மணிமாறன், பிரபு, ரா. செந்தில்குமார்

மணிமாறன் 

 


இளமையில் சிலர் தனித்து நிற்க விரும்புவார்கள்.  அதன்படி நான் எனது பள்ளிநாட்களின் இறுதியில் தனியடையாளம் தேடி என்னைக் கண்டுகொண்டது பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில்.  அந்த நாட்களில் செல்லுமிடமெல்லாம் பெரியாரை முன்வைத்தேன்.  கடவுள் நம்பிக்கையை பழித்தேன்.  பண்டிகைககளை புறக்கணித்தேன்.  புராணங்களை வெறுத்தேன்.  கோயில் செல்வதை தவிர்த்தேன்.  மொத்தத்தில் இந்துவாக இருப்பதில் இழிவு கொண்டேன்.  அவை யாவும் பகுத்தறிவுக் கொள்கைக்காக அல்ல என் சுயத்துக்காக மட்டுமே என்ற புரிதலை இருபத்தைந்து வயதில் உலகியல் வாழ்வின் நிதர்சனங்கள் எனக்கு உணர்த்திய போது பெருங்குழப்பத்திற்கு ஆளானேன்.  முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலை.  அவை வெறும் வெறுமை சூழ்ந்த நாட்கள்.   மீளும் வழி தேடி வாசிப்புக்குள் வருகிறேன்.


காந்தியை அறிந்து கொள்ளும் தேடலில் இருந்த போதுதான் ஜெவின் இணையதளத்திற்கு வந்து சேர்ந்தேன்.  மதம் சார்ந்தும் ஆன்மிகம் சார்ந்தும் அவரெழுதிய கட்டுரைகள் அதுவரை நான் கொண்டிருந்த குறுகியப் பார்வையை விசாலமாக்கிக் காட்டின.  எனது அந்த முதிரா இளைமையின் போலித்திரைகளை விலக்கி என்னை எனக்கே மீட்டளித்தவர் என்றால் அது எழுத்தாளர் ஜெயமோகன் தான்.  


இந்துஞான மரபை கற்று அதன் மீது தான் கொண்டிருக்கும் தனது ஆழ்ந்த அறிதலின் வெளிப்பாடாக தன் உரையிலும் எழுத்திலும் அவற்றை தொடர்ந்து முன்வைத்து பலரையும் மரபை நோக்கி திருப்பிய பெருமை அவருக்குண்டு.   மரபை புறக்கணிக்காமலேயே நவீன சிந்தனையை மேற்கொள்ள முடியும் என்பதையும் அன்றாட வாழ்வில் நேரும் வெறுமையுணர்விலிருந்து விடுபடும் தரிசனங்களையும் அதனிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் மிகுந்த அக்கறையோடும் கனிவோடும் கற்றுத் தந்தவர்.  நான் மரபோடு கொண்டிருக்கும் பன்னெடுங்காலத்  தொடர்பை கணப்பொழுதில் உணரச் செய்தவர்.     


இவ்வாறாக இந்துஞான மரபின் பிரம்மாண்டத்தையும் அதன் விஸ்வரூப தரிசனத்தையும் ஒரு ஆசிரியராக இலக்கிய வாசிப்பினுள் நுழைந்த என் போன்ற மாணவர்க்கு காண்பித்து கண்டுணரச் செய்தவர் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும்தான் என்றால் அது  மிகையில்லை.  


அதன் விளைவாக நானொன்றும் கடவுள் மீது பற்றுகொண்டு பக்திமானாக மாறிவிடவில்லை.  ஆனாலும் தெய்வங்களை நேசிக்கிறேன். அவற்றின் மீதும் ஆலயங்கள் மீதும் ஒருவித மானசீகமான அணுக்கத்தை உணர்கிறேன்.  அதுவரை அத்தனை அணுக்கமாக நான் என்னையே உணர்ந்ததில்லை.


நான் வாழும் உலகியல் வாழ்வில் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் உணர்கிறேன் என்றால் அது ஜெவின் எழுத்துகளை வாசிக்கத் தொடங்கிய பிறகு  ஏற்பட்ட சிந்தனைத் தெளிவு.  அவ்வளவு தான்.  

நான் அவருக்கேற்ற மாணவன் தானா என்பதில் இன்றளவும் எனக்கொரு ஐயப்பாடுண்டு.  ஆனால் அவர்தான் எனது ஆசிரியர் என்பதை 2013ம் ஆண்டில் திருச்சி நட்புக்கூடல் நிகழ்ச்சியில் அவரை முதன்முதலாக நேரில் சந்தித்தபோதே கண்டுணர்ந்து கொண்டேன்.  


மணிமாறன் 

புதுச்சேரி.


***


பிரபு



மிக இள வயதிலேயே என் சிந்தனைப் போக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ஓஷோ மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி. கடவுள் மதம் அற்ற ஒரு ஆன்மிகத்தை - அனைத்து உயிர்களையும் இணைத்து இயங்கும் ஒரு சாரமான இருப்பை - குறித்த பார்வையை பெற்றுக்கொண்ட அதே நேரம், அவர்கள் மிக தர்க்கப்பூர்வமாக, என்னுள் இருந்த மதம் மற்றும் மரபு சார்ந்த நம்பிக்கைகளை காலாவதியாக்கி விட்டனர். 


இந்தியாவில் பிறந்து வளரும் ஒருவருக்கு இயல்பாகவே வந்து சேரும் இந்து மரபு சார்ந்த படிமங்களும் குறியீடுகளும் நிறைந்த ஆழ்மனது எனக்கும் இருந்தது. ஆனால் தர்க்கத்தை கொண்டு அவற்றை நிராகரிக்கும் மனதின் மற்றொரு பகுதியுடன் நான் போராடிக்கொண்டிருந்தேன். வெளி நாட்டில், ஒரு அந்நிய பண்பாட்டில் வந்து வாழ நேர்ந்ததும், இந்த சிக்கலை மேலும் தீவிரமாக்கியது. மரபை அப்படியே முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாமலும், முழுக்க நிராகரிக்க முடியாமலுமான ஒரு ஊசலாட்டம். 


அப்போது ஜெயமோகன் மரத்தடி இணைய தளத்திலும், பின் தனது சொந்த தளத்திலும் மதம், மரபு குறித்து எழுதி வந்ததை எல்லாம் தீவிரமாக பின் தொடர்ந்து வந்தேன். மதம் குறித்தும் இந்திய சமூகம் குறித்தும் அவர் எழுதிய பதில்களில் இருந்து எனக்கான பார்வையை உருவாக்கி கொள்ள முடிந்தது. உயர் தத்துவ தளத்தில் விடுபடுதலை பேசும் இந்து மதம்,சாமான்யனுக்கு படிமங்கள், உணர்ச்சிநிலைகள் மற்றும் சடங்குகளாக இருக்கிறது. சிறுதெய்வ வழிபாட்டை சேர்த்துக்கொண்டு குடிமரபுடன் இணைக்கிறது. 


இந்து மதம் என்பதில் மூடநம்பிக்கைகள் கலந்திருந்தாலும், அது வெறும் பிற்போக்கு தனங்களின் தொகுப்பு மட்டுமல்ல. அது நம் பண்பாட்டு களஞ்சியம். மெய்யறிதல்களை தன்னுள் தேக்கி தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் ஒரு அமைப்பு. ஓஷோ, ஜேகே போன்றவர்கள் பேசும் மெய்யியலுக்கு அது எதிரானது அல்ல. மாறாக அத்தகைய ஞானியர் விளையும் விளைநிலமாக இருக்கிறது.


ஜெயமோகன் பலநூறு பக்கங்களில், கடிதங்களாகவும், கதைகளாகவும், கட்டுரைகளாகவும் எழுதியுள்ள இந்த உண்மை ஒரு தரிசனமாக என்னுள் வேரூன்றவும், நான் உணர்ந்த முரண் இல்லாமலாகியது. மரபின் மீதான ஏற்பை அளித்தது.என் மன அடுக்குகளில் ஒரு ஒருங்கிணைவை உருவாக்கியது. அதே சமயம் மரபை விமர்சனபூர்வமாக அணுகவும் சொல்லித் தந்தது.

 

மொத்தத்தில் ஜெயமோகன் எனக்கு அளித்தது, நான் அறிந்த சிறிய தர்க்கத்திதனை உள்ளிழுத்துக்கொள்ளும் இன்னும் மேலான தர்க்கத்தை. மதம், அரசியல், சமூகம் என்று பல தளங்களில் பரவும் ஒரு விரிவான பார்வையை. குறுகலும், திரிபும் அற்ற இப்பார்வை அளிக்கும் மனவிரிவை. 

 

- பிரபு, லண்டன்


***


ரா. செந்தில்குமார்



ஜெயமோகனை ஏறக்குறைய இருபது வருடங்களாக தொடர்ந்து வாசிக்கிறேன். படைப்பாக முதலில் வாசித்தது மாடன் மோட்சம். சிறுகதையாக அது என்னில் ஏற்படுத்திய தாக்கம் பலமானது. தொடர்ந்து விஷ்ணுபுரம் நாவலை இரவு பகலாக வாசித்த நாட்கள் சுகமானவை. பத்து வருடங்களுக்கு முன்பு திருச்சியில் தான் முதன் முதலாக சந்தித்தேன். அப்போது தான் சந்திக்கிறேன் என்கிற உணர்வு எனக்கு சுத்தமாக இல்லை. அதற்கு காரணம், அவர் மிக இயல்பாக பேசி சிரித்தது மட்டுமல்ல, பல வருடங்கள் அவருடைய எழுத்தை வாசிப்பவன் என்கிற முறையில் ஒரு ஆளுமையாக எனக்கு அவர் ஏற்கனவே மனதுக்கு அணுக்கமானவராக இருந்தார். தொடர்ந்து விஷ்ணுபுரம் விருது விழாக்கள், மன்னை கோவில் பயணம், கம்போடியா பயணம் என பல சந்திப்புகள். முத்தாய்ப்பாக ஒருவார காலம் கூடவே இருந்து ஜப்பானை சுற்றும் நல்வாய்ப்பும் அமைந்தது. இத்தனை வருடங்களாக ஒரு மாணவனாக அவரிடம் நான் கற்றவை ஏராளம். அவை சிந்தனை தளங்களில், எழுத்துகலையில், மரபு சார்ந்து என பல துறைகளை உள்ளடக்கியது.  இந்த கட்டுரையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிடவேண்டுமென்றால்,  ஒரு ஆளுமையாக அவரிடம் எப்போதும் நான் வியக்கும் ஒரு தன்மை, அவருடைய சலிப்பின்மை. காலை ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பி, பல நூறு கிலோ மீட்டர்தூரம் பயணம் செய்து காமக்குரா, ஹிரோஷிமா என சுற்றியலைந்து முழுவதுமாக சோர்ந்து இரவு பத்தரை மணிக்கு கூடு அடைவோம். எப்போது ஓய்வெடுப்போம் என மனமும் உடலும் கெஞ்சும். ஜெயமோகனோ, அதற்கு பின் அமர்ந்து அதிகாலை இரண்டு மணிவரை வெண்முரசு எழுதுவார். ஒவ்வொரு முறையும் நான் சோர்வுறும்போதெல்லாம் நினைவில் எழுப்பிக்கொள்வது இலக்கியத்தின் மீதான ஜெயமோகனின் இந்த வேட்கையையே.


- ரா. செந்தில்குமார், எழுத்தாளர்

No comments:

Post a Comment