டேலாலுடன் நெருக்கத்தையும் உண்டாக்குகிறது. சோட்டேலால் சாதாரண மனிதனல்ல, அவனே சிறந்த மனிதன் என நினைக்குமளவிற்கு கதைசொல்லியின் மனதை முழுமையாக ஆக்கிரமிக்கிறான்.


எத்தனை தகிப்போடு இளமை இருந்தது என்பதை 'திசைகளின் நடுவே' உணர்த்துகிறது. உடலையும் உயிரையும் உதறவிடாமல் தவிக்கும் தவிப்பை இதையும் மீறிச் சொல்லிவிட முடியாது. சொல்லாதவை நம் மனதில் என்றும் இருக்கப்போகின்றன. சார்வாகன் போல வாழ்த்துவிடத் துடிக்கும் ஆசை. அப்பாவை எப்படியும் விட்டு விலகிவிடத் துடிக்கும் மனம். இளம்பருவத்துத் தந்தையை வெறுக்கும் அருவருப்பு. மிகச்சரியாக தருமனின் மகாதான விழாவில் வரும் சார்வாகனின் செயல்போல அவனும் இருக்கிறான். அவன் தருமனை வதைத்ததுபோல, பின் எரிந்து சாம்பலானது போல தானும் செய்து மடிய நினைக்கிறான். ஆனால் மனம் ஓடி ஒளிந்துக்கொள்கிறது. அம்மாவிடம் தஞ்சமடைகிறான். அங்கும் வருவாரா, கருவறைக்குச் செல்ல ஆசைகொள்கிறான் அங்கும் பீஜம்போல அவர் வரக்கூடும் என விதிர்த்து, ‘மனதின் அறியமுடியாத சக்திகளினால் நான் அலைந்து திரியும்படி ஆக்கப்பட்டேன்...’ எனக் கூவுகிறான்.



முன்னோக்கி விழும் காலத்தை பின்னோக்கி விழச்செய்யும் முயற்சியில் இருப்பவனின் வாழ்வைப்பற்றிச் சொல்லும் கதை 'சந்திப்பு'. எப்போதும் இருட்டு அறையில் இருக்கும் வெளவால்களின் வாழ்வைப்போன்ற வாழ்க்கை அவனுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. ஒளிந்துகொள்ள ஓர் இடம் வேண்டும். ‘என் தந்தை என்னைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை’ என்பதில் அவன் அடையும் துயரம். ‘நான் என் வம்சத்தின் கடைசி பிரஜை…’ என்று சொல்லுமிடத்திற்கு வருகிறான்.


நிஜத்தில் ‘இரணியன்’ அப்பாதான் அவனுக்கு. பிரகலாதன் போல அவன் அவர் முன் நின்று ஆடுகிறான். அவனுக்குத் தெரியும் நிஜத்தில் ‘நாராயணன்’ அம்மா வந்து காப்பாற்றுவள் என்று. கதையில் அப்பாவின் தொடுகையை அவன் விரும்புவது அவனறியா ஆழ்மன ஆசை.


ஒரு காலகட்டத்தில் படித்த பெண்கள் குடும்பத்திற்குச் சரிவரமாட்டாள் என்கிற எண்ணம் இருந்தது. ‘தேவகிச் சித்தியின் டைரி’ சிறுகதை அவ்வாழ்க்கையைச் சொல்வதுதான். டைரி என்பது படித்தவர்களின் ஆணவக் குறியீடு. டைரி எழுதுவதால் அவளுக்கு விவாகரத்து கிடைக்கிறது என்கிற செய்கை பெண்மீது ஆணாதிக்கம் செய்யும் கொலைதான். மிக இளமனதின் அதிர்ச்சி இக்கதை.


அப்பாவுடனான உறவு அகவயமானது, புரிந்துகொள்ள முடியாத உள்ளடுக்குளால் மூடப்பட்டுள்ளது. தன் வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான உறவாக இருக்கும் அப்பாவின் உறவை 'அப்பாவும் மகனும்' என்ற கதையில் சொல்கிறார். தன் அப்பாவிடம் இருந்த முரட்டுதனத்தை தன் மகனுடன் தொடரக்கூடாது என நினைக்கும் தன்னை தன் சிறுகுழந்தை உணராமல் செயல்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தவிப்பதைச் சொல்லும் கதை.


அப்பாவிடம், அம்மாவிடம் எதிர்ப்பை லாவகமாகத் தெரிவிக்கும் குழந்தைகளுக்குத் தெரியும் தன் எதிர்ப்பு எந்தளவிற்குச் செல்லுபடியாகுமென்று. எதிர்ப்பைத் தெரிவிக்காத குழந்தையை எந்தப் பெற்றொரும் விரும்புவதில்லை என்பதை அறிய சிலகாலம் ஆகத்தான் செய்கிறது. ‘விரல்’ கதை அப்படியான ஒன்று.



குறுநாவல்களில் முக்கியமாக ‘கிளிக்கால’மும் ‘டார்த்தீனிய’மும் சிறார் உலகைச் சொல்லும் கதைகள். சிறார் வாழ்விலிருந்து விடுபடும் வாழ்க்கை பற்றியது ‘கிளிக்காலம்’. அந்தக் காலத்தை நினைவுகூர மட்டுமே முடியும். மீண்டும் திரும்பிச் செல்ல இயலாது. அதைத்தான் கதையின் ஒவ்வொரு அடியும் சொல்லியபடி இருக்கிறது. தவறவிடக்கூடாது என்று ஆழ்மனம் சொல்லும் ஒவ்வொன்றையும் அனுபவிக்க எண்ணும் மனதை இக்கதையில் சொல்கிறார். ஜெயமோகன் தன் சிறார் வாழ்க்கையில் பார்த்ததை அப்படியே சொல்லிவிடுபவர் உண்மைப் பெயர்களுடனேயே. இந்தக் கதையில் அப்படியே.


ஜெயமோகன் எழுதிய கதைகளிலேயே சிறார் வாழ்க்கை கதைகளில் முக்கியமானது ‘டார்த்தீனியம்’தான். டார்த்தினியம் செடியை அப்பா வீட்டில் வைக்க, அது வீடு முழுவதும் பரவி வீட்டை அழிக்கிறது. டார்த்தீனியம் என்ற குறியீடு சந்தேகம்தான். எவ்வளவு அன்யோன்யமாக இருந்தாலும் அப்பா அம்மாவிற்கு இடையே ஏற்படும் சிறு சந்தேகம் அந்தக் குடும்பத்தையே உருகுலைக்கிறது. ‘டார்த்தீனியம்’ என்ற குறியீடு மிகச்சரியாகப் பொருத்திப் போகிறது. கொஞ்சம் கொஞ்சமாக எப்படி வீட்டை ஆட்கொள்கிறது என்பதை இதைவிடச் சிறப்பாகச் சொல்லமுடியாது.


சிறார் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் என்றால் அவர் எழுதியதில் ‘காடு’ நாவலைத்தான் முதலில் சொல்லவேண்டும். கதாநாயகன் கிரியின் வாழ்க்கை இளம்பருவத்து பெரிய கனவுகளில் தொடங்கி சாதாரண மனிதவாழ்வாக முடிவதில், அவன் லெளகீகத் தோல்விகளை, காட்டு இயற்கையின் மூலம் அவன் பெற்றவைகளுக்கு முன் ஒன்றுமில்லாதவை எனக் காட்டுகிறது. உண்மையில் இயற்கையை அறிபவன் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்தவன் ஆகிறான். கிரியின் வாழ்க்கை நேரடிப் புரிதல்களை மட்டுமே கொண்ட எளிய பதின்பருவச் சிறுவனின் நினைவுகள் என்று சொல்லலாம். நாவல் முழுவதும் அவன் தன் கள்ளமற்ற இளம் உள்ளத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான். குட்டப்பன், சினேகம்மை, ராயப்பன் போன்றவர்களிடம் தோன்றும் நுட்பங்கள் ஏதுமில்லாத வாழ்க்கையைக் கொண்டிருப்பவன் கிரி. மிகுந்த பிரயத்தனத்துடன்தான் அந்தத் தேர்வும் அவனுள் நிகழ்ந்திருக்கிறது. அவன் அம்மாவின் அன்பு ஒரு கட்டத்தில் விலகுவதும், அதுவரை டேய் என்று அழைக்கும் அம்மா ஒரு கட்டத்தில் பெயர் சொல்லி அழைப்பதும் என கிரி தன் பருவத்தை உணரும் தருணத்தை மிகச்சரியாகவே சொல்லியிக்கிறார் ஜெயமோகன்.


புனைவுகளைப் போலவே அபுனைவுகளும் தீவிரத்தன்மை கொண்டவை. புனைவுகளுக்கு மாறாக அபுனைவுகளில் நிகழ்வுகளைப் பகடிகளாகக் கடக்கிறார். ‘சாத்தானே அப்பாலே போ’ என்கிற கட்டுரை மிகச்சரியான சாட்சி. ‘அவர்கள் இருவருமே அதிதீவிர பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்கள். கிறிஸ்துவை பிறகு பார்க்கலாம், சாத்தானை முதலில் ஒருவழி பண்ணுவோம் என்ற மாதிரியான அதிதீவிர நம்பிக்கை.’ என்பதைப் போன்ற அதிதீவிர பகடிகளின் வழியே தன் இளம்பருவத்தைச் சொல்லியிருக்கிறார். 'புறப்பாடு' நூல் இளம்பருவத்தைச் சொல்வதுதான். முழுமையாக தன் இளம்பருவத்துக் கலக்கங்களைப் பகடியாகச் சொல்லிய நூல்.



சிறார்களுக்கென்று தனியாக ஜெயமோகன் எழுதிய இலக்கியங்களில் இரண்டு படைப்புகள் முக்கியமானவை. பனிமனிதன், வெள்ளிநிலம் ஆகிய இரு படைப்புகளிலும் சிறார்களுக்கு எது புரியும், எது புரியாது என்கிற எண்ணமற்று தன் ஆழ்மனக் குழந்தையுடன் உரையாடுகிறார். சிறார்கள் எதை விரும்புவார்கள் என்பதைக் கொடுக்க பல ஆசிரியர்கள் உண்டு. இயல்பாகவே நம் மனமும் அதைத்தான் விரும்பும். அவர் எழுதிய சிறார் நாவலான ‘பனிமனிதன்’ சிறார் உலகின் பல முக்கியக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது. பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தின் வழியாக நாம் நம்மை நாவலுடன் பொருத்திக்கொண்டாலும் சிறுவனாக வரும் கிம்தான் மையம். ஆனால் கிம்மின் அகஉலகம் நாமறியா ஆழத்தின் இருள் நிறைந்தது. குறைந்த சொற்களில் அவன் நமக்கு அறிமுகமாகிறான். நீண்ட அவன் வாழ்க்கை அனுபவம் அவன் மூதாதையரின் வழியிலிருந்து வந்திருப்பவை. எதையும் தன் தந்தையிடமிருந்தே கற்றதாகக் கூறுகிறான். அல்லது குருவிடமிருந்து கற்றதாகக் கூறுகிறான். மலையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் புத்தரைக் கொண்டே கிம் பிரித்தறிகிறான். புத்தர் புன்னகைக்கிறார், புத்தர் விளையாடுகிறார் என்று அவன் சொல்லியபடியே இருக்கிறான்.


3


இளம்பருவத்து வாழ்க்கையை இன்பம் நிறைந்தவையாகக் காட்டிக்கொள்வதில் நாம் அதிக அக்கறையோடு இருப்போம். சிறார் வாழ்க்கையின் அழகிய தருணங்கள் நம் கண்முன்பே எப்போதும் நாஸ்டால்ஜிக் தன்மையுடன் இருக்கும். ஜெயமோகனின் சிறார் கதைகளில் இத்தன்மை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டு இறுகிய இரும்பின் தன்மையுடன் அமைந்திருக்கிறது.


மற்ற கதைகளைப்போலவே தன் சிறார் வாழ்க்கைக் கதைகளையும் அதே உத்வேகத்துடன் எழுதுகிறார். எழுதிய காலங்களில் இந்த மிகுந்த தன்னம்பிக்கை ததும்பும் எழுத்துகள் வழியே மனகுழப்பத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருப்பார். ‘அப்பாவும் மகனும்’ கதையில் ‘அப்பா’ என்ற மகனின் சொல்லுக்காக ஏங்கும் அப்பாவை வெறுக்கும் மகனின் கதையில் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது: ‘அம்மா’ என்று எளிதாகச் சொல்லிவிட்டான்.


அப்பாவின், அதன் பின்னே அம்மாவின் தற்கொலைகள் அவரை நிலைகுலைய வைத்தன என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார். வெறுக்கப்படுபவர்கள் இருக்கும்வரை அந்த வெறுப்பு தொடர்ந்துகொண்டேயிருக்கிறது போலும். வெறுக்கப்படுபவர் இறந்த பின், அதுவும் தற்கொலைக்கு பின், வெறுப்பு குற்றவுணர்ச்சியாகவும், பின் அவர்கள்மீது அளவற்ற அன்பாகவும் மாறிவிடுகிறது. அப்பாவை வெறுக்கும் அதே சமயம் மிகுந்த அன்பிற்கு ஆட்படுபவராகவும் இருக்கிறார். மலையாள நண்பர்களின் சந்திப்பில் தற்கொலை மிகுந்த வலி நிறைந்தது எனப் பேச்சு வரும்போது, தன் அம்மா வயதானபின் தற்கொலை செய்துகொண்டதைச் சொல்கிறார். வயதானவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறைவு என்பது ஆச்சரியமான அவதானிப்பு.


மிக இளம்வயதில் அடைந்திட்ட முடிவுகள் எப்போதும் பாறையில் செதுக்கப்பட்ட எழுத்துகள் போன்றவை. அப்படித்தான் அவர் எழுத்துகள் அமையும் என்று நம்புகிறேன்.

***

கே.ஜே. அசோக்குமார் - தமிழ் விக்கி பக்கம்


2021 விஷ்ணுபுரம் விருது விழாவில் கே. ஜே. அசோக்குமார் - ஜெயமோகன்

No comments:

Post a Comment