அருணாச்சலம் மகராஜன், லோகமாதேவி, லக்ஷ்மி நாராயணன்

அருணாச்சலம் மகராஜன்



ஜெ எனக்கு அளித்தது என்ன?


அருகமைதல். விழைதலும், எய்துதலும், அவற்றின் விளைகனிகளின் நிறைவும், நிறைவின்மையும் என முடிவிலாச் சுழலில் சுழன்று ஆழ்ந்த மனச்சோர்வடைந்த தருணத்தில் தான் வெண்முரசின் வாயிலாக அவரென்னை ஆட்கொண்டார். ஆதலும், அமைதலுமே என்னை அச்சுழலில் இருந்து வெளியேற்றும் என வாழ்வின் செல்திசையை காட்டினார். அத்திசையில் என்னைச் செலுத்தினார். இப்பிறவியில் இப்பயணத்தினூடாக மெய்மையை அடைவேனா எனத் தெரியவில்லை. ஆனால் வரும் பிறவிகளிலும் அதை நோக்கிய ஒரு பயணத்திற்கான வழியைக் காட்டிவிட்டார். குருவென அவர் அருகமைய வாய்த்தது என் நல்லூழ். குருவைக் கண்டடைந்தவன் எப்போதும் தனியனல்ல. அவனுக்கு சோர்வில்லை. தான் யாரென்பதைத் தயங்காமல் அனைவரின் முன் வைக்க அச்சமில்லை. ஏனெனில் அவனுடன் அவனை உள்ளும் புறமும் அறிந்த ஒருவரின்.அருகமைவு எப்போதும் உள்ளது. பலர் இருக்கும் ஒரு பொது வெளியில் திடீரென ஆடை அவிழ்ந்து அம்மணமாக, அதனால் கூசி நிற்பதைப் போன்ற கனவு எப்போதுமே என் தூக்கத்தை சிதறடித்து, பதற வைக்கும். அக்கனவு ஜெயின் அருகில் அமைந்ததை உணர்ந்த கணத்தில் இருந்து இன்று வரை திரும்ப வரவில்லை. இனியும் வராது. என்னை எங்கும் நான் நானேயாக, எந்த கோமாளி வேடமும் இன்றி முன்வைக்க முடிகிறது. ஆம், இது அவரின் ஆசி. அவர் அருகே சொல்லின்றி, மொழியின்றி ஒரு அமைதல். இதுவே அவர் எனக்களித்தது.


அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்


***


லோகமாதேவி



சுஜாதா, பாலகுமாரன் போன்ற வணிக எழுத்தாளர்களுக்கு பிறகே நான் ஜெ வின் எழுத்துக்களுக்கு வந்து சேர்ந்தேன். ரப்பரில் ஜெ அறிமுகம் என்றாலும் சங்க சித்திரங்கள் ஒரு பெரும் திறப்பு எனக்கு. நான் அதுவரை அறிந்திருந்த தாவரவியல் ஒரு பெரும்பாலை போல வறண்டிருந்தது.  சங்கசித்திரங்கள் வழியே  ஜெ காட்டிய விரிவு அப்பாலையில் பெருமழையாக பெய்தது.  என் வாழ்க்கையோடும், நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் துறையுடனும் சங்கசித்திரங்களின் வாசிப்பை பிணைத்துக்கொண்டேன்,


ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமிருந்த எனக்கு என்னைசுற்றி ஒரு அறிவார்ந்த உலகம் இயங்கிக்கொண்டிருப்பதையும் அவரது எழுதுக்களை தொடர்ந்து வாசிக்கையில்தான்  அறிந்துகொண்டேன். பிறகு வெண்முரசு.முதற்கனலின் முதலத்தியாயத்திலிருந்து முதலாவிண்  இறுதி அத்தியாயம் வரையிலும் நான் அஸ்தினாபுரியிலும் இந்திரபிரஸ்தத்திலும்,  மகதத்திலுமாக இருந்தேன். வெண்முரசின் தாளம் எனக்குள் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருந்தது இருக்கிறது.


வெண்முரசை வாசித்தேன் என்று  மட்டும் சொல்வதற்கில்லை, வெண்முரசுடனேயே வாழ்ந்தேன். மீள்வாசிப்பும் பிறகு தொடர்கிறது.


ஜெ வின் எழுத்துக்களை மட்டுமல்லாது அவரை ஒரு ஆளுமையாகவும் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  உலகளவில் அசாதாரணமான ஒரு படைப்பிற்கு பிறகும், அத்தனை உயரத்திலிருந்தும்,  அந்த உயரத்தை தலைக்கு ஏற்றிக்கொள்ளாத, தனக்கான விழுமியங்களிலிருந்து துளியும் விலகாத, தொடர்ந்து  பயணிக்கிற, எழுதுகிற, வாசிக்கிற, சகமனிதர்களிடம் வாஞ்சை கொண்டிருக்கிற அவரிடமிருந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன்


என் வாழ்க்கையையும், ஒரு ஆளுமையாக என்னையும் ஜெ வின் எழுத்துக்களுக்கு முன்னும் பின்னும் என பிரித்துக்கொள்ளலாம் என்னும் அளவுக்கு  பெரும் வேறுபாடு இருக்கிறது. நான் என்னை அன்னை, ஆசிரியை, ஜெ வின் வாசகி என்று மட்டுமே  முன் வைப்பேன் என்றும் ,எங்கும் எப்போதும். நன்றி 


- லோகமாதேவி, எழுத்தாளர்


***


லக்ஷ்மி நாராயணன்



ஜெ. எனக்கு அளித்தது என்ன?


இந்தக் கேள்விக்கான பதிலை, ஜெவை என் வாழ்வில் நான் கண்டடையாவிட்டால் எவ்வாறு இருந்திருக்கும் என்று ஒப்பு நோக்கி கூற முயற்சிக்கிறேன்.


இதுவரை நான் அவரிடம் பேசியதை ஒரு பக்கத்துக்குள் அடக்கி விடலாம், எப்போதும் கடைசி நிரையிலிருந்து இருந்து வாய் பார்த்து கொண்டு தான் இருந்திருக்கிறேன். 10-15 முறை நேரில் சந்தித்த போதிலும் அவருக்கு என்னை தெரியாது, அவர் நினைவில் வைத்துகொள்ளும் அளவில் இதுவரை நான் ஒன்றும் செய்யவுமில்லை. அவரின் படைப்புகளை முழுமையாக கற்றவனும் அல்லன்.


இப்படி இருக்கையில் அவர் எனக்கு இலக்கியம் தாண்டி அறம் குறித்த பார்வை, தன்னொழுக்கம், நம் குழந்தைகளை அணுகும் முறை, உழைப்பு - கொண்ட கடமைக்கு தலை கொடுத்தல், எதையும் புன்சிரிப்புடன் கடந்து செல்லும் தன்மை, பிராணிகளின் மீதான கனிவு, எந்த ஒரு விசயத்திலும் நம் எண்ணங்களை தொகுக்கும் முறை, மகாராஜபுரம் சந்தானம், கம்பராமாயணம், அறிவார்ந்த நண்பர்கள், சுவை, காந்தி என இவை எல்லாவற்றையும் அருளினார். 


ஒரு படித்த, பணம் சம்பாதிக்க மட்டும் கற்ற காட்டுமிராண்டியை பண்பாளனாக, சுய ஒழுக்கம் கொண்டவனாக, சுவை அறிந்தவனாக, கனிவு கொண்டவனாக எங்கோ தூரத்தில் இருந்து மாற்றினார். முழுதாக மாறாவிட்டாலும் அந்த திசை நோக்கி என்னை செலுத்தியவர் ஜெ தான்.


எது அறம் என்பதே அவரிடம் நான் பெற்றதில் முதன்மையானது என்றாலும் மேலே சொன்னவை எல்லாம் இல்லாமல் வாழ்க்கை இல்லையெனில் அவர் எனக்கு அளித்தது வாழ்க்கை என்றே கூறுவேன். Cliche வாக இருந்தாலும் இதுதான் உண்மை.  அவர் சொற்களை சொல்லி முடிக்கிறேன்


“அவர் எனக்கு அளித்தது என்னவென்று யாருக்கும் புரிய வைப்பது கடினம்”.


- லக்ஷ்மி நாராயணன், வாசகர்

No comments:

Post a Comment