கோகுலரமணன், தாமரைக்கண்ணன், கே. பி. வினோத்

கோகுலரமணன்



'வெண்முர'சில் இதற்கான பதில் உள்ளது. இளைய யாதவரைச் சுற்றி எப்போதும் பல பெரிய மனிதர்கள் இருந்தனர். அர்ஜுனன், யுதிஷ்டிரன், சாத்யகி, பலராமன், ராதை, யசோதை, திரௌபதி, அபிமன்யு இன்னும் பலப்பல பெரிய மனிதர்கள். ஆனால் அவர் விழி பிரலம்பனையும் தீண்டியது, அருள் சுரந்தது. பிறர் எவருக்கும் கிடைக்காத ஒன்று அவனுக்குக் கிடைத்தது. மொத்த ஜீவாத்மாக்களும் அடையவேண்டி காத்திருக்கும் ஒன்று.


அவருக்கு நான் பிரலம்பன்.


நன்றி 

கோகுலரமணன்.

துறையூர்


***


ஆசிரியனின் இருப்பு - தாமரைக்கண்ணன்



எனக்கு இலக்கியம் பற்றி மரபார்ந்த விஷயங்கள் கற்றுக்கொள்ள ஆர்வம் உண்டு.


நிறைய தயக்கமும், அறியாமையால் விளையும் தாழ்வுமனப்பான்மையும், அதன் வெளிப்பாடான கோவமும், மிகை ஆணவமும் என்னைப் பற்றி அழுத்திக்கொண்டிருந்தன.


அதிலிருந்தெல்லாம் என்னை வெளியேற்ற நீண்ட ஒரு கை, ஆசிரியர் ஜெயமோகனுடையது.


இந்தியப் பெருநிலத்தின் ஞானமெல்லாம் ஆசிரியரின் அருகமர்ந்துதான் தொகுத்தும் விரித்தும் எழுந்தது. இலக்கியம் என்னும் நீண்ட உரையாடலை ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் தன் செயல்பாடுகளால் முன்னெடுத்துச்செல்கிறார். ஆனால் எல்லா மாஸ்டர்களும் அத்தகையவர்கள் அல்ல.


இன்றும் ஒரு துவக்க நிலை வாசகர் ஜெயமோகனை அணுகி தன்னுடைய சந்தேகங்களுக்கு விடைபெற முடியும். இந்த சாத்தியம் தரும் நம்பிக்கைக்கு அளவில்லை. பத்தாண்டுக்காலத்தில் அந்த வாசகர் ஒரு தீவிர இலக்கியவாதியாகவும் எழுத்தாளனாகவும்கூட மாறக்கூடும். நான் ஜெவிடம் கேட்டவற்றிற்கும் கேட்க நினைத்தவற்றிற்கும் விடைகள் கிடைத்திருக்கிறது. ஜெ படைப்புகளைத் தாண்டி அவரது தளத்தில் தொடர்ந்து வெளியான கடிதங்களும் விவாதங்களும் இன்று விலைமதிப்பற்றவை, அதைப் படிப்பதோடு அந்த விவாதங்களிலும் பங்குபெற முடியும்.


அவரது நோக்கங்களில் காட்டும் தீவிரம், பிறிதொன்றிலாமை நம்மையும் பிடர் பிடித்து உந்தும். ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் சொற்கள் கொண்டு ஒரு நவீன நாவல் எழுதுவேன் என்று சொல்பவர் ஒரு பெரும்பித்தராகத்தான் இருக்கமுடியும். இந்த ஒப்புக்கொடுத்தல்தான், அப்படியோர் ஆசிரியரின் இருப்புதான் யாரையும் இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்த முடியும்.



இத்தனைக் காலமும் எழுத்தாளனின் மதிப்பை, அவனுக்குச் சமூகம் செவிகொடுக்கவேண்டிய அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார். அவரது பரிந்துரைகளில் இடம்பெறும் படைப்பாளிகளில் அவர்மேல் காழ்ப்புள்ளவர்களும் இருக்கிறார்கள். தனது செயல்களினூடாக ஜெ எனக்கு அளித்தது, மரபு மற்றும் இலக்கியம் மீதான ஒரு பெரும் நம்பிக்கையை, எண்ணத்தில் பாய்ச்சுவது நேர்மறை ஒளியை. இந்த அறிவுச் செயல்பாட்டிற்குள் உனக்கான இடம் உள்ளது, நீ உன்னை தகுதிப்படுத்திக்கொள்ளும் வழி இது என்னும் ஆற்றுப்படுத்தலை. இன்று என் மனதிற்கு மிகவும் அணுக்கமான குரலும் மொழியும் அவருடையதுதான்.


அதோ அந்தக் காபாலிகனின் மண்டையோட்டில் ததும்பும் பித்து செல்லும் வழியெங்கும் சிதறி நதியாகிறது.


- தாமரைக்கண்ணன், வாசகர், பாண்டிச்சேரி


***


கே. பி. வினோத்



அப்போது, தமிழ் இணையத்தில் அறிமுகமாகத் தொடங்கிய நேரம் - திண்ணை இணையதளத்தில் குமரி உலா என்ற அவரது கட்டுரையைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. மறுநாள் அவரை நேரில் சந்தித்தேன். விட்ட இடத்திலிருந்த தொடர்வது போல பேச ஆரம்பி்த்தார். இன்றுவரை தொடர்கிறது!

 

நான் அவரை சந்தித்தது, அலைக்கழிந்து, வாழ்வில் நிர்கதியாக நிற்கும்போது அல்ல, மாறாக, அது பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்தபோது. 'இனி என்ன செய்வது?' என்பதுதான் தெரியாமல் இருந்தது. அந்த நேரத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்ததுதான் மகத்துவம்! ஓய்வைவிட செயல் எத்தனை இனிமையானது என்பதைக் கற்றுக்கொடுத்தார். தனிப்பட்ட ஆர்வங்களை பரிசீலிக்கும் வயது இது என்றார். வாழ்வில் இரண்டாம் ஆட்டம் அப்படிதான் ஆரம்பமானது. மறுபடியும் பள்ளி மாணவனானேன்.

 

அவரது எழுத்துகளில் நான் முதன்மையாகத் தொடர்வது தத்துவம் சார்ந்த பகுதிகளை. பின் வந்த வருடங்களில் தத்துவ ஞானிகளுடன் அணுக்கம் காட்ட, நான் மிகுந்த தனிமையில் பயணிக்க அது தொடக்கப்புள்ளி தந்தது.

 

இந்த இரண்டு அம்சங்களும் எனக்கு அவரது கொடை. வருடங்கள் கேளிக்கைகளிலேயே கரைந்து மாய்ந்திருக்கும். அந்த திசைதிருப்பலுக்கு நன்றிகடன் படுகிறேன்.

 

- கே. பி. வினோத், ஆவணப்பட இயக்குனர்

No comments:

Post a Comment