2008 இந்தியப் பயணத்தில் |
“தற்கொலை செய்துகொள்பவர்கள் யாரோ ஒருவரைத் தண்டிக்க நினைக்கிறார்கள், கடுமையான வெறுப்பை அவர்மீது ஏற்றுகிறார்கள், தாங்கள் உணரும் வலியும் வதையும் மறுதரப்பு மீது கவிழ்வதாக எண்ணுகிறார்கள். இதுவே அவர்கள் தீக்குளித்தல், உயரமான இடத்திலிருந்து குதித்தல், ரயில் மீது பாய்தல் போன்ற முறைகளைக் கையாளக் காரணம்” என்றார். தற்கொலை செய்துகொள்பவர்கள் ஏன் தூக்க மாத்திரை போன்ற வலியற்ற முறைகளைத் தவிர்த்து ரயில் முன் பாய்வது போன்ற வலி மிகுந்த வழிகளைத் தேர்வு செய்கிறார்கள் என்கிற எனது கேள்விக்கு ஜெயமோகன் எங்கள் லடாக் பயணத்தின்போது அளித்த பதில்தான் மேற்சொன்னது. இது ஒரு பெரும் எழுத்தாளனால் மட்டுமே அளிக்க முடிந்த பதில்.
கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 150 க்கும் மேற்பட்ட பயணங்களை நாங்கள் இணைந்து மேற்கொண்டுள்ளோம். பயண நாட்களைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 500 நாட்களுக்கு மேல் நாள் முழுவதும் ஒன்றாக பயணத்தில் இருந்துள்ளோம், வெவ்வேறு ஊர்களில் ஒன்றாகத் தங்கியுள்ளோம். இதில் 4 வெளிநாட்டுப் பயணங்களும் அடக்கம். வேறு எந்த இருவரும் இவ்வளவு இணை பயணங்களை மேற்கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆக என் வாழ்வில் நான் அதிகம் நெருக்கமாக இருந்திருப்பது ஜெயமோகனுடன்தான். நான் என் வாழ்வில் மிக நெருக்கமாக அணுகி அறிந்துள்ளவரும் ஜெயமோகன்தான். இக்காலத்தில் மேற்சொன்ன பயணங்கள் தவிர்த்து அவர் மேலும் பல வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணங்களைச் செய்துள்ளார்.
பயணங்களில் நான் பார்த்த இடங்களைவிட அவர் ஆற்றிய சிற்றுரைகள், அளித்த பதில்கள், அவரது ஆற்றல், நகைச்சுவை வேடிக்கைப் பேச்சுகள், அவரின் அவதானிப்பு, அவர் சிந்திக்கும் முறை, அவர் ஆளுமை வெளிப்பட்ட விதம் போன்றவைதான் எனக்கு
ஒருபடி மேலாக நினைவில் நிறைந்துள்ளன.
ரஷ்யாவில் ஒரு கேரள கம்யூனிஸ்டு ஒரு உணவகத்தில் ஆப்பம் கொண்டுவரச் சொல்கிறார்.
தட்டை மட்டும் வைத்துவிட்டுச் செல்கிறார் பரிசாரகர். நீண்டநேரமாகியும் ஆப்பம்
வராததால் நம் கம்யூனிஸ்டு சினம் கொண்டு, “ஏன் இவ்வளவு நேரம்” என்கிறார். அதற்கு பரிசாரகர்,
“ஐயா, உங்கள் முன் ஆப்பத்தை முன்பே வைத்துவிட்டேன்” என்கிறார். கேரள ஆப்பத்தின்
ரஷ்ய வடிவம் காய்ந்து வரட்டி போல இருக்கிறது. இதை முதலாளியிடம் புகார் செய்ய,
“ரஷ்ய கம்யூனிசத்தின் கேரள மாடல்
போலத்தான் இதுவும்” எனப் பதில் அளிக்கிறார். இதை ஒரு வயநாடு பயணத்தின்போது அப்போது
உருவாக்கிக் கூறினார். காருக்குள் வெடிச்சிரிப்பு. ஒரு படைப்பாளி எப்போதும்
எதையும் நமக்குப் படைத்து அளிப்பார். கிட்டத்தட்ட எல்லா பயணத்திலும் இடைவெளியின்றி
சிரித்துக்கொண்டுதான் இருப்போம்.
சிக்கிம், பூடான் (2015) |
பயணத்தில் அவர் எதுவும் படிப்பது இல்லை, பெரிதாக இசை கேட்பது இல்லை. அபூர்வமாகவே தொலை
பேசுவார், அழைப்புகளுக்கு
பதில் அளிப்பார். ஆனால் ஏதேனும் தேநீர் கடையில் நாளிதழ் படிக்கத் துவங்கினால்
சுற்றி நடப்பது எதுவும் அறியமாட்டார். படிக்கும்போது அவரின் வேகமும் கவனமும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். பயணத்தில்
கிடைத்த இடைவெளியில் உறங்குவார். கோவேறு கழுதை குதித்து ஓடும் கப்பிக்கல் சாலை,
இரைச்சலும் சத்தமும் உடைய ஆட்டோ என
எதிலும் ஆழ்ந்து உறங்குவார். இரவு படுத்தபின் பொத்தான் அழுத்தியது போல சில
நொடிகளில் உறங்கிவிடுவார். உறக்கமிச்சமின்றி
காலை எழுவார். குறைவான உடைகள் உடமைகளையே கொண்டுவருவார். அவரின் பயண ஒழுக்கம்
பயிலப்படவேண்டியது.
15 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குச் செல்வதற்காக
அம்பாசமுத்திரம் சென்று தங்கியிருந்தோம். அப்போது எனக்கு கோயில் கட்டுமானம்,
சிற்பம், வரலாறு போன்றவற்றில் ஆர்வமே இல்லை. அங்குள்ள
கோயிலுக்கு ஜெயமோகனுடன் வேண்டா வெறுப்பாகச் சென்றேன். வாயிலில் துவாரபாலகர். “இவர்களின்
கை முத்திரை எதைக் குறிக்கிறது எனத் தெரிகிறதா?” என்றார். எனக்குத் தெரியவில்லை. ஒருவர்
ஏக முத்திரையுடன் இன்னொருவர் ஆற்றுப்படுத்துதலுடன். இறைவன் ஒருவரே என்பது ஏக
முத்திரை. அவர் உள்ளே உள்ளார் என இன்னொரு துவாரபாலகர் கரத்தை பின்னோக்கி காண்பித்த
வண்ணம். இப்படி முத்திரைகள், குறியியல்
போன்றவை உள்ளன என்பதே அப்போதுதான் எனக்குத் தெரியும். உள்ளே காலை தலைக்கு மேல்
உயர்த்தி நடராஜர். இதுவும் நான் அறியாதது. “இது ஊர்த்துவ தாண்டவம், அதாவது ஊழி நடனம். தழல் தலைக்கு மேலே
எரியும், விரிசடை வானோக்கி
எழுந்திருக்கும், அதிவேகத்தில் சுழலும் சிவனின் ஒரு கணம். இது உலகை அழிக்கும் சிவன். இதில் மட்டும் அருள்புரிகரம் இருக்காது. இந்த சிவன் அவயம் அளிக்கமாட்டார்.
ஆனால் சில சிற்பங்களில் அருள்புரிகரமும் இருக்கும். அது அந்த சிற்பியின் தரிசனம்”
என்றார். என் வாழ்வின் முதன்மையான நேரடி அறிதல் அது. உடலெங்கும் நரம்புகளில்
மின்னல் பாய்ந்ததை உணர்ந்தேன். நா உலர்ந்துபோனது. இது நடந்தது நான்
விஷ்ணுபுரம் படிப்பதற்கு முன்பு.
பின்பொருமுறை ஒரு மழைப்பயணத்தில் தான் முதன்முதலில் மேலைத் தத்துவம் பயில
உதவிகரமாக இருந்தது வில் துரந்த்தின் ‘The Story of Philosophy’ என்றார். அது குரு நித்யா பரிந்துரைத்தது. தன்
அறையில் அந்தப் புத்தகத்தையே ஒரு சார்ட் ஆக வரைந்து, அதில் ஒரு தத்துவவாதி, அவர்
சார்ந்துள்ள தத்துவப் பள்ளி, அவரது பங்களிப்பு எனப் பிரித்துக் குறித்துக்கொண்டு
ஒவ்வொரு நாளும் அந்த சார்டைப் பார்த்து மனனம் செய்துகொண்டதாகச் சொன்னார். இதை
ஒருவர் மொழியாக்கம் செய்தால் மேற்குலகத் தத்துவத்தை, அதன் அடிப்படைகளை அறிமுகம்
செய்துகொள்வார், மனதில் பதித்துக்கொள்வார் என்றார். அவரிடமிருந்து அதைப் பெற்று இருமுறை
படித்தேன். பின்னர் பத்தாண்டுக்குப்பின் ஊட்டி குருகுலத்தில் உள்ள தத்துவவாதிகளின்
ஓவியங்களைப் பார்த்து ஒவ்வொன்றாக அவரின் பங்களிப்பு பற்றிச் சொல்லக் கேட்டார். இவர்கள் ‘The Story of Philosophy’ யில்
உள்ளவர்கள்தான். எனக்குச் சிலவற்றைத் தவிர அனைத்தும் மறந்துவிட்டது. ஜெயமோகன்
ஒவ்வொன்றாகத் தொட்டு இருபதுக்கும் மேற்பட்ட தத்துவவாதிகளின் பங்களிப்பு குறித்து
ஒருமணிநேரம் பேசினார்.
நான் அவருடன் பயணிக்கத் துவங்கிய ஆரம்ப ஆண்டுகளில் நான் கேட்க இருக்கும்
கேள்விகள் பற்றி முன்பே கடிதம் அனுப்பிவிடுவேன். தத்துவ, இலக்கிய கலைச் சொற்கள்,
இந்து ஞானம், அவர் படைப்புகள் என பலவகைப்பட்டன அவை. வீடு திரும்பியதும் அவர்
அளித்த பதில்கள் அவர் பேசிய புதிய விஷயங்கள் ஆகியவற்றை என் பதிவேட்டில் குறித்து
வைத்துக்கொள்வேன். பின் அடுத்த பயணத்தில் சென்ற பயணத்தில் அவர் பேசிய விஷயங்கள்,
அவர் பரிந்துரைத்த புத்தகங்கள்
ஆகியவற்றிலிருந்து தேர்வு வைக்கச் சொல்வேன். எங்கள் நெல்லை பயணத்தில் அவர் அளித்த 1500 மேற்கத்திய ஓவியங்கள் உள்ள குறுந்தகடு
மூலம் ஓவிய அறிமுகம் கிட்டியது. Rembrandt முதல் Monet வரை உள்ள
தொகுப்பு அது. “ஒவ்வொன்றாக வலமிருந்து இடம் பின் இடவலம் என ஓர் ஓவியத்தைக்
குறைந்தது 10 நிமிடம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு அங்கத்தையும் கவனமாகப் பார்க்க வேண்டும். பிரதிபலிப்புகளை கவனிக்க வேண்டும்.
இவர் எந்த வகை ஓவியர் என அறிந்துகொள்ள
வேண்டும்” என இதைப் பார்க்கும் முறையையும் கற்பித்தார். இது எனது புற உலகையே
மேலும் வண்ணமயமாகவும் அடர்த்தியாகவும் ஆக்கிவிட்டது. பின் நான் காணும் நிலக்காட்சி
ஓவியத்தையும் ஓவியம் நிலக்காட்சியையும் செழுமைப்படுத்தின. அவருக்கு impressionist
ஓவியர்கள் பிடித்தமானவர்கள். இதுபோல
கர்நாடக இசை கேட்க சிலமுறை திருவையாறு ஆராதனைக்குச் சென்றுள்ளோம். கர்நாடக இசை
மரபு பற்றி முன்பு எனக்கு உயர்வான எண்ணம் இல்லை. எங்கள் பயணத்துக்கு முன்பே சில
குறுந்தகடுகள் கொடுத்து ஒரு நாளைக்கு 2 மணிநேரம் கேட்கச் சொன்னார். துவக்கத்தில் கேட்க சௌம்யா, ஷோபா சந்திரசேகர் போன்றவர்களைப்
பரிந்துரைத்தார். பின்னர் அவரது விருப்பமான மகாராஜபுரம் சந்தானம். இசையில் மூழ்கித்
திளைத்திருத்தல் பற்றிக் கூறினார். தஞ்சைக்கு வரும்போதே 300 பக்க கீர்த்தனைகள் புத்தகம் கொண்டுவந்திருந்தார். நான்கு
நாட்கள் இசை வரலாறு, வாத்தியம்,
கலைஞர்கள் பற்றி மட்டுமே பேச்சு. தினமும்
மாலை தஞ்சை பெரிய கோயில். ஒரு மாலை யாருமற்ற வெளிப்பிரகாரத்தில் தனிமையில் கத்ரி
கோபால்நாத் சாக்ஸ் வாசித்துக்கொண்டிருந்தார், ஜெயமோகனுக்குப் பிடித்தமான ஆபேரி. நாங்கள் மட்டும்தான் ரசிகர்கள். இரண்டு மாதங்கள் இசையில் நடந்துகொண்டே
இருந்தேன். அது இரண்டு மாத ஆலாபனை.
ஒருமுறை ஒரு வனநடையில், “காடுகள், அருவிகள் போன்றவற்றில் பசுமை இருக்கிறது, செல்கிறோம். பாலைவனத்தில் ஏன்
சுற்றுலா செல்கிறார்கள்” எனக் கேட்டேன். “சூரிய உதயமும் அஸ்தமனமும் பாலையில் மணல்வெளியில்
அற்புதமாக இருக்கும். ஒவ்வொரு மணற்பரலும் வைரம் போல மின்னும் ஒரு
பொன்னுலகு போல இருக்கும்” என்றார். Lawrence of Arabia படத்திலிருந்து துவங்கச் சொன்னார். பின்னர் சில
ஆண்டுகளுக்குப் பின் அருகர்களின் பாதையில் தார் பாலைவனம் சென்றோம். முழு நிலவு
உதயம் கிழக்கில், சூரிய அஸ்தமனம் மேற்கில் இடையே ஒரு வைரவெளி. இப்போதும் பாலைவனம்
என்றால் ஜெயமோகன் தன் சொற்களால் காட்டிய பாலைதான் நினைவில் உள்ளது. பின்னர் ‘வெண்முர’சில்
பீஷ்மரின் பயணத்தில் இதைக் கண்டேன்.
ஓராண்டுக்குப்பின் எங்கள் வாகைமண் பயணத்தில் இயற்கையை அவதானிக்கும் முறை பற்றிக்
கூறினார். அது ஒரு வெட்டவெளி தியானம் போல. சூழ்ந்திருக்கும் சமவெளி முன் மௌனமாக
அமர்ந்து முதலில் இடமிருந்து வலமாக மெதுவாகப் பார்வையை நகர்த்த வேண்டும், பின் வலமிருந்து இடம். எண்ண ஓட்டத்தைத்
தொலைத்துவிட வேண்டும். பின் ஒவ்வொரு அலகாக கவனித்து மீண்டும் கண்களை முன்போல
நகர்த்த வேண்டும். நம் மனதில் எண்ணங்கள் தோன்றும், நம் மன ஒழுக்கு கலையும். தொடர்பற்ற விஷயங்களைப்பற்றி
நினைப்போம். சிறிது நேரத்தில் இது கடிது என உணர்வோம். கையால் ஒரு துணியை ஊசி
கொண்டு தைப்பது போல, தைத்தபின்
மீண்டும் கை விலகிச் செல்லும், பிறகு தைக்கத் திரும்பும். ஆனால் ஒரு பத்து
நிமிடத்தில் காட்சி அச்சாக நம்மில் பதிவதை உணர்வோம். நேர்க்காட்சி ஓவியமாவதை
அனுபவித்த அந்த நிமிடங்கள் எனக்கு இப்போதும் மங்காத ஒளிமிக்கவை. பின் எல்லா
பயணத்திலும் இதை வாடிக்கையாகச் செய்கிறோம். கூடவே அவர் பின்பற்றும் சில விதிகள்
உள்ளன. குரு
நித்யா அமைத்தவை இவை. ஓர் இடத்தைப்பற்றி எதிர்மறைக் கருத்து சொல்லக்கூடாது, அது
அருகில் உள்ளவரின் ரசனையைப் பாதிக்கும். இப்போது காண்பதை வேறு இடத்துடன் ஒப்பிடக்கூடாது, அது இப்போதைய
காட்சியைக் குன்றச் செய்யும். தனிப்பட்ட அசௌகரியங்களை, பிரச்சனைகளைப் பேசக் கூடாது,
அது நண்பர்களின் கூட்டு மகிழ்ச்சியைக்
கெடுக்கும். இங்கிருக்கும்போது தொழிலையும் வீட்டையும் சுமக்கக்கூடாது, நம் விடுதலைக்கு அது பெரும் சுமை. பயணத்தில்
குடி அனுமதி இல்லை, அது எல்லா
நொடிகளையும் குடி தொடர்புடையதாக மாற்றும். இவற்றை இப்போதும் பின்பற்றுவதால்
பயணங்கள் செழுமையாகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை வரலாற்று காலத்துக்கு முந்தைய பாறைச்
செதுக்கு ஓவியங்களைக் (petroglyphs) காண்பதற்காக 10 பேருடன்
மகாராட்டிரம் சென்றிருந்தோம். தரையில் ஐந்தடி நீள அகலத்தில் ஒரு கழுகின் சித்திரம்
செதுக்கப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் கால்கள் அகலமான, தலை சூம்பிய கழுகைப்
பார்த்துக்கொண்டிருந்தோம். பிடி கிடைக்கவில்லை. ஜெயமோகன் அங்கு வந்து கால்மாட்டில்
நின்றார். பின், “இது இரட்டைத்தலைக் கழுகு” என்றார். அதாவது
நாங்கள் இரண்டு கால்கள் என எண்ணியது கிழக்கையும் மேற்கையும் நோக்கும் இரட்டைத் தலை.
இது உலகெங்கும் உள்ளது, கர்நாடகத்தின்
சின்னம் இது என விவரித்தார். நாங்கள் தலைகீழாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த
இடத்தில், இவ்வளவு பழகிய பின்னும் இன்னும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் மாயம்
இவரிடம் தீர்வதில்லை என எண்ணினேன்.
கடந்த 15 ஆண்டுகளாக பாலை நிலங்கள், பனி மலைகள், வனங்கள், குன்றுகள், லோக்தக், கண்டிகோடா போன்ற விநோத புவியியல் அற்புதங்கள், பாராமுல்லா, பஸ்தர் போன்ற ஆபத்தான இடங்கள், கும்பமேளா போன்ற திருவிழாக்கள் என இந்தியாவெங்கும் குறுக்கும் நெடுக்கும், மேற்கும் கிழக்கும், மழையிலும் புழுதியிலும், நிலச்சரிவிலும் சென்றுள்ளோம். ‘வெண்முர’சில் இடம்பெறும் அங்கம், வங்கம், கலிங்கம், மாளவம், கூர்ஜாரம், காமரூபம், குருக்ஷேத்திரம் என அனைத்து தேசங்களுக்கும் இணைந்து சென்றுள்ளோம். இருந்தும் அடுத்து மேற்கொள்ளப்போகும் பயணம் எது என்கிற நிரந்தரத் திட்டத்துடன்தான் எப்போதும் இருந்துவருகிறோம். அவர் சிறகுகளை உலர்த்தாத, சலியாத பயணி.
***
ஈரோடு கிருஷ்ணன் |
Fantastic account!
ReplyDeleteஜெயமோகன் ஒரு பெரும் பசி கொண்ட ராட்சசன் போல எழுதுவதற்கெல்லாம் காரணம், அவரிடம் இயல்பாக அமைந்துள்ள வற்றாத உற்சாக குணம். உங்கள் கட்டுரை அந்தத் தீவிரத்தை மாற்றுக்குறையாமல் காட்டுகிறது. அருகிருந்த பார்த்து அனைத்தையும் உள்வாங்கி எழுதியுள்ளீர்கள். உங்களிடம் இன்னும் நிறைய தகவல்கள் எஞ்சிக் கிடக்கின்றன என்று தோணுகிறது.
ReplyDeleteகோ.புண்ணியவான்.