ஜே. ரவிச்சந்திரன், அருணா வெங்கடாசலம், விஜயபாரதி


ஜே. ரவிச்சந்திரன்


வாழ்வின் நிகழ்வுகள் தங்கள் ஓட்டத்தின்  வேகத்தில்   என்னை இழுத்துச் செல்ல முற்படுகையில் நான் பெரும்  முயற்சியுடன்  என் பயணத்தின் திசையைத் தீர்மானிக்கப் போராடியிருக்கிறேன். சில சமயங்களில் நான் விரும்பிய, குறித்த   திசைகளில் வாழ்வுப்  பயணம் செல்லாத போதெல்லாம் மன அயற்சியும் தொய்வும் என்னை வருத்தியிருக்கின்றன.  அப்போதெல்லாம் எனக்கு இளைப்பாறுதல் தருபவராக மட்டுமின்றி, தானே வழி கட்டுபவராகவும் ஜெயமோகன் இருந்திருக்கிறார்.


அவரது  சொற்கள் பாசாங்கு இல்லாத நேர்மையுடனும் படிகம் போன்ற தெளிவுடனும்  என் மனதோடு - அல்லது என் மனம் அவரோடு - உரையாடும் நிகழ்வு அவர் அறிந்திராமலே எனக்குள்  நடந்த, நடந்து கொண்டிருக்கிற   வேதியல் மாற்றங்கள்.


வாழ்வில் தான் எதிர்கொண்ட தருணங்களை  அனுதினமும் இந்த மானுட சாதியிடம் பகிர்ந்து கொள்ள இடையறாது முயலும் அவரது எத்தனிப்புகள் எண்ணற்ற பரிமாணங்களாக வெளிப்படுகின்றன.  அவரது கலப்பை  உழுது சென்ற நிலங்களில்  எதை விதைப்பது/ விளைவிப்பது என்பதை அவர் தீர்மானிப்பது இல்லை என்றே உணருகிறேன்.   எனவே, அவர் நடந்து செல்லும் வழியெங்கும் அவரைச் சூழ்ந்து ஒரு சோலைக்குரிய கொண்டாட்டங்களாக பலரது வாழ்வின் பக்கங்கள் விரிவதைக் காண முடிகிறது.


இப்படி சுருக்கிச் சொல்கிறேன் - இயல்பாகவே வாழ்வின் புதிர்களில் நுழைந்து பிறப்பு, இறப்பு மற்றும் இருப்பு குறித்த தெளிவின்மையின் தடுமாற்றங்களின்போது நான் தேடி அலைந்தது ஒரு "விடை" தேடி அல்ல.  சரியான "கேள்வியை" இறுதியாக்கிக் கொள்ள மட்டுமே.  ஜெ-யுடனான அணுக்கத்தின் பின்னர், அது எனக்குள் நிகழ்ந்ததாகவே உணருகிறேன்.  அந்த உணர்வை எனக்கு அளித்தமைக்காக ஜெ-க்கு என் நன்றியைத் தெரிவித்து அவரை அந்நியப் படுத்த விரும்பவில்லை.


- ஜே. ரவிச்சந்திரன், திருமங்கலம். 


***


அருணா வெங்கடாசலம்


சற்று தமிழ் இலக்கிய பரிச்சியம் இருந்த போதும், பெரும்பாலும் இந்திய ஆங்கில இலக்கித்திலும் உலக ஆங்கில இலக்கியத்தையுமே பெரிதும் படித்து வந்த என்னை தமிழ் இலக்கியத்தின் வரலாற்றிற்கும் ஆழத்திற்கும் தொடர் எழுத்தால் அறிமுகப்படுத்தி, அதன் கரையிலேயே தங்க வைத்தது. தன் கருத்துக்களில் இருந்து நேர் எதிர் திசையில் நிற்பவராயினும் , பல மன வேறுபாடுகளும் பூசல்களும் இருந்த போதும் நேரில் சந்திக்கும் தருணத்தில் பூரண மகிழ்வுடன் குதூகுலத்துடன் உரையாடும் குணம்.  தொடர் செயல்பாடால் அவர் பல வருடங்களாக நடத்தும் கூடுகையின் வாயிலாக நான் பெற்ற மிக சிறந்த இலக்கிய நண்பர்கள். தீராத வாசிப்பு இன்பம். அவர் அளிக்கும் மொழி, அதன் நுட்பம், humor, நான்றியாத உலகினைப்பற்றிய பல்வேறு கதைகளம் அது என் வாழ்வில் ஏற்படுத்தும் தொடர் உரையாடல்களும் தேடலும் அவரின் செயலூக்கம் எனக்களிக்கும் உற்சாகம்.


- அருணா வெங்கடாசலம்


***


விஜயபாரதி


தினம் பெருகும் கேள்விகளால் அகம் உடைதலின் இனிய வலி மட்டுமே ஜெ எனக்கு அளித்தது. ஒன்று கற்பனவும் இனியமையும் என கற்றலை நிறுத்திக்கொண்டு மேலான ஒன்றை இறுகப்பற்றி ஓரிடத்தில் அமைந்திருக்க வேண்டும். இளமை வேகத்தில் இயல்பாகவே அதற்கான வாசலை இறுக அடைத்துவிட்டாயிற்று. மாற்றாக ஏட்டுக்கல்வி வழியே அறிவியல் கொடுக்கும் பதில்கள் போதுமென அமைந்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைகள் மட்டுமேயான உலகில் இடரின்றி பயணிப்பது போன்றது. ஆனால் இரண்டையும் விடுத்து அறிவியக்கத்தினுள் நுழைய நேரிட்டது. அறியாமல் நடந்த விபத்து. ஜெ எழுதியவைதான் என்னை வரவேற்று அழைத்துச்சென்று பெருங்காட்டினுள் முற்றிருளில் முடிவில்லா பயணத்தில் இறக்கிவிட்டவை. இங்கு வேரும், கிளையும், இலையும் தளிரும்கூட முள்ளாகி இடர்மிகு வலியைக் கொடுப்பவைதான். ஆனால் அவை அறிய வேண்டியவையும் கூட.


இப்பயணத்தில் தேர்ந்த வழிகாட்டியும் வழித்துணைகளுமே முக்கியம். நம்மை இடரின்றி வலியின்றி வசதியாக செல்லுமிடம் அழைத்துச்செல்வதே ஒரு வெற்றிகரமான வழிகாட்டிக்கு மரபான இலக்கணம். ஆனால் அறிவியக்கத்தில் ஒரு ஆசிரியரிடம் அதனை எதிர்பாக்க முடியாது. பெறுபொருள் என்ற ஒன்று திட்டவட்டமாக வகுக்கப்படாத கல்வியழித்தலும் கற்றலும் ஒருங்கே நிகழும் பயணம். சிகரம் தொட்டாயிற்று என்றிருந்த என் அறியாமையின் அளவை உணரவைத்தது ஜெ. உச்சியை அடைந்த பிறகு கண்ணுக்குப் புலப்படும் நூறுநூறு பெருஞ்சிகரங்கள் அளிக்கும் வலி அவரிடமிருந்து கிடைத்தது. ஒரு பக்கம் அவரது பேரிலக்கியப் புனைவுகளும், அவர் உலகெங்குமிருந்து எடுத்து முன் நிறுத்தும் படைப்புகளும் வாழ்க்கை பற்றிய அறிதலின், அதில் எழும் கேள்விகளை உசாவியதன் வழி பெரும்சோர்வை நோக்கித் தள்ளும் கேள்விகளால் நிரப்புகின்றன. மறுபக்கம் அத்தனை சோர்வையும் பன்மடங்கு தான் அனுபவித்த பின்னரும் முற்றிலும் செயலூக்கம் மிகுந்தவராக, தன் படைப்புகளுக்கு தானே முரணாக எழுந்து நிற்கும்பொழுது மேலும் கேள்விகள் கிளம்புகின்றன. எழுத்தாளராக அவர் எதையும் வகுத்து அறுதி முடிவு என்று நிறுத்தவதில்லைதான். ஆனால் விடையில்லா கேள்விகள்தானே தேடலுக்கு அடித்தளமாக முடியும். எனவே கற்பன இனியும் அமையும் என மேலும் வலியை வேட்டபடி பயணத்தின் இனிமையில் திளைத்திருக்க வேண்டியதுதான்.


- விஜயபாரதி, வாசகர்.

No comments:

Post a Comment