அனங்கன்
நான் ஜெயமோகனுடனும் ஜெயமோகனின் எழுத்துடனும் வளர்ந்தவன் என்று நண்பர்களிடம் சொல்லுவதுண்டு. எனக்கு ஜெயமோகன் அறிமுகமானது என்னுடைய 17வது வயதில், 2014இல். 'வெண்முரசு' 'மழைப்பாடல்' வெளிவந்துகொண்டிருந்தது. அப்போதிருந்து என் வாழ்வு மாறிவிட்டது. அன்று 'விஷ்ணுபுர'த்தை கைகளில் வைத்திருந்தது நினைவில் எழுகிறது. என்னால் அதன்பின் வாழ்வில் சிறியவற்றின் பின் செல்லமுடியாமல் ஆகிவிட்டது. அதற்காகப் பொய்ப் புரட்சியின் பின், பெரிய லட்சியங்களைச் செய்ய கிளம்பிவிட்டேன் என்று அர்த்தமில்லை. வாழ்வின் நிறைவிற்காகச் செய்யும் செயல் நம் கைக்கெட்டும் தொலைவில் உள்ளது. அதைச் செய்ய நம்மால் இயலுமென்று சொல்லி செய்துகொண்டிருப்பவர் ஜெ. அன்றன்றைக்கான நாட்களின் நிறைவிற்காக வாழ்வதே வாழ்வாக முடியும் என்று அவர் வாழ்வதையும் பார்க்கிறேன். இவைகளை நானும் செய்வேன் அல்லது செய்ய முயல்வேன். என்றோ தெரியவில்லை.
ஆனால் ஜெயமோகன் என்னுடன் என்றும் ஏதோ வகையில் இருந்துகொண்டிருக்கிறார். ஏதோ ஒன்றை வாசிக்கும்போதும் சிந்திக்கும்போதும், பயணத்தின்போதும் என்னில் எழுந்து வருகிறார். குரு என்பவர் தன்னை நம்மில் விதைத்து நம்மில் எழுபவர் என்று நினைக்கிறேன். நம்முடன் இருந்து நம்மைச் செலுத்துபவர். அப்படியென்றால் ஜெயமோகன் எனக்கு குருவே. ஆனால் ஜெயமோகனை எனக்கு குரு என்றோ ஆசான் என்றோ அடையாளப்படுத்தி வைத்திருக்கவேண்டிய பெரிய தேவையில்லை. ஏனெனில் நான் அவரை அறிந்த நாள் முதல் அவரை நினைக்காமல், வாசிக்கமால் சென்றதில்லை. என்றும் உடன் உணர்கிறேன். என் வாழ்வு என்றும் இப்படியே இருக்க ஆசைப்படுகிறேன். ஜெயமோகனுக்கு வணக்கம்.
- அனங்கன், வாசகர்
***
பிரதீப் கென்னடி
ஒலிம்பிக்கில் ஒன்று உண்டு, ஒலிம்பிக் டார்ச் என்று. ஒவ்வொரு சிறந்த வீரரும் பந்தம் ஏந்தி ஓடி அடுத்தவரிடம் கையளிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களாலான அந்த ஒளியின் தொடர் சென்று இறுதியில், அது ஒலிம்பிக் ஜோதியாக ஏற்றபடும். போட்டிகள் முடியும்வரை அது எரிந்துகொண்டிருக்கும். அந்தச் சடங்கு எங்கள் பள்ளி விளையாட்டு விழாவில் நடப்பதைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் குரு கையளிப்பது ஒளி என்றே நினைக்கிறேன். அருபடாத ஒளியின் தொடர். நான் பெற்றதும் அதுவே.
- பிரதீப் கென்னடி, வாசகர்
விஜயகிருஷ்ணன்
ஜெமோவிடம் என்னைக் கவர்ந்தது, நான் எடுத்துக்கொள்வது மனக்குவிப்பு. அபாரமான முறையில் அவருக்குக் கைவந்திருக்கிறது. பல ஆன்மிக யோகப் பயிற்சிகளின் நோக்கமே மனக்குவிப்பை அடைவதுதான். நானும் இதற்காக பல பயிற்சிகள் இன்றுவரை செய்கிறேன். அவர் அடைந்த உயர்நிலைக்காகவே எனக்கு அவர் ஓர் ஆதர்சமாக இருக்கிறார்.
மனக்குவிப்பின் உயர்நிலை என்பது பல தளங்களில் மனதை இயக்க முடிவது. பல நேரங்களில் ஆழ்மனதில் புற பிரக்ஞையை கடந்து செயல்படச் செய்யும். இதுவே உள்ளுணர்வைத் தட்டி எழுப்பும் கூர்மையாக்கும். அதிதீவிர செயல்பாட்டாளர்கள் நெருக்கடியான சூழல்களையும் மனக்குவிப்பினால் சுலபமாகக் கையாள்வதைக் கண்டிருக்கிறேன். கலைஞர்கள் புறச்சூழலால் தடைப்படாமல் தன் மனவானில் சஞ்சரிக்கமுடிவதும் இதனாலேதான். நம்மிடம் பேசிக்கொண்டிருப்பார். முடித்து தன் கணினையைத் திறப்பார். தடைப்படாமல் தொடர்ந்து 'வெண்முரசு' தட்டச்சுவார். பல விஷயங்கள் பேசினாலும் எதுவும் கவனச்சிதைவால் நிகழ்வதல்ல. புற கவனத்தை புறக்கணிக்காமல் உரையாடலிலும் ஈடுபடமுடிவதால் அதை உடனே மனதளவில் துண்டிக்க முடிகிறது. ஒரு கோப்பை மூடிவிடுவது போல. இன்று பலவிதமான பயிற்சிகளை பல இயக்கங்கள் கற்றுக்கொடுப்பது ஜெ.க்கு ஆழ்ந்த வீரியமான ஈடுபாட்டல் நன்றாக வசப்பட்டிருக்கிறது. ஒருவகையில் ஒரு யோகிதான் ஜெ. ஒருவகையில் இது அருள்தான். வணக்கங்கள். வாழ்த்துக்கள்.
- திருச்சி வே. விஜயகிருஷ்ணன், வாசகர்
No comments:
Post a Comment