இறைவனும் ஆராதகனும் - சுசித்ரா


1

சமீபத்தில் ஜெயமோகனின் வழித்தோன்றல் என்று நிரூபிக்கும் வகையில் எனக்கும் ஒரு சர்ச்சையில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாண்டு தொடக்கத்தில் அவரது ‘ஏழாம் உலகம்' நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து முடித்தேன். அதன் பதிப்பு சார்ந்து வெவ்வேறு பதிப்பாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு முன்னணி பதிப்பகம், உலகெங்கும் அறியப்படும் பெயர், அங்கிருந்து ஒரு தொகுப்பாசிரியர் அழைத்தார். இளம் வங்காளப் பெண். நான் அனுப்பியிருந்த பிரதி அவரை மிகவும் பாதித்திருந்தது. பதிப்பகத்தின் மூத்த தொகுப்பாசிரியர் குழுவிடம் நாவலை பிரசுரிக்கலாம் என்று பரிந்துரை செய்தார். அந்தக் குழு மறுத்துவிட்டனர். நாவலை படிக்கவில்லை, திறந்துகூட பார்க்கவில்லை. ஜெயமோகன் என்ற பெயரை கேட்டவுடன் மறுத்துவிட்டனராம். 

ஏன் என்றேன். ‘அந்த ஆசிரியர் பெண்களுக்கு எதிராக ஏதோ சர்ச்சையான கருத்துகள் சொல்லியிருக்கிறாராமே?’ என்றார் அந்தப் பெண். நான் ‘பெண்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, அது பெண் எழுத்தாளர்கள் சிலரை நோக்கிய விமர்சனக் கருத்து' என்றேன். அது அவருக்குப் புரிந்தது. ஆனால் மேலிடத்தில் உள்ளவர்களிடம் எடுத்துச்சொல்லும் இடம் அவருக்கு இல்லை. ‘பெண்களே அவரை எப்படி மொழிபெயர்க்க முன்வருகிறார்கள் என்று அவர் ஆச்சரியப் படுகிறார்,’ என்றார். ‘எதற்கும் நீங்கள் ஒரு தன்விளக்கக் கடிதம் எழுதுங்களேன்?’ ‘எதை விளக்க வேண்டும்? என்ன குற்றச்சாட்டு?’ என்றேன். ‘பொதுவாக…’ என்றார். நான் கடுப்பானேன். அவர் என்ன பள்ளிக்கூடத்தில் சேட்டை பண்ணிவிட்டு வரும் பையனா, இல்லை நான் தான் அவர் அம்மாவா, ‘நல்ல புள்ளதாங்க' என்று எழுதித்தர?  ‘நீங்கள் பதிப்பிக்க வேண்டாம் பரவாயில்லை’ என்று சொன்னேன். ‘இல்லை, ஜெயமோகன் ஆங்கில பதிப்பு உலகுக்கு தவறான முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அதை சரி செய்ய இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்,’ என்றார்.    


எனக்கு தொகுப்பாசிரியரின் நோக்கம் புரிந்தது. அவர் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் என் கடிதத்தில் அவர் எதிர்பார்த்தது போல ‘ஜெயமோகன் ஒரு செக்ஸிஸ்ட் அல்ல' என்று நேரடியாக எழுதவில்லை. ஒன்று, அந்த கூற்று உண்மையா இல்லையா என்று எனக்கு எப்படித் தெரியும்? இரண்டாவது, செக்ஸிஸ்டாகவே இருந்தால் தான் என்ன? அந்த பதிப்பகம் ஜெயமோகன் சொன்னதாக கூறப்படுவதை விட பற்பல மடங்கு காரமான செக்ஸிஸ்ட் கருத்துகளைச் சொன்ன வி.எஸ்.நைபாலையே பிரசுரித்துள்ளது. நோபல் பரிசு வாங்கிய ஆங்கில எழுத்தாளருக்கு அந்தச் சலுகை உண்டு பிராந்திய மொழி எழுத்தாளர்களுக்குக் கிடையாது போல. 


நான் உள்ளதைச் சொன்னேன். ஜெயமோகனின் விமர்சன அளவுகோல்கள் என்ன எதன் அடிப்படையில் அவர் சில பெண் எழுத்தாளர்களை விமர்சிக்கிறார் சில பெண் எழுத்தாளர்களை ஏற்கிறார் என்று. அது உண்மையில் பெண்ணெழுத்து என்ற வகைமையின் எல்லைகளை மட்டும் அல்ல, சாத்தியங்களையும் எல்லைநகர்வுகளையும் சுட்டிக்காட்டுகிறது என்று. அவர் ஆஷாபூர்ணா தேவியையும் ஜார்ஜ் எலியட்டையும் குரதுலைன் ஹைதரையும் வழிபாட்டுணர்வுடன் குறிப்பிடுவதை சொன்னேன். குரதுலைன் ஹைதரிடம் வெள்ளை குர்த்தா அணிந்து அவர் விருது வாங்கும் அழகான படத்தை இணைத்தேன். அவர் குடும்பத்திலேயே உள்ள பெண் எழுத்தாளர்களை பற்றிச் சொன்னேன். 


அப்படி எழுதிக்கொண்டு வரும்போதே இரண்டு விஷயங்கள் துலக்கமானது. ஒன்று, ஜெயமோகனின் அறிமுகத்தால் இன்றைய வாசகர்கள் இதுவரை சூழலுக்கு அறிமுகமாகாத பல அருமையான பெண் எழுத்தாளர்களை கண்டடைந்திருக்கிறார்கள். அவர்களை விரிவாக படிக்கிறார்கள். இரண்டு, முன்பெப்போதையும் விட சீரிய இலக்கியத்தில் அதிக எண்ணிக்கையில் இளம் பெண் எழுத்தாளர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் அதற்கும் ஜெயமோகனின் செல்வாக்கு ஒரு முக்கிய காரணம். நானே அதற்கு உதாரணம். இவற்றைச் சொன்னேன். 


அந்த கட்டுரையை பதிப்பாளரிடம் அனுப்பிவிட்டு சில நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். ஒருத்திக்கு பிடிக்கவேயில்லை. அவள் ஜெயமோகனின் வாசகி. ‘வேற யாரையோ பத்தி படிக்குறா மாதிரி இருக்கு,’ என்றாள். ‘பாலிஷ்டா, டீசெண்டா, பல்லுபிடுங்கின பாம்பு மாதிரி…’


‘உள்ளதத்தான சொல்லியிருக்கேன்?’ என்றேன் நான்.


​​‘அது வெளியே உள்ளவங்களுக்கு. அதுல என்ன இருக்கு? எவ்வளவு சொன்னாலும் ஒரு பக்கம் தான் அது. ஒரு ரைட்டர், ஆர்டிஸ்ட்ன்னா எவ்வளவு காம்ப்ளெக்ஸான ஆளுமை. ரைட்டரப்பத்தி சொல்லுன்னு கேட்டா அந்த காம்பிளெக்சிட்டியத்தான் சொல்லணும். ஆனால் இங்க உள்ளவங்க ஒண்ணா அவர செக்ஸிஸ்ட், மரபுவாதின்னு சொல்றீங்க. இல்ல சிவப்பாக்கி கண்ணாடி மாட்டி குர்ததா போட வச்சு டிஃபைன் பண்ணி ஒரு நிறுவனமாக்குறீங்க. நான் இந்த புக்ஸுக்குள்ள இருக்க ஜெயமோகன மட்டும் வச்சுக்குறேன், எனக்கு அந்த மேட்மேன் போதும்.’ 


‘நீ சொல்றது புரியுது. ஆனால் இவங்க குறுக்குவிசாரணை பண்ணுறா மாதிரில்ல கேக்கறாங்க. இதையெல்லாம் இவங்ககிட்ட எப்படிச் சொல்லி புரிய வைக்க முடியும்?’ 


‘அப்படின்னா ஆமா, செக்சிஸ்ட் தான்னு சொல்லு. செக்சிஸ்டா இருக்குறதுனாலத்தான் இத்தனை ஆழமா எழுத முடியுதுன்னு கூட சொல்லு. ஆனா உனக்கு கட்ஸ் இல்ல சொல்லமாட்ட’ என்றார் தோழி.


2


இன்று செக்ஸிஸம் - தமிழில் ஆணாதிக்கம், பெண் வெறுப்பு - கண்ணிய சமூகத்தாரால் தாட்டான் குரங்கு உணவுமேஜைமேல் எகிரி குதிக்கும் செயலை ஒத்த குற்றமாகக் கருதப்படுகிறது. ஜெயமோகன் ஒரு செக்ஸிஸ்டா, பெண் வெறுப்பாளரா என்பது ஓர் எளிய கேள்வி, எளிய சுவாரஸ்யத்துக்காகவே அது பெரும்பாலும் கேட்கப்படுகிறது. ஆனால் இந்தக் கேள்வியிலிருந்து நாம் செல்லக்கூடிய ஆழ்தளம் ஒன்று உள்ளது. வலுவான பெண் கதாபாத்திரங்களுடைய ஜெயமோகனின் புனைவுலகத்தை அணுக இந்த கேள்வி ஒரு தொடக்கப்புள்ளியாக அமையலாம். கலையிலிருந்து கலைஞனை பிரித்துப்பார்ப்பதை பற்றி இன்று அடிக்கடி பேசப்படுகிறது. அப்படி பிரித்துப்பார்க்க முடியுமா, பிரித்துப்பார்ப்பது அவசியமா? நாம் ஏன் சிக்கலானவற்றை நிராகரிக்க வேண்டும்? அவற்றுடன் சற்று பொருதித்தான் பார்ப்போமே? இந்த எண்ணங்களுடன் தான் இந்தக்கட்டுரையை எழுதத்தொடங்கினேன். அறுதியான கருத்துகள் ஏதும் சொல்லி நிறுவுவதை விட, இந்த சிடுக்கான விஷயங்களை நான் கவனித்த அளவில் பதிவாக்கவே முற்படுகிறேன். எனக்குத்தெரிந்த ஜெயமோகனிலிருந்தே நான் தொடங்குகிறேன். 


இரண்டு சம்பவங்கள்.


2018-ல் ஜெயமோகனும் அருண்மொழி நங்கையும் ஐரோப்பா வந்திருந்தனர். ஒரு நீண்ட பயணம். பயணத்தில் நானும் உடனிருந்தேன். 


ஓர் இடத்தில் வெளியே போகும் வேளையில் அருண்மொழி வெள்ளை நிறத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட அழகான குர்தாவும் நீல நிற ஜீன்ஸும் அணிந்து தயாராகி வந்தார். அம்மா உங்கள் டிரெஸ் அழகாக இருக்கிறதே என்று சொன்னேன். அவர் சிரித்தார். ‘இப்ப வெளிநாட்டில் தான் ஜீன்ஸ் எல்லாம் போட முடியுது. பத்து வருஷம் முன்னால ஜீன்ஸ் வந்த புதுசுல போடணும்னு ஆசைப்பட்டேன். ஜெயன் வேண்டாம்னு சொல்லிட்டார்’ என்றார். அருகே செல்ஃபோனை விரலால் ஓட்டிக்கொண்டிருந்த ஜெயமோகனை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். ஃபோனிலிருந்து கண்களை உயர்த்தாமலே ‘ஆமா ஜீன்ஸ் போடவான்னு கேட்டா, ஒரு நல்ல குடும்பப்பெண்ணு போடமாட்டா அதுக்கு மேல நான் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டேன்’ என்றார். 


அப்போது வெளிவந்திருந்த ஒரு கட்டுரையில் ஜெயமோகன் ‘பெண்களுக்கு அழகிய உடையே ஜீன்ஸ் தான். ஏனென்றால் அது சுதந்திரம் என்ற விழுமியத்தின் வெளிப்பாடு’ என்று எழுதியிருந்தார். விழுமியங்களிலேயே மகத்தானது சுதந்திரம் தான் என்பது அடுத்த வரி. எனக்கு வாய் வரை வந்தது கேள்வி. 


ஆனால் ‘நல்ல குடும்பப்பொண்ணு' என்னும்போதே ஜெ வாயோரம் கிண்டலாக ஒரு புன்னகை இருந்ததை கவனித்தேன். அதில் அடுத்தவர்பகடி எவ்வளவு சுயபகடி எவ்வளவு என்று சொல்ல முடியவில்லை. உடனே  ‘அதா இப்பப் போட்டேன்ல?’ என்றார் அருண்மொழி உற்சாகமாக.  நான் மாறி மாறிப் பார்த்தேன். ஃபோனை பார்த்துக்கொண்டிருந்த ஜெயமோகனின் சிரிப்பு மாறவில்லை. எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. அவர்கள் இருவரும் என்னுடன் தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அது அவர்களுக்குள் நடந்துகொண்டிருந்த இன்னொரு உரையாடல் என்ற உணர்வு ஏற்பட்டது. அன்று நான் அந்த கேள்வியை கேட்கவில்லை.


அந்தப் பயணத்தில் செக்கோசுலோவாக்கியாவில் ஒரு கிராமத்தில் ஒரு பண்ணைவீட்டில் நாங்கள் தங்கினோம். டிராக்குலா வீடு மாதிரி இருந்தது. வெள்ளையடிக்கப்பட்ட சுவர்களெல்லாம் மூன்று கை அகலம் தடி. காலை பண்ணைக்குள் ஒரு நடை சென்றோம். பெரிய விரிந்த பண்ணையின் பல பகுதிகள் புதராக வளர்ந்து கிடந்தது. ஓர் இடத்தில் கைவிடப்பட்ட மரத்தாலான கண்காணிப்பு கோபுரம் இருந்தது. எங்களுடன் வந்த இளம் நண்பர்கள் இடுப்பளவு வளர்ந்திருந்த புதருக்குள் சென்று ஏணியேறி கோபுரத்தின் மேல் நின்று படம் எடுத்தார்கள். நான் பின்தங்கி நின்றேன். அருகிருந்த ஜெ ‘ஏன் நிற்கிறாய் நீயும் போ’ என்றார். சரி என்று புதருக்குள் இறங்கினேன். 


சற்று தூரத்திலேயே காலில் கூர்மையான மின்சாரம். மீண்டும். 

பட்பட்டென்று சாட்டையடி போல் மீண்டும் மீண்டும் குத்தியது. துடிதுடித்து வெளியே ஓடி வந்தேன். ஏதோ விஷப்பூச்சி என்று நினைத்தேன். முன்கைகளும் கணுக்காலும் மின்சாரம் தாக்கியதுபோல் குத்தியது. ஜெயமோகன் பார்த்துவிட்டு பூச்சி அல்ல செந்தட்டி போல ஏதோ செடி என்றார். மற்றவர்கள் ஜீன்ஸ் அணிந்திருந்ததால் அவர்கள் தப்பினார்கள். எனக்கு ஜீன்ஸின் கசகசப்பு பிடிக்காது. நான் பருத்தியாலான ஸ்கர்ட் அணிந்திருந்தேன். ஆடையின் வழியே விஷ முட்கள் என்னை குத்தியிருந்தது. அவருக்கே உரிய அக்கறையுடன் ஜெ என் கைகளை சோதித்துப் பார்த்தார். 

பிறகு அவருக்கே உரிய விலக்கமான புன்னகையுடன் ‘பரவாயில்லை, எழுத்தாளருக்கு எல்லாமே அனுபவம் தான்' என்றார்.


3


ஜீன்ஸ் அச்சமின்மையை சுதந்திரத்தை வெளிப்படுத்தும் ஆடை என்று ஜெயமோகன் எழுதிய வரி படித்தபோதே எனக்கு அது சற்று மரபான கண்ணோட்டமாகத் தோன்றியது. ஆணின் உடையில் தான் பெண் அச்சமில்லாமல் சுதந்திரமாக உணரமுடியுமா? அது ஒரு வகையில் அதிகாரத்தின் உடையும் கூட இல்லையா? இதே எண்ணங்கள் மீண்டும் வெண்முரசின் களிற்றுயானைநிரை நாவலை வாசித்தபோது எழுந்தன. அந்த நாவல் போருக்குப்பின் அஸ்தினபுரியின் மறு எழுச்சியின் கதையை சொல்வது. ஒரு நவீன ‘நேஷன் பில்டிங்' கதை. குருக்‌ஷேத்ர முற்றழிவுப் போரில் ஆண்களெல்லாம் இறந்தபிறகு பெண்கள் அரசமைக்கிறார்கள். மீனவக்குடியில் பிறந்த சம்வகை நவீன அஸ்தினபுரியின் அரசியாகிறாள். படிப்படியாக அவள் அதிகாரம் அடைந்து வரும்போது ஒரு கட்டத்தில் அவள் பலகாலம் முன்பு மறைந்த போர்த்தளபதியின் கவசங்களை கருவூலத்திலிருந்து எடுத்து அணிந்து கொள்கிறாள். அப்படி அணிவதே அவள் அதிகாரத்தை நிலைநிறுத்தும் என்று மூத்த அமைச்சர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்தக் கவசங்களின் எடையை தூக்குவதற்கே அவள் சிரமப்படுகிறாள். அதை அணிந்திருக்கையில் அதற்குள் மிகச்சிறியவளாக அபத்தமாக தோற்றமளிக்கிறாள். ஆனால், சில நாட்களிலேயே அது அவளுக்கென்றே செய்யப்பட்டதுபோல் பார்ப்பவர்களுக்கு தோன்ற ஆரம்பிக்கிறது. அவள் தளபதியாகி அரசியும் ஆகிறாள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான மேற்கு நாடுகளின் மறு எழுச்சியின் கதையோடு இந்தக் கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


அந்த பார்வைக்கு எதிர்க்குரலாக ஒரு கேள்வி அதே நாவலில் இடம்பெறுகிறது. விற்தொழில் கற்கும் பெண்களில் ஒருத்தி, பெண்ணுடலுக்கென்று செய்யப்பட்ட வில் ஒன்று இல்லையா என்று கேட்கிறாள். போகிறபோக்கில் வந்துபோகும் கேள்வி என்றாலும் நாவலின் மையப்போக்கில் பெரிய பாறை போல் அது வலுவாக நிற்கிறது. இவ்விரண்டு முரண்பட்டப் பார்வைகளுமே தொடர்ந்து ஜெயமோகனின் புனைவுலகில் காணக்கிடைக்கின்றன. 


தத்துவார்த்தமாகவே இவ்விரண்டு பார்வைகளும் இரு துருவங்களென்று எனக்குத் தோன்றுகிறது. முதலாம் பார்வை ஒருவித மார்க்சிய கண்ணோட்டம் என்று சொல்லத்தோன்றுகிறது. பெண்ணுக்கு படிப்பும் அறிவும் நவீன வாழ்க்கையும் கொடுக்கும் சுதந்திரத்தை இது மெச்சுகிறது. ஜெயமோகனிடம் இந்தப் பார்வை எப்போதும் இருந்துள்ளது. யட்சி என்றொரு சிறுகதை, அதில் பாட்டி தன் இளமைப்பருவத்தில் ஈ.எம்.எஸ் பேசுவதைக் கேட்க இரவில் வீட்டை விட்டுக் கிளம்பிச்செல்கிறாள். வீட்டில் கண்டுபிடித்து அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பாட்டி பிள்ளை பெற்று பிள்ளைக்கு பெண் பிறக்கிறது. பதினேழு வயதில் பேத்தி குட்டை முடி தீப்போல் பறக்க ஜீன்ஸ் அணிந்து பாட்டியை பின்னால் ஏற்றிக்கொண்டு கியர் பைக் ஓட்டிப்போகிறாள். இந்தக்கதையில் பாட்டியையும் பேத்தியையும் இணைப்பது அவர்கள் ஆழ்மனத்தில் வாழும் யட்சி. இளமையில் பாட்டியுடன் எப்போதும் செண்பக யட்சி இருக்கிறாள். அவளுடன் தலைகீழ் நாடகம் பார்க்கிறாள் பாட்டி. ஆனால் பேத்தியால் தான் இயல்பாகவே அதற்குறிய சுதந்திரத்தோடு வாழ முடிகிறது. அது காலமாற்றத்தால் இயல்பாக நிகழ்வது. இது கண்டிப்பாக ஓர் இலட்சியவாதப் பார்வை. சமீபத்தில் வந்த நற்றுணை கதை வரை பல கதைகளில் இந்தப் பார்வை உள்ளது. பொது உரையாடல்களில் ஜெயமோகன் பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதும் இந்த பார்வையை ஒட்டித்தான் உள்ளது.


அதற்கென்று நாம் ஜெயமோகனை ஒரு மார்க்சிய இலட்சியவாதி என்று வகுத்துவிட முடியாது. ஏனென்றால் அவர் பார்வை என்றுமே சமூக-யதார்த்த சூழலை மட்டுமே நோக்கும் ஒன்றாக என்றும் இருந்ததல்ல. மனிதனுக்கு சமூகம் சார்ந்த தன்னிலையைத் தாண்டி ஆழ்மனம் சார்ந்த தன்னிலை ஒன்றுண்டு. அதற்கடியிலும் அடையாளங்கள், சுயங்கள் உண்டு. அவற்றுக்குள் முரண்பாடுகள் எழ நேரலாம். ‘கூந்தல்' போன்ற ஒரு கதை இந்த முரண்பாட்டை சித்தரிக்கிறது. சமூக மனம் ஒன்றைச் சொல்கிறது. ஆழ்மனம் இன்னொன்றைச் சொல்கிறது. ஆழ்மனம் நம்மை அறியாமலேயே நம் முடிவுகளை தீர்மானிக்கிறது. அல்லது திசைமாற்றுகிறது. அப்படியென்றால் சுதந்திரம் என்றால் என்ன? இந்த கேள்வியை நோக்கி நம்மை நகர்த்துகிறது.


ஆனால் இதற்கு அடுத்தகட்டத்துக்கும் ஜெயமோகன் செல்கிறார். ஒருவர் தனது ஆழ்மனம் சார்ந்த சாராம்சமான இயக்கத்தில் ஒழுகும் போது அதுவே ஒரு மனச்சுதந்திரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்ற சாத்தியத்தை அவரது புனைவுகளில் ஜெயமோகன் சித்தரிக்கிறார். தன்னறம் என்று வேறு இடங்களில் அவர் பேசும் கருதுகோளுக்கு இணையான ஒன்றாக இதைப் பார்க்கிறேன். கன்யாகுமரி நாவலில் விமலா, பிரவீணா, இருவருமே படித்தவர்கள். நவீன மனிதர்கள். சுதந்திரமானவர்களாக வெளிப்படுகிறவர்கள். ஆனால் அவர்களுடைய சுதந்திரம் படிப்பாலும் சமூக முன்னேற்றத்தாலும் மட்டும் வருவதில்லை. கதைசொல்லி இருவரிலும் கன்யாகுமரி தேவியின் கன்னிமை என்ற சாரத்தை கண்டுகொள்கிறான். இருவருமே அதை தங்கள் போக்கில் வெளிப்படுத்துகிறார்கள். ‘அடுத்தவரை சுரண்டாதவரை ஏமாற்றாதவரை எல்லாமே ஒழுக்கம் தான்' என்று இயல்பாக வாழ்கிறார்கள். அவர்கள் சமூகத்துடன் போராடுபவர்கள் அல்ல. இயல்பிலேயே சுதந்திரம் கொண்டவர்களாக, ஆய்வு, கலைகள் வழியாக தங்களை வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இது வேறொரு வகையான இலட்சிய நிலை. ஓர் எதிர்கால நோக்குடைய கனவு என்று கூட சொல்லலாம். 


இதே கனவு இன்னும் விரிவாக, இன்னும் ஆழமாக, இன்னும் ஆதாரமாக கொற்றவை நாவலில் அடையப்படுகிறது. கொற்றவை காப்பியச்சாயல் கொண்ட செவ்வியல் நாவல். கன்யாகுமரி போன்ற யதார்த்த நாவலில் உள்ள நடைமுறைத் தளைகள் இதில் இல்லை. ஆகவே ஆழ்மனத்துக்குள் நேரடியாக - நிலம் வழியாக கதை வழியாக தெய்வங்கள் வழியாக - ஊடுருவும் சுதந்திரத்தை இந்த நாவல் அடைகிறது. வண்ணச்சீரடி மண்மகள் அரிந்திலள் என்றும் பேசாமடந்தை என்றும் சொல்லப்படும் கண்ணகி மதுரை எரித்தவளாக உருமாறியதெப்படி என்ற ஊகத்தை இந்த நாவலின் ‘நிலம்' பகுதி நிகழ்த்துகிறது. அசாத்தியமான கற்பனைவளம் கொண்ட பகுதி இது. மரபான, வழக்கமான, ஏன், இன்றைய முற்போக்கான எந்த ஒரு கருத்தை பார்வையை விடவும் பற்பல காதங்கள் முன்னகர்ந்த வெளியில் இந்தக் கதைப்பகுதி நிகழ்கிறது. ஜெயமோகன் தனி மனிதராக மரபுவாதியாகவோ முற்போக்குவாதியாகவோ இருக்கலாம். ஆனால் மரபுவாதியுமல்லாத முற்போக்குவாதியுமல்லாத இன்னொருவர் எழுதிய பகுதிகள் இவை.


நான் கொற்றவை நாவலை 2016-ல் வாசித்தபோது அனைத்துக்கும் மேலாக இதன் கனவுகள் எனக்குள் திறந்துகொண்டன. மிகப்புராதனமான லிபியில் எழுதப்பட்ட எதையோ வாசித்துக்கொண்டிருப்பது போல் ஒரு சமயமும், பல்லாயிரமாண்டு காலம் தாண்டி நடக்கவிருக்கும் எதையோ இப்போதே தீர்க்கதரிசனம் போல் கேட்டுக்கொண்டிருப்பது போல் மற்றொரு சமயமும் மாறி மாறி தோன்றிக்கொண்டிருந்தது. எங்கே குடியிருக்கின்றன இந்தக் கதைகள்? காலம் தாண்டி வெளி தாண்டி அமரத்துவம் வாய்ந்த ஏதோ ஜகத்தில். அங்கே இந்த கதைகள் ஒளி கொண்டு என்றும் வாழ்கின்றன - என்று தோன்றியது. அன்று முடிவு செய்தேன், ஜெயமோகனை என் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துப்பேச வேண்டும் என்று. அன்று என் நண்பர்களிடம் அந்த எழுச்சியை சொல்லி புரியவைத்திருக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை அவர் இந்துத்துவர், பூர்ஷுவா, தமிழ்தேசியத்துரோகி, நாயர் அடிப்படைவாதி, செக்ஸிஸ்ட். இந்த அடைமொழிகளையெல்லாம் மீறி நான் என் மனப்போக்கை பின் தொடர்ந்து சென்று சந்திக்க முயன்றது யாருமே கற்பனை செய்யாத உலகை சிருஷ்டித்த ஓர் இறைவனை என்று அவர்களிடம் எப்படி சொல்லியிருக்க முடியும்? ஒரு பிறவியில் அப்படி எத்தனை இறைவன்களை சந்திக்கப்போகிறோம்? இன்று வரை அந்த சந்திப்புக்கான முயற்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் அவர்கள் புரிந்துகொள்வார்களா? 


எழுத்தாளனை இறைவன் என்று சொல்வதை மிகைக்கூற்றாக சிலர் உணரக்கூடும். ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால் இறைவன் என்று சொல்வது வழிபாட்டு மனநிலையோடு மட்டும் அல்ல. இறைவன் என்றால் படைப்பவன். உண்மைக்கு நிகராக உலகங்களை படைக்கும் திறம்கொண்ட படைப்பாளியைக் காண்கையில் ‘இறைவன்' என்ற உணர்வு இயல்பாக தோன்றுகிறது. உபநிஷத்துகளில் ஈஸ்வரன் என்ற நிலை இந்த பிரபஞ்சத்தின் விழிப்புநிலைகளையும் கனவுநிலைகளையும் விதைபோல் உள்ளடக்கிய பெருநிலை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆழ்ந்த தூக்கத்தின் கருமை போன்ற நிலை. நம் தூக்கத்திலிருந்து கனவுகள் எழுந்து வருவதுபோல் இறைவனின் உறக்கத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றுகிறது என்கிறார்கள். அவ்வாறு தான் படைப்பாளியும் படைக்கிறான். அவன் கதாபாத்திங்கள் எல்லாம் அவனே. அவன் காணும் கனவுகளெல்லாம் அவனே. அவை நம் கனவுகள் கூட என்று நாம் கண்டுகொள்ளும் கணத்தில் அவனை நமக்கும் அடியில் இருந்து, நம்மையும் குஞ்சுகளாக பெற்றெடுக்கும் இறைவன் என்று கண்டுகொள்கிறோம். ஆம், பெரும்படைப்பாளியானவன் நாவலையோ நாடகத்தையோ மட்டும் படைப்பவன் அல்ல. நம் ஆழத்துக்கு உருக்கொடுத்து நம்மையும் அவன் படைக்கிறான். 


ஆகவே வழிபாட்டுணர்வு இல்லாமல் இல்லை. வழிபாடில்லாத இறைவன் ஏது? தமிழ்ச் சமூகம் இதற்கு முன்னால் இன்னொரு எழுத்தாளனை கிட்டத்தட்ட இதே தீவிரத்தோடு வழிப்பட்டுள்ளது. அவன் ஜெயகாந்தன். குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் செல்வாக்கும் மதிப்பும் கொண்ட எழுத்தாளராக ஜெயகாந்தன் திகழ்ந்தார். என் அம்மாவின் தலைமுறையில் ஜாதி வித்தியாசம் இல்லாமல் பெண்கள் ஜெயகாந்தன் ரசிகைகளாக இருந்துள்ளனர் என்பதை கவனித்திருக்கிறேன். அதற்கு என்ன காரணம்? 

இலக்கிய எழுத்தாளர்களில் புறத்தை எழுதும் எழுத்தாளர்களே கணிசமானோர். அகத்தை எழுதுவோரில் மேம்போக்கான உணர்ச்சிநிலைகளைத் தாண்டி ஆழ்மனத்தை, ஆன்மீகத்தை நுண்ணுணர்வுடன் பேசுவோர் வெகுசிலர். அதிலும் பெண்களின் தனித்துவமான அகவுலகை ஆராய்பவர்கள் அதிலும் குறைவானவர்கள். அப்படி எழுதுபவர்கள் மீது வாசிக்கும் பெண்களுக்கு எப்போதும் பெருமதிப்பும் நேசமும் இருந்துள்ளது. ஏனென்றால் இந்த அம்சங்களை கவனித்துச் சொல்பவர்கள், அதன் வழியே அவர்களுக்கு புதிய பிறப்பை அளிப்பவர்கள் வேறு யார்? பெருமதங்கள் பெண்ணின் இடத்தை மிகக்குறுகிய அன்றாட வட்டத்தில் வரையறுக்கிறது. மைய ஆன்மீகம் அவர்களை அவர்களை அவர்கள் உலகத்திலிருந்து மிக விலகிய ஓர் இடத்திலிருந்து தொடங்கச்சொல்லிச் சொல்கிறது. இந்த தூரத்தை உணர்ந்து சொல்லக்கூடியவன் எழுத்தாளன் மட்டும் தான். அவன் ஆன்மா அறிந்த தோழன், மண்ணிலிருந்து விண்ணுக்கு வழிகாட்டுபவன். ஆம், இறைவன். இந்த இறைவன் படைப்பவன் மட்டும் அல்ல, உருகொண்டு அருகே நின்று காப்பவனும் கூட.

 

ஜெயமோகனின் கன்யாகுமரி நாவல் பல விதங்களில் ஜெயகாந்தனின் அக்கினிபிரவேசம் கதைக்கு நெருக்கமானது. சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு ஒரு மறுமொழி போன்றது. சில நேரங்களில் சில மனிதர்கள் கதையில் ஆசிரியர் கங்காவின் மன நகர்வுகளை, அவளே அறியாமல் அவளிலிருந்து வெளிப்படும் உளவியலை, அவள் பார்வையிலிருந்து கதை சொல்லியவாரே அற்புதமாக காட்சியாக்கியிருப்பார். ஆனால் அடிப்படையில் அது ஒரு துன்பியல் நாவல். மாறாக, கன்யாகுமரி ஒரு கனவு. அக்கினிபிரவேசம் கதையில் கங்கா ஓர் அம்மன் சிலையைப்போல் இருந்ததாக ஆசிரியர் எழுதியிருப்பார், அவள் ஆதார நாதம் அது. அந்த ஆழுணர்வை விரித்து எடுத்தது போல் கன்யாகுமரி நாவல் அமைந்துள்ளது. இதே மாபெரும் கனவம்சம் கொற்றவையிலும், பிறகு வெண்முரசிலும் காணக்கிடைக்கிறது. 


ஜெயகாந்தனின் நாவல்களில், குறிப்பாக சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் இரண்டிலுமே, வலுவான பெண் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. தங்கள் தனித்துவமான இடத்தை கண்டடைய முயல்கிறார்கள், தங்கள் சாரத்துக்கேற்ப வாழ போராடுகிறார்கள். ஆனால் ஜெயகாந்தன் அவர்களை யதார்த்தத்தில் காலூன்றியே வைத்திருக்கிறார். ஜெயகாந்தனிடம் எப்போதும் தல்ஸ்தோய் போல ஒரு யதார்த்தமான விவேகம் வெளிப்படுவதாகத் தோன்றும்; கங்காவின் உடைவும் சரி, கல்யாணி அடையும் கனிவும் சரி, அந்த விவேகம் காட்டிய வழியில் அடைந்த முடிவுகள் என்று சொல்லலாம். 


இந்த அம்சம் ஜெயமோகனின் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் கூடுதலாக, தனித்துவமாக, அவரில் வெளிப்படுவது முன்பு கூறிய ஆழுள்ளம் சார்ந்த கனவு. ஒருவர் தனது ஆழுள்ளத்தின் சாரத்தை கண்டுகொள்வது வழியாகவே அவர் அடையும் விடுதலையை ஜெயமோகன் மட்டுமே எழுதியுள்ளார். இதற்குமுன் இந்தத்தளத்தைத் தொட்ட இன்னொரு இந்திய எழுத்தாளர் இல்லையென்று சொல்லலாம். கம்பனின் சீதையோடு, காளிதாசனின் சகுந்தலையோடு ஒப்பிடலாம் கொற்றவையின் கண்ணகியை. ஆனால் புராண காவியங்களில் வரும் தெய்வப்பதுமைகளாக மட்டும் அல்லாமல் ஒரு கால் விரலாவது யதார்த்தத்தில் ஊன்றியிருக்கும் பாத்திரங்களை ஜெயமோகன் படைக்கிறார் என்பதால் நவீன வாசகருக்கு அந்த பாத்திரம் வழியாக தங்கள் ஆழத்துக்குள்ளும் செல்ல ஒரு வாசல் திறக்கிறது. அதுவே விடுதலைக்கான வழியாகவும் ஆகிறது.


4


விடுதலையையை பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இன்னொரு நவீன எழுத்தாளர் தமிழில் இருக்கிறாரா? ஜெயமோகன் ஆண்டானிடமிருந்து அடிமை கொள்ளும் விடுதலையைப் பற்றி எழுதுகிறார். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றொருவரிடமிருந்து கொள்ளத்தக்க விடுதலையைப்பற்றி எழுதுகிறார். மனிதன் தன்னிலிருந்து கொள்ளக்கூடிய விடுதலையைப்பற்றி எழுதுகிறார். மோட்சம் என்று சொல்லப்படும் உளவியல்ரீதியான, பிரபஞ்ச ரீதியான அனைத்துத்தளைகளுக்கு அப்பால் உள்ள விடுதலைக்கான சாத்தியத்தைப் பற்றியும் எழுதுகிறார். ஜெயமோகனின் புனைவுலகில் எண்ணற்ற வகைமாதிரியான மனிதர்களை காண்கிறோம். எழுத்தில் அவர் மானுடளாவிய விசாலம் கொண்டவர். தனிப்பட்ட முறையில் அவர் எதிர்கொள்ளும் செக்ஸிஸ்ட் குற்றச்சாட்டுகளைத்தாண்டி, அவர் எழுத்தில் காணக்கிடைக்கும் விடுதலையென்னும் விழுமியம் மானுடப்பொதுவானது, ஆதாரமானது. 


பெண் கதாபாத்திரங்களின் ஆன்ம விடுதலையை அவர் அவர்களது சுபாவத்தோடு இணைக்கிறார். உதாரணம் அவரது அன்னையர். தாய்மை என்ற குணத்தையே ஜெயமோகன் தவத்துடனோ யோகசாதகத்துடனோ ஒப்பிடுமளவுக்கு ஒரு பெருநிலையாக கொள்கிறார். ஒருமுனைப்பட்ட மனமும் கனிவும் ஒருசேர நிகழும் ஒரு மனவார்ப்பையே அவர் அன்னைமையில் காண்கிறார் என்று தோன்றுகிறது. பல உதாரணங்களைச் சொல்லலாம் - எனக்கு மிகவும் பிடித்த இரண்டு இடங்களைச் சொல்கிறேன். வெண்கடல் என்ற சிறுகதை. நெஞ்சில் பால் கட்டி பெரிய வேதனையில் இருக்கும் தாயின் மீது வைத்தியர் அட்டைப்பூச்சி விட்டு கட்டிய பாலை உரிய வைக்கிறார். பால் உண்டு கொழுத்த பூச்சிகளை கோழிகளுக்கு இரையாக கொண்டு போகிறார்கள். ‘கொல்லவேண்டாம் வைத்தியரே எனக்க பால குடிச்ச சீவனாக்கும்' என்று அந்த பெண் கெஞ்சுகிறாள். இயற்கை அவளுக்கு விதித்துள்ள துன்பத்தைத் தாண்டி அந்த அன்னையின் மனம் ஒரு நொடியில் சட்டென்று கொள்ளும் பெரிய விரிவு நம்மை உணர்ச்சி கொள்ளச் செய்கிறது. மகத்தான இடம் அது. அதே போல் கொற்றவையில் ஒரு வலுவான இடம். சித்தார்த்தன் துறந்த யசோதரையைப்போல் ஒரு பெண். வருவோர் போவோருக்கு உணவளித்து தன் வாழ்நாளை கடத்துகிறாள். அவள் அந்திம காலத்தில் துறவியாகிப்போன கணவன் திரும்புகிறான். அவனுக்கும் உணவளிக்கிறாள். அவனிடம் ஒன்றும் சொல்வதில்லை. ஏன், என்று கண்ணகி கேட்கிறாள். ‘துறப்பதற்கு வீடு விட்டு இறங்க வேண்டியதில்லையே’ என்கிறாள் அவள். இந்த கதாபாத்திரங்களின் இவ்வகைத் தருணங்களை காட்சிப்படுத்துகையில் அவை யதார்த்தம் மீறிய சீற்றமும் ஆற்றலும் கொண்டவையாக அமைகின்றன; ஆசிரியரே அந்த பெரும் நிலையை தரிசிப்பவராகவோ - அல்லது அந்த தரிசனத்தை ஒரு கணம் தீபம் தூக்கிக் காட்டும் பூசகராகவோ - தோன்றுகிறார். 


ஆம், யதார்த்தம் மீறிய, சாஸ்வதமான அறங்களை, மெய்மைகளை நோக்கி அவர் மனம் நகரும் போதெல்லாம் இந்த வகையான ஆற்றல் கொண்ட பதுமைகளை ஒரு தரிசனமாகவே முன்னிறுத்துகிறார் ஜெயமோகன். பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் அந்த நாவலின் ஒட்டுமொத்த கருத்தியல் சொல்லாடலுக்கும் எதிர் தட்டில் அவர் வைப்பது நாகம்மையையும், அன்னா புகாரினாவையும் தான். மந்திரம் போல் புகாரினின் வாக்குமூலத்தை உருப்போட்ட அன்னா புகாரினாவின் தீவிரமான நேசத்தை சித்தரிக்கும் ஜெயமோகன் அவரை நம்பமுடியாத அளவுக்கான வழிபாட்டுணர்வோடு படைக்கிறார். உணர்ச்சிகரத்துடன் தன்னுடைய தேவியை உபாசிக்கும் ஆராதகனைப்போல் ஜெயமோகன் அன்னா புகாரினாவை ஒற்றி உருவாக்கி கண்முன் எழுப்புகிறார். அவள் ஒரு பத்தினி போல் தோற்றமளிக்கிறாள். அவளுடைய யதார்த்த வேர்களைத்தாண்டி மிகமிகப்பெரியவளாக நாவலில் நிற்கிறாள் என்றால் அது அந்த இறைவனின், ஆராதகனின் சிருஷ்டி.


*


ஜெயமோகன் படைத்த மனிதர்களைக்கொண்டு ஒரு சிறு நகரையே எழுப்பி விடலாம். ஆனால் அதிலும் ஒரு நுட்பம் உள்ளது. உருவகமாகச் சொல்லவேண்டுமென்றால் அவர் கைபோன போக்கில் உருட்டிச்செய்து வைத்த பாவைகளால் அந்த நகரம் நிரம்பியிருக்கலாம். அவர் பட்டறையைச் சுற்றி அவை நின்றுகொண்டிருக்கலாம். ஆனால் பட்டறையின் கருவூலத்தில் இருக்கும் பதுமைகள் வேறு வகையானவை. பெரிய பழைய முகங்களும் உருண்ட கண்களும் உயிருள்ள பார்வைகளுமாக இருப்பவை அவை. விஷ்ணுபுரத்தின் நீலியும், கொற்றவையின் கண்ணகியும், வெண்முரசின் திரௌபதியும் நிற்கும் நிரை அது. பேராற்றல் கொண்டு ஜெயமோகன் இவற்றை நிறுவிக்கொள்கிறார். ஏன்? ஒரு வேளை தன் வழிபாட்டிற்காக, தானே கொள்ளும் விடுதலைக்காக. தான் மெய் என்று கண்டுவிட்ட ஒரு பழைய பெரிய தரிசனத்தை விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் காணக்கோரும் ஓர் ஆராதகனின் முடிவுறா உபாசனைக்காக. அவருடைய மற்ற கதாபாத்திரங்களில் ஆழமென்று வெளிப்படும் தளம் இதுவே. அதுவே மெய்யென்றும் சுதந்திரமென்றும் உணரக் கிடைக்கிறது.


ஜெயமோகன் ஓர் இடத்தில் தம் குலதெய்மான மேலாங்கோட்டு  நீலியை அவர் சிறுவனாக இருந்தபோது கண்ட அனுபவத்தை எழுதியிருக்கிறார். தோட்டத்துக்கு நடுவே, ஒரு பழைய வீட்டின் தெற்கு சுவற்றில், பாரம்பரிய நிறங்களினால் தீற்றப்பட்ட புராதன ஓவியமாக அவள் இருந்தாள். காடு போன்ற அடர்த்தியான அடர்நீலக் கூந்தலுக்குள் அவள் முகம். முகத்தில் அவள் இரண்டு கண்கள். விளக்கொளியில் அதை அச்சிறுவன் பார்த்தான்.


நீலி என்ற அந்த உருவம் அவருக்கு அந்தக்கணத்தில் கொடுத்த மன எழுச்சியைப்பற்றி ஜெயமோகன் எழுதுகிறார். பேரெழிலும் பயங்கரமும் கொண்ட ஒரு ரூபமாக அது அவரை ஆட்கொள்கிறது. அவருடைய கனவுகளை நிறைக்கிறது. ஜெயமோகனின் அத்தனை ஆழ்கனவுகளின் ஊற்றுமே இந்த நீலி என்று சொன்னால் மிகையாகாது என்று நினைக்கிறேன்.


இந்த உருவத்துக்கு அழகு மட்டும் அல்ல, பயங்கரமும் ஆளைக்கொல்லும் வசீகரமும் இருக்கிறது. இயற்கையின் இரண்டு பக்கங்களைப்போல. நாம் அறிந்த கருத்து. உணவு புரக்கும் இயற்கை தான் கொல்லவும் அழிக்கவும் செய்கிறது. ஆகவே மனிதன் இயற்கை மீது கொள்ளும் காமம் அளவுக்கே அதை வெறுக்கவும் செய்கிறான். இயற்கையில் ஊடுருவும் அளவுக்கே அதன் மீது அருவருப்பும் கொள்கிறான். இந்த இரட்டைநிலை ஜெயமோகனின் புனைவுகளில் தொடர்ந்து வரும் ஒரு பண்பு, இரவு போன்ற நாவல்கள் உதாரணம். 


இந்தப் பார்வையே ஒருவிதமான பெண் வெறுப்பு நோக்கு என்று வாதிடுவோர் இருக்கிறார்கள். இருக்கக்கூடும், பெண்கள் இயற்கையை இந்த ஆழத்துக்கு எழுதினால் வேறு விதமாக உருவகிப்பார்களா என்பது சுவாரஸ்யமான கேள்வி. ஆனால் என் எண்ணத்தில் அழகு x பயங்கரம் என்ற முரணின் சமன்வயம் வழியாக ஜெயமோகன் அடையும் ஆழங்கள் மேலும் முக்கியமானவை. ஏழாம் உலகம் ஒரு விசித்திரமான உதாரணம். அந்த நாவலின் மையச் சுவையே அருவருப்பு, பீபத்ஸம் தான். கோரமான உடற்குறைபாடுகள் கொண்ட முத்தம்மை உள்ளிட்ட எல்லா பாத்திரங்களும் பீபத்ஸம் என்ற ஆதார சுருதியில் மாறுபட்ட கோலங்களாக விளங்குவர். ஆனால் கதை நகர்வில் முத்தம்மையின் பாத்திர வார்ப்பு அதன் யதார்த்தத் தளத்தைத் தாண்டி பிரபஞ்சத்தின் ஆதார பெண்மை என்ற இயல்பை சுட்டுவதாக ஆழம் கொள்கிறது. ஏதோ ஒரு புள்ளியில் நாம் அவளில் அனைத்தும் தாண்டிய ஒரு தெய்வீக அம்சத்தை கண்டுகொள்ளத் தொடங்குகிறோம். வாசகருக்கு இது மிக அசௌகரியமான ஓர் அனுபவம்: ஆனால் அந்த புள்ளி வரை நம்மை கொண்டு நகர்த்தி வருவது தான் ஜெயமோகனின் சாதனையாக இருக்கிறது. ‘அருவருப்பு' ‘பயங்கரம்' என்ற அம்சங்கள் வழியாகவே ‘சப்ளைம்'-மை தொட அவரால் இயல்கிறது. 


இவ்விடத்தில் ஜெயமோகன் உலகம் கண்ட மாபெரும் கலைஞர்களின் நிரையில் நிற்கிறார். யூரிபிடஸ், காளிதாசன், இளங்கோ, டாண்டே, கதே… பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிய முயன்று அதன் தோற்றுவாய் வரை ஏறி வந்த மிகச்சிலரில் ஒருவராக. அந்த இடத்தில் இவர்கள் அனைவருமே பெண் என்றும் அன்னை என்றும் நீலி என்றும் காளி என்றும் கருணையும் கொடூரமும் கொண்ட பல பெயருடைய ஒரு வடிவையே அடைகிறார்கள். தத்துவார்த்தமாக யோசித்தால் இது பிரபஞ்ச இயக்கத்தின் புரிந்துகொள்ளவே முடியாத அம்சங்களின் இலட்சியப்படுத்தப்பட்ட ஓர் வடிவம். பிரபஞ்சத்தின் ஆதார இயல்பு. அதை நேருக்கு நேர் காணும் போது கலைஞன் திகைக்கிறான். வியக்கிறான், வெறுக்கிறான். முடிவில்லாமல் ஆட்கொள்ளப்படுகிறான். முடிவில்லாமல் அதில் மூழ்குகிறான். முடிவில்லாமல் ஆராதகனாகிறான். எனக்குத் தோன்றுகிறது, அது ஒரு கழுவாய். கலைஞனுக்கு மட்டுமல்ல, அங்குள்ள அந்த அறியமுடியாத மர்மத்துக்கும். 


எந்த ஓர் எழுத்தாளரிலும் இது சந்தேகமேயில்லாமல் மிகவும் சக்தி வாய்ந்த வெளிப்பாட்டுக்கான வெளியை உருவாக்கும். தூய கற்பனாவாதத்தின் வழியில் போகக்கூடிய ஓர் எழுத்தாளர் ‘அன்னை’, ‘தேவி' போன்ற படிமங்களை அதன் பாதையில் மட்டுமே உணர்ச்சிகரமாக பின் தொடர்ந்து வெகுதூரம் செல்ல முடியும். ஜெயமோகன் ஒரு கற்பனாவாதி மட்டும் அல்ல. அவர் கற்பனாவாதத்தை எப்போதும் தர்க்கமும் யதார்த்தமும் சமன் செய்கிறது. ஆரம்பம் முதலே அவர் செவ்வியலாளர். அதே சமயம் அவரிடம் கற்பனாவாதத்தின் இந்த உக்கிரமான பண்பு இல்லாமல் போயிருந்தால், அவர் பல படிகள் வலுக்குறைந்த எழுத்தாளராகவே, மனிதராகவே விளங்கியிருப்பார் என்பது என் எண்ணம். 


எழுத்து அகவயப்பட்டதாக, ஆன்மீகமாக அர்த்தம் கொள்ளத்தக்கதாக இருக்க அதற்கு ஓர் ஈரம் தேவையாகிறது. கற்பனாவாதத்தின் மனப்பாங்கு அதை எளிதில் அளிக்கிறது. அந்த கொந்தளிப்பில்லாமல் உண்மையான ஏக்கத்துக்கான, கண்ணீருக்கான வழி கிடையாது. ஜெயமோகனின் எழுத்து முழுவதும் சுதந்திரம், விடுதலைக்கான ஏக்கத்தால் நிரம்பியிருக்கிறதெனால், அதுவே கூட ஒரு கற்பனாவாத பண்பு தான். அங்கே திகழும் இறைவன் படைப்பவன் மட்டுமல்ல, இறங்கி வந்தவனும் கூட. பூசகனாக வழிகாட்டியாக ஆராதகனாக பித்தனாக உடன் நிற்பவன். இயற்கைக்கு முன்னால் நம்மை திறந்துவைத்துக்கொள்ள, ‘எல்லாமே அனுபவம் தான்' என்று ஆய்ந்து கடந்து செல்ல, அறிவுறுத்தக்கூடிய பண்பு கொண்டவன். அந்த உணர்ச்சிகரமே ஒரு திரிபுநிலையாக, பெண் வெறுப்பாக, அவ்வப்போது வெளிப்பட்டாலும், இருந்துவிட்டுப் போகட்டுமே என்று தான் சொல்லத்தோன்றுகிறது. ஒற்றைநோக்குடைய உணர்ச்சிகரம் அதன் உச்சக்கணத்தில் எல்லா திரிபுகளையும் வெறுப்புகளையும் உட்கொண்டு பொசுக்கிவிடக்கூடிய தீ அல்லவா? 


இந்த பண்பை தன் ஆதார நாதமாகக் கொண்டிருப்பவன் மட்டுமே நீலம் போன்ற ஒரு படைப்பை எழுதியிருக்க முடியும் என்று நினைக்கிறேன். ஒரு எழுத்தாளனாக, கவிஞனாக ஜெயமோகனின் உச்சபட்ச வெளிப்பாடாக நீலம் அடையாளப்படுத்தப்படலாம். ஆனால் அதற்கும் மேல், ஓர் ஆராதகனாக, அது அவர் உபாசிக்கும் தெய்வங்கள் அவருக்கு அருளிய வரம் என்று சொல்லத்தோன்றுகிறது. ஆராதகனுக்கு அடுத்த படிநிலை அது. அதில் ஆராதகன் ஆராதிப்பவளாகவும், ஆராதிக்கப்படுபவளாகவும், ஆராதனையென்றும் ஆகிறான். ராதையின் தூய பெண்மையின் எல்லையற்ற மதுரம் எல்லா விடுதலைப்பாதைகளும் சென்று சேரும் வெளி.


5


தத்துவார்த்தமாகவே எதிர்பாலினத்தின் மீது வெளிப்படும் ஒரு நிராகரிப்புப் பார்வை சில சிந்தனைபோக்குகளில் காணக்கிடைக்கிறது. கிறித்துவத்தில் உள்ளது. ஜைன மதத்தில் உள்ளது. நமது சித்தர் மரபிலும் உண்டு. இவை உலகத்துக்கு அப்பால் உள்ள மெய்மையை நோக்கிப் பேசுபவை. பெண்களை உலகத்தோடும் உலகியலோடும் தொடர்புபடுத்துபவை. ஆகவே சாதனையின் பகுதியாகவே பெண்களிடமிருந்து ஒருவித திட்டமிட்ட விலகலை நியமமாக பேணுபவை. இதை பெண் வெறுப்பென்று கொள்வோரும் உண்டு. 


ஓரளவுக்கு இந்தப்பார்வையை ஜெயமோகன் பின் தொடரும் நாராயண குருவின் மரபில் உணர்ந்திருக்கிறேன். அவர்கள் துறவியர், சித்தர் மரபின் தாக்கம் உள்ளவர்கள். ஆனால் அடிப்படையில் சங்கரரை மூலமாகக் கொள்ளும் அத்வைதிகள். தன் கலை வாழ்க்கையை நிகழ்த்திக்கொள்ள ஜெயமோகன் குருமரபு வழியாக அடைந்த சில நம்பிக்கைகளை, நியமங்களை கடைபிடிப்பதைப்பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். அதே சமயம், தன் கலைக்குள் அவர் வேறொருவராக இயங்குகிறார் என்று தோன்றுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான முரண்.


ஆதி சங்கரரின் பிறப்பைப்பற்றி மரபாக சொல்லப்படும் கதை ஒன்று உள்ளது. காலடியில் சிவகுரு-ஆர்யாம்பா என்ற பிராமண தம்பதிக்கு தவமிருந்த மகனாகப் பிறக்கிறார் சங்கரர். சிவாம்சம் கொண்டவராக அறியப்படுகிறார். சிறுவயதிலேயே துறவு கொள்கிறார், ஆசிரியரைக் கண்டடைகிறார். அத்வைத வேதாந்தம் என்ற தத்துவார்த்த தரிசனத்தை தொகுத்து நிலைநிறுத்தி ஸ்தாபித்து சர்வஞபீடம் ஏறுகிறார். இந்த சங்கரர் முழுக்க முழுக்க தத்துவார்த்த தளத்திலேயே பயணிக்கும் ஒரு துறவி, இரண்டாவதே இல்லாத தூய அத்வைதி. இவருக்கு உலகியலோடு எந்த ஒட்டும் இல்லை. இவர் ஒரு சங்கரர்.


ஆனால் இன்னொரு ‘இருக்கக்கூடிய’ சங்கரரும் இருக்கிறார்.


மாகிஷ்மதியிலிருந்தோ, உஜ்ஜயினியிலிருந்தோ, மேற்குமலைத்தொடரை ஒட்டிய பசுங்காடுகள் வழியே பயணித்து, சிருங்கேரியை குடஜாத்ரியை கடந்து தெற்கு நோக்கி வந்த அறிஞர் ஒருவருக்கும், தென்னகத்து மலைக்குடி மகள் ஒருத்திக்கும் பிறந்திருக்கக்கூடிய ஒரு சங்கரன் இருக்கிறான். சிவனுக்கு பார்வதியில் பிறந்தது போன்ற, ஓர் அலையும் ஞானிக்கு, சித்தாந்திக்கு, தாந்திரீகனுக்கு, மலைமடியில் பிறந்த ஒரு மைந்தன். இது இன்னொரு சங்கரன். மழைக்காடுகளின் ஈரம் வற்றாதவன்.  சௌந்தர்ய லகரியும் மகிசாபஞ்சகம் இயற்றியிருக்கக் கூடியவன், மண்டனமிஸ்ரரின் மனைவிக்கு செவி மடுத்தவன். இவனே சாரதையின் உபாசகன், திராவிடச் சிசு. 


நமக்குப் பொதுவாக சங்கரர் என்று சொன்னால் முதல் சித்திரம் தான் தோன்றும். ஜெயமோகன் தனது குருமரபு வழியே அடைந்த சங்கரராக முன்னிறுத்துவதும் இவரைத்தான். ஆனால் சங்கரமரபில் தொடர்ந்து வரும் தாந்திரீக இழை ஒன்று இருக்கிறது, அதை எளிதில் மறுத்துவிட முடியாது.


உலகின் அனுபவத்தளத்தை ஒதுக்கிவைத்து சாரமானவற்றை மட்டும் ஆராய்ந்து உண்மையை அடைவது முதல் வழி. உலகை ஊடுருவிப்பார்த்து அதன் சாரமானதும் அதைக் கடந்ததுமான ஒன்றை தரிசனமாக அடைவது தாந்திரீகத்தின் வழி. ஆராதகனின், கலைஞனின் வழி இதற்கு மேலும் நெருக்கமானதென்று தோன்றுகிறது. நாளையே ஜெயமோகன் ஒரு வேளை இவற்றிலிருந்தெல்லாம் விலகி தனக்குள் இருக்கும் யோகியை, முனியை கண்டுகொள்ளக்கூடும், எழுந்து செல்லக்கூடும். ஆனால் கலைஞனாக அவன் பெயர் இவ்வுலகில் வாழும் நாள் வரை அவனுக்குள் இருக்கும் உபாசகனும் ஆராதகனும் அழிவற்றவர்களாக இருப்பார்கள். 


*


வெண்முரசு என்ற மாபெரும் கம்பளத்தை நெய்து முடித்த பிறகு அதற்கு குஞ்சம் கட்டுவதுபோல் ஜெயமோகன் நூறு கதைகளை எழுதினார். அந்தக் கதைகளில் அவருடைய பல முகங்கள் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றியதுண்டு. பத்துலட்சம் காலடிகளில் ஒரு காலடி தவறினாலும் தண்டிக்கும் மரபுவாதி ஹாஜி அப்துல்லா ஒரு முகம் என்றால் சாராயம் காய்ச்சி மாயப்பொன் கண்டடைபவர் மற்றொரு முகம். இதில் ஒரு முகம், ‘இறைவன்' கதையில் பகவதியின் ஓவியத்தை வரைய வரும் ஆசாரி. ‘பகவதியின் முகத்தை நீ கண்டுட்டுண்டா? காணல்லேன்னா எப்படி வரைவ?’ என்று கதையில் வரும் கிழவி கேட்கிறாள். ‘பகவதி நம்மள கண்டுட்டுண்டில்ல' என்பார் ஆசாரி. 


தன்னையே கம்பளம் போல் விரித்து அதன் மேல் குழந்தை விளையாடுவதுபோல் தீராமல் படைத்துக்கொண்டிருக்கும் ஓர் இறைவன் இருக்கிறான். அதே கம்பளத்தின் ஓரத்தில் நீர்பூசி எருக்குமாலை சூடி கபாலம் ஏந்தி ‘சர்வகல்மிதமாமேகம் நான்யாஸ்திசனாதனம்!’ என்று உச்சாடனக் குரல் எழுப்பும் ஓர் ஆராதகனும் இருக்கிறான்.


அறுபது அகவை நிறைவு காணும் இறைவனும் ஆராதகனுமாகிய என் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு பாதம் பணிந்த வணக்கங்கள்.


***


சுசித்ரா - தமிழ் விக்கி பக்கம்

மாசில் வீணை - அகரமுதல்வன்


01


நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் 


– திருநாவுக்கரசர்


மழை பெய்து ஓய்ந்த பின்மதியத்தில் சென்னை கோடம்பாக்கத்திலுள்ள பழைய புத்தகக்கடையில் 'அனல்காற்று' என்ற நாவலைக் கண்டெடுத்தேன். முன் அட்டையில் பாதி கிழிந்துபோயிருந்தது. உள்பக்கத்தை புரட்டிப் பார்த்தேன். முதலாவது அத்தியாயத்தின் இரண்டாவது பத்தியின் இறுதி வரிகள் இப்படி எழுதப்பட்டிருந்தன. 'தனிமை என்ற சொல்லை மொழி தோன்றிய நாளில் இருந்து இக்கணம் வரையெனத் துளித்துளியாக உணர்ந்தவனாக இங்கே நிற்கிறேன். இப்புவியில் பிரிந்து செல்பவர்களைப் போல குரூரமானவர்கள் எவருமில்லை சுசி.' இந்த வரிகள் என்னுடையவை என்று உரிமை கொண்டேன். புலம்பெயர்வின் தொடக்க நாட்கள் அவை. நிலத்தைப் பிரிந்தும்  காதலைப் பிரிந்தும் எத்தனையோ பிரிவுகளோடிருந்த அகதியாகிய என்னுள் துளித்துளியாய் இறங்கிய இந்த வார்த்தைகளின் மூலம் எழுத்தாளர் ஜெயமோகன் என்பவரை அறியலானேன். 'அனல்காற்று' நாவலை அன்றிரவே வாசித்து முடித்தேன். இயல்பில் அடங்க மறுக்கும் பருவத்தின் வெப்பம் என்னுடல் பிளந்து ஒலிப்பதை கேட்க முடிந்தது. உடல் அழிந்து புலன்களுக்குள் குளிர் அசைந்து சிலிர்த்து நெளிந்தது. இப்போதும் சிலவேளைகளில் 'அனல்காற்'றை வாசிப்பேன். படைப்பூக்கம் தரவல்ல சக்தி அந்த நாவலுக்கு இருப்பதாக உணர்கிறேன். வாசிப்புலகிற்குள் நுழைபவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் நாவல்களில் கட்டாயம் 'அனல்காற்று' இடம்பிடிக்கும்.


ஆனால் ஜெயமோகன் என்றதும் ஞாபகத்திற்கு வருவது 'மாடன் மோட்சம்' என்ற அவரது சிறுகதையே. அந்தக் கதையை முதன்முறையாக வாசித்து முடித்ததும் பலவிதமான கொந்தளிப்பும் அடங்க மறுக்கும் வியப்பின் பெருக்கும் என்னுள்ளே எழுந்தன. அதே அகதி வாழ்வின் தொடக்க நாட்கள். அப்போதுதான் வாசிப்பை தீவிரமான சிகிழ்ச்சையாக்கிகொண்டேன். மலர்ந்த பொழுதிலிருந்து உதிரும் பொழுதுவரை வாசிப்பின்மீதே தினங்கள் குடிகொண்டன. தமிழின் மிகச்சிறந்த படைப்பிலக்கியங்களை வாசிப்பின் மூலமாகவே கண்டடைந்தேன். அந்தச் செயற்பாட்டின் மூலமே ஜெயமோகனின் சில படைப்புகளையும் சந்தித்தேன். பின்னர் அவரது எழுத்துலகத்தை பூரணமாக அறிந்துகொள்ள விழைந்தேன். அனைத்து நாவல்களையும் வாசித்தேன்.


'உலோகம்' நாவலை வாசிக்கையில் கடுமையான அதிர்ச்சியாக இருந்தது. ஈழ விடுதலை இயக்கங்களுக்குள் நிகழ்ந்த தனிமனிதவாதங்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து ஆழமான அறிதல்களற்ற ஒருவர் 'எழுத்தில் நிகழ்த்திய அசம்பாவிதம்' என்ற உறுதியோடும் அசட்டுப் புன்னகையோடும் அந்தப் புத்தகத்தை மட்டும் எனது சேமிப்பிலிருந்து விலக்கிக்கொண்டேன். இப்போதும் என்னுடைய புத்தகச் சேமிப்பில் அந்தப் புத்தகம் இருக்காது, ஏனெனில் அது நான் கொண்டாடக்கூடிய படைப்பிலக்கியவாதியின் நாவல் அல்ல என்பதே எனது தரப்பு. இந்த மனோபாவம் வாசக அதிகாரத்தால் மட்டும் நிகழவில்லை. என்னுடைய அரசியல் நிலைப்பாட்டினாலும் நிகழ்ந்தது. நூறாண்டு காலமாக குருதி தோயும் ஈழப்பிரச்சினை என்பது இந்திய அரசியலுக்கு மட்டுமல்ல இந்திய அறிவுஜீவிகள் பலருக்கும் தொடுகறியாக இருந்துவருவதன் சாட்சியென 'உலோகம்' நாவலை அடையாளப்படுத்தலாம் என்றே கருதுகிறேன்.


ஆனால் எதன்பொருட்டும் ஜெயமோகன் எனும் படைப்பாளுமையை என்னுடைய வாசிப்பில் விலக்கம் செய்ய விரும்பவில்லை. மாறாக எஞ்சியுள்ள ஏனைய நூல்களையும் வாங்கி வாசித்தேன். ஒருபக்கம் ஜெயமோகன் என்கிற புனைவெழுத்தாளனை வாசிப்பின் நிமித்தம் உள்ளூரக் கொண்டாடியும் மதிப்பளித்தும் வந்தேன். மறுபக்கத்தில் அவரது அரசியல் கருத்துகள் மீது கடுமையான சீண்டல் மிக்க எதிர்வினைகளையும் நிகழ்த்த விழைந்தேன். ஆனால் அவரது புனைவுகளுக்குள் மீண்டும் மீண்டும் வசியமுற்ற உயிரியைப்போல என்னை நானே ஆக்கிக்கொண்டேன்.


அவருடன் நிகழ்ந்த அறிமுகத்திற்கு பின்னால் இலக்கியத்தையும் அரசியல் நிலைப்பாடுகளையும் விவாதிக்க முடிந்தது. அவரின் நிரந்தரமான சில நிலைப்பாடுகளை மறுக்க முடிந்தது. செழுமை பெறவும் தெளிவுகொள்ளவும் மட்டுமல்ல, உரையாடலின் வழியாக அவரை தெளிவுறுத்தவும் வல்ல ஜனநாயகத்தினை எனக்கும் அவருக்குமான உறவின் வெளி தகவமைத்துத் தந்தது. ஜெயமோகன் மீது திட்டமிட்டு உருவாக்கப்படும் வசைகளுக்கும் அவதூறுகளுக்கும் எதிராக பல நண்பர்களோடும் ஆளுமைகளோடும் பொருதினேன். அவர்களில் சிலரை எனது நட்புலகிலிருந்து விலக்கிக்கொண்டேன். எந்த வாசிப்புமற்று எழுத்தையும் எழுத்தாளர்களின் மாண்பையும் கண்மூடித்தனமாக வெறுத்து ஒதுக்கும் நச்சுச்சூழலின் மீது அதிருப்தி கொண்டேன். நான் ஜெயமோகனின் வாசகராக, நண்பராக, மகவாக, அன்புக்குரியோனாக ஆகுவது என்னுடைய உரிமை என்பதை பிரகடனம் செய்தேன். அதற்கு நிகழ்ந்த எதிர்வினைகளும் கூச்சல்களும் வசவுகளும் எண்ணிலடங்காதவை. எல்லாவற்றுக்கும் அப்பால் அழிவற்ற சிருஷ்டிகர்த்தர்களில் ஒருவரான ஜெயமோகனின் எழுத்து மொழிக்கு அருகில் அமர்ந்துகொண்டேன். அது நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல, எனது ஜீவிதத்தின் முழுமைக்கும் இனிய வெகுமதியென உணர்ந்துகொண்டேன். குளிர்காலச் சூரியனாய், வேற்றுமையற்ற வெளிச்சமாய், பருவ காலங்களாய் மொழியின் பனிக்குடத்தில் தன்னுடைய சொற்களால் நித்தியத்தன்மை பெறுகிறார் ஜெ.


அண்மையில் தமிழ்ச் சிறுகதைகளின் தொடர்ச்சியைப்பற்றி நண்பர்களோடு கதைத்துக்கொண்டிருந்தேன். அப்போது புதுமைப்பித்தனின் 'சங்குத்தேவனின் தர்மம்' என்றொரு கதையையும் அதன் பாத்திரப் படைப்புக்களையும் சொல்லி வியந்தேன். அங்கிருந்த நண்பர் புதுமைப்பித்தன் 'பொன்னகரம்' சிறுகதையில் மட்டுமே தன்னை வசீகரித்தார் எனச் சொன்னார்.  அதைத் தவிர நீங்கள் வாசித்த புதுமைப்பித்தனின் சிறுகதைகள் என்னவென்று சொல்லமுடியுமா எனக் கேட்டேன். அந்த நண்பர் அதுதான் ஒரு கதை போதுமே என்று விளக்கம் அளித்தார். அதிர்ச்சியோ வியப்போ அடைய அதில் எதுவுமில்லை. இலக்கிய வாசிப்பு எனும் அடையாளம் வெறும் பம்மாத்து வேலையாக ஆக்கப்பட்டிருக்கும் இணையவெளியில் அவதரித்த அந்த நண்பரோடு மேற்கொண்டு பேசுவதற்கு எதுவுமில்லை என உரையாடலை விலக்கிக்கொண்டேன். ஏனைய நண்பர்களில் ஒருவர் ஜெயமோகனின் சிறுகதையுலகம் பற்றி பேச்சைத் திருப்பினார். அவருடைய கதைகள் குறித்து என்னைப் பேசுமாறு கேட்டுக்கொண்டார். எனக்குப் பிடித்தமான ஜெயமோகன் கதைகளின் தலைப்புகளைச் சொன்னேன்.


'திசைகளின் நடுவே' தொகுப்பிலுள்ள 'கண்' என்ற சிறுகதையில் வரக்கூடிய தென்னை மரம் பற்றிய இந்த விவரிப்பைச் சொன்னேன்.


'உற்சாகமான மரம் அது. இந்தச் சோகம் அதற்கு அபூர்வம். காலையில் வானம் கழுவிச் சாய்த்து வைக்கப்பட்ட பெரிய நீல நிறக் கண்ணாடி போலத் தோன்றும்போது பார்க்கவேண்டும் அதை. வானத்தைத் துடைக்க அசையும் பட்டுக்குஞ்சம்போல் இருக்கும். கூந்தல் காற்றில் மிதக்க, இடை அசைத்து ஆடும் நளினமான பெண்மை. காலையில் ஓலைகளின் பச்சை நிறம் சற்று நீர்த்துப்போயிருக்கும். ஒளியின் பிரகாசம் ஏற, ஏற ஓலைப்பரப்பு மின்னத் தொடங்கும். புள்ளி புள்ளியாக ஒளித்துளிகள். அவை காற்று வீசும்போதும் வரிசை குலையாமலேயே அசையும்.'


உங்களுக்கு நினைவு சக்தி அதிகமென பாராட்டிய நண்பரை மறுத்து, இந்த வார்த்தைகளை எழுதிய எழுத்தாளன் மொழியால் நிதமும் நினைவுகூரப்படுவான் என்றேன். ஜெயமோகனின் தொடக்ககால சிறுகதைகளில் நிரம்பியிருந்த மொழியின் வசீகரமும் கூறல் மொழியும் தமிழ்ச் சிறுகதையின் முகத்தை கிளர்ச்சியுடனும் கம்பீரத்துடனும் இன்னும் உயர்த்தியிருக்கிறது என்பது என்னுடைய துணிபு. 'படுகை', 'நாகம்', 'போதி', 'ஆயிரம் கால் மண்டபம்' போன்ற கதைகள் உறுதியான பண்பாட்டுத் தளத்தில் இயங்குபவை. தொன்மங்களை வீறுடன் ஊடுருவிச் செல்வன.


பேச்சியை வென்ற செம்பன்துரை பறவைகளின் எச்சம் வீச்சமடித்த மரத்தடியில் பசுந்தழைப் புதருக்குள் தனிமையில் கிடந்தார். அந்தப் பெயரை வாசிக்க இயலவில்லை. சகட்டு மேனிக்கு சாயம் பூசிவிட்டிருந்தார்கள். அவருக்கு நடமாட முடிந்ததென்றால் அப்பகுதியிலேயே இருக்கமாட்டார் என்றேன். குரோட்டன்ஸ் செடிகளின் நிழலை அவர் எப்படித் தாங்கிக்கொள்வார்? அவரென்ன, பேச்சிகூடத்தான் ஓடிப்போயிருப்பாள் என்றான் ராதாகிருஷ்ணன், அந்தச் சிறு பிரதிஷ்டையைச் சுட்டிக்காட்டியபடி. சதுரவடிவிலான பெரிய கல் மேடை மீது கரடுமுரடுமான பிரம்மாண்டமான ஒரு மரம் நின்றிருந்தது. பெரிய, தடித்த இலைகள் மண்டிய கிளைகள் நான்கு பக்கமும் தழைந்து கீழே வந்து கூடாரம் போலக் கவிழ்ந்திருந்தன. உள்ளே அரை இருள். ஈரமாய் சருகு மக்கிய சொதசொதவென்ற தரை. மரத்திலே அறையப்பட்டதாய் அம்மனின் வெண்கல முகம். கீழே கரிய பலிபீடம். ஒரு வாரத்துக்கு முந்தைய பூக்கள் சிதறிக் கிடந்தன. சகட்டுமேனிக்குக் குங்குமம் அப்பப்பட்டிருந்தது.


'பேச்சியம்மன் சோயல்லோ 

பேய்ஞ்சதூ மலை மேலே 

பேச்சியம்மன் முடியல்லோ 

பிளுதெறிஞ்சான் செம்பன்தொரெ...'


என்று சிங்கியின் குரல் கேட்பது போலிருந்தது.


'படுகை' சிறுகதையின் இந்த விவரணை வழியாக முகிழ்த்தெழும் ஓருலகிற்குள் வாசகனை அழைத்துவரும் இடையறாத உறவு பேணப்படுகிறது. ஜெயமோகன், மிகச் சிறிதான தமிழ் வாசக மரபில் செழுமையுற்ற வாசிப்பைக் கோரும் கதைகளை நிறையவே எழுதினார்.


02


எழுத்தாளன் மொழிக்கு குருதி அளிப்பவன். புத்துயிர் நிறைப்பவன். அவனுடைய படைப்புலகின் மூலம் வாசகவெளி கண்டடையும் தரிசனம் ஏராளம். திசைகளில் விழித்து நிமிர்கின்ற சூரியனைப்போல ஒளிபொழியும் வார்த்தைகளை எழுத்துக்காரன் மொழிக்குள் தூவுகிறான். மனிதச் சுவடுகளைக் கண்டடையும் வரலாற்றைப்போல மொழியின் வரலாற்றை இலக்கியத்தை வைத்தே கண்டடைய முடியும். மொழியின் ஓசையை வார்த்தைகளில் தழைக்கச் செய்யும் வேட்கை படைப்பாளனுக்கு  மட்டுமே வாய்த்திருக்கிறது. முலைகளின் தாய்மையைப்போல ஜெயமோகனின் மொழிச்சிலிர்ப்பு எனக்கு அமுதூட்டின. 'கொற்றவை' நாவலின் 'பழம்பாடல் சொன்னது' பகுதியில் வருகிற இந்தப் பத்தியை எப்போதும் என்னால் மறக்கமுடியாது.


'அம்மா என்ற அச்சொல்லை அவர்கள் குடி பாலூட்டும் விலங்கொன்றிலிருந்து கற்றுக்கொண்டது. மின்னலிலிருந்து தீயை அடைந்தது போல. மூன்று ஒலிகள் கூடிய அடுப்பினுள் அச்சொல் அணையாது எரிந்துகொண்டிருந்தது. பின்பு அழகுக்கும் சிறப்புக்கும் அதுவே சொல்லாயிற்று'


'கொற்றவை' நாவலில் உருவாக்கப்பட்ட புதிய சொற்கள் ஏராளமானவை. ஜெயமோகன் குறிப்பிடுவது போலவே அதனை புதுக்காப்பியம் எனக் கொள்ளலாம். 'திசையழிந்த வெளியெங்கும் நிரம்பிய ஒளியே மண்ணில் தீ என உறைகிறது என்று உணர்ந்தனர்' எனத் தொடங்கும் இந்நாவல் என்னுள் உறைந்து எனக்கு ஒளி தருவது. 

03

எதிர்காலத்தில் ஜெயமோகன் படைப்புகளைப் பற்றிய ஒரு விரிவான அலசலை நிகழ்த்தவேண்டுமென்ற ஆர்வம் எனக்கிருக்கிறது. அதற்கு மாபெரும் உழைப்பைச் செலுத்தவேண்டும். 'பின்தொடரும் நிழலின் குரல்' நாவலை வாசித்து முடிக்கும் ஒவ்வொரு வேளையிலும் அருணாசலத்துக்குள் நிகழும் மன அதிர்வுகளையும், வீரபத்திரபிள்ளையின் உருவத்தையும் நினைத்து அழுதிருக்கிறேன். லட்சியவாதிகள் மனநோய்க்காரர்களாகக் கைவிடப்படும்போது கடவுளிடம் சரணடைகின்றனர். உலகிலுள்ள அரசியல் தத்துவங்களைப் பார்க்கிலும் எந்தவகையிலும் கடவுள் என்கிற கருத்துருவாக்கம் மோசமானதில்லை என்பதே எனது அனுபவமும். அறிஞர் கோவை ஞானி அவர்களின் 'அகமும் புறமும்' என்கிற தொகுப்பினை வாசிக்க நேர்ந்தது. அதில் 'பின்தொடரும் நிழலின் குரல்' குறித்து அவர் எழுதியிருப்பதை ஆவலோடு வாசித்தேன். அவர் அந்தக் கட்டுரைக்கு வைத்திருந்த தலைப்பு 'நம்மைப் பின்தொடரும் ஜெயமோகனின் குரல்'


04


உயர்ந்த ஆளுமைகளின் நட்பையும் நேசத்தையும் பெறுவது நல்லூழ். நானும் ஜெயமோகனும் நட்பையும் நேசத்தையும் பரஸ்பரம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். அவரது பகடியும் எள்ளலும் மிகுந்த உரையாடல் பொழுதுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் அமைந்தன. அவர் ஒரு வெடிச்சிரிப்போடு சில இலக்கியச் சம்பவங்களைப் பகிர்வதுண்டு. என்னுடைய 'ஆகுதி' சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுகளில் பிரதம அதிதியாக பங்கெடுக்க ஒத்துழைத்து சென்னை வருகிற நாட்கள் இனிமையானவை. சென்னையில் நிகழ்த்தப்பட்ட 'மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?' என்ற தலைப்பிலான கட்டண உரை நிகழ்வு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு செம்மார்ந்த பதிவு. எழுத்தாளனின் உரையைக் கேட்பதற்கு பணம் கொடுத்து வருகிற பிரகாசமான வாசகர்கள் அங்கு கூடினர். அரங்கு முழுதும் நிரம்பிய பின்னர் திருவெற்றியூரில் இருந்து வந்த வாசகர் ஒருவர் தன்னை உள்ளே அனுமதிக்குமாறும்  நின்றுகொண்டே உரையைக் கேட்பேன் எனவும் சொன்ன பொழுதை நினைத்துப் பார்க்கிறேன். அது எனக்கு ஒரு கனவைப்போல இருந்தது. இந்த சென்னை மாநகரில் வேலை தேடி வந்து நாளாந்த உணவுக்குச் சிரமப்பட்டு எழுதிக்கொண்டிருந்த புதுமைப்பித்தனின் நினைவுகள் அலை அலையாக எழும்பி வந்தன. ஒரு நவீன எழுத்தாளன் ஆற்றக்கூடிய உரையை பொருள் அளித்து கேட்க வரும் மாண்பு கொண்டவர்களை தமிழ்ச் சமூகம் பெற்றிருக்கிறது என்பதை அறிந்துகொண்டோம்.


பிறகு என்னுடைய சிறுகதைகள் சில வெளியானபோது அதனை வாசித்து தனது மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்துகொண்டார். அவருடைய இணையதளத்தில் அதனை மீள் வெளியிட்டு ஊக்கமளித்தார். 'மாபெரும் தாய்' சிறுகதை வெளியானதும் அதனை வாசித்துவிட்டு ஜெயமோகன் தொடர்பில் வந்தார். அந்தக் கதையில் இயங்கிய சைவ மனத்தின் பண்பாட்டு அஸ்திவாரங்களைப்பற்றி நிறையவே பேசினார். வெகுவாகப் பாராட்டி உங்கள் பெயர் நிலைக்கும் சிறுகதைகளில் ஒன்று என விளித்தார். அதுவெனது எழுத்துக்குக் கிடைத்த திவ்விய நிமிடங்கள்.


ஜெயமோகனின் “மாடன் மோட்சம்” சிறுகதைக்கு என்னைவிட ஒரு வயது அதிகம்.  அவருடைய மகன், 'மைத்ரி' நாவலாசிரியர் அஜிதனும் நானும் வயதொத்த நண்பர்கள். இப்போது ஜெயமோகனுக்கு அறுபது வயதாகிறது. என்னுடைய அம்மாவின் வயது. கனிந்து பிழிந்த சாற்றின் நறுமணத்தோடு  இனிவரும் காலமும் இனிக்கட்டும். வாழ்த்துகள் எனதருமை  ஜெயமோகன்.


***


அகரமுதல்வன் - தமிழ் விக்கி பக்கம்

திசை நிறைத்து எழுந்துயர்ந்த பேருருவம் - வேணு தயாநிதி

வேணு தயாநிதி, ஜெயமோகன், ராஜன் சோமசுந்தரம்

பாலமித்ரா, அம்புலிமாமா பொன்னி லயன் காமிக்ஸ்சுகள் பஞ்சதந்திரக்கதைகள், தெனாலிராமன், ஈசாப், நீதிக்கதைகள் என “கதைப்புத்தகங்கள்” வாசிக்க ஆரம்பித்து வாண்டுமாமா, துமிலன், ஆலந்தூர் கோ.மோகனரங்கன். பிறகு வீட்டில் அக்காவின் சேகரிப்பில் இருந்த லஷ்மி, அநுத்தமா, சிவசங்கரி, ரமணிச்சந்திரன், இந்துமதி, ராணி, தேவி வார இதழ்கள், ராணிமுத்துவின் மாத நாவல்கள் வாசித்து கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், பி.வி.ஆர், வரை வந்தேன். பிறகு ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் நாவல்கள். இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்வாணன் சங்கர்லால் துப்பறியும் நாவல்களுக்குபின். ‘துப்பறியும் கலையில் வல்லவராவது எப்படி?’ படித்துவிட்டு, துப்பறியும் கலையில் எப்படித்தான் வல்லவராவது? என்று யோசித்துக்கொண்டிருந்த காலம். சலித்துப்போய் ஆவியுலகம் பற்றிய புத்தகங்களுக்கு பிறகு ‘பூமிக்கு வந்த வானமண்டல மனிதர்கள்’ வாசித்து அதை வானொலியில் ஒலிச்சித்திரமாக்கும் என் விருப்பத்தை விக்கிரவாண்டி ரவிச்சந்திரனுக்கு எழுத அவர் அனுமதி தெரிவித்து பதில் எழுதியதுடன் “விழுப்புரம் பகுதியில் கோவை வானொலி எடுக்காது. ஆகவே, நிகழ்ச்சியை தயவு செய்து கேசட்டில் பதிவு செய்து அனுப்ப முடியுமா?” என்றும் கேட்டிருந்தார். பள்ளி மாணவன் என்ற விஷயத்தை அவருக்கு எழுதிய கடிதத்தில் நான் குறிப்பிட்டிருக்கவில்லை.  


விடுமுறையில், ‘கராத்தே கற்றுக்கொள்ளுங்கள் (105 விளக்கப்படங்களுடன்)’, ‘ஹிப்னாடிசம்’, ‘மெஸ்மரிசம்’ முதல் உதயமூர்த்தியின் தன்னம்பிக்கை நூல்கள், ‘வனவாசம்’, ‘வர்மக்கலை’ ஆகியவற்றுக்கிடையே தற்செயலாக ‘மோகமுள்’ என்ற ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. அது பிடித்துப்போய ‘தி.ஜா.வின் சிறுகதைகள்’. ‘செம்பருத்தி’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை வாசித்து முடித்தேன். லா.ச.ராவின் ‘புற்று’ சிறுகதை தொகுப்பை அடுத்து அவரின் சிறுகதை தொகுப்புகள், நாவல்கள். கி.ராஜநாராயணனின் ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’, ‘கரிசல்கதைகள்’ ஆகியவற்றை வாசித்தேன். கோவை வானொலியில் ‘கோபல்ல கிராமம்’ சூலூர் கணேஷின் குரலில் ஒலிச்சித்திரமாக வந்துகொண்டிருந்தது.


பள்ளிப்பாடங்கள், விளையாட்டுகள், வானொலி, நூலகம் தவிர வேறு எதுவும் இல்லாத வாழ்க்கை. வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில் நூலகம் இருந்ததும் வசதியாக இருந்தது. அன்று எடுத்து வந்தவைகளை அன்றே வாசித்து முடித்து மறுநாள் பள்ளிக்கு செல்லும்போது புதிதாக புத்தகங்கள் எடுத்து வருவேன். சனி ஞாயிறுகளில் காலையில் கிளம்பிச்சென்று மதியம் வரை நாழிதழ்கள் வாராந்தரிகள் வாசித்திருந்துவிட்டு மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்து எடுத்து வந்த புத்தங்களை வாசித்துவிட்டு மாலையில் சென்று திருப்பியளித்துவிட்டு புதிய புத்தகங்களை கொண்டுவருவேன்.  ‘பொழுதுபோக்கு பெளதிகம்’, ‘நான் ஏன் என் தந்தையைப்போல் இருக்கிறேன்’, ‘வேதியலைப்பற்றி 107 கதைகள்’ வாசித்து அவற்றின் வழியாக ரஷ்ய மொழிபெயர்ப்புகளை அடைந்தேன். பதினொன்றாம் வகுப்பு வரும்போது பாரதி, பாரதிதாசன், சுரதா, வைரமுத்து, குருவிக்கரம்பை சண்முகம், மீரா, அப்துல் ரகுமான், இன்குலாப், மு.மேத்தா ஆகியோரை வாசித்திருந்தேன். ‘மனப்பாடமும் மண்வெட்டியும்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை பள்ளி ஆண்டுவிழாவில் முதல் பரிசு பெற்றது. வைரமுத்துவின் வாசகனாக அவருக்கு கடிதம் எழுதி, அழகிய கையெழுத்தில் எனக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார். 


இவற்றையெல்லாம் வாசிக்கலாம் என்று வழிகாட்டவோ வாசித்ததை பகிர்ந்துகொள்ளவோ யாரும் இருக்கவில்லை கிடைத்ததை எல்லாம் வாசித்து, வாசிப்பின் சுவை பிடித்துப்போய் அதன் ரசிப்பின் போக்கில் என் பாதையை வந்தடைந்தேன். ஆன்டன் செகாவின் சிறுகதை தொகுப்புகள், ‘மக்ஸிம் கார்க்கியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’, ‘அன்னை’, ‘அன்னைவயல்’, ‘குல்சாரி’, ‘குற்றமும் தண்டனையும்’ (முதல் மொ.பெ.), ‘வெண்ணிற இரவுகள்’, ‘அன்னா கரீனினா’, ‘புஷ்கின் கவிதைகள்’ உட்பட ஆனைமலை கிளை நூலகத்தின் அப்போது இருப்பில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்களை பள்ளி இறுதிக்கு முன்பாகவே வாசித்து முடித்திருந்தேன். நினைவு தெரிந்த நாள் முதல் பள்ளி இறுதிவரை மின்சாரம், தொலைக்காட்சி, தொலைபேசி எதுவும் இல்லாத எளிய கிராமத்து ஓட்டுவீடுகளில் அரிக்கேன் விளக்குகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தது என் வாசிப்பிற்கு பெரும் பாதுகாப்பாக இருந்தது. அதுபோன்ற குக்கிராமங்களின் துவக்கப்பள்ளிகளில் பணியாற்றுவதே தன் விருப்பக் கடமை என்றும் அவை தான் வலிந்து மெற்கொண்ட தெரிவுகள் என்றும் பின்னாளில் அப்பா சொன்னார். 


வாசிப்பை தீவிரமாக்கும்படி அந்த கோடையில் இன்னொரு சம்பவமும் நடந்தது. பிறந்து வளர்ந்த ஊரை விட்டு நிரந்தரமாக என் விருப்பத்திற்கு எதிராக மதுரைக்கு குடியேறியது என்னை மேலும் தனிமையானாக ஆக்கியிருந்தது. மதுரை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராகி ஜெயகாந்தனின் சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், புதுமைபித்தன், மெளனி, பிச்சமூர்த்தி அசோகமித்ரன் சிறுகதைகள், ‘வாடிவாசல்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘திரைகளுக்கு அப்பால்’, ‘செம்மீன் (தகழி, சு.ரா. மொழிபெயர்ப்பு)’, ‘ஒரு புளியமரத்தின் கதை’, அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா’ சிறுகதை தொகுப்பு, ‘செ.யோகநாதன் கதைகள்’ ‘குடும்பவிளக்கு’, ‘மணோன்மணீயம்’,  ‘சித்திரப்பாவை’, என கலந்து கட்டி வாசித்துக்கொண்டிருந்தேன். கல்லூரியில் சேர்ந்து எம்.வி. வெங்கட்ராம், ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ், பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், பூமணி,  பிரபஞ்சன், பாவண்ணன், யுவன் சந்திரசேகர், பிரேம்-ரமேஷ் ஆகியோரின் சிறுகதைகள், மாலனின் ‘ஜனகனமன’, சாருவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்’, சுகுமாரனின் ‘கோடைக்காலக் குறிப்புகள்’ முதலான பல நூல்களையும் வாசித்து தமிழ் சிறுகதை, நாவல், கவிதைகள் பற்றி தோராயமான புரிதல்கள் ஏற்பட்டிருந்தன. கல்லூரி இறுதி ஆண்டில் சுஜாதா, பாலகுமாரன், தி.ஜானகிராமன், லா.ச.ர ஆகியோரின் புத்தகங்களை முற்றிலுமாக வாசித்து முடித்திருந்தேன். பத்திரிக்கைகளில் சுஜாதா எழுதும் எதையும் வாசிக்க தவறியதில்லை. அவர் வழியாக மனுஷ்யபுத்திரன் என்ற பெயரை கேள்விப்பட்டு வாசித்த ‘மனுஷ்ய புத்திரன் கவிதைகள்’, ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ ஆகிவை என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. 


அடுத்தது பாலகுமாரனின் காலம், 1996 வரை அவரின் ஒரு எழுத்துகூட என் வாசிப்பில் தவறியதில்லை. விகடன் நிருபர் பாலா, மீனாட்சி சுந்தர், சால்வாடி ஈஸ்வரன், தினகரன், கவிஞர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் என்னைப்போலவே சுஜாதாவின் வெறியர்களாக இருந்து பாலகுமாரனின் வெறியர்களாக மாறியவர்கள். அவர்களின் நட்பில் புத்தகங்கள் பரிமாறியும் உரையாடியும் வாசிப்பு வளர்ந்துகொண்டிருந்தது. சாந்தா, சூரியா ஆகியோருடன் மதுரை பொறியியல் கல்லூரியில் ஆற்றிய உரையை கேட்டு பாலகுமாரனை நேரில் சந்தித்திருந்தேன்.


பிறகு மூலக்கூறு உயிரியல் படித்து, டார்வின், டொப்ஜாண்ஸ்கி, ஃப்ராய்ட் கற்று, ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’, ‘வால்காவிலிருந்து கங்கை வரை(கண.முத்தையா)’, ‘மனுதர்மம் (தமிழ்நாடன்)’, இன்னபிற, வாசித்து கடவுள் நம்பிக்கையை கைவிட்டு இடது சாரி சிந்தனைகளின் அனுதாபியாகி டார்வின் கண்ணன், இரா.ஜவஹர் (கம்யூனிசம்- நேற்று இன்று நாளை), ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தேன். துளிர், உங்கள் ஹோமியோ நண்பன் ஆகிய இதழ்களில் என்னுடைய உயிரியல் கட்டுரைகள் வந்துகொண்டிருந்தன. ‘ஸீரோ டிகிரி’, ‘ஜெ.ஜெ.சில குறிப்புகள்’ முதல் ‘கதாவிலாசம்’, ‘தேசாந்திரி’, ‘உப பாண்டவம்’ என வாசிப்பு தொடர்ந்தாலும், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்டின் உருவம்’, ‘கோணங்கியின்  மதினிமார்கள் கதை’, ஆகியவற்றிற்கு பிறகு சிற்றிதழ்களை நோக்கி கவனம் திரும்பியது.


இந்தியா டுடே, கணையாழி, காலச்சுவடு, சொல்புதிது மற்றும் சிற்றிதழ்கள் வாசிக்கும் வழக்கம தொடர்ந்து அவற்றில் வாசித்த ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, ‘ஆயிரம்கால் மண்டபம்’, ‘நாகம்’ ஆகியவை என்னுள் ஆழ்ந்த பாதிப்பை செலுத்தின. ‘நித்யசைதன்ய யதியுடன் ஒரு உரையாடல்’ இன்னபிற கட்டுரைகள் கவிதைகள் கதைகள் வாசித்து சூத்திரதாரி, பெருமாள் முருகன், மோகனரங்கன், பிரமிள், ஸ்ரீவள்ளி, லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற பெயர்கள் அறிமுகமாகியிருந்தன. இதை எழுதும்போது பச்சை மஞ்சளில் குறுக்கே கோடுபோட்ட போலோ சர்ட், கண்ணாடி அணிந்து காலை புத்துணர்வுடன் புன்னகைக்கும் இந்திரா பார்த்தசாரதியை முன் அட்டையில் ஏந்தும் ஒரு சொல்புதிது இதழ் நினைவுக்கு வருகிறது. 


2000 ஆம் ஆண்டு மதுரை பல்கலையில் ஆய்வேட்டிற்காக ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் அவரின் வீட்டில் சந்தித்து உரையாடி வந்த பூமிச்செல்வத்துடன் நகுலனை சந்திக்க திருவனந்தபுரத்துக்கு செல்வது ஆய்வு வேலைகளின் காரணமாக நிறைவேறாமல் இருந்த சமயம் கோணங்கியின் பாழி நாவல் வெளியாகியது. அதை உடனே வாசித்து விவாத நிகழ்வுக்காக அப்போதைய ஆராய்ச்சி மாணவர்களான (இப்போது பேராசிரியர்கள்) பூமிச்செல்வம், கந்தசுப்ரமணியம், டி.தர்மராஜ், பெரியசாமிராஜா, முருகன், ரத்தினகுமார், இவர்களுடன் ஈ.முத்தையா, ஓவியர் பாபு, முருகபூபதி, கவிஞர் சமயவேல் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டவர்களுடன் போடிநாயக்கனூர் ஏலக்காய் ரயில் ஏறி குறங்கனி எஸ்டேட் சென்றிருந்தேன். காலச்சுவடிலிருந்தும் சென்னையிலிருந்தும் சிலர் வந்ததாக நினைவு. புழக்கத்தில் உள்ள எழுத்துமுறைக்கு மாற்றாக புதியதொரு எழுத்துமுறை உருவாக வேண்டியதன் அவசியம் பற்றி கோணங்கி உற்சாகமாக பேசிக்கொண்டே வந்தார், காலை ரயிலில் ஏறியது முதல் மாலை மீள்வது வரை இடைவெளியில்லாத உரையாடல். “என்னுடைய எழுத்து மீடியாவுக்கு எதிரான போர் – கோணங்கி” என்பது மாதிரியான தலைப்பில் தளவாய் சுந்தரம் இந்நிகழ்வை கட்டுரையாக்க தூரத்தில் முதுகு தெரியும் என்னுடைய படம் ஒன்றும் குமுதத்தில் வந்திருந்தது. தனியனாக அமைதி நிரம்பியவனாக இருந்தாலும் என் இலக்கிய வாசிப்பில் தீவிர நம்பிக்கை கொண்டவனாகவும், சகவாசகர்களை எழுத்தாளர்களை சந்திக்கவும் அவர்களுடன் விவாதிக்கவும் ஆர்வம் கொண்டவனாகவும் இருந்தேன். 


மாஸசூசட்ஸ் பல்கலைக்கு வந்தபிறகு ஆங்கில இலக்கியம், கவிதை, ஆகியற்றின் மீது ஆர்வம் விரிந்து தமிழில் வாசிப்பு குறைந்திருந்தது. கைவசம் தமிழ் நூல்களும் இல்லை. ஆகவே விடுமுறையில் மதுரைக்கு திரும்பியிருந்த சமயம் தமிழ் இலக்கியத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்க முயன்று ‘நீராலானது’, ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’, ‘இடமும் இருப்பும்’ ‘கதாவிலாசம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘ராஸ லீலா’, ‘கன்னியாகுமரி’ அனைத்தையும் வாசித்திருந்தேன். 2007ஆம் ஆண்டு ஞாயிறு ஆகஸ்ட் 12, என நினைக்கிறேன். எஸ். ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’, ‘அயல் சினிமா’ உட்பட 10 புத்தகங்களின் தொகுப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உயிர்மை வெளியிட்ட தினம். எஸ்.ரா.வின் கையெழுத்தை பெற்று திரும்பிக்கொண்டிருந்தபோது தூங்குமூஞ்சிமர நிழல் பாவிய வாசற்படியில் ஜெயமோகனை பார்த்தேன். 


நிற்க. இங்கு இன்னொரு விஷயத்தையும் நான் சொல்லவேண்டும். ஒரு பொது நிகழ்வில் பிரபஞ்சனையும் யுவன் சந்திரசேகரையும் ஒருசேரக்கண்டு சந்திக்க ஓடினேன். பிரபஞ்சனிடம் அவரின் அப்பாவின் வேஷ்டி பற்றியும் யுவனின் கானல் நதி பற்றியும் சில நொடிகளாவது பேசலாம் என்ற ஆர்வத்தில்.  பிரபஞ்சன் பெயருக்காக கைகுலுக்கிவிட்டு அருகில் எவரும் இல்லாதது போல யுவனுடன் பேச ஆரம்பிக்க யுவனும் உரையாடலில் ஆழ்ந்துவிட சில நிமிடங்கள் வெறுமனே அருகில் நின்றுகொண்டிருந்துவிட்டு திரும்பிட நேர்ந்தது. பல்வேறு நாடுகளின் ஆய்வாளர்களை சந்தித்து புதியவரை நேரில் சந்திக்கும் மாண்புகளையும், ஆளுமைகளின் குறைபாடுகளையும் அறிந்திருந்தேன் என்றாலும் மேற்படி சம்பவம் ஒரு வடுவாக எஞ்சிவிட அதன்பிறகு எழுத்தாளர்களை சந்திப்பதை ரகசியமாக வெறுத்தும் தவிர்த்தும் வந்தேன் என்பது, இப்போது யோசிக்க எனக்கே ஆச்சரியமளிப்பது. வேறென்ன சொல்வது? நம் மனம் சில சமயம் நாமே கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வினோதமானது. அருகில் நின்று பார்ப்பேன், உரையாடுவதை முழுக்க கேட்டுக்கொண்டிருப்பேன். எழுத்தாளர்கள் மீது ஆழமான மரியாதையும் நட்புணர்வும் எப்போதும் இருப்பதுதான் என்றாலும் அறிமுகம் செய்துகொள்ளாமல் திரும்பிவிடுவேன். ஜெயகாந்தன், மாலன், நாஞ்சில்நாடன், சுகுமாரன், சு.வேணுகோபால், சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோர் பேசுவதை மதுரையில் மிக அருகில் பார்த்திருக்கிறேன், ஆனால் அறிமுகம் செய்துகொண்டதில்லை. 


என்னுடய இந்த நுட்பமான சிக்கலை சரிப்படுத்த ஒருவேளை என் ஆழ்மனம் விரும்பியிருக்கலாம். ஏதோ ஒரு புதிய உரிமையாலும் தைரியத்தாலும் உந்தப்பட்டு ஜெயமோகனை நோக்கிச் சென்றேன். அறிமுகப்படுத்திக்கொண்டு அவரின் படைப்புகளை வாசித்திருப்பதை சொன்னவுடன் என் பின்னணியை நட்புடன் விசாரித்துக்கொண்டார். கன்னியாகுமரி நாவலை விரும்பி வாசித்ததை சொல்லிவிட்டு ஃபெலினியின் 81/2 படத்துடன்  ஒப்பிட்டுச் சொல்ல எண்ணங்களைத் திரட்டிக்கொண்டிருந்தபோது, “விஷ்ணுபுரம் படிச்சீங்களா?” என்றார்.  “இல்லை” என்றதும் பொறுமையாக “அது கொஞ்சம் கஷ்டமான புத்தகம் தான், படிச்சுப்பாருங்க!” என்றார். சாதீய அடுக்குகளையும் கடவுள் நம்பிக்கையும் முன்வைக்கும் கதை என்று ஒரு த.மு.எ.ச இலக்கிய கூட்டத்தில் கேள்விப்பட்டிருந்ததால் வாசிக்கவில்லை என்பதை அவரிடம் சொல்லவில்லை. பிறகு சுகா ‘கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ, பற்றிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ’ வரிகளின் நுணுக்கத்தை பாடிக்காட்டுவதையும் மரபியல் ஆராய்ச்சி பற்றி ஷாஜியின் விளக்கங்களையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அன்று விழா மேடையில் மனுஷ்யபுத்திரன், சுகுமாரன், பொன்வண்ணன் இன்னும் பலர் உரையாற்ற ஜெயமோகன் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்.  அதேபோல, சென்னை சிவகாமி பெத்தாச்சி அரங்கத்தில் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் விநாயகம், பாடகர்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ், ஸ்ரீனிவாஸ், கார்த்திக் மற்றும் நாஞ்சில் நாடன், பிரபஞ்சன் ஆகியோருடன் நிகழ்ந்த ஷாஜியின் ‘சொல்லில் அடங்காத இசை’ வெளியீட்டு விழாவிலும் பார்வையாளர்களுள் ஒருவராகவே எங்கோ அமர்ந்திருந்தார். அப்போது அவருடன் நிறைய உரையாடியிருக்கவில்லை. என்றாலும் ‘நவீன இலக்கியம் ஒரு அறிமுகம்’, ‘எதிர்முகம்’, ஆகிய நூல்களில் பல அடிப்படையான விஷயங்கள் மீது தீர்க்கமான திட்டவட்டமான விளக்கங்களை வாசித்து அவர் கதைசொல்லி மட்டுமல்ல ஒரு அறிஞரும் கூட, என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது. மினியாப்பொலிஸ் திரும்பியபிறகு அவரின் வலைத்தளம் இருப்பதை கண்டுபிடித்து அன்றாடமும் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அவரின் அமெரிக்க பயணம் பற்றி வெளியாகிய அறிவிப்பை கண்டு 2009 ஆகஸ்டில் மினியாப்பொலிஸில் சந்திக்கும் முன் ‘ஜெயமோகன் சிறுகதைகள்’, ‘ஏழாம் உலகம்’, ‘விஷ்ணுபுரம்’ நாவல்களை வாசித்திருந்தேன்.  


இந்து ஞானமரபை முற்றிலுமாக நிராகரித்து புறக்கணித்திருந்ததால் சாங்கியம் முதல் பெளத்தம் விஷிஷ்டாத்வைதம் வரையிலான மரபுகள் பற்றி இன்றுள்ள விரிவான கல்வியும் புரிதலும் அப்போது இருக்கவில்லை. என்பதால் என்னை அடித்து நொறுக்கி இல்லாமலாக்கி புரட்டிப்போட்டு மிரட்டி அச்சுறுத்தியது விஷ்ணுபுரம். ஒருவகையில் அதன் வாசிப்பு அனுபவம் பள்ளி இறுதி விடுமுறையில் ‘குற்றமும் தண்டனையும்’ வாசித்து கண்ணீர் விட்டு மனம் அரற்றிக்கிடந்த இரவுகளுக்கு இணையானது. மானுட சிந்தனையின் வலிமையை முழுக்கவும் ஒன்று திரட்டி அதன் விளிம்பில் நின்றும், தாண்டிச்சென்றும் ஏதோ ஒன்றன் உச்சத்தின் நிறைவை உய்த்து உணரும் மனஎழுச்சி. நம்மை நாமாக இருத்தியிருக்கும் மனித நியதிகளால் கட்டுண்ட மானுடத்தின் இயலாமையை, சிறுமையை, அற்பத்தை உணர்ந்ததால் உருவாகும் தாழ்வுணர்ச்சியின் இழிவு. நீந்தத் தெரியாதவனை எல்லாத்திசைகளிலிருந்தும் மூழ்கிச் சூழ்ந்து கொள்ளும் கனத்த கிணற்று நீர் போல மனதை வன்முறையாக ஆக்கிரமித்துக்கொண்ட முடிவின்மையின் வெறுமை. வெறுமையின் நிறைவில் அதைப்பற்றி விரிவாக விவாதிக்கும் துணிவோ ஊக்கமோ அவரை நேரில் சந்திக்கையில் இருக்கவில்லை. ”விஷ்ணுபுரம் அளவுக்கு செறிவான தத்துவ விவாதங்களை ஒரு நாவலில் படித்ததில்லை. படிக்கையில் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினேன்” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. ”அவ்வளவு தத்துவமும் நாவலில் கதையோடு வருவதால் தான் அப்படி இருக்கிறது” என்றார். மனுதர்மம் எழுதப்பட்ட காலத்தின் பின்னணி, மதங்களுக்கும் சோஷியலிஸத்துக்கும் உள்ள பொதுமைகள், அறிவியல் புனைவுகள், ஜானகிராமன் லா.ச.ரா. ஆகியவர்களின் எழுத்துக்களின் ஒன்றுமையும் வேற்றுமையும் ஜெயகாந்தன், அசோகமித்திரன், க.நா.சு. ஆகியோரை அவர் சந்தித்த அனுபவங்கள் என்று பல தளங்களிலும் விரிவாக கேட்டுக்கொண்டிருந்தேன். பாரதியின் கவிதைகளை ‘விவரம் தெரிந்த பிறகு’ முழுதுமாக வாசித்து ஏற்படும் ஏமாற்றம், பொதுவில் புழங்கும் மகாபாரத கதை தட்டையாக இடைவெளிகளுடன் இருப்பது, எதிர்கால சந்ததிக்கு மோகமுள் ஏன் ஏமாற்றமளிக்கும் படைப்பாக இருக்கும் என்பது போன்ற என் எண்ணங்களை சொல்லிக்கொண்டிருந்தேன். அவரை சந்தித்த பிறகு, தமிழ் இலக்கியத்தை விட்டு விலகி தூரமான ஊரில் வாழ்ந்துகொண்டிருக்கும் வருத்தம் குறைந்து, வாசிப்பின் மீது புதிய உற்சாகமும் தெளிவும் ஏற்பட்டிருந்தது. 


‘விசும்பு (தொகுப்பு)’, ‘காடு’, ‘டார்த்தீனியம்’, ‘பின்தொடரும் நிழலின் குரல்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘கொற்றவை’, ஆகிய படைப்புகளை வாசித்ததுடன் ‘உலோகம்’, ‘வெள்ளையானை’, ‘அறம் சிறுகதைகள்’, ‘வெண்கடல் சிறுகதைகள்’, ‘இரவு’ ‘புறப்பாடு’ ‘முதற்கனல்’, ‘வண்ணக்கடல்’, ‘நீலம்’,  ஆகிய படைப்புகள் உருவாகும் தருணங்களில் உடனிருக்கவும் வாசித்து விவாதிக்கவும்  குழும உரையாடல்கள் வழி வாய்த்திருந்தது. நான் ஊருக்கு சென்ற சமயங்களில் அவர் ஐரோப்பாவிலும் வெளியூர் பயணங்களில் இருந்ததால் நேரில் சந்தித்ததில்லை. அவருடன் பேச நினைத்து தொலைபேசியை கையில் எடுக்கும்போதெல்லாம் அவர் திரைப்பட விவாதத்தில் பலருடன் அமர்ந்திருப்பது போலவோ, எழுத்துமேசையில் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பது போலவோ மனதில் சித்திரம் உருவாகும். அதனால் ஏற்படும் தயக்கம் அவரை அழைக்க முடியாமல் செய்து தொலைபேசியில் உரையாடியதும் இல்லை. ஆனால் அவரின் அமெரிக்க பயணங்களில் சந்தித்து உரையாடல்களை கேட்டிருக்கிறேன். வெண்முரசின் பிந்தைய நாவல்களையும், நோயச்ச காலத்தில் எழுதிய புனைவுகளையும் வாசிப்பதில் சற்று சுணக்கமாகிவிட்டது. தவிர, அதற்கு முந்தைய குறைந்தது எண்பதுசத புனைவுகள், அபுனைவுகளை வாசித்திருக்கிறேன் என்பதை என்னால் துணிவுடன் கூறமுடியும், 


நாடோடியைப்போல இலக்கில்லாமல் சுற்றித்திரிந்து வாசித்த பல நூல்களையும் அவற்றின் சரடுகளையும் சரிபார்த்து தொகுத்துக்கொள்ள ஜெயமோகனின் கட்டுரைகள் முக்கிய கருவிகளாக அமைந்திருக்கின்றன. தாறுமாறாக புத்தகங்கள் குவிந்து கலைந்து கிடக்கும் அறையை தூசுநீக்கி புத்தகங்களை அவற்றிற்குறிய அலமாரிகளின் வரிசையில் நறுவிசாக அடுக்கி வகைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவற்றிற்கான விதிகளையும் முன்வரைவுகளையும் வகுத்துக்கொடுத்தது கட்டுரைகளின் வாயிலாக அவர் எனக்களித்தவற்றுள் முக்கியமானது. அப்படியான அவரின் வரிசைமுறையில் எனக்குள்ள வேறுபாடுகளின் நுண்மையை எண்ணிப்பார்த்து வேறுபடும் புள்ளிகளை திட்டவட்டமாக என்னால் புரிந்துகொள்ள முடிவதும் பெரும்பாலும் ஜெயமோகன் கட்டுரைகளின் வழி சாத்தியமானதுதான். என் வாசிப்பு முழுதையும் மீள்பார்வை செய்யவைத்ததுடன் அனைத்து பழைய புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை தொடர்ந்து வாசிக்க அறியத்தரும் வாசலாகவும் ஜெயமோகனின் கட்டுரைகள் அமைகின்றன. இலக்கியத்தின் அடிப்படைகள், கலைகள், கோட்பாடுகள், இலக்கிய விமர்சனம், அழகியல் பற்றிய அடிப்படைகளை ஜெயமோகன் விவாதிக்கும் கட்டுரைகளின் தர்க்க அடுக்கும், கூர்மையும் துணுக்குறவைப்பது. கடந்த இருபது வருடங்களில் அமெரிக்காவின் ஒரு ஐம்பது அமர்வுகளிலாவது ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத ஒற்றை ஆளாக பங்கேற்றிருக்கிறேன். பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், கவிஞர்கள் பலரிடம் உரையாடியிருக்கிறேன். எவரிடமும் சரி நிகராக நின்று மொழியை, கவிதையை, இலக்கியத்தின் அடிப்படைகளை விவாதிக்க எனக்குள்ள தெளிவையும் துணிவையும் தன்னம்பிக்கையையும் அளித்ததில் ஜெயமோகனின் கட்டுரைகளுக்கு பெரும் பங்கு உண்டு. 


மொழியை நூலாகத் திரிக்கவும், மணலாக நிறைக்கவும், கல்லாக்கி சிற்பமாக்கவும், களியாக்கி சிலைகளாக்கவும், உருக்கி உலோகமாக ஆக்கவும், பொன்னாக நுணுக்கவும், நீராகப்பொழிந்து நிறையவும், புனைவுகளில் முடிந்திருக்கிறது. பெருங்கடலை சிறுதுளியாக்கியும், சிறுதுளியை கடலாக்கியும், பெரும் மலைத்தொடரை சிறு துகளாக்கி ஊதிப் பறக்க வைப்பதும், சுடரின் ஆழத்தின் கருமையை விரித்து பூதாகரமாக்கி அதன் இருண்மையின் ஆழத்துள் அமிழ்வதும், பாதாளத்தின் ஆழத்தில் இருந்து எழும்பி விண்னோக்கி பறக்க முடிவதும், இருண்மையின் ஆழத்துள் பொதிந்திருக்கும் சிறுமினுக்கை விரித்து பெரும் சுடராக்கி ஏந்தி மலைகள் கடல்கள் தாண்டி புதிய உலகங்களை காட்ட முடிவதுமான மாயம் தமிழில் நிகழ்ந்துள்ளது. மொழியின் இதுவரை அறியாத சந்து பொந்துகள் இடுக்குகள் குகைகள் பள்ளங்கள் உயரங்கள் சமவெளிகள் பள்ளதாக்குகள் -அனைத்திலும் ஜெயமோகனின் எழுத்து பயணித்துள்ளது. கொற்றவை மற்றும் உலகின் மிக நீண்ட காப்பியமாகியிருக்கும் வெண்மரசு வரிசை நூல்களில் புழங்கியிருக்கும் மொழி தமிழ் இதுவரை அடையாத உச்சங்களுள் ஒன்று. 


தமிழ் இலக்கியத்தின் வரலாற்றுக் காலத்தை ஜெயமோகனுக்கு முன், ஜெயமோகனுக்கு பின் என இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம் எனும் அளவுக்கு தமிழின் கடந்த கால, நிகழ்கால எழுத்துக்களை பகுத்து தொகுத்ததுடன் புதிய கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி எதிர்காலத்திற்கு பாலம் அமைத்ததும் அவரின் முக்கிய பங்களிப்பாகும். சமூக பண்பாட்டு கலாச்சார விவாதங்களில் ஒரு அறிஞன் ஆழ்ந்து  அடைந்த கண்டடைதல்,  மறுபக்கம் அடிப்படைவாதிகள், இடதுசாரிகள், நடுநிலைவாதிகள், -மற்றும் இவற்றிற்கிடையேயான எல்லைகளுக்குள் தொடர்ந்து ஊசலாடும் தாராள முற்போக்கு நடுநிலைவாதிகள் பொதுவாக ஏற்கத்தயங்கும் கசப்பான ஒரு உண்மையும் அதில் இருக்கும். பல்வேறு சிந்தனைத்தரப்புகளுடன் தொடர்ந்து ஆக்கபூர்வமான உரையாடல்களில் இருக்க முடிவதும் ஒரு சாதனையே. பெரும் படைப்புகளின் ஆசிரியர், இலக்கிய விமர்சகராக மட்டுமல்லாமல் இலக்கிய செயல்பாட்டாளராக, பண்பாட்டு ஆய்வாளராக, பயணியாக, சிந்தனையாளராக அவரின் இடம் இது வரை வகிக்கப்படாதது. இவ்வளவு ஆழமும் விரிவும் செறிவும் தீவிரமும் கொண்டு எழுதிய எழுத்தாளர் என வரலாற்றில் சிலரையே கூறமுடியும். 


எனக்குத் தெரிந்தவரை இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான். ஜெயமோகன் என்ற ஆளுமையை எண்ணும்போது என் மனதில் தோன்றும் பல படிமங்களுள் ஒன்றும் இது. 


மேடைக்கு கீழே பெயர் தெரியாத பார்வையாளர்களுள் ஒருவராக அமர்ந்திருக்கும் ஜெயமோகன். எத்தனை கவனச்சிதறல்கள் இருந்தாலும் அவற்றுக்கு அப்பால் எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்து உள்வாங்கிக்கொண்டு, காணும் கேட்கும் உணரும் எதையும் குறிப்புகளாக ஆக்கி இறுத்தி அவை ஒவ்வொன்றையும் தொகுத்தும் பகுத்தும் விரித்தும் ஆராய்ந்தபடி கால்குலேட்டர்களுக்கு இடையில் ஒரு க்வாண்டம் கம்ப்யூட்டர்போல, அமைதியாக, அமர்ந்திருக்கும் ஜெயமோகன். 


எது எப்படி இருந்தாலும் எத்தனை அழைக்கழிப்புகள் பயணங்கள் சிரமங்கள் தொந்தரவுகள் இருந்தாலும் அன்றாடமும் எழுத வேண்டியவைகளை எவ்வித சாக்கு போக்குகளும் இல்லாமல் எழுதி முடித்துவிட்டு மட்டுமே உறங்கச்செல்லும் ஜெயமோகன். ஒரு தனி மனிதனாக அவர் கைக்கொள்ளும் கவனமும் காரிய ஒழுங்கும் வினையூக்கமும் செலாற்றலும் உலகின் எந்த நவீன மனிதனும் முன்னோடியாக கொள்ளத்தக்கது. அவர் நெடுங்காலம் இருந்து மேலும் மகோன்னதமான படைப்புகளை பல நூறையும் எழுதவேண்டும். 


- வேணு தயாநிதி

ஜுலை 23, 2022

மினியாப்பொலிஸ்.

புறப்பாடு எனும் ஆத்ம கதை - சுனில் கிருஷ்ணன்

Photo Courtesy: மேலூர் பிரபாத் சர்புதீன்

1

 

‘சத்திய சோதனை’யில் ராஜ்கோட்டில் தான் பயின்ற கல்வி நிலையத்தின் அருகே நின்று இந்து மதத்தை வசைபாடி, கிறித்தவத்தைப் பரப்பும் துண்டு பிரசுரங்களை அளித்த பாதிரியாரைப்பற்றி எழுதியிருப்பார் காந்தி. ‘சத்திய சோதனை’ தொடராக வெளிவந்தது. ஆகவே வாசகர்கள் உடனடியாக எதிர்வினையாற்றினார்கள். வாசக எதிர்வினைகளையும் அதற்கான தனது பதில்களையும் இதழ்களில் அவர் பதிப்பித்தார். மேற்சொன்ன நிகழ்வைச் சுட்டி காந்திக்கு ஒரு கடிதம் வருகிறது. காந்தி சுட்டிக்காட்டும் காலகட்டத்தில் ராஜ்கோட்டில் பணிபுரிந்த பாதிரியாராகிய அவர், தான் ஒருபோதும் காந்தி குறிப்பிட்ட முறையில் தெருமுனையில் நின்று இந்து மதத்தை அவதூறு செய்து மதப் பிரச்சாரம் செய்ததில்லை என எழுதுகிறார். ஆகவே அக்கருத்தைத் திரும்பப்பெற வேண்டும் எனக் கோரினார். அதற்கு, அதில் குறிப்பிடப்படும் மனிதர் நீங்களா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என் மனப்பதிவிற்கு உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். ஆகவே மாற்றிக்கொள்ளமாட்டேன் என பதில் எழுதுகிறார் காந்தி.

 

காந்தி ‘சத்திய சோதனை’யை வரலாறாகப் பிரகடனப்படுத்தவில்லை. அவர் குஜராத்தியில் அதற்களித்த பெயர் ‘ஆத்ம கதா’ - அதாவது ஆன்மாவின் கதை. ஜெயமோகனின் ‘புறப்பாடு’ம் ஒரு ஆத்ம கதைதான். ‘சத்திய சோதனை’யை எப்படி ஒரு நாவலாக வாசிக்க முடியுமோ அப்படி ‘புறப்பா’டையும் ஒரு நாவலாக வாசிக்க இடமுண்டு. ஒருவகையில் 'ஆத்ம கதை' புறவயமான தகவல்கள் நிரம்பிய பொதுவரலாறுக்கான எதிர்வினை, அதன் பிரதிபலிப்பு. தகவல்களாலும் தர்க்கங்களாலும் கட்டமைக்கப்படும் வரலாறு சந்திர சூரியரைப் போல் தலைக்கு மேலே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. கலங்கிய குட்டையிலும் தெள்ளிய நீரோடையிலும் தெரியும் நிலவு ஒன்றுதான். ஆனால் வெவ்வேறாக உருக்கொள்கிறது. ஆகவேதான் பொதுவாக வாழ்க்கை வரலாறுகள், அதிலும் குறிப்பாக தன்வரலாறுகள், படைப்பூக்கமும் கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் கொண்ட ஆளுமைகள் எழுதும்போது மகத்தான நாவல் அளிக்கும் உள எழுச்சிக்கு இணையான உணர்வை அளிக்கின்றது.

 

'ஆத்ம கதை' என்பது முழுமையான வரலாறல்ல, முழுக்க புனைவும் அல்ல, உண்மையும் அல்ல. இவை யாவும் கலந்த ஒரு வடிவம். முதன்மையாக ஆன்மாவின் அறிதல்களையும், அதற்கான போராட்டங்களையும் பின்தொடர்ந்து செல்வது. ஆகவேதான் காந்திக்கு தன் மனப்பதிவுக்கு உண்மையாக இருந்தால் போதுமெனப் படுகிறது. எழுத்தாளர் அ.  முத்துலிங்கம் பயன்படுத்திய 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' எனும் பயன்பாட்டைப் பொருத்திக்கொள்ளலாம். புனைவுக்கும் புனைவற்ற எழுத்திற்கும் இடையேயான கோட்டை அழித்து விளையாடுகிறது.

 

ஜெயமோகன் அடிப்படையில் ஒரு புனைவெழுத்தாளர். வரலாறை, வாழ்வை என அனைத்தையுமே புனைவாகக் காணக்கூடிய பின்நவீனத்துவப் பார்வை அவருக்கு ஏற்புடையதுதான். அவரால் எதையும் புனைவாக்க முடியும். உரையாடிக்கொண்டிருக்கும்போதே அவரால் ஒரு புனைவை உருவாக்க முடியும் என்பது அவருடன் நேரில் பழகிய நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். (ஏறத்தாழ அத்தனைபேர் குறித்தும் நட்பு வட்டத்தில் சில அழகிய புனைவுகள் உலாவ அவரே முதன்மை காரணம்.) ஒரு நிகழ்வை புனைவாக்க அவருக்குத் தேவையானதெல்லாம் அந்த நிகழ்விலிருந்து ஒரு ஆதாரக் கேள்வியைப் பிரித்தெடுக்கவேண்டியது மட்டும்தான். அக்கேள்வி கவித்துவமான உருவகத்துடன் இணைந்து வளரக்கூடியதாக இருக்கும். உணர்ச்சிகரமான புள்ளியிலோ அல்லது கவித்துவமான அறிதலிலோ நிறைவுறும். ஏறத்தாழ இதே வடிவத்தைதான் புறப்பாடின் அத்தியாயங்களில் நாம் காண்கிறோம். ஆகவே 'புறப்பாடில்'  எழுதப்பட்ட அத்தனையும் உண்மையா, அல்லது எத்தனை சதவிகிதம் உண்மை எத்தனை சதவிகிதம் புனைவு போன்ற கேள்விகளுக்கு பொருள் ஏதுமில்லை. ஜெயமோகனின் வாழ்க்கைக் கதையைப் பேசும் நூல்கள் என ‘புறப்பாடு’, ‘வாழ்விலே ஒரு முறை’, ‘முகங்களின் தேசம்’ ஆகியவற்றைச் சொல்லலாம். இவை தவிர அவரது பயண அனுபவ நூல்களும் இவ்வகையைச் சேர்ந்தவைதான். 'நினைவின் நதியில்' போன்ற ஆளுமைச் சித்திரத்தைக்கூட இவ்வகையிலேயே பொருத்த முடியும். இவற்றுள் ‘புறப்பாடு’ ஓர் உச்சம்.

 

எழுத்தாளர்களின் ஆத்ம கதை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? எழுத்தாளரைப் பீடித்து அவரை ஆட்கொண்டு, அவரது எழுத்துகள் வழியாக வெளிப்படும் விசையின் தடத்தை அணுகி அறிவதற்கான வழியது. ஒரு புனைவெழுத்தாளனாக நான் வாசிக்கும் எழுத்தாளரின் படைப்பின் ஊற்றுக்கண்ணைக் கண்டடைவது பெரும் பரவசத்தை அளிப்பது. எத்தகைய கேள்விகளை அவரது படைப்புகள் விவாதிக்கின்றனவோ அவற்றை வாழ்வில் எப்போது முதன்முறையாக நேர்கொண்டார்? எழுத்தை அறிந்தால் போதாதா, எழுத்தாளரை வேறு அறியவேண்டுமா என்றொரு வாதம் வைக்கப்படுவதுண்டு. அதற்கான நியாயங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அதை பொதுமைப்படுத்தி எழுத்தாளரின் ஆளுமையையே நிராகரிக்கவும் வேண்டியதில்லை. சாகசங்கள் நிறைந்த வாழ்வைக் கொண்ட எழுத்தாளர்களின் தனிவாழ்க்கையை அவர்களது புனைவுலகின் பகுதியாகவே காணவேண்டும். சோமர்செட் மோகமின் வாழ்வு அவரது நாவல்களைவிட சுவாரசியமானது. ஹெமிங்க்வேயும் அப்படியே. ஆர்தர் ரைம்போ கவிஞராக வாழ்வதற்கு என ஒரு திட்டம் வகுத்தார். கவிதை எழுதுவதைவிட கவிஞராக வாழ்வது மிக முக்கியம் எனக் கருதினார். எந்த அனுபவத்தையும் மறுக்காமல் அனுபவித்துக் கடப்பதே அதன் சாரமான வழிமுறை. பல தலைமுறை கவிஞர்களைக் காவு வாங்கிய திட்டமும்கூட. பாரதியையோ, புதுமைப்பித்தனையோ, ஜெயகாந்தனையோ அவர்களது படைப்பிலிருந்து தனித்து நோக்கவேண்டியதில்லை. பிரமிளையும் விக்கிரமாதித்தனையும் சாருவையும் இவ்வண்ணமே காணமுடியும். ஜெயமோகனும் அடிப்படையில் ஒரு சாகசக்காரர்தான். ஜெயமோகனின் ஆளுமை மீது நமக்கிருக்கும் ஈர்ப்பிற்கு அவரது சாகச இயல்பு மிக  முக்கியமான காரணம். சாகசத்தை இயக்குவது துணிவு. சமயங்களில் சாகசம் விபரீதமான எல்லைகளை தொடவும் கூடும். சாமானியர்கள் அதற்கென காத்திருந்து  சாகசக்காரரை அவரது கைக்கூடாத ஒன்றிரண்டு முயற்சியைக் கொண்டு மதிப்பிட்டு நிராகரிக்க தலைப்பப்படுவார்கள். அது எளிதும் கூட. ஆனால் சாகசக்காரரை நாம் ஒட்டுமொத்தமாக அவர் நிகழ்த்திய பாய்ச்சலைக் கொண்டே வகுத்துக்கொள்ள வேண்டும். மௌனியையோ, ந. பிச்சமூர்த்தியையோ, தி.ஜா.வையோ, அசோகமித்திரனையோ, திலீப்குமாரையோ நாம் சாகசக்காரர்களாக அணுகுவதில்லை. படைப்புகள் வழியாகவே அணுகுகிறோம். இரண்டு போக்குகளும் தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்துகொண்டால் போதும்.

 

ஜெயமோகனின் படைப்புலகில் அவரது தொடக்க நூல்களான ‘ரப்பர்’, ‘திசைகளின் நடுவே’ ஆகியவை தொடக்கப் புள்ளி என்றால், ‘விஷ்ணுபுரம்’, ‘அறம்’, ‘வெண்முரசு’, கொரோனா கால கதைகள் ஆகியவை அதன் அடுத்தடுத்த மைல்கற்கள். 'அறம்' தொகுப்பிற்கு முன் அதற்குப் பின் என அவரது படைப்புலகைப் பகுப்பவர்களும் உண்டு. முந்தைய கதைகள் பிடித்த அளவிற்கு ‘அறம்’ தொடங்கி பிந்தைய படைப்புகள் பிடிப்பதில்லை எனச் சொல்வார்கள். நேரெதிராக முந்தைய படைப்புகள் மிகுந்த இருண்மை கொண்டதாக உணரும் வாசகப் பரப்பும் உண்டு. ‘வெண்முர’சைக்கொண்டு அவரது படைப்புலகத்தை வகுப்பவர்களும் உண்டு. ‘அறம்’ ஒரு தொடக்கமெனில் ‘வெண்முரசு’ வாசகப் பரப்பை பன்மடங்கு பெருக்கியது. கண்முன் ஒரு புதிய அலையென வாசகர்களும் படைப்பாளிகளும் எழுந்துவருவதைக் காணமுடிகிறது. ஆனால் இவற்றுக்கு அப்பால், என்னளவில் அவரது படைப்புலகையே ‘புறப்பாடு’க்கு முன், பின் என வகுக்கும் அளவிற்கு அதை படைப்பு நோக்கில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதுகிறேன். 


புறப்பாடு 2013 ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டொபர் மாதங்களில் எழுதப்பட்டது. அதேயாண்டு இறுதியில் வெண்முரசு அறிவிக்கப்படுகிறது. ஜனவரி 1, 2014 லிருந்து வெண்முரசு தொடங்குகிறது. புறப்பாடு எனும் ஸ்பிரிங் போர்டில் குதித்துதான் ஜெயமோகன் ‘வெண்முர’சிற்குள் மூழ்கியுள்ளார் என ஊகிக்க இடமுண்டு. தனக்குள் ஆழ்ந்ததன் விளைவே தனது இலக்கைக் கண்டுகொள்ள முடிந்தது. உள்ளார்ந்து ஒரு கடைதலை நிகழ்த்துவதன் மூலம் வாழ்க்கை நோக்கைக் கண்டடைந்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.

 


2

 

‘புறப்பாடு’ இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் பனிரெண்டு அத்தியாயங்களும், இரண்டாவது பகுதியில் பதினெட்டு அத்தியாயங்களும் என மொத்தம் முப்பது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. தந்தையிடம் முறுக்கிக்கொண்டு வெளியேறி, நண்பர்களுடன் அறையில் தங்கி கல்லூரிக்குச் செல்வது முதல் பகுதி. ராதாகிருஷ்ணனின் மரணத்திற்குப் பின் ஏழு மாதங்கள் நாடு முழுவதும் அலைந்து திரிவது இரண்டாம் பகுதி.

 

'நான் செத்துப்போனால் ஒவ்வொருவரும் எப்படி எப்படி அழுவார்கள் என்று' கற்பனை செய்யும் பதின்ம வயது ஜெயமோகனாக வீட்டை விட்டு வெளியேறும் 'சூழிருள்' பகுதியில் அறிமுகமாகிறார். திரும்புதல் உறுதியற்ற பயணங்களில் நாம் முதலில் இழப்பது நம் பாதுகாப்புணர்வை. பாதுகாப்புணர்வை இழந்ததும் நம் மனம் ஊசி நுனி என கூர்கொண்டுவிடும். ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனிக்கும். புலன்களும் மனமும் திறந்துகொண்ட அகவிழிப்புநிலை வாய்க்கும். இலக்கியம் என்பதேகூட அகவிழிப்பு நிலையின் வெளிப்பாடுதான். பதின்ம வயது ஜெயமோகனின் அகம் விழித்துக்கொண்ட தருணங்களையும் பயணங்களையும் சொல்வதே இந்நூல். ‘புறப்பாடு’ முதன்மையாக ஒரு வயதடைதல் நூலும்கூட. வயதடைதல் நூல்கள் பொதுவாக பாலியல் அனுபவங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ‘புறப்பாடு’ அளிக்கவில்லை. வயதடைதல் என்பது தன்னை அறிதல்தான். பசியை, உடலை, மனதை, சாதியை, என ஒவ்வொன்றாக அறிகிறார். ‘புறப்பாடு’ கண்டடைதல்களின் கதை எனச் சொல்லலாம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிதாகக் கண்டடைந்து முன் நகர்ந்தபடியே உள்ளார்.

 

‘அனலெரி’ பகுதியில் ‘உடலே எச்சிலாகச் சுரப்பதுபோல’ பசியை அறிகிறார். வயிற்றில் அனல் எரிந்துகொண்டிருக்கும்போதுகூட “அப்பிடி போயி நிண்ணா, மத்தவனுக இஞ்ச சோறு தின்னவேண்டாமா?” எனக் கோபப்படும் அருமையின் சொற்களின் ஊடாக பசித்திருப்பவர்களின் அறத்தை அறிகிறார். அருமை நாஞ்சில் நாடனின் கதைகளில் புழங்குபவன். 'மணி வெளிச்சத்தில்' சூழ்ந்த இருளிலிருந்து மீண்டுவிட முடியும் எனும் நம்பிக்கையை அறிகிறார். எவரேனும் மாட்டியிருக்கும் சட்டைப்பையில் கைச்செலவுக்காகக் காசை வைத்தபடி இருக்கிறார்கள். கட்டிட வேலைக்குச் சென்று அயர்ந்து தூங்குபவரைக் கண்டு அவருக்கான கல்விச்செலவை அருமை ஏற்கிறான். “நீ புக்கு படிக்கணுமானா இனி இந்தமாதிரி சோலிக்கு வரப்பிடாது…” என அருமை சொல்வது உணர்ச்சிகரமான தருணம்.

 

‘மணி வெளிச்சத்தில்’ கொத்தனார் வேலை பார்த்து பனிரெண்டு ரூபாய் ஈட்டிவரும்போது பரோட்டா உண்ண ஜெயமோகன் அழைக்கும்போது அருமை ஏற்றுக்கொள்வதில்லை. அவன் உடலுழைப்பைப் பெரிதும் மதிப்பவன். அதிலிருந்து ஈட்டிய பணத்தை வீணாக்க விடவில்லை. அதுவே ‘ஈட்டிநுனிக்குருதியில் குமுதத்தில் கதை எழுதி வரும் மணியார்டர் பணத்தில் அனைவருமாக ஒன்றாக சேர்ந்து உண்டு செலவழிக்கும் யோசனையை அருமை சொல்கிறான் என்பது ஒரு சுவாரசியமான முரண். வாழ்விற்கும் புனைவிற்குமான உறவு எத்தகையது? வாழ்வெனும் நிதர்சனத்தின் கூர்முனையை அறிகிறார். அது அவரை குத்தி குருதியை ருசிக்கக் கொடுப்பதே இப்பகுதி.

 

கதை எழுத்தாளருக்கு எப்படிப் பொருள்படுகிறது? கதையின் வாழ்க்கைச் சூழலை ரத்தமும் சதையுமாக அனுபவிப்பவர்களால் எப்படிப் பொருள்கொள்ளப்படுகிறது? பிந்தியவனுக்கு கதை நீதியை நிலைநாட்டும் கருவி. முந்தையவனுக்கு மானுட நிலையை அடையாளம் காட்டும் கருவி. இரண்டிலும் கரிசனம் முதன்மை விசை என்றாலும், இருவரின் இலக்குகளும் வேறு. அருமை கதையில் கைவிடப்பட்ட 'லிசிக்காக' முத்தாலம்மனின் நீதியைக் கோருகிறான். அறச்சீற்றம் கொள்கிறான். லிசி அவன் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்விற்கு நெருக்கமானவள். அவனறிந்த தங்கையோ, அவன் கதையாகக் கேட்ட அன்னையோ, அக்காவோ. ஜெயமோகனுக்கு அவள் ஒரு கதைமாந்தர். அந்தப்பகுதி இப்படி நிறைவடைகிறது.

 

யாரும் ஒன்றும் சொல்லவில்லை. முந்திரி நிழலில் செம்மண் பரப்பில் அமர்ந்திருந்தோம். சட்டென்று லிஸியை நினைத்தேன். எனக்கு மனம் பொங்கிவிட்டது, கண்ணீர் விட ஆரம்பித்தேன்.

 

“லே என்னல? லே”

 

“தெரியாம எளுதினதாக்கும்” என்று தொண்டை இடறச் சொன்னேன்.

 

“செரிலே மக்கா… விடு…லே அருமை, விடுலே. அவன் ஏமான்வீட்டுப் பயல்லா… அவனுக்கு பாவங்களுக்க துக்கம் தெரியாதுல்லா?

 

'கருந்தீண்டல்' பகுதியில் தான் ஒரு சிறுவன் அல்ல என்பதை ஜானின் தங்கை கிரேஸியைக் கண்டதும் உணர்கிறார். ஆனால் கருந்தீண்டல் என்பது கிரேசியின் தீண்டல் அல்ல. மரணத்தின் தீண்டல், அல்லது அதையும்விட நாமறியாத உலக இயக்கத்தின் முதல் தொடுகை. ஜான் மரணத்தருவாயிலிருந்து மீண்டுவரும்போது ஜெயமோகனின் கனவில் அவரும் கிரேஸியும் இருந்ததை தான் கண்டதாகச் சொல்கிறான். இருவர் கண்ட ஒரு கனவுத் தருணம். தர்க்கத்தை மீறிய ஒரு அறிதலை, மாயக் கணத்தை அறிகிறார். ‘புறப்பா’டில் இத்தகைய சில மாயத் தருணங்கள் உண்டு. 'காற்றில் நடப்பவர்களில்' சினிமா திரைக்குள் இருப்பதான அனுபவம், 'நுதல் விழி' அருளப்பசாமியின் பாத்திரம் போன்றவற்றைச் சொல்லலாம். அருளப்பசாமிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையேயான உறவு அற்புதமான பகுதி. ஆனால் ‘கருந்தீண்ட’லில் இந்த மறைஞான அனுபவத்தின்மீது எந்த விவாதமும் நடைபெறாமல் அது மர்மமாகவே நீடிக்கிறது. பிந்தைய இரு பகுதிகளிலும் அவ்வனுபவத்தை பகுத்தறிவுக்குள் கொணர்ந்து விவாதிக்க முயல்கிறார். காரணங்களை தர்க்கரீதியாகக் கண்டறிய முற்படுகிறார். எனினும்கூட தர்க்கத்திற்கு வெளியேயே அவை நிற்கின்றன.

 

'தூரத்துப்பாலையில்', ‘இடைவிடாது நாட்கணக்காக என் கண்ணுக்குள் ஓடும் சினிமாதான் நாவல்’ என்பதைக் கண்டடைகிறார். சினிமா கொட்டகையில் உழைக்கும் சந்திரனுக்கு அங்கே என்ன படம் ஓடுகிறது என எந்த ஆர்வமும் இல்லை. சுமாரான ஏதோ ஒரு படம் ஓட்டும்போது அவனுடைய முதலாளி சகாக்களை அழைத்துக்கொண்டு வா எனச் சொல்கிறார். ஒரு ஆள் குறைய சினிமாவுக்கு ஒரு தோழரைக் கூட்டிச் செல்கிறார்கள். “தோளர்லாம் ஃபாதர் மாதிரியாக்கும். சினிமாவுக்கு வரப்பிடாது” என நாகமணி சொல்வது சுவாரசியமான இணைவைப்பு. சினிமா பார்க்க உற்சாகமாகக் கிளம்பி வந்த அனைவரும் உறங்கிவிட, ஆஜானுபாகுவான தோழர் மட்டும் முழுமையாக ‘பக்த குசேலன்’ திரைப்படத்தைக் கண்டு துக்கம் பெருக்கெடுத்து அழுகிறார். எல்லோருக்கும் கனவிருக்கிறது, கனவு நிலமும் இருக்கிறது, ஆனால் அதுவும் பாலையாக இருந்தால்?

 

‘கருந்தீண்ட’லில் ஜானை மருத்துவமனையில் கவனிக்க வைக்க தனது சாதி எனும் அதிகாரத்தை உணர்த்தியவர் முதன்முறையாக ‘கையீர’த்தில் சாதியின் அழுத்தத்தை, சுமையை அறிகிறார். நண்பனின் மலைகிராம வீட்டிற்கு அவனுடைய அழைப்பின் பேரில் கிறிஸ்துமஸுக்குச் செல்கிறார். அங்கே அவர்களுடைய அந்தரங்கமான வெளிக்குள் நுழைந்துவிட்ட அசவுகரியத்தை உணர்கிறார். “அன்று முதல்முறையாக என் பிறப்பின் பாரத்தை உணர்ந்தேன். ஒருவன் ஒரு சாதியில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தாலேயே பாரமுள்ளவன் ஆகிவிடுகிறான். பாவத்தின் பாரம்தான். முன்னோர்கள் செய்த பாவங்கள். சலுகையுள்ளவனாக, பரிசீலிக்கப்படுபவனாக, பாரபட்சத்தின் பலனை அனுபவிப்பவனாக இருப்பதன் பாவம். அவற்றை அவன் நிராகரிக்க முடியாது. இல்லை என பாவனை செய்ய முடியாது. வாழ்நாளெல்லாம் அதற்காக மன்னிப்பு கோரியபடியேதான் இருக்கவேண்டும். அதுதான் நியாயம்.” அவர் நண்பனின் குடும்பத்திற்காக வாங்கிக்கொண்டு வந்த பலகாரம் அவர்மீது வெறுப்பை உமிழப் போதுமானதாக உள்ளது. அளிக்கும்போது ஏமானாகத் தெரிபவர் நண்பனின் அன்னையிடமிருந்து பெற்றுக்கொண்டதும் மகனாக ஆகிவிடுகிறார். 'இருந்தாழ்' பகுதியில் அவரது அண்ணன், சாதி அவர்களை எப்படி உயிராபத்திலிருந்து காக்கும் என வகுப்பெடுக்கிறார். “புத்தியுள்ளவன்தான் கேடியாக முடியும் பாத்துக்க. புத்தியுள்ளவனுக்கு எந்தச் சாதிமேல கைய வைக்கலாம், எங்க ஒதுங்கிரணும்ணு நல்லா தெரிஞ்சிருக்கும்.” கேசவேட்டனுக்கு தரவாட்டு நாயர் எனும் பிரியம் உண்டு.

 

‘விழியொளி’யில் மொண்டி எனும் பசுவின் சித்தரிப்பின் வழியாக மிருகங்களின் வெறுப்பு, அவற்றின் கண்களின் ஆழம் காட்டப்படுகிறது. விஷ்ணுபுரத்து பிங்கலனின் கையில் அகப்படும் மிருகநயனி தொடங்கி பல கதைகளில் மிருகங்களின் வெறிப்பை எழுதுகிறார். அக்கறையின் பெயரால் செய்யும் செயலின் வன்முறையை உணர்கிறார்.

 

‘கோவில்கொண்டிருப்ப’தில் பாதிரியாராக ஆகியிருக்கும் அருளின் சித்திரம் வருகிறது. ‘கரமாசோவ் சகோதரர்க’ளில் வரும் அல்யோஷாவைப் போன்றவன். தூய ஆன்ம வேட்கைக்காகத் துறவை நோக்கிச் செல்பவன். இறைவனிடம் தனக்காகக் கேட்பது பிழை என எண்ணுகிறான் அருள். ஜான் தனக்காகவும் குடும்பத்திற்காகவும் வேண்டுவான். கர்த்தரின் பார்வையில் இரண்டும் ஒன்றுதான் என ஜெயமோகன் அறிவதே இப்பகுதியின் அறிதல். ஜெயமோகனுக்குத் துறவின்மீது மாளாத ஈடுபாடு உள்ளது. துறவை ஒருவகையில் தனது கனவாகக் கொண்டவர். ஆனால் முழு துறவியாகத் தன்னை ஒப்புக்கொடுக்கவில்லை. அது அவரது பாதையல்ல என நித்யா கூறியதாகச் சொல்வார். பயணங்கள் வழியாக அவர் தனது துறவின் வேட்கையைத்தான் சமன்படுத்திக்கொள்கிறார் என எனக்குத் தோன்றுவதுண்டு. ராதே ஷ்யாம் விரஜர்கள் ஆறுமாதம் கிருஷ்ணனின் காதலர்களாகவும் ஆறுமாதம் இல்லறத்தவர்களாகவும் வாழ்வதைப்போலவே ஜெயமோகனும் தனது வாழ்வை வடிவமைத்துள்ளார் என எண்ணிக்கொள்வேன். பயணங்கள் என்பது அளவில் சிறிய துறவுதான். அதுவும் திரும்புதலற்ற திளைப்பு கொண்ட பயணம் நிச்சயம் துறவுதான்.

 

'கரும்பனையும் செங்காற்றும்' அற்புதமான நிலக்காட்சிகள் கொண்டது. ஆங்கிலம் தாழ்வுணர்வுக்கான காரணமாக இருக்கும் அதேவேளையில் அதிகாரத்திற்கு எதிரான கருவியாகவும் இருக்கமுடியும் என்பதைக் கண்டுகொள்கிறார். மாரி மிரட்டும் அதிகாரிகளை ஆங்கிலத்தின் உதவியுடன் எதிர்கொள்கிறான். 'ஜோதி' அத்தியாயத்தில் அருளப்பசாமியை அவமதிக்கும் கோவில் பூசகரிடம் வேகவேகமாக ஆங்கிலத்தில் பேசிவிட்டு வருகிறார் ஜெயமோகன். ஆங்கிலம் என்பது தனது இடத்தைப் பறைசாற்றும் கருவியாகிறது.

 

'துறக்கம்' அத்தியாயத்தில் உடனிருக்கும் புலையர் சாதி நண்பன் மேல்சாதி ஒப்பந்தக்காரரை அடித்துவிடுகிறான். அவனுக்கு உதவ ஜெயமோகன் முயல்கிறார். இருவரும் உயிரச்சத்துடன் தப்பிப்பதுதான் இந்த அத்தியாயம். சரஸ்வதி திரையரங்கம் தொடங்கி நகரத்துப் பகுதிகளின் வழியாகத் தப்பியோட முயல்கிறார்கள். தப்பியோடும்போது நகரத்தைக் காணும் காட்சியை அபாரமாக விவரித்துள்ளார். ‘மேட்டில் நின்று பார்த்தபோது ஒரு அபாரமான காட்சியைக் கண்டேன். மொத்த நகரையும் பின்பக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நூற்றுக்கணக்காக வீடுகளின் பின்பகுதிகள். கதவோ சன்னலோ அற்ற சிமிண்ட் பரப்புகள். செங்கல்பரப்புகள். ஓலைத்தட்டிப்பரப்புகள். எல்லா வீடுகளும் அப்பகுதியை அருவருத்து திரும்பிக்கொண்டவை போலிருந்தன.’ நியாயமாக சாக்கடையும் மலமும் சேரும் உள்ள நகரத்தின் இப்பகுதியை நரகம் என எளிதில் சொல்லியிருக்கலாம். ஆனால் அதை அவர் 'துறக்கம்', அதாவது சொர்க்கம் என அழைக்கிறார். துறக்கத்தில் உயிர் அச்சத்தை அறிகிறார். தனது துணிவின் எல்லையை உணர்கிறார். நண்பனைக் கைவிட்டு தான் மட்டும் தப்பவேண்டும் எனும் எண்ணம் அழுத்தியபோது அதற்குப் பணியாமல் இருக்கிறார். 'இருந்தாழ்' நான்குமாத வெளிவாழ்விற்குப் பின் ஊருக்குத் திரும்புவதைச் சொல்கிறது.

 

 


 

3

 

‘புறப்பா’டின் முதல் பகுதியில் வீட்டை விட்டு வெளியேறி வந்தாலும் அவர் எப்போதும் வீட்டுக்குத் திரும்பக்கூடிய தொலைவிலேயே வாழ்ந்தார். ஜெயமோகனும் விடுதியில்தான் வசிக்கிறார் என குடும்பத்தினருக்கும் தெரியும். எப்படியும் திரும்பிவிடுவோம் / திரும்பிவிடுவான் எனும் நம்பிக்கை இருவருக்குமே இருந்திருக்கும். இரண்டாம் பகுதி முற்றிலும் தீவிரமானது. திரும்புதலற்ற, இலக்கற்ற பயணம். தனது வசதி வட்டத்திற்கு வெளியே வாழ்வை எதிர்கொள்ளுதல் இன்னும் சவாலானது. இரண்டாம் பகுதியைவிட முதல் பகுதி ஒப்புநோக்க உணர்ச்சிபூர்வமானது. இரண்டாம் பகுதி நுண்மையை நோக்கிச் செல்வது, பூடகம் நிறைந்தது. ‘அறம்’ கதைகளிலும் இத்தகைய தன்மையை நம்மால் உணரமுடியும். ‘அறம்’ போன்ற உணர்ச்சிகரமான கதைகளில் தொடங்கி, ‘மயில் கழுத்து’, ‘தாயார் பாதம்’ போன்ற பூடகமும் நுண்மையும் நிறைந்த கதைக்குச் சென்று, ‘உலகம் யாவையும்’ போன்ற ஆன்மிக உச்சத்தில் நிறைவடைவது போலவே இதிலும் தொடர்கிறது. அருளப்பசாமியின் சித்தரிப்பும் வடலூர் ஜோதி அத்தியாயமும் ‘புறப்பா’டின் ஆன்மிக உச்சம் எனச் சொல்லலாம்.

 

'லிங்கம்' மற்றும் 'எள்' ஆகிய முதல் இரண்டு பகுதிகள் ஜெயமோகனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணனின் தற்கொலையை விவரிக்கிறது. வாசகருக்குப் பதட்டம் ஏற்படுத்தும் பகுதி. ராதாகிருஷ்ணன் ஹேம்லட் கதையைக் கேட்டு ஏன் தொந்தரவிற்கு உள்ளானான் என்பதில் அவனது மரணத்திற்கான காரணம் சூசகமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. மொட்டை மரத்தில் ஏறுவது, ராணுவத்திற்குள் செல்ல விழைவது என ராதாகிருஷ்ணன் தன்னை வளர்ந்த ஆணாக நிறுவ முயன்றபடியே இருக்கிறான். எவரிடம்? தனது அன்னையிடம். ஏதோ ஒரு புள்ளியில் அதன் அபத்தம் உறைக்கிறது. பூடகமாகவே கடக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணனுக்கும் ஜெயமோகனுக்குமான நட்பு எனக்கு காந்திக்கும் அவரது நண்பர் ஷேக் மேதாப்பிற்குமான உறவை ஒத்தது. மேதாப்தான் காந்திக்குப் புலால் உணவை அறிமுகம் செய்கிறார், பெண் சகவாசத்தை அறிமுகம் செய்துவைக்க முயல்கிறார், தென்னாப்பிரிக்காவில் கூட காந்தியுடன் வசிக்கிறார். விலைமாதரை அழைத்துவருவதால் கடும் கோபம் கொண்டு அவரை வெளியேறச் சொல்கிறார். மேதாபின் நட்பை விடவும் முடியாமல், அவருடைய செயல்களால் எரிச்சல் அடைந்து விலகவும் முடியாமல் சிரமப்பட்டார். ராதாகிருஷ்ணன் ஒரு சாகசக்காரன். பதின்ம வயதினர் கற்பனை செய்யும் அந்த வயதிற்கே உரிய சாகசங்களைச் செய்பவன். சாகசக்காரர்களை நோக்கி அந்த வயதில் ஈர்க்கப்பட்டாலும் அவனை விட்டு விலகவும் முயல்கிறார். மேதாபும் ஒரு சாகசக்காரர்தான். ராதாகிருஷ்ணனிடமிருந்து அவர் பெற்றது என்ன? ‘வெட்கமின்மை ஒரு மாபெரும் ஆற்றல் என நம்பினேன். அதை என்னால் அடையமுடியவில்லையே என ஏங்கினேன்’ என எழுதுகிறார். போர்த்தப்பட்ட உடலில் விரைத்த குறியுடன் சவமாகக் கிடக்கும் சித்திரத்துடன் அப்பகுதி நிறைவு பெறுகிறது.

 

‘எள்’ ராதாகிருஷ்ணனின் மரணத்தை ஜெயமோகன் செரித்துக்கொள்ள முயலும் அத்தியாயம். ஜெயமோகன் எழுதிய ஒரு கவிதையை நினைவுபடுத்தியது.

 

பலிச்சோறு

 

அனல் கொதிக்க எரிந்து

என் உலை வெந்தாகிவிட்டது

பசும் வாழையிலைமேல்

கத்தரிக்காயும் எள்ளும்

வினோதமாய் மணக்கும் பலிச்சாதம்

தலைசரித்துத் தலைசரித்துக் கரையும்

இதில்யார் நீ அப்பா?

பசியாற வேண்டும்

இது உன் சாதம்

   

கவளம் சுமந்து திரும்பினால்

வெறும் மணற்பரப்பாய் என் நதி

பலிச்சோறு உலர உலரத் தவிக்கிறேன்

எனக்குமட்டும் நீரில்லை

கங்கையில் காவிரியில்

காசியில் கன்யாகுமரியில்

 

அலைகிறேன்

தீர்த்தக்காவடியாய்

இறக்கத்தேம்பும் பாரமாய்

உன் பலிச்சாதம்

 

முழநீர் போதும் முங்கிவிடுவேன்

எங்கே

எந்த ஏட்டுச்சுவடியில்

எந்தக் கோயில் கல்வெட்டில்

இருக்கிறது வழி?

பசியின்றி தாகமின்றி நீயிருக்கலாம்

தவிப்பது நான்

 இது என் பலிச்சாதம்

  

தாஸ்தாவெஸ்கியின் நாயகர்களைப் போல நரம்பதிரும் இளைஞன் ஜெயமோகன் கதைகளில் நாம் எப்போதும் காண்பவன். 'உடம்பு உச்ச அழுத்த நீர் ஓடும் ரப்பர்குழாய்போல எந்நேரமும் அதிர்ந்தது' என எழுதுகிறார். ‘புறப்பா’டில் எருமைகள் வெட்டப்படும்போது, விரஜர்களின் இசையைக் கேட்கும்போது என நான்கைந்து தருணங்களிலாவது அவர் இத்தகைய உச்ச அதிர்வுகளை எதிர்கொள்கிறார். ஜெயமோகன் அடிப்படையில் ஒரு சந்நதம் கொண்டாடி. ‘விஷ்ணுபுரம்’ தொடங்கி
‘வெண்முரசு’ வரை சந்நதம் வராத படைப்புகளே இல்லை. எழுத்தின் விசையேகூட அதிலிருந்துதான் பெருகிறாரோ எனத் தோன்றுவதுண்டு. ராதாகிருஷ்ணனின் மரணத்திலிருந்து மீள்வதற்குக்கூட தாள்களில் எதையோ எழுதி வீசியபடி இருக்கிறார். “சாமி இது மகாகாலமுல்லா
? குறையாத குடுவையிலே இருந்து நிறையாத குடுவைக்கு சத்தமில்லாம போய்ட்டே இருக்கு… லிங்கத்துக்கு அதுல்ல அபிஷேகம்? அவன் காலாதீத மகாகாலனல்லோ…” என ஒரு வரி வருகிறது. காலத்தின் முடிவின்மையை உணர்வதன் வழி மரணத்தைக் கடக்கிறார்.

 

'பாம்பணை', ‘விஷ்ணுபுரம்’, ‘ஏழாம் உலகம்’ என இரண்டு நாவல்களுக்கான கருக்கள் விழுந்த அத்தியாயம். ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இரவு தங்கும்போது இருளுக்குள் ஒரு கிழவரின் குரல் கேட்கிறது. “கர்ப்பகிருஹம்னா என்னடே? அம்மைவயிறாக்கும். அங்கிணயாக்கும் ஆதிகேசவன் கெடக்குறது… அவனுக்க அந்த கெடப்பாக்கும் இந்த யுகம். ஒரு யுகம் தாண்டினாக்க அவன் அப்டியே திரிஞ்சு கெடப்பான்… கேட்டீராவே?... ஆதிகேசவன் கெடக்கப்பட்டது மூணடுக்கா மடங்கின காலத்திலயாக்கும். காலரூபனாக்கும் ஆதிசேஷன்…” விஷ்ணுபுரத்திற்கான விதை விழுந்த தருணம். இதே அத்தியாயத்தின் இறுதியில் படுக்க இடமின்றி தவிக்கும்போது இடமளிக்கும் பிச்சைக்காரர்கள் வரும்பகுதி 'ஏழாம் உலகம்' நாவலுக்கான விதை விழுந்த தருணம். கால்நீட்டிப் படுக்க இடமின்றி மனிதர்கள் தவிக்கும்போது ஆதிகேசவன் அனந்த சயனத்தில் - முடிவற்ற காலத்தில் தலைக்குக் கைவைத்து உறங்குகிறான். காலத்தின் முடிவின்மையைக் கண்டுகொள்ளும் சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி எனும் வகையில் இவ்வத்தியாயமும் அமைகிறது. காலத்தால் உண்ணப்படாமல், காலத்தின்மீது கிடந்து உறங்குவது என்பது பெரும் கனவு. மனிதர்களை இயக்கும் அடிப்படைக் கனவு. காலத்தில் படுத்துறங்க ஜெயமோகனுக்கு எழுத்துதான் கருவி.

 

'இரும்பின் வழி' ரயில் பயண அனுபவம். வெளியேறிய பிறகு நெகிழ்வற்ற, கறாரான, திடமான ஆதரவை மனம் நாடுகிறது. ரயிலை கறாரான ஒரு அப்பா அல்லது தலைமையாசிரியராக உணர்கிறார். இரும்பின் வழி என்பது புரட்சியின் வழி. நெகிழ்வற்றது. ஜெயமோகன் லோனாவாலாவில் தன்னை கூலியாக அல்ல, பெரும் புரட்சியாளனாக, மீட்பராக கற்பனை செய்கிறார். அந்தக் கனவு உடைபடும் இடமிது.

 

“வாழைக்கொலையை மணிப்பொச்சம் கயிறு போட்டு கட்டுறமில்லாலே? அதமாதிரி ரயில் பாதையைப் போட்டு வெள்ளைக்காரன் இந்தியாவை ஒண்ணாக் கட்டினான்” என்றொரு வரி வரும். இது ஓர் உதாரணம். தொடர்ந்து ஜெயமோகனின் புனைவுலகிலும் ‘புறப்பா’டிலும் சாமானியரின் நுண்ணறிவு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆதிகேசவனின் தத்துவத்தைச் சொல்பவர் முகமற்ற ஒரு கிழவர்தான். சாமானியர்கள் எப்போதும் அபாரமான உவமைகளைக் கண்டடைபவர்களாகவும் வருகிறார்கள். நாகமணி, “பாலு பசுவுக்க கண்ணீராக்கும்” என்கிறான். எழுத்தாளரின் கற்பனை என்பதைவிட அவரது அவதானிப்புத் திறனுக்கு இது சான்று என்றே எண்ணுகிறேன். ஜெயமோகனின் மொழியில் உள்ள தனித்தன்மைகளில் ஒன்று அவர் கண்டடையும் அபாரமான உவமைகள். ரயில் கடந்து செல்வதைப்பற்றி எழுதும்போது, ‘ஒரு பெரிய மிருகம் நின்று மலம் கழித்துவிட்டுச் செல்வதுபோல் அதன் பின்பக்கம் மறைந்தது’ என எழுதுகிறார். வீடு திரும்பவேண்டிய சூழலைப்பற்றி எழுதும்போது, ‘தீபாவளிக்குப் பட்டாசுச் சத்தம் கேட்டு ஓடிப்போன நாய் நாலைந்துநாள் பட்டினிக்குப்பின் திரும்பி வருவதுபோல போய் வீட்டுமுன் நிற்கவேண்டும்’ என எழுதுகிறார். செம்மண் தேறிக் காட்டில் பனைகளைக் காணும்போது, ‘பல்லாயிரக்கணக்கில் நின்ற பனைமரங்கள் தலைவாரி சீவப்படாத கிறுக்குப்பெண்கள் போல நின்றன.’ புதுமையான, நினைவில் நிற்கும் இயற்கைச் சித்தரிப்புகள் அவரது மற்றொரு முக்கியமான பலம். ‘மரவள்ளிச்செடிகள் காலையில் சின்னப்பிள்ளைகள் போல புத்துணர்ச்சியுடன் இருப்பவை. மிட்டாய்க்காக நீட்டப்பட்ட பல்லாயிரம் குழந்தைக்கரங்கள் போல இலைகள்.’ ‘புரம்’ பகுதியில் கன்னிமரா நூலகத்தைப்பற்றி, ‘புத்தகங்களுக்கான அரசு மருத்துவமனை அது என்று பின்பு புன்னகையுடன் நினைத்துக்கொண்டேன்.’ என எழுதுகிறார்.

 

‘எண்ணப் பெருகுவது’, ‘நீர்கங்கை’ ஆகிய அத்தியாயங்கள் பம்பாயைக் களமாகக் கொண்டவை. நாஞ்சில் நாடனின் ‘எட்டுதிக்கும் மதயானை’, ‘மிதவை’யை நினைவுறுத்தும் களம். சாப்பாட்டுக்கும் மலம் கழிக்கவுமான அலைச்சலைச் சொல்பவை. ‘நீர்கங்கை’யில் வரும் ராவின் சித்திரம் நாஞ்சிலின் கதையுலகத்தவர். 'எண்ணப் பெருகுவது' மரியா எனும் ஆங்கிலோ இந்தியப்பெண் காதலுக்கான சமிக்ஞையுடன் காத்திருக்கும் சித்திரத்தைச் சொல்கிறது. ஆனால் ஜெயமோகன் அந்த சமிக்ஞையைப் பொருட்படுத்தாமல் தனது அடுத்த பயணத்தைத் தொடர்கிறார். ‘இந்த நகரில் அபூர்வமான, அருமையான எவற்றுக்காவது யாராவது காத்திருக்கிறார்களா என்ன? எனக் கேட்கிறார். மரியா ஜெயமோகனுக்காகக் காத்திருக்கிறார். ஆனால் எத்தனை காலம்? காத்திருப்பு என்பது இன்னும் நம்பிக்கை எஞ்சியிருப்பதற்கான அடையாளம். தொடர்ந்து பயணிப்பதே துறவின் வழி. அதையே ஜெயமோகன் இயல்பாகத் தேர்ந்தெடுத்தார். 'எண்ணப் பெருகுவது' காதல் மட்டுமல்ல. இந்த அத்தியாயத்தின் உச்சமான பகுதியென்பது ரயில் நிலையத்தில் காத்திருக்கும் ஒருவன் பாய்ந்து உயிரைவிட்ட பிறகு அடுத்தவன் ஜெயமோகனைத் திரும்பிக் காணும் தருணம். மரணமடைந்தவனைக் காணாமல் அடுத்து அமர்ந்திருப்பவனை ஏன் கண்டான்? தெரியவில்லை. நீ எப்போது எனும் வினவலா? அடுத்து நீதானே எனும் கேள்வியா?

 

'நீர்கங்கை' ராவ் தூய்மையானவர். நேர்த்திக்கு பேர்போனவர். ஆனால் அவர் வீட்டுச்சுவரில் மலம் ஒழுகுகிறது. கடும் வீச்சமெடுக்கிறது. அத்வைதியான பெரியப்பாவும் பாட்டியும் உரையாடும் பகுதியொன்று இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் வருகிறது. அத்வைதியான பெரியப்பாவிடம் பாட்டி சொல்வார், “டேய் பரப்பிரம்மரூபமா இருக்கக்கூடிய எதுக்கும் அன்னமும் மலமும் ஒண்ணுதான். தீய விட்டா ரெண்டையும் கொளுத்திச் சாம்பலாக்கும். ரெண்டும் விபூதியாயிரும். ரெண்டையும் நுள்ளி நெத்தியிலே போடலாம்… பரப்பிரம்மமா நிண்ணு எரியுற வரைக்கும் அன்னத்தத் தின்னுற ஜீவி மலத்தத் தின்ன முடியாது” அத்வைத நிலைக்கும் உலக வாழ்க்கையின் இன்னல் நிலைக்கும் இடையிலான முரண் ஒரு விவாதப்பொருளாகத் தொடர்ந்து வருகிறது. ராவ் சாக்கடையைக்கூட கங்கையாகக் காண்கிறார்.

 

“மா கங்கா… அவள் எல்லாவற்றையும் சுத்தமாக்கக்கூடியவள்” என்றார் ராவ்.

 

“இந்தச்சாக்கடையா கங்கை?

 

“நண்பா எல்லா நீருமே கங்கைதான் என்பார் என் அப்பா. அவர் பெரிய கவிஞர். துளு மொழியில் செய்யுள்கள் எழுதக்கூடியவர். கன்னட ஆசிரியராக இருந்தார்.” ராவ் சொன்னார், “மண் என்பதுதான் உடல். நீரோட்டம் அதன் ஆன்மா… நீர் மண்ணைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கிறது.”

 

‘நீர்கங்கை’யில் சாக்கடை கங்கையாகிறது என்றால் ‘மதுர’த்தில் கங்கை சாக்கடையாகத் தெரிகிறது. ராவ் ‘நீர்கங்கை’ அத்தியாயத்தில் உடலை மண் என்கிறார். அதன் அழுக்கை ஏந்தித் தூய்மையாக்கும் நீரோட்டம் ஆன்மாவாகிறது. ரயிலில் பயணிக்கும் ராதேஷ்யாம் மார்க்கத்து விரஜரும் அதையே வேறு வகையில் சொல்கிறார்.

 

“தட்டுலே பாயாசம் வெச்சு சாப்பிடு கிருஷ்ணா… தட்டு இல்லேண்ணா பாயசம் ஓடிரும். பாயாசமில்லாத வெறும் தட்டு உதவாது…” கிழவரைச் சுட்டிக்காட்டி, “குரு சொல்வார்… தட்டைத் திங்காதே. தட்டைப் பழிக்கவும் செய்யாதே… கிருஷ்ணமதுரம் வெள்ளித்தட்டிலேதானே இருக்கணும்?

 

தட்டை இகவாழ்வென்றும் இவ்வுடல் என்றும் எப்படியும் எடுத்துக்கொள்ளலாம். பரவாழ்வின் கனவற்ற இகவாழ்வுக்குப் பொருளில்லை. இகவாழ்வை மறுத்தால் பரவாழ்வைச் சுவைக்க முடியாது. பாதிரியராகச் செல்லவிருந்த அருள் தொடங்கி ராவ் வரை உடல் - ஆன்மா, இக - பர ஒருங்கிணைப்பைப் பேசுவதைக் காணமுடிகிறது. ஜெயமோகன் நித்யாவை தனக்கான குருவாகக் கண்டடைததற்கு முக்கியக் காரணம் அவரும் இரண்டையும் மறுக்காத, ஒருங்கிணைப்பின் பாதையை தனது மெய்யியலாகக் கொண்டவர் என்பதுதான். அதுவரையிலான அத்தனை அழுத்தங்களும் மறைந்து, ‘நினைவுகள் இனித்தன. இருத்தலே இனித்தது. மரப்பெஞ்சுகள், குளிர்ந்த இரும்புச்சுவர்கள், இரும்பின் சீரான தாளம் அனைத்தும் இனித்தன.’ என இனிமையில் லயிக்கிறார். ‘வெண்முர’சில் நீலத்துக்கான ஊக்கம் இந்த அத்தியாயத்திலிருந்தே பெற்றிருக்கலாம்‌.

 

‘சண்டாளிகை’யில் வரும் யோனி வழிபாடு சடங்கு ‘இரவு’ நாவலுக்கான விதையாக இருக்கலாம். சண்டி பிரம்மா, விஷ்ணு, சிவனின் காமத்தை அழித்தவள். அவர்களைப் பிறப்பித்தவளும்கூட. பிழைப்புக்காக ஆத்மார்த்தமாக அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறாள். அவளுக்கும் கேசவேட்டனுக்கும் உண்டான உறவு சுவாரசியமானது. ஊருக்கெல்லாம் அவள் தேவியாக இருக்கும்போது பக்தராக இருப்பார் கேசவன். பிற சமயங்களில் இந்த உறவுநிலை மாறிவிடும். தான் அன்னையாகாதவரை அகிலத்தை சிருஷ்டித்த அன்னை என எண்ணிக்கொள்வதில் அவளுக்குச் சிக்கலில்லை. ஆனால் கருவுற்ற செய்தி வந்ததுமே அவள் அக்குழந்தையின் அன்னையாகச் சுருங்கிக்கொள்கிறாள். 'காலரூபம்' ஜெயமோகனின் ஹரித்வார் வாழ்க்கையின் தொடர்ச்சி. எருமையைக் காலனின் வாகனமாக, காலத்தின் வடிவமாகக் காண்கிறார். வீட்டில் வளர்த்த எருமைக்குக்கூட காளி என்றே பெயர். ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் எருமை பலியின் அனுபவம்தான் இந்தப் பகுதி. கேசவன், “காலமும் மரணமும் ஒன்றுதான்” எனச் சொல்கிறார். அவரைக் கொடுமை செய்த பீகாரியின் விவரிப்பும் எருமையை நினைவுபடுத்துகிறது. காலம் தன்னை பலிகொள்வதற்கு முன் தான் அதை பலிகொள்கிறேன் என அறைகூவலாகவே கேசவன் அளிக்கும் எருமை பலியைப் புரிந்துகொண்டேன். காலம் சர்ப்பமாகவும் எருமையாகவும் வருகிறது.

 

'உப்புநீரின் வடிவிலே' ‘புறப்பா’டில் பலருக்கும் பிடித்த பகுதி. முக்கியக் காரணம் இந்த அத்தியாயத்தின் அனுபவத்துடன் அனைவராலும் தொடர்புறுத்திக்கொள்ள முடிவதுதான். நினைவேக்கத்தன்மையின் இனிமையும் உண்டு. பாவண்ணன் படைப்புலகை ஒத்ததாக இருந்தது என எண்ணிக்கொண்டேன். இப்படி ஓயாது இசை கேட்கும் கேட்கீப்பரின் கதையை அவர் எழுதியிருப்பார். இந்த அத்தியாயமும் சரி அருண்மொழிநங்கையின் ‘பனி உருகுவதில்லை’யில் வரும் இசை பற்றிய பகுதிகளும் சரி எனக்கு ஒன்றை உணர்த்தின. முப்பதாண்டுகளுக்கு முன்புவரைகூட இசை எனும் அனுபவம் எத்தனை அரிதாக இருந்தது என்பது ஆச்சரியமாக இருத்தது. அரிதாக இருந்ததாலேயே பெரும் ஆறுதலாகவும் இருந்தது. இசை அத்தனை துயரத்தையும் உப்புநீராகக் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. ‘இந்தவாழ்க்கை, இதன் சேறும் அழுக்கும் குப்பையும் கூளமுமாகக்கூட, மகத்தானதுதான் என்று அவை சொல்கின்றனவா என்ன?

 

இதற்குப் பின்பான அடுத்த ஐந்து அத்தியாயங்களும் சென்னையில் அச்சக வாழ்வைச் சொல்பவை. சைவ நூல்களை மெய்ப்பு நோக்கத் தொடங்கி, புதிய நூல்களை இட்டுக்கட்டி எழுதுவது எனச் செல்கிறது வாழ்க்கை. மற்றொரு அச்சகத்தில் பாலியல் கதைகளை எழுதுகிறார். 'புரம்' பகுதியில் வெறுமையில் உழன்று கடலில் மூழ்கித் தற்கொலைக்கு முயல்கிறார். 'காற்றில் நடப்பவர்கள்' நரிக்குறவர்களின் வாழ்வைச் சொல்கிறது. நாடோடிகளான அவர்களுக்கு அறம்பிறழ அத்தனை வாய்ப்புகள் இருந்தும் அவர்கள் அப்பாதையைத் தவிர்க்கிறார்கள். அந்தத் திண்மையை அவர்களிடமிருந்தே கற்கிறார். சென்னை பகுதிகள் முழுமையும் நுட்பமான ஆளுமைச் சித்திரங்களை கொண்டவை. சிவகுருநாதபிள்ளை, மாரியம்மாள், சரஸ்வதி அக்கா எனப் பலரும் துல்லியமாக மனதில் உருக்கொள்கிறார்கள். பாலியல் கதையொன்றை மெரீனா பிரஸ்சுக்கு எழுதி அளிக்கிறார். அவர் இலக்கியப் பரிச்சயமுடையவர் என அறிந்த உடனேயே நாணம் வந்துவிடுகிறது. பொறனி பேசும் மாரியம்மாளின் பாத்திரம் ரணத்தால் பிறருக்கு ரணத்தை உண்டாக்குபவளாக வருகிறாள். அவளைக் காயப்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் பெறுகிறார். பெண்களின் உலகத்தில் நின்று அவர்களது மீமொழிகளைக் கேட்டு திகைப்பதும் உளத்தை நுட்பமாகப் பதிவு செய்வதும் சிறப்பாக வந்துள்ள பகுதிகள் எனச் சொல்லலாம்.

 

‘நுதல்விழி’யும் அதற்கடுத்த அத்தியாயமான 'ஜோதியும்' இந்நூலின் ஆன்மிகச் சிகரங்கள். ஜெயமோகன் அடித்துவிட்ட குண்டலினி நூலை நிஜமென நம்பி அவரைக் காண வருகிறார் அருளப்பசாமி. ஏமாற்றுப் பேர்வழி என நினைப்பவர் உண்மையில் அவரது திறனைக் கண்டு குழம்புகிறார். எதன்மீதும் எந்தப் புகாரும் அற்ற, அகந்தையற்ற, எவ்விதத்திலும் பிற உயிர்களிடமிருந்து தன்னை தனித்துக் காட்டிக்கொள்ள விழையாத வெள்ளை மனிதராக வருகிறார் அருளப்பசாமி. குழந்தையின் அறியும் ஆர்வத்துடன் உலகத்தின் எல்லா இயக்கங்களையும் கவனிக்கிறார். எந்தத் திட்டமும் இல்லை. பட்டினியிருக்க நேரவில்லை. அவருக்கு இந்த உலகத்தில் கிடைக்காதது என எதுவும் இருக்கமுடியுமா என யோசிக்கிறார். சாமானிய மனிதர்களும் பிராணிகளும் அவரை எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். எதையும் பொருட்படுத்தாத, எதன்மீதும் பற்றில்லாத பெரும் பயணி. அவருடன் நடந்தே வடலூர் வந்தடைகிறார். கருவறைக்குள் அல்ல அவர் ஜோதியைக் காண்பது அடுப்படியில் உள்ள அணையா நெருப்பில்‌. வீடு திரும்பும் துணிவை அருளப்பர் அவருக்கு வழங்கியிருக்க வேண்டும். விட்டு விலக முயல்வதென்பது அதன்மீது பிடிப்பும் அச்சமும் உள்ளதன் விளைவுதான். இயல்பாக தாமரையிலை தண்ணீர்போல இருக்கமுடியும் என்பதை உணர்ந்து ஊர் திரும்புகிறார். 'பின் நின்றவர்' இந்த ஒட்டுமொத்த பயணத்தையுமே தலைகீழாகப் பகடி செய்யும் அத்தியாயம். தன்னிலிருந்து தன்னை பீடித்த ஒன்றாக, தனித்த ஆளுமை கொண்டதாக, ஆட்டுவிப்பதாகக் கட்டமைக்கிறார். ‘பின்தொடரும் நிழலின் குர’லில் வரும் அபத்த நாடகம், ‘இன்றைய காந்தி’ எழுதப்பட்ட பிறகு எழுதிய ‘வெற்றிகரமாகச் சுடப்பட்டு இறப்பதெப்படி?’ கட்டுரை, முதற்கனலில் சூதர் பாடும் பீஷ்மர் காதை என பல உதாரணங்களைச் சொல்லலாம். இந்தத் தலைகீழாக்கம் வழியாக உணர்வுரீதியான பிணைப்பை முறித்துக்கொள்கிறார் எனத் தோன்றுவதுண்டு. தீவிர இலக்கிய மற்றும் தத்துவ நூல்கள் காலம் கடந்து நிற்பது சரி. ஆனால் ‘விஷ்ணுபுர’த்தில் சுமத்திரனின் பிரஹஸன நகைச்சுவை நூலும் நிலைபெறுவதான ஒரு சித்திரம் வரும். இத்தகைய அத்தியாயங்களை அந்த நோக்கிலேயே காணவேண்டும்.

 

ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன், சௌந்தர் 

4

 

இறுதி அத்தியாயமான 'கூடுதிர்வு' வீடு திரும்புதலுடன் முடிகிறது. தந்தைக்கும் அவருக்குமான உறவு பேசப்படுகிறது. அன்பை பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட முறையில் வெளிப்படுத்தத் தெரியாத தந்தையர். தங்கப்பனின் மனப்போராட்டம் எனக்கு ஆனந்த் குமாரின் ஒரு கவிதையை நினைவுபடுத்தியது.

 

குழந்தை

எப்போது

என் குழந்தை?


ஒரு குழந்தையை

கையிலெடுக்கையில்

அது என் குழந்தை.

 

வளர்ந்த குழந்தையை

அணைக்கும்போதெல்லாம்

என் குழந்தை

 

விலகும் குழந்தையை

நினைக்க நினைக்க

என் குழந்தை

என் குழந்தை.

 

தங்கப்பன் நாயரும் விலகிச்செல்லும் தோறும் தன் குழந்தை என படபடப்புடன் உணர்ந்திருப்பார். கூடடைதல் என வைத்திருக்கவேண்டிய அத்தியாயத்திற்கு கூடுதிர்வு எனப் பெயரிட்டிருக்கார். கூடு அவருக்கு இனி தேவைப்படாது எனும் பொருளில்‌. உலகை அறியப் புறப்பட்டவரின் கால் ஓரிடத்தில் ஒருபோதும் தங்காது.

 

'முகங்களின் தேசம்' முன்னுரையில், ‘நான் இந்தியாவை சக்தியாக, அன்னையாக எண்ணும் மனநிலையை என் மதமாகக் கொண்டவன். நான் வணங்கும் நல்லாசிரியர்கள் அனைவருமே இந்த மண்ணை வழிபட்டு, இதில் அலைந்து திரிந்து தங்கள் மெய்மையைக் கண்டடைந்தவர்களே. எனக்கு எந்த ஐயமும் இல்லை. இது ஞானபூமிதான். மாபெரும் தவம் நிகழ்ந்த மண் என்பதனால் இதன் ஒவ்வொரு மலையும் ஆறும் ஏரியும் சமவெளியும் ஊரும் எனக்குப் புனிதமானதே. இதிலிருந்து நானும் என் ஞானத்தை அடைந்திருக்கிறேன் என்று சொல்ல எந்தத் தயக்கமும் எனக்கில்லை. வைக்கம் முகமது பஷீரும், தாராசங்கர் பானர்ஜியும், சிவராமகாரந்தும் அடைந்த மெய்மை. ஞானத்தின் முடிவின்மை என பாரதப்பெருநிலத்தை மீண்டும் மீண்டும் கண்டடைந்தபடியே இருக்கிறேன்.’ ‘புறப்பாடு’ம் இதே அறிதல்களை சாரமாகக் கொண்டது.

 

ஜெயமோகன் எதைக் கடந்தார்? எதை அடைந்தார்? எழுத்தாளர் சுசித்ரா 'ஏழாம் உலகம்' நாவல் பற்றிய கட்டுரையை வாசிக்கும்போது ஒரு திறப்பு கிட்டியது. வீட்டில் கோபப்பட்டு வெளியேறியவர் அருளப்பசாமியெனும் மகத்தான கனிவை அறிந்து திரும்பி வருகிறார். மிக சொற்பமான பணக்கையிருப்புடன் சுற்றித் திரிகிறார். ஆனால் ஒருவேளையேனும் பட்டினி கிடந்தார் என்றில்லை. சுணங்கி உறங்குபவரை எழுப்பி கனிவு கொண்ட கரங்கள் அவருக்கு அன்னத்தை ஊட்டியபடியேதான் உள்ளன. வாழ்வை முடித்துக்கொள்ள முற்படுகையில் மகத்தான சூரியோதயத்தைக் காண்கிறார். ஏதேனும் ஒன்றை திட்டவட்டமாகக் கடந்தார் எனச் சொல்லமுடியும் என்றால் அது 'அருவருப்பு' எனுமுணர்வை எனச் சொல்லலாம். நாம் வாழும் பண்பாடே அழகையும் அருவருப்பையும் முடிவு செய்கிறது. நாம் பெற்ற விழுமியங்களைக் கொண்டே நமக்கு வெளியே உள்ளவற்றை மதிப்பிடுகிறோம். அவை நம் பண்பாட்டுச் சூழல் நமக்களித்தவை. சாதியும் குடும்பமும் அளித்தது என்பதை நாம் உணர்வதில்லை. பெரும்பாலும் அவ்வெல்லையைக் கடந்து பயணப்பட வெகுசிலருக்கே சாத்தியமாகியுள்ளது. அதற்கு மனம் திறந்துகொள்ள வேண்டும். வசதி வட்டத்திற்கு வெளியே நம்மை நிறுத்திக்கொள்ள வேண்டும். தன்னைப் பிறரில் காணவேண்டும். அருவருப்பைக் கடந்தவர்களுக்கு அந்நியன் என எவருமில்லை. எனக்குத் தெரிந்து நாஞ்சில் நாடனிடமும், அ. முத்துலிங்கத்திடமும் நான் அத்தகைய அசூயையற்ற, மதிப்பீடுகள் அற்ற ஏற்பை உணர்ந்துள்ளேன். எப்போதும் விரித்த கரத்துடன் வாழ்வை, உலகைத் தழுவக் காத்திருப்பவர்கள்.

 

இன்னும் சற்று யோசித்துப் பார்த்தால், அருவருப்பு ஒரு நவீனத்துவ இயல்பும்கூட. இருத்தலியலுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. இருத்தலியல் நிறைவின்மையை உணர்வதிலிருந்து பிறப்பெடுக்கிறது. ஒரு லட்சிய மனிதனைக் கற்பிதம் செய்கிறது. முழுமையின்மை ஒரு குறை அல்லது பிழை. ஒருபோதும் அடையமுடியாத முழுமையின் காரணமான விரக்தி அவர்களை ஆட்கொள்கிறது. ‘நீர்கங்கை’, ‘மதுரம்’ ஆகிய அத்தியாயங்களை வாசிக்கும்போது அருவருப்பை, முழுமையின்மையை அவர் காணும் பார்வையை அவை மாற்றியமைப்பதை உணரமுடிகிறது. ஜெயமோகனின் 'பிழை' கதை ஒரு மிகச்சிறந்த உதாரணம். நமது திட்டமிடலுக்கும் அப்பாலான பிழை என்பது நவீனத்துவர்களுக்கும் இருத்தலியல்வாதிகளுக்கும் அழுத்தத்தை அளிக்கக்கூடியது. ஆனால் அதை கடவுளின் இருப்பாக உணர்வதன் வழி, வாழ்வை வாதையாகக் காணும் உணர்விலிருந்து விடுபடுகிறார். ஒருவகையில் இது இந்திய வேதாந்த மரபின் தொடர்ச்சி. இறைவனுக்கு தன்னை முழுதளித்தல் என்பது தடையற்று அவருடைய திட்டத்தில் உள்ளவற்றை முழுமையாக ஏற்பதுதான். நவீன இலக்கியத்தின் மிக முக்கியமான இலக்கணம் என்பது விமர்சனம்தான். விமர்சனமும் ஏற்பும் இரு எதிரெதிர் நுனிகளாகத் தென்படலாம். ஆனால் இறைவனுக்குத் தன்னை முழுதளிக்கும் பாடல்களைப் பாடிய மீராவும், கபீரும், அக்கம்மாவும், இன்னும் பல சித்தர்களும் ஒரே நேரத்தில் இவ்விரு எல்லைகளிலும் செயல்பட்டுள்ளனர். முழுதாக ஏற்றல் என்பது மானுட யத்தனத்தைக் கைவிடுவதல்ல, மானுட யத்தனங்களின் பயனின்மையில் உழன்று சோர்வடையாமல் இயங்குவது எனும் தளத்திலேயே இயங்குகிறது. இதுவே கீதையின் செய்தியும்கூட. ஜெயமோகன் மரபின் துணைகொண்டு இருத்தலியலின் இருளைக் கடக்கிறார். நவீன இலக்கியத்தின் பார்வையில் மரபை மறுக்கவும், விமர்சிக்கவும், மறுகட்டமைப்பு செய்யவும் முயல்கிறார். இவ்விரு கூறுகளையும் அனுமதிக்கும் மெய்யியலாக அவரது அத்வைத வேதாந்தம் அமைகிறது. அருவருப்பைக் கடப்பது என்பது அதன் தீவிர வடிவில் அழகியல் உணர்வை மறுப்பதாகவும் ஆகிவிடும் வாய்ப்புண்டு. கலைஞனுக்கு உரிய அழகியல் உணர்வைத் தக்கவைத்தபடி அருவருப்பைக் கடப்பதே பெரும் சவால். ‘நீர்கங்கை’யும், ‘மதுர’மும் அவ்வகையில் ‘புறப்பா’டின் சாரமான பகுதிகள் என நம்புகிறேன். தனிப்பட்ட உறவுகள் தொடங்கி எல்லா தளங்களிலிருந்தும் அருவருப்பை நீக்கும் பயணமாகவே ‘புறப்பா’டைக் காண்கிறேன். இது அவரது படைப்புகளிலும், அவரது ஆன்மிகப் பயணத்திலும் மிக முக்கியமான பங்களிப்பு ஆற்றியுள்ளது.

 

காந்தியின் தொடங்கிய கட்டுரையை  அவரில் நிறைவு செய்வதே முறை. 'ஆத்ம கதை' என்பதைத் தாண்டி காந்தியுடன் ஜெயமோகனுக்கு பல்வேறு உடன்படும் புள்ளிகள் உண்டு. முதலீயத்தின் உடைமை சேகரிப்புக்கும் பொதுவுடைமையின் உடைமை நிராகரிப்பிற்கும் இடையே காந்தி அறங்காவலர் முறை என ஒன்றை முன்வைத்தார். இங்கே ஒருவரின் பொருளீட்டும் தனித்திறனுக்கு மதிப்பு உண்டு. ஆனால் அந்த திறன் சமூக நன்மைக்காகவே அவனுக்கு இறைவனால் அளிக்கப்பட்டது எனும் நம்பிக்கையை முன்வைத்தார். ஜெயமோகன் அறிவுலக செயல்பாட்டிற்கும் இலக்கியத்திற்கும் இந்த அறங்காவலர் முறையை நீட்டிக்கிறார். இலக்கியத்தில் இயங்குபவர் அளிப்பதற்கென உள்ளவர், அங்கே பெற்றுக்கொள்ள ஏதுமில்லை,  ஒருவகையில் இதை அவரது வாழ்க்கை செய்தியாக நான் உணர்ந்திருக்கிறேன். நன்றி ஜெ.


‘புறப்பாடு’ ஒரு தொடக்கம்தான். இன்றுவரை ஓயாமல் புதியவற்றை நோக்கி புறப்பட்டுச் சென்றபடி இருக்கும் ஜெ.க்கு இன்னும் பல சாகசங்கள் வாய்க்கட்டும்.