ஸ்வேதா
ஓர் ஆங்கில பத்திரிக்கையில் WWJD வாசகம் ஏந்திய ஆடைகளுக்கான விளம்பரம் ஒன்று கண்டேன். கிறித்தவர்கள் தாங்கள் செய்வது சரிதானா என சரி பார்க்க நினைத்தால் What Would Jesus Do - WWJD என்னும் வினா எழுப்பி தெளிவடைவார்கள். இங்கு என்னை போல் எந்த ஆழ்ந்த கருத்தியல் சார்ந்த முன்முடிவுகளோ, விமர்சன மரபையோ அறியாதவர்களுக்கு What Would Jeyamohan Do என்று எண்ணுதல், தானாக கண்டுக்கொள்ள நினைக்கும் கருத்தியல் நிலைப்பாட்டிற்கான கச்சா பொருளை அளிக்கிறது. ஜெவின் கருத்துக்களை நான் என்னுடையதாக்கிகொள்ளலாம், மறுக்கலாம், மாறுபடலாம், தொடர்ந்து உரையாடலாம். அதற்கான இடமும் இங்கே இருக்கிறது. காழ்ப்பிற்கும் விமர்சனத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளை உணர்வது இரைச்சலே இசை என்று புழங்கும் சமூக வலைத்தள சூழலில் அரிதானது. இலக்கிய முன்னோடியாக ஜெவின் பங்களிப்பை போன்றே முக்கியத்துவம் கொண்டது அவரது அரசியல், சமூக விமர்சகர் என்னும் ஆளுமை. கனவுகள் மீதோ, கொள்கைகள் மீதோ பிடிப்பே ஏற்படாதவாறு வளர்ந்த ஒரு சாராருக்கு ஏன்-எதற்கு-எப்படி என்று வரையறை செய்யவும், எதிர்வினையாற்றவும் அவரது கட்டுரைகள் பயிற்சியளிக்கின்றன. 2019ஆம் ஆண்டு ஜெ தலைமையில் ஈரோட்டில் நடைபெற்ற விவாத நெறிமுறைகள் குறித்த அறிமுக பட்டறை இவ்விதத்தில் எனக்கு பெரிதும் உதவியது.
- ஸ்வேதா
***
கி. ச. திலீபன்
நமது வாழ்வு எதை நோக்கியது என்பதைக் கண்டறிதல் மற்றும் அதற்காக நம்மை முழுதுற அளித்தல் ஆகிய இவை இரண்டும்தான் ஜெயமோகனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டவை. கருத்தியல் ரீதியாக முரண்படுகிறவர்கள் கூட அவரது அசுரத்தனமான எழுத்தாற்றலை விதந்தோதுவதைக் கேட்டிருக்கிறேன். நானும் அந்த பிரம்மிப்புக்குள்தான் இன்றளவிலும் இருக்கிறேன். எந்தச் சூழலிலும் எழுத்து எனும் செயல்பாட்டிலிருந்து விலகாத அந்த தீவிர லட்சிய நோக்கம்தான் எழுத்தாளனாக விழைகிற அனைவரும் பற்றிக்கொள்ள வேண்டியது என உறுதிபட நம்புகிறேன்.
- கி.ச. திலீபன், எழுத்தாளர்
***
நரேன்
எழுத்தாளர் ஜெயமோகனை வாசிக்கத் துவங்கிச் சரியாக பதினாறு ஆண்டுகள் கழித்துதான் அவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். படைப்புகளின் மூலம் மட்டுமே அவரை பல காலம் அறிமுகப்படுத்திக் கொண்டதாலோ என்னவோ, நண்பனாக உருமாறிய பிறகும் கூட அவருடன் தனித்த நேரங்களில் பதற்றம் கொண்டு விடுகிறேன். தனியாக காரில் அவருடன் பயணிப்பது, பிரேக் இல்லாமல் மலைப் பாதையில் வண்டியோட்டுவது போல எனக்கு. அவரை நண்பராக அறிமுகம் செய்துகொண்டு பிறகு வாசிக்கத் தொடங்கியவர்கள் அவர் தோள் மீது கை போட்டுப் பேசுவது என்னால் எந்நாலும் சாத்தியப்படாது என்றே தோன்றுகிறது. ஆனால் நேரடியாக ஒரு பீடத்தில் அவரை நான் அமர்த்திவிட்டதுதான் என் நல்லூழ் என்றும் கூட நினைக்கிறேன். ஆகையால்தான் அவரறியாமல் எனக்கொரு அக விடுதலையை அளித்துக்கொண்டே இருக்கிறார்.
அவருக்கு அறிமுகமான புதிதில் பெரும் வாழ்க்கைச் சலிப்பில் உழன்று கொண்டிருந்த நாளொன்றில் ஜெ. கோவையில் இருப்பதை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன். என்னைப் பார்த்ததும் ‘வாங்க நரேன்’ என்று அவரழைத்த அக்கணம், என் அத்தனை துயரமும் எந்தத் தருக்கமுமின்றி தவிடுபொடியாயின. என் வாழ்வில் எங்கேயோ முட்டி மோதி நின்ற கணத்திலெல்லாம், இந்த ஆறு வருடங்களில், அவரை சந்திக்கும் வாய்ப்பு எதேச்சையாக எப்படியோ உண்டாகிவிடுகிறது. கடவுளர்கள் கரம் நீட்டியளிக்கும் ஆசீர்வாதங்கள்தானே தற்செயல்கள். தனிப்பட்ட உரையாடல்களை அவரிடம் நிகழ்த்தியதில்லை என்றாலும் சிடுக்குகளிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டே இருக்கிறார். அதற்கு நான் அவரை வைத்திருக்கும் அவ்வுயர்ந்த பீடமும் காரணமாக இருக்கலாம். அது அப்படியெனில் அது அப்படியே இருக்கட்டும். என்னை என்னிடமிருந்தே தப்புவிக்கும் அவர் கரங்களிலிருக்கும் அம்மாயக்கயிற்றை எனக்கென வீசுவதுதான் அவர் எனக்கு அளிப்பதில் முதன்மையானது. நன்றி ஜெ.!
- எழுத்தாளர் நரேன்
***
No comments:
Post a Comment