வள்ளியப்பன்
மரபில் என்னை எங்ஙனம் பொருத்திக் கொள்வது என்னும் தெளிவை அளித்தவர் ஜெ. பள்ளிப்பருவம் முழுதும் கிராமத்தில் வளர்ந்தவன். அதனாலேயே மரபு சார்ந்த அனைத்தின் மீதான ஒரு விலக்கமும் அது தளை என மீறிச் செல்லும் ஒரு எத்தனிப்பும் கல்லூரிப்பருவத்தில் இயல்பாகவே இருந்தது. கல்லூரிக்காலத்தில் ஜெ யின் சங்க சித்திரங்கள் வாசித்திருந்தாலும் பணிக்குச் செல்லத் தொடங்கிய சில வருடங்கள் வெறுமையிலேயே கழிந்தது. பணி நிமித்தமாக சென்னை வரவேண்டியிருந்தது ஒரு நல்லூழ். ஜெ யை வாசிப்பதற்கான சூழலும் தொடர்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் சென்னையில் அமைந்தது. மரபில் வேண்டியதும் அல்லதும் தெளிந்து, மரபினுடனான தற்காலிக பிணக்கு முடிவுக்கு வந்தது.
மரபு என்றில்லை எந்த ஒரு கருதுகோளுக்குமே ஜெ என்ன சொல்கிறார் அல்லது சொல்வார் என்று தேடுவது இயல்பாகியது. பறப்பதையே அறியாதோர் பலர். பறக்க எத்தனிப் போர் சிலர். பறக்க வாய்த்தோர் வெகு சிலர். தன் இனத்தையே சேர்த்துக்கொண்டு ஒருவர் உயரப்பறத்தல் என்பது அரிதினும் அரிதாகவே நிகழ்வது. அந்நிகழ்வறிந்து உடன் பறக்கும் வாய்ப்பமைந்தது நல்லூழ்.
- வள்ளியப்பன், வாசகர்
***
பார்கவி
கலை இலக்கிய அழகியலுக்கும் அரசியலுக்குமிடையே காணக்கூடிய விழுமிய முரண் என்பது மரபுக்கும் புதுமைக்குமான தத்துவப்போர் என்று தோன்றும். இது கனவுகளுக்கும் தகவுகளுக்கும் இடையே நிகழும் குருதிப்பூசல். இவ்விரு வேறு உலகத்தில் அமைந்துத் திகழ சாத்தியப்படுத்தும் மெய்யியல் பார்வையையும் வரலாற்றுப் பார்வையையும் நான் ஜெ வழி அடைந்தேன் எனலாம். மானுட வரலாற்றின் முக்கியமான பல புள்ளிகளை தேடிப் பதித்தது போன்ற சொற்களால் அடுக்கிக் கடலாகச் சரித்து விரித்து எடுத்துக் கோர்க்கும் வெண்முரசு என்னும் பெருங்காப்பியத்தில் நான் மீள மீள உணர்ந்து கொண்டே இருந்தது அதன் கட்டமைப்பில் இழைந்தோடும் ஒருமையை. ஒட்டுமொத்தப் பார்வை என்பது துறவிகளுக்கும் ஞானியருக்கும் கலைவலருக்கும் தான் என்ற சொல்லின் பொருள் வாசிப்பில் துலங்கி நின்றது. அதன் வழி நான் ஈட்டியது ஒரு பெருங்கனவு. நான் திளைக்கும் பித்து நிலைகள். எனக்கான மலைமுடித்தனிமை. அதில் எப்போதாவது மானுடமும் கனியும் என்ற நம்பிக்கை. துருவங்களாகப் பிரிந்து நிற்கும் உலகத்தில் இந்தக் கூற்றுப் பாசாங்கான பிதற்றல் மொழி மட்டுமே. ஆனால் செயற்கனவுகள் இங்கிருந்து தான் உருவாக முடியும் எனத் தொன்றுகிறது. ‘இலக்கறிந்த பறவை’ என்ற சொல்லாடலை நான் அடிக்கடி நினைவில் மீட்டியபடி இருப்பேன். இதில் இலக்கென்பது பறவை சென்றமரும் வனமா ஒற்றைக் கிளையா அது பறக்கும் வானமா அல்லது அந்தப் பறவையே தானா என்ற கேள்வி எஞ்சும். இந்தக் கேள்வியும் அதிலிருந்து பெறும் விடுதலையுணர்வும் ஆசிரியனின் அருங்கொடை.
- பார்கவி
***
V.S. செந்தில்குமார்
வாழ்க்கையில் ஏதோ ஒன்றே ஒன்றை மட்டும் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால், சிறிதும் யோசிக்காமல் பயணம் செய்வதை மட்டும் கொடுத்துவிடு என்று வேண்டி நிற்பேன். என்னை நான் கண்டுகொள்வது பயணத்தில் தான். என் வாழ்வை அர்த்தப்படுத்துவது என் பயணங்கள். நிறைவுடனும் நான் வாழும் இந்த வாழ்விற்கு காரணமான பயண அனுபவங்களை பெறுவதற்கு வித்திட்டவர் என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள்.
என் வாழ்வை 2008ல் ஜெ வுடனான இந்திய பயணத்திற்கு முன், பின் என பிரிக்கலாம். 18 நாட்கள், 7000 கி.மி சாலை வழி பயணம், எந்த முன்னேற்பாடும் இல்லை. பாரதத்தின் பல்வேறு நிலப்பகுதிகளை, மக்களை, கலாச்சாரத்தை கண்டு வியந்து, அதுவரை நான் கொண்டிருந்த வாழ்க்கையை பற்றிய கருத்துக்களை, சிந்தனைகளை உடைத்தெறிந்த பயணம். லெபாக்ஷி, ஸ்ரீசைலம் போன்ற சைவத்தலத்தில் , அகோபில வைணவ மடத்தில், இந்தியாவின் முதன்மையான சிற்ப அற்புதம் என்று ஜெ வால் வர்ணிக்கப்பட்ட ராமப்பா கோவில், சாஞ்சி ஸ்தூபி, இமயமலை சிகரங்களை ஒத்த கஜீராகோ, மரணத்தின் நகரமான காசியில் நூற்றியெட்டு படித்துறைகளையும் கங்கை ஓரமாக நடந்தே சென்றுவிட்டு, அரிச்சந்திர கட் முன் பிணங்கள் எரிவதை அருகில் இருந்து முழுதும் பார்த்து, கங்கா ஆராதனைக்கு பிறகு, கங்கையின் பெருவெள்ளத்தில் சிறு படகில் இரவில் பௌர்ணமி நிலவு ஒளியில் பயணித்து, போத் கயா மகா போதி மரத்தின் அடியில் அமர்ந்து, உலக ஞானத்தின் தலைநகரான நளந்தாவில் நடந்து, பூரி கடற்கரையில் களித்து என ஒரே பயணத்தில் ஒரு பெருவாழ்வை வாழச்செய்தவர் ஜெ.
அன்றிலிருந்து இன்றுவரை ஜெவின் பெரும்பாலான பயணங்களில் கூட பயணிக்கும் பெரும் பேரு பெற்றிருக்கிறேன். வரலாற்றுக்கு முந்தைய தொல்பொருள் பகுதிகள், முக்கிய வரலாற்று இடங்கள், இந்து, சமண, பௌத்த தளங்கள், காடு, மலை, பனிப்பிரதேசம், பிரம்மாண்டமான நிலப்பகுதிகள் என தொடர்ந்து ஜெவுடன் பயணித்து கொண்டும், அவரிடம் கற்றுக் கொண்டும் இருக்கிறேன் .ஜெ போன்ற ஆசிரியரோடு பாரதத்தில் பயணிக்கும் வாய்ப்பு என்பது பெரும் நல்லூழ்.
தீரா வேட்கையுடனும், குன்றா உற்சாகத்துடனும் பயணித்து கொண்டே இருக்கும் ஒரு மகத்தான பயணி ஜெ. அவர் எப்பொழுதும் சொல்லும் ஒரு வாக்கியம் "ஒரே இடத்தில் இருந்து, அங்கே உறங்கி அங்கே எழுவது போன்ற அபத்தம் வேறு எதுவும் இல்லை" . ஒரு வாரத்திற்கு மேல் அவரால் ஒரு இடத்தில் நிலை கொள்ள முடியாது. சில நாட்கள் ஆகிவிட்டது எங்காவது பயணிப்போம் என்று இவர் நினைக்கையில், கிருஷ்ணன் போன் செய்து, சார் ஒரு பயணத்திட்டம் உள்ளது உங்கள் வசதி எப்படி என்று கேட்பார்.
தமிழின் உச்ச நட்சத்திர எழுத்தாளர், உலகமெங்கும் பெரும் வாசகர்களை கொண்டவர், சாத்தியமற்றவற்றை சாதித்து வருபவர், இன்னும் பல நூற்றாண்டுகள் எழுத்தின் மூலம் வாழப்போகிறவர் என பல பெரும் புகழ் கொண்டிருந்தாலும், பயணங்களில் ஒரு முறை கூட எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று அவர் கேட்டு நான் பார்த்ததே இல்லை. உணவு, தங்கும் இடம், மற்ற எந்த வசதிகளையும் ஒரு கணம் கூட அவர் சுயநலத்துடன் சிந்தித்து நான் பார்த்ததில்லை. குழுவில் மற்றவர்களுக்கு என்னவோ அதுவே தனக்கும் என்பதில் உறுதியாக இருப்பவர். பயணிப்பதே பரவசம் அதுவும் சிறந்த ஆசிரியரும், நட்பான ஆளுமையும் உடைய ஜெ வுடன் பயணிப்பது பெரும் அனுபவம், பேரானந்தம்.
என் மகிழ்வான, நிறைவான வாழ்விற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கும் எனது மதிப்பிற்குரிய ஆசிரியரை இத்தருணத்தில் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
V.S. செந்தில்குமார்
***
No comments:
Post a Comment