மரபார்ந்த பண்பாட்டு ஆய்வுகளுக்கு வெளியே, குறிப்பாக மார்க்சியச் சட்டகத்திலிருந்து வெளியேறி நின்று சில
பண்பாடுகளின் ஆதிக்க நிலைக்குப் பின் இயங்கும், அதுவரை நாம் கருத்தில் கொள்ளாத
இயற்கைச் சூழல்களின் பின்புலத்தை அந்த நூலில் தர்க்கபூர்வமாக முன்வைத்திருந்தார்
ஜாரட். பண்பாட்டு ஆதிக்கத்துக்கு 'நல் விதி' என்பதன்
செயல்பாட்டையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று தரவுகளுடன் நிறுவிய ஜாரட், சர்ச்சைகளுக்குள் சிக்குவது நியாயமே.
அவரை தொடர்ந்து அவரது நோக்கைக் கொண்டு, ஜனநாயகத்தின் அஸ்திவாரக் கற்களில் ஒன்றான அச்சுக்கலை
ஜெர்மனியில் ஏன் தோன்றியது? அக்கலைக்கு அணுக்கமாக பிற மொழிகள் அன்றி லத்தீன் முதல் ஆங்கிலம் வரையிலான
ஐரோப்பிய மொழிகள் ஏன் அமைந்தது? என்ற வினாக்களை எழுப்பி, அதைப் பின்தொடர்ந்தால், எல்லா ஆய்வு முறைகளும் கடந்து 'நல் விதி' எனும் முடிவுக்கே நாமும் வந்துசேர்வோம்.
உலகின் பண்டைய நாகரிகங்கள் எகிப்து முதல் ரோம் வரை அதன் மேன்மைக்குக் காரணமாக
அமைந்த அலகுகளில் முக்கியமானது எழுத்தும் காகிதமும். அறிவுத்துறையை 'பதிவு' செய்து, கல்வியாக அடுத்த தலைமுறைக்கு அதை கையளிக்க வாய்ப்பு கொண்ட நாகரிகங்களாக
இவை விளங்கின. எகிப்து முதல் ரோம் வரை அந்த நாகரிகங்களின் சரிவுக்கு முக்கியக்
காரணிகளில், அன்றைய காகிதமான பாப்பிரஸ் முற்றிலும் அருகிப்போன
நிலையும் ஒன்று. அடுத்து வந்த எட்டாம் நூற்றாண்டு வரை சீனா உலக நாகரிகத்தின்
மேன்மை நிலையை தன்னகத்தே கொண்டிருக்க, முக்கியக் காரணிகளில் ஒன்று, காகிதமும் மசியும் தயாரிக்கும் நுட்பத்தை
அது அறிந்திருந்தும். எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அரபு நாடு ஒன்றுடனான
துறைமுகப் போரில் சீனா தோற்க, துறைமுகத்தில் இருந்த காகித ஆலை அரபு தேசம் வசம் சிக்க, நூற்றாண்டுகள் என சீன அரசு காத்த காகிதம் மற்றும்
மசி உருவாக்கும் ரகசியம் அரபு நாடுகள் கைக்கு மாற, அரபுப் பண்பாட்டின் பொற்காலம் (எட்டாம் நூற்றாண்டு
முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை) என்று வழங்கப்படும் காலம் உருவாகி, ஜெர்மனியின் கூடன்பர்க் வரும்வரை அது
நீடித்தது.
பண்டைய சித்திர எழுத்துக்கள் லிபி என பரிணாம மாற்றம் கண்டது எகிப்தில்தான். எளிதாக
சொல்வதானால் வீடு என்று எழுத வீடு படத்தை வரைவது சித்திர எழுத்து எனில், வீடு படத்தை இரண்டு பாதியாகப் பிரித்து
முதல் பாதியை வீ எனும் ஒலிக்கு லிபியாகவும், இரண்டாம் பாதியை டு எனும் ஒலிக்கு லிபியாகவும்
பயன்படுத்தி லிபி எழுத்துமுறை பிறந்தது எனலாம். இங்கே துவங்கி சீனா, ஜப்பான்,
பண்டைய ஹரப்பா என சித்திர எழுத்துகளின் கிளையும், அரபி, லத்தீன் என லிபி எழுத்துகளின் கிளையும்
பரிணமித்து வளர்ந்தன.
மத்திய காலத்தில் ஐரோப்பிய மொழிகளின் லிபிகள் தோல் பரப்பில் எழுதும் வகைமைக்கு
மெல்ல மெல்ல தகவமைத்து, கைகளால்
பல மணிநேரம் தொடர்ந்து எழுத, எளிமையும்
சரளமும் கொண்ட ஒன்றாக மாறின. இந்தச் சூழலில் கூடன்பர்க் கண்டுபிடித்த அச்சு
முறைக்கு மாட்ரிக்ஸ் உருவாக்க, அன்றைய உலகின் எந்த மொழியின் லிபியை விடவும் லத்தீன் லிபி 100 சதவீதம் கச்சிதமாகப் பொருந்தியது. கூடன்பர்க்
கண்டுபிடித்து 200 வருடம்
கழித்தே முதல் அரபி மொழி அச்சுக்கூடம் அமைந்தது எனும் நிலையைக் கொண்டே இந்தச்
சிக்கலின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளலாம். எனில் சீன, ஜப்பானிய மொழிகள் குறித்து
சொல்லவே தேவை இல்லை. இந்த நிலையால் அல்லது நல்விதியால் வெறும் அரை நூற்றாண்டில்
ஐரோப்பா மத்திய காலத்தை உதறி மறுமலர்ச்சி காலத்துக்குள் நுழைந்தது. தன்னியல்பான
தொடர் விளைவுகள் வழியே பண்பாட்டு முதன்மையை எய்தியது.
நவீன துருக்கியின் தந்தை என்று வரலாறு விளிக்கும் முஸ்தபா கமால், 1928 இல் அரபி மொழியை ஆங்கில லிபி கொண்டு
எழுதும் சட்டம் கொண்டுவருகிறார். 1929 இல் தேசத்தோடு இணைத்த எல்லை நாடுகளில் அந்நாட்டு மொழியை ஆங்கில லிபி கொண்டு
எழுதும் சட்டத்தை லெனின் கொண்டுவருகிறார். மாவோ நவீன சீனாவை உருவாக்கும் முதல்
படியாக இந்த மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்.
இந்த மாற்றம் நிகழ்ந்த எல்லா இடத்திலும் இந்த முறை அறிவியல்பூர்வமாக வெற்றியடையவும்
கலாச்சார எதிர்ப்பால் அது கைவிடப்படவும் நேர்ந்திருக்கிறது. துருக்கியில் குரானின்
மொழியான அரபியை ஒழிக்க சதி எனும் எதிர்ப்புக் குரல் வழியே இது கைவிடப்பட்டது. மாவோவின்
சீனாவிலும் இதே நிலை. லெனின் கொண்டுவந்த சீர்திருத்தத்தை ஸ்டாலின் கைவிட்டார். ஆனால்
இதன் வசதியை அறிந்த நாடுகள் இந்த முறையைக் கைவிடவில்லை. உதாரணமாக லெனின் கொண்டுவந்த
சீர்திருத்தத்தை ஸ்டாலின் கைவிட்டாலும், ரஷ்யா உடைந்த பிறகு உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் ஆங்கில லிபியில் தமது மொழியை
எழுதும் நிலைக்குத் திரும்பின. மாவோ முயன்று தோற்ற மாற்றம் இன்றைய சீனாவில் எவரும்
சொல்லாமலேயே நிகழ்ந்துவிட்டது. இன்றைய மேலாதிக்க சீனாவின் தகவல் தொழில்நுட்ப அறிவு
மொத்தமும், மொபைல் முதல் உயிர்
ரசாயன அறிவியல் வரை தவிர்க்க இயலா வகையில், மாற்று இல்லா நிலையில் ஆங்கில லிபியின்
துணையுடன்தான் நடக்கிறது.
இந்த அறிவியல்பூர்வமான, கற்க
வசதியான, உலக அளவிலான
பண்பாட்டுச் செயல்பாட்டு உண்மையைச் சொல்லி சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ்
நிலத்தில் விவாத முகத்தைத் துவங்க, அது வெகுமக்கள் தளத்தில் சர்ச்சையாகப் பரவியது. இன்று தமிழ் நிலத்தில் தமிழை
மட்டுமே பயிற்றுமொழியாகக் கொண்டு, உயர்வகுப்பில் அறிவியலோ, தொழில்நுட்பமோ,
விவசாயமோ, மருத்துவமோ எதையுமே ஒருவன் கற்க இயலாது என்பதே உண்மை
நிலை. இன்றைய உலகமயச் சூழலை எதிர்கொள்ள, வென்று மேலெழுந்து வரக் கற்பிக்கும் எதுவும் தமிழில் இல்லை என்பதே யதார்த்தம்.
லௌகீக நிலையில் முற்றிலும் பயன் இழந்து நிற்கும் ஒரு மொழியை 12 வருடம் ஒருவன் இலக்கண சுத்தமாகக் கற்றுத்
தேறுவதற்கு அளிக்கும் ப்ரயத்தனம் என்பது எத்தகு வீண் உழைப்பு. இந்தச் சிரமத்தைக்
குறைக்கும் வழியைக் கண்டடைவதைத்தானே எந்த அறிவார்ந்த சமூகமும் செய்யும். அப்படி
சிரமம் குறைக்க சிறந்த வழி என்பது, ஆங்கில லிபி கொண்டே பொதுத்தமிழையும் பயிற்றுவிப்பது. முதல் வசதி, ஆங்கிலம்,
தமிழ் என்ற இரண்டு லிபிகளை மனப்பாடம் செய்யும் சிரமம் குறையும். இரண்டாவது வசதி,
ஆங்கில இலக்கணத்தில் உள்ள abcd எனும் ஏறுமுக அரிச்சுவடி வரிசை வழியே, அ, ஆ, இ, ஈ எனக் குறிலும் நெடிலுமாக அடுத்தடுத்து வரும் தமிழ் அரிச்சுவடி
அடிப்படையில் அமைந்த தமிழ் சொற்றொடர்களை மிக எளிதாகக் கற்க இயலும்.
உண்மையில் இவை எல்லாம் ஏற்கெனவே பொதுவில் இவ்வாறே புழக்கத்தில் புழங்கிக்கொண்டிருப்பவைதான்.
யூ-ட்யூப் இல் எந்த மொழியில் பாடலைத் தேடவும் இந்தியா முழுக்க ஆங்கில லிபியே பொது
மொழியாக இருக்கிறது. பாடல் ஹிந்தியோ, தமிழோ, ஒரியாவோ, அதன் சுட்டி ஆங்கில லிபியில் இருக்கும். லிபி
ஆங்கிலம் - மொழி ஒரியா, லிபி
ஆங்கிலம் - மொழி ஹிந்தி இப்படி. இந்த நிலையை கற்பித்தலுக்கும் கொண்டுவந்தால்
கற்றல் எளிதாகும். லிபி என்பது புறவயமான ஒன்று. தொடர்புறுத்துவதே அதன் பணி. அதில்
புனிதம் என்றோ மாற்றப்படக்கூடாதது என்றோ எதுவும் இல்லை. 1000 வருடத்துக்கு முந்தைய தமிழை வாசிக்க தனி கல்வி
அவசியம். 100 வருடம் முந்திய
தமிழுக்கும் அதுவே நிலை. தமிழின் தனித்துவம் என்று பெருமிதமாகச் சுட்டினாலும் ழ,
ஜ, ஃ இவற்றை எல்லாம் நாம் ஓலையில் எழுத்தாணி கொண்டு
எழுதிய காலத்தில் பயன்படுத்தியதில்லை. இத்தனை மாற்றங்கள் வழியேதான் நாம் இன்றைய
தமிழில் வந்து நிற்கிறோம். நாளை தமிழ் வாழவேண்டும் எனில் இந்த மாற்றம் தேவை என்று
ஆங்கில லிபியைத் தொட்டுத் தொட்டு தூய தமிழில் 25000 பக்கத்தில் நாவல் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு
வெகுமக்கள் தளத்திலிருந்து வந்த விமர்சனங்களில் முக்கியமானது ‘ஜெயமோகன் தமிழை
அழிக்கப் பார்க்கிறார்’ என்பது.
தமிழ் நிலத்தில் ராமலிங்க வள்ளலார் சைவத்தை அழிக்க வந்தவர் என்று குற்றம்
சாட்டப்பட்டார். ஓலைச்சுவடியிலிருந்து காகிதத்துக்கு என தமிழ் நகரத் துவங்கிய காலகட்டத்தின்
ஆளுமை வள்ளலார். இரண்டிலும் எழுதும் வல்லமை கொண்டவர். நவீனத் தமிழ் உரைநடையின்
உருவாக்கத்தில் முன்னோடிகளில் ஒருவர். பணி செய்த காலம் முழுதும் சர்ச்சைகளில்
சிக்கி உழன்றவர். அருட்பா × மருட்பா
விவாதத் தொகுப்பு நூல் வள்ளலார் காலத்தில் அவரது பணி என்னவாக எதிர்கொள்ளப்பட்டது
என்பதன் ஆவணம்.
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி சுப்ரமணிய பாரதி, சோதி மிக்க தனது நவ கவிதை வழியே அன்றைய மரபுசார்
இலக்கியத்தில் நிகழ்த்திய உடைப்பு, தனது பத்திரிகைச் செயல்பாடுகள், கருத்துகள் வழியே அன்றைய அரசுக்கு அளித்த
தொந்திரவு, தனது இயல்பு வழியே
தான் சார்ந்த சமூகத்துக்குக் கொண்டுவந்த சிக்கல்கள், தனது நடத்தை வழியே அவர் தனது உறவுகளுக்குக் கொண்டுசேர்த்த
துயரங்கள் என அன்று முதல் இன்று வரை பாரதியின் ஒட்டுமொத்த வாழ்வும் பணியும்
மாபெரும் விவாதக் களம்தான்.
தொடர்ந்து வந்த இலக்கியக் கர்த்தாக்கள் புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி
வரை பலர் இலக்கியத்திலும் பொதுச் சமூகத்திலும் தங்கள் பணிக்காலம் நெடுக
விவாதங்களின் மையமாக, சர்ச்சைகளின் நாயகனாகவே திகழ்ந்திருக்கிறார்கள். ஜெயகாந்தனோ
அதுகாரும் வாழ்ந்த இலக்கியவாதிகளைக் காட்டிலும் வீறுகொண்ட தனது அறிவாற்றலாலும்
கருத்து மேன்மையாலும் சிம்ம கர்ஜனை போலும் தமிழ்ச் சமூகத்துடன் உரையாடினார். ஒரு
காலகட்டத்தையே தனது புனைவுகளாலும் கருத்துகளாலும் பாதித்தார். இப்படித் தமிழை
அழிக்க வந்த ஆன்றோர்கள் நிரையில் ஒருவரான ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கிய
முதல் விவாதம் அதுவரையிலான தமிழ் நாவல்களின் 'போதாமை' சார்ந்தது. நவீனத்துவம் அதன் உச்சத்தில் திகழ, பின்நவீனத்துவம் அதை மறுத்து எழுந்து பரபரப்பாக
புதிய திசைவழிகளைத் தேடிக்கொண்டிருந்த சூழல் அது.
தமிழில் தீவிரத் தளத்தில் நாவல் கலைக்கு வங்கத்தில், கன்னடத்தில், மலையாளத்தில்
உள்ளது போல ஆழமும் விரிவும் கொண்ட யதார்த்தவாதப் பெருநாவல் மரபு தொடக்கம் என ஒன்றில்லை.
நேரடியாக கேளிக்கை எழுத்து. கல்கி, சாண்டில்யனில் துவங்குகிறது அது. அந்த கேளிக்கை
எழுத்தின் எதிர்நிலையாக அன்றைய காலத்தில் மனநிலையாக உருவாகி வந்த நவீனதுவத்தின்
வாழ்வு குறித்த விசாரணையின் எல்லைகளோ மிகக் குறுகியது. அந்தக் குறுகலே தமிழில்
நவீனத்துவ நாவல் என வடிவம் கொண்டது. மரபு மீதான அக்கறை இன்மை, தன்மைய நோக்கு என தொழிற்பட்ட
நவீனதுவத்துக்கு அடுத்து என வந்த பின்நவீனத்துவமோ முற்றிலும் தமிழ் நிலத்துக்கோ
மனதுக்கோ வாழ்க்கைக்கோ சம்பந்தம் இல்லாத உள்ளடக்கத்தை வடிவ விளையாட்டுகளை, மேலைத் தேசம் அளித்த வகையில் அது அவ்வாறே
இருக்க, இங்கே இயற்றிப் பார்த்தது. இந்த நிலைகளுக்கு நேரெதிர் நிலைப்பாட்டுடன்
ஜெயமோகன் உருவாக்கிய விவாதமே நாவலின் வடிவம், உத்தி மீதானது. வழக்கம் போல அந்த
விவாதம் ‘தமிழில் நாவல்களே இல்லை’ என்று ஜெயமோகன் சொல்லிவிட்டார் என்ற கூற்று வரை
சென்று திரிபடைய, ஜெயமோகன்
தனது நிலைப்பாடுகளை விளக்கி, நாவல் என்றொரு கோட்பாட்டு நூலை எழுதினார். இன்றளவும்
இலக்கிய வாசிப்பு மற்றும் எழுத்துப் பயிற்சிக்குத் துணை நிற்கும் அந்த நூல்,
அடுத்து வந்த காலங்களில் தமிழ்
நாவல்களின் வடிவ, உள்ளடக்க போதத்தையே மாற்றி அமைத்தது. நவீனத்துவம் பின்வாங்கி,
பின்நவீனத்துவம் காலாவதியாகி இன்றைய
காலத்தின் நாவல்களாக எழுந்துவந்த காவல் கோட்டம், கொற்கை, ஆதிரை போன்ற பெருநாவல்கள் அனைத்திற்கும் ஜெயமோகன் ‘நாவல் கோட்பாடு’ நூலுக்குப்
பின்னால் எழுதிய ‘விஷ்ணுபுரம்’ நாவலும் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலும்
முன்னோடியாக அமைந்தன. இந்தியப் பண்பாட்டையே மீளுருவாக்கம் செய்த 25000 பக்கங்களில் அமைந்த ‘வெண்முரசு’ நாவல் வரை
எழுதி ஜெயமோகன் தான் ‘நாவல் கோட்பாடு’ நூலில் சொன்னவற்றை புனைவில் எழுதியும்
நிறுவினார்.
இன்று எவராலும் நினைவுகூரப்படாத ஒருவரின் புத்தக வெளியீட்டுக்கு அன்று தலைமை
தாங்கியவர், முன்னாள் முதல்வர்,
முத்தமிழ் வித்தகர், தமிழினத் தலைவர் டாக்டர். கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்கள்.
மேடையில் இருந்த நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் அத்தனை பேரும் மு.க. அவர்களை
தகுதிக்கும் மேலே புகழ்ந்து தள்ளினர். மாம்பழக் கவிராயரை கம்பன் இடத்தில் வைத்தால்
எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அது. பாராட்டுப் பெறுபவர், பாராட்டு அளிப்போர்
இருதரப்புமே தன்னிலை உணரும் வண்ணம் அந்தச் சூழலின் சரிவுக்கு நேர் எதிர்நிலையில்
நின்று ஜெயமோகன் தனது கருத்தை வலுவாக முன்வைத்தார். முரசொலியின் தலையங்கம் வழியே
மு.க. அவர்களால் வசையப்பெற்ற ஒரே எழுத்தாளர் ஜெயமோகன் மட்டுமே. இப்படி அன்று
துவங்கி ஜெயமோகனை கருத்தியல், அழகியல் ரீதியாக எதிர்த்து வசைபாடும் சில நூல்கள்,
ஆதாரம் அற்ற உண்மையைச் சொன்னமைக்காக
அவர் சுமக்கும் வழக்குகள், சக
எழுத்தாளர்களின் கண்டன அறிக்கைகள் என தமிழ் இலக்கியத்தின் பல 'முதன்முறை'களுக்குச் சொந்தக்காரராக இன்றுவரை திகழ்ந்துவருகிறார்
ஜெயமோகன்.
ஜெயமோகன் தமிழ் நிலத்துடன் உரையாட எந்தப் பத்திரிக்கையின் துணையும் தேவைப்படாத
தனக்கே தனக்கான தளத்தைக் கண்டுகொண்டதும், ஒரு சர்சைக்குப் பிறகே. தமிழக அளவில் புகழ்பெற்ற அந்த சர்ச்சையை ‘எம்ஜியார்
சிவாஜியை இழிவுபடுத்துகிறாரா ஜெயமோகன்?’ எனும் தலைப்பில் இல்லம்தோறும் கொண்டு சேர்த்தது
விகடன். ஒருமுறை தீவிர இலக்கியவாதிகள் வரிசையில் கேளிக்கை எழுத்தாளர் ஒருவரை இணைத்து
பட்டியலிட்டிருந்தது விகடன். கம்பரையும் மாம்பழக் கவிராயரையும் ஒரே தரத்தில்
வைப்பதைப்போல. வழக்கம் போல இந்த மதிப்பீட்டுச் சரிவுக்கு எதிராக ஜெயமோகன் தனது
கருத்தைப் பதிவு செய்ய, தீவிர
இலக்கியத்தில் மட்டுமே பொருள் கொள்ளக்கூடிய, சராசரித் தளத்தில் நேர் மாறாக பொருள்
தரக்கூடிய ஜெயமோகன் எழுதிய பகடிக் கட்டுரை இரண்டை பொதுத்தளத்தில் கொண்டு சேர்த்து,
பொது ரசனை கொண்ட மொத்த தமிழ்நாட்டு
சராசரி மனங்களையும் ஜெயமோகனை எதிர்த்துத் திருப்பிவிட்டது விகடன். எக்காலமும்
அப்படிச் செய்தமைக்காக எண்ணி எண்ணி நாணவேண்டிய செயல் ஒன்றைச் செய்தது விகடன். தமிழ்
நிலத்தில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் ‘ஜெயமோகன் அப்டி என்ன ஒரு
ஆளு’ என்று தேடத் துவங்க, ஜெயமோகனின்
இணையதளம் ஒரே வாரத்தில் தமிழ் அறிந்தோர் வசமெல்லாம் சென்று அறிமுகம் கண்டது. இதையே
தனக்கான வாய்ப்பாக மாற்றிக்கொண்டார் ஜெயமோகன். தனது கருத்துகளைத் தொடர்ந்து தன் இணையதளத்தில்
எழுதினார். பாரதி மகாகவியா என்பது தொட்டு இந்துமதம், இந்திய, தமிழ்ப் பண்பாடு, திராவிடம், பெண்ணியம், குடும்ப
அமைப்பு, பொதுக்கல்வி, இலக்கியம், தத்துவம் அரசியல் இசை ரசனைப்
பட்டியல், விருதுகள், பொதுமக்கள் உளவியல் எனப் பல தளங்களில் பலநூறு விவாதங்கள்
வழியே தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க இயலா கருத்தியல் மையம் என்றானார் ஜெயமோகன்.
இன்றைய சூழலில் அவரது தளம் வழியே காந்தியம் குறித்த விவாதங்களைத் துவங்கியது
அவரது கருத்தியல் செயல்பாடுகளில் மிக முக்கியமான ஒன்று. தளத்தில் வந்த காந்தி
மீதான விவாதங்கள் தொகுக்கப்பட்டு ‘இன்றைய காந்தி’ எனும் நூலாக வெளியானது.
இன்றளவும் தாக்கம் விளைவித்துக்கொண்டிருக்கும் நூல் அது. அந்த நூலை அடியொற்றி ஆ. இரா.
வேங்கடாசலபதி எழுதிய ‘காந்தியும் வ.உ.சி.யும்’ போன்ற நூல்கள் இன்றளவும் வந்தவண்ணம்
உள்ளன. ஜெயமோகனின் வாசகர் அருண் மதுரா எழுதிய ‘இன்றைய காந்திகள்’ நூல் இந்த
விவாதங்களின் நீட்சியே. அனைத்துக்கும் மேல் அன்று எம்ஜியார், சிவாஜி சர்ச்சை வழியே
ஜெயமோகன் தளத்துக்குள் வந்த வாசகர் சுனில் கிருஷ்ணன் இன்று யுவ புரஸ்கார் விருது
பெற்ற எழுத்தாளர். இன்றைய மனம் ஒன்றின் காந்தியத்துக்கான சர்வ கேள்விகளையும்
எதிர்கொள்ளும் காந்தி டுடே (http://gandhitodaytamil.com) தளத்தின் ஆசிரியர்களில் ஒருவர். தமிழில் காந்திய உரையாடல்களுக்கான
காத்திரமான தளம் காந்தி டுடே.
முக்கிய விவாதங்களின் வரிசையில் மலேசியா இலக்கியம் குறித்து ஜெயமோகன்
உருவாக்கிய விவாதம் மற்றொன்று. இன்று இலக்கியம் எனும் பெயரில் அங்கே வெட்டுக்கூத்து
நிகழ்த்தும் ஆசாமிகளுக்கு அதிர்ச்சி அளித்தவை ஜெயமோகனின் கருத்துகள். அந்நிலத்தின் சி. முத்துசாமி எனும் முன்னோடி எழுத்தாளரை கெளரவித்தது,
தொடர்ந்து இன்றைய இளம் எழுத்தாளரான ம. நவீன் அவர்களின் செயல்பாடுகளுக்குத் துணை
நிற்பது வரை இன்றைய மலேசிய இலக்கியத்தின் போக்குகளை வடிவமைத்ததில் ஜெயமோகன்
அவர்களின் கருத்துகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதைப்போலவே ஈழ இலக்கியம்
குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். ஈழத்து முன்னோடிகள் குறித்த
விமர்சன நூல், அ முத்துலிங்கம்
அவர்களின் இடத்தை விவாதித்து நிறுவியமை என ஜெயமோகனின் இலக்கிய, கருத்தியல்
செயல்பாடுகள் ஈழப் பரப்பிலும் பெரிய தாக்கம் செலுத்தி, ஜெயமோகன் அவர்களால் ஊக்கம் பெற்ற அனோஜன்
பாலகிருஷ்ணன் போன்ற இளம் எழுத்தாளர்கள் வரை தொடர்கிறது. சிகரமாக, ஜெயமோகன் பேட்டி
ஒன்றில் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று சொன்ன கருத்தில் தமிழகம்
கொந்தளித்துப் பொங்கி எழுந்தது உபரி வரலாறு.
விவாதங்கள் வழியே ஜெயமோகன் நிகழ்த்திய தாக்கங்களுக்கு இணையாகவே ஜெயமோகன்
அடைந்த தாக்கங்களும் உண்டு. உதாரணமாக 2G முறைகேடு மீதான
விவாதத்தில் ஜெயமோகன் அளித்த பதிலை வாசகர் ஒருவர் எதிர்கொண்ட விதம். இதுதான்
யதார்த்தம் என்றால் அதைச் சொல்ல எழுத்தாளர் எதற்கு என்பதே அந்த வாசகர் எழுப்பிய
கேள்வியின் சாரம். உண்மையான கேள்வி. ஜெயமோகன் தீவிரமாக அலைக்கழிக்கப்பட்டார்
அந்தக் கேள்வியால். எழுதி எழுதி அந்த வாசகர் கேட்ட கேள்விக்கு தன்னில் விடை
கண்டார். தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவம் நிறைந்த ‘அறம்’ சிறுகதைத் தொகுதி
அவ்வாறு பிறந்ததே. கெந்தேல் சாகிப், பூமேடை ராமையா, நேசமணி,
பேராசிரியர் ஏசுதாசன், யானை டாக்டர் என லட்சியவாதத்தின் ஒளி
பொருந்திய முகங்கள் கதைகள்தோறும் எழுந்து வந்தபடியே இருந்தார்கள். தமிழ்ச்சமூகம்
என்பதன் முகம் 2G முறைகேட்டு
ஆளுமைகள் உடையது அல்ல, யானை
டாக்டர் போன்றவர்கள் உருவாக்கியது அது என்பதை ‘அறம்’ தொகுதி தமிழ் மனங்களில் பதிய
வைத்தது. நாளை ஒரு 5G வந்து 2G ஐ மறக்கடிக்கும். ஆனால் ‘அறம்’ கதைகளின் மாந்தர்கள்
அங்கேயே, அவர் எவரோ அவ்வாறே நீடிப்பார்கள்.
ஜெயமோகன் உருவாக்கி தீவிர இலக்கியத் தளத்தில் நடக்கும் விவாதங்கள் பொதுத்தளத்தில்
சென்று தாக்கம் விளைவிப்பதைப் போல, மிக அபூர்வமாக பொதுத்தளத்தில் அவர் நிகழ்த்திய விவாதம் ஒன்று தடமே இன்றி
மறைந்துபோன வரலாறும் உண்டு. அபூர்வமாக பிரபல விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒரே ஒருமுறை
ஜெயமோகன் பங்குபெற்றார். மருத்துவர்கள் பங்குபெற்ற நிகழ்ச்சி அது. அதில் எவரும்
பேசத் தயங்கும் மருத்துவ மாபியா குறித்து ஜெயமோகன் பொதுவில் பேசினார். மருத்துவர்களில்
லட்சியவாதியான ஈரோடு ஜீவா அவர்களை மருத்துவ சேவை என்பதன் முகமாக முன்வைத்தார். மருத்துவர்கள்
பொங்கி எழ, ஒரு டாக்டர் கேஸ்
போடுவேன் என்று அதே நிகழ்ச்சியில் மிரட்ட, மருத்துவத் துறையின் வணிக நோக்கை அதன்பார்ப்பட்ட இறக்கமின்மையை ஜெயமோகன் போட்டு
உடைத்த அந்த ரகளையான விவாதம் இன்று எங்குமே காணக் கிடைக்காது. ஆனால் அன்று
ஜெயமோகன் தனியார் மருத்துவ அமைப்புகள் மீது வைத்த விமர்சனம் அத்தனையும் உண்மை
என்பதை கொரோனா அலையில் மொத்தத் தமிழ் நிலத்தையும் சட்ட வரம்புகளுக்கு வெளியே
நின்று தீவட்டிக் கொள்ளையர் போல சூழ்ந்து பதம் பார்த்து நிரூபித்தது தனியார்
மருத்துவத்துறை.
ஜெயமோகன் உருவாக்கிய பலநூறு விவாதங்களில் தலையாய மற்ற இரண்டில் ஒன்று சாகித்ய
அகாடமி விருது மீதானது. மற்றது ஞானபீட விருது மீதானது. சாகித்ய அகாடமி விருதுகள்
மீதான விவாதத்தின் தொடர்ச்சியாக விளைந்ததே விஷ்ணுபுரம் இலக்கிய விருது. வாசகர்களே
கூடி நிதி அளித்து நிகழ்த்தும் விருதுத் திருவிழா. அதன் இலக்கியத் தகுதியும்
தீவிரமும் வீச்சும் இன்று தமிழ் நிலத்தின் முக்கியப் பண்பாட்டு நிகழ்ச்சிகளில்
ஒன்றாக அதை உயர்த்தியிருக்கிறது.
ஞானபீடம் மீதான விவாதம் மேலும் முக்கியத்துவம் கொண்டது. ஞானபீடம் 'வாங்கிவிட' வேண்டும் என்பது பாடலாசிரியர் வைரமுத்து அவர்களின்
விருப்பம். ஆனால் அதில் அமரும் தகுதி கொண்டவரா அவர்? ஒப்புநோக்க இதற்கு முன் ஞானபீடம் அமர்ந்த ஜெயகாந்தன்
அவர்களை எடுத்துக்கொள்வோம், தனது
கருத்துகளால் அவர் தீவிர இலக்கியம் உள்ளிட்ட வெகுமக்கள் பரப்பை தாக்கிய காலம்
என்பது பெரியார் பணியாற்றிய காலம். பெரியாரின் பகுத்தறிவு, கருத்தியல் புரட்சிகள் யாவும் பாமரத்தனமானவை. பாமரரால்
பாமரர்களுக்குச் சொல்லப்பட்டு, பாமரர்களால் விவாதித்துப் பரப்பப்பட்டவை. உண்மையில் இந்த நிலை என்பது ஒட்டுமொத்தமாக
சமூக அறிவாற்றலின் குறைபாட்டையே, சரிவையே காட்டுகிறது. இதற்கு நேர் எதிர்விசையாக எழுந்து வந்தவரே ஜெயகாந்தன். தமிழ்ச்சமூகத்தின்
அறிவியக்கத்தின் நல்விதி அது. ஒட்டுமொத்த பாமர விவாதங்களுக்கும் தனது கருத்து
மேன்மையால், அறிவாற்றலால்
சிம்மக்குரல் கொண்டு எதிர்வினை புரிந்தார். பாமரர்கள் அண்ணாவுக்குக் கொடுத்த
அறிஞர் எனும் அடைமொழிக்கு ஜே.கே. அளித்த விமர்சனம் அண்ணா பெயர் சொல்லி வாழும்
பாமரத்தனம் உள்ளளவும் வாழும்.
அரசியலிலோ காமராஜர் உருவாக்க முனையும் கும்பல் கலாச்சார மனநிலையை அதே மேடையில்
எழுத்தாளனாக நின்று சுட்டிக்காட்டி மட்டுருத்தியவர்.
தமிழ் சினிமாவில், அவர்
கலைச் சினிமா ஓடையின் தவிர்க்க இயலா முன்னோடி. மலேசியத் தீவிரத் தமிழ்
இலக்கியத்தின் முன்னோடிகள் அனைவருமே ஜெயகாந்தனிலிருந்து தாக்கம் பெற்றவர்கள். இப்படி
ஜெயகாந்தன் தனது சொல்லால் செயலால் புனைவுகளால் ஒரு காலகட்டத்தையே வடிவமைத்தார். அவரது
பணிக்காலத்தை அவரை விட்டுவிட்டுப் பார்த்தால் மிகப்பெரிய வெற்றிடம் எஞ்சும். அதுதான்
ஜே.கே. அத்தகு ஆளுமையே தமிழின் ஞானபீடம் அமரும் தகுதி கொண்டவர். இதில் ஒன்றேனும்
வைரமுத்து வசம் உண்டா? ஞானபீடம்
என்பது ஞானாசிரியர் வசம் மட்டுமே சென்றுசேர வேண்டும். மாறி நிகழ்ந்தால் அது
தமிழுக்கு இழுக்கு. அதை ஜெயமோகன் போன்ற ஒருவர் ஒருபோதும் ஒப்பமாட்டார்.
2013 விஷ்ணுபுரம் விருது விழாவில் கடலூர் சீனு |
இறுதியிலும் இறுதியாக இத்தகு விவாதங்களை ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை ஏன்
உருவாக்குகிறார்கள்? விடை
ஒன்றுதான்.
எந்தத் காலகட்டம் ஆகிலும், எந்தப் பண்பாட்டிலும், அதில்
எழுந்து நிலைபெறும் விழுமியங்களைத் தீர்மானிப்பது அப்பண்பாட்டின் வெகுமக்கள்
மற்றும் சராசரிகள் அல்ல என்பதே.
அதைத் தீர்மானிப்பது அந்தந்த அறிவுத்துறைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த பெருமனங்கள்.
அப்பெருமனங்கள் மின்னல் போல. அப்பெருமனங்கள் நிகழும் வெகுமக்கள் சமூகம் இடி
ஒலி போல. ஒளி முந்தும். ஒலி சற்றுப் பிந்தி வந்து இணைந்துகொள்ளும்.
ஒளி எனத் தன்னை அறிந்த விதி சமைப்பவர்களின் நிறையே தமிழில் வள்ளலார் முதல்
ஜெயமோகன் வரை நீள்வது.
தமிழ் நிலத்தின் தனிப்பெரும் மின்னல் ஜெயமோகன் அவர்களுக்கு இவ்வெளிய வாசகனின் பிறந்தநாள் வாழ்த்துகள்.
***
கடலூர் சீனு |
No comments:
Post a Comment