முன்குறிப்பு - கட்டுரை என்ற பாவனையில் ஒளிந்து கொண்டிருக்கும் இத்தன்னுரையாடல் கடந்த 2021 ஏப்ரல் மாதம், 'தன்னறம்' ஒருங்கிணைத்த 'கல்லெழும் விதை' என்ற நிகழ்வை ஒட்டி எழுதப்பட்டது.
ஒரு
நூலை வாசித்தப் பின் வரும் ஒட்டு மொத்த அனுபவம் என்ற ஒன்றுண்டு. புத்தகத்தை பிறருக்கு
பரிந்துரைக்க அவ்வகையான வாசிப்பனுபவம் மிகவும் அவசியம். அதே நேரம், ஒரு நூலின் சில
பகுதிகளை, சொற்றொடர்களை எடுத்துக் கொண்டு அதை பற்றி நீண்ட நேரம் யோசித்துக் கொண்டே
உட்கார்ந்திருப்போம். அவ்வகையான வாசிப்பனுபவம் நாம் அந்த நூலினுள் முழுதாக மூழ்கிவிட்டோம்
என்பதற்கு சான்று. நான் இக்கட்டுரையில் இரண்டாம் வகையான வாசிப்பனுபவத்தை பிரதானப் படுத்த
விரும்புகிறேன். இந்நூலிலுள்ள ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் ஒவ்வொரு தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவற்றின் துணையுடன், கூடுமானவரை சிந்தனையின் திசை மாறும் இடங்களில் பத்தி பிரித்து
எழுத முயன்றிருக்கிறேன்.
முன்னுரை
நெருக்கடிகளில்
இருக்கும் மனதுக்கு கலையை தவிர துணையொன்று வேறில்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. அச்சமயங்களில்
அருகிலிருக்கும் நல்லெண்ணம் கொண்டவர்கள் நம்மை வழிநடத்துவதாக கருதி மேலும் நம்மை இருட்குகைக்குள்
தள்ளி விடுவர். ஏமாற்றங்களும், தோல்விகளும், அலைக்கழிப்புகளும், நம்பிக்கையின்மையும்
சூழும் பொற்காலத்தில் நம்மை ஆசான்கள் வந்தடைகின்றனர். ஆம், நெருக்கடியான அனைத்து காலங்களும்
பொற்காலம் தான். புதிய வாசல் திறக்க நாம் பெருங்குழப்ப நிலையில் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது.
சலிப்புள்ள அன்றாட வாழ்வில் அவ்வப்போது ஆசான்கள் வந்து குறிக்கிட்டாலும் அவர்கள் நம்முள்
இறங்க நாம் அனுமதிப்பதில்லை. சோம்பலும், சலிப்பும் மனிதனின் இயல்பான நிலை என்பதை தெள்ளத்தெளிவாக
நாம் உணர்ந்திருப்போம். ஒழுங்கின்றி கட்டுக்கடங்கா, தீவிரமான கொதிநிலையில் மனம் இருக்கும்
போதே ஆசான்களை நாம் ஏற்கிறோம். அகங்காரம் நம் பிரக்ஞையை விட்டு விலக, நம்முள் பல கலைஞர்கள்,
தத்துவவாதிகள், உளவியல் நிபுணர்கள் உள்ளிறங்குகிறார்கள். ஒழுங்குடன் அமைந்த நாட்களில்
புதிய ஒன்றை நாம் உள்ளே வர அனுமதிப்பதில்லை. முக்கியமாக, தீவிரமான செயலூக்கம் கொண்ட
ஆக்கங்களை அல்லது அறிவுரைகளை. நாம் ஏற்றுக்கொள்ள முடியாத படிக்கு ஏதோ ஒன்று தடுக்கிறது.
இம்மனப்பதிவை
எழுதுவதற்காக "தன்மீட்சி" நூலை மீண்டும் வாசிக்க நேர்ந்தது. இரண்டே நாளில்
படித்து முடித்தேன். திகட்ட திகட்ட வாசித்தேன் என்று தான் கூற வேண்டும். இரண்டு வருடத்திற்கு
முன் முதன் முறை இந்நூலை வாசிக்கும் போது, ஒவ்வொரு நாளும் வைத்து வைத்து பருகிக்கொண்டிருந்தேன்.
படித்து முடித்த பக்கங்கள் கூட கூட "அய்யய்யோ.. நமக்கு புடிச்ச விஷயம் சீக்கிரம்
தீர்ந்துவிடுமே" என்ற தவிப்பு பெருகியது. Ingmar Bergman இன் Persona, Scenes
from marriage, Dostoevsky இன் நிலவறைக் குறிப்புகள், Nuri Bilge Ceylan இன் Wild Pear
Tree, Winter Sleep, Jordan Peterson இன் வகுப்பறை உரைகள் என மனம் வெகு தீவிரமாக பல
ஆக்கங்களை உள்வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் "தன்மீட்சி" என்னை மேலும் துணிச்சலுடனும்
நேர்மையுடனும் செயலாற்ற உதவியது. நாம் நுகரும் அனைத்து விஷயங்களும் நம் மனம் இருக்கும்
நிலையை பொறுத்தே அமைகிறது. "தன்மீட்சி" நூலை நம்முள் இறங்கவிடுவதற்கும் அப்படியான
ஒரு பிரத்யேகமான மன அமைப்பு தேவை என்றே கருதுகிறேன். சோம்பலிலும், சலிப்பிலும் சுகம்
கண்டவர்கள் "தன்மீட்சி" நூலை வாசித்தாலும், கண நேர எழுச்சிக்குப் பின் முன்னகர
மாட்டார்கள் என்று ஊகிக்கிறேன். சலிப்பினால் சிறிதளவேனும் குற்றவுணர்வுடன் அலைபவர்களுக்கு
"தன்னறம்" நேர்மறையான பெரும் ஊக்கத்தை அளித்து சில நாட்கள் ஓட வைக்கும் என்று
நம்புகிறேன். ஆனால், ஒட்டு மொத்த வாழ்வையே அலசிப் பார்க்கும் ஒருவருக்கு மட்டுமே "தன்னறம்"
அதன் முழு வீச்சுடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் என்று உறுதியாகச் சொல்வேன். தினமும்
காலையில் எழுந்தவுடன் ஊக்க மருந்தை குடிப்பது போல் "தன்மீட்சி" நூல் வாசித்த
அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு காலக்கட்டம் அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
இப்போது
திரும்பி பார்க்கும் போது இந்நூல் என்னவெல்லாம் என்னுள் நிகழ்த்தி இருக்கிறது என்பதை
ஓரளவுக்குத் தெளிவாக உணர முடிகிறது. இரண்டு வருடத்திற்கு முன் ஒவ்வொரு கேள்வி பதிலையும்
படித்து அதை உள்ளூர உணர்ந்து அசை போட்டபடியே இருந்தது இனிய நினைவாக என் மனதில் உள்ளது.
உண்மையிலேயே இது போன்ற வாசிப்பனுபவங்கள் மட்டுமே என்னை கீழ்மையில் மூழ்கி திளைக்க விடாமல்,
தற்கொலைக்கு தள்ளாமல் பாதுகாத்தது எனலாம். பிடித்த ஒரு நூலை சில வருட இடைவெளிக்குப்
பின் திரும்ப வாசிக்கும் போது அதை நாம் அணுகும் விதம் மாறி இருப்பதை உணர்வோம். அதே
நேரத்தில், அந்நூலின் முதல் வாசிப்பனுபவத்தால் எவ்வாறெல்லாம் உளமாற்றம் அடைந்திருக்கிறோம்
என்பதை அறியவும் இரண்டாம் வாசிப்பு சில வருடங்களுக்குப் பின் தேவையாகிறது. சில நூல்களுக்கு
மட்டுமே அப்படியான "உள்ளிறங்கும்" இயல்பு இருக்கிறது. நனவிலியில் ஊடுருவி
நாம் செய்யும் செயலில், நம்முடைய நம்பிக்கையில் ஆழ பதிந்திருக்கும் மாற்றத்தை நம்முடைய
பிரக்ஞையால் உணர முடியாது.
என்னுள்
நிகழ்ந்த மாற்றங்களில் "தன்மீட்சி" நூலிற்கு மிகப் பெரிய பங்கிருப்பதாகவே
கருதுகிறேன். ஆனால், வெறும் ஒரு நூல் என்னை தலை கீழாக திருப்பிப் போடவில்லை என்பதும்
உறுதி. ஒவ்வொரு இலக்கிய ஆக்கமும் அல்லது அகத் தேடல்களும் வெவ்வேறு பாதைகளுக்கு நம்மை
இட்டுச் செல்கிறது என்றே நினைக்கிறேன். அவ்விதத்தில், அந்த அகப் பயணத்திற்கு துணை புரிந்த
அனைத்து ஆக்கங்களும் எனக்கு முக்கியம். அதில் ஒன்றாக "தன்மீட்சி" நூலையும்
சேர்த்துக் கொள்கிறேன்.
தன்னறம்
முதல்
கட்டுரையிலேயே என்னை மிகவும் சிந்தனைக்குத் தள்ளிய கருத்து ஒன்றை வாசித்தேன். "எந்த
துறையிலும் உள்ளுணர்வே முதன்மையானது. அதற்கடுத்து கற்பனை. அதற்கடுத்ததே தர்க்கமும்
அதை வலுப்படுத்தும் கல்வியும்." ஒரு மருத்துவர் பல ஆண்டுகளாக அந்த துறையிலேயே
மூழ்கி அடைந்த ஞானம் என்பது புதிதான விஷயமல்ல. ஆனால், ஒரு anecdote வழியே அக்கருத்தை
வாசிக்கும் போது நாம் சிந்தனையில் முன்னேறி செல்கிறோம். முத்திரைக் குத்தப்பட்ட "Motivational"
உரைகள் மற்றும் எழுத்துக்களுடன் தன்மீட்சி கட்டுரைகள் வேறுபடுவது இவ்விடத்தில் தான்.
ஓட்டப் பந்தயத்தில் கடைசி சில மணித்துளிகளை உத்வேகத்துடன் ஓடி முடிக்க வேண்டுமானால்
so called motivational உரைகள் உதவலாம். அந்த சில நொடிகளில் நமக்கு தேவைப்படுவதும்
அவ்வாறான வலிந்து முன்னேறச் செய்யும் சொற்களே. வாழ்வனுபவத்தினால் அடையும் ஓருணர்வை
அல்லது கண்டடைதலை தாங்கிக் கொண்டு பல வருடங்கள் ஓடலாம்.
ஒரு
துறையில் பல பத்தாண்டுகளாக பணிபுரிபவர்களை வெறும் கண்டிப்பானவர்களாகவோ, சிடு மூஞ்சியாகவோ
நோக்கிய எனக்கு முதல் கட்டுரையில் வாசித்த ஒன்று ஏதோ ஒன்றை திறந்து விட்டது என்று கூறலாம்.
முன்னர் வெறும் வியப்புடனும், சற்றுத் தள்ளியே அவ்வாறான மாமனிதர்களை எதிர்கொள்வேன்.
ஆனால், சமீப காலங்களில் அவர்கள் அறிந்த ஒன்றை அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை
அறிய முயல்கிறேன். அவ்வாறான உணர்தலுக்கு சாத்தியமான கூறுகள் என்னென்ன என்பதை வெகு இயல்பாக
ஆராயத் தொடங்கினேன். நான் எந்த படிக்கட்டில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதும் தெளிவாக
விளங்கியது. மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய மனிதர்களை அச்சமின்றி நெருங்கி அவர்கள் முன்
சிரம் தாழ்த்தி பழகவும் முடிந்தது. Machine Learning என்ற சொல் இப்போது உலகெங்கும்
பிரபலம். ஓர் ஒப்புமைக்காக கூறவேண்டுமெனில், மனித மனத்தை ஒரு மாபெரும் machine ஆகவே
கருதுகிறேன். பல வருடங்களாக ஒன்றில் மட்டும் இயல்பாக கவனத்தை குவிக்க முடிகிற மனதின்
சாத்தியத்தை கண்டு வியப்படைகிறேன். என் துறையில் பெரிதும் மதிக்கப் படுகிற, Statisticians
மற்றும் Data science வல்லுநர்களை மிகுந்த பிரியத்துடன் அணுகத் தொடங்கினேன்.
இரண்டாவதாக,
என்னை மேலெழும்பச் செய்த இடம், "இதெல்லாம் என் செலவு..." என்று மூவரில் ஒருவர்
கூறும் இடம். 2018 இறுதியில் ஒரு தோழியுடன் உரையாடும் போது தற்செயலாக சம்பாஷணையின்
முடிவில் "Why can't we do data analytics for NGOs and government?..."
சிறிது நேர மௌனத்திற்கு பின் “...for free of cost" என்றேன். மாதம் லட்சங்களை
வாங்கி குவித்துக் கொண்டு அது கொடுக்கும் மந்த மன நிலையிலிருந்து சற்றே விலகிச் செல்ல
இப்படியான ஒரு எண்ணம் உதித்தது என்றே நினைக்கிறேன். பிறருக்கு உதவும் வகையில் என்ன
பெரிதாக செய்து விட முடியும் என்று வெகு தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்த காலம். மாபெரும்
செயலை செய்யவும், பிறருக்கு உதவுவது மட்டுமே மைய நோக்கம் என்றுணரும் அனைவருக்கும் முதலில்
உரைப்பது பணம் என்பது பெரிய விஷயமே அல்ல என்பது தான். முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள
அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மேன்மையான நோக்கத்திற்காக மட்டுமே இயங்கிக்
கொண்டிருக்கிறார்கள் என்றெண்ணினேன். அறச் செயலில் சிறியது பெரியது என்ற பாகுபாட்டை
தவிர்த்து விட்டு பார்த்தால், அதை சுற்றி அமைந்திருக்கும் இது போன்ற அ-உலகியல் மனப்பான்மை
அடி நாதமாக அமையும் என்று உணர்ந்தேன். இம்மனநிலையின் நீட்சியாகவே நேர்மையும், தவறை
ஒப்பொக்கொள்ளுதலும் வருகிறது. மருத்துவர் ஓரிடத்தில் "எங்களால் நோயை ஊகிக்கமுடியவில்லை
என்பது எங்கள் தவறு." என்று கூறும் இடத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அற நெறிகளுடன் செயல் படும் ஒவ்வொருவரும் இவ்வகையான துணிச்சல் மிக்கவராகவே இருக்கிறார்கள்.
தவறுகள் நேர்வதும் அதை சம்மந்தப்பட்டவர்களிடம் ஒப்புக்கொள்ளுதலும் தைரியமான பண்பாகவே
என்னால் காண முடிகிறது. அவ்வலிமையை கொடுப்பதும் அறத்தின் பக்கம் நின்று கொண்டிருத்தலே.
முதல்
கட்டுரையிலேயே தன்னறம் பற்றி மிகத் தெளிவாக ஓர் விளக்கம் அளிக்கப்படுகிறது. உள்ளுணர்வு
திறக்கும் துறையை தேர்வு செய்ய வேண்டும். அதை கண்டடையவே சில வருடங்களை நாம் கழிக்க
வேண்டியிருக்கும் என்று எண்ணுகிறேன். சேவை மன நிலையில் நான் ஆரம்பித்த ஒன்று தற்போது
சிறு குழுவாக மலர்ந்திருக்கிறது. நான் எந்த படிநிலையில் உள்ளேன் என்றும் தெளிவாக தெரிகிறது.
கட்டுரையில், மூத்த மருத்துவர் கூறுவது போல் என் துறையில் அனுபவத்தை தீட்டிக் கொள்வதன்
மூலம் என் உள்ளுணர்வு கூர்மையாகும் என்று நம்புகிறேன்.
தன்னறமும்
தனிவாழ்வும்
முதல்
கட்டுரையின் தொடர்ச்சியாகவே இரண்டாவது கேள்வி பதிலை காண முடிகிறது. நம் சூழலில் இருக்கும்
மாபெரும் தவறான அறிவுரை என்பது கனிவும், கருணையும் அனைத்திடங்களிலும் காட்டப்படவேண்டும்
என்பது. சொற்களை போல் ஜால வித்தை காட்டும் பிறிதொன்று இங்கில்லை. வெறும் சொற்களை மேலே
பூசிக்கொண்டு திரிபவர்கள் இங்கு ஏராளம். கருத்துக்களையும் அது உருவான சூழலையும் புரிதலின்றி
அப்படியே பின்பற்றுவது நம்மை நாமே குழியில் தள்ளிக்கொள்வதற்கு சமானமாகும். இரண்டாவது
கடிதத்தில் உள்ள குழப்ப நிலையை நானும் பல முறை அடைந்திருக்கிறேன். பல சமயங்களில் நான்
"Weak man" ஆக உணர்ந்திருக்கிறேன். இலக்கியம் மற்றும் இதர கலைகளினால் அலைக்கழிக்கப்பட்டு
சில வரையறைகளை எனக்குள் திட்டவட்டமாக கட்டமைத்திருக்கிறேன். அது தவறு என்று விளங்குவதற்கு
நான் எடுத்துக்கொண்ட அவகாசம் மிக நீண்டது.
தன்னறம்
என்ற சொல்லுடன் இணையும் குணங்களாக கருணை, மானுடத்தை உயர்த்திப்பிடித்தல், அரிதான செயலை
செய்தல் என்பனவற்றுடன் துணிச்சல், பாசாங்கின்மை, நேர்மையுடன் நேரடியாக கூறும் தைரியம்
ஆகிய குணங்களும் அவசியம் சேரும் என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. தனிநபர் செய்யும் பிழைகளை
கண்டுகொள்ளாமல் தேவையற்ற கருணையை வழங்கி வேலை செய்யும் அமைப்புக்கு நேர்மையாக இல்லாதிருக்கும்
போது அது மிகப்பெரிய அறமீறலாகவே எனக்குப் படுகிறது. அமைப்பு சார்ந்த நெறிமுறைகளுக்கு
உட்படாமல் தனி நபரின் பிழையை பொறுத்துக் கொண்டு அவர் மேல் எழும் கருணையை பெரிது படுத்தும்
மனம், தன்னை தேவதூதரின் நிலையில் நிறுத்தி வைத்து பார்க்கிறது. பின்னாளில் பிறரிடம்
தன் கருணை உள்ளத்தை பற்றி அளந்து கட்ட ஏற்றத் தருணங்களை தேடி அலைகிறது. என் சொந்த அனுபவத்தில்
கற்று தேர்ந்த ஒன்றை இக்கடிதமும் ஜெ.யின் பதிலும் எனக்கு பெரும் நிம்மதியை அளித்தது
எனலாம். பல சமயங்களில் நாம் அனுபவித்து உணர்ந்த ஒன்றை பிறர் ஆமோதிப்பதன் வழியாகவே நாமுணர்ந்தது
சரியானது என்ற நிறைவு கிடைக்கிறது. அதுவும் நாம் ஆதர்சமாக நினைக்கும் ஒருவர் நம் கருத்தை
ஆமோதித்துவிட்டால், அக்கருத்தின் மேல் பிடிப்பு அதிகமாகிறது.
தேடியவர்களிடம்
எஞ்சுவது
மூன்றாவது
கடிதம், வாசிக்கும் போதே அச்சுறுத்தக் கூடிய ஒன்று. "Let life happen", "நதி
மேல் ஓடும் இலை போல அதன் இயல்பிற்கு விட்டு விடுங்கள் வாழ்க்கையை" போன்ற அறிவுரைகளை
எப்படி உள்வாங்கிக்கொள்வது என்று தெரியாமல் தவிக்கும் காலமொன்றுண்டு அனைவருக்கும்.
A kid in a candy bar போன்று மனதிற்கு தோன்றும் திசைகளிலெல்லாம் அலைந்து திரிந்த பலரை
நான் நேரடியாக கண்டிருக்கிறேன். சில நேரங்களில் அவர்களின் பாய்ச்சல் அனைத்தும் சற்று
பொறாமையை வர வழைத்தது என்றும் கூறலாம். ஆனால், எதிலும் மேலோட்டமாக மட்டுமே நின்றுவிடக்
கூடிய அவர்களின் உள அமைப்பை சரி வர புரிந்து கொண்டது அமெரிக்க மக்களிடம் பழகிய பிறகு
தான். சுதந்திரம் மிகப் பெரிய அழுத்தம் என்பதையும் அவர்களிடமிருந்தே கற்றுக் கொண்டேன்.
43
வயது வரை US Navy இல் பணியாற்றிவிட்டு அதன் பின் ஒரு கல்லூரியில் சேர்ந்து Statistics
இல் மேற்படிப்பை முடித்து என் அலுவலகத்தில் Data analyst ஆக வேலை செய்யும் நெருங்கிய
நண்பரின் வாழ்வை வைத்து தான் இந்த கடிதத்தை தொடர்பு படுத்த முடிகிறது. அந்த அமெரிக்க
நண்பர் 45ஆம் வயதில் அலுவலகத்தில் ஆரம்ப நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி இப்போது
ஓரளவு நல்ல பதவியில் இருக்கிறார். அவருக்கு வயது 51. சில மாதங்களாக அவருக்கு இப்பணியும்
அலுக்கத் தொடங்கிவிட்டது. தற்போது தன்னுடைய வேலையை தக்க வைக்கப் போராடுகிறார். இவ்வேலையை
நம்பி மிகப் பெரிய வீடு ஒன்றை வாங்கிவிட்டார். அலுவலக அழுத்தம் தாங்காமல் வேலையை விட்டு
வெளியேற மனம் விழைந்தும் பொருளாதார சூழல் அவரை கட்டிப்போட்டிருக்கிறது. ஆரம்பத்தில்,
அனைவரும் அவரை வியந்து பார்த்தோம். மிக நிச்சயமாக 45 வயதில் முற்றிலும் மறு திசையில்
துறையை மாற்ற முடிவதெல்லாம் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே சாத்தியம். ஆனால், தற்போது
அவரின் நிலை கண்டு நாங்கள் வருந்தவே செய்கிறோம். அலுவலகத்தில் இருக்கும் பலர் அவரை
வாட்டி வதைத்தெடுக்கின்றனர். அவரிடம் இருந்த உத்வேகம், வேட்கை, ஆர்வம் அனைத்தும் வடியத்
துவங்கிவிட்டது. இப்போது வெறும் பொருளாதார நெருக்கடிக்காக மட்டுமே வேலையை செய்து வருகிறார்.
இந்தியா போன்ற நாடுகளில், 40ஐ தாண்டிய மக்கள் குழுவிடமிருந்து இது போன்ற திடீர் துறை
மாற்றத்தை காண்பது அரிது என்றாலும் இங்கும் சில காணக்கிடைக்கின்றன.
ஜெ.
இக்கடிதத்தில், "வாழ்க்கை என்பது ஏதோ ஒன்றை அடைவதற்காக, வெல்வதற்காக நிகழ்வது
என்ற எண்ணத்திலிருந்து தான் இத்தகைய பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன." என்று குறிப்பிடுகிறார்.
இவ்வரியை மட்டும் நான் மீண்டும் மீண்டும் என் நினைவில் நினைவுறுத்திக்கொண்டே இருக்கின்றேன்.
செயலின் பின்னுள்ள நோக்கம் என்றுமே முதன்மையானது என்று புரிந்துகொள்கிறேன். பல பெரிய
நிறுவனங்களிலுள்ள CEOக்கள் அடைந்திருக்கும் உச்சத்தை பார்க்கும் போது அவர்களை உந்தித்
தள்ளியது பணமோ, புகழோ, இவற்றையெல்லாம் அடைந்து விட வேண்டும் என்ற தீவிரமோ எதுவாக இருந்தாலும்
அதையும் தாண்டி அவர்கள் மாபெரும் நோக்கத்துடனும் செயல்பட்டனர் என்று தெரியவருகிறது.
Mission statement & core values of a company is very important. வெறும் பணத்துக்காகவோ,
சமூக நிலைப்படிகளில் மேலே நிற்க வேண்டும் என்ற உலகியல் குறிக்கோளோடு செயல்பட்ட எந்த
ஒரு அமைப்பும் சிறந்து விளங்கியதாக இதுவரை நான் காணவில்லை.
மேலும்
இக்கடிதத்தில் இருந்து துவங்குகிறது ஜெ. அவர் வாழ்வில் அடைந்த சுய மீட்சி பற்றியான
விரிவான உரையாடல். இன்றும் அவர் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பது அனைவருக்கும் பிரமிப்பை
ஏற்படுத்துகிறது. அலைச்சலும், சுதந்திரம் என்ற பேரில் நாம் செய்யும் ஒழுங்கற்ற செயல்களும்
இறுதியில் நம்மை பொருளாதார தேவைக்கு அலைய வைக்கிறது. கழிந்த அத்தனை வருடங்களும் நேர
விரயமாகவே முடிந்து விடுகிறது. இந்த கண்டடைதலை நான் என் வாழ்வனுபவங்கள் மூலம் இன்னும்
முழுதுணரவில்லை என்றாலும், இக்கடிதத்தை வாசிக்கும் போதும், சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை
காணும் போதும் சற்று அஞ்சவே செய்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் காலூன்றி நிலைக்க வேண்டும்
என்றெண்ணிய துறைகளில் செயல் புரிகிறேனா? எத்தனை சதவிகிதம் என்னுடைய நேரம் கேளிக்கைகளுக்கு
போகின்றன என்று நான் பிரக்ஞையுடன் ஆராயத் துவங்கினேன். நான் விட்டு விலக வேண்டிய இடங்கள்
நிறைய இருந்தன. முனைப்புடன் செயல்படும் மனப்போக்கை வளர்த்துக் கொண்டேன். ஆனால், அதில்
இன்னும் முழு தேர்ச்சி பெறவில்லை என்பதே உண்மை. தொடர்ந்து போராடிக் கொண்டுதானிருக்கிறேன்.
தன்னறத்தின்
எல்லைகள்
அடுத்த
கடித்ததில் நான் சமீப காலமாக கூறிக்கொண்டே இருக்கும் ஒன்றை வாசித்து மகிழ்ச்சி அடைந்தேன்.
முன்னரே கூறியது போல், இந்நூலில் குறிப்பிட்டவற்றை எதையுமே நான் வலிந்து நினைவில் நிறுத்தியோ,
அறைச் சுவற்றில் poster ஒட்டியோ கடைபிடிக்கவில்லை. இரண்டு வருடத்திற்கு பின் திரும்பி
பார்க்கையில் எங்கோ சில வாசகங்கள் உள் சென்றிருக்கிறது என்பதை உணர்கிறேன். "என்
நேரத்தை உருவாக்கிக் கொண்டேன்." "ஒருவர் தனக்கு உண்மையிலேயே எது முக்கியம்
என உணர்கிறாரோ அதை செய்ய முடியும் என்றே நினைக்கிறேன்" இதை நான் பல முறை உணர்ந்தும்
இருக்கிறேன். NGOக்களுக்காக இலவசமாக Data analytics செய்து தருவது என்று களமிறங்கிய
பின் என் அலுவலகத்தில் இது தெரிந்த சிலரும், என் நலம் விரும்பிகளும் "அதற்கெல்லாம்
நேரம் கிடைக்காது..." என்ற ஒற்றை கருத்தை முதன்மையாக மிக மூர்க்கமாக வைத்தார்கள்.
எனக்குமே அப்படியான மன பிரம்மை இருந்தது. ஆனால், நேரத்தை நானே உருவாக்கிக்கொண்டேன்
என்று தான் சொல்ல வேண்டும். இரவு அலுவலக வேலை முடிந்ததும் ஓய்வில் இருக்கும் நேரங்களை
தேர்ந்தெடுத்தேன். அலுவலகம் சம்பந்தப்பட்ட எண்களையே பார்த்து சலித்த எனக்கு Education
சம்பந்தமான எண்களை காண ஆவலாக இருந்தது. Education பற்றிய dataவில் நான் கண்ட சவால்கள்
இன்னும் புதுமையாக இருந்தது. அலுவலகத்தில் ஊதியம் அதிகம். ஆனால் நான் செய்யும் பல வேலைகளையும்
idea க்களையும் அவர்கள் மதிப்பதில்லை. அலுவலகத்திற்காக மெனக்கெடுவதை குறைத்துக்கொண்டு
என்னுடைய NGO வேலைகளில் மும்முரமாக இறங்கினேன். சில நேரங்களில் இரட்டை வேலை பளுவினால்
களைப்படைந்ததுண்டு. ஆனால், அவை இனிதான களைப்பாகவே இருந்ததை உணர்ந்தேன்.
ஜெ.
இக்கடிதத்தில் கூறுவதை நான் சரியாக புரிந்துகொண்டிருந்தாலும், இன்னும் செல்ல வேண்டிய
தூரம் அதிகமிருப்பதாகவே கருதுகிறேன். நான் புழங்கும் மற்ற இடங்களென, நாடக நடிப்பு,
கதைகள்/கட்டுரைகள் எழுதுவது, கதைகூறுதல் போன்றவற்றை கூறுவேன். இவை அனைத்திற்கும் என்
நேரத்தை என்னால் சரியாக வகுத்து கவனம் செலுத்த முடியும். ஆனாலும், நான் செயல்படுவதில்லை.
புறச்சூழலின் மேல் இன்றும் குற்றம் சுமத்த தோதுவாக இருக்கிறது. அதை நிறுத்திக் கொண்டு
தடைகளுக்கான காரணிகளை கண்டடைந்து அதையும் கடக்கும் போதே நான் முழு நிறைவுடன் ஒவ்வொரு
நாளும் இரவு படுக்கச் செல்வேன் என்று எண்ணுகிறேன்.
செயலின்மையின்
இனிய மது
இந்த
கடிதத்தை நான் பல சமயங்களில் தளத்தில் படித்திருப்பதாக நினைவு கூர்கிறேன். கிட்டத்தட்ட
நான் காணும் பலர் (என்னையும் சேர்த்து) இந்த உளவியலில் தான் இருக்கின்றனர். சாத்தியங்கள்
மட்டுமே போதுமானது, செயல்கள் தேவையில்லை. என்னை பொறுத்தவரையில், தாழ்வுணர்ச்சியை விட
இவ்வுணர்வே ஒரு மனிதனை மந்தையாக்கும் மாபெரும் வல்லமை கொண்டது என்று கருதுகிறேன். கடிதத்திற்கான
பதிலை படிக்கும் போது "இது நான் தான்... இது நான் தான்..." என்று ஒரு அகக்குரல்
என்னை தொந்தரவு செய்யாமல் இல்லை. என் இலக்கிய வாசிப்பையும் எழுத்தையும் இதற்கு முன்னுதாரணங்களாக
கூற வேண்டும். Mood வேணும் என்று நான் எழுத தவிர்த்த தருணங்கள் எத்தனையோ. மிகப் பெரிய
செயலை செய்து பார்ப்பதை விட "ஹாங்... இது நமக்கு கை வந்த கலையாச்சே.." என்று
அலட்சியத்துடன் விட்டு சென்ற நாட்கள் எவ்வளவோ. பின் திரும்பி பார்க்கும் போது என்னுடன்
எழுத வந்த ஒருவர் யுவ புரஸ்கார் வாங்கிவிட்டார். நான் இன்றும் பத்திரிகைகளுக்கு கெஞ்சும்
தொனியுடன் கதையை பிரசுரிக்குமாறு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். "வெளிப்புற பாராட்டெல்லாம்
எனக்குத் தேவையில்லை. நான் என் சுய நிம்மதிக்காகத் தான் இதையெல்லாம் செய்து கொள்கிறேன்"
என்று என் மனம் பல முறை நடித்து சமாளித்துக்கொண்டிருந்தது.
ஆரம்ப
காலக்கட்டங்களில் Validation என்பது நம் கற்றுக்கொள்ளும் திறனுக்கு கிடைக்கும் சான்றிதழ்
மற்றும் நாம் தொடர்ந்து செயல் பட வேண்டிய அவசியத்தை அளிக்கிறது என்பதை உணர்ந்தேன்.
நான் எழுதுவது எதற்காக, எந்தத் தூண்டுதலினால் எழுத வேண்டும் என்று சில வருடங்களுக்கு
முன்னர் தெளிவுப்படுத்திக்கொண்டேன். கடந்த இரண்டு வருடங்களில் 4 சிறுகதைகளையும், 4
நீண்ட கட்டுரைகளையும், 2 நாடகங்களையும் எழுதினேன். இதை தவிர, என்னை இன்னும் வேறு விதத்தில்
வெளிப்படுத்த எண்ணி நாடக நடிப்பிற்குள்ளும், கதைசொல்லல் தளத்திலும் இறங்கினேன். ஆனாலும்,
உறுதியாக இவ்வெண்ணிக்கை என்னை மகிழ்விக்கவில்லை. இலக்கியத்தில் நான் செல்ல வேண்டிய
தூரம் மிகத்தொலைவு. நான் இன்னும் தேங்கி இருப்பதாகவே கருதுகிறேன். நண்பர் அ, இக்கடிதத்தில்
குறிப்பிடுவது போல், செயலின்மையின் மது மிக வசீகரமாக இருக்கிறது. நான் "என்னுடைய
best ஐ கொடுக்க வேண்டிய நேரம் இதுவல்ல" என்ற மன அமைப்பே procrastination இல் சென்று
முடிகிறது. எழுதி வெளி வருவது குப்பையானாலும் அதை தைரியத்துடன் எதிர்கொள்ள நான் தடுமாறிய
நேரங்கள் ஏராளம். "ராத்திரி எழுதுனா தான் வரும்.. இல்லல்ல, காலைல எழுதுனா freshஆ
இருக்கும்.. இல்லல, ஒரு coffee குடிச்சுட்டு எழுதினா.. இன்னும் superஆ வரும்.."
என்ற மண்டைக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும் சாத்தானின் குரல்கள் என்னை படைப்பியக்கம்
பக்கம் செல்லவிடாமல் பல நாட்கள் தடுத்திருக்கிறது. எழுதுவதன் நோக்கம் அறிந்த நான்,
இன்றும் சில தடுப்புகளை எனக்கு நானே உருவாக்கிக்கொண்டு செயலின்மையில் வாழ்ந்து மகிழ்கிறேன்.
Adaptation என்ற படத்தில் வரும் ஒரு காட்சி மிக சிறந்த உதாரணம். Nicolas cage எழுத
உட்காரும் பொது அவர் மனதில் ஓடும் அனைத்தையும் பதிவு செய்திருப்பார்கள்.
ஜெ.
இந்த கடிதத்தில் அளித்திருக்கும் பதில் என் போன்றவர்களுக்கு மட்டையடி போல் விழுந்து
கொண்டே இருந்தது முதல் முறை படிக்கும் போது. "அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள்
தான், சாதனைகள் அல்ல." பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் அடிக்கடி நிகழும் உரையாடல்
என்பது "What did we do with our privilege?" பிறப்பாலோ அல்லது சூழலாலோ அமையப்பெற்ற
அனைத்தையும் நாம் எந்தளவிற்கு சமூகத்தை நோக்கி வழங்கிக்கொண்டிருக்கிறோம் என்று நம்மை
நாமே கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற புரிதல் வந்தது மிகத் தாமதமாகத் தான். Data
analytics மூலம் சமூகத்துக்காக ஏதோ ஒரு வகையில் என் உழைப்பை வழங்கிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், என் நுண்ணுணர்வையும், என் அகப்பயணத்தையும் இன்னும் முழுதாக வெளிப்படுத்த இலக்கியத்தின்
வழி இன்னும் நிறைய செயல்பட வேண்டும் என்று உரைத்தது.
இந்த
கடிதத்தில் வரும் வரியொன்று இதன் இரண்டாம் மையத்தை தொட்டுச் செல்கிறது. தடைகளே ஒரு
விஷயத்தின் இயல்பை தீர்மானிக்கின்றன. இங்கு ஜெ. குறிப்பிடும் தடை என்பதை நான் procrastinationற்கு
இட்டுச் செல்வதாக காணவில்லை. எதிர்த்து போராட வேண்டிய ஒன்றாகவே நான் காண்கிறேன். என்
துறையில், கொஞ்சம் சோம்பல் தட்டினாலும், "I am doing this very effortlessly"
என்று கூறுவார்கள். ஜெ.யின் மொழியில் கூறினால், முட்டி மோத நம் எல்லோருக்கும் ஓர் இரும்புக்
கதவு தேவைப் படுகிறது. "சவால்களை சந்தித்து, அச்சவால்களை தாண்டுவது போல சிறந்த
கல்வி என ஏதுமில்லை." இவ்வரிகளை முழுதுணர்ந்து கொள்ள பெரு விருப்பம். இது எல்லா
நாளும் அமைவதில்லை. ஆனால் நிச்சயம் இவ்வரிகளை நாம் வெகு சில தருணங்களிலாவது உணர்ந்திருப்போம்.
அவ்வாறு சவாலை எதிர்கொண்டு அதை கடந்து சென்று கற்றுணர்ந்த பின் கிடைக்கும் நிறைவு என்பது
பேருவுகையை அளிக்கக்கூடியவை.
தன்னிரக்கம்
பற்றியும் இங்கு கூறப்படுகிறது. என்னை நானே பரிதாபமாக எண்ணிக்கொண்டு அதுவே விடுபடமுடியா
சுழலுக்குள் தள்ளிய நாட்களை எண்ணிக்கொள்கிறேன். என்னுடைய கற்பனையில் என்னை முழுதும்
ஏமாந்துபோனவனாக, கை விடப்பட்டவனாக எண்ணி எண்ணி மகிழ்ந்திருக்கிறேன். மஸோசிஸத்தின் ஆரம்ப
நிலை. அருகிலிருக்கும் மனிதர்கள் நம் மீது கருணையுடன் இருக்கவில்லையெனில், உலகின் மீதே
வெறுப்புக் கொள்கிறோம். செய்து என்ன ஆகப் போகிறது என்ற Nihilist மன அமைப்பிற்கு சென்றடைகிறோம்.
Nihilism நம்மை cushion நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கிறது. "எதையும் செய்ய
வேண்டாம். எதை செய்தும் ஒன்றும் உபயோகமில்லை" என்ற குரல்கள் உள்ள தோன்ற ஆரம்பித்துவிட்டால்
ஒருவன் அந்த இடத்திலிருந்து எழுந்து வர பல நாட்கள் ஆகின்றன. ஜெ. குறிப்பிடும் melancholic
idleness அநேகம் பேருக்கு பெரும்பாலும் சாபமாகவே அமைந்துவிடுகிறது. அதை கடக்க ஒவ்வொருவரும்
முயல்கிறோம். ஆனால், melancholic idlenessற்கு வலு அதிகம். பிடித்து கீழிழுக்கும் விசைக்கு
எதிராக நாம் எதிர்த்து நிற்க ஜெ.யின் சொற்கள் மூலம் வந்தடையும் விழிப்புணர்வு முக்கியம்
என கருதுகிறேன்.
நம்
வழிகள்
அடுத்த
கடிதம் / உரையாடல் நான் பல முறை யோசித்த ஒன்று. ஒரு நாளில் 15 மணி நேர உழைப்பு என்பதை
கொடுமையான சாபமாக காணும் என் போன்ற கணினி வேலையில் இருப்பவர்களுக்கு ஜெ.யின் வரிகள்
எங்களை மறு துருவத்திற்கு தூக்கி வீசுகிறது. Conviction என்ற சொல்லை ஆழமாக உணர்ந்து
செயல் பட ஆரம்பித்ததிலிருந்து 15 மணி நேர வேலை என்பதே நிறைவளிக்கக் கூடியதாக இருக்கிறது.
என் மனம் கடந்த சில வருடங்களாக அவ்வாறான நாட்களையே விரும்பி ஏற்றுக் கொள்கிறது. இப்படியான
நாட்களில் ஒரு மணி நேரம் ஒய்வு எடுத்தாலும் அசுரக்குரல்கள் மனதுள் நுழைந்து என் உழைப்பை,
ஈடுப்பாட்டை கேலி செய்வதை கண்டு அஞ்சியிருக்கிறேன். ஆனால், conviction உடன் செய்யப்படும்
செயல்களுக்கு அத்தகைய குரல்கள் பெரிதான முட்டுக்கட்டையாக அமைவதில்லை என்று நாட்கள்
செல்ல செல்லவே தெளிந்தது. மூன்று நாட்கள் தூக்கமின்றி தொடர்ந்து Data விலேயே மூழ்கி
கிடப்பது, அடுத்தடுத்து பல play களில் நடித்து களைத்துப் போவது, ஒரு நாள் முழுக்க எழுதிக்கொண்டே
இருப்பது, என எனக்கான பல அறிய நாட்கள் நடந்தேறின. 9 மணி நேர அலுவலக உழைப்புக்கு அப்பால்,
இன்னுமொரு 6 மணி நேரம் இலக்கியம் அல்லது நடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளில் சிறப்புற
செயல் பட எனக்குண்டான வழிகளை கண்டுகொண்டேன். காலையில் ஓட்டம் என்பது எனக்கு உளவியல்
மருத்துவர்கள் கொடுத்த கட்டளை. உளவியல் பிரச்சனையை சமாளிக்க ஓட்டம் ஆரம்பித்து, அதுவே
என் அத்தியாவசிய தேவையாகி விட்டது. ஒரு நாள் ஓடவில்லை என்றாலும் அந்நாளின் வேலைகள்
சரியாக நடக்காதது போல் உணர தொடங்கிவிட்டேன். தன்மீட்சி நூலில் பெரும்பாலான கேள்விகளுக்கு
ஜெ.யின் பதில் இவ்வகையான பொருளுடன் தொடங்குகிறது "திட்டவட்டமான பதில்கள் இல்லை.
பதில்கள் ஒருவரால் அவரது வாழ்க்கையை வைத்து சொல்லப்படுபவை மட்டுமே. அவை இன்னொருவருக்கு
சரியானதாக இருக்க வேண்டும் என்பதில்லை." அவரவருக்கு அவரவர் வழி. எனக்கு காலை ஓட்டம்
தியானம் போன்று. செயல்களை ஊக்கத்துடன் முனைந்து செயல்படுத்த காலை ஓட்டமே என்னை தயார்படுத்துகிறது.
தேர்வுசெய்யப்பட்ட சிலர்
Dominance Hierarchy பற்றி பல மாதங்களாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். உளவியலில் இக்கருத்தை பகுத்து ஆராய்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு மனிதன் மற்ற அனைவரை விடவும் மேலானவனாக இருக்க முடியுமா? எதை வைத்து முடிவு செய்ய வேண்டும்? அறிவிலா? பணத்திலா? புகழிலா? அதிகாரத்திலா? குரு நித்யாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற வரிகள், ஜெ.யின் மூலம் இக்கட்டுரை முழுக்க நிரம்பியிருக்கிறது. "மனிதர்கள் எல்லோரும் சமம் அல்ல. இயற்கையில் சமம் என்ற கருத்துக்கே இடமில்லை." ஒரே போடு. இவ்வரிகளை படிக்கும் போது யாரேனும் பதற்றம் கொள்ளாமல் இருப்பார்களா? சுற்றி இருக்கும் மனிதர்களின் பார்வையில் தான் எவ்வாறு காணப்படுகிறோம் என்ற சுய மதிப்பீடு அலசலில் ஈடுபடாதவர்கள் இவ்வரியை படித்தபின்னும் இருந்தால் அவர் இந்த சொற்தொடரை சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். இக்கடிதம் முழுக்கவே சற்று கடுமையான தொனியில் இருப்பது தெரியவருகிறது. கூறப்பட்டிருக்கும் கருத்தினால் அப்படி தோன்றுகிறதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். சுட்டெரிக்கும் உண்மைகளை தாங்கித் தானே ஆக வேண்டும்? Equality of opportunity vs Equality of Outcome காலம் காலமாக நடந்து வரும் விவாதம் தான். இக்கடிதத்திலும் அடுத்து வரும் சில கடிதங்களில் ஜெ.யின் கருத்து முழுக்க தலை சிறந்த மிகச் சிலரை பற்றி மட்டுமே பேசுகிறது.
"அத்வைதம்
கோடி ஜென்மஷூ". இந்த வேதாந்த வரி ஒன்றே போதும் என்று நினைக்கிறேன். அறிவாலும்,
நுண்ணுணர்வாலும், தனக்கு கிடைக்கப்பெற்ற வரத்தை எவ்வாறு மானுட குலத்திற்கு பயனுள்ளதாக
ஆக்குவது என்பதே இங்கு கேள்வி. அவ்வாறு இயற்கையிலேயே வரம் படைத்த ஒருவன்/ஒருவள் வெகு
சீக்கிரம் அதை கண்டுணர்ந்து முழு தீவிரத்துடன் செயலாற்ற வேண்டும். எந்தவொரு துறையிலும்
அவ்வாறான வரம் படைத்த சிலர் இருக்கவே செய்கிறார்கள். நான் என்னை மீண்டும் மீண்டும்
கேட்டுக் கொண்ட கேள்வி, எனக்களிக்கப்பட்ட வரம் என்ன? நான் எவ்வாறு மானுட குலத்திற்கு
திருப்பி அளிக்க முடியும்? நான் பங்குபெறும் துறைகள் அனைத்திலும் மாபெரும் சாதனை படைத்தவர்கள்
இருக்கிறார்கள். அவர்களை கடந்து நான் என்ன செய்து விட முடியும் என்ற கேள்விகள் எழுந்த
வண்ணம் இருந்தன. இதற்கு பதிலாக இந்நூலிலேயே, அடுத்தடுத்து வரும் கடிதங்களில் பதில்களும்
இருக்கிறது. பெரும் கலைஞைர்களும், அறிவியலாளர்களுமே ஒட்டு மொத்த பிரபஞ்சத்தை வரலாற்று
ரீதியில் காணும் போது வெறும் கொப்புளங்கள் போன்று மறைய கூடியவர்கள். நாம் மிக மிகச்
சிறிய கொப்புளங்களாக இருக்க வேண்டியது தான். ஆனால், நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரத்தை
வீணடிப்பது இயற்கைக்கு அளிக்கும் நுண் அவமதிப்பு என்ற வரிகள் மீண்டும் என்னை நிலை கொள்ளாமல்
இருக்கச் செய்தது.
செய்யும்
காரியத்தில் conviction ஏறுவதற்கு இவ்வரிகள் முக்கியமான காரணமாக அமைந்தது என்றே நினைக்கிறேன்.
என்னுடைய NGO சம்பந்தமான வேலைகள் மக்களை மறைமுகமாக நேர்மறையான விளைவுகளுடன் போய் சேரும்
என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. மேலும், நான் தனிப்பட்ட முறையில் எல்லா கலைகளையும் மனிதர்களுக்கு
ஒரு துணையென கருதத் துவங்கினேன். ஒரு சிறுகதையை எழுதினால் கூட அது எங்கோ யாருக்கோ ஒரு
துணையென இருக்கும் என்று நம்பினேன். என்னுடைய அலைக்கழிப்புகளை, மனத் தாங்கல்களை கலையின்
மூலம் எடுத்து வைப்பதன் மூலம் நான் இறந்த பின்னும் என் ஆக்கங்கள் அடுத்தவருடன் உரையாடிக்கொண்டிருக்கும்
என்ற நம்பிக்கையில் இன்னும் கலை செயல்களில் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றேன். மொத்தத்தில்
என் அறிவு, நுண்ணுணர்வு, அலைக்கழிப்புகள், தேடல்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி கொண்டிருப்பதே
நான் மானுட குலத்திற்கு செய்யும் பங்களிப்பாக நினைக்கிறேன். அப்படி எண்ணி என்னை நேர்மையாக
ஒவ்வொரு இடத்திலும் முன்னிறுத்தும் போதே நான் தன்னிறைவை அடைகிறேன். அதே சமயம், நான்
சென்றடைய வேண்டிய தூரத்தில் இன்னும் 1% சதவீதம் கூட கடக்கவில்லை என்றும் நானறிவேன்.
விதி
சமைப்பவர்கள்
அடுத்த
கடித்ததிற்கான பதில் சற்றே பெரியது ஆனால் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். என்னை
கேட்டால் இந்த ஒரு கட்டுரையை மட்டுமே தனியாக பிரதி எடுத்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக்
கல்லூரி நிறுவனங்களுக்கும் அளிக்கலாம் என்று கூறுவேன். அந்தளவு முக்கியமான ஒரு கருத்தை
இக்கட்டுரை வழங்கி இருப்பதாகவே கருதுகிறேன். சராசரிகள் அல்லது சாமானியர்கள் கலைஞர்களை
அறிவியலாளர்களை தத்துவவாதிகளை பெரும் நிறுவனத்தை எடுத்து நடத்துபவர்களை எப்படி நடத்த
வேண்டும் என்ற தெளிவு கல்லூரி காலங்களில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய ஒரு கருத்தாகவே
எனக்கு படுகிறது. இக்கட்டுரையை மிகத் தெளிவாக பகுக்கப்பட்டு எங்கு ஜெ. மற்ற சித்திதாந்தங்களிலிருந்து
வேறுபடுகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. முன்னரே கூறியது போல், செயலுக்குப்
பின் அமையும் காரணம் எவ்வித கோணலுமின்றி மேன்மையான அறத்தை நோக்கியே இருக்க வலியுறுத்தப்
படுவதாகவே நான் புரிந்து கொண்டேன். Ayn Rand, இடதுசாரி தத்துவம், மதம் ஆகியவை கூறும்
செயலுக்கு பின்னான நோக்கம் எனக்கு கொஞ்சம் கூட ஏற்புடையதாக இல்லை. அவ்வரிகளை பலரிடமிருந்து
தொடர்ந்து கேட்டுக் கொண்டும் இருக்கிறேன். அது ஏதோ ஒரு எதிர்மறையான ஒன்றை மையமாக வைத்து
செயல்படுவதாகவே எனக்குப் படுகிறது. அதிகாரத்தின் மீதான விழைவே நம் செயல்களுக்கு காரணமாக
அமையுமென்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை நோக்கியே நகர்கிறார்கள் என்றும்
கூறப்பட்டிருப்பதை சற்று கோபமுடன் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் ஜெ.யின்
கருத்து சற்று திருப்தி அளிப்பதாகவும் என் மனதிற்கு ஏற்ற ஒன்றை கேட்பது போலவும் உள்ளது.
சமூகத்தை, மானுடத்தை முன்னெடுத்து செல்பவர்கள் அந்த தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரே. அவர்கள்
பிறந்ததே தியாகங்களை செய்து மானுடத்துக்கு பெரிதான ஒன்றை வழங்கத்தான் என்பது போன்ற
கருத்துக்கள் நேர்மறையான விளைவை மனதினுள் உருவாக்கியது. நான் கண்ட மாபெரும் எழுத்தாளர்கள்,
சமூக ஆர்வலர்கள், பெரும் தொழில் முனைவோர்கள் அனைவரும் மானுட நலனுக்காக செயல் புரிவதையே
அவர்களின் மைய நோக்கமாக வைத்திருக்கிறார்கள். என்னை போன்ற கொந்தளித்துக் கொண்டே இருக்கும்
இளைஞனுக்கு அவ்வாறான நேர்மறை நெறிகளே தொடர்ந்து செயலூக்கத்துடன் முன்னேற வழிவகுக்கிறது.
நான் இலவசமாக மட்டுமே என்னுடைய அறிவை சமூகத்துக்கு தர விரும்புகிறேன். NGO மற்றும்
அரசு அதிகாரிகளுக்கு என் அறிவின் மூலம் மாபெரும் பலன் கிட்டுகிறது என்று கூற முடியாவிட்டாலும்
அவர்கள் தகவலறிந்து தீர்மானமான முடிவை எடுக்கும் வாய்ப்பை அமைத்துக்கொடுத்ததில் என்னுடைய
பங்களிப்பு இருக்கிறது என்பதை உணர்கிறேன்.
நான்கு
வேடங்கள்
இந்நூலில்
மிக முக்கியமான கட்டுரையாக நான் கருதுவது "நான்கு வேடங்கள்" தான். நிறைய
வாசகர்கள் இக்கட்டுரையை படித்து சில விஷயங்களில் தெளிவு பெற்றிருப்பர் என்று நம்புகிறேன்.
நான் முதன் முறை இணையத்தில் இக்கட்டுரையை வாசித்ததாக ஞாபகம். படித்தவுடன் கிடைத்த உத்வேகமும்
மனதில் இயல்பாக வந்தமைந்த அமைதியும் சொற்களில் வெளிப்படுத்த முடியாதவை. ஏன் இந்த கட்டுரை
இவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்று பல முறை என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
என் போன்றவர்களுக்கு, ஏதேனும் ஒன்றில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் அதையொட்டிய கனவுகளும்
மற்ற எதையும் செய்ய விடாமல் தடுத்து, முழுதான வாழ்க்கையை வாழ முடியாமல் தவிப்பது வழக்கமான
ஒன்று. இந்நூலில் இடம்பெற்ற அநேக கேள்விகள் இந்த பாணியிலேயே உள்ளது. வெறி கொண்டு வேலை
செய்யும் துறையில் சிறிய அவமானமோ, தோல்வியோ ஏற்பட்டுவிட்டால் நம் மனதினுள் உடனே நினைவுக்கூறப்படுவது
இந்த தீவிரத்தால் நாம் இழந்த மற்றனைத்தும் தான். "நான்கு வேடங்கள்" கட்டுரை,
ஒரு இளைஞனுக்கு அவனுடைய தந்தை அளிக்கக்கூடிய ஆகச் சிறந்த வாழ்க்கையின் எதார்த்தம் பற்றிய
அறிவுரையாக கருதுகிறேன். "தன்மீட்சி" என்ற மொத்த நூலுமே ஒரு சிறந்த தந்தை
தன் மகனுக்கு, அவன் வாழ்வில் கற்று முன்னேற வழங்கும் போதனைகள் போன்றதே.
நான்
முன்னெல்லாம் என்னை ஒரு Data Analyst என்று கூறிக்கொள்ள கூச்சப்படுவேன். என்னை யாரேனும்
எழுத்தாளன் என்று கூறினால் மகிழ்வுறுவேன். "Writer" என்ற label எனக்குப்
பிடித்திருந்தது. ஆனால், வருடங்கள் கடந்து தெளிவு பெற்றப் பின்னரே உணர்ந்து கொண்டேன்
நான் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் எண்களிலும், கணித சூத்திரங்களிலுமே மூழ்கி கொண்டிருக்கிறேன்
என. எழுத்தாளனாவதற்கு இன்னும் செய்ய வேண்டியவை மலை போல் உள்ள நிலையில், தற்போதெல்லாம்
சமூகத்திடம் என்னை என் தொழில் சார்ந்து மட்டுமே அறிமுக படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
இலக்கியம், நடிப்பு மற்றும் இதர விஷயங்களை வீடுபேறுவில் சேர்க்க வேண்டும் என்ற தெளிவு
இக்கட்டுரையை படித்தவுடன் கிடைத்தது. எந்நிலையிலும் எனக்கான பொருளை ஈட்டித்தரும் தொழிலை
விடலாகாது என்று உறுதி கொண்டேன். சமீபத்தில் முத்துலிங்கம் அவர்களின் கட்டுரை ஒன்றில்
அவர் ஒரு படத்தை பார்த்து விட்டு இவ்வாறு அவதானிக்கிறார். "படத்தில் வரும் நாயகன்
ஒரு தொழிலை மனதிற்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று செய்யவில்லை, காசு சேர்க்கவும்
செய்யவில்லை. திறமை இருப்பதால் செய்கிறான்" என்று. என்னை பொறுத்தவரையில் திறன்
நன்கு வெளிப்படும் துறையில் ஒருவர் பொருளை ஈட்டுவதை நல்ல யுக்தியாக நினைக்கிறேன். அவ்வாறு
ஈட்டிய பொருளை அறச்செயல்பாடுகளில் செலவழிக்கவே மனம் சமீப காலங்களில் விழைகிறது.
மோட்சத்திற்கு
மற்ற அனைத்து கலை மற்றும் சேவை சார்ந்த செயல்கள் இருக்கிறது. மோட்சம் அல்லது வீடுபேற்றிற்கான
தளத்தை பொருள் ஈட்டுவதற்காக மாற்றிக்கொள்ளும் போது தான் நான் ஒரு சூழலில் சிக்கிக்கொள்வதாக
கருதுகிறேன். நானும் சினிமா பித்துப் பிடித்து அலைந்து கொண்டிருந்தேன். ஆனால், உள்ளே
கொஞ்சம் கால் நுழைத்தவுடனேயே, சினிமாவில் பொருளீட்டும் நோக்குடன் தான் பலர் சமரசத்துடன்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். "சமநிலை" என்பது
நான்கும் (ஆறம், பொருள், இன்பம், வீடு) ஒரு மனிதனிடம் இருப்பது என்ற எளிய உண்மை எதார்த்தத்தில்
கடைப்பிடிக்கக் கூடிய மிகக் கடினமான ஒன்றாக படுகிறது. இந்நான்கில் ஒன்று இல்லையேல்
அனைத்தும் சறுக்கி விழும் அபாயம் பற்றியும் நன்கறிந்து கொண்டேன். எவ்வளவு சதவிகிதம்
இந்த நான்கும் என்னுள் இருக்கிறது என்று அலசிப் பார்த்ததில் நான் சற்று அதிர்ச்சியுற்றேன்.
ஆனால், குறைந்த சதவிகிதத்தில் உள்ள ஒன்றை உடனடியாக தேடி போகவும் மனம் ஒப்பவில்லை. முயன்று
கொண்டிருக்கிறேன் அச்சமநிலையை அடைய.
சராசரி
இக்கட்டுரையை
படித்தவுடன் எனக்கு சற்று நிம்மதி பெருமூச்சு கிடைத்தது என்று கூறலாம். "சொல்லப்போனால்
வென்று மேலே செல்ல வேண்டும் என்ற வெறி குறைவாக இருப்பதனால் சிந்திப்பவர்கள் விகிதாச்சாரம்
உயர் மட்டத்தில் சற்று குறைவாகவே உள்ளது". "இந்தியாவில் உயர்குடிகள் மிகச்சராசரியாகவே
இருக்கிறார்கள். சராசரியாக ஆகவே அனைவரும் முயல்கிறார்கள். அதை எந்த ஒரு நட்சத்திர ஓட்டலில்
காணலாம்." இவ்வரிகள் நான் பெங்களூரில் கண்ட சில காட்சிகளை நினைவிற்கு கொண்டு வந்தது.
எங்கு திரும்பினாலும் பிரபல பாடகர்கள் பெயரையோ, stand up comedians பற்றியோ, Bollywood
நட்சத்திரங்களை பற்றியோ அரட்டை அடிக்கும் எளிய மனங்களை நிறைய கண்டிருக்கிறேன். நான்
மதிக்கும் சில கலைஞர்கள் இந்த சராசரிகளின் கூட்டத்திற்கு மத்தியில் இருக்கவே முடியாமல்
நெளிந்து நெளிந்து சிறிது நேரத்தில் தப்பி ஓடுவதையும் கண்டிருக்கிறேன். வண்ணங்கள் மின்னும்
விளக்கொளியில் மதுவும் சிகரெட்டும் கையில் ஏந்தப்பட்டிருக்க இவர்களின் அரற்றல்களையும்,
பொருளில்லா வெட்டி அரட்டைகளையும் இப்போது எண்ணினாலும் நான் நொந்து போகிறேன். நிறைய
நேரங்களை இவ்வாறான சூழலில் கழிக்க நான் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறேன். நான் அவ்வப்போது
என் சொந்த ஊருக்கு செல்லும் போது, அங்கு வாழும் மனிதர்களை எளிய மனங்கள் என்றெண்ணியுள்ளேன்.
ஆனால், பெரு நகரத்தில் இருப்பவர்களுக்கும், மிகவும் சிறிய ஊரில் வாழ்பவர்களுக்கும்
சிந்தனையில் மாபெரும் வித்தியாசம் ஒன்றுமில்லை என்றே உணர்ந்து கொண்டேன்.
முட்டி
மோத வாய்க்கப்பட்டவர்கள் மிகப்பெரிய அளவில் சாதிக்கிறார்கள் என்ற பேருண்மையை தெரிந்து
கொண்டேன். பிறப்பால் நான் so -called உயர் சாதியை சேர்ந்தவனாக இருந்தும், வாய்ப்புகள்
மற்றும் exposure ஆகியவற்றின் குறைபாடுகளால் பல வருடங்கள் மேலேற முடியாமல் தவித்திருக்கிறேன்.
ஆனால், தற்போது எங்கும் முன்னேறி செல்லக் கூடிய தைரியம் எனக்குள்ளது என்றே கருதுகிறேன்.
சவால்கள், சுற்றியுள்ள சமூகத்தின் perception மூலம் வந்திருந்தாலும் அது தேவையாகவே
இருந்தது. இக்கடிதத்தில் ஜெ.யின் சொற்கள் நிச்சயம் என்னை உந்தி தள்ளியிருக்கிறது என்றே
நம்புகிறேன். தாழ்வுணர்ச்சியை ஜெ. கடுமையாக சாடுகிறார். சாதியினாலோ, வர்க்க அடிப்படையினாலோ
தாழ்வுணர்ச்சியை அடைந்த அனைவருக்கும் இக்கட்டுரையை நான் நிச்சயம் பரிந்துரை செய்வேன்.
தன்னிரக்கம் இன்றி, ஒரு விஷயத்தை Objective ஆக காண இந்த கட்டுரையிலிருந்து கிடைத்த
உள்ளொளி எனக்கு முக்கியமானது.
ஒரு
மரம் மூன்று உயிர்கள்
Compare
yourself to who you were yesterday not to someone else today என்ற வாக்கியம் என்னை
ஒரு காலத்தில் ஈர்த்தது. இக்கடிதத்தில், அதற்கு நெருக்கமான ஒரு கருத்தை வாசித்தேன்.
"ஒரு பறக்கும் உயிர் தன் இயல்பு பறப்பதே என உணராமல் ஊருயிரின் மதிப்பைத் தேட விழைந்து
ஊர்ந்து செல்ல ஆரம்பித்தால் அது ஊருயிர்களாலேயே கேலிக்குரியதாக பார்க்கப்படும். ஏனென்றால்
அது திறமையற்ற ஊருயிராகவே இருக்க முடியும். தன இயல்பு எதுவோ அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்து
கொள்ளுதலே தன்னறம்" என்ற வரி மீண்டும் எனக்கு பின்மண்டையில் விழுந்த அடி. என்னை
போன்று சிறு நகரங்களிலேயே வாழ்ந்து பழகிய மனிதனுக்கு பெங்களூர் போன்ற பெருநகரங்களில்
காலடி எடுத்து வைத்ததுமே ஏற்படும் தாழ்வுணர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது. அதிலும்
ஆரம்ப கால கட்டங்களில், bar, pub போன்ற இடங்களுக்கு செல்லுதல், 'அதற்கு மேல் சிறிதாக
இருக்க முடியாத ஜீன்ஸ்' கால்சட்டையை அணிந்த பெண்களிடம் பேசுதல், ஆங்கிலத்தில் தொடர்ந்து
10 நிமிடத்திற்கு மேல் உரையாடுதல் போன்ற அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அந்நியமாகவே இருந்தது.
என்னை அவர்களில் ஒருவனாக எண்ணவே முடியவில்லை. தன்னிரக்கமும், தேவையற்ற ஒப்பீடுகளும்
என்னை நிம்மதியற்ற மனநிலைக்கு தள்ளியது. பெங்களூரு ஆங்கில நாடக குழுவில் இது இன்னும்
வெளிப்படையாக நடைபெறும். "உனக்கு fluentஆ English வரலைனா, தமிழ்ல நாடகம் எழுது"
என்று என் மீது கருணை கொண்டு ஓரிருவர் கூறி இருக்கின்றனர். அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன்
மட்டுமே கூறினர். சில விஷயங்கள் இப்படி தான். வேறுபாடும், பாகுபாடும் சகஜம். நமக்கென்று
இயல்பாக வரும் ஒன்றை நோக்கி செல்வதே சிறந்தது என்று பட்டு அனுபவித்துத் தெரிந்து கொண்டேன்.
இக்கட்டுரையில் ஜெ.யின் பதிலையும் என் அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொண்டேன்.
இருந்தும், இன்றும் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் நான் எங்கேயோ பறக்க முனைந்து கொண்டிருக்கிறேன்.
எதனால் என்று மட்டும் விளங்கவில்லை.
இதர
கடிதங்கள்
இந்நூலில்
உள்ள பிற அனைத்து கட்டுரைகளையும் நான் வெவ்வேறு வகையில் முன்னரே பேசப்பட்டுள்ள பாடுபொருள்களை
ஒட்டியே அமைந்திருப்பதாக கருதுகிறேன். ஜெ. தன்னுடைய நாளை எப்படியெல்லாம் அமைத்துக்
கொள்வேன் என ஒரு கடிதத்தில் கூறுகிறார். காலை என்பது மிக முக்கியமான ஒன்றாக கூறுகிறார்.
ராக்கோழியாக இருந்த நான் முழுக்க முழுக்க காலை மனிதனாக மாறியதும் மிகத் தாமதமாக தான்.
ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான நேரத்தை கண்டு பிடித்து செயலாற்றத் தொடங்கினால் ஒவ்வொரு
நாளும் நிறைவுடன் முடியும் என்பது என் எளிய கண்டுபுடிப்பு. தூங்கி எழுந்தவுடன் இருக்கும்
மன நிலை எனக்கு மிக முக்கியமானவையாக படுகிறது. ஜெ. கூறுவதும் அதுவே. இதே கருத்தை நான்
பல கலைஞர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு மூன்று முறை தூங்கி எழ முடிந்தால்
எனக்கு மூன்று காலைகள் ஒரே தினத்தில் கிடைக்கும் என்ற நப்பாசையும் உண்டு. ஆனால், என்
உடலும் மூளையும் அதற்கு சம்மதிக்க மறுக்கிறது.
இறுதியாக, இந்நூலில் கூறப்பட்டிருக்கும் பல கருத்துக்கள், கண்டடைதல்கள் அனைத்தும் நாம் எங்கெங்கோ, எவரிடமோ வெவ்வேறு காலக்கட்டத்தில் கேட்டது போன்றவே தோன்ற வாய்ப்புள்ளது. ஆனால், ஒரே நூலில் இவ்வாறாக தொகுத்து வாசிப்பது பேரனுபவமாக இருந்தது.
பிரசன்ன கிருஷ்ணன் |
No comments:
Post a Comment