“ஏதோ சையன்ஸ் ஃபிக்ஷன் கதையில் வர்ற மாதிரி இருக்கு” என்று வெகு இயல்பாக என்னருகில் இருந்தவர், 2020ல் ஏப்ரல் மாத சாலைகள் வெறிச்சோடியதைப் பார்த்துச் சொன்னபோது சட்டென்ற வியப்பில் மனம் திறந்துகொண்டது. இதுநாள் வரையில் அறிபுனைவு கதைகளென்றாலே மனதில் விரைந்து ஓடக்கூடிய ஒரு சில சித்திரங்களில் முதன்மையானவை பேரழிவிற்குப் பின் வெறிச்சோடிப் போகும் சாலைகளும் மரண ஓலங்களும் கேட்பாரற்றுக் கிடக்கும் இல்லங்களும் பொருட்களும். ஒரு அறிபுனைவு கதையாளன் விரித்து வைத்திருக்கும் கதைச் சட்டகத்தில் நாம் நடமாடிக்கொண்டிருப்பதைப் போன்ற பிரமை தோன்றியது.
உலகம் முழுதும் ஒரு பெரும் வாசக கூட்டத்தினரால் அறிபுனைவு கதைகள் கொண்டாடப்படுவதும் மற்றொரு கூட்டம் முற்று முழுதாக அவற்றை சீரிய வாசிப்பிற்குள் வராதவை என்று ஒதுக்குவதற்கும் முக்கிய காரணம் அறிபுனைவு கதைகள் பெரும்பாலும் மிகுபுனைவு கதைகளே என்பதால்தான். பெரும் சாகசங்களுடன் எதார்த்தத்திற்கு நேர் மாறாகப் புனையப்படும் கதைகள் சாகச விரும்பிகளாலும் கற்பனையின் வீரியத்தை உரசிப் பார்க்கும் மனம் கொண்டவர்களாலும் அதிகம் வாசிக்கப்படுகின்றன. பறக்கும் வாகனங்கள், மிதக்கும் கட்டிடங்கள், அறிவியல் கூடத்திலிருந்து எதிர்பாராமல் வெளியேறிய பயங்கர மிருகங்களும் கிருமிகளும் அவை உண்டாக்கும் அழிவுகளுமென இலக்கியத்தின் மையக் கூறுகளைச் சற்று ஒதுக்கிவிட்டு வேறொரு தடத்தில் ஓடத்துவங்கின.
அறிவியல் சாத்தியங்களுக்கு மிக அண்மையாகவும் இலக்கியத்தின் தனித்தன்மைகளை தன்னகத்தே அமையப்பெற்றிருப்பதுதான் அறிவியல் புனைகதைகளின் ஆன்மாவாக இருக்க முடியும். இலக்கிய விமர்சகர்கள் தொடர்ந்து அறிவியில் புனைவு எது என்பதை விளக்க முயன்றுகொண்டிருந்தாலும் மிகுபுனைவுகளும் வரலாற்றுப் புனைவுகளும் சாகச கதைகளும் அறிபுனைவிற்குள் வராது என்பதை மட்டும் தொடர்ந்து தீர்க்கமாக மறுத்து வருகின்றனர். “விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உண்டாகும் மாற்றங்கள் மனித வாழ்வை எவ்வாறு அசைத்துப் பார்க்கிறது என்பதை புனைவின் வழி ஆராய்வதுதான் அறிபுனைவு” என்றார் ஐசக் அஸிமோவ். மனித மனங்களை உற்று நோக்கும் ஒரு இலக்கியவாதி, அறிவியல் மற்றும் அதன் செல்திசை, புற உலகின் மாற்றங்கள் என்பனவற்றை அறிந்தும் கற்பனையில் விரித்துக்கொள்ளும் புனைவு மனமும் கொண்டிருந்தால் அறிபுனைவு கதைகளைப் படைக்கக்கூடும். வருங்காலத்தில் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபணம் செய்யக்கூடுமளவிற்கு, கோட்பாட்டளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க, எதிர்காலத்தில் நிகழக்கூடிய அறிவியல் சாத்தியங்களை அறிபுனைவு கொண்டிருக்க வேண்டும். எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதைகளில் தோன்றிய விஞ்ஞானக் கருவிகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் பல இன்று நடைமுறையில் உள்ளன. ‘Palm top’ எனப்படும் உள்ளங்கை கருவி, மேசைக் கணிணிகள் பரவலாக அறியப்படுவதற்கு முன்னரே தனது சிறுகதைகளில் அறிமுகப்படுத்திவிட்டார். ஆனால், இந்த அறிவியல் வேகம் அல்லது அது மனிதர்களுக்கு அமைத்துக் கொடுக்கும் தளம் எவ்வாறு மனித அகங்களில் பல்லாண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் கேள்விகளுக்கும் சிடுக்குகளுக்கும் விடையாகவோ பெருமூச்சு கொள்ளும் வெளியாகவோ அமையும் என்று அவரது கதைகள் ஆராய முற்படாததால் அவை சாகச உணர்வைச் சுண்டிவிடும் கதைகளாக மட்டுமே அமைந்துவிட்டன. ‘ஜூனோ’ நாய்க்குட்டி கொடுக்கும் பரவசத்தை மட்டுமே தந்து நிறுத்திவிட்டது. உதாரணமாக, தொழில்நுட்பத்தின் வீச்சில் புத்தம்புது கையடக்க கருவிகளும், செயலிகளும் தலைமுறைகளாக உள்ளுறைந்து கிடக்கும் பலவீனப்பட்டவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பெண்களையும் நம் பண்பாடு அறிந்திராத ஒரு கட்டற்ற வெளியில் திறந்துவிடும் என்ற சிந்தனை இருபது வருடங்களுக்கு முன்னதாகவே ஒரு அறிபுனைவிற்கான சாத்தியத்தை உருவாக்கியிருக்க முடியுமென்று தோன்றுகிறது. இன்றைய இருமண வாழ்க்கைச் சிக்கல்களுக்கு, பெண்கள் கடந்து செல்லும் வேகத்தை ஒரு ஆண் மனது உள்வாங்க முடியாமல் எவ்வளவு திணறித் தவிக்கிறது என்பதையே உளவியலாளர்கள் காரணமாகச் சுட்டுகின்றனர். உலகமெங்கும் புனைவாசிரியர்கள், வீட்டிற்குள் அன்றாட வாழ்வில் நாளைய விஞ்ஞானம் மென்மையாக எத்தகைய உடைசல்களை ஏற்படுத்தும், கலாச்சார புத்துருவாக்கங்கள் எவ்வாறு அமையும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. உண்மையில், நேற்று தவறவிட்ட அறிபுனைவில் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஆனால் அறிபுனைவு கதைகளின் தொடக்கத்திலிருந்து இன்று வரை இரு பெரும் போக்குகள் இவ்வகைமையை பெரும்பாலும் ஆட்கொண்டிருக்கின்றன. நாவல் என்ற வடிவம் உருக்கொள்ளத் தொடங்கிய காலத்தில் வெளிவந்த மேரி ஷெல்லியின் “ஃப்ராங்கன்ஸ்டைன்” அறிபுனைவு கதைகளின் முன்னோடி என்று இன்று கருதப்படுகிறது. இந்நாவலின் வெற்றி இருநூறு ஆண்டுகள் கடந்தும் தொழிற் புரட்சியையும் உலகப் போர்களையும் மீறி அறிபுனைவு கதைகளின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அறிவியல் துணை கொண்டு ஒரு அதிமனிதன் உருவாவதும் அவன் இவ்வுலகத்தை அழிக்கவோ அல்லது மீட்பனாக செயல்படுவதோ பெரும்பான்மையான கதைகளின் மையமாகத் தொடர்ந்தது. அறிவியல் கூடத்தில் உருவாக்கப்படவில்லையென்றால் அவன் வேற்று கிரகத்திலிருந்து வருவான். பெரும் சக்தி படைத்த வேற்று கிரக மனிதனோ மிருகமோ ஏதோவொரு வகையில் “ஃப்ராங்கன்ஸ்டைனின்” நீட்சியாகத்தான் வெளிப்பட்டது. இந்த அதிமனிதன் அல்லது அறிவியல் மனிதன் சில கதைகளில் குழந்தை மனம் கொண்டவனாகவும், சிறந்த காதலனாகவும், தலைக்கு மேலே தன்னைவிட ஒரு உயர்ந்த உலகம் உள்ளது என்பதை பூமிக்கு உணர்த்துபவனாகவும் என இயல்பை மிதமிஞ்சி மிகுபுனைவின் எல்லையைத் தொடும் அறிவியல் கதைகளே முதற்பெரும் அலையாக இருந்தது. தானியங்கிப் பொறிகள் பழக்கத்திற்கு வந்தவுடன் இந்த அதிமனிதன் இயந்திர மனிதனாக மாற்றம் கொண்டான். “ஃப்ராங்கன்ஸ்டைன்” ஒரு படிமமாக உருக்கொண்டு இயந்திர மனிதனில் வெளிப்படத் தொடங்கினான்.
அறிபுனைவின் புது அலை தொடங்கியபோது ‘அறிவியல் மனிதனை’ விடுத்து புத்துலகம், பேரழிவு என்று அது மீயதார்த்தவாதத்தை தொட்டு நின்றது. பெருமளவு அரசியல் பிடிப்புகளையும் மத நம்பிக்கைகளையும் உடைத்துத் தோன்றும் ஒரு உலகைக் கற்பனை செய்யும் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. இணை உலகம் ஒன்றைப் படைத்து அதில் முதலாளித்துவத்திற்கும் இனப்போர்களுக்கும் எதிரான குரல்களை ஒலிக்கச்செய்தனர். அண்டப் பெருவெளியின் ஏதோவொரு புது கிரகத்தில் பெண்கள் கிளர்ந்தெழுந்து சர்வாதிகாரிகளை அழித்து மனித இனத்தைக் காக்கிறார்கள். பதின்பருவ இளைஞர்கள் தங்களைப் பழித்துப் பேசிய உலகை உய்விக்கிறார்கள். இவை அனைத்தும் அரசியல் அல்லது ஒரு சமூக சித்தாந்தத்தின் கிளர்ச்சியாகவே படைக்கப்பட்டன. பேரழிவிற்குப் பிறகு பூமி மீண்டும் தன் வேர்களைத் தேடிச்செல்லும் சூழலியல் சார்ந்த அறிபுனைவு படைப்புகளும் அதிகம் வரத்தொடங்கின.
அறிவியல் மனிதனை மறந்து அறிவியலுக்கெதிரான ஒரு சாமானியன் நிகழ்த்தும் சமர்களாகத் தொடர்ந்துகொண்டிருந்த அறிபுனைவு இயக்கம், அந்த அலை ஓய்ந்து கடந்த இருபது ஆண்டுகளில் அவனை நேரெதிர் கோணத்தில் உருவகிக்கத் தொடங்கியது. ‘Cyeberpunk’ என்று அழைக்கப்படும் இக்காலகட்டத்தை தமிழில் மிதமாக “இணையப் போராளி’ என்று வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம். ‘Punk’ என்ற சொல் போராளி, தனித்தவன் என்றும் பொறுக்கி, ரெளடி என்று வசையாகவும் பொருள்படும். கலகக்காரன் என்ற அர்த்தத்தில்தான் சைபர்பங்க் இன்று புழக்கத்தில் உள்ளது. ‘Punk’ என்ற பெயரில் கலகக்கார இசைக்குழு ஒன்றும் பிரபலமாக இருந்தது. இவன் ஒரு வகையில் அதிமனிதனுக்கு நேரெதிர் உரு கொண்டவன். ஒடுங்கியவனாகவும், வலுவற்றவனாகவும், உடற் களத்தில் வெல்லும் தீரம் அற்றவனாகவும் இருப்பான். ஆனால், இருண்ட அறையில் கணிணித்திரையின் முன்னமர்ந்து மொத்த உலகத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆற்றல் மிக்கவன் அவன். சத்தமில்லாமல் வேறொரு வடிவத்தில் மீண்டும் ‘ஃப்ராங்கன்ஸ்டைன்’ அறிபுனைவிற்குள் நுழைந்துவிட்டான்.
இலக்கிய நுண்ணுணர்வுள்ள ஒரு வாசகன் இந்தக் கதைகள் வணிக எழுத்தின் சாயலைப் பெரிதும் கொண்டுள்ளதாக உணரத் தொடங்குவான். இதற்கு முக்கிய காரணம், பெரும் பாய்ச்சலுடன் எழுந்த அறிபுனைவு வடிவம் பொதுவான மையங்களையே சுற்றிச் சுற்றி வருவது சலிப்பைக் கொடுக்கிறது. ஆனால் அதுவே பெருமளவிலான பொழுதுபோக்கு வாசிப்பிற்கு உற்ற துணையாகவும் இருக்கிறது. இரண்டாவது, இந்தக் கதைகள் அனைத்தும் எந்நிலத்திற்கும் உரியனவாக இருப்பது. மீண்டும், இது உலகளாவிய வாசகர்களைச் சென்றடைய உதவுகிறதேயன்றி, எம்மண்ணிலிருந்து வாசித்தாலும் தென்னமெரிக்க வெயிலைச் சுவாசிக்கவும், பிரெஞ்ச் பழரசத்தைச் சுவைக்கவும், ரஷ்யாவின் குளிரில் தோயவும் பழகிய இலக்கிய வாசகனுக்கு சாகசத்தை மீறி அளிப்பதற்கு இவற்றிடம் ஏதுமிருப்பதில்லை. நிச்சயமாக, மனித மனத்தின் ஆழங்களையும், அவன் ஏங்கித் தேடும் விடைகளையும் சுட்டிக் காட்டும் பல உலக அறிபுனைவு கதைகள் உண்டுதான். ஐசக் அஸிமோவ், ரே பிராட்பரியில் துவங்கி சமகாலத்திய டெச் சியாங் வரை பலர் இலக்கிய நயமிக்க கதைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களால் அறிவியல் முன் மனித மனத்தை நிறுத்த முடிந்ததே ஒழிய அம்மனிதனின் மரபையும் பண்பாட்டையும் இக்கதைகளுள் ஊடுருவச் செய்ய முடியவில்லை. அறிவியல் முன்னேற்றத்தில் உச்சியில் ஒற்றைக் காலில் நின்று எம்பிக் கொண்டிருப்பவர்கள்தான் எனினும், வேற்று கிரக வாசி வருவதும், உலகம் அழிவதும் லண்டனிலும் நியூ யார்க்கிலும் மட்டுமே மையம் கொண்டிருந்தன. அந்நிலத்திற்குரிய சவாலாகவும் கூட அவை வெளிப்படாமல் பெருநகரங்கள் என்ற அளவில் மட்டுமே கதையில் தோன்றும் நிலத்திற்கும் பண்பாட்டிற்கும் தொடர்பிருந்தது.
இந்தியாவில் அறிபுனைவு கதை எழுத முனைந்தவர்களும் கூட இவ்வெளிநாட்டுப் பிரதிகளையே நகலெடுக்கத் தொடங்கினர். இந்தியப் புராண கதாபாத்திரங்கள் அறிவியல் துணை கொண்டு, இந்தியாவின் ‘ஃப்ராங்கன்ஸ்டைனாக’ வரத் தொடங்கினான். வேற்று கிரகவாசி தில்லியில் வந்திறங்கி நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தினான். பல இந்திய அறிபுனைவு கதைகள் பேய்க் கதைகளின் சாயலைச் சென்றடைந்துவிடுகின்றன. அல்லது அறிவியல் தொழில்நுட்பங்களைப் பாடமாக படைத்துவிடுகின்றன. பல கதைகள் அறிவியல் ஆசிரியர்களாலும் விஞ்ஞானிகளாலும் பொழுதுபோக்காக எழுதப்பட்டவை என்பதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். வங்கத்தில் சத்யஜித் ரே முயன்று பார்த்த அறிபுனைவு சிறுகதை வரிசையும் கூட குழந்தைக் கதைகளாகவே தேங்கிவிட்டவை. அக்கதைகளில் வரும் விஞ்ஞானி ‘புரொஃபஸர் ஷோங்கு’ இன்றும் வங்காளத்தில் குழந்தைகளிடையே பிரபலமான கதாபாத்திரம். விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இந்தியாவில் அறிபுனைவு கதாசிரியர்கள் தோன்றியிருக்கிறார்கள். ஒப்பு நோக்க பல முக்கியமான அறிபுனைவு கதைகளைத் தந்தவராக எழுத்தாளர் சுஜாதாவை மட்டுமே குறிப்பிட முடியும். தீவிர இலக்கியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதாலும், இலக்கிய இயக்கத்தில் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதாலும் தன் அறிவியல் பின்னணியின் துணை கொண்டு தனித்துவமான அறிபுனைவு கதைகளைப் படைத்திருக்கிறார். இந்தியாவின் அறிபுனைவு கதை வடிவங்களின் முன்னோடி சுஜாதாதான் என்பதாலேயே ஜெயமோகனின் விசும்பு சிறுகதைத் தொகுப்பு அவருக்குச் சமர்ப்பிக்கப் பட்டிருப்பது மிகப் பொருத்தமானது.
புதியவர்கள் நவீன தமிழிலக்கியத்திற்குள் நுழையும் பல வாசல்களில் ஒன்று இன்றும் கூட சுஜாதாதான். நவீன தமிழிலக்கியத்தின் உச்சப் படைப்பாளியான ஜெயமோகனை வந்தடைவதற்கு அது ஒருவகையில் சரியான பாதையாகவும் அமைந்துவிடுகிறது. சுஜாதா தன் பல அபுனைவுக் கட்டுரைகளில் ஜெயமோகனை தொடர்ந்து குறிப்பிட்டு முன்னிறுத்தியிருக்கிறார். இவ்வழி வந்த வாசகர்கள் ‘விசும்பு’ சிறுகதைகளை வாசிக்கையில் சுரீரென இவ்விரண்டு அறிபுனைவு ஆசிரியர்களின் படைப்புகளில் உள்ள வித்தியாசத்தைக் கண்டுகொள்ள முடியும். ஓரளவிற்கு ஒற்றுமைகளையும் கூடத்தான்.
இன்று வரை, ஜெயமோகன் படைத்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் பல அடைந்த உச்சங்களை ‘விசும்பு’ சிறுகதைகள் தொடவில்லையென்றாலும் இவை மிகத் தனித்துவமானவை என்றுணர்வதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும். எளிமையான காரணம், இக்கதைகள் இன்றைய வாசிப்பிலும் பல புதிய திறப்புகளை உண்டாக்கச் செய்யக்கூடியவை. அறிவியல் கோட்பாடுகளைப் படிமமாக்கி அவற்றின் மூலம் மனித வாழ்வை துலங்கச் செய்கிறார். இக்கதைகள் முளைத்து வளர்ந்திருக்கும் அறிவியல் அடிப்படைகளும் கூட பல்வேறு உளவியல் சிக்கல்களுடன் முறுக்கிப் பிணைந்து ஒற்றைச் சரடாகக்கூடியவை. சற்று மயங்கினாலும் இவை அறிபுனைவு கதைகள் என்றே நினைவிலிருந்து அகன்றுவிடக் கூடும். அதீத தொழில்நுட்ப கருவிகளும் விஞ்ஞான கோட்பாட்டு விளக்கங்களும் துருத்தி நிற்காமல், மானுட இருத்தல் - அதன் பொருள், உணர்வுகள், உறவுச் சிக்கல்கள், மரணம் என இலக்கியம் எவற்றையெல்லாம் ஆராயுமோ அவற்றை அறிவியலின் படிமம் கொண்டு இக்கதைகளும் ஆராய்கின்றன. இரண்டாவது, இக்கதைகள் வெறும் சிறுகதைகள் என்றளவில் நின்றுவிடாமல் அறிபுனைவு கதைகளுக்கான மாதிரிகள் என்றே கொள்ளத் தகும். இக்கதைகளின் அதிமுக்கியத்துவம் இதுதான். ஜெயமோகன் மிகச் சொற்பமான அறிபுனைவு கதைகள் எழுதியதும் கூட இக்கருத்திற்கு ஒப்பமாகத்தான் அமைந்துவிடுகிறது. இவ்வொன்பது கதைகள் ஒவ்வொன்றும் அறிபுனைவிற்கான சாத்தியங்களைத் திறந்து காட்டுவதன் மூலம், அறிவியல் படிமங்களைக் கையாளுவதன் வழியை உண்டாக்கி அளிக்கிறார். பிற்காலத்தில் தமிழிலக்கிய மரபில் அறிபுனைவு கதைகளுக்கென ஒரு இயக்கம் தோன்றுமானால் அவை பின்பற்றத்தக்கக் கதை வடிவங்களை இங்கே உருவாக்கி வைத்திருக்கிறார். புது இலக்கிய வாசகனுக்கும் எழுதத் தொடங்கியிருப்பவனுக்கும் ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’, ‘நாவல்’, ‘எழுதுக’ போன்ற நூல்கள் இன்று எவ்வாறு தவிர்க்க முடியாத கையேடாக உள்ளதோ, அறிபுனைவுக்கென அப்படியான ஒரு நூல்தான் ‘விசும்பு’.
அறிபுனவுக் கதைகளின் அடிப்படை விதி அக்கதைகளின் அறிவியல் கூறு நடைமுறை சாத்தியத்திற்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது. நாளை ஏதோவொரு விஞ்ஞானியால் நிரூபணம் செய்யக்கூடிய ஒரு அறிவியல் வாய்ப்பு கற்பனையில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கொரோனா அலையலையாக வந்து தாக்கும் என்பது நமக்கு இன்று பெருவியப்பை அளிக்கும் ஒரு கொடூரம். ஒன்றோ இரண்டோ தடுப்பு மருந்து இக்கிருமியின் கதவை அடைத்து விடாது என்று அனைவராலும் அனுபவித்து அறியப்பட்டுவிட்டது. ‘கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்’ என்று விளையாட்டாகச் சொல்லிச் சொல்லி இன்று அதை உணர்ந்து நம்மை இதற்கு உட்படுத்திக் கொண்டோம். ஒரு கிருமி பல்வேறு மருந்துகளையும் எதிர்த்து கண்ணுக்குத் தெரியாமல் உருமாறிக்கொண்டே சென்று நம்மை விஞ்சத் துடிப்பது எப்படி? அலோபதியும் சித்தாவும் போட்டி போட்டுப் போரிட்டும் முழுமையாகக் கிருமியை வெல்ல முடியாமல் போவது எதனால்? இக்கேள்விகளுக்கு விடையாக இயற்கையுடன் சமரசம் செய்துகொள்ளும் ஒரு சமன்பாட்டை முன்வைக்கிறது ‘ஐந்தாவது மருந்து’ சிறுகதை. ‘இயற்கையின் ஒரு துர்வடிவமான கிருமியை எதிர்த்துப் போரிடுவதைவிட அதைத் தவிர்த்துவிட்டு வாழலாமே’ என்கிறான் சித்த மருத்துவனான தளவாய் தன் நண்பர்களிடம். எய்ட்ஸிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாய் தன் நண்பர்களை அழைத்து அதை அவர்களுக்கு விளக்கிக் காட்டும் உரையாடலின் ஊடாகவே தன் மருந்தை விட தற்போதைய அவசியம் இக்கிருமியுடனான போரை நிறுத்தி அதை விசுவரூபம் எடுக்காமல் விட்டுவிடுவதுதான் என்ற முடிவை வந்தடைகிறான். சித்த மருத்துவ வகைகள் ‘ஜீவம்’, ‘அஜீவம்’ எனத் தொடங்கி இன்று ‘உலோகங்களும் ரசாயனங்களும்’ பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் மீறி கிருமி புது வடிவெடுத்தபடியே உள்ளது. அதனால் தளவாய், நுண்கதிரியக்கத்தின் மூலமாக இக்கிருமியை அழிக்க முடியுமென நினைக்கிறான். அதைப் பரிசோதித்து வெற்றியும் காண்கிறான். ஆனால் இக்கிருமிகள் ஐந்நூறு வருடங்களில் பலவிதமான மருத்துவ முறைகளை மீறி உயிர்த்திருக்கிறதென்றால், கதிரியக்கத்தையும் அது கைக்கொள்ளும் நாள் நூறு வருடங்களில் தோன்றும் என்று உணர்கிறான். உண்மையில் தான் கண்டுபிடித்த நான்காவது மருந்தைவிட எதிர்காலத்தின் தேவையெனத் தோன்றக் கூடிய ஐந்தாவது மருந்து மனித இனத்தை அழிக்கக்கூடும் என நினைக்கிறான். இந்த முன்னுணர்வினாலும் இனி இயற்கையை எதிர்த்து செய்வதற்கொன்றுமில்லை என்ற தெளிவினாலும், இயற்கையோடு இச்சித்தத்தை இணைத்துக்கொள்வதென முடிவெடுத்து சோலைச் சித்தராகிறான். மிக இயல்பான ஒரு சமன்பாட்டை இக்கதை சுட்டி நிற்கிறது. விஷம் மருந்தாகி பின் அது உணவாகவும் ஆகும் அளவிற்கு அதன் ஆற்றல் மட்டுப்படும்போது அதை உண்டு தீமை பல்கிப் பெருகும் சாத்தியம்தான் அதிகம். விஷம் விஷமாகவே இருந்தால் நம்மை எதிர்த்து நிற்கும் மிருகம் நம்மால் அவ்விஷத்தின் மூலமே கையாளக்கூடிய ஒன்றாக இருக்கும். இது ஒருவகையில் அரசியல் சிந்தாந்தமும் கூடத்தான். மருந்துகள் கண்டுபிடிக்கும் அறிவியல் கூடங்களின் பின்னறையில் ஒரு புதிய நோயும் பிறந்துகொண்டுதான் இருக்கின்றது. இக்கதை சித்த மருத்துவ பாரம்பரியத்தை கோடிட்டுக் காட்டி அதன் நீட்சியை கற்பனையில் தொட்டு நிற்கிறது. சித்த பாரம்பரியத்தை அலோபதிக்கு முன்பாக நிறுத்தி உரையாடுகிறது. கோகோ-கோலா கிடைக்காத ஒரு கிராமத்தில் எய்ட்ஸிற்கு மருந்து கிடைக்கிறது. ‘நோபல்’ பெறக்கூடியவன் சித்தனாகி ஒரு சோலையில் தனித்து குடிபுகும் ‘நிலம்’ இக்கதையிலுள்ளது.
தன்னைச் சுற்றியிருக்கும் பொருட்களே அறிவியல் குறியீடாக மாறும் விந்தையை ‘இங்கே, இங்கேயே…’ நிகழ்த்துகிறது. அத்தனை அறிவியல் பொருட்களும் நம்மைச் சுற்றி இறைந்துகிடக்கும் போதிலும் அதன் சாயலை நம் மரபில் தேடும் கண்களை இழந்துவிட்டிருக்கிறோம். செல்பேசியில் அடுத்தவரின் இருப்பிடத்தை நேரலையில் காணும்போதெல்லாம் மாயக் கண்ணாடியில் ஒருவனைத் தேடிப் பிடிக்கும் புராணக் கதைகள் நினைவில் எழாமல் போவதில்லை. வெற்றிலையில் மை தடவி என்ன ஆறுதல்களைத் தேடிக்கொண்டோமோ அது இன்றைய செயலிகள் மூலம் அடைந்துவிடுகிறோம். கோயில் விமானங்களெல்லாம் பல்லாயிர வருடங்களுக்கு முன்பாக வான்வெளி பயணங்களுக்குப் பயன்பட்டது என்று இன்றும் கோயில் பிரகாரத்தை வலம் வருகையில் நாம் பேசிக்கொள்வதெல்லாம் மிகு கற்பனை என்றாலும் அறிபுனைவின் சுவையை அளிப்பவை. இக்கைதையில் ஜெயமோகன் மிக அழகாக மிகுபுனைவின் எல்லையைத் தொடாமல் நின்றிருப்பதால்தான் இது கதையெழுதப் பாடமெடுக்கும் உதாரணக் கதை என்று சொல்லத்தோன்றுகிறது. மலை மீது இருப்பது விண்ணூர்தியின் சக்கரத்தடம் என்ற நாரயணனின் ஊகத்தை டாக்டர் பத்மநாபன் பிடிவாதமாக மறுக்கிறார். வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் கடவுள்களை உருவாக்கிக் கொள்கிறார்கள், சிலர் விஞ்ஞானத்தைப் பிடித்துக்கொண்டு வேற்றுகிரகவாசிகளை கற்பனை செய்துகொள்கிறார்கள் என்கிறார் டாக்டர். விண்ணுலகத்திலிருந்து யாரோ வந்து போன தடயத்தை முழுதாக நம்புபவராக இருக்கிறார் நாராயணன். இதற்கு இன்னொரு பக்கத்தில் மலைமீது இருக்கும் கல்லன் சாமியை பக்தியுடன் வழிபடுகிறான் தொரப்பன். ‘கல்லன் சாமி பெண்ணா பிறந்தவங்களை வந்து பிடிச்சு மானத்திலே ஏற்றிக் கொண்டுபோகும்’ என்று நம்புகிறான் தொரப்பன். இவ்விரு நம்பிக்கைகளுக்கு இடமளித்து உயர்ந்து நிற்கிறது கரும்பாறைகள் கொண்ட இருண்ட மலை, அதன் உச்சியில் ஒரு கல். தனக்குப் பின்னால் ஒரு கல் சுடர்விட்டு ஒளிரத் துவங்கும் மாயையை உணரத் தவறவிடுவது டாக்டர்தான். தன்னைச் சுற்றி ‘இங்கே.. இங்கேயே…’ நிகழும் மாயைகள் எதுவும் தர்க்கம் கொண்டு விவாதிக்கும் டாக்டரின் புலன் வந்து சேராது. தொரப்பனுக்கும் நாராயணனுக்கும் விண்ணையும் மண்ணையும் இணைக்கும் ஒரு சரடு ஏதோவொரு வண்ணத்தில் புலப்பட்டுவிட்டது. ஒரு கருப்புக் கல், பல்லாண்டு காலமாய் சடங்குகளால் கருத்துரமேற்றப்பட்ட ஒரு கல், எத்தனை விதமான குறியீடுகளாய் மாறக்கூடும் என்பதைக் காண்பது எல்லா கண்களுக்கும் சாத்தியமல்லவே.
இத்தொகுப்பின் அதிகம் வாசிக்கப் பெற்ற, தலைப்புக் கதை ‘விசும்பு’ மற்றொரு எளிமையான ‘அசைத்துப் பார்த்தலை’ சொல்கிறது. இங்கு அசைத்துப் பார்ப்பது இயற்கையை, விஞ்ஞானத்தின் துணை கொண்டு. நம் அறிவிற்கு எட்டும், கண்களால் காணும் உண்மைகள் அத்தனையும் நம்மால் அசைத்துப் பார்க்கக் கூடியது என்று நம்பிவிடுகிறோம். பெருங் கற்றலும் நாட்பட்ட உழைப்புமே நம் ஞானச் சேர்க்கை என்ற செருக்கு இயற்கை எனும் பேருருவத்தின் முன்னால் எப்படி வலுவிழந்து போகிறது என்பதைச் சுட்டும் கதை இது. மூன்று வெவ்வேறு அறிதல்முறைகள் முட்டிமோதும் இக்கதையில் அப்பா கருணாகர ராவும் பையன் நஞ்சுண்ட ராவும் விசும்பின் வெவ்வேறு முனைகளில் தம் அறிதல்களைத் தேடித் திரிபவர்கள். அப்பா ராவ், தன் அறிவியல் அறிவைக் கொண்டு அறிய விரும்புவதெல்லாம் படைக்கப்பட்ட ஒவ்வொன்றின் தன்னியல்புகளைத்தான். அதைக் கொண்டு படைத்தலின் அழகை ஆராதிக்கிறார். பறவைகள் அத்தனையும் அவருக்கு வழிபடு தெய்வங்கள். மானுடனால் கைக்கொள்ள முடியாத பருவற்ற பரவெளியில் உலவும் தூய உயிர்கள். பறக்கும் ஒவ்வொரு பறவையும் அவருக்கு விசும்பின் ஒரு துளி. அவரது ஆய்வையும் கூட ஒரு தீவிர அவதானிப்பு என்றே கொள்ள முடியும். மற்ற ஆய்வுகள் ஆய்வு செய்யப்படும் பொருட்களை எப்போதும் தொந்தரவு செய்யக்கூடியது. ஆனால் இவர் கண்டுபிடித்தது ஒரு மணி நேரத்தில் ஒரு வார பிராயமுள்ள கோழிக்குஞ்சுகள் ‘3859’ முறை ‘கியா கியா’ எனச் சொல்லியது என்பதைத்தான். நஞ்சுண்ட ராவின் அறிதல் முறையோ எல்லாவற்றையும் உடைத்துப் பிரித்து ஆராய்ந்து அறிந்துகொள்வது. வானை உடைத்து தன் உள்ளங்கையில் வைத்து அதைப் புரிந்துகொள்ள முடியும் என்று துடிப்பவர் அவர். வலசைப் பறவைகள் பயணங்கள் வெறும் உணவையோ துணையையோ தேடித்தான் என்று மானுட தளத்தில் மனதை வளர்த்து வைத்திருப்பவர். அது அவருக்கு அறிவியல் கொடுத்திருக்கும் இறுமாப்பு. அதை அவரின் ஆராய்ச்சியின் முடிவின் மூலம் இயற்கை உடைத்துவிடுகிறது. மானுடன் அறியாத ஒன்று இங்கு அசையும் அத்தனை இயக்கங்களிலும் ஒளிந்திருக்கிறது என்பதே இயற்கைக்கும் அறிவியலுக்கும் முடியாத போருக்கு மையக் காரணம். பிரபஞ்சத்தை ஒற்றைப் பெரும் பொருளாய் காணும் கண்ணோட்டம் நம் இந்திய மரபிற்கு இருப்பது நம்மாழ்வாரின் பாடல் மூலம் சுட்டப்படுகிறது. ‘…நன்னயப் புள்ளினங்காள்’ இப்புவனம் முழுதும் ஆள எழுந்தவை. அவை எவற்றின் தூது கொண்டு எவரைத் தேடிச் செல்கிறதென்பதை அறிபவர் எவர்? பறவைகளின் காதுகளில் விடுக்கப்படும் அறிவியலின் உத்தரவுகள் இயற்கைச் சமநிலையின் அழிவை நோக்கித்தான் செல்லக்கூடும். இந்த இரு ‘ராவ்’ களின் மத்தியில் கதைசொல்லி இப்பறவைகளை விசும்பினோடு நோக்காமல் தரையில்தான் கண்டுணர்கிறான். அவற்றின் எச்சங்கள் அவனது நாசிக்குப் பழகிப்போனவை. மற்ற கதைகளைப் போலவே இங்கும் இரு எல்லைகளுக்கு நடுவில் நிற்பவன் ஒரு உருவகமாக ஆகிவிடுகிறான். ராவ்களைப் போல அவன் பறந்து பறந்து வெவ்வேறு நாட்டு வானத்தை அண்ணாந்து பார்ப்பவன் அல்ல. நின்ற இடத்திலேயே அவன் சைபீரிய, மங்கோலிய எச்சங்களை மிதித்து நடப்பவன். பரிசோதனை ஒரு பெரிய சமநிலை குலைவிற்குச் சென்றதைக் கண்டு அனைவரும் பதறும்போது, ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…’ என்று பாடியபடி தீவனத்தை அள்ளுவதாக முடியும் இக்கதை, இறுதியில் முற்றிலும் வேரொரு வாசலைத் திறந்து வைப்பது ஜெயமோகனிடத்தில் மட்டுமே வெளிப்படும் உச்சங்களில் ஒன்று.
‘இயற்கையை அசைத்துப் பார்ப்பதிலிருந்து’ அடுத்ததாக ‘இயற்கைக்கு’ முற்றிலும் முரணான ஒன்றை செய்வது ‘பூர்ணம்’ கதையின் அடித்தளம். இக்கதைகளின் வரிசையிலேயே கூட ஜெயமோகன் இச்சிறுகதைகளைப் படைத்ததற்கான நோக்கத்தை ஊகிக்க முடியும். கதைகள் ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாக முளைத்துச் செல்கின்றன. அறிபுனைவு கதையாக்கம், முறித்து ஒடித்து செய்ய வேண்டிய ஒன்றல்ல, மாறாக ஒவ்வொரு மடிப்பிலும் காகிதத்தின் வெவ்வேறு வடிவங்களை வார்த்தெடுப்பதைப் போன்ற நுண்ணிய கலை என்பதை செய்வித்து காண்பிக்கிறார். எது ஒன்றும் முழுமையடையாமல் இருப்பதாலேயே வளர்கிறது, ஜீவித்திருக்கிறது. முழுமையடைந்த ஒன்றின் அடுத்த செயல்பாடு என்னவாக இருக்கும்? டேனியல் கீயெஸ் எழுதிய “Flowers of Algernon” என்ற புகழ்பெற்ற அமெரிக்கச் சிறுகதை இக்கதையில் குறிப்பிடப்படுகிறது. அவ்வமெரிக்கச் சிறுகதையில், பரிசோதனை முயற்சியாக ஒரு இளைஞனின் அறிவுத் திறன் மும்மடங்காகப் பெருக்கப்படும். அவன் தன் நண்பர்களையும் வேலையையும் இழந்து தன் ஆற்றலை முழுதாக உணரும்போது இத்திறன் நிரந்தரமானது அல்ல என்பதை அறிந்துகொள்வான். இப்பரிசோதனையின் குறைகளைக் கண்டறிந்து புத்தகமாக வெளியிடுவான். சிறிது சிறிதாக அறிவாற்றல் இழந்து மனநலம் குன்றியவனைப் போல எல்லோராலும் நடத்தப்பட்டு வெளியேற்றப்படுவான். இக்கதை அடிப்படையில் மனநலமும் அறிவு வெளிப்பாடும் நிரந்தரமானது அல்ல என்பதை உணர்த்துவதாகவும், அவை குன்றியவர்களிடம் சமூகம் காட்டும் பாகுபாடுகளைக் கேள்வி கேட்கும் ஒரு சமூக சிறுகதையாகவும் அறியப்பட்டது. இதே கருவின் அடிப்படையில் தொடங்கும் ‘பூர்ணம்’ சிறுகதையில் டாக்டர், மூளையின் மின்னூட்டத்தை பலமடங்கு பெருக்கும் மருந்தொன்றைக் கண்டுபிடித்து ஜங் பகதூருக்கு அளித்து பரிசோதிக்கிறார். அவன் மூளையின் சிந்தனைத் திறன் பல்லாயிரம் மடங்கு அதிகரிக்கத் தொடங்குகிறது. அவன் திறன்கள் அதன் உச்சத்தை அடைகின்றன. பறவைகளின், பல்லாயிர பூச்சிகளின் மொழிகளை அறிந்துகொள்கிறான். அவனை முழுமனிதனாக்கும் முயற்சியில் டாக்டர் உண்மையில் ஒரு ‘ப்ராங்கன்ஸ்டைனை’ உருவாக்கி விடுகிறார். அத்தனை திறன்களையும் சற்றும் மிச்சமில்லாமல் வளர்த்தெடுக்கும் ஒரு அதி மனிதன். இன்னொரு முனையில் டாக்டர் வேறொரு பரிசோதனையையும் மேற்கொள்கிறார். இப்படி மொத்தமாக அத்தனை திறன்களையும் ஒருவனில் பெருக்குவதற்குப் பதிலாக ஒரு மையத்தை மட்டும் உக்கிரப்படுத்துகிறார். அதுவும் மூளை தன்முனைப்பு கொள்ளும் தன்மையை. இப்பரிசோதனைக்கு ராம்சிங் ஆளாக்கப்படுகிறார். இவ்விரு முனைகளையும் உருவாக்கி ஜெயமோகன் முழுமையான திறன் பெருக்கும் லேசர் கதிரைப் போல ஒற்றைப் புள்ளியின் பெருத்த கூர் தீட்டலுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்திய வேத மரபின் ரிக் வேத வரியைக் கொண்டு கட்டமைக்கிறார். அலையில்லாத மனம் கொண்ட பூர்ணம் எய்திய மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறான். இயற்கைக்கு எதிராக போராடி ஒரு முழு சுற்று வந்து முடிந்ததும் அவன் இப்பெரும் ‘பூர்ணத்தின்’ ஒரு பகுதியாக ஆகிவிடுகிறான். ரிக் வேத வரி சொல்வதைப் போல ‘பூரணத்திலிருந்து பூரணமே பிறக்கிறது’. ஜங் பகதூர் மெளனச்சாமியார் ஆகி அமைந்துவிடுகிறார். முழுமையடையாத பகுதி என ஒன்றுமில்லாததால் மூளை இயக்கத்தை நிறுத்திகொள்கிறது. மனித இயல்பே அற்ற முழு மனிதன் ஆகி விடுகிறான். அதன் எதிர் திசையில் அத்தனையையும் அறிவியல் சாதனைகளின் உதவியில் கைக்கொள்ளத் துடிக்கும் ராம்சிங் பெரும் சர்வாதிகாரியாக உருவெடுக்கிறார்.
‘பித்தம்’ சிறுகதையில் ரசவாத வித்தை புரிய முயல்பவர்களின் மரணத்தின் மறுபக்கத்தில்தான் வித்தை வெற்றியடைகிறது. மிக எளிய விறுவிறுப்பான சிறுகதை போல தோன்றும் இதன் பின்னணியில் ரசவாத வித்தையையும் பிரம்ம வித்தையையும் இரு தட்டில் வைத்து விளையாடிப் பார்க்கிறார் ஜெயமோகன். பண்டாரத்திற்கு தன் ஞானத்தை செயல்படுத்திப் பார்ப்பது மட்டுமே குறிக்கோள். இத்தனை வருடங்களில் பல முயற்சிகள் தோற்ற பின்னும் குத்தலாம் பிள்ளையை பணம் கொடுக்கத் தூண்டுவது எது என்பது மிக நுண்மையான ஒன்று. இக்கதையின் உச்சமே தங்கமாக்கும் வித்தையை முக்குணங்களுக்கு நிகர்படுத்திய விவாதம்தான். இந்த ரசவாத வித்தையை ஏதோ சித்தன் வாக்கு என்ற அளவில் நிறுத்திவிடாமல் இதன் அறிவியலையும் இக்கதை ஆராய்கிறது. அதுவும் மிக அடிப்படையான அறிவியலே. செம்பையும் பாதரசத்தையும் சரியானபடி கலக்க வேண்டும். அது இரண்டும் நின்று கலப்பதற்கு அடிப்படையாக இரும்பு வேண்டும். இது ரசவாத வித்தையென பண்டாரம் சொல்வது. இதற்கு நேராக பிரம்மவித்தையாக முக்குணங்களின் கலப்பு நிறுத்தப்படுகிறது. ரசவாதத்திற்குத் தேவைப்படும் ஒவ்வொரு ‘எலிமெண்டும்’ இம்முக்குணங்களோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது. இரும்பான ‘தமோ’ குணத்தின் மீதுதான் ‘ரஜோ’ குணம் எனும் செம்பும் ‘சத்வ’ குணமான வெள்ளை நிற பாதரசமும் கலக்கப்பட வேண்டும். பண்டாரம் தன் சோதனையின் முடிவில் சுருக்கிட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும்போது, அவன் செருப்பின் நுனியில் பொன் படிந்திருப்பதைப் பார்க்கிறார்கள். இதற்கு இணை கதையாக செட்டியாரும் ரெசம் காய்ச்சும்போது இறந்துபோக, அவர் மரணத்திற்குப் பிறகே பாத்திரங்களில் பொன் மின்னுவதைக் காண்கிறார்கள். நிலையழிந்து முட்டி மோதி தேடித் திரிந்து மானுடனின் முக்குணமும் மரணித்த பின்தான் தூய புதுப் பொன் தோன்றுமோ என்னவோ.
இக்கதை வரிசையில் இயற்கைக்கு அடுத்ததாக மானுட குணங்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு பின் மனித மனமும் மதமும் அடுத்தடுத்த கதைகளில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் சிறுகதை ‘உற்று நோக்கும் பறவை’. உளவியலாளர்களிடத்திலும் தமிழ் கதைகளின் மத்தியிலும் தமிழ் சினிமாவிலும் கூட இன்று மிகவும் பழக்கப்பட்டுவிட்ட ஒரு நோய் ‘மனப்பிளவு’. இந்நோயினால் பாதிக்கப்பட்டு ஒருவன் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறி மாறி செயல்படுவதும், இருமை நிலையிலுள்ள தன் மனத்திடம் போராடுவதும் பலவாறாக எழுதப்பட்டுவிட்டன. இக்கதை அப்படி பிளவுபடும் இரு மனங்களுக்கிடையில் வெல்லும் சாத்தியம் கொண்டது எது என்பதை உபநிடத்தின் அடிப்படையில் அலசுகிறது. காலன்சாமி மனப்பிளவை ஒரு பயிற்சியாக முறைப்படுத்தி சத்வ குணம் மட்டுமே கொண்டு சுக்லனாக வளர்பிறை காலத்திலும், தமோ குணமும் ரஜோ குணமும் கொண்ட சியாமனாக தேய்பிறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். ஆனால் சியாமனுக்கு மட்டுமே சிதறலற்ற தியானம் கைகூடுகிறது. அவர் துவாத்மராக உருவெடுத்து மேலும் பல துவாத்மர்களை உருவாக்குகிறார். முக்குணங்களும் இருண்மையாகப் பிளந்திருப்பதை உற்று நோக்கும் மனம் தனக்குரியதைத் தேர்ந்தெடுக்கிறது. நன்மை என்பதே தீமையைச் செய்யாமல் இருப்பது எனும்போது அவை எல்லாமே எதிர்மறையானவை என்றே ஆகிவிடுகிறது. நவீன உளவியலும் கூட காமமும் குரூரமும்தான் மனிதனின் இயல்பான நிலைகள் என்று அறிவிக்கிறது. சியாமனே வெல்கிறான். ‘ஒரு கிளி பழம் தின்கிறது; பிறிதொன்று பார்த்திருக்கிறது’ என்ற உபநிடத வரி இக்கதையின் ஆப்த வாக்கியமாகவும் அமைகிறது. மனப்பிளவை பயிற்சியாக மேற்கொள்ளும் ஒரு சமூகம் தன்னை உற்று நோக்கி ஒரு மனத்தை தேர்வு செய்யுமானால் அது எவ்வளவு பெரிய அழிவுச் சக்தியாக மாறும்!
ஒரு மனதின் செல்விசையில் முக்கிய நகர்வு என்பது அது தேர்ந்து பற்றிக்கொள்ளும் நம்பிக்கைதான். எதன் அடிப்படையில் அது அந்நம்பிக்கையைப் பற்றிக்கொள்கிறது என்பது தொடர்ந்து விடை காத்து நிற்கும் ஒரு கேள்வி. ‘நம்பிக்கையாளன்’ சிறுகதையில் உலகம் அழிவின் விளிம்பில் இருக்க, மத அடிப்படைவாதிகளில் எஞ்சிய சிலர் பூமிக்கடியில் தன் கடைசிக் கணங்களைக் கழிக்கிறார்கள். தாங்கள் அனைவரும் இறந்தால்தான் இறைவன் தோன்றி இப்பூமியை முழுவதுமாக அழித்து மீண்டுமொரு புத்துலகத்தை பிறப்பிப்பார் என்று நம்புகிறார்கள். அக்கூட்டத்தில் ஒரு இளைஞன் அறிவியலின் பக்கம் சாய்கிறான். மற்றனைவரும் மரிக்க அவன் தனித்து நிற்கிறான். இவன் மட்டும் இருப்பதால் பூமியின் மீது கடவுளின் தாக்குதல் தாமதிக்கக் கூடும். ஆனால் இன்னும் இரண்டு வாரங்களில் அணுக்கதிர்களின் வீச்சு குறைந்து மக்கள் வெளியே நடமாடத் துவங்கலாம் என்ற அறிவிப்பும் ரேடியோவில் வருகிறது. தனித்திருக்கும் இவன் எதன் நம்பிக்கையாளனாக பாதாளத்தில் இருந்து பூமியின் மீது தோன்றப்போகிறான் என்பதே இக்கதையின் முடிவு. அறிவியலுக்கும் பக்திக்கும் நம்பிக்கையே அடிப்படை ஆனால் இரு வேறு எல்லைகளில். எந்த அறிவியல் பரிசோதனையின் தொடக்கத்திலும் நம்பிக்கையே மூலதனமாகிறது, மதஅடிப்படைவாதிகளின் பக்தி இறுதியில் வெறும் நம்பிக்கையின் மேல் தீர்க்கமாக நிறைவடைகிறது. இறுதியில் வந்தடையும் நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பது அநேகமாக இயலாத ஒன்று. அதனாலேயே இன்றும் நம் அன்றாட வாழ்வில் அறிவியலை பின்னுக்குத் தள்ளி அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் மேலெழுந்தபடியே உள்ளது.
சடங்குகள் எப்படி பல நூறு ஆண்டுகள் கழிந்தும் மதங்களையும் ஒரு சில வழக்கங்களையும் தலைமுறை கடந்தும் கடத்தி வருகிறதோ அப்படி மனிதனின் ஆதி இயல்புகளும் எங்கோ அவனுள் உயிர்ப்புடன் உறைந்துவிடுகின்றன. அப்படியான இயல்புகளில் ஒன்று ‘ருசி’. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் நரமாமிசம் சாப்பிட்ட ஒரு மண்ணில் அதன் துளி இன்னும் எங்கோ மிச்சமிருக்கும் என்ற தேடலை முன் வைக்கிறது ‘ருசி’ எனும் இச்சிறுகதை. அறிவியல் மனித வாழ்வில் குறுக்கு வெட்டாக ஊடாடிக் கொண்டிருந்தாலும், அடி வேரின் துளி உயிரைப் போல ஆதி மனிதனின் ஆதார இயல்புகள் எவ்வகையிலேனும் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அதைத் தடுக்கவோ மாற்றியமைக்கவோ அறிவியலால் முடிவதில்லை, மரபணுவை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய சாத்தியம் தோன்றிவிட்ட இந்நாளிலும்.
‘விசும்பு’ சிறுகதை தொகுதியின் அத்தனை கதைகளிலிருந்தும் முற்றிலுமாக வேறுபட்டு நிற்பது கடைசிக் கதை. உண்மையில், இதுவும் சிறுகதைதான் என்று யாராவது எடுத்துச் சொல்லாவிடில், நூல் தொகுப்பின் இறுதியில் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டிருக்கும் ஜெயமோகனின் ஏதோவொரு மேடை உரை என்று கடந்து சென்றுவிடக்கூடும். ஆனால், மிகப் பிரமாதமான பகடியுடன் கூடிய ஒரு மேடை உரை வடிவில் அமைந்திருக்கும் அசாத்தியமான சிறுகதை இது. “தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று, இன்று, நாளை - ஓர் ஆய்வு” எனும் இச்சிறுகதைதான் இத்தொகுப்பிலேயே நீளமானதும். ஜெயமோகனின் கற்பனை ஒரு வரியிலிருந்து மறு வரிக்கு எழுதிச் செல்லச் செல்ல பன்மடங்காக வேகமெடுக்குமென்பதற்கு சாட்சி இச்சிறுகதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எங்கோ ஒரு பிரபஞ்சப் பெருவெளியில் உள்ள ஏதோவொரு கோளில் இருந்து ஏதோவொரு ‘ஜெயமோகன்’ இலக்கியத்தின் முக்கியத்துவத்தை தன் ஆய்வின் மூலம் நிறுவும் உரையை ஆற்றுகிறார். இன்று நாமறிந்த தமிழிலக்கிய வரலாற்றில் துவங்கி கதை தன் போக்கில் வேகமெடுக்கிறது. ‘மின்நவீனத்துவ’ யுகத்தில் உள்சுட்டிகள் நிறைந்திருக்கும் இ.ரா.முருகனின் நாவலை அறிமுகப்படுத்துகிறது. 2065ல் ‘விஷ்ணுபுரம்’ நாவலை ஆர்.ஜீவரத்தினம் என்பவர் சுட்டிகள் மூலம் செறிவுபடுத்தி அதிநாவல் வடிவிற்கு கொண்டு செல்கிறார். 2069ல் ‘பாட்டி’ என்ற செயலி ஒரு கதை முடைவதற்கான ஏராளமான சாத்தியங்களை எழுத்தாளனுக்கு உருவாக்கி அளிக்கிறது. இப்படியே மனித இனம் ஒற்றை மூளையும் ஒரு மனமும் கொண்டதாக மாறிய சூழலில் 2868ல் பூமி அழிந்துபோக மனிதர்களிடத்தில் மீண்டும் தனியடையாளங்களை உருவாக்கும் செயல்வேகம் உண்டாகிறது. பூமியை விட்டுப் பல கோள்களில் சிதறிச் சென்று வாழும் மனிதர்கள் தங்கள் பெயர்களை பின்னோக்கிச் சென்று ‘பழுவேட்டரையர்’ என்றும் ‘ஷேக்ஸ்பியர்’ என்றெல்லாம் சூட்டிக் கொள்கிறார்கள். அப்படி பெயர் சூட்டிக்கொண்ட ‘ஜெயமோகன்’தான் இவ்வுரையையும் ஆற்றுகிறார். ஜெயமோகனின் பார்வைகளில் முக்கியமான ஒன்று நவீன முன்னகர்வுகளில் எவ்வளவு விரைந்து சென்றாலும் நம்மை மீட்கும் ஒன்று நம்முடைய பண்பாட்டின் ஆழத்திலிருந்து வருமென்பது. இக்கதையில் இலக்கியம் வெவ்வேறு கோள்களில் வாழும் மனிதர்களை இணைக்கும் சாத்தியத்தைக் கூறுகிறது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்து இலக்கியம் எத்தனை புதுவடிவம் கொண்டாலும், தன் ஆழ்மன பண்பாட்டு வேரைச் சென்று தொடுவதற்கு மட்டுமின்றி அன்றாட நடைமுறை வாழ்வை தொடர்புபடுத்திக் கொள்ளவும்தான் வாசிப்பு நிகழ்கிறது. தன் வாழ்வை ஒரு எழுத்தாளனாக அமைத்துக்கொண்டு இலக்கியமெனும் இயக்கத்தின் மீது தீராத நம்பிக்கை கொண்ட ஒரு கலைஞனின் குரலை, பகடியும் அறிவியலும் ஊடுபாவி, இக்கதை உரத்து ஒலிக்கச் செய்கிறது.
தமிழிலக்கியத்திற்கு ஜெயமோகனின் கொடையென்பது அவரின் படைப்பிலக்கியத்தோடு நின்றுவிடவில்லை. அவரின் படைப்புகள் நவீனத் தமிழிலக்கியத்தின் உச்சத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவர் தன்னைச் சுற்றி இலக்கியத்தை நோக்கிய ஒரு அமைப்பை உருவாக்கியிருப்பது நூறாண்டுகளில் பலராலும் சாத்தியப்படாதது. தன் அத்தனை செயல்பாடுகளும் ஏதோவொரு வகையில் வழிகாட்டுதலாக அமைய வேண்டுமென்பதில் மிகுந்த கவனம் கொண்டிருக்கிறார். அவ்வகையிலும் கூட ‘விசும்பு’ சிறுகதை தமிழ்ச் சிறுகதை மரபில் அறிபுனைவு வகைமையில் உச்சத்தை தொட்டுவிடுகிறது. வாசித்துச் சலித்த உலக அறிபுனைவு சிறுகதைகளிலிருந்து உயிர் மூச்சை கண்டுவிட்டதைப் போன்ற உவகையை இக்கதைகள் அளிக்கின்றன. இந்திய ஞான மரபும், சித்த மரபும், பண்பாட்டு மரபும் இக்கதைகளில் முக்கிய தளமாக அமைந்திருக்கின்றன. அறிவியல் ஒரு சிறு கூறாக இப்புனைவில் சேர்ந்துகொள்கிறது. அதனாலேயே இவை ‘நம்’ கதைகளாகி விடுகின்றன. நூறு ஆண்டுகளாக உலகம் முழுதும் வளர்ந்து பிரபலமடைந்திருக்கும் எந்த அறிபுனைவு கதைகளுக்கும் மேலே சென்று நிற்கக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன இக்கதைகள். ஆகாயத்தில் முந்திக்கொண்டு முதலில் மேலெழும் ஒற்றை மீனைப் போல முதல் ஒளி பரப்புவது ஜெயமோகனின் இயல்பு. வடிவ நேர்த்தியுடன் ‘விசும்பு’ சிறுகதைகளை வார்ப்புருக்களெனப் படைத்திருக்கிறார். இம்மாதிரிகளில் பல்வேறு படிமங்களுடன் படைப்பு மனங்கள் உருகி வழிந்து நிரப்பினால் உலகின் சிறந்த அறிபுனைவு கதைகள் தமிழில் தோன்றுவது நிச்சயம். வாசிப்பின் ஆனந்தமும், தோழமையின் அரவணைப்பும், ஆசிரியனாக நெறியையும் எந்நாளும் அளித்து நிறைக்கும் அன்பின் ஜெயமோகனுக்கு வாழ்த்துக்கள்!
***
நரேன் |
No comments:
Post a Comment