கவியரசு நேசன்
படித்ததை எனக்குள் மட்டும் அசைபோட்டுக் கொண்டிருந்த எனக்கு அவ்வப்போது வணிக இலக்கிய வாசகர்கள் ஏற்படுத்திய அயற்சியும், அதுக்குள்ள ஒரு நுட்பமான அரசியல் இருக்கு தோழர் என வேறுப்பேற்றும் முற்போக்கு முகாம்களில் ஏற்பட்ட அனுபவங்களும் நான் ஒரு இலக்கிய வாசகன் என வெளியில் சொல்லுக் கூடாது என நினைத்த போது என் வாசிப்பனுபங்களை பகிர்ந்து கொள்ளவும் அதையும் தாண்டி என் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள தன் எழுத்தின் வழியாகவும் எழுத்துக்கு வெளியே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் வழியாகவும் இணை மனங்களை அளித்துள்ளார். தற்போது பள்ளி, கல்லூரி, தெருநட்பு, உறவு நட்பு இவர்களைக் காட்டிலும் இலக்கிய நண்பர்களுடன் நெடு நேரம் உரையாடவே விரும்புகிறேன்.
***
கிருஷ்ணன் சங்கரன்
ஒரு புனைகதை ஆசிரியன் வாசகனுக்கு என்ன தரமுடியும்? இதென்ன கேள்வி? பொழுதுபோக்க நல்லநூலைத் தரலாம். வேறென்ன தரவேண்டும்? என்பீர்கள். ஆனால் பொழுதுபோக்கு மட்டுமே தர நிர்ணயமாக இருந்த காலங்களும் உண்டு. 'எடுத்தா கீழ வைக்கமாட்டீங்க' வகை. வடுவூர் துரைசாமி அய்யங்கார் போல. நவீன மோஸ்தர்களோடு அதே வகையில் வித்தியாசமான நடையில் எழுதிய சுஜாதா போல. பின்னர் இலட்சிய வாழ்க்கைச் சித்தரிப்பு மேலோங்கிய படைப்புகள் - கல்கி, நா.பார்த்தசாரதி போல. பிறகு? சிந்தனையைச் செழுமைப்படுத்தலாம், பலவிதங்களில் நேர்மறையாகத் தூண்டலாம் - புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி போல. விளிம்பு நிலை மனிதனின் வாழ்க்கையை பிட்டுப் பிட்டு வைக்கலாம் ஜெயகாந்தன் போல. பிறகு? மனித மனத்தின் காமவிகாரங்களைத் துலக்கிப் பார்க்கலாம் ஜி.நாகராஜன், ஆ.மாதவன் போல. பிறகு? லலித கலைகள் தொழிற்படும் மனத்தின் நுண்ணுணர்வுகள் பிரதிபலிக்கும் படைப்புகள் தரலாம் தி.ஜானகிராமன் போல. ஆனால், ஒரே ஒரு ஆசிரியனால் மேற்கூறிய எந்த ஆசிரியனின் படைப்புலகிலும் நுழைந்து, தனக்கேயான வாழ்க்கைப்பார்வையோடு கூடிய இன்னொரு உயரிய படைப்பைத் தரமுடியுமா? எழுத்தாளர் ஜெயமோகனால் மட்டுமே முடியும் என்பதே மேற்கண்ட அத்தனை ஆசிரியர்களின் அத்தனை படைப்புகளையும் (ஜெயமோகன் உட்பட) கடந்த முப்பது வருடங்களாகப் படித்த பின் என்னுடைய முடிவு. ஆம், சமூகக் கோபுரத்தின் எந்த அடுக்கினுள்ளும் அத்தகைய ஒரு உயரிய படைப்பை நிகழ்த்திக்காட்ட அவர் ஒருவரால் மட்டுமே முடியும்.
இணையத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொண்டு மேலே குறிப்பிட்ட அத்தனை எழுத்தாளர்கள் எழுதிய மொத்தப்பக்கங்களைவிட பலமடங்கு எழுதிக்குவித்துக்கொண்டேயிருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன், உயர்ந்த தரத்தில். ஒரு வாழ்நாள் உழைப்பைக்கோரும் உலகின் பெரும்படைப்பான 'வெண்முரசு' நாவல் வரிசையில் மட்டும் இருபத்தையாயிரம் பக்கங்களுக்கு மேல். 'ஹொய்சளா' பாணி கோயிலை முடிவில்லாமல் கட்டிக்கொண்டு போவதுபோலத்தான். அத்தனை நுண்மை அத்தனை விரிவு. இதற்கு இணையாக பிற நாவல்கள், நாவல் அளவுக்கேயான குறுநாவல்கள், குறுநாவல் அளவுக்கேயான சிறுகதைகள். இதே அளவிலும், தரத்திலுமான சிந்தனையைச் செம்மைப்படுத்தி செழுமைப்படுத்தும், ஒரு வாழ்நாளுக்கு மூளை உணவாகும் அபுனைவுகள். இத்தனைக்கும்மேல் ஊட்டியில் காவியமுகாம், கோவையில் விஷ்ணுபுரம் விழா, இளம் வாசகர் கூடுகை, எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை என்று வருடம்தோறும் தொடர் இலக்கியச் செயல்பாடுகள். இதற்கு நடுநடுவே 'பாரதி மகாகவியா?' போன்று தேனடையில் கல்லெறிதல்கள். மேலும் திரைப்படச் செயல்பாடுகள், நீண்ட பயணங்கள் என்று சலிக்காத உழைப்பாளி. ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கை வாழ்ந்தவன் பாரதி. அது ஜெயமோகனுக்கும் பொருந்தும். கேட்காமலேயே பெரிதினும் பெரிதாக அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருக்கும் ஜெயமோகனைப் பற்றி, கி.வா.ஜ வுக்குப் போட்டியாக 'என் ஆசிரியர் பிரான்' என்று நூலே எழுதலாம்தான். சமீபத்தில் மறைந்த என் மாமனார் எப்போது நமஸ்கரித்தாலும் 'ஸ்ரேயஸா இருங்கோ' என்பார். அறுபதாம் அகவை காணும் எழுத்தாளர்களின் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இன்று ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் 'ஸ்ரேயஸ்' என்றும் பெருகியபடியே இருக்கட்டும் என்று வணக்கத்துடன் விழைகிறேன்.
***
ப்ரியம்வதா
ஜெ எனக்கு அளித்தது: ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் – தெளிவு. அவருடைய எழுத்துக்களை வாசிக்க வாசிக்க, குறிப்பாக புதிய வாசகராக உள்நுழைந்தபொழுது அவருடைய வாழ்க்கை நோக்கை முன்வைக்கும் கட்டுரைகளும் கடிதங்களும் என்னுள் மெல்ல மெல்ல ஒரு மாற்றத்தை நிகழ்த்தின. என்னைச்சுற்றி இருந்த புகைமூட்டங்கள் விலகி எனக்கென ஒரு பாதை தெளிவுற்றது. என் அகம் அனிச்சையாக எங்கு வெளிப்படுகிறது என்று என்னால் உணர முடிந்தது. என் வாசிப்பும் ரசனையும் கூர்மை அடைந்தன. நான் எதை முக்கியம் என்று கருதுகிறேன், எதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் தெளிவு ஏற்பட்டது.
நான் ஜெவை முதன்முதலில் 2017 தஞ்சை புதிய வாசகர் சந்திப்பில்தான் சந்தித்தேன். அதன்பிறகு எழுதியிருந்தேன், அந்த இரண்டு நாளும் ஒரு பூதக்கண்ணாடியின் அடியில் கிடந்தது போல் உணர்ந்தேன் என. ஆம். ஜெவின் எழுத்துக்கள் மூலம் எனக்குக் கிடைத்தது அதுதான். என்னை நானே கூர்ந்து நோக்கச் செய்யும் ஒரு பூதக்கண்ணாடி, மற்றும் அதன் மூலம் அடையும் பரிணாமும் தெளிவும்.
நண்பர் ஸ்வேதாவுடன் அவரது தளத்தில் வெளியிட்டிருந்த பழைய கட்டுரை ஒன்றை பற்றிப் பேசும்போது ‘அது B.J.’ என்றார். ’பிஃபோர் ஜெயமோகன்’. நிஜமாகவே அப்படித்தான் தோன்றுகிறது! என் வாழ்க்கையையும் B.J, A.J என வகுத்துக்கொள்ளலாம் என்று!
ஜெயுடன் நான் அதிகமாக தனிப்பட்ட உரையாடலில் இருந்ததில்லை என்றாலும் மானசீக உரையாடல் ஒன்று நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அதைத் தாண்டிச் செல்வதென்பதும் ஒரு சவால்தான்.
நன்றி,
ப்ரியம்வதா
***
No comments:
Post a Comment