சிங்கப்பூருக்கு 2006ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தபின் எனக்கு வாசிப்பதற்கு நிறைய நேரமும் இங்குள்ள பொது நூலகங்களில் நிறைய புத்தகங்களும் கிடைத்தன. முனைப்புடன் பல நூல்களை வாசித்தேன் என்றாலும் அவ்வாசிப்பு ஒரு கருவியாக இல்லாமல் தன்னளவிலேயே ஓர் இலக்காக இருந்தது. அதாவது அறிவியல், ஆன்மீகம், வரலாறு, புனைவு எந்த வகைமையிலும் ஒரு புத்தகத்தை வாசித்துமுடித்ததும் அதைப்பற்றித் தீவிரமாக யோசிக்காமால், அதன் சாராம்சத்தைச் சிந்தனைச் சரடில் கோர்த்துக்கொள்ளாமல் அடுத்த நூலுக்கு நகர்ந்துவிட முடிந்தது.
அக்காலகட்டத்தில் காந்தியை மகத்தான சிந்தனையாளராக நான் கருதியிருக்கவில்லை, ஏளனப் பார்வை கொண்டிருந்தேன். அதற்கு ஓஷோவை அதிகமாக வாசித்திருந்தது முக்கியமான காரணம். காந்தியை நிராகரித்து விதண்டாவாதம் செய்வதற்கு ஓஷோவிடமிருந்து இரவல் பெற்றுக்கொண்ட சில காந்தி விமர்சனங்கள் என் கைவசமிருந்தன. அப்போதுதான் 2011 இறுதியில் ஜெயமோகனின் வலைதளமும் அங்கிருந்த காந்தி குறித்த கட்டுரைகளும் எனக்கு அறிமுகமாயின. நானும் வேண்டாவெறுப்பாக அவற்றை வாசிக்க ஆரம்பித்தேன்.
ஜெயமோகனின் காந்தி குறித்த பார்வைகளும் வாதங்களும் எனக்குத் திகைப்பை அளித்தன. அவரது பார்வைகளுக்கு முன்னால் என் கைவசமிருந்த விதண்டாவாதங்கள் நிராயுதபாணியாகி, குறுகி நிற்பதை உணரமுடிந்தது. அவரது கட்டுரைகளில் தர்க்கச் சீர்மை இருந்தாலும் அதற்கும் மேலாக உள்ளுணர்வின் குரல் அவற்றில் ஓங்கி ஒலித்ததை நான் கண்டேன். என் அறியாமையை நானே உணர்ந்து ஏற்கும்படிக் காட்டிய அக்கட்டுரைகள் ஆத்திரத்தைக் கிளறின. ஏதாவது குறைகண்டுபிடித்து இவரை முட்டாளாக்கிவிட வேண்டும் – குறைந்தபட்சம் காந்தி விஷயத்திலாவது – என்றுதான் ஜெயமோகனின் காந்தி கட்டுரைகளைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். தன் எழுத்துகளை வாசிக்க வந்த பலர் முதலில் இப்படி எதிர்மறையாக உந்தப்பட்டவர்கள்தான் என அவரே எழுதியிருக்கிறார்.
குறைகாணும் நோக்கில் வாசிக்கத் தொடங்கினாலும் அதுவரை வாசித்திருந்த எவரது எழுத்துகளை விடவும் ஜெயமோகனின் எழுத்துகள் என் இதயத்தையும் மூளையையும் உக்கிரமாக ஆக்கிரமித்தன. ‘மோகன்தாஸும் மகாத்மாவும்’ ‘காந்தியின் திமிர்’, ‘காந்தியின் பிள்ளைகள்’ போன்ற கட்டுரைகள் எனக்குள் அப்போது உண்டாக்கிய எழுச்சியின் நினைவுகள் பத்தாண்டு கழித்து இன்றும் மங்கவில்லை. மேலும் காந்தியை நேரடியாக வாசிக்கவேண்டும் என்ற உந்துதலையும் ஜெயமோகனின் காந்தி கட்டுரைகள் எனக்கு அளித்தன.
நேரடி காந்தி வாசிப்பு பெரிய பொக்கிஷப் புதையலின் மீது தடுக்கி விழுந்ததைப்போல இருந்தது. எதையும் சுருக்கிப் பார்க்கும் பொறுப்பின்மையைப் போக்கி, எனக்குள்ளிருந்த ஒருவகையான வெறுமையை செயலூக்க உந்துதலைக்கொண்டு நிரப்பியது காந்தி வாசிப்பு. ஓஷோ எனக்குள் செலுத்தியிருந்த விஷத்தை அது முறித்தது. அதற்காக நான் ஜெயமோகனுக்குக் கடன்பட்டுள்ளேன். காந்திக்குள் இட்டுச் சென்றது மட்டுமல்லாமல், காந்தியைப் போன்ற ஓர் ஆளுமையையும் காந்தியம் போன்ற ஒரு சிந்தனையையும் அணுகுவதிலும் ஒரு தெளிவை உண்டாக்கித் தந்தது அவரது அணுகுமுறை.
எதையும் தானாகவே கற்றுக்கொள்ளும் வழக்கத்தை வைத்திருந்த காந்தி காமத்தை அடக்கியாளவும் சொந்தமாக ஒரு தாந்த்ரீக முறையை அபாயகராமான விதத்தில் கையாண்டது, அழகியல் நோக்கு இன்மை போன்ற பல தளங்களில் ஜெயமோகனுக்கு காந்திமீது விமர்சனம் உண்டு. நட்சத்திர விடுதிகளில் தங்கி அதன் கலையம்சத்தை காந்தியால் ரசிக்க முடியாது, ஜெயமோகனால் முடியும். ஜெயமோகன் மதுவைத் தீண்டாதது காந்தி சொல்லிவிட்டார் என்பதற்காக அல்ல. காந்தி வலியுறுத்திய சைவ உணவுப் பழக்கத்தை ஜெயமோகன் கைக்கொள்ளவுமில்லை. ஆனாலும் காந்தி ஜெயமோகனின் ஆதர்சங்களுள் முதன்மையானவர். இதில் தர்க்கமுரண் இருப்பதாகத் தோன்றலாம் ஆனால் அது ஒரு தோற்றப்பிழையே.
ஒரு சிந்தனையாளரால் ஈர்க்கப்படுபவர், இயல்பாகவே அவ்வாளுமையின் சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் தன்னளவில் ஒரு தர்க்கநியாயம் கற்பித்துக்கொள்கிறார். ஒருகட்டத்தில் தன் ஆதர்ச ஆளுமையின் தர்க்கரீதியான இசைவை, தொடர்ச்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே பெரும் ஆற்றலை அவர் செலவழிக்க வேண்டியிருக்கிறது. பிறகு அச்சுமை அதிகமாகி ஆதர்சங்களைக் கைவிடவும் மனமுடையவும் நேர்கிறது. அது அவ்வாறு நிகழ்வதற்கு அவ்வுறவு தர்க்கத்தின் அடிப்படையில் அமைவதே காரணம்.
அதற்கு நேர்மாறாக, ஜெயமோகன் என்ற ஒரு சிந்தனையாளர் காந்தி என்ற ஓர் ஆளுமையைத் தர்க்கத்தினால் அல்லாமல் தன் உள்ளுணர்வுகளால்தான் கண்டுகொள்கிறார். ஆகவேதான் அங்கு முரண்கள் இயைகின்றன. முரண்கள் இயையும்போது நூற்றுக்கு நூறு தர்க்க இசைவு, தொடர்ச்சி அவசியமில்லாமலாகிறது. ஒன்றை எவ்வாறு விசாரிக்கவேண்டும் என்ற வழிமுறையைத்தான் தர்க்கம் அளிக்கிறதேயொழிய எவற்றைப் பொருட்படுத்தவேண்டும் என்ற தெளிவை உள்ளுணர்வால் மட்டுமே அளிக்க முடியும்.
புள்ளிவிவரங்களைக் காட்டி வாதிடவரும் பலரிடமும் தொடர்ந்து ஜெயமோகன் வெவ்வேறு சொற்களில் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் உண்மைக்கு இட்டுச்செல்லும் இன்னொரு கருவியாகப் பார்க்கவேண்டுமேயொழிய அவை புறவயமானவை, அறிவியலுக்கு உகந்தவை என்பதற்காக அவற்றை வைத்தே உண்மைகளை உருவாக்க முயல்வதும் அதன்பொருட்டு அனுபவ உண்மைகளையும் உள்ளுணர்வின் குரலையும் முற்றாக ஒதுக்குவோமானால் அது ஆபத்திற்கே இட்டுச்செல்லும்.
தர்க்கத்தின் வடிவமான சட்டத்தைப் பயின்ற காந்தி, கடைசிவரை, ‘அந்தராத்மா’வின் குரலுக்கு செவிமடுத்தே தன் முடிவுகளை எடுப்பதாகச் சொன்னார். அந்தராத்மா என்பதன் நேரடிப்பொருள் உள்ளுயிர். காந்தியின் பல முடிவுகள் எந்த தர்க்கத்திற்கும் உட்படாததாக இருந்தன. நாடுதழுவிய மாபெரும் அகிம்சைப் போராட்டத்தில் எங்கோ ஒரு சிறு சம்பவத்தில் அகிம்சாவாதிகள் வன்முறையில் இறங்கிவிட்டனர் என்பதற்காக ஒட்டுமொத்த போராட்டத்தையே காந்தி நிறுத்தியது காந்தியர்களுக்கும் புரியவில்லை எதிரணியினருக்கும் புரியவில்லை. காந்தி பல முடிவுகளை மனம்போன போக்கில் எடுத்தார் என்பது கோட்சேவின் குற்றச்சாட்டுகளுள் ஒன்று.
காந்தியின் முடிவுகள் தர்க்க ரீதியாக அமையாதபோது அதைத் தர்க்கத்தின் போதாமையாக யாரும் புரிந்துகொள்ளவில்லை, காந்தியின் பிழை, ஆணவம், சர்வாதிகாரம், ராஜதந்திரம், பெரிய திட்டத்தின் ஒரு பகுதி இப்படியெல்லாம்தான் விளங்கிக்கொண்டனர். ஆனால் அதைத்தாண்டி காந்தியின் அந்தராத்மாவின் குரல் அவருக்குச் சொல்லியது என்ன என்று தன் ஒவ்வொரு கட்டுரையிலும் ஜெயமோகன் விளக்கிக்கொண்டிருக்கிறார். இதுவே ஜெயமோகனின் காந்தி என்னைப் போன்றவர்களைத் தைத்ததற்குக் காரணம். காந்தியைத் தன் உள்ளுணர்வுகளால் கண்டுகொண்டதால்தான் அவ்வாறு ஜெயமோகனால் விளக்கமுடிகிறது.
ஜெயமோகனின் படைப்புகளில் – அது புனைவோ அபுனைவோ – தர்க்கமே மேலோங்கியிருப்பதாகத் தோன்றும். தர்க்கத் துல்லியமே அவரது படைப்புகளின் வெற்றி என்றுகூட ஒருவர் எண்ணலாம். நானும் எண்ணியதுண்டு. ஆனால் அவரது படைப்புகள் உச்சம்கொள்ளும் தருணங்களில் அக்கோட்பாடு வேலைசெய்வதில்லை என்பதைக் கவனிக்கலாம்.
“தர்க்கத்தை உள்ளே வைத்து அதைச்சுற்றி மொழியைக்கொண்டு அலங்கார வேலை செய்யப்பட்டவையே தங்கள் புனைவுகள் எனச் சொல்லலாமா?” என்று ஜெயமோகனிடமே நான் கேட்டிருக்கிறேன். “தர்க்கம் எதற்குமேல் போகமுடியாதோ அங்கிருந்து தொடங்குபவையே என் புனைவுகள்” என்று தொடங்கி அக்கேள்விக்கு விரிவாக அவர் பதிலளித்தார். உள்ளுணர்வு என்ற சொல்லை அப்பதிலில் அவர் பயன்படுத்தவில்லை என்றாலும் அது நன்றாகப் பொருந்தி வருவதைப் பார்க்கலாம்.
தர்க்கம் அறிவின் குழந்தை. கூர்மையானது. ஆகவே வெட்டிப் பகுந்து செல்லும் இயல்புடையது. அது காரணகாரியங்களைக் குறித்து அக்கறை கொள்ளுமளவிற்கு விளைவுகளைக் குறித்துக் கவலைப்படுவதில்லை. உள்ளுணர்வோ ஆதியான உயிரின் விளைச்சல். ஆகவே அரவணைத்துச் செல்வது. அதன் எல்லைகளுக்குள் தர்க்கத்திற்கு எவ்வளவு இடமுண்டோ அதேயளவுக்கு தர்க்கமின்மைக்கும் இடமுண்டு. அக்காரணத்தால் சற்று மழுங்கியதாகத் தோற்றமளிப்பது.
சாதி குறித்த அம்பேத்கர் – காந்தி இடையிலான விவாதங்களில் அந்த வேறுபாட்டைக் காணலாம். அம்பேத்கரின் தரப்பு அதிகூர்மையாகவும் காந்தியின் தரப்பு ஒப்பீட்டளவில் மழுப்பலாகவும் தோன்றும். ஆனால் அம்பேத்கர் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் நிராகரிப்பதையும் காந்தி எவ்வகையிலும் அம்பேத்கரை நிராகரிக்காமல் தொடர்ந்து அரவணைக்கவே விரும்புவதையும் கவனிக்கலாம். ஜெயமோகனும் தன்னை நிராகரிக்க வருபவர்களையும் தன் எழுத்துகள், உரையாடல் வழியாகப் பெருமுயற்சியுடன் அரவணைத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு சொந்த அனுபவத்தையே இக்கூற்றுக்கு ஆதாரமாகத் தருகிறேன்.
சந்திரசேகர் ஆசாத் 1931இல் இந்தியாவிற்கு “இன்னும் எத்தனை மாதங்களில் சுதந்திரம் கிடைக்கும்?” என்று நேருவைக் கேட்டபோது, வன்முறைப் புரட்சியாளர்கள் இந்தியாவின் சுதந்திரம் குறித்த நடைமுறைச் சாத்தியமற்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர் என்ற முடிவுக்கு நேரு வந்ததாகவும் அவர்களைக் குறித்த நேருவின் மதிப்பீடுகள் அதன்பின் மாறின என்றும் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
நான் தற்செயலாக ராஜாஜியின் ஜெயில் டைரிக் குறிப்பு நூலை வாசித்தபோது, சந்திரசேகர் ஆசாத் கேட்டதற்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே (1922இல்) அகிம்சைப் போராளிகளும் சுதந்திரம் சமீபித்துவிட்டது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தனர் என நிரூபிப்பதற்கு அந்த நூலில் எனக்கு ஓர் ஆதாரம் கிட்டியது. ஒருவழியாக ஜெயமோகன் தோற்றார் என்று மகிழ்ந்து அவ்விவரத்தைக் கொஞ்சம் நாசூக்காக சந்தேகம் கேட்பதுபோன்ற தொனியில் எழுதி அனுப்பினேன்.
என் கேள்வியின் பின்னிருந்த நோக்கம் அவருக்குப் புரியாமலிருந்திருக்காது. அதற்கு பதிலளிப்பதைக்கூட அவர் தவிர்த்திருக்கலாம். ஒருவேளை அவர் அப்படித் தவிர்த்திருந்தால் தன் தரப்பை பலவீனமாக்கும் கேள்விகளுக்கு ஜெயமோகன் பதிலளிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பேன். அவர் அக்கேள்வியைத் தவிர்க்கவில்லை என்பது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையே சுருக்கமாக விவரித்து, அதன் பின்னணியில் செயல்பட்ட பல்வேறு விசைகளைச் சுட்டிக்காட்டி, நான் குறிப்பிட்ட 1922 காலகட்டத்திற்கு முன்பே ராஜேந்திர பிரசாத்தின் சுயசரிதையில் ‘1917இல் சுயராஜ்யம் மிக அருகே தெரிந்தது’ என்று குறிப்பிட்டிருப்பதையும் எடுத்துக்காட்டி, எவ்வெந்த அடிப்படைகளில் அன்று அகிம்சைப் போராட்டக்காரர்கள் எதிர்பார்ப்பும் வன்முறைப் புரட்சியாளர்களின் எதிர்பார்ப்பும் மாறிமாறி வந்தன என்று விரிவாக விளக்கியிருந்தார்.
அந்த பதில் கடிதத்தை எத்தனைமுறை வாசித்தேன் என்பதற்கு என்னிடம் கணக்கில்லை. ஒரேயொரு தகவலை வைத்துக்கொண்டு அறிவுஜீவியாக முயல்வதற்கும், ஒட்டுமொத்த வரலாற்றையும் நூறு கோணங்களில் பார்க்க முற்படுபவருக்கும் இடையே நிகழ்ந்த அந்த அரவணைப்பு அளித்த ரசவாதம் அற்புதமானது, சொற்களுக்கு அப்பாற்பட்டது. தன்னிடம் கேள்வியை எழுப்பிய மனம் ஏதோவேகத்தில் தடுமாறுகிறது என்பதையும் ஆனால் அது பக்குவப்படும் தன்மையுள்ளது என்பதையும், தன் நேரத்தையும் உழைப்பையும் அதைநோக்கிச் செலவிட்டால் அது வீண்போகாது என்பதையும் எப்படியோ அவருடைய உள்ளுணர்வு கண்டுகொண்டதாலேயே அத்தகைய அரவணைப்பு நிகழ்ந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சிங்கப்பூர் வந்திருந்த ஜெயமோகனை (2016 ஆகஸ்ட்) ஒரேயொருமுறை நேரில் பார்த்தேன். அன்றைய நிகழ்ச்சியில் அவரது உரை அற்புதமாக அமைந்தது. பேரிலக்கியங்கள் காட்டையே விதையாக்கி மாற்றி வைத்துக்கொள்ளும் தன்மையுடையவை, திருக்குறளை சூத்திரங்களாக மாற்றிவாசித்தால் அதுவும் பேரிலக்கியமே போன்ற ஆழ்ந்து யோசிக்கவைக்கும் கருத்துகள் சரமாரியாக வந்து விழுந்தன. பெரிதினும் பெரிது கேட்கும் பல கருத்துகளும் கேள்வி நேரத்தின்போது அவரிடமிருந்து முகிழ்த்தன. என்னிடம் அங்கே கேட்பதற்கு எதுவுமிருக்கவில்லை. அவருடைய இருப்பு எழுப்பிய அதிர்வுகளின் நிறைவே போதுமானதாக இருந்தது.
கூட்டம் முடிந்து ‘இன்றைய காந்தி’ நூலில் கையெழுத்து வாங்கச் சென்றேன். என்னுடைய பெயரைச் சொல்லி புத்தகத்தை நீட்டியபோது, “காந்தி பத்தி கட்டுரை எழுதினது நீங்கதான?” என்றார். காந்தியின் கல்வி, ஆரோக்கிய வாழ்வு குறித்த சிந்தனைகளை முன்வைத்து ‘காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் என் கட்டுரை ஒன்று அப்போது ‘சொல்வனம்’ மின்னிதழில் வெளிவந்திருந்தது. அதை அவருக்கு அனுப்பியிருந்தேன். அதை மனதில் வைத்துத்தான் அவ்வாறு கேட்டார். என்னை அவரிடம் சேர்த்த புள்ளியான காந்தியுடன் இணைத்தே அவர் என் பெயரை நினைவில் வைத்திருந்தார். அவ்வகையில் வட்டம் பூர்த்தியாகிவிட்டது.
ஜெயமோகனுடைய விவாதங்களிலும் கட்டுரைகளிலும் அறிவுக்கூர்மையின் தகிப்பில் அனல் பறக்கிறதேயொழிய அதைத்தாண்டிய கனிவின் அரவணைப்பும், அக்கறையும், வாழ்க்கை மேன்மேலும் அர்த்தமுள்ளதாக மலரும் தருணங்களும் நிகழ்வதாலேயே அவ்வுரையாடல்கள் நீடிக்கின்றன, தொடர்ந்து பெருகுகின்றன. அவருடன் நேரடியாக உரையாடாதவர்களும்கூட மானசீகமான வழிகளில் உரையாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
அவருடைய எழுத்து மொழியைத் தம் சொந்த மொழியாக அவரைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் தன்னையறியாமல் ஏற்பதற்குக் காரணமும் அங்கு நிகழும் உள்ளுணர்வுகளின் ஒருங்கிணைவே. காந்தி, ஜெயமோகன் ஆகியோருக்கு நிகழ்ந்ததைப்போல நம் அனைவருக்குள்ளும் உள்ளுணர்வின் குரல் சன்னமாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது ஆனால் தர்க்கத்தின் உரத்த குரல் உள்ளுணர்வின் மெல்லிய குரலை அமுக்கிவிடுகிறது. அடங்கிப்போன நம் உள்ளுணர்வின் குரலாகத்தான் ஜெயமோகனின் எழுத்துகள் அமைகின்றன. ஆகவேதான் அவரது குரலைத் தம் குரலாகவும் அவரது எழுத்தைத் தம் எழுத்தாகவும் வாசகர்கள் உணர்கின்றனர். தாமும் கைக்கொள்கின்றனர். அவருடனும் தமக்குள்ளும் ஒருங்கிணைகின்றனர்.
ஜெயமோகன் – வாசகர் இடையிலான ஒருங்கிணைவு ஆத்மார்த்தமானதாக, கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாகவும் இருக்கிறது தேவைப்பட்டால் வெளியே வந்தும் செயல்படுகிறது. எந்த எதிர்பார்ப்புகளுமில்லாத, திறந்த மனதுடைய, செயலூக்கமிக்க ஓர் இலக்கிய இயக்கமாக ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ தானாகவே உருவெடுத்ததும் அதன் விட்டம் நாடுகளின் எல்லைகளைக் கடந்து தொடர்ந்து விரிந்துவருவதும்கூட அத்தகைய உள்ளுணர்வுகளின் ஒருங்கிணைவாலேயே சாத்தியமாகியுள்ளது.
(நன்றி: எம். கே. குமார்) |
இத்தகைய ஒருங்கிணைவுக்கு எந்த தர்க்கபூர்வ விளக்கத்தையும் அளிக்க இயலாது. உளவியலில் இதற்கு ‘ஒத்திசையுள்ளுணர்வு’ (synchrocinity) என்று பெயர். இரண்டு நிகழ்வுகள் காரணகாரிய விளக்கங்களுக்கு உட்படாமல் ஆனால் ஒரு தொடர்புடன் நடப்பதை விவாதிக்க சி.ஜி.யுங் (C.G.Yung) வெளியிட்ட இக்கோட்பாடு பின்னாளில் பல்வேறு தளங்களில் அறியப்பட்டுள்ளது. தாய்க்கும் சேய்க்கும் உருவாகும் ஒத்திசையுள்ளுணர்வு ஓர் எடுத்துக்காட்டு. ஜெயமோகன் – வாசகர் இடையேயும் அதுவே நடந்துள்ளது என்பது என் பார்வை.
பொழுதுபோக்கை அளிப்பவர்களாகவும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட அடையாளம் அல்லது அரசியல் தரப்பிற்குப் பின்னால் நின்றுகொண்டு செயல்படுபவர்களாகவும், சிகைபிளக்கும் வாதங்களை வைத்து பூச்சாண்டி காட்டுபவர்களாகவும், மொழிவிளையாட்டுகளில் மொத்தத்தையும் இழந்துபோய்விடுபவர்களாகவும் எழுத்தாளர்களின் தோற்றம் உருவாகிவந்த தமிழ்ச் சூழலில், எழுத்தாளர் என்பவர் அடிப்படையில் ஒரு சிந்தனையாளர் என்று தன் எழுத்துகளாலும் செயல்பாடுகளாலும் மெய்ப்பித்து வருகிறார் என்கிற வகையில் ஜெயமோகன் தமிழிலக்கியத் தளத்தின் அரிதான நிகழ்வுகளுள் ஒன்று.
ஒரே வாழ்க்கைக்குள் ஒருநூறு வாழ்க்கைகளை வாழச் செய்யும் சாத்தியங்களைக் காட்டித்தந்து, சிறுமைகளைச் செயல்பாடுகளால் எதிர்கொள்ள உந்தும் ஜெயமோகனின் எழுத்துகள், அதீத தர்க்கக் கூர்மையுள்ளது என்றாலும் அதன்பொருட்டு ஒருபோதும் உள்ளுணர்வுகளை ஒதுக்கிவிடாததாக அமைந்திருக்கின்றன. அதன்மூலம் நம்முடைய உள்ளுணர்வின் குரல்களை நமக்கே காட்டித்தருகின்றன.
***
சிவானந்தம் நீலகண்டன் |
No comments:
Post a Comment