ரகுராமன்
வாழ்கையின் அனைத்து தளங்களின் மீதான என் பார்வை ஜெவை சந்தித்த பிறகு முற்றிலும் மாறிபோனது. அது சிறிய புழுவில் ஆரம்பித்து பெரிய யானை வரை, அன்றாட மனிதர்களிலிருந்து பெரிய மனிதர்கள் வரை, என் மதிப்பீட்டை, பார்வையை தலைகீழாக மாற்றியது. நான் வாழ்நாளில் பார்க்க முடியாத மனிதர்கள், காணவே முடியாத நிலங்கள், கேட்டிருக்காத கதைகள், புரிந்துகொள்ளவே முடியாத சிக்கல்கள், அறிந்துகொள்ளவே முடியாத தருணங்கள் அனைத்தையும் அவர் மூலமாகப் பெற்றிருக்கேன். நம்பிய கொள்கைகள் சிதைந்தன, உண்மை என்று நம்பியவை குப்பைக்குப் போயின, குப்பைக்குள் கிடந்த பொய் உண்மை என உரு கொண்டது. அவரைப் படிக்கப் படிக்க குழப்பங்களே அதிகரித்தன. குழம்பிக் குழம்பி குழப்பத்தின் உச்சியில் ஒரு சிறிய மாறுபட்ட கோணம் அதுவரை நான் அறிந்தேயிராத அர்த்தங்களை விளங்க வைத்தது. ஒரு மலையின் உச்சியிலிருந்து நகரத்தைப் பார்ப்பது போல நான் அனைவரையும், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது போல உணர்கிறேன். அறுபது வருடங்கள்... நான் பெற்றது இந்த அறுபது வருடங்களில் அவர் ஒரு வேளை உண்ட உணவின் ஒரு பருக்கையின் சிறிய பகுதியைதான். அதை ஒரு சிறு எறும்பு போலச் சுமந்துகொண்டு வாழ்நாள் முழுக்க மகிழ்ந்திருப்பேன். நன்றி.
- ரகுராமன், வாசகர்
***
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன எனக் கேட்டுக்கொண்டால், அது 'அழகியல்' என்கிற கோட்பாட்டுச் சொல். எனக்கு அது ஓர் ஆப்த வாக்கியம் போல. என்னளவில் அது ஒரு தரிசனம். அதன் விரிவாக்கமே 'வெண்முரசு'. வாழ்வியலில் அனைத்திலும் அதைப் போட்டு பார்த்தபடி இருக்கிறேன். முடிவிலியாக அளப்பரிய புரிதலைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. எனது வாழ்வியல் தேடலின் பொருட்டே திரு. ஜெயமோகனைக் கண்டடைந்தேன். அது ஒரு கீதா முகூர்த்தம். வாழ்வின் தொடர் அலைக்கழிப்பினால் அனைத்தின் மீதும் பெரும் கசப்பும் விலகலும் கொண்டிருந்த சூழலில் அதிலிருந்து மீள உந்தப்பட்டே என் தேடலைத் தொடர்தேன். எனது முதல் கடிதத்திற்கு ஜெ அனுப்பிய பதிலில் அந்தச் 'சொல்' இருந்தது. ஆனால் அதுபற்றிய புரிதல் திறந்துகொள்ள சில மாதங்கள் தேவையானது. கம்போடியப் பயணத்தின்போதுதான் அந்த 'மெய்மைச் சொல்' திடீரென எனது மனதில் எழுந்தது. உளவியல் ரீதியில் அது ஓர் அற்புத தரிசனம். ஒரு மழைக்கால மாலையில் கம்போடியக் கோவிலைப் பார்த்து முடித்து வெளியே வந்து திரும்பி நின்று, அந்த ஒட்டுமொத்த அமைப்பைப் பார்த்தபோது திடீரென உளம் பொங்கி கண்ணீருடன் 'அச்சொல்லை' நினைத்துக்கொண்டேன். மானுட முயற்சியின் 'அர்த்தமும் அர்த்தமின்மையுமாக' அந்தக் கோவில் பிரமாண்டமாக என் முன் எழுந்து நின்றுகொண்டிருந்தது. அத்தருணம் வாழ்கையை புரிதலுள்ளதாக ஆக்கிய 'அந்தச் சொல்' என்னுடன் என் இறுதிக்காலம் வரை இருக்கவேண்டும் என 'என் மாபெரும் இறையை' இறைஞ்சினேன்.
தினம் என் குலமூதாதை, குரு நிரைக்கு நீரள்ளிவிடுவது எனது பூஜையின் துவக்கம். எனது பூஜையின் குரு நிரை வியாசர், பீஷ்மர் எனத் தொடங்கி நீண்ட வரிசை கொண்டது. எனது குருவாக வரித்துக்கொண்ட ஜெயமோகனின் தாய் தந்தை அந்த நிரையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார்கள். நான் ஜெயமோகனிடமிருந்து பெற்றவைகளுக்குக் கைமாறாக இதை எப்போதும் செய்துகொண்டிருப்பேன்.
நன்றி
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
புதுவை
***
ஜெயமோகனின் சொல் - தி.ஜினுராஜ்
முதுயோகியின் சொல் போல் அன்று பெருங்கலைஞனின் சொல். யோகி இதுவல்ல இதுவல்ல என்று அந்த ஏகத்தை அறிகிறார். கலைஞனோ படைப்பைச் சமைத்து அதில் வாழ்ந்து அதுவும் அதுவும் என்று அந்த ஏகத்தை அறிகிறார்.
வாசகன் முன்னே அந்தப் படைப்பு உள்ளது, அது ஒருவரை ஞானத்திற்கு இட்டுசென்ற வழி, மற்றொருவரை ஞானத்திற்கு இட்டுச் செல்லாது. ஆனால் அதன் வழியே சென்றால் ஞானத்தின் ஓர் ஒளிக்கீற்று தெரியும். அதுவும் ஏகமே. அவ்வொளி அவன் தன்னிலையை உணரச் செய்யும். அத்தன்னிலை உணர்வு வாழ்வின்மீது ஓர் விழிப்புநிலையை ஆழ்மனதிலிருந்து உருவாக்குகிறது மாறாக யோகியின் சொல் தன் விழிப்புநிலையை ஆழ்மனத்திலிருந்து உருவாக்குவதில்லை.
ஜெயமோகன் எனும் பெருங்கலைஞரின் படைப்புகள் - குறிப்பாக 'திசைகளின் நடுவே', 'புறப்பாடு', 'விஷ்ணுபுரம்', 'பின்தொடரும் நிழலின் குரல்' மற்றும் 'வெண்முரசு' - எனக்கும் அவ்விழிப்புநிலையை அளித்துள்ளது. அது என்னை இந்நீண்ட இந்திய மரபு, இந்நிலத்தின் பண்பாடு மற்றும் காலம் ஆகியவை வெளியாக உள்ள தளத்தில் என் நிலையைக் குறிக்க உதவும் GPS கருவி போல உள்ளது. அவ்விழிப்புநிலை இருமை கடந்து உணரவும், புரிந்துகொள்ளவும், செயல்படவும் தூண்டுகிறது.
அடைவதில் இல்லை வாழ்க்கை. அத்தன்னிலையை இழக்காமல் அவ்வொளியை நோக்கிய பயணமே வாழ்க்கை என ஜெயமோகன் உணரவைத்துள்ளார்.
- தி. ஜினுராஜ், வாசகர்
***
No comments:
Post a Comment