விஜயராகவன், செந்தில்குமார், முத்துக்குமார்

நித்தமும் நினைத்துப்பார்க்க வைக்கும் ஆளுமை - விஜயராகவன்



2007ல் ஒரு மழைபெய்து ஓய்ந்த மாலை நேரத்தில் முதல்முதலாக ஜெ. ஐ ஈரோட்டில் சந்தித்தேன். அந்த சந்திப்பில், "படைப்பாளி என்பவன் சரித்திரத்தை உணர்ந்தவனாகவும், தன் எழுத்துபுலம் சார்ந்து பரந்துபட்ட வாசிப்பை உடையவனாகவும், ஆதார நகைச்சுவை உணர்வை எப்போதும் கைவிடாதவனாகவும் இருக்கவேண்டும். இந்த மூன்றோடு படைப்பூக்கமும் எழுதும் உத்திகளும் இணையும்போதுதான் மகத்தான படைப்பாளியாகிறான்" என்றார்.


முதல் சந்திப்பின் மறுநாளே முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குச் சுற்றுலா சென்றோம். அதன்பின் அவரோடு பலப்பல பயணங்கள்.


எழுத்திலும் நேர்ப்பேச்சுகளிலும் தன் கருத்துகளைத் தெளிவாக மற்றவர்களுக்குப் புரியவைத்துவிடும் நாவன்மையை சரஸ்வதி கடாட்சமாகக் கொண்டவர்.


இவரோடு பயணப்பட்டதிலும் நெருங்கிப் பழகியதிலும் நான் கண்டுகொண்டது, இவருக்கு யார் மீதிலும் காழ்ப்போ வஞ்சமோ இருந்ததேயில்லை. கோபம் வரும். அது சற்றைய பொழுதிலேயே தணிந்துவிடும்.


மேலும் மனிதர்களின் மேல் உள்ள பாசத்திற்கு ஏற்ப அதே அளவோ அல்லது அதற்கும் மேலாகவே மிருகங்களின் மேல் மிகுந்த அன்பும் லயிப்பும் உடையவர்.


மிருக நேசரான இவரை மிருகங்களும் உணர்ந்து நேசங்காட்டிய தருணங்கள் பலவற்றைக் கண்கூடாக நேரில் கண்டவன் நான்.


இவரது செல்லநாய் இறந்தபின் ஈரோட்டிலிருந்து 15 தின கண்விழித்த குட்டியான டோராவை (Dobermann pup) பால் வேனில் வைத்து நான் அனுப்பியபோது திருநெல்வேலியில் அதைப் பெற்றுக்கொள்ள அன்போடு நின்றிருந்தார்.


இவரோடு பழகி நான் பெற்றுக்கொண்டது, அலை ஓய்ந்து குளிக்கமுடியாது என்பதால் நான்கு வேடங்களையும் ஒருங்கே பூண்டுதான் நடித்தாக வேண்டும் என்பதே.


வாழ்வின் எல்லா தருணங்களும் முக்கியம் ஆனால் முடிவில் எதையும் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதை இவரது அண்மையால் உணர்ந்திருக்கிறேன்.


- விஜயராகவன், மொழிபெயர்ப்பாளர், ஈரோடு.


***


செந்தில்குமார்



நான் ஜெயமோகனை முதலில் அறிவது 2003ல் கன்னியாகுமரி நாவலின் வழியாக. என் மனைவி நூலகராக இருந்த அரசு நூலகத்தில் ஒரு பிரதி இருந்தது. ஆனால் அணுக்கமாக உணர்ந்தது பின் தொடரும் நிழலின் குரல் வாசித்த பின்னர்தான். என் அப்பா ஒரு முன்னாள் தீவிர கம்யூனிஸ்ட். 1963ல் ஏற்பட்ட மனவிலக்கத்தால் காங்கிரஸிற்கு சென்று அவர் 2010ல் மறையும் வரை தொழிற்சங்கவாதியாக இருந்தார். நான் அந்த நாவலை என் அப்பாவின் கதையாகத்தான் வாசித்தேன்! 2013ல் விஷ்ணுபுரம்  விழாவில் நேரடி அறிமுகம். 


ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன? நிதானத்தையும் நிறைவையும் என்று சொல்வேன். ஒரு விஷயத்தின் மறுபக்கத்தை அறிந்து கொள்வது எனக்கு தொழில்வயமாக கைகூடுவதுதான். ஆனால்  தனிப்பட்ட வாழ்விலும் உறவுகளை பேணுவதிலும் என்னுடைய கோபம் காரணமாக எப்போதும் சிக்கல்கள் இருந்தன. அவருடைய எழுத்துகள், நட்பு, உரையாடல்கள் என்னை நிலை நிறுத்த உதவின.


ஜெயமோகன் என்றாலே சிரிப்பும் மகிழ்ச்சியும்! சிரிப்பில்லாத எந்த உரையாடலும் அவருடன் நிகழ்ந்ததில்லை. நாள் முழுவதும் பேசிச் சிரித்த நாட்களும் உண்டு, பெரும்பாலும் முக்கியமான, நுட்பமான விஷயங்கள். சிரிப்பில்லாமல் அவரால் பேச இயலாது!


ஜெயமோகன் என்றால் நட்பு. அவரைப்போல் நட்பை பேணும் ஒருவரை நான் கண்டதில்லை. தனது நண்பர்களுக்காக எந்த முயற்சியும் எடுக்கத் தயங்காதவர். கடந்த பத்து வருடங்களில் எவ்வளவு புதிய நண்பர்கள், சிலர் தவிர அனைவரும் இளைஞர்கள்! ஒவொருவரும் அவர்களுக்கான ஜெயமோகனை கண்டறிகிறார்கள்.

இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

- செந்தில்குமார், பதிப்பாளர், விஷ்ணுபுரம் பதிப்பகம். 


***

முத்துக்குமார்



வாசிப்பு ஒருவரை எங்கு இழுத்துச் செல்லும் என்பதைக் காட்டுவதற்கா?


இல்லை, பெரும்பாலும் சுஜாதா, கொஞ்சமாக இந்திரா பார்த்தசாரதி என்றிருந்த என் வாசிப்பை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற ஜெமோவின்(ஜெயமோகன்) புகழ் பாடவா?


இல்லை, நானும் எழுத்தாளனென்று பறைசாற்றிக் கொள்ளவா?


இப்போதைக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மிகத் தெளிவு; வாசிப்பை விட அதைத் தொகுத்து எழுதும் போது கிடைக்கும் தெளிவுதான் என்னை இயக்குவதாக எண்ணிக் கொள்கிறேன். மேலும், என்னுடைய இந்த இயக்கத்திற்கான எரிபொருள் ஜெமோவின் எழுத்துக்களும், அவர்வழியாக நான் கண்டடைந்தவர்களின் எழுத்துக்களுமே.


ஒருவகையில் தான் என்ற தன்முனைப்பு கொண்ட அறிவுஜீவித்தனம் அல்லது ஒரு மேதாவித்தனம் என்னை எழுதத்தூண்டுகிறது என்றாலும், இறுதியில் கிடைக்கும் அத்தெளிவே என்னை இயக்குவதாக மீணடும் எண்ணிக் கொள்கிறேன்.


- முத்து


இதுதான் என்னுடைய வலைப்பூவில், எதற்காக இந்த வலைப்பூ என்ற தலைப்பில் நான் எழுதிய முதல் பதிவு. ஜெமோவை நேரடியாக சந்தித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய வலைப்பூவிது. நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. வாசித்த ஒன்றை தொகுத்து எழுதுவது, வாசிக்கும் போது கிடைத்த புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை எனது கல்வியின் வழியாக அறிந்திருந்தாலும், அதை உணர முடிந்தது ஜெமோ வின் அறிமுகம் எனக்கு கிடைத்த பின்புதான்.


என்னுடைய வேலை சார்ந்து எத்தனையோ ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டு வார்க்கப் பட்டிருந்தாலும், ஜெமோவும், அவர் இலக்கிய ஞானமும், தத்துவ அறிவும் என்னைக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் இடம் நான் கனவிலும் எண்ணியிராதது. வலைப்பூத் தொடங்க வைத்திருக்கிறார். சிறுகதைகள் எழுத வைத்திருக்கிறார். இலக்கிய ஆளுமைகள் நிறைந்திருக்கும் மேடையில் உரையாற்றும் தெளிவைத் தந்திருக்கிறார். ஜெமோவை அறிவதென்பது ஒரு தனிமனிதனை அறிவதல்ல. ஒரு இலக்கிய இயக்கத்தை அறிவது. அதன் மூலமாக நம்முடைய ஆளுமையை தொடர்ந்து செப்பனிட்டு வளர்த்துக் கொள்வது. சற்று பேராசையாகத் தோன்றினாலும்,  இவரை என்னுடைய இளமையின் ஆரம்பித்திலேயே சந்திக்கும் வாய்ப்பை வழங்காத என் ஊழின் மேல் பெரும் வருத்தமும் கோபமும் உண்டு.


***

No comments:

Post a Comment