இருளுலகின் மனிதர்கள் - அரவின் குமார்


மனித மன ஆழத்துக்குள் உறைந்திருக்கும் கீழ்மைகள் அத்தனையையும் வேர்வரை தொட்டுவிட்டு வரச்செய்யும் அனுபவம்தான் ‘ஏழாம் உலகம்’ நாவலின் வாசிப்பனுபவமாக அமைந்தது. சமூகத்தில் புறனடையாளர்களாகக் கருதப்படும் உடற்குறையுடையோர்கள், பெருநோயாளிகள், பிச்சைக்காரர்களின் அகவுலகும் அவர்களைச் சுரண்டித் தின்னுபவர்களின் கீழ்மையும் என அதிகமும் அறியப்படா இருள் உலகொன்றை ‘ஏழாம் உலகம்’ நாவல் சித்தரிக்கின்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகளுக்கு மாறாக, சுருக்கமும் அழுத்தமுமான புறவயமான சித்தரிப்புடன் யதார்த்த பாணி நாவலாகவே ‘ஏழாம் உலகம்’ அமைந்திருக்கிறது. அந்தப் புறவயமான சித்தரிப்பின் ஊடாக மனிதர்களின் மன இருள் குறித்த ஆழமான பல கேள்விகளை எழுப்புகிறது.

இந்நாவலில் பிச்சைக்காரர்களைச் சுரண்டித் தின்னும் பண்டாரம், நாயர் என முடிவில்லாக் கீழ்மைகளால் நிறைந்த கதைமாந்தர்கள் அமைந்திருக்கிறார்கள். அவ்வாறு முடிவற்ற கீழ்மைகளில் ஈடுபட மனித மனத்தை உந்துவது எது என்ற கேள்வியுடனே இந்நாவலை அணுக முடிந்தது. இந்த நாவலில் கடையில் அமர்ந்து பாயாசமும் சாம்பாரும் உண்ணும் குய்யன் தன்னை மீள மீள நிரபராதி என அழைத்துக்கொள்வான். குய்யன் உணவையே தனக்கான இன்பமாகக் கருதுகிறவன் அல்லது ஆத்மாவுக்கான பிரகாசமாக உணர்பவன். மனிதனின் அடிப்படைத் தேவையான உணவை உண்பதற்குத் தன்னை நிரபராதி என ஒருவன் அடையாளப்படுத்திக்கொள்வது மிகப்பெரும் அவலம். அந்த அவலத்தை நிகழ்த்திப் பார்க்கும் மனிதர்களும் தங்களை நிரபராதிகள் என்றே அடையாளப்படுத்துகின்றனர் என்பது முரண்நகை. அவ்வாறாக தன்னை நிரபராதி என்றும் குற்றமற்றவன் என்றும் தனக்கான நியாயங்களைக் கற்பித்துக்கொள்வதன் மூலமாகவே மனித மனம் கீழ்மையில் திளைக்க முடிகிறது. இந்த நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தான் கீழ்மையில் ஈடுபவதற்கான நியாயங்களையும் சமாதானங்களையும் கொண்டிருக்கிறது. பிச்சைக்காரர்களையும் உடற்குறையுடையோரையும் பெருநோயாளிகளையும் சிறிய ஆத்மாக்கள், கீழானவர்கள் என்றே போத்திவேலு பண்டாரம் எண்ணுகிறான். அவர்களை பிச்சையெடுக்கச் செய்து சுரண்டுகிறான். அவர்களுக்கான தேவைகளாக தான் கருதுபவற்றைத் தருவதன் மூலம் தன் சிறுமையை மறைத்துக்கொள்கிறான். கோவிலில் பூக்கட்டும் தொழில் செய்யும் சமூகப்பின்னணியும் பெண் குழந்தைகள் நிறைந்த குடும்பச் சூழலும் அவனது கீழ்மைக்கான நியாயங்களாகின்றன. இந்த நியாயங்களைக் கொண்டு தனக்கான அதிகாரத்தை பண்டாரம் வகுத்துக்கொள்கிறான்.

எல நக்குத பட்டீ, வாயி நக்குத பட்டீ தொ, தொ, தொ என குய்யன் பாடுவதைப்போல பலவீனர்களைச் சுரண்டும் மனிதச் சிறுமையை நாவலில் ஜெயமோகன் காட்டிச்செல்கிறார். மனிதன் உட்பட அனைத்துப் பொருளும் விலை குறித்தனவாகின்றன. சாதி, அரசதிகாரம் என்பதைப்போல உடலும் அதிகாரத்தை வகுத்துக்கொள்வதற்கான அளவீடாக மாறுகிறது. உடற்குறை என்பது அடிமைப்படுத்திக்கொள்வதற்கான அனுமதியாகிறது. ஆன்மிக நிறுவனங்கள், கொள்கையை முன்னிறுத்தும் இயக்கங்கள், அரசதிகாரப் பீடங்கள் என அனைத்தும் பலவீனர்களை நோக்கி அதிகாரக் கைகளை நீட்டும் சித்திரத்தை அசலாகப் பதிவுசெய்கிறார்.


கொச்சன் நாயர் முதலாளித்துவ ஆதிக்கத்திலிருந்து மனிதர்களை மீட்க முன்னெடுக்கப்பட்ட கம்யூனிச இயக்கத்தின் பின்னணியில் பிச்சைக்காரர்களைச் சுரண்டுகிறான். ஆன்மிக நிறுவனப் பின்னணியில் பிச்சைக்காரர்களை உருப்படிகளாக மாற்றுகிறான் கேசவன். நட்டெலும்பு உடைந்த எருக்கைப் புணர்வதற்காக அழைத்துச் செல்லும் காவலர்கள் அரசதிகாரம் எனும் பீடத்தின் சுரண்டலுக்கான சான்றாகின்றனர். இந்த அதிகாரக் கும்பலின் ஆதிக்கத்தில் கடவுளும் இறைநம்பிக்கையும் வேடிக்கையாகிறது. சமூகத்தின் கூட்டுமனத்தில் எழும் நீதியுணர்வான அறத்தை பொருள் வேட்கையாலும் வாழ்வின்பத்தாலும் தொலைத்துவிடுகின்றனர். பிச்சைக்காரர்களைச் சுரண்டும் பண்டாரம் கோவில் உண்டியலில் பணம் செலுத்தி குற்றத்துக்கு நிகர் செய்ய முயல்கிறான். அறமே வடிவான இறையுருவகங்களின் முன் அறவுணர்வு மழுங்கி உடற்குறையுடையோரை நிறுத்திச் சுரண்டுகின்றனர். பொருளுக்காகவும் வாழ்வின்பங்களுக்காகவும் அதிகாரத்தினால் அறத்தின் கூர்முனையை மழுங்கடித்துக்கொள்கின்றனர். கோவிலில் நேர்ச்சை செலுத்தும் பக்தர்களைப் பார்த்து, “இவுனுக மேல உள்ள பிச்சக்கார ஆண்டிக்கிட்ட பிச்ச எடுக்கானுக” என்கிறார் ராமப்பன். தவறுகளின் பொருட்டு உருவகிக்கும் நியாயங்களுக்கு கடவுளையும் சாட்சியாக்க முயல்கின்றனர்.

இந்நாவல் வாசிப்பில், இருளில் நடக்கின்றபோது மெல்ல பார்வை தெளிச்சி ஏற்படுவதைப் போன்று மனித மனத்தின் கீழ்மைகளின், சிறுமைகளின் சித்தரிப்புகளுக்கிடையே அன்பு, மனிதாபிமானம் ஆகிய விழுமியங்களைத் தேடத் தொடங்கிவிட்டேன். அவை நாவல் கொண்டுவரும் மொத்த இருளுலகச் சித்திரிப்பின் வீச்சுக்கு இடையில் ஆங்காங்கே மெல்லொளி வீசுகிறது. காவல்துறையினரால் வன்புணர்வு செய்யப்பட்டு முதுகெலும்பு ஒடிந்து மருத்துவமனையில் எருக்கு எனும் சரஸ்வதி அனுமதிக்கப்படுகிறாள். அவளை காய்ந்து நொதித்த மலம் ஒட்டிய வண்டியில் மாதவப்பெருமாள் அழைத்துச் செல்கிறான். அந்தத் தருணத்தில் வண்டியை இழுத்துச் செல்லும் பகடை, “பெரும்பாவம் சாமி…” என்று பணம் திணித்த சட்டையையே உதறுகிறான். பண்டாரத்தின் மகள் திருமணச் சாப்பாடு சாப்பிட முடியாததால் ‘சாகப்போகிறேன்’ என அரற்றும் குய்யன் நல்லுணவு சாப்பிட ராமப்பன், அகமது, எருக்கு, சிண்டன் பணம் திரட்டியளிக்கின்றனர். அவன் ஒட்டலில் உண்ணும் உணவின் சுவையைச் சொல்லவேண்டுமென்பதை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். தைப்பூசம் முடிந்து பணமின்றி பழனிமலையிலிருந்து இறங்கும் பாலியல் தொழிலாளிக்கு ராமப்பன் பணம் கொடுக்கிறார். அவ்வாறே, தங்களைச் சுரண்டும் பண்டாரத்தின் மகளின் திருமணத்துக்காக விசனப்படுகின்றனர். உடற்குறைக்காகவும் எளிய தேவைகளுக்காகச் சுரண்டலைச் சகித்துக்கொண்டு வாழும் வாழ்வுக்காகவும் உலகை எல்லா வகையிலும் வெறுப்பதற்கான நியாயம் உள்ளவர்கள் சகமனிதர்களின்மீது அன்பை மட்டுமே செலுத்துபவர்களாக உளத்தால் விரிவு கொண்டு பெரியவர்களாகின்றனர்.

தாயன்பின் வெளிப்பாட்டில் உயிர்ப்பான பாத்திரமாக முத்தம்மை வெளிப்படுகிறாள். தலை பெருத்தும் கை கால் சிறுத்துமிருக்கிற முத்தம்மையைக் கூன் குருடு கொண்டவர்களைக் கொண்டு புணரச் செய்து உடற்குறையுடைய பிள்ளையைப் பெறச் செய்கிறான் பண்டாரம். பிறந்த சில மாதங்களிலே குழந்தையை மற்றவர்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கிறான். விலங்குகளைவிட மோசமாக இணை தெரிவு செய்யும் வாய்ப்புமின்றி பதினெட்டு ஆண்டுகளாக பிள்ளை பெறுவதும் விற்கப்படுவதுமாக இருக்கிறாள். குழந்தை முலைக்கண்ணில் பால் குடிக்கும்போது மனத்தில் திரண்ட வெறுப்பெல்லாம் நீங்குவதாக உணர்கிறாள். “அதுக்குப் பிறவு நாம பிள்ளைய வெறுக்க முடியாது” எனச் சொல்லுமிடத்தில் பேரன்பின் தடத்தை உணர முடிந்தது. பார்வையற்றவனான தொரப்பன் முத்தம்மைக்குப் பிறந்த தன் குழந்தையைத் தொட்டறிய முயல்கிறான். கூன் விழுந்து பார்வையுமற்று இருப்பவனின் ஒருபாதி உடலில் குழந்தை நிறைந்துவிடுகிறது; எங்கோ நினைவில் இருக்கும் குழந்தையின் சிறுநீர் மணம் பரவசமூட்டுகிறது. குழந்தையின் குண்டியையேனும் தொட ஏங்கும் பதைபதைப்பு தந்தைமை எனும் ஒளியைத் தொரப்பனுக்குக் கணநேரம் அளித்து மீள்கிறது. அதற்கு ஈடாகவே தன் மகளின் அழுகையைக் காணப் பொறுக்காது இரவிலே கைவளையல்கள் வாங்கச் செல்லும் பண்டாரத்தின் தந்தைமையும் இருக்கிறது. இதற்கு முற்றிலும் மாறாக, பிச்சைக்காரர்கள் எந்தவிதமான குருதித்தொடர்புகளுமின்றி தங்களுக்குள் அன்பென்னும் கண்ணியை உருவாக்கிக்கொள்கின்றனர். தன்னருகில் நின்று பிச்சையெடுக்கும் பெண்ணை கொச்சன் நாயருக்கு விற்கும்போது, “பிரிச்சுப் போடாதிய நாயரே, பிள்ளையப்போல இருக்கா” என விசும்பும்போது தூய அன்பே கண்ணீராகிறது.

ஜெயமோகன் ‘ஏழாம் உலகம்’ நாவலில் எந்தப் பாத்திரத்தையும் மேல், கீழ் எனும் மதிப்பீட்டுத் தட்டில் வைக்காமல், அவரவரின் தன்மைகளை மட்டுமே சித்திரிக்கிறார். அவ்வாறான சித்திரிப்பில் ராமப்பனும் போத்தியும் பண்டாரமும் ஒரு நிரையில் நிற்கின்றனர். அத்தகைய உணர்வை மன ஆழத்தில் இருக்கும் கீழ்மையின் நுனியைத் தொட்டுவிட்டு மீண்டெழும் தருணங்களின் சித்திரிப்பில் அளிக்கிறார். இறைசன்னிதிகளின் முன்னான மந்திர உச்சாடனங்களும் பூசைத் தொழிலும் பிச்சைக்காரர்களைச் சுரண்டுவதும் தொழிலாக இரண்டும் ஒன்றெனவே பண்டாரம் உள்ளூர எண்ணுகிறார். கோவில் முன் பிச்சையெடுக்கும் முத்தம்மையை ஒருநாளேனும் முழுமையாகப் பார்த்துவிடவேண்டுமெனப் பண்டாரம் கேட்கிறார். சில நொடிகளிலே, அதன் அபத்தத்தை உணர்ந்தவராக, “அவ நாளைக்கு சீன்னு ஒரு காரியம் சொல்லிப்போட்டா பிறவு நாம சீவிச்சு காரியமில்ல” என்கிறார். கீழ்மையென உணர்ந்தபின் மனம் உணரும் ஓங்காரிப்பிலிருந்து தாவும் ஊசலாட்டமே மனிதத்தைத் தக்கவைக்கிறது. இந்த ஊசலாட்டத்தின் எல்லைகளைக் கடந்துவிட்ட போத்தியும் பழனியில் உடற்பாகங்கள் சிதைக்கப்பட்டு உருப்படிகளாக மாற்றப்பட்ட குழந்தைகளைக் காணும்போது தடுமாறிப் போகிறான். அங்கிருந்து அகன்று பேருந்தேறி முருகனை நினைத்து அழுவதும் பின் மகள்களைப் பார்த்து ஆசுவாசமடைவதுமாகக் கீழ்மையைக் கடக்க முயல்கிறான்.


உடற்குறைகளுக்கும் நோய்களுக்கும் நடுவே உள்ளார்ந்த மெய்மையொன்றை ராமப்பன் உணர்கிறார். நிரந்தரமற்ற உடலால் அடையும் இன்பங்களைக் காட்டிலும் நிரந்தரமான ஆத்மா கொள்ளும் இன்பமே மெய்யானது என முன்வைக்கும் பல சித்தர் பாடல்களின் நீட்சியாகவே ராமப்பன் வெளிப்படுகிறார். மாங்காண்டி சாமியும் பிச்சையெடுத்து வாழும்போது பாடுகின்ற சித்தர் பாடல்களை, வேளைதோறும் தானே உணவளிப்போர் முன்னால் பாட மறுக்கிறான். கடவுளை நாயகனாக வைத்து விரகதாபப் பாடல்களைப் பாடி வலிமுனகல்களும் வசைச்சொற்களுமாக உயிர்த்திருக்க மட்டுமே செய்கின்ற மனிதர்களுக்கும் தான் காண்கின்ற மொத்த உலகுக்குமான துயரையும் பாடிக் கடக்கிறார். கோவில் படிக்கட்டில் மற்ற பிச்சைக்காரர்கள், நோயாளிகளுடன் இணைந்து அமர்ந்து இரந்து உண்ணும் வாழ்வில் பெற்ற ஆன்ம விடுதலையை ஆடம்பரம் நிறைந்த ஆசிரமத்தில் தன் முன் மற்றவர்கள் தொழுகின்றபோது இழந்து பிச்சையெடுக்கிறார். “பிச்சைக்காரனுகளுக்கும் ஒரு சாமி வேணுமே, திருடனுக்கும் தேவிடியாளுக்கும் தோட்டிக்கும் சாமி வேணுமே” என எருக்கு சொல்வதைப்போல கைவிடப்பட்டோரின் ஆன்மாவை ரட்சிப்பதையே தனக்கான ஆன்ம விடுதலையாக உணர்கிறார். ஆத்மா தன்னை வெளிப்படுத்தும் வழிகளை தானே தேர்கிறதென்பதை நாயர், “ஆத்மாவுக்க வெளிச்சம்” என்கிறான். “மனசில தாகம் இருக்கனும், அம்பது தாண்டினா மனசிலாக்கும் சங்கதி, ஆத்மாவுக்க தாகம்” என ராமப்பன் மீள மீளக் குறிப்பிடுவதும் புலன்களைத் தாண்டிய நுண்ணுணர்வைத்தான். அதுவே உடற்குறைகளைத் தாண்டி மனிதனை மேன்மையானவனாக ஆக்குகிறது. ஆத்மாவின் வெளிச்சமே உடற்குறையும் நோயும் கொண்ட உடலால் ஆன மனிதர்கள் அன்பால் பெரியோர் ஆகவும் நிறையுடல் கொண்டோர் சுயநலத்தால் கீழ்மை அடையவும் செய்கிறது. இந்த நாவலில் வருமிடமெல்லாம் கீழ்மை நிறைந்த வம்புப் பேச்சுகளைப் பேசி, கீழ்மையில் திளைக்கும் பாத்திரமாக உண்ணியம்மை ஆச்சி அமைந்திருக்கிறாள். அந்தப் பண்பே அவளது ஆத்மாவையும் ஆளுகை செய்வதாகப் புரிந்துகொள்ள முடியும். பண்டாரத்தின் மகளுக்கான வரன் நன்றாக அமையவேண்டுமென ராமப்பனும் அகமது கண்ணுவும் அடைகிற விசனம் என்பது தருக்கங்களுக்கு அப்பாலான நல்லுணர்வினால்தான். தங்களைச் சுரண்டுபவன் மேலும் மெய்யான அக்கறையைச் செலுத்தத் தூண்டுவது தூய அன்பாகவே இருக்கமுடியும்.

மானின் உயிரச்சத்தைப்போல புலியின் பசியையும் முன்வைக்கும்போதே படைப்புகள் உச்சமடைகின்றன. பிச்சைக்காரர்களைச் சுரண்டுகின்ற பண்டாரம் உள்ளூர மகள்களின்மீது பேரன்பு கொண்டவனாக இருக்கிறான். தன் அன்னையின் வடிவமாக இருக்கும் சின்னவள் வடிவம்மை வீட்டை விட்டு ஓடிப்போனபின் பெருஞ்சோகத்தில் ஆழ்கிறான். திருமணமாகி மூத்தவள் கோவிலை விட்டுச் செல்கின்ற வரை அமைதியாக இருந்து பின் வெடித்தழும் விசும்பலில், வெறும் தந்தையென்றாகவே மாறிப்போகிறான். அவன் உடலில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயும் மெல்ல படிக்கட்டில் இன்னொரு பிச்சைக்காரனாக உருமாற்றுகிறது என்பது அறத்தின் ஆடலன்றி வேறில்லை.

இருளுலகின் கைவிடப்பட்ட மனிதர்கள் தங்கள் புறவுலகின் அத்தனை நெருக்கடிகளையும் கேலிகளால் இயல்பாக்கிக்கொள்கின்றனர். மனிதர்களின் கீழ்மைகளையும் கொந்தளிப்பான துயரையும் காட்சிப்படுத்தும்போது மறுபுறம் கேலிகளால் அதை ஊடுபாவாக ஜெயமோகன் நிகர் செய்திருக்கிறார். குய்யனின் வேடிக்கைப் பேச்சுகளும் ராமப்பனின் பகடிகளும் பண்டாரத்தின் நேரடியான வசைக்கேலிகளும் சேர்ந்து நாவலின் கொந்தளிப்பைக் குறைத்திருக்கிறது. இந்த நாவல் அளிக்கும் புறவுலகச் சித்திரிப்புக்கு நிகராக, உரையாடலால் துலங்கிவரும் அகவுலகமும் பெரும் வீச்சை உடையதாக இருக்கிறது. “ஒத்த வெரலு ஒடயோரே, என்றே பொன்னு தெய்வமே” என முத்தம்மையின் அலறல் வாசகனை உலுக்கிவிடக்கூடியது. “விடுடே குய்யா, அவளுக்க ஆத்தாம, மனியன் பேசிப் பேசித்தான்டே மக்கா ஆத்திக்கிட முடியும்… இல்லாமப் போனா என்னத்து இம்பிடு பேசுதானுக…” என நம்பகமான உரையாடலை உருவாக்கிக்கொள்ள குமரித்தமிழின் நுட்பத்தை முழுமையாகவே பயன்படுத்துகிறார்.

தன்மயப்பார்வையில் சுருங்கி மனிதர்களையே விற்பனைப்பண்டமாக்கும் மனிதர்களும் அன்பு செலுத்துவதொன்றே வலியும் இயலாமையுமான உலகைக் கடப்பதற்கான கருவிகள் என்று தெரிந்துகொண்ட எளியவர்களும் என இருவேறு தரப்புகளும் ஒன்றுசேரும் புள்ளியையும் முரண்பாட்டையுமே ஜெயமோகன் ‘ஏழாம் உலகம்’ நாவலில் முன்வைக்கிறார். தன்னைப்போலப் பிறரையும் அன்பு செய் என்பது போன்ற எளிமையான வாசகங்களுக்குப் பின் தேவைப்படும் ஆழமான ஆன்மபலமே நாவலின் தரிசனமாகிறது.

***

அரவின் குமார்

No comments:

Post a Comment