உடன் பிறந்தவர் - லக்ஷ்மி மணிவண்ணன்

 


ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் இருக்கும். சுந்தர ராமசாமி பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றினை எதேச்சையாகப் படித்தேன்.யார் எழுதினார்கள் என்பது  என்னுடைய நினைவில் இல்லை.ஆனால் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது நினைவில் தங்கியது.சுந்தர ராமசாமியின் மாணவர்கள் இருவர் ,ஒருவர் ஜெயமோகன் .மற்றொருவர் லக்ஷ்மி மணிவண்ணன் என்று அதில் சொல்லப்பட்டிருந்தது.அப்படிகூட இல்லை.சரியாக சொல்வதாயின் ஜெயமோகன்,லக்ஷ்மி மணிவண்ணன் ஆகிய இருவரின்  குரு சுந்தர ராமசாமி என்று ஆங்கிலத்தில் அதில் சொல்லப்பட்டிருந்தது.யோசித்துப் பார்த்தால் சுந்தர ராமசாமி தன்னுடைய வாழ்நாளில்  பல்வேறு துறை சேர்ந்தவர்களையும் என எடுத்துக் கொண்டால் ஐநூற்றுக்கும் அதிகமானவர்களைப் பார்த்திருப்பார்.அதில் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு எங்களை ஒப்ப அணுக்கம் இருந்திருக்கும்.பிற்காலங்களில் அவரிடம் ஏராளமானோர் வந்து தங்களை புதிதாகவும் ஒட்டிக் கொண்டார்கள்.அது இயல்பானதும் தானே? அதிலிருந்து எங்கள் இருவரையுமே அந்த குறிப்பை எழுதியவரின் மனம் சேகரித்திருக்கிறது.அடையாளம் கண்டிருக்கிறது.காலம் கண்டறியும் அடையாளம் என்பது இதுதான்.


இத்தனைக்கும் சுராவின் காலத்திற்கு பிறகு அவருடைய நண்பர்கள் பற்றி ,அவருக்கு அணுக்கமானவர்கள் பற்றி ,ஆதாரபூர்வமானது என்கிற அழுத்தத்துடன் எழுதப்பட்ட எல்லா குறிப்புகளிலும் என்னுடைய பெயர் விலக்கப்பட்டிருந்தது .ஜெயமோகன் தவிர்க்கப்பட்டிருந்தார்.அப்படி விழிப்புணர்வுடன் விலக்கப்படும் பிரதிகள் நிச்சயமாக நாம் விரும்பாதிருந்தாலும் கூட ,நம் கண்களில் முன்னே வந்துநிற்கும் வினை கொண்டவை.அதற்காகவே அவை பிறப்பெடுக்கின்றன. அவற்றின் கர்மா அவ்வாறானது.ஜெயமோகன் சுந்தர ராமசாமியிலிருந்து விரிந்து பெருவிருட்சமாக எழுந்து நிற்பவர்.சூரிய நிழல் கூட  தமிழ் இலக்கியத்தில் இருந்து அவரை இனி மறைக்க இயலாது.அவர் கம்பனை விட சிறந்தவர்.நான் சுராவில் கிளைத்த சிறு மலர்தான்.பலாவின் அடித்தண்டில் முளைக்கும் மலர் மொக்கு.சின்னஞ்சிறு மலர்.காலத்தின் மனம் எங்கள் இருவரையும் அருகருகே வைத்திருக்கிறது.புரிந்து கொள்ள முடியாத ஆச்சரியங்களில் ஒன்று இது.புனைவெழுத்தாளர்கள்,முக்கி முக்கி ஏலம் கேட்கும் அகப்பொருளை ஒரு ரூபாய் அதிகம் வைத்து ஏலத்தில்  தட்டிச் செல்பவன் கவிஞன். எப்படியிருந்தாலும் எங்கள் இருவரிலும் தன்னை ஆழமாக,வசதியாக,அழகாக இறக்கி வைத்துக் கொண்டவர் சுந்தர ராமசாமி.


இப்போதும் ஏறிட்டு ஒருவரை நான் காணும்போது ,ஏதேச்சையாக நிமிர்ந்து  பார்க்கும் போது உள்ளிருந்து சுரா தான் காண்கிறார். தரையில் ஒருகால் மடித்து நான்   அமரும்போது அவர் என்னுடலுக்குள்ளிருந்து வெளியில் வந்து அமர்ந்து கொள்கிறார்.சில கணங்களில் எனக்கு இது உறுத்திவிடும், தலைதாழ்த்திக் கொள்வேன்.நான் எழுந்து நடக்கும் விதங்களில்,அமரும் விதங்களில் ,கைகளை அசைக்கும் விதத்தில் இன்னமும் சுரா இருக்கிறார்.அவர் என்னிலிருந்து அசைவதை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.செய்யவும் இயலாது.சத்தியத்தின் அசல் அம்சம் அவர்.அந்த அம்சம் உள்வந்து இறங்கிவிட்டால்,நாம் தகாதோராய் இருப்பினும் கூட அந்த அசல் அம்சம் வெளியேறுவதில்லை.ஜெயமோகனிடம் இப்படி சுரா வெளிப்படும் தருணங்கள் இப்போதும் உண்டு.சுராவை எழுதாமல் ஜெயமோகனை எழுத முடியாது.இருவரும் இல்லாமல் என்னையும் ஒருவர் ஓரிரு வாக்கியங்களுக்கு மேல் சிந்திக்க இயலாது.சித்திக்காது.இன்று சுரா வைக் காட்டிலும் பல மடங்கு பெரிய படைப்பாளி ஜெயமோகன்.சுராவும் அதையே விரும்பியிருப்பார்.அவரில் தொடங்குபவர்களை அவரிலும் விரிய கனவு காண்பவர் அவர்.ஆனால் எங்கள் இருவரைக் காட்டிலும் சுந்தர ராமசாமியே பெரியவர்,மேலானவர்.சான்றோர் சுந்தர ராமசாமிதான்.மலரோ மலையோ அவரே எங்கள் அடிமரம்.எங்கள் இருவருடைய ஆன்மாவைக் காட்டிலும் சுந்தர ராமசாமியின் ஆன்மா பரிசுத்தமானது.சந்தேகமே வேண்டாம்


எனக்கு இயல்பிலேயே அமைந்த ஒரு குணம் உண்டு.முன்வைப்பதில்லை.என்னையும் முன்வைப்பதில்லை.என்னை படித்துப் பாருங்கள் என எவரையும் கேட்டுக் கொண்டதில்லை.சுராவும் அவ்வாறு கேட்பவர் அல்ல.படித்தேன் என்றால் ஆர்வமுடன் நிமிர்ந்து பார்ப்பார்.என்னைச் சார்ந்தவற்றையும் வலிந்து முன்வைப்பதில்லை.முன்வைத்துக் கொண்டேயிருப்பவர்களுக்கு பின்பக்கமாக நுழைந்து அவர்களே அறியாத ஒரு நாளில் வெளியேறி விடுவேன்.சுராவிடமிருந்தும் கூட பின்னாட்களில் விலகி ஓடியிருக்கிறேன்.அவர் மிஷினரியாக மாறும் காலங்களில் நான் ஒளிந்து கொண்டேன்.இது எளிதல்ல,தலைமறைவாதல் என்பதே தனியாக வெளியேறுவதுதான்.நெரிபடும் கூட்டத்தினர் உங்களை கசந்து துப்பிக் கொண்டிருப்பார்கள்.கிசுகிசு பேசுவார்கள்.திரும்பிப் பாராமல் ஓடி விட வேண்டும். நான் என்னை முன்வைப்பது என்பது குறைவாக எழுதும் எழுத்துகளால் மட்டுமே,கவிதைகளால் மட்டுமே,சில எதிர்வினைகளால் உள்ள அளவே.என்னுடைய வாழ்க்கை மிகவும் சாமானியன் ஒருவனுடைய வாழ்க்கை.அங்கே நான் மிகவும் சாதாரணன்.நான் விரும்பக் கூடியதும் சாதாரணனையே. ஆனால் என்னுடைய சிறு வயது முதற்கொண்டு குடும்பங்களில் இருந்து தொடங்கி புகைப்படங்களில் வெட்டப்படுபவனாக ,சாட்சியங்களில் பெயர் அழிக்கப்படுபவனாக ,நினைவுகளில் பிறரால் அகற்றப்படுபவனாக  இருக்கிறேன்.நான் இல்லாமலும் முடியாது.நானில்லாத இடங்கள் குடும்ப விழாக்கள் பெரும்பாலும் வெறுமை சூழும்.நான் கண்டிப்பாக இருந்தாக வேண்டிய இடங்களில் இல்லை எனில்  வெறுமை சூழும்.அதனை விலக்குபவர்களும் அறிவார்கள்.சிறுவயதில் முற்போக்கு கலையிலக்கிய அமைப்புகளில் குழு புகைப்படங்களில் என்னைத் துண்டித்துவிடுவார்கள். என்னை வெட்டி எடுத்து விட்டுத் தயாரிப்பார்கள்.அவை ஊனமுற்று இருக்கும்.பார்த்தாலே தெரியும்.நான் வெட்டப்படும் படங்களில் உண்மையாகவே நான் அதனினும் பெரிதாக  இருப்பதையே சம்பந்தமுடையவர்கள் காண்கிறார்கள். அதிலுள்ளவர்களுக்கு வலுவாகப் பதிவாகிறேன்.ஆந்தாலஜிகளிலும் இவ்வாறே.பெருந்தொகுப்புகளில் இல்லாதவன் என பதிவாகிறேன்.தொகுப்போர் இல்லாமைக்கான காரணங்களை தொடர்ந்து பேசி வலுவூட்டுகிறார்கள்.தமிழில் அவர் என்ன நினைப்பார் ? என நினையாத செயல்களே இல்லை.ஒரு பதிப்பகத்தோடு தொடர்பு உள்ளவர் என்றால் பதிப்பகத்தின் நிறுவனத்தின் உரிமையாளர் என்ன நினைப்பாரோ என்பதாக அந்த எண்ணம் இருக்கும்.ஒரு இதழ் ஆசிரியரைச் சார்ந்தவர் என்றால் ,அவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ ? என்ற நோக்குடன் செயல்படுவார்கள்.ஒரு ஆசிரியனைச் சார்ந்திருப்பவர் ,அந்த ஆசிரியருக்கு தவறாக ஆகிவிடுமோ? என்று பார்ப்பார்கள்.நாம் இலக்கியத்திலும் ஒரு பின்தங்கிய சமூகத்தின் உளநிலையை பிரதிபலிப்பவர்கள் தாம்.சார்ந்திருப்பின் காரணங்களை வலிமைப் படுத்துவதில் வல்லவர்கள்.ஒரு உண்மையை மறைப்பதன் பொருட்டு பேசப்படுகிற அனைத்து பிற உண்மைகளும் பொய்யாகிவிடுகின்றன.ஒன்றும் செய்வதற்கில்லை.ஆனால் அனைத்திற்கும் பதில் காரணங்களை அடுக்கிக் கொண்டே இருப்பவர்களிடம் எனக்கு முகச் சுளிப்பு உண்டு.இப்போது இவையெல்லாம் நன்றாகப் பழகி விட்டன.வெட்டப்பட்டவற்றை அறிவதற்குண்டான தொழில் நுட்பங்களும் வந்து விட்டன.வெட்டப்பட்டவற்றைத் தேடுபவர்களுக்கு இதில் யார் வெட்டப்பட்டிருப்பார் என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.




ஆனால் ஜெயமோகனின் ஸ்திதி நிலை வேறு.எந்த இடத்தில் விலக்கப்பட்டாலும் அந்த இடத்தில் அவ்வாறே உயிருடன் விளங்குவார்.விலக்கப்பட்ட இடத்தில் அவர் பூரணமாக நின்று தெரிவார்.அவரை மறைக்க இயலாது.துண்டித்தல் சாத்தியமற்றது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு பெரிய கருத்தரங்கு நிகழ்த்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்.ஏராளம் நிறுவன பணம் கொண்டவர்கள் திட்டமிட்ட கூட்டம் அது. ஆலோசனை செய்வதற்கே சம்பளப்பணம் கொட்டப்படுகிறது.முதல் கூட்டம் சிறப்பாக நடந்தது பத்துப் பதினைந்து பேர் கலந்து கொண்டோம்.ஆயிரக்கணக்கில் சம்பளம்.அடுத்த ஆலோசனை கூட்டத்திற்கு ஒவ்வொருவரும் அழைக்க வேண்டியவர்களின் பட்டியல் கொண்டுவர கேட்டுக் கொள்ளப்பட்டோம்.நிறுவனங்கள் பலவற்றிலும் நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது.அங்கிருப்போருக்கு எதுவுமே தெரிவதில்லை.இடைத்தரகர்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள்.இங்கு யார் தரகர் ,யார் தரகர் இல்லாதவர் என்பதையெல்லாம் அறிந்து கொள்வது மிகவும் கடினம்.சிடுக்கு.அதனையும் தரகர்களே தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.ஒன்றில் தரகராக இல்லாதவர் மற்றொன்றில் தரகராக செயல்படுவார்.பண்பாட்டுத் தரகர்கள் இப்படித்தான் தமிழ்நாட்டில் பெருத்திருக்கிறார்கள்.ஊடகங்கள் எனில் முதன்மை நிலையில் இதழியலாளர்கள் ஐந்தாறு தரகர்களை கையில் வைத்திருக்கிறார்கள்.இந்த தரகர்களை மோதி எவருமே வெற்றி பெற இயலாது.பதவிப் பயமும் அறியாமையின் பயமும் ஒருங்கிணைந்தவர்கள் தமிழ் இதழியலாளர்கள். நான் ஜெயமோகனில் இருந்து  தொடங்கி என்னுடைய பட்டியலைத் தந்தேன்.அந்த பட்டியலில் இன்னும் பத்தொன்பது பேர் இருக்கிறார்கள்.பட்டியலைப் பெற்றுக் கொண்டதும் கூட்டத்தில் அசுவாரஸ்யம் ஏற்படத் தொடங்கியது.சிறுவயது முதற்கொண்டு கவனித்து வருகிறேன்.மடையர்கள் ,தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவன அதிகாரத்தின் உணர்வு நிலையில் வலிமையாகப் பங்கெடுப்பார்கள். இத்தகைய அசுவாரஸ்யத்தை கிளப்புவதில் மன்னர்கள் அவர்களே. கைதேர்ந்தவர்கள்.ஒருங்கிணைப்பாளர் என்னருகே வந்தார்.அந்த பட்டியலில் எல்லாமே எங்களுக்கு உடன்பாடே.உங்களுடைய பட்டியலில் அந்த முதல் பெயரை மட்டும் நீக்கி விட்டு பிற எல்லாவற்றையும் அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்றார்.இந்த பட்டியலில் உள்ள பிற பெயர்களை நீங்கள் ஒருவரையெனும் அறிவீர்களா? என்று கேட்டேன்.இல்லை என்றே பதில் வந்தது.அந்த பட்டியலில் உள்ள பிறர் இருந்தாலும் இல்லையென்றாலும் கூட சமகால தமிழ் இலக்கிய கருத்தரங்கு ஒன்றினை நடத்திவிட முடியும்.ஆனால் ஜெயமோகன் அழைக்கப்படாமல் அப்படியொரு கருத்தரங்கு நடத்துவது குறைபாடானது ,பூரணமற்றது என்று பதில் கூறி திரும்பி விட்டேன்.பின்னர் அந்த கருத்தரங்கும் நடைபெறவில்லை என்றார்கள். அது நடந்திருந்தாலும் ஒன்றுமில்லை,இல்லாதிருந்தாலும் ஒன்றுமில்லை.ஏன் இதனை இங்கே சொல்கிறேன் என்றால் என்னுடைய இருப்பிற்கு விலையற்ற இடத்தில் என்னால் இருக்க முடியும்.வலிந்து அழைத்து கடினப்பட்டு வரவழைத்து என்னைப் பேசவிடாமல் பார்த்துக் கொள்கிற கூட்டங்கள் பல உண்டு. பங்கேற்பற்ற இருப்பை வெறுப்பவன் நான்.அது ராஜ்ய சபையாக இருப்பினும் சரிதான்.தெய்வ சபையாக இருப்பினும் சரிதான்.பலசமயங்களில் அவ்வாறான கூட்டங்களிலேயே கலந்தும் கொள்கிறேன்.இடைமறித்துப் பேசிவிடுவானோ பதற்றத்திற்குள்ளாவார்கள்.கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.அதில் எனக்கு எவ்விதமான பிரச்சனைகளோ ,இடர்பாடுகளோ கிடையாது.பூஞ்சைகளின் பயம் அது.பெரும்பாலும் என்னுடைய வாழ்வே கூட ,எனக்கு எவ்வித முக்கியத்துவங்களும் இல்லாத இடங்களில் இருப்பதாகவே அமைந்திருக்கிறது.அசோகமித்திரனின் வாழ்வு போல,ஞானக்கூத்தனின் வாழ்வு போல.அதனால் ஒன்றுமில்லை.ஆனால் தமிழ் இலக்கியச் சூழலில் சுந்தர ராமசாமிக்கும்,ஜெயமோகனுக்கும் இடமற்ற இடங்களில் என்னால் இருக்க முடியாது.அங்கே எனக்கு பேசவோ உரையாடவோ ஒன்றுமே கிடையாது.இத்தனைக்கும் ஜெயமோகனும் நீங்களும் ஒத்த கருத்துடையவரா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்வேன்.தமிழில் எனக்கு ஆகக் குறைவான வேறுபாடுகள் கொண்டவர் ஜெயமோகன் என்று வேண்டுமானால் அதனை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.அதுவே உண்மையும் கூட .அவருடைய விசையை எடுத்து கொண்டு ஆற்றுவதற்கு எனக்கு  எதுவுமே இல்லை.அவருடைய முறைமைகள் எனக்கு பயிற்சியற்றவை.பயிற்சியைக் கூட விடுங்கள் அவை எனக்கு இன்பமற்றவை.அவருடைய பயணமும் என்னுடைய பயணமும் ஒன்றல்ல. அது வேறொரு விசை நான் வேறுவகை விசை.அவரிலிருந்து அனைத்திலும் வேறொன்றானவன் நான்.ஆனால் நாங்கள் இருவரும் ஒட்டிப் பிறந்தவர்கள் ,உடன்பிறந்தவர்கள்.ஒரு சூலில் உண்டானவர்கள்.அந்த சூலின் பெயர் சுந்தர ராமசாமி.ஒரே சூலில் அவர் கொஞ்சம் முந்திப்பிறந்தார்.நான் கொஞ்சம் தங்கிப் பிறந்தேன்.



என்னைக் காட்டிலும் பல விஷயங்களில் ஜெயமோகன் முப்பதாண்டுகள் தாண்டி யோசிப்பவராக இருக்கிறார்.முப்பதாண்டுகள் வாழ்ந்து கடந்து சென்று அதனைத் தொடுகிறேன்.அதனை எட்டிப் பிடிக்கும் போது ஐந்தாண்டுகளுக்கு அப்பால் போய் நிற்கிறார்.2015 முதற்கொண்டு தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்து இப்போது  ஓரோர் ஆண்டாகக் குறைத்து வருகிறேன்,சிறுவயதில் அவர் எனக்குச் சொன்ன பல விஷயங்களை மிகப்பெரிய தாமதத்திற்குப் பிறகே எட்டிப் பிடித்தேன்.ஒருசமயம் நேர்ப்பேச்சின் போது " நீங்களும் நானும் வேறில்லை இல்லையா ? என்று என்னைக் கேட்டார் அவர்.பதினைந்து ஆண்டுகளை நீங்கள் தொலைத்து விட்டீர்கள் ,அந்த இடைவெளி இருக்கிறது.ஐந்தாண்டுகள் பொறுப்பேற்று நடந்தால் கடக்க இயலக் கூடியது அந்த இடைவெளி என்றார். நான் மனதிற்குள் இல்லை என்றே அவருக்கு பதில் சொன்னேன்.அவருக்கு என்ன சப்தம் கேட்டது என்பது எனக்குத் தெரியாது.ஒரே சூலில் பிறந்தாலும் முற்றிலும் வேறொன்றாக இருக்க முடியும்.


தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதியில் ஜெயமோகன் எனக்கு அறிமுகமானார்.சுந்தர ராமசாமி மூலமான அறிமுகம் தான்.சுராவும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தான் எனக்கு அறிமுகம்.எல்லோரையும் போலவே ஜே.ஜே.சில குறிப்புகள் படித்த கையோடு அவரைச் சென்று பார்த்தேன். என்னுடைய அத்தனை இலக்கிய அறிமுகங்களுமே சுராவால் ஏற்பட்டவை.ஆனால் ஜெயமோகனை சந்திப்பதற்கு முன்பாகவே ரப்பர் நாவலைப் படித்திருந்தேன்.அந்த வகைப்பட்ட சமூக சரித நாவல்களில் இப்போது வரையில் எனக்கு ஈர்ப்பு கிடையாது.புத்தம்வீடு கூட எனக்கு பிடித்த நாவல் இல்லை.என்னுடைய அகம் படைப்பில் தேடுவது இதனை அல்ல.அந்த வகைகளில் படித்தவற்றில் என்னை கவர்ந்தவை புளிய மரத்தின் கதையும் ,ரப்பரும் மாத்திரமே.ரப்பரில் வரும் பிரான்ஸில் என்கிற குடியழிவுப் பாத்திரம் வளரும் குடும்பங்களின் ஒரு குறியீடு போன்றது.இந்தியாவில் சாதிய குடும்பங்களில் மூன்று தலைமுறைகளில் ஒரு குடும்பம் அடையும் சமூக மாற்றத்தைப் பற்றிய நாவல் அது.இன்று யோசித்துப் பார்க்கும் போது அந்த நாவலில் ஒரு தெளிவு இருப்பதைக் காண்கிறேன்.கதாபாத்திரமாக அடிபடாமல் ஜெயமோகன் தன்னுடைய பயணத்தை தொடங்க  அந்த நாவலில் அவர் அடைந்த தெளிவு உபயோகப்பட்டிருப்பது தெரிகிறது.இப்போதும் அது அந்த தெளிவினை போதமுள்ள ஒரு இளைஞனுக்கு  வழங்கக் கூடியதே.அது அவனை அவன் சமூகச் சுழலில் கதாபாத்திரமாக அடிபடாது காக்கும்.திசைகளின் நடுவே சிறுகதைத் தொகுப்பு பின்னர் வெளிவந்தது என்றே நினைக்கிறேன்.அப்போதெல்லாம் நான் எத்தகைய தெளிவுகளையும் எட்டியிருக்கவில்லை.ஒவ்வொன்றாக அறிமுகம் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.


விஷ்ணுபுரம் நாவல் அவருள் உருவாகும் காலங்களில் அவருடன் இருந்தேன்.அப்போது என்னுடைய ஒரு பாதி அகம் சுந்தர ராமசாமியாலும்,மீதி ஒரு பாதி அகம் ஜெயமோகனாலும் நிரம்பியிருந்தது.உடன் பயணங்கள் சென்றேன்.அவருடைய ஓயாத உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.ரப்பர் நாவலின் தளம் வேறு.ரப்பர் எழுதிய காலம் மாடன் மோட்சம் அவர் மனதின் தளமாக இருந்த காலம்.அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, யதார்த்த சொல்முறையிலிருந்து புனைவின் மொழிக்குள் அவருடைய மனம் உருமாறிய காலம் அது.அந்த சந்தர்ப்பத்தில் அவர் அருகமைவு எனக்கு இருந்ததை மிகவும் முக்கியமான பேறு என்றே எடுத்துக் கொள்கிறேன்.ஒரு அண்ணனின் பாங்குடன் ஸ்ரீவைகுண்டம்,ஆழ்வார் திருநகரி என அவர் அழைத்துச் சென்று காட்டிய காலம் அது.அவர் மனப்பாங்கை எனக்கு திறந்து காட்டிய காலம்.அல்லது முதலில் பார்த்த காலம்.பத்பநாபபுரம் அருங்காட்சியகத்தில் இருந்த குபேரனைச் சுட்டி இவன் ஒரு குஷ்ட ரோகி என்று காதில் சொன்னார்.


விஷ்ணுபுரம் வெளிவந்த பிற்பாடும்  நானும் ஜெயமோகனும்  அது பற்றி பேசிக் கொண்டேயிருந்தோம். எனக்கு எப்போதுமே அவருடன் பயணிப்பது ஒரு புனைவை வாசிக்கும் அனுபவத்தைத் தருவதாக அமைந்திருந்தது.அவருடன் பயணம் சென்றால் அது நல்ல சிறுகதையாகவோ அல்லது நெடுங்கதையாகவோ இருக்கும்.அத்தகைய அனுபவத்தை உடன் செல்லும் பயணங்களில் ஒருவருக்குத் தரக்கூடியவர் அவர்.அந்த அனுபவம் நாவல் போல் ஆகும் வாய்ப்பும் உண்டு.சிறந்த எழுத்தாளர்கள் இப்படி படைப்பூக்கத்துடன் பாதிக்கும் வலிமை கொண்டவர்களே.ஆனால் எவர் எதைக் காட்டித் தரும் போதும் அதன் தலைகீழ் தன்மையை பார்த்துவிடுவதே என்னுடைய வழிமுறை.வலிந்து அப்படி பார்த்துவிட வேண்டும் என்பதால் அல்ல.என்னுடைய அகமனம் அத்தகையது.


விஷ்ணுபுரம் நாவல் தமிழில் பெரிய நிகழ்வு.ஜெயமோகனும் தமிழில் பெரிய நிகழ்வே என்பதைப் பிரகடனம் செய்த நிகழ்வு விஷ்ணுபுரம்.அப்படியான ஒரு நாவல் தமிழில் முன்னர் இல்லை.இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நாவலை சமீபத்தில் படித்துப் பார்த்தேன்.அந்த நாவல் என் மதிப்பில் மேலும் மெருகேறிற்று .அப்போது புரிந்து இயலாதவற்றை இப்போது புரிந்து கொண்டேன்.சிறந்த படைப்புகள் ,காலத்தில் வளரும் தன்மை கொண்டவை. 


2


பத்பநாபபுரத்தில் அவர் தங்கியிருந்த நாட்கள் எனக்கும் அவருக்குமான நட்பில் மிகவும் இதமானவை.அது என்னுடைய அகம் உருவாகத் தொடங்கியிருந்த காலம்.தக்கலை தொலைபேசி நிலையத்திற்கும், பத்ப நாபபுரத்தில் தெருவில் அமைந்திருந்த அவரது வீட்டிற்கும் மீண்டும் மீண்டும் சென்று கொண்டிருந்தேன்.பத்பநாபபுரத்தில் வாடகைக்கு அருண்மொழி நங்கையும் அவரும் தங்கியிருந்த வீடு ஒரு குளிர்ந்த வீடு.அரண்மனைத் தெருவை ஒட்டி அமைந்த கம்பி வாயிலைக் கடந்து உள்ளே செல்ல வேண்டும்.நீல வண்ண கேட் அது என நினைக்கிறேன். அரண்மனையில் எறிச் சென்றும் அங்கிருந்தும் மாடம் வழியே அந்த வாயிலைக் காண முடியும்.பத்பநாபபுரம் அரண்மனைக்கு பல தடவைகள் பல காரணங்களுக்காக சென்றிருக்கிறேன்.இன்றுவரையில் அந்த அரண்மனை முன்ஜென்மத்தில் எனக்கு அணுக்கமாக அமைந்தது என்னும் பழகிய உணர்வைத் தருகிறது. அரண்மனையுடன் சேர்த்து ஜெயமோகன் இல்லத்தையும் உடன் வருபவர்களுக்கு காட்டித் தருவதுதான் என்னுடைய வேலை. உடன் வந்த ஒவ்வொருவரிடமும் சுட்டிக் காட்டி அந்த வாயிலைக் கடந்துதான் ஜெயமோகன் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொல்லுவேன்.அதில் ஒரு சிலரைத் தவிர்த்து பலருக்கு ஜெயமோகனைத் தெரியாது.அது பற்றி எனக்கு கவலைகளும் இல்லை.எனக்கு அவருடன் இனிய நினைவுகள் உள்ள இல்லம் அது.பேசுவதற்கென்றாலும் அப்போது அதிகம் பேர்கள் கிடையாது.சொல்லும்படியாக ஒன்றிரண்டு பேர்களே .  நான் அவரைப் பார்ப்பது போல மேலும் ஒன்றிரண்டு பேர் பார்த்திருக்கக் கூடும்.எனக்கு அவருடன் தனித்து இருந்த நினைவுகள் அப்போது உள்ளவை.என்னுடைய தனிமையின் வளைந்து உருவான பாதைகள் அவை. 


அதுபோல அவரும் தேடி வரக் கூடியவர்.ஒரு சமயம் என்.ஜி.ஓ காலனியில் இருந்த எனது வீட்டின் கதவில் ஒரு துண்டு காதிதம் ஒட்டப்பட்டிருந்தது.அவர் வந்து திரும்பி சிறிது நேரத்திற்குள்ளாகவே அந்த துண்டு காகிதத்தைப் பார்த்து விட்டேன்.வீட்டுக்கு வந்திருந்தேன்,மதியம் ஒரு மணிவரையில் ஒழுகினசேரி நூலகத்தில் இருப்பேன் என பென்சிலால் எழுதப்பட்டிருந்தது.அன்று தீராத குடும்ப அல்லல் ஒன்றில் சிக்கியிருந்தேன்.அனுபவமும் தெளிவும் இல்லாமலே நானாகவே கையாளும்படி விதியால் பணிக்கப்பட்டிருந்த வேலை அது. அந்த துண்டு காகிதத்தை நெடுநாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன்.எதற்கு அதை பத்திரமாக வைத்திருந்தேன் என்றால் தெரியாது.அதுபோல பின் தொடரும் நிழலின் குரல் நாவல் வெளிவந்த காலம், அவரில் இருந்து விலகத் தொடங்கியிருந்த காலம்.அந்த விலக்கம் அந்த நாவல் கொண்டிருந்த கருப்பொருளால் அல்ல.தமிழில் நிறைய விவாதங்களை அடைந்த நாவல் அது.இன்றும் அது மிகமுக்கியமான நாவலே.மார்க்ஸியர்களின் ,கம்யூனிஸ்ட்களின் பின்னணியில் இருந்து அந்த நாவல் சுட்டப்பட்டிருந்தாலும் அமைப்புகளின் அகம் குறித்த பெரு நாவல் அது என இன்று மீண்டும் அதை வாசிக்க முடியும்.எனவே அந்த நாவலின் கருப்பொருளால் ஒரு இடர்பாடும் எனக்கு இல்லை.பிறருக்கான இடைவெளியே இல்லாதவராக அவர் இருந்தார்.கேட்கும் திறன் கிடையாது.பொறுமை கிடையவே கிடையாது.முந்திக் கொண்டே இருப்பவர்.இப்படி ஒருவர் இருந்தால் எப்படியாயினும் உறவில் கசப்பு வந்து விடும்.இதுபோலவே தான் சுந்தர ராமசாமிக்கும் இருந்தது.அவரும் ஜெயமோகனில் விலகத் தொடங்கியிருந்த காலம்.அவருக்கும் ஜெயமோகனின் சுபாவம்தான் தாங்க முடியாததாக இருந்தது.ஜெயமோகன் பேரில் மகிழ்ச்சி உள்ளவர் சுந்தர ராமசாமி.ஆனால் அவருக்கும் விலகல் உண்டானது.சுராவுடனான விலகலுக்கு  தத்துவார்த்த ரீதியிலான காரணங்கள் எல்லாம் சொல்லி ஜெயமோகன் தொடர்ந்து எழுதியிருக்கும் பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.இப்போது கூட  அப்படி முன்வைப்பதையே அவர் விரும்புவார் ஆனால் அவை துளி உண்மையும் அற்றவை.ஜெயமோகன் அப்போது நாலு கைலாஷ் சிவனாக,நாலு நம்பியாக ,பத்துபதினைந்து மணிவண்ணனாக இருந்தார்.சுடலை பற்றி எரியும் நெருப்பு நான் அவரில் கண்டது.அனைத்து விதமான குணக்கோளாறுகளும் கொண்டவராக அவர் அப்போது இருந்தார்.அறிவுச் சூழல்களுக்குள் குணக் கோளாறுகள் கூட பெரிய தடையாக ஆவதில்லை.ஜெயமோகன் தன்னைத் தவிர்த்து பிறருக்கு இடமற்றவர்.அதுவே பிரதானமான பிரச்சனை.பிறருடைய பங்கேற்பு என்பது என்ன என்பதை இன்றுவரையில் அவர் அறிய மாட்டார்.இன்று அறிந்து ஒன்றும் ஆகப்போவதில்லை.இனி மாற்றியமைக்கவும் முடியாதது அது.இனி தேவையும் இல்லாதது.கோவை ஞானி இதனை முன்வைத்தே ஜெயமோகனை சுயமோகன் என்று அப்போது திட்டி எழுதினார்.  


பின் தொடரும் நிழலின் குரல் நாவல் அளவில் பெரிது என்றாலும் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலின் வால் நீண்டு பெருத்த நாவல் தான் அது.எனவே சுரா விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான நாவல் அது என்னும் எண்ணம் கொண்டிருந்ததை நான் அறிவேன்.அந்த நாவல் பற்றி நானும் சுராவும் பலமுறை உரையாடி இருக்கிறோம்.விஷ்ணுபுரத்தில் இருந்து ஒரு படி இறங்கிய மொழியில் அது எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல் என்று நான் சுராவிடம் சொல்லியிருக்கிறேன்.ஆனால் அது அப்படியல்ல.அந்தந்த நாவல்களுக்கு உரிய மொழியை ,மாறுபட வேண்டிய அம்சத்தில் தன்னை மாற்றி எடுத்துக் கொள்ளக் கூடியவர் ஜெயமோகன்.அப்படியான மொழி மாறுபாடே விஷ்ணுபுரத்திற்கும் பின் தொடரும் நிழலின் குரலுக்கும் இடைப்பட்டது


ஜெயமோகனின் ஆணவம் என்று இன்று பார்க்கிற ஒருவர் ஒரு எரிமலை தணிந்து ,தன் படைப்பால் தான் கடந்து ,கடந்து இன்றொரு சிற்பமாக அவர் நிற்பதையே காண்கிறார்.பலவாகி பலவாகி இன்று அது தணுத்திருக்கிறது என்றாலும் எப்படித் தணுத்தாலும் அதன் மேலுதட்டில் நெருப்புண்டு.எழுத்தாளர்களின் ஆணவத்தை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பவர்கள் உண்டு.அவர்களின் படைப்பின் சாரத்தையும் உண்டு கொளுத்து அது வெளிப்படுமாயின் அது கொஞ்சம் தாங்கும் தன்மையோடு இருக்கும்.வெறுமனே வெளிப்படுகையில் அருவருப்பூட்டும்.எழுத்தாளர்களின் பிள்ளைகளிடம் இவ்வாறு வெளிப்படுதல் உண்டு.அதிர்ஷ்டவசமாக அஜிதனிடம் இந்த குறை வெளிப்பாடு இல்லை.இவ்வளவு  பெரிய படைப்பாளியின் அண்மையில் இருந்த வண்ணம் சுய தீபத்தை காக்கும் திறன் அஜிதனிடம் இருப்பதைப் பார்க்கிறேன்.மிகப் பெரிய ஆசிர்வாதம் அது.பல எழுத்தாளர் குழந்தைகளுக்கு இது வாய்ப்பதில்லை .அப்படியே பிரதிபலிப்பார்கள். ஜெயமோகனின் ஆணவத்தின் நகலை அப்படியே வெளிப்படுத்துபவர்கள் சூழலில் இன்று பலபேர் இருக்கிறார்கள்.சாராம்சம் இல்லாமல் ஆணவப் போலி மட்டும் செய்பவர்கள்.முந்துவார்கள்,கேட்க மாட்டார்கள்,இடைமறிப்பார்கள்.இடைமறிப்பில் மூன்று நான்கு விதங்கள் இருக்கின்றன.சிலர் பேசத் தொடங்கும் போதே ,தொடர்ந்து அவர்கள் என்ன பேசுவார்கள் என்பது நமக்கு ஒட்டுமொத்தமாக விளங்கி விடும்.இத்தகைய நெருக்குதலில் தப்பிக்க ஒவ்வொருவருக்குமென அறிந்த வழிகள் பல உண்டு.வேறொன்றை பேசி இவர்களை இடைமறிக்கலாம்.தலைப்பை மாற்றி இடைமறிக்கலாம்,சாதாரண ஜனங்கள் இவர்களை அப்படியே குப்புற கவிழ்த்து விடுவார்கள்.எதிராளி என்ன பேசுகிறான் என்பதை புரிந்து கொள்வதற்கு முன்னரே இடைமறிப்பவர்கள் இரண்டாவது வகை.நான் என்ன பேச வந்தேன் சொல்லுங்கள் என்றால் தெரியாது,விழிபிதுக்குவார்கள்,கேட்பதற்கு முன்னரே தன்னை முன்வைக்க திரளும் மனம் இவர்களுடையது.மூன்றாவது வகை நீங்கள் சொல்ல முயலும் விஷயத்தின் நுனியை அதன் மொட்டில் மறுத்து,அதில் எதிர்நிலை பாவித்து, அதிலிருந்து வேறொன்றை உரையாடலில் உருவாக்கி அடைய விரும்பும் மனம்.இந்த வகைக்கு நீங்கள் உங்களை ஒப்புக் கொடுத்தால் அவர்கள் சில விஷயங்களை கண்டடைய உதவும் எந்திரமாக மாறிவிடுவீர்கள்.முதல் இரண்டு விதங்களிலும் உள்ளது ஒருவகையில் சொன்னால் அப்பாவித்தனமே.அறியாமையே.மூன்றாவதில் வெளிப்படும் ஆணவம் அவ்வாறானதல்ல.அபாயகரமான விளையாட்டு அது.இது அபாயகரமான விளையாட்டு என்பதை இருதரப்பும் புரிந்து கொண்டு ஈடுபட்டால் அதனால் ஊனமில்லை.புரிந்து கொள்ளாத தரப்பு ஊனமடையும் விளையாட்டு இது.எதிராளியின் நுனியில் இருந்தே மறுத்து வேறொன்றை பரீட்சித்து பார்ப்பது.தந்திரமாக ஒடுக்கும் முறை. கிராமப் புறங்களில் அடிப்பது என்று முடிவு செய்து விட்டால் யோசிக்கவே கூடாது முதலில் அடித்துவிட வேண்டும் என்பார்கள்.பல சண்டிகளில் உள்ளபழக்கம் இது.எதிரி யோசிப்பதற்கு முன்பாகவே கனத்த அடி விழுந்து விடும்.சுதாரிப்பதற்குள் உள்ளம் வீழ்ந்து விடும்.ஜெயமோகனிடம் கற்கவும் இந்த இணங்குதல் ஒன்றே வழி.வேறு வழிகள் எதையுமே அவர் வைத்திருக்கவில்லை.அவரிடம் கேட்டால் கற்பதற்கே இது ஒன்றுதான் வழி என்பார்.அது பொய்.ஒரு ஆசிரியன் உங்களுக்குள் இறங்கி வர எராளம் வழிகள் உண்டு.ஜெயமோகனைப் பொறுத்தவரையில் அவருடைய கடுமையான ஆணவத்தை பௌதீகமாக உடைத்தவர்களிடம் மாத்திரமே அவர் கற்கவும் செய்திருக்கிறார்.ஜெயமோகனின் இதே ஆணவத்தை பதில் செய்பவர்களை இரண்டொரு முறை பொறுத்துக் கொள்வேன்.அப்படி முன் நிற்பவரை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டிய தேவை வராது எனில் நிச்சயமாக பொறுத்துக் கொள்வேன்.இல்லையெனில் பாடம் செய்து அனுப்புவேன்.உண்மையாகவே அன்பானவர்கள் எவரும் அசடானவர்கள் இல்லை என்பதை அவர்கள் விளங்க நேர்ந்து விடும்


கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்பநாபபுரத்திற்கும் மேற்கே கேரளம் வரையிலான பகுதிகள் நாடன் தன்மை கலந்த புராதனத் தொன்மை கொண்டவை.மலைத் தன்மை என இதனைச் சொல்லலாம்.அவற்றுக்கு ஆழம் அதிகம்.அதனாலேயே சிடுக்கும் அதிகம். ஆறுகள் ,ஏரிகள்,குளங்கள் ,மலைகள் என ஒன்றை ஒன்று பற்றி ஏறிப் பிணைந்து ஒரே உயிரென திரண்டு நிற்கும் மலைத்தன்மை அது.ஆங்காங்கே எழும்பி நிற்கும் குருசுத் தூண்கள்,பழைய மசூதிகள் என சின்னங்களில் மாறுபாடுகளும் தோற்றங்களும் உண்டு.அவை புறவேறுபாடுகள் மாத்திரமே.ஆனால் பழமையில் எல்லாம் ஒன்றே.உருமாற்றி எடுத்துக் கொள்ளும்  புதுமையிலும் ஒன்றே.மனோபாவத்தில் ஒரு மாறுபாடும் இல்லாத கிழங்கன்களின் தேசம் அது.அங்கே மகா ராஜாக்களும் கிழங்கன்மார்களாகத் தான் இருந்திருக்கிறார்கள் ,பாட்டாளிகளும் கிழங்கன்மார்கள் தாம்.எண்ணற்ற பஷீர்கள் ,எண்ணற்ற இசக்கியர் என சூழ்ந்து நிற்கும் நிலம்.அங்கே நிலமே அரசி.நிலத்தில் உள்ள அனைத்தும் பிள்ளைகள்.பஷீர் எப்படிப் பார்த்தாலும் கிழங்கு மூப்பன் தானே இல்லையா?  நிலத்தின் முதன்மை பிள்ளை அனந்த பத்பநாபன்.அந்த பகுதியில் கொஞ்சம் நாடன் தன்மை குறைந்தவர் திருவனந்தபுரம் அனந்த பத்ப நாபன் ஒருத்தர் மாத்திரமே..மீதமுள்ள அனைத்திலும் நாடன் தன்மை உண்டு.நாராயன குருவிடம் உள்ளதும் இந்த நாடன் தன்மையே.பத்பநாபபுரம் கோட்டைக்கு உள்பக்கமாக மட்டுமே நூற்றுக்கணக்கான இசக்கியர்,கன்னியர் உண்டு.இசக்கியர் எழாமல் ஒரு நீரூற்றைக் காண முடியாது.ஒரு இசக்கிக்கு ஐந்து சுடலை காவலென்றால் பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்.ஒருசமயம் கோட்டைக்கு உள்ளாக ஒரு உயரத்தில் நிஜமான சுடலைச் சாம்பலை நீறு பாவிக்கும் சுடலை மாடனிடம் ஜெயமோகன் என்னை அழைத்துச் சென்றார் .அந்த நீறு உண்மையாகவே நீறல்ல பூசிக் கொள்ளும் தணல்


ஜெயமோகனிடமும் இந்த கிழங்கன் தன்மை உண்டு.நாடன் தன்மை.அவரது புனைவுகளில் அவருக்கு அது உச்சபட்ச சாத்தியத்தை வழங்கியிருக்கிறது.ஆனால் அவரது உரைநடைகளில் காணும் குறைகளுக்குக் காரணமாகவும் ஆகிறது. .ஒரு உண்மையைக் காணும் சந்தர்ப்பங்களில் பிற உண்மைகளை உக்கிரமாக மறுத்துவிடும் உரை நடைத்தன்மை ,நாடன் தன்மைக்கு உரியது.ஜெயமோகன் உரைநடைகள் உருவாக்கும் சீண்டல் தன்மைக்கு நாடன் தன்மை ஒரு காரணம்.ஜெயமோகன் அவருடைய படைப்புகள் வழியாக வேறொரு பேருருவை காண்பவர் என வைத்துக் கொண்டால் , உரைநடைகள் வழியாக  ,தன் பிசிறுகளை கடந்து செல்கிறார் எனலாம்.மரச் சீவுளியில் சுருண்டு சுருண்டு விழும் செதில்கள் போல.அவர் உரைநடைகள் மூலமாக தன் பிசிறுகளைக் களைந்து புனைவுக்குள் நுழைகிறார்.புனைவுக்குள் நுழைய உபயோகமாகும் வழிமுறையாக இது ஆகிறது. தன்னை தோலுரித்து ,தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் உரைநடைகளில் தன் விஷம் கக்குகிறார். நான் விஷமெனச் சொல்வது அவருடைய உரைநடைகளின் உள்ளடக்கத்தை அல்ல.ஒரு உண்மையை முன்வைக்கும் போது பிற உண்மைகளை மறுத்துவிடும் பாங்கினையே விஷம் என்கிறேன்.அவருடைய உரையாடல்களுக்கும்,பயணங்களுக்கும் கூட அவர் பழகியிருக்கும் இந்த உரைநடையின் தன்மை உண்டு.அவற்றை அவ்வாறே எவரும் தன்னிறக்கிக் கொள்ளக் கூடாது. அவர் மேலேறிச் செல்கையில் திருகி வீழும்  பிசிறுகள் உங்களில் தங்கி விடும் தன்மை கொண்டவை.அவரது உரைநடைகளில் படைப்பைப் போல அவர் நிரந்தரமானவர் இல்லை.அவரையே காலால் மிதித்து ஏறிச் செல்லும் இடங்கள் அவருடைய உரைநடைகள்.அவற்றுக்கு மிகவும் தற்காலிக முக்கியத்துவங்கள் மாத்திரமே உண்டு.ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால் அவை எதையும் தராதவையாகவும் இருப்பதில்லை என்பதுதான்.எனவே நிராகரிக்கவும் வாய்ப்பு கிடையாது.பாம்புச் சட்டையில் வஸ்திரம் செய்வது போல அதனை உபயோகிக்க வேண்டும்


அவருடைய உரைநடைகளில் இரண்டு காரியங்கள் நடைபெறுகின்றன.முதலில் அவரே அவரை மறுத்துச் சாடும் இடங்கள் அவை.தன் ஆணவத்தின் தீமைகளை அவற்றினூடாக அவர் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.தான் கடந்தவற்றையும்,கடந்து கொண்டிருப்பவற்றையும் அவற்றில் திரும்பி நின்று தாக்கி அழிக்கிறார் அவர்.அப்படி நின்று அழிக்கையில், அப்படி முழுமையாக அழிக்கப்பட வேண்டியவை அல்ல அவை என்பதை அவர் உணர்வதில்லை.ஆனால் அவற்றில் உண்மைகள் வெளிப்படுமா என்றால் வெளிப்படும்.அப்போது சொல்லப்படும் உண்மைக்கு ,மாற்றாக உள்ள உண்மைகள் அனைத்தையும் மறுத்து உருவாகும் உண்மை அது.யோசித்துப் பார்த்தீர்கள் எனில் ஒன்று புரியும்,தன் ஆணவம் பற்றி யாரும் எழுதிவிட முடியாத அளவுக்கு ஜெயமோகன் ஒருவரே எழுதியிருக்கிறார்.ஆணவ மனதின் அனைத்து சந்து பொந்துகளும் எழுதபட்டுள்ளன.மாபெரும் தன் ஆணவகாரர் ஒருவரால் அன்றி எழுத முடியாதவை அவை.இரண்டாவது விஷயம் அவருடைய உரை நடைகளில் உருவாகும் உண்மைகள்,அப்போது அந்த உண்மை வெளிப்பட வாகாக பிற உண்மைகள் அனைத்தையும் மறுக்கும் தன்மை கொண்டவை.இதற்காக தேவையெனில் ஏற்கனவே அவர் அடைந்த உண்மைகளையும் ,முன்வைத்த உண்மைகளையும் கூட அவரது உரைநடை மறுத்து, சிறுமை செய்து, தாழ்த்தும்.மிஷினரி தன்மையும் அவருடைய உரைநடைக்கு உண்டு.திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சிறிய சிறிய இடைவெளிகள் விட்டு அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.வாசகனுக்கான சிறைகள் அவை.நூதன அரண்கள்.


சுராவை அதிகம் ஜெயமோகன் நினைவுப்படுத்தி எழுதியிருக்கிறார்.அவர் எழுதாமலும் முடியாது.சுந்தர ராமசாமியின் அளவிற்கு இளமையிலேயே ஜெயமோகனை ஆழமாக அறிந்த பிறிதொருவர் உண்டு என்றால் நான் நம்ப மாட்டேன். சுராவைப் பற்றிய எழுத்துகளில்  பெரும்பாலும்  சற்றே பிசிறு சேர்த்தே ஜெயமோகன் எழுதியிருக்கிறார் .ஒரு கரித்துண்டையும் சேர்த்து ஒரு கவிதைக்குள் எழுதி விடுவது போல.அவருடைய இளம்பிராயத்து நெருப்பின் மேலே அவர் இன்று நின்று வீசியெறிகிற கரித்துண்டே அது.சுராவுக்கு ஜெயமோகன் இனிமையானவரே.ஆனால் இவருடைய தன்னாணவத்தையும் சேர்த்து அறிந்தவர் சுரா.ஜெயமோகனிடம் இதுவரையில் சுராவை நீங்கள் எழுதும் சித்திரங்களில் சிறிய கரி எழுத்து ஒன்று படிகிறது என்று நான் பேசியதில்லை.மறுத்து மறுத்து காரணம் காரணமாக பதிலுக்குச் சொல்லும் இயல்பு கொண்டவர் ஜெயமோகன்.பேச முடியாது என்பதே உண்மை ,சொன்னால் அவருடைய ஆணவம் நமக்கு எதிரானதொரு கரியை  கொஞ்சம் காலம் தாழ்ந்தேனும் கையில் எடுத்து வைத்துக் கொள்ளும்.பெரும்பாலும் அவருடைய புனைவுக்கு வெளியில் உள்ள எழுத்துகளில் ,அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து உண்மைகளுக்கும் புறத்தில் இப்படியொரு கரியெழுத்தும் உண்டு.இந்த கரியெழுத்தின் கறையை அகற்றி வாசிக்க இயல்பவனே அவருடைய புனைவுக்கு வெளியில் உள்ள எழுத்துக்களை வாசிக்கும் தகுதி கொண்டவன்.


ஜெயமோகன் எழுத்துகள் வழியே வாசகனைச் சென்று சேரும் சுரா ஒரு ஐயராக இருக்கிறார் .எட்டாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமியுடன் நெருங்கியிருந்த எனக்கு அறிமுகமே இல்லாதவர் அந்த ஐயர் ; ஜெயமோகனால் வெளிப்படுத்தப்படுகிற ஐயர் சுரா. நான் ஒருபோதும் அறிந்திராதவர்.சுரா பேசும் பாஷையாக ஜெயமோகன் சொல்லும் பேச்சு மொழி சுராவிடம் இல்லாதது. ஞானக்கூத்தனுக்கு ,நகுலனுக்கு,அசோகமித்திரனுக்கு எல்லாம் அவர் சொல்வது பொருந்தக் கூடியதே.ஆனால் சுந்தர ராமசாமிக்கு ஒருபோதும் பொருந்தாதது அது.அப்படி அவர் ஐயராக வெளிப்பட்டிருந்தாலும் எனக்கு அதனால் ஒன்றுமில்லை.ஒருவரிடம் சாதி வெளிப்படுமேயானால் அதனால் ஒன்றுமில்லை.அது இயல்பானதும் தான்.சுராவிடம் அப்படி வெளிப்பட்டதில்லை ஒருபோதும். அதனை அவர் நாடகமாகவும் செய்வதில்லை.அவரிடத்தே சாதியின் ரேகைகள் வலுப்படவே இல்லை.இயல்பிலேயே சுரா அதற்கு வெளியில் இருந்தார். ஜெயமோகனும் இயல்பில் இல்லையெனினும் கூட இப்போது சாதிக்கு வெளியில் உள்ளவர்தான்.சாதியில் இருந்து சாதி கடந்தவர் ஜெயமோகன்.சாதியால் அவரைக் குறுக்க முடியாது.


ஒரு சமயம் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னதை பற்றி அப்படியிருக்குமா ? என என்னைக் கேட்டார் சுந்தர ராமசாமி.நான் சுராவை "சர்" என அழைப்பேன்.இவர் ஒருவரின் பொது நடத்தையைக் கொண்டு சாதியைக் கண்டுபிடித்து விடுவேன் என்கிறார் .முடியுமா ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றார்.நான் அப்போது முடியாது "சர்" என்றேன்.உண்மையாகவே அப்போது எனக்கும் முடியாது அல்லது கண்டுபிடிக்கத் தெரியாது என்பதே உண்மை.ஒருவர் நெருங்கிய பிறகே ரொம்ப கொஞ்சமாக சாதி மணம் பிடிக்கும். ஆனால் இப்போதெனில் ஓரளவு முடியும் "சர்" என்றிருப்பேன். சுரா என்னிடம் இதனைச் சொல்கையில் அவருடைய வயது அறுபத்தியொன்பது இருக்கும்.


3


2015 முதற்கொண்டு மீண்டும் ஜெயமோகனை பின்தொடரத் தொடங்கினேன்.ஏகதேசம் பத்தாண்டுகள் கழித்து மீண்டும்.அவ்வளவு தூரத்திற்கு இல்லையாயினும் கூட, எனக்கு விலகல் தேவையாகவே இருந்தது. கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் கொஞ்சம் முன்னதாக மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்திருக்கலாம்.ஆனால் விலகல் தேவைப்பட்டது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.அவருடன் இணைந்திருந்த காலத்தைப் போன்றே,விலகியிருந்த காலமும் எனக்கு முக்கியமானதே.அது நான் தனித்து ஒரு பார்வையை உருவாக்கிக் கொள்வதில் பெரும்பங்காற்றியிருப்பதை இப்போது உணர்கிறேன்..ஒருவரிடமிருந்து விலகும் போது, முற்றிலும் அவர்களைக் குறித்து சிந்திப்பதை நிறுத்திவிடுவேன்.என்னுடைய விலகல் என்பது அத்தகையது.விலகலின் போது என்னுடைய உணர்ச்சிகள் விலகியவரை முன்னிட்டு வேலை செய்ய அனுமதிப்பதில்லை.இருந்தாலும் தமிழ் கலையிலக்கிய சூழலில் இருக்கும் ஒருவரிடம் ஜெயமோகன் ஊடுருவி வருவதை தவிர்க்க இயலாது.அவருடைய பின் தொடரும் நிழலின் குரல் நாவல் வரையிலான கணிப்பும் எனக்கு உண்டு.அறம் கதைகள் மீண்டும் ஜெயமோகனை நான் நாடிவர காரணமாக அமைந்தன .


பொதுவாக தமிழ் எழுத்தாளர்களுக்கு இரண்டாம் பிறப்பு என்பது கிடையாது.ஆரம்பத்தில் ஒன்றில் ஊன்றி எழுந்து வந்திருப்பார்கள்.அதுவே கடைசி வரையிலும்.ஜரிகைகள்,தோரணங்களில் சில மாறுபாடுகள் செய்து முந்தைய பளுவை இழுத்துக் கொண்டே வருவார்கள்.இதுவே வழக்கம்.முற்றிலுமாக தன்னை மறுபடி மறுபடி புதுப்பித்த வண்ணம் உள்ள ஒரு எழுத்தாளர் தமிழில் ஜெயமோகன் ஒருவரே.சுந்தர ராமசாமி ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் எழுந்து வந்திருக்கிறார்.கவிதையில் தேவதச்சன் அவ்வாறானவர்.மீண்டெழும் தன்மை கொண்டவர்.வண்ணதாசனின் தற்போதைய கவிதைகளிலும் தன் தொடர்ச்சியில் மீண்டும் எழும் உத்வேகம் இருக்கிறது.இவற்றை விதிவிலக்கான உதாரணங்களாகச் சொல்லலாமேயொழிய இவை தமிழின் பொதுவான ஒரு அம்சம் அல்ல.சிறந்த ஒரு தமிழ் எழுத்தாளனின் ஒன்றிரண்டு சிறந்த நூல்களை படித்து விட்டு ஒரு கணிப்பிற்கு வந்து விட முடியும்.பிறகு அவன் மாறிவிடுவான்  என சொல்வதற்கில்லை.அப்படி வந்து சேரும் கணிப்பு பெரும்பாலும் தவறுவதும் இல்லை.ஆனால் சமபாதிக்கு பிறகு ஜெயமோகன் முற்றிலும் புதியவராக மீண்டும் இருந்தார்.


வெள்ளை யானை நாவலெல்லாம் மிகவும் முக்கியமான ஒரு வைப்படி.ஒரு நாவல் எவ்வாறாக வாசகனின் மன அமைப்புக்கு அருகில் சத்தியத்தை கொண்டு போய் நிறுத்தி வைக்க முடியும் என்பதற்கு உதாரணம் சொல்லத் தகுந்த நாவல் அது.அந்த நாவல் நமது சூழல் வழங்குகிற அரசியல் அறிவை முற்றிலும் தலைகீழாக்குகிறது.அதன் பொய்யை ,வேடத்தை ,நடிப்பை நவீனமான ஒரு வடிவின் மூலமாக ,நூதனமான புனைவு வழியே ,மிகவும் சுலபமாக அகற்றி வைக்கிறது.ஒருவாறாக நானூறு ,ஐநூறு ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு தொடர்ந்து முன்வைக்கப்படும் அரசியல் அறிவை ,ஒரு சூழல் தருகிற பொதுப்புத்தியை ஒரு நாவலில் கடந்து செல்வது என்பது உண்மையாகவே மிகவும் ஆச்சரியமானது.இந்த ஒரு நாவலுக்காக மட்டுமே ஒரு சமுகம் அவரை குருவாக ஏற்று வழி நடக்கலாம்.வெண்முரசு அதிகபடியானதொரு போனஸ் போல.படைப்பு அனுபவம் என்பதை அழுத்தமாகவும்,அதிகமாகவும்,அழகாகவும் வழங்கக் கூடியவர் ஜெயமோகன்.படைப்பு அனுபவம் இல்லாத எதையும் அவர் வழங்குபவர் அல்லர்.புனைவுக்குருதி அவர்.


வெண்முரசிற்கு பிறகு அவர் எழுதிய நூற்றுக்கும் அதிகமான கதைகள் புதுமைப்பித்தனுக்கு பிறகு தமிழில் நிகழ்ந்த அற்புதங்கள்.சடம் போன்று ஒன்றிரண்டு சாதாரண கதைகளும் அவற்றில் இருக்கின்றன.குமரித்துறைவி போல அழியா வரம்பெற்ற கதைகள் அதிகம்.கொதி,வலதும் இடதும் என பல கதைகள் அவர் உள்ளத்தில் இருந்து மட்டுமே வெளிவரும் ஆழம் நிரம்பியவை. இந்த கதைகள் வெண்முரசு என்ற மிகப்பெரிய படைப்பு உயரத்திற்கு சென்று திரும்பும் போது வழியில் எழுதப்பட்டிருக்கின்றன .அதனாலேயே என்னவோ அவை மிக மிக மிருதுவாக ,எளிமையாக ஆனால் பெரிய ஆழங்களை நமக்கு உணர்த்துகின்றன.எளிமையின் ஆழங்கள் என இக்கதைகளைப் பற்றி சொல்லலாம்.இந்த ஆழங்கள் மொழிபெயர்ப்புகள் முலமாகவோ ,பிற படைப்பாளிகள் வழியாகவோ நாம் பெற முடியாதவை.



பொதுவாக ஜெயமோகனைப் பற்றிச் சொல்ல எனக்கு மேலதிகமாக இரண்டு விஷயங்களே உள்ளன.தமிழ் இலக்கியத்தின் சராசரி உயரத்தை அவர் கணிசமான அளவிற்கு அதிகப்படுத்தியிருக்கிறார்.அடுத்த அடுத்த தலைமுறையில் வரும் எழுத்தாளனுக்கு இது ஆகப்பெரிய சவால்.அவன் மெய்யாகவே எதிர்கொண்டாக வேண்டிய சவால்.பொது உயரம் அவரால் இன்று விரிவடைந்திருக்கிறது.புதுமைப்பித்தன் முலமாக முன்பு தமிழில் நிகழ்ந்ததும் இதுவே.இரண்டாவது விஷயம் .அவருடைய ஏற்ற தாழ்வுகள்,குறைகள் அனைத்தையும் தாண்டி அவருடைய படைப்புகள் வாயிலாக, புனைவின் தனித்துவமான அழகு கொண்டவர்.டால்ஸ்டாய் போல ,தாஸ்தாவெஸ்கி போல அவ்வளவு உயரத்தில்; அதற்கும் மேலான உயரத்தில் நம்முடன் இருப்பவர்.நமக்கு இதனைக் காணத் தெரிந்திருந்தால் நாமும் பாக்கியசாலிகளே.ஜெயமோகனை அறியாமல் ஒருவர் இங்கே ஆற்றுவதற்கு இலக்கியத்தில் ஒரு காரியமும் இல்லை.இந்த நூற்றாண்டு தமிழுக்கு வழங்கியிருக்கும் பெருமிதம் அவர்.அதில் விவாதிக்கவும்,வேறுபடவும் ,ஒன்றுசேரவும் என பல இடங்கள் உண்டு.ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அவரைப் புறக்கணிப்பவர்கள் ஆற்றுவதற்கு இங்கே ஏதும் கிடையாது என்பதே உண்மை.

லக்ஷ்மி மணிவண்ணன் - தமிழ் விக்கி பக்கம்

ஆசிரியரை அடைதல் - குக்கூ சிவராஜ்



ஈரோட்டுக்கு அருகிலிருக்கும் அறச்சலூர் எனும் மலையடிவார கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன்.  விவசாயம் பிரதானத் தொழிலாக இருந்தபோதிலும், அதற்கடுத்தபடியாக நெசவுத்தொழில் பெரும்பான்மையாக இருந்தது. நானூறு வீடுகளுக்கும் அதிகமாக கைத்தறி நெசவு நெய்யப்படும் பகுதியில் எங்கள் வீடும் அதிலொன்றாய் அமைந்திருந்தது. என் அம்மாவுடைய அப்பாவான 'அப்புச்சி' தீவிரமான காந்தியப்பற்றாளர். பூமிதான யாத்திரைக்காக தமிழகத்தில் வினோபாவுடன் சேர்ந்து பல்வேறு ஊர்களுக்கு நடந்து திரிந்தவர். என் அம்மா கண்ணம்மா புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவர். எங்கள் தெருவில் ஐந்தாறு வீடுகள் தள்ளி அரசு கிளைநூலகம் இருந்தது. அதன்வழியாக பூந்தளிர், அம்புலிமாமா போன்ற சிறார்நூல்கள்  எனக்கு அறிமுகமாகின. 


நான் பதினொன்றாம் வகுப்பு செல்லத் துவங்குகையில் இயற்பியல் ஆசிரியரான ஓ.வி.சரவணக்குமார் என் வாழ்வில் அறிமுகமானார். மிகச்சிறந்த வாசிப்பாளரான அவர் எழுத்தாளர் பிரமிளுடன் தொடர்பிலிருந்தார். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நான் தோல்வியுற்றேன். அகத்தில் பாரங்கவியத் துவங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில்தான் என் ஆசிரியர் எனக்கு சுந்தர ராமசாமியின் படைப்புலகத்துள் என்னை திசைப்படச் செய்தார். 'ஒரு புளியமரத்தின் கதை'தான் நான் முழுமையாக வாசித்த முதல்நாவல். அதன்பின் அவர் அசோகமித்திரனின் படைப்புகளை எனக்கு பரிந்துரைத்தார். வாசிப்பின் வழியாக என் வாதைகளிலிருந்து சிறுகச்சிறுக மீண்டுகொண்டிருந்தேன்.


அத்தகைய காலச்சூழலில்தான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'ரப்பர்' நாவல் வெளியாகியது. அந்நூலின் பின்னட்டையில் இருந்த அவருடைய தோற்றமும், எழுத்தாளர் பற்றிய குறிப்பிலிருந்த வயதும் எனக்குள் ஒருவித ஈர்ப்பையும் கவனக்குவிப்பையும் உண்டாக்கியது. அகரம் வெளியிட்ட அப்புத்தகத்தின் பின்னட்டையிலிருந்த இளம் ஜெயமோகனின் முகம் இன்றளவும் என்னுடைய நினைவில் தெளிவுறப் பதிந்திருக்கிறது. 


சென்னையில் சினிமா, இலக்கியம் என சுயத்தேடலின்பொருட்டு எங்கெங்கோ சுற்றியலைந்து திரிந்தேன். என் அப்பாவுடைய குடிப்பழக்கம் காரணமாக குடும்பம் பெரும் சீரழிவுக்குள் வீழத்தொடங்கியது. உறவுகளைக்கூட அணுகமுடியாத ஒருவித சமூக அவமானமாகவே நான் அதை உணர்ந்தேன். எனக்கு அப்போது இருபது வயது. விருப்பத்துறை சார்ந்து இயங்கி சென்னையிலும் என்னை நிலைநிறுத்திக்கொள்ள இயலாத நெருக்கடிச்சூழல். அத்தகைய சூழலிம்கூட, எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதிவந்தேன். ஒருநாள், சென்னையில் நிகழ்ந்த நிகழ்வுக்கு சுந்தர ராமசாமி வருவதையறிந்து அவரை 'நேரில் வந்து சந்திக்கலாமா?' எனக் கேட்டிருந்தேன். அவர் இசைவு தெரிவிக்கவும் நான் அந்நிகழ்வுக்குச் சென்றேன்.

 

பெரும் தயக்கத்தோடு அந்த இலக்கிய நிகழ்வில் ஒதுங்கி நின்றிருந்தேன். தேநீர் இடைவேளை நேரத்தில், யாரோ ஒருவரோடு அவர் பேசிக் கொண்டிருக்கையில் சட்டென என்னை நோக்கித் திரும்பி 'சிவராஜ்தான நீங்க?' எனக்கேட்டு, நான் பதற்றமடையத் துவங்கியவுடன் என் இருதோள்கைகளையும் இறுகப்பிடித்து அணைத்துக் கொண்டார். அச்சமயம், நாட்டியக்கலைஞர் அனிதா ரத்னம் அவரெதிரில் நின்றிருந்திருந்தார். அவரிடம், "என் நெருக்கமான நண்பர்" எனச்சொல்லி அறிமுகப்படுத்தினார். அவருடைய கை என் தோளைவிட்டு விலகவேயில்லை. 'நெருக்கமான நண்பர்' என்ற வார்த்தையை மட்டுமே நான் மீளமீள நினைத்து கண்ணீர்மல்கிக் கொண்டிருந்தேன். 'என் வாசகர்' என்று சொல்லியிருக்கலாம், ஆனால் அவர் அப்படிச் சொல்லாமல் நண்பர் என அறிமுகம் செய்துவைத்தது எனக்குள் கிளர்த்திய பேருணர்வு சொற்களுக்கு அப்பாலானது. அந்தத் தருணத்தை நினைத்தபடியே சாலைவழி நடந்துவந்து வடபழனி அறைக்கு வந்தடைந்தேன். 




ஏதோவொரு மனநெருக்கடி அதிகமாகும் சூழ்நிலைகளில் சட்டென சுந்தர ராமசாமி வீட்டுத் தொலைபேசி எண்ணிற்கு அழைத்துவிடுவேன். சிலமுறை இரவு ஒன்பது மணிக்கு பிறகுகூட அழைத்திருக்கிறேன். அவ்வாறான சமயங்களில், சுராவின் மகன் கண்ணன் தொலைபேசியை எடுத்து, "அப்பா தூங்கிட்டாரு. ஏதாச்சும் அவசரமா தகவல் சொல்லணுமா?" என்பார். "இல்ல... அவர் குரல்கேட்டா போதும்ணு தோணுச்சுங்க" எனச் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிடுவேன். அப்படி இரவில் அவரை அழைத்ததுக்கு மறுநாள், வழக்கம்போல வாழ்வோட்டத்தில் அந்த நெருக்கடிச்சூழல் மறைந்துவிடும். கடக்கவே முடியாத இரவென ஒன்று இல்லவே இல்லை என்பதை அக்காலகட்டத்தில் நான் நெஞ்சுணர்ந்தேன்.


ஆனால், சுரா வீட்டுக்கு நான் அழைத்திருந்த இருநாள் கழித்து என் வீட்டுக்கு ஒரு தபால்பொதி வரும். வாங்கிப் பிரித்தால் அதில் அவருடைய இரு புத்தகங்களும், அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதமும் இருக்கும். புத்தகத்தின் முதற்பக்கத்தில் தன்னுடைய வாசக மேற்கோள் ஒன்றினை எழுதி கையெழுத்திட்டு அனுப்பியிருப்பார். இப்பொழுது நினைத்தாலும் அந்த கணங்களின் நெகிழ்வு என்னை ஒட்டுமொத்தமாக நிலைகுலைத்துவிடும். எழுத்தாளர் என்பதற்கும் மேலாக அவரை என் மானசீக ஆசிரியராகவே நான் உருவகித்துக்கொண்டேன். ஓர் ஆசிரியரைக் கண்டடைந்த அகநிறைவில் அவர்தந்த சிறுசிறு நம்பிக்கைகளைப் பிடித்து வாழ்வை நகர்த்திவந்த சமயத்தில், சட்டென சுந்தர ராமசாமியின் மரணம் என் அகத்தை உடைத்து நொறுங்கச் செய்தது. மிகுந்த உளவீழ்ச்சிக்கு உள்ளானேன். 


அத்தகைய துயர்க்காலத்தில், சில நாட்கள் கழித்து அந்த நிகழ்கையை நான் அடைய நேர்ந்தது. இறையருள்தருணம் போல மிக மரியாதைக்குரிய ஒன்றாக அதை இன்றளவும் நினைவுக்குள் பத்திரப்படுத்தி உள்ளேன்... சுராவைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'நினைவின் நதியில்' கட்டுரைகளை நான் முதன்முதலாக வாசித்தேன். உண்மையில், நான் என் ஆசிரியரை மீண்டும் கண்டடைந்த தருணமென்றே அதைக் கருதுகிறேன். ஓர் ஆசிரியமனதை இழந்த இழப்பின் இடைவெளியை வெகுவிரைவில் என்னால் நிரப்பிக்கொள்ள இயன்றது. 'நினைவின் நதியில்' நூலில் ஜெயமோகன் அவர்கள் எழுதியிருந்த கட்டுரைகள் என் மனதுள் இன்னும் அணுக்கமாக சுராவை துலங்கச்செய்தன.


சென்னையில் நடந்த 'நினைவின் நதியில்' நூல்வெளியீட்டு நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன். அந்நிகழ்வுக்குப் பிறகு, என்னுடைய மானசீக ஆசிரியராக நான் ஜெயமோகன் அவர்களை ஏற்கத் தொடங்கினேன். என்னளவில், சுந்தர ராமசாமி அவர்களின் மறுபிறப்பென ஜெயமோகன் அவர்கள் என் அகத்துள் நிகழ்ந்தார். மிக மிக அந்தரங்கமான தருணமாகவே அதை மதிக்கிறேன் நான். குரு மட்டுமே நிறைக்கும் ஓர் அகவெற்றிடம் நம் எல்லோருள்ளும் உண்டு. அதை நிரப்பிய ஓர் நற்குருவாக படைப்பாளுமை ஜெயமோகன் அவர்கள் என்றும் என் முதன்மையான ஆசிரியர்.


ஓர் ஆசிரியர் நமக்குள் உண்மையில் நிகழ்த்துவது என்ன? கன்னட நடிகர் இராஜ்குமார் கடத்தல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் நான்குபேர் கைதாகினர். அதில் ஏழுமலை, சுப முத்துக்குமார், மாறன் என மூவரின் பெயர் எனக்கு நினைவிருக்கிறது. கைதி ஏழுமலை எழுத்தாளர் சுராவுக்கு 'அன்றில்' எனும் பெயரில் சிறைச்சாலையிலிருந்து தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். சுராவும் அந்த எல்லா கடிதங்களுக்கும் பதில் அனுப்பினார். இந்த கடிதவழி உரையாடல்களை  'சுந்தர ராமசாமி ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தனர். 


பல கடிதங்களின் கடைசிவரியில், "என்றாவதொருநாள் நீங்கள் ஒரு புதிய சூர்யோதத்தைக் காண்பீர்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என எழுதியிருப்பார். ஏழுமலை அவர்கள் அரைப்பக்கம் எழுதியிருந்த கடிதத்துக்கு சுரா ஐந்து பக்கங்கள் அளவுக்கு பதில் எழுதியிருப்பார். சுரா மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கையில்கூட, ஒரு நீண்ட கடிதத்தை எழுதி ஏழுமலைக்கு அனுப்பிவிட்டே வெளிநாடு சென்றிருப்பார். இந்த எல்லா தகவல்களும் அப்புத்தகத்தில் தேதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறையிலிருந்து விடுதலையான பிறகு ஏழுமலை அக்கடிதங்களை புத்தகமாக்கி பிரசுரித்திருக்கிறார். சுராவின் ஆசிரிய அகம் எத்தகைய மானுடவிரிவு கொண்டது என்பதை அப்புத்தகம் நமக்கு வெளிச்சப்படுத்தக் கூடும்.


அப்புத்தகத்தை வாசித்துவிட்டு, எப்படியாவது ஏழுமலையைச் சந்தித்துவிட மாட்டோமா என ஏங்கித் தவித்திருக்கிறேன். யார்யாரிடமோ கேட்டுத் தேடியலைந்து அவருடைய தொலைபேசி எண்ணைப் பெற்று அவருக்கு அழைத்துப் பேசினேன். நெகிழ்வுடன் அந்த முதல் உரையாடல் நிறைவுற்றது. அதன்பின் நிறையமுறை இருவரும் பேசிக்கொள்வோம். அகநெருக்கடி மிகுந்த ஒருநாளில் யதேச்சையாக அவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஏழுமலை அண்ணன், "இன்னைக்கு சுந்தர ராமசாமியோட நினைவுநாள், தெரியுமா?" என்றார். தற்செயலாக அழைத்துப்பேசிய அந்த தொலைபேசி உரையாடல் அப்படியே சுராவைச் சுற்றியே நீண்டது. சிறிது நேரம் கழித்து ஏழுமலை அவர்கள், "இப்போ நான் பின்தொடரும் நிழலின் குரல் படிச்சிட்டிருக்கேன். கொஞ்ச வருசங்களுக்கு முன்னாடியே இந்த புத்தகம் எனக்கு கிடைச்சிருந்தா, நான் ஜெயிலுக்கு போயிருக்க மாட்டேன்" என்றார். அது உண்மைதான் என்பதை அவர் குரலின் அழுத்தம் எனக்கு உணர்த்தியது.




ஏழுமலை சிறையிலிருந்து விடுதலையாகி, தற்போது ஒரு தேநீர்க்கடை வைத்துள்ளார். நவீன இலக்கியப் புத்தகங்கள் மற்றும் மிக முக்கியமான நல்ல படைப்புகளைக் கொண்ட புத்தகக்கடையும் இணைந்த தேநீர்க்கடை அது. இலக்கியம் பேசி புத்தகங்களைப் பகிர்கிறார். மாதாமாதம் இலக்கியக் கூடுகைகள் ஒருங்கிணைக்கிறார். சொல்லப்போனால் பெரும் பொருளியல் நெருக்கடியில் அவர் இருக்கிறார். ஆனாலும், தன் இலக்கியமனதை வைராக்கியமாகப் பிடித்துக்கொண்டு தன் வாழ்வினை எதிர்கொண்டு வருகிறார். எத்தனையோ மனிதர்களுக்கான உதாரணமாக அவர் வாழ்வு அர்த்தம்கொண்டுள்ளது இன்று.


ஆனால், நம்பிய தத்துவத்தின் இருண்மையை விட்டு வெளியேற விரும்பாத, தன்னை மறுபரிசீலனை செய்யத் துணியாதத சுப முத்துக்குமார் என்பவர், விடுதலையாகி வெளிவந்த சில நாட்களிலேயே கொலை செய்யப்படுகிறார். எனில், ஓர் ஆசிரியர் நமக்குள் உண்மையில் நிகழ்த்துவது என்ன? இவ்வாழ்வை எப்படியாவது நேர்மறையாக எதிர்கொள்ளச் செய்யும் வைராக்கியத்தை, நம்பிக்கையின் மீதான தீர்க்கத்தை ஓர் ஆசிரியரின் துணையிருப்போ அல்லது சொல்லிருப்போ தான் நமக்கு அளிக்கிறது. 


என் வாழ்வில் நானும்கூட தமிழ்தேசியம் சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மிகத் தீவிரமாக மனதைச் செலுத்தி எதிர்மறையையும் அவநம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டு, இருண்மைப் பித்தேறி இம்மானுடம் மொத்தத்தையும் என் எளிய அரசியல் காரணங்களுக்காக வெறுக்கத் துணிந்த ஓர் சூழலில் நின்றிருக்கிறேன். ஏழுமலையின் வாழ்வும், என் வாழ்வும்கூட 'பின்தொடரும் நிழலின் குரல்' நாவலில் பிரதிபலிப்பதை அகப்பூர்வமாக உணர இயன்றது. இன்று எத்தனையோ இளையோர்களை வறட்டுத் தத்துவத்தின் முட்கவைக்கு பலியாகாமல் திசைதிருப்பிய பெருந்திறவு அப்புத்தகத்தால் நிகழ்ந்திருக்கிறது.


சுந்தர ராமசாமியின் மரணம் எனக்குள் எத்தகைய அகநடுக்கத்தினை உருவாக்கியதோ, அதேவிதமான சமன்குலைவை 'யானை டாக்டர்' வாசித்த இரவிலும் நான் அடைந்தேன். ஒருவித மனங்கொள்ளாமை சில நாட்கள் நீடித்தது. வெறும் கதையென அதிலிருந்து வெளியேறிவிட இயலவில்லை. எண்ணத்தின் சுழல்சுருளுக்குள் மீளமீள ஆழ்ந்துபோனேன். அதன்பின், அய்யா நம்மாழ்வாருடன் பொற்குணம் எனும் ஊரில் தங்கியிருந்த சமயம்,  அக்கதையை நம்மாழ்வாருக்கு வாசித்துக் காண்பித்தேன். முக்கால்வாசி கதையைக் கடந்தநேரத்தில் அய்யா விசும்பி அழுது கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். எல்லா மனிதனின் ஆன்மாவுக்குள்ளும் அக்கதையின் சொற்கள் ஊடுருவ வல்லன என அன்றறிந்தேன். (நம்மாழ்வார் உருவாக்கிய வானகம் இயற்கை வேளாண் பண்ணையானது பொருளியல் நெருக்கடியில் சிக்கியிருந்த சூழ்நிலையில், விஷ்ணுபுரம் நண்பர்கள் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி 'சூரியஒளி மின்சார அமைப்பு' ஒன்றை அங்கு நிறுவிக் கொடுத்தார்கள். அந்தச்சூழ்நிலையில் அது எத்தகைய பேருதவி என்பதனை நானறிவேன்.)


யானை டாக்டர் கதையை கேட்டு முடித்துவிட்டு அய்யா நம்மாழ்வார், "இந்த கதைய நிறைய இளைஞர்கள்ட்ட கொண்டுபோய் சேக்கணும்ய்யா. ஏன்னா, ஒரு மனுசன் தன் வாழ்நாளெல்லாம் அர்ப்பணிச்சு ஒரு துறைல வேலைசெஞ்சா தான் அவன் நம்ம எல்லாத்துக்கும் மூத்த ஆசிரியரா மாறமுடியும். இந்த உண்ம இந்த கதையில இருக்குய்யா. இந்த கதை நிறைய மனச மாத்தும்ய்யா" என்றார். ஜெயமோகன் அவர்கள் அக்கதையை மக்கள் பிரதியாக மாற்றுவதற்கு அந்நேரம் அனுமதித்திருந்தார். ஆகவே, முதற்கட்டமாக இரண்டாயிரம் பிரதிகள் அச்சடித்து மக்களுக்கு வழங்கினோம். திருமணம், இலக்கியக் கூடுகைகள், பிறந்தநாள் பரிசு என எல்லா விழாக்களிலும் அது கரமளிக்கப்பட்டது. எங்கெங்கோ நண்பர்களிடமிருந்து தொகை பெற்று ஆயிரமாயிரம் பிரதிகளாய் அந்நூலை அடுத்தடுத்து அச்சுப்படுத்தி அனுப்பினோம். அச்சமயத்தில், 'மின்சார இருசக்கர வாகனம்' தயாரிக்கும் நிறுவனத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் பிரிவில் ஸ்டாலின் பாலுச்சாமி பணியாற்றிக் கொண்டிருந்தான். அவனது சம்பளத் தொகை முழுவதையும் தந்து அப்புத்தகத்தின் அச்சாக்கத்திற்கு பெருந்துணையாக நின்றான்.




குக்கூ காட்டுப்பள்ளி வாயிலாக வருடாவருடம் ஏதேனும் ஒரு ஆளுமை மனிதருக்கு 'முகம் விருது' வழங்குவது வழக்கம். அந்தமுறை அவ்விருதை யானை டாக்டர் கதையைப் படைத்ததற்காகவே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கலாம் என நண்பர்கள் கூடி முடிவுசெய்தோம். விருதளிப்பு நிகழ்வை திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியில் வைத்து நிகழ்த்தத் திட்டமிட்டோம். ஒருமாத காலத்திற்கு முன்பாகவே, அப்பள்ளிக்கூட குழந்தைகளுக்கு யானை டாக்டர் கதையை சைகை மொழியில் வாசிக்க வாய்ப்பு உண்டாக்கினோம். அந்தப் பிள்ளைகள் சேர்ந்து அக்கதையை ஒரு மெளனநாடகமாக மாற்றினார்கள். டாக்டர் 'கே'வுடைய இடத்திற்கே அக்குழந்தைகளை அழைத்துச் சென்று அச்சூழலைக் காண்பித்தோம். 


அக்கதையை தாங்கள் உள்வாங்கிக் கொண்ட விதத்தில் அக்குழந்தைகள் அவரவர் சுயவிருப்பப்படி ஓவியமாக வரைந்து தந்தார்கள். அதை விருதளிப்பு நாளில் கண்காட்சியாக வைத்தோம். அந்நாளில், யானை டாக்டர் கதையைப் பற்றிய தங்களது உணர்தல்களை சைகை மொழியில் அக்குழந்தைகள் ஜெயமோகன் அவர்களிடம் வெளிப்படுத்திய காட்சி என் மரணக்கணம் வரை நினைவகலாத ஒன்று. அன்று, மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள் என் இரு கைகளையும் இறுகப்பற்றி அணைத்துக்கொண்டு அழுதபடியே, "இவனாலதான்ய்யா இத எழுதமுடியும். இவன நிரகாரிக்கவே முடியாது. விமர்சனம் வைக்கலாம், அதையெல்லாம் இவன் தாண்டிடுவான். காலத்தால அழியாத இந்த கதைய இவனாலதான் எழுத முடியும்..." என்று நெகிழ்ந்து பேசியபடியே இருந்தார். 


அடுத்த மூன்று ஆண்டுகள் நாங்கள் யானை டாக்டர் கதையையும், சேகர் தத்தாத்ரியின் சூழியல் ஆவணப்படத்தையும் ஊரூராகக் கொண்டுசென்று பள்ளிக்கூட குழந்தைகளுக்கும், கல்லூரி இளையவர்களுக்கும் அறிமுகப்படுத்தினோம். கிட்டத்தட்ட எங்கள் ஒற்றைச் செயற்திட்டமாகவே அதை நாங்கள் கருதிக்கொண்டோம். அது உருவாக்கிய உளவிசையை இப்பொழுது நினைத்தாலும் வியப்பெழுகிறது. ஜெயமோகன் என்ற சொல் எனக்குள் நிறைத்திருக்கும் அதிர்வுகளை நான் இக்கணம் மீளவும் எண்ணிப்பார்க்கிறேன்.


என்னைப் பொறுத்தமட்டில், இளைய மனங்களில் செயல்சார்ந்த ஓர் தீவிரமான உரையாடலைத் தொடர்ந்து உருவாக்கும் ஒற்றை எழுத்தாளராக ஜெயமோகன் அவர்களை உணர்கிறேன். அவ்வகையில், அவர் சுந்தர ராமசாமியின் அகநீட்சி என்ற எண்ணம் எப்பொழுதும் எனக்குண்டு. ஓர் ஆசிரியமனதாக அவரை நான் கரம்பற்றிக்கொள்வதில் நிறைவெய்துகிறேன். எனது அகத்தருணங்கள் பலவும் அவருடைய சொற்துணையால் அருளப்பட்டுள்ளது.


ஸ்டாலின் பாலுச்சாமி, கருப்பட்டியில் கடலைமிட்டாய் செய்கிறான்; சிவகுருநாதன், கைத்தறி நெசவை மீட்டெடுக்க முழுமூச்சாக இயங்குகிறான்; முத்துவும் மைவிழியும் மாற்றுமருத்துவத்தை எளிய மக்களிடம் சேர்ப்பிக்கின்றனர்; கெளசிக், அருணிமா இருவரும் மரபுக்கட்டடக்கலையை முன்னெடுக்கின்றனர்; மதுமஞ்சரி, ஊரூராக அலைந்து திரிந்து ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமுள்ள வசிப்புப்பகுதிகளில் உள்ள கிணறுகளை புனரமைக்கிறார்; பாரதி கோபால், சுயகல்வியைத் தேடி எனும் பெயரில் ஆளுமைகளின் வாழ்வனுபவங்களை ஆவணப்படுத்துகிறாள்; விஷ்ணுப்ரியா, கழிவு மேலாண்மை சார்ந்து தன் வாழ்வினை அமைத்துக்கொண்டு இந்தியா முழுக்கப் பயணிக்கிறாள்; அருண், பிறந்த குழந்தைகளுக்கான தூயபருத்தித் துணிகளை தயாரித்து கரம்சேர்க்கிறான்; பாலகுருநாதன், நெகிழிக்கு மாற்றாக துணிப்பைகள் தைத்து பரவலாக்குகிறான்; பொன்மணி  மலையடிவார கிராமத்துப் பெண்களுக்கு தையல் பயிற்றுவிக்கிறாள்...


இவ்வாறு குக்கூவைச் சார்ந்த ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் துறையில் செயலியங்குவதற்கும், அவரவர்களின் தன்னறம் எதுவென தீர்க்கம்கொள்வதற்கும் ஜெயமோகன் அவர்களின் சொற்களே உறுதுணையாக இருக்கின்றன. இவர்கள் அனைவருக்குள்ளும் ஒற்றைமனிதர் ஆசிரியநிலையில் அமர்வதென்பதை காலமளித்த ஊழ்வினை என்று உள்வாங்கிக் கொள்கிறோம். அண்மையக் காலங்களில் எங்கள் அனைவரின் அன்றாட உரையாடலில் தவிர்க்கமுடியாததாக அவர் திகழ்வதை நாங்கள் மனதுணர்கிறோம்.



குழந்தைகளுக்கான சிறார் மாத இதழான தும்பி, நற்சிறந்த நூல்களை தேர்ந்த அச்சில் கொண்டுவரும் தன்னறம் நூல்வெளி ஆகியவற்றின் படிப்படியான வளர்ச்சிக்கு ஜெயமோகன் அவர்களின் துணைநிற்றலென்பது என்றுமே எங்கள் நன்றிக்குரியது. பல எழுத்தாளர்கள் உட்பட எத்தனையோ கலைஞர்கள் நலிவுற்ற சூழலில், இடையறாது உதவிக்கரம் நீட்டுவது ஜெயமோகன் மற்றும் அவருடைய நட்புவட்டத் தோழமைகள்தான். எந்நிலையிலும் இதை அவர் பொதுவெளியில் எழுதியதே இல்லை. ஓர் படைப்பாளிக்கு அவருடைய இறுதிக்காலம் வரை அளிக்கப்படுகிற மரியாதையும் பொருளுதவியும் எவ்வளவு அவசியம் என்பதையறிந்து அதை நிறைவேற்றும் அவருடைய பங்களிப்பை தமிழிலக்கியச்சூழல் இனிக் காலந்தாழ்ந்தே கண்டடையும்.


செயற்பாட்டுக்களத்தில் சரிவையோ, அவதூறையோ ஏற்கநேர்கிற பதற்றக் காலங்களிலெல்லாம், ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் இருப்பு எங்களை அரவணைத்து அழைத்துச் செல்கிறது. மனதில் சுமந்திருக்கும் கனவின் மலையுச்சியை மட்டுமே மீளமீள அது காட்டித்தருகிறது. வென்றுகடந்தாக வேண்டிய சுயப்பொறுப்பை அகமுணர்த்துகிறது. பெருஞ்செயல்களை நோக்கி அறைகூவ அறிவுறுத்துகிறது. 'ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை' அளிக்கிறது. 'ஆகவே, செயல் புரிக' என்பதை உச்சாடனம் போல மனதுக்குள் முழங்கத் துணிவளிக்கிறது.


எல்லாவற்றுக்கும் மேலாக... 'புறப்பாடு' நூலில் ஒன்றை ஜெயமோகன் அவர்கள் விவரித்திருப்பார். தாய்தந்தையரை இழந்து இந்தியா முழுதும் அலைந்துதிரிந்த தவிப்புமனம் எத்தகையது என்பதை அப்புத்தகங்களின் அத்தியாயம் சுமந்திருக்கிறது. அண்மையில், எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்குத் தன்னறம் இலக்கிய விருது அளிக்கும் நிகழ்வில்,  தாய்தந்தையற்ற தாமரை பாடல் பாடி முடித்தவுடன் வேகவேகமாக அவளை தோளோடு சேர்த்தணைத்து, தூரத்திலிருந்த தன் மகள் சைதன்யாவையும் குரலெழுப்பி அருகில் வரச்சொல்லி அழைத்து ஒளிப்படம் எடுத்துக்கொண்ட அக்கணம்... என்னால் இப்போதுவரை அதை கண்ணீரின்றி நினைக்க இயலவில்லை.


ஆயிரமாயிரம் உயிர்களுக்கான தந்தையாகவும் ஆசிரியராகவும் திகழக்கூடியதாக உங்கள் வாழ்வை இறை ஆசீர்வதித்திருக்கிறது. எத்தனையோ பிறவிகளின் நல்லூழ் இது! பல்லாயிரம் ஆண்டுகளாக அணையாது எரிகிற சூரியனின் சுடர்பட்டு, பல்லாயிரம் மொக்குகள் மலர்வதைப் போல உங்கள் பேரிருப்பு எத்தனையோ மனங்களுக்கான விடிகாலை நம்பிக்கையாகிறது. பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் தினமும் அதிகாலை மூன்றரை மணியளவில் அகவல்பாடி பிரார்த்தனை செய்வார். பிரார்த்திக்கும் ஒருசில நிமிடங்களில் உடைந்தழுது கண்ணீர் மல்கி நாதழுதழுக்க 'அருட் பெருஞ் சோதி... தனிப் பெருங் கருணை...' என மனமுருகி அகவல்பாடி துதிப்பார். அந்த அகவல்குரலை மானசீகமாக தொழுதுவணங்கி ஜெயமோகன் அவர்களுக்கான நீளாயுளை தெய்வங்களிடம் வேண்டுகிறேன். நித்ய சைதன்ய யதியின் கனிவுமுகத்தை நெஞ்சில் இக்கணம் நிறைக்கிறேன். ஊழே... குருவருள் என்றும் அகம்நிலைக்க நீ விதிசெய்! 


குக்கு சிவராஜ் - தமிழ் விக்கி பக்கம்

குரல்களின் நுண் அரசியலும் ஜெயமோகனும் – அமிர்தம் சூர்யா


சமூக நீதிக்கு எதிரான விளிம்பு நிலைக்கு விரோதமான எழுத்தாளர் ஜெயமோகனை நீங்கள்  கொண்டாடுவதன் அரசியல் என்ன? என்று நேரிடையாக ஒரு ஜூம் மீட்டிங்கில் ஒருவர் கேட்டார்.

நான் உண்மையிலேயே இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை .அதை விட முக்கியம் இந்த கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை. அதை விட முக்கியம் இந்த குற்றச்சாட்டின் சாரம்சத்தில் ஜெயமோகனை நான் அவதானிக்கவே இல்லை.எனக்கு அவர் படைப்பாற்றல் வழியாகவே வந்தடைந்தார்.படைப்பின் மூலமே என்னைப் பிரமிக்க வைத்தார் எழுத்து தான் என்னை வசீகரித்தது தேடலைத் தொடங்கியது புதிய வாசலைத் திறந்தது. எழுத்தின் அரசியல் பற்றி எனக்குப் பெரிய புரிதல் இல்லை. ஏனெனில் நான் விமர்சகன் இல்லை. களப்பணியாளன் இல்லை. கருத்தியல் போராளி இல்லை. நான் எழுத்தாளன் கவிஞன் மட்டுமே. படைப்பின் திறப்புகளை இனம் கண்டு அதனுள் எனக்கு அகப்படும் தரிசனத்தை உள்வாங்கி சக நண்பர்களுக்கு கைகாட்டிமரம் போல் கடந்து போகிறவன். 95 களிலிருந்து ஜெயமோகன் எனக்கு பழக்கம். விஷ்ணுபுரத்தில் எல்லோரும் என்னென்னவோ அரசியல் பேசினாலோ எனக்கு ஒரு இனக்குழுவில் சிறு தெய்வம் எப்படி தோன்றுகிறது எப்படி நிலைக்கிறது பின் எப்படி தொன்மமாக மாறுகிறது என்பதை பின் தொடர்ந்து சிலாகித்து இருக்கிறேன். 

ஜெயமோகன் ஒரு சிறுகதையில் தன் கருத்திலிருந்து  சற்றும் மாறாத பின் வாங்காத ஒரு அரசனை கேள்வி கேட்டு திமிராக நிற்கும் கருத்தியல்வாதிக்கு தண்டனையாக அரசபையில் அவன் மீது நெய் ஊற்றி எரிக்கும் போது ஜெயமோகனின் ஒரு வரி ..நெய் எரிக்கவில்லை அவன் அறிவுதான் அவனை எரித்தது என்று வரும். இது அந்த சிறுகதைக்கானது மட்டுமா? இல்லையே விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை கொடுத்த பலர் இப்படிதான் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் .அவர்களின் அறிவு தான் அவர்கள் இறக்க காரணமாகி இருக்கிறது. இந்த தேசம் இந்த ஆட்சி முட்டாள்களின் கைப்பாவை என்பது தானே அதன் உட்பொருள் இப்படியேல்லாம் அவர்களிடம் நான் விளக்கம் சொல்ல இயலாது எனவே அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னால் நேரிடையாக பதில் சொல்லாமல் கீழ்க்கண்டவாறு சொன்னேன்.

ஜெயமோகன் சமூக நீதிக்கு எதிரானவர் என்றால் சமூக நீதிக்காகவே போராடும் தலைவன் திரு தொல் திருமாவளவன்  நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏன் ஜெயமோகனை முக்கியத்துவம் கொடுத்து அழைத்தார். எல்லோரையும் அவ்வளவு சீக்கிரம் அங்கீகரிக்க மறுக்கும் ஜெயமோகன் , திருமாவளவனைப் புகழ என்ன காரணம்? சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் ஏன் ஜெயமோகன் எழுதிய வெள்ளை யானை நாவலுக்கு பின் கொண்டாட ஆரம்பித்தார். அவர்களுக்கெல்லாம் தெரியாத உணராத அக்கறையா உங்களுக்கு வந்து விட்டது..முதலில் அவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டு விட்டு பிறகு என்னிடம் கேளுங்கள் இலையிடம் விசாரணை எதற்கு வேரிடம் விவாதி என்பதாகப் பதில் சொன்னேன். ஒரு வகையில் கிரேட் எஸ்கேப்பிசம் தான். இப்படியான விவாதங்கள் படைப்பாற்றலை மழுங்கடித்து விடும் என்று நம்புபவன் நான். ஒருவேளை இது மூட நமபிகையாக கூட இருக்கலாம்.

மதுரை இறையியல் கல்லூரியிலேயே தலித் இலக்கியம் , அயோத்திதாசர் பற்றி   இதுவரை ஐந்து முறை ஜெயமோகன்  உரையாற்றியிருக்கிறார். முதல் உரை 2010 ல் நண்பர். வே.அலெக்ஸ் ஏற்பாடு செய்தது. பிப்ரவரி 2019ல்  தொல்.திருமா அவர்களுடன்தான் கலந்து கொண்டு அயோத்தி தாசர் பற்றிப் பேசினார் 

தலித் மக்கள் தாக்கப்பட்ட போது 27-4-2019 நடந்த கண்டன கூட்டத்தில் தொல்திருமாவளனுடன் ஜெயமோகன் பேசியிருந்தார்.

இந்த தொடர் செயல்பாடுகள் ஏன் உங்கள் நினைவிலிருந்து அகன்று மறைந்து போகிறது ?  இம்மாதிரி கேள்வி எழுப்புபவர்கள் ஆழ்மன தலித் ஒவ்வாமை கொண்ட தலித் அல்லாதவராகவே இருக்கிறார்கள் என்பது என் புரிதல்.


சிவகாசியில் ஒரு நூல் வெளியீட்டுக் கூட்டத்துக்கு நானும் பேச்சாளர் பர்வீன் சுல்தானாவும் ஒரே ரயில் ஒரே பெட்டியில் எதிர் எதிர் இருக்கையில் பயணம். முழுக்க முழுக்க இலக்கியம் குறித்தான பேச்சு தான். கடைசியில் அது ஜெயமோகனிடம் வந்து நின்றது. நான் பர்வீன் சுல்தானா வாசிக்க மறந்த ஜெயமோகனின் டார்த்தீனியம் குறுநாவல் பற்றி பவா செல்லத்துரையாக மாறி அதைக் கதையாகச் சொல்லச் சொல்ல அந்த கதையைப் படிக்காத பர்வீன் சுல்தானாவின் கண்கள் விரிந்தன ஆச்சரியத்தில். நான் சொன்னேன் என்ன பர்வீன் கொற்றவை கண் போல் ஆச்சரியத்தில் உருட்டுகிறாய் என்றேன். பேச்சு கொற்றவை பற்றி நகர்ந்தது…(பர்வீன் சுல்தான் தொழுகை நோன்பு மெக்கா பயணம் என ஒரு  மரபு மாறாத இஸ்லாமியர் …என்பதை நினைவூட்டித் தொடர்கிறேன்) பர்வீன் சொன்னார்..

“சூர்யா நான் குடும்பத்துடன் மெக்கா போனேன்.மெக்கா போகும் போதே ஜெயமோகனின் கொற்றவை வாசிக்க ஆரம்பித்தேன் அந்த எழுத்தில் அந்த எழுத்து உருவாக்கிய காட்சியில் அப்படியே நான் கரைந்து அங்கேயே அந்த பிரதி உருவாக்கிய நிலத்திலேயே வாழத்தொடங்கினேன். முக்கால் வாசி படித்தபோது மெக்கா வந்தடைந்தோம். எல்லோரும் பரபரப்பானார்கள் மெக்கா செல்ல. இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது. நான் இந்த கொற்றவையை முடித்து விட்டுத் தான் மெக்கா வருவேன். வேண்டுமானால் நீங்கள் போய் வாருங்கள். என்று நான் கொற்றவையை வாசித்து முடித்த பின்பே மெக்கா வழிபாட்டுக்குப் போனேன். அவர் இந்துத்துவாவா பாசிச குருப்பா அவர் அரசியல் ஏதும் எனக்கு வேண்டாம். எனக்கு அந்த எழுத்து போதும் அந்த கொற்றவை என்னுள் குந்திக்கொண்டாள் என்று முடித்தார்.

உன்னைப் போலவேதான் நானும் பர்வீன் என்றேன்  , டார்த்தீனியம் நாத்திகத்தை விமர்சிக்கும் நாவல் என்றும் டார்த்தீனியம் கறுப்பின மக்களின் குறியீடு என்றும் அவரவர் கருத்தியலுக்கு ஏற்ப சார்ந்திருக்கும் அரசியலுக்கேற்ப எப்படியெல்லாம் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் …என்று சொல்லி முடிக்கும் போதே , இல்லை சூர்யா வீட்டுக்கு வந்த அந்த கருப்பு விதை ஏன் இன்றைய வாசிப்புக்கு இக்கால  செல்போனில் குறியீடாக இருக்கக் கூடாது. இந்த காலத்துக்கு அதானே பொருந்தும் என்றார். அது உங்கள் வாசிப்பனுபவம் ஒரு பிரதி மீது நீங்கள் பொருத்திப் பார்க்கும் புரிதல் . ஜெயமோகனை கருத்தியல் ரீதியாக எதிர்க்கும் இயக்குனர் என் நண்பர்  வ.கீதா , டார்த்தீனியத்தை சினிமாவாக எடுக்க மிகவும் ஆசைப்பட்டு ஸ்கிரிட் எழுதி பார்க்க துணிந்தேன்ன்னு என்னிடம் சொல்லி இருக்கிறார் ஆக இந்த இடத்தில் அதாவது நம் கீதா இடத்தில் படைப்பு தானே மேலெழும்பி நிற்கிறது இம்மாதிரியான படைப்பாக உரையாடல் மட்டுமே எனக்கான பாதை என்றேன்.

பரவலான கவனத்தைப் பெற்று வரும் இளைய எழுத்தாளர் அகரமுதல்வன் போன்றோர் ஜெயமோகனுடன் ஒத்திசைந்து கைகோர்த்துப் பயணிக்கும் போது அவர் மீது விமர்சனம் வைக்காமல் நாசூக்காக நகர்ந்து கொள்பவர் என் போன்றோரிடம் மட்டுமே இம்மாதிரியான வாதத்தை வாள் வீசுவர். அதன் அருப பின்புலம் சாதியம் அல்லாது வேறொன்றுமில்லை..

முதல் பாராவில் குறிப்பிட்ட ஜூம் நிகழ்வுக்குப் பின் சென்னை பெரம்பூரில் வசிக்கும் திறனாய்வாளர் எழுத்தாளர் வே. எழிலரசுவை அவரது வீட்டில் சந்திக்க போயிருந்தேன்.அவர் திமுக ஆதரவாளர் . ஆனால் ஜெயமோகனின் எழுத்தை நுட்பமாக வாசித்து பலம் பலவீனம் ஜெயமோகனின் உள் அரசியல் என்றெல்லாம் பேசக் கூடியவர். அவர் பேசும் போது சொன்னார்.. ..

திராவிட சிந்தனையாளர்கள் அரசியல்வாதிகள் , பெரியார் தான் திராவிடத்தின் முதல் சிந்தனையாளர் என்கிறார்கள்.ஆனால் ஜெயமோகன் பேச்சின் சாரம் இல்லையில்லை பெரியார் இல்லை அயோத்திதாசர் என்ற தலித் தான்  முதல் சிந்தனையாளர் என்பது. இதன் மூலம் பெரியாரை கீழ் இறக்கி விடுகிறார் இதை நுட்பமாகப் புரிந்து கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள்

இந்தியாவின் முதல் தொழிலாளர் போராட்டமே திருவிக நடத்தியது என்று தான் எல்லா திராவிடர்களும் வரலாறு எழுதிவிட்ட தருணத்தில் , இல்லை முதல் தொழிலாளர் போராட்டத்தை நடத்தியவர் அயோத்திதாசர் தான் என்று முன் மொழிய வெள்ளையானை நாவலை எழுதுகிறார். ஏன் திருவிகவை ஆவணமாக்கியவர்கள் அயோத்திதாசரை இருட்டடிப்பு செய்தனர். காரணம் சாதியம் அல்லாது வேறென்ன?

விஷ்ணுபுரம் விருது விழாவில் அமிர்தம் சூர்யா

எம்.சி ராஜா வை யாரும் கண்டுகொள்ளாத போது தலித் அல்லாத எழுத்தாளர் ஜெயமோகன் தான் ஒரு பெரிய கட்டுரையை எம்.சி.ராஜா வை பற்றி எழுதுகிறார். இம்மாதிரியான  ஜெயமோகனின் செயல்பாட்டுக்காகத் தான் திருமாவளவன் ஆதரிக்கிறார். என்று நான் நம்புகிறேன் என்பதாக அவரின் பேச்சு ஓடியது.
ஆக .. என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா என்று அதிர்ச்சியாகி கேட்கும் அதிகம் வாசிக்காத,நுண் அரசியல் தெரியாத, படைப்பின் அரசியல் புரியாத  தேங்கிப்போன சிலரின் சொல் சிலம்பமாகவே இன்றைய விமர்சன சூழல் இருக்கிறது என்பதாக நான் விளங்கிக் கொண்டேன்.

முன் எப்போதும் போல் இல்லாத அளவு உக்கிரமான சாதியாலும் மதத்தாலும் கெட்டி தட்டிப் போன சூழலில் குழு அரசியலின் இறுக்கத்தில்  சகபடைப்பாளிகளை கொண்டாடும் மனநலம் குறைந்து வரும் காலத்தில் அதிலிருந்து மீண்டெழுவதும் மீட்டெடுப்பதும் கூட ஒரு படைப்பாளியின் பணியாயிருப்பதால் இந்த அழகிய தருணத்தில் ஜெயமோகன் என்ற தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளனை நிபந்தனையின்றி கொண்டாடுகிறேன். வாழ்த்துகிறேன். இது  கட்டுரைக்கான குறிப்புக்கள் தான். இதில் பல தரப்பு குரல்கள் நுண் அரசியலோடு பதிவாகியுள்ளன எனவே தான்  குரல்களின் நுண் அரசியல் என்று பெயரிட்டேன்.

***

நதிமுகம் – கார்த்திக் பாலசுப்ரமணியன்

முதல் தொகுப்பான ‘திசைகளின் நடுவே’யை முன்வைத்து



சமீபத்தில் ‘அரூ’ அமைப்பு நடத்திய அறிவியல் போட்டிக்கு நடுவராக இருந்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் பற்றி எழுதியிருந்த தன்னுடைய கட்டுரையில் தற்போது எழுத வருபவர்களிடத்தே இருக்கும் ஜெமோவின் தாக்கம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அது எந்த ஒரு துறையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் - இசையோ, இலக்கியமோ, ஓவியமோ, தொழில்நுட்பமோ, அரசியலோ - ஜெமோவைப் போல ஒருவர் தான் தேர்ந்துகொண்ட துறையில் தனிப் பெரும் விருட்சமாக உருவெடுத்து நிற்கும்போது, அவ்விருட்சத்தின் அடர்ந்து பரந்திருக்கும் கிளையின் நிழல் தீண்டாமல் வேண்டுமானால் ஒரு செடி உருவாகலாம். ஆனால், அது ஆழ்ந்து பரப்பியிருக்கும் அதன் வேர்களின் ஈரத்தைப் பரிசிக்காமல் தப்புவது அத்துணை எளிய காரியம் கிடையாது. முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் புனைவு, அல்புனைவு, விமர்சனம் என்று பல்வேறு வகைமைகளில் தீராப் பற்றுடன் செயல்பட்டு வரும் ஜெமோவின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘திசைகளின் நடுவே’.

இப்படியாக, இன்று உருவெடுத்து நிற்கும் ஆளுமைகள் பலரையும் அவர்களுடைய முதல் படைப்பின் வழியே அறிந்துகொள்வதும் அதை ஆய்ந்துணர்வதும் எழுத்தைப் பழகும் ஒருவனுக்கு முக்கியமானதொரு பயிற்சி. அப்படி இதுவரை வாசித்த முதல் தொகுப்புகளின் அடிப்படையில் இரண்டு முக்கிய அவதானங்களை என்னால் முன்வைக்க முடியும். அசோகமித்திரன், கி.ரா. போன்று பிரசுரமான முதல் கதையிலிருந்து தங்களின் கடைசிக் கதை வரை தாங்கள் பற்றிக்கொண்ட மொழி, நடை மற்றும் இயங்குதிசையில் ஒரே விதமான நிதானத்தையும் தரத்தையும் கைக்கொள்பவர்கள் ஒரு சாரர். மறுபக்கத்தில் கோணங்கி போல ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கி படிப்படியாகத் தீவிரத்தை கைக்கொண்டு தனக்கென்று தனிப் பாதை வகுத்துக்கொண்டவர்கள் அல்லது அதற்கு எதிராகத் தீவிரமாகத் தொடங்கி பின்னர் வலுவிழந்து தணிந்து தேங்கி நின்றுவிட்டவர்கள் என்று மொத்த பயணத்திலும் ஒருவித லீனியரான வளர்ச்சியையோ வீழ்ச்சியையோ கண்டவர்களாக இருக்கிறார்கள். ஜெமோ இவ்விரு சாரர்களிடமிருந்தும் வேறுபடுகிறார். முதல் தொகுப்பிலேயே தன் வருகையைத் தீர்க்கமாக ஆழப் பதித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக இயங்கத் தொடங்கி, இந்த முப்பது வருடங்களில் அத்தீவிரத்தன்மையை சிறிதும் தணியவிடாத வேட்கையுடன் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் செயல்பட்டுவருகிறார்.


இன்று, ஜெமோவைக் கண்டடைந்த பலரும் அவருடைய புகழ் பெற்ற அறம் தொகுப்பு வழியாகவோ, அவர் தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் மூலமாகவோ, சமீபத்தில் வெளியான புனைவுக் களியாட்டுக் கதைகளை வாசித்தோ வந்தவர்களாகவே அதிகமிருப்பர். சமகாலத்தில் எழுதத் தொடங்கிய ஒரு படைப்பாளியைத் தவிர மற்றவர்களை அவர்களின் முதல் நாவல் / முதல் சிறுகதை/கவிதைத் தொகுப்பின் வழியாக அறிந்துகொள்வது அத்தனை சுலபமில்லை. அதுவும் ஜெமோவைப் போன்று காத்திரமாகச் செயல்படும் ஒரு படைப்பாளி தன் படைப்பூக்க காலத்தின் உச்சத்தில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளில் திகைத்து நின்றவர்களே அதிகம். அதே நேரத்தில், ஒரு படைப்பாளியின் ஆரம்பக்காலக் கதைகளைத் தேடி வாசிப்பதின் வழியே, அங்கிருந்து அவர் வந்து சேர்ந்திருக்கும் தூரம், தேர்ந்துகொண்ட பாதை, பற்றிக்கொண்ட கொள்கைகள், கண்டடைந்த மொழி, முரண்பட்டு நிறுவிய தர்க்கங்கள் என்று அப்படைப்பாளியின் ஒட்டுமொத்த ஆளுமை உருவாகி வந்த படிநிலைகளை அறிந்துகொள்ள இயலும். அப்படியாக ஜெமோவின் முதல் தொகுப்பான ‘திசைகளின் நடுவே’ வழியே அவர் உருவாகி வந்த பாதையை வாசித்தறிந்து மதிப்பீடு செய்யும் சிறு முயற்சியே இக்கட்டுரை. 


இத்தொகுப்பு 1987–இல் தொடங்கி 1992 வரையிலான ஆறு வருட காலத்தில் எழுதப்பட்ட பதினாறு கதைகளைக் கொண்டது. இதற்கு முன்பே பல்வேறு புனைபெயர்களில் வேறு சில இதழ்களில் அவர் கதைகள் எழுதியிருந்தாலும், கணையாழியில் வெளியாகி இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ள ‘நதி’ என்ற சிறுகதையையே தன்னுடைய முதல் கதையாகக் குறிப்பிடுகிறார். கரோனா காலத்துப் புனைவுக் களியாட்டில் நாளொன்றுக்கு ஒரு கதை, இருபத்து இரண்டாயிரத்துச் சொச்சம் பக்கங்களைக் கொண்ட வெண்முரசு, மகத்தான புனைவுலகை கட்டமைக்கும் விஷ்ணுபுரம், கொற்றவை ஆகிய நாவல்கள் என்று பிரமாண்டங்களின் வழியே ஜெமோவை அறிமுகம் செய்துகொண்ட பலருக்கும் அவர் தன் முதல் தொகுப்புக் கதைகளுக்கு எடுத்துக்கொண்ட காலமான ஆறு ஆண்டுகளைக் காணச் சற்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இன்றும்கூட அவரின் சிறந்த கதைகளைப் பட்டியலிடும் ஒருவரால் இத்தொகுப்பிலுள்ள ‘படுகை’, ‘மாடன் மோட்சம்’, ‘போதி’, ‘லங்காதகனம்’ ஆகிய கதைகளைப் புறக்கணித்துத் தேர்ந்தெடுத்துவிட முடியாது என்பதே இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற போதுமானது. 


கொஞ்சம் கூர்ந்து வாசித்தால், அவர் பிற்காலத்தில் எழுதிய பல்வேறு சாதனைப் படைப்புகளுக்கான ஊற்றுமுகம் இத்தொகுப்பில் இருப்பதை அறிந்துகொள்ளலாம். ‘படுகை’ கதையை வாசித்த ஒருவருக்கு ‘காடு’ம், ‘ஊமைச் செந்நாயு’ம் இயல்பாகவே மனதுள் எழுந்து வரும். ‘விசும்பி’ன் ஒரு துண்டு வானத்தை ஜகன்மித்யையிலும், வெண்முரசை ‘திசைகளின் நடுவே’யிலும் கண்டுகொள்வது அத்தனை சிரமமில்லை. புனைவுக் களியாட்டுக் காலத்தில் எழுதிய நூற்று இருபத்தாறு கதைகளையும் பல்வேறு தலைப்புகளில் விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாகச் சமீபத்தில் கிண்டில் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். அப்படிப் பதிப்பிக்கும்போது அக்கதைகளின் மையப் பொருளை முன்வைத்து ஒவ்வொரு தொகுப்புக்குமான கதைகளை வகை பிரித்திருந்தார்கள். அப்படிப் பிரிக்கப்பட்ட தொகுப்புகள் ஒவ்வொன்றிலும் சேர்க்கத் தகுதிகொண்ட ஆரம்பக் கதை ஒன்று இந்த முதல் தொகுப்பில் உண்டு.



இத்தொகுப்பின் பதினாறு கதைகளும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்டவை. இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ‘படுகை’, ‘லங்காதகனம்’, ‘போதி’ போன்ற கதைகள் நாவலாக எழுதப்படுவதற்கான விரிவும் செறிவும் கொண்ட களங்களைக் கொண்டவை. வார்த்தைச் சிக்கனம், குறிப்பால் உணர்த்துதல், தொடக்கம்-முடிச்சு-முடிவு என்று நான்கு பக்க அளவுக்குள் கதை சொல்லும் நவீனத்துவ பாணி கதைகளே கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அப்போக்கிலிருந்து முற்றிலும் விலகி வெளிவந்த ஒரு தொகுப்பாக இதைக் காணலாம். இதிலுள்ள கதைகள் பலவும் விரிவான உரையாடலை வாசகனிடத்தில் நிகழ்த்துகின்றன. மேலும் அவை எடுத்துக்கொண்ட களங்கள், சொல் முறை, தேர்ந்துகொண்ட வடிவ உத்தி என அனைத்தும் நவீனத்துவ பாணி கதைகளுக்கு மாறானவை. நவீனத்துவம் மூடி மறைத்தளிக்கும் ஒன்றை இவர் விரித்தெடுத்து விளக்குகிறார். அதன் வழியே வாசகனிடத்தே உரையாடலை நிகழ்த்துகிறார். தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவரான சுந்தர ராமசாமியின் பள்ளியிலிருந்து வந்தாலும் அன்னார் நம்பிய இலக்கியத்துக்கு எதிராக வந்து நின்று மற்றொன்றைப் படைத்து நிறுவுவது சாதாரணமானதல்ல. அதுவும், அவர் கோலோச்சிய ஒரு காலத்தில். அப்படி நிறுவுவது ஒரு பக்கம் இருந்தாலும் தான் அப்படி நிறுவுவேன் என்று முன்கூட்டியே கணித்து அதையும் தன் முதல் தொகுப்பின் முன்னுரையிலேயே குறிப்பிடுவதற்கு அசாத்திய தன்னம்பிக்கை வேண்டும்.


“இக்கதைகளின் பின்புலமாக உள்ள என் சமூக இலக்கிய பிரக்ஞைகளின் ஆக்கத்தில் சுந்தர ராமசாமிக்கும், மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவுக்கும் முக்கியமான பங்கு உண்டு. அவர்களை முற்றிலுமாக மறுப்பவனாக நான் ஆனால்கூட, அவர்களுடைய தொடர்ச்சியே ஆவேன்.”


முதலாம் உலகப் போர் காலத்தில் கலை இலக்கியத்தில் ஏற்பட்ட போக்கில், யாருமற்ற தனிமையை, நம்பிக்கை பிறழ்ந்த வெறுமையை என்று வாழ்வின் தீராத கசப்புகளை, அவிழ்க்க முடியாச் சிக்கல்களை முன்னிறுத்தி எழுதப்பட்ட படைப்புகளை நவீனத்துவப் படைப்புகள் என்று வரையறுக்கலாம். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மையத்தைக் கட்டுடைத்து, கவனத்தை விளிம்புக்கு எடுத்துச் சென்று அதன் வழியே முற்றிலுமாக புதியதொரு வாசிப்பைச் சாத்தியப்படுத்திய படைப்புகளை பின் நவீனத்துவப் படைப்புகள் எனலாம். இந்த அளவுகோல்களின் வழியே இத்தொகுப்பின் கதைகளை மதிப்பிடும்போது அவை அதிகமும் பின் நவீனத்துவத்தின் கூறுகள் வெளிப்படும் கதைகளாகவே இருக்கின்றன.


பின் நவீனத்துவம் அதிகாரம் ஓரிடத்தில் குவிவதை எதிர்க்கிறது. மையத்தைத் தகர்த்தல் அதன் முக்கிய கூறுகளில் ஒன்று. அப்படியான அதிகார மையம் செயல்படும் முக்கிய இடங்களாக அரசியல், மதம் போன்றவை இருக்கின்றன. அவ்வாறான அதிகாரத்தைக் குவித்து இயங்கும் ஒரு மடத்தின் கதை ‘போதி’. அங்கே அதிகாரத்தை இழந்துவிடாதிருக்க நடக்கும் போட்டி, வெளியே புனிதமாகவும் வணக்கத்துக்கு உரியதாகவும் இருக்கும் ஓர் இடத்துக்குப் பின் நிகழும் அருவருப்பான அரசியல் என்று அக்கதை விரிகிறது. 


ஒரு மையத்துக்கு எதிராக மற்றொரு மையத்தை நிறுவுதல், மையத்தையே கேள்விக்கு உட்படுத்தி விசாரணை செய்வதன் வழியே புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றை பின் நவீனத்துவத்தின் முக்கிய அம்சங்களாக முன்மொழிகிறார் பின் நவீனத்துவ காலத்தின் மிக முக்கியமான தத்துவவாதியான தெரிதா.  காடுகளை அழித்து, ஆற்றின் போக்கை மறித்து அணையெழுப்புவதையும் தேவைக்கு நீரைத் திறந்து மின்சாரம் எடுப்பதையும் அதன் வழியே அடையும் வளர்ச்சியையும் நவீனத்துவம் பாராட்டுகிறது. இது முழுக்க முழுக்க மனிதனை மையமாகக்கொண்ட ஒரு பார்வை. ஓடும் ஆற்றுக்கு ஒரு குரல் இருந்தால்? அது புரண்டோடும் மலைக்கும் காட்டுக்கும் தனியே ஒரு மொழியிருந்தால்? அதுவே ஜெமோவின் ‘படுகை’. இரண்டாயிரத்துப் பிறகு சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் உலகெங்கும் இக்குரல் ஓங்கி ஒலித்தாலும் அதை 1989-லேயே புனைவில் எழுப்பிய வகையில் ‘படுகை’ மிக முக்கியமான கதை. ஒரு வகையில் இன்று எழுதப்படும் சூழியல் புனைவுக்கெல்லாம் முன்னோடி.



பின் நவீனத்துவம் புனிதங்களைப் பகடி செய்கிறது. பன்மைத்துவத்தைக் கொண்டாடுகிறது. அப்படியாக மகாபாரதத்தின் பஞ்ச பாண்டவர்களின் வெற்றியைப் புகழாமல் – போரும் வெற்றியும் அந்தக் காலத்தில் ஒருவகையில் தர்மம் – மாறாக, அதை இன்றைக்கு மறு வாசிப்புக்கு உட்படுத்தி, குருஷேத்திரப் போருக்குப் பின்னால் நிகழ்ந்திருக்கக்கூடிய அழிவின் குரலை ஒரு எளிய பிரஜ்ஜையின் பார்வையில் சொல்கிறது ‘திசைகளின் நடுவே’ கதை. பாகவதத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒட்டுமொத்த மகாபாரதத்தையே ஒரு பின் நவீனத்துவப் படைப்பாக அணுக முடியும். மேலும், பின் நவீனத்துவம் வரலாற்றை மறுவாசிப்பு செய்யக் கோருகிறது. பிரதிகளை மீட்டுருவாக்கம் செய்வதையும் ஆதரிக்கிறது. அதை ஜெமோ தன்னுடைய முதல் தொகுப்பிலேயே தொடங்கிவிட்டார். இதன் தொடர்ச்சியை, பின்னர் எழுதப்பட்ட விஷ்ணுபுரம், கொற்றவை, வெண்முரசு வரைக் காணலாம். இதே போலப் புனிதத்தைப் பகடி செய்யும் மற்றொரு கதை இத்தொகுப்பிலுள்ள ‘சிவமயம்’.  


மெட்டா நரேட்டிவ் என்னும் பெருங்கதையாடலுக்கு எதிராக மைக்ரோ நரேட்டிவ் என்னும் சிறு கதையாடலை பின் நவீனத்துவம் அங்கீகரிக்கிறது. அதன் வழியே குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கிறது. ஆகமம் வழி வேளைக்கு ஒரு பூஜை, படையல், பக்தர்களின் வருகை, திருவிழா, உற்சவம் என்று சகல செளபாக்கியங்களும் பெற்றுத் திகழும் பெருந்தெய்வங்கள் ஒரு பக்கம் இருக்க, வருடத்துக்கு ஒரு பலி என்றிருந்து அதுவும் கிடைக்காத எளியவர்களின் தெய்வமாக விளங்கும் மாடனின் கதையைப் பேசுகிறது “மாடன் மோட்சம்”. 


இத்தொகுப்பில் உள்ள லங்காதகனம் கதையை அசோகமித்திரனின் புலிக்கலைஞனுடன் ஒப்பிடலாம். முன்னது அனுமார் வேஷம் கட்டும் அனந்தன் ஆசானின் கதை. பின்னது புலி வேடமிடும் டகர் பாயிட் காதரின் கதை. இவ்விரு கதைகளுமே கலைஞனே கலையாக மாறி நிற்கும் தருணத்தைப் பேசுகின்றன. இருவரும் தத்தம் கலையின் உச்சத்தைத் தரிசிக்கும் புள்ளி, அந்த உன்னதத்தை உணரவியலாத அற்பர்களால் அவர்கள் அடையும் அவமானம் என்று ஒப்பிட்டு வாசிக்கப் பல புதிய பரிமாணங்களைத் திறந்துகொள்ளும் தமிழின் மகத்தான கதைகள். 


மையத்திலிருந்து ஒட்டுமொத்த பார்வையை விளிம்புக்கு நகர்த்துவதின் மூலமாக அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கவும், அதன் வழியே பிரச்சினைக்கான தீர்வைச் சொல்லாமல் அப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களின் வழியே அவற்றை அணுகவும் புரிந்துகொள்ளவும் பின் நவீனத்துவம் கற்றுத் தருகிறது. அப்படி எழுதப்பட்ட ஒரு கதையாக சவுக்கு கதையைக் கூறவியலும். அதில் வரும் சோட்டேலாலுக்கு எந்தத் தீர்வையும் கதை சொல்வதில்லை. சமூகத்தின் கீழ்மைகள் பற்றி பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால் அவர்களின் வாழ்வை எந்த பக்கச் சார்பும் இன்றி காட்சிப்படுத்துகிறது. அவர்களுடைய மீறல்களுக்குப் பின்னிருக்கும் நியாயங்களை உணரும் வாசகனுக்குத் திறப்பதோ ஒரு புதிய உலகு.  


சமீபத்தில் எழுத்தாளர் மாமல்லன் கிண்டிலில் வெளியிட்ட ‘கசடதபற 16’ ஆம் இதழில் தமிழின் ஆரம்பகாலச் சிறுகதைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரையில் எழுத்தாளர் சா.கந்தசாமி ‘தொடக்கம்’ என்பதற்காகவே எந்தவிதச் சலுகையையும் ஓர் இலக்கியப் படைப்புக்குத் தர வேண்டிய அவசியமில்லை என்பதாகக் குறிப்பிட்டிருப்பார். அதையே அடிப்படையாகக்கொண்டு இத்தொகுப்பை அணுகினால் இதிலுள்ள நதி, வீடு, கண், போன்ற கதைகள் (அவரின் சிறந்த கதைகளை முன்வைத்து விமர்சித்தால்கூட) புதிதாக நிகழ்த்தப்பட்ட முயற்சிகள் என்ற அளவில் நின்றுவிடுகின்றன. இவை அக்காலத்தில் அதிகமும் எழுதப்பட்ட கதைகளின் சாயல் கொண்டவை. 


இத்தொகுப்புக்குப் பின்னர் ஜெமோ நூற்றுக்கணக்கான கதைகளை எழுதிவிட்டார். பேய்க் கதைகள், அறிவியல் புனைவு, மாய யதார்த்தக் கதைகள், வரலாற்றுப் புனைவு, புராணக் கதைகள், லட்சியவாதக் கதைகள், துப்பறியும் கதைகள் என்று புனைவில் சாத்தியமுள்ள அத்தனை எல்லைகளையும் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். 


ஜெமோவின் ஆரம்பக் கால கதைகளிலிருக்கும் இத்துணை ஆழமும் விரிவும் அடர்த்தியும் பிற்காலத்தில் அவரின் சாதனைகளாகக் கொண்டாடப்படும் நாவல்களிலும் பயின்றுவந்திருப்பதைக் காணலாம். மதல் தொகுப்பை உள்ளடக்கிய ஆரம்பக் காலத்துக் கதைகளில் அடங்காத உளக்கொதிப்பும் தத்தளிப்புகளும் மூடிய கதவுகளை முட்டித் திறக்கும் வெறியும் வெளிப்படுவதை இப்போதும்கூட உணர முடிகிறது. பொங்கிப் பெருகி தனக்கென்று தனியொரு பாதை உண்டாக்கி நகரும் பெருநதியின் ஊற்றுமுகம் அமைதியானது என்பார்கள். ஆனால், இது கடலின் ஆக்ரோஷத்தைத் தன்னகத்தே கொண்டுதித்த பெருநதி. காலத்தில் நிலைபெற்றுவிட்ட இதன் நதிமுகம் காண வாய்த்தவர்கள் உண்மையில் பாக்கியசாலிகள். 

***

கார்த்திக் பாலசுப்ரமணியன்


மழை மரம்! - சரவணன் சந்திரன்


மஞ்சள் ஒளியை ஊடுருவி இளமழைச் சாரல் விழுந்து கொண்டிருக்கையில், இலைகள் சுருண்டிருந்த மரம் ஒன்றினடியில் சோர்வாக அமர்ந்திருந்தேன். மற்றவையெல்லாம் மழைநேரத்தில் இலை மலர்ந்து நிற்கையில், தன் முகம் தாழ்த்தி நிற்கிற இம்மரத்தை 'பன்னி' மரமெனக் கிண்டலாகச் சொல்வார்கள். "வெவரம் தெரியாதவனுக. என்னைக்குத்தான் நல்லத இவனுக கொண்டாடி இருக்காங்க. இது மழை மரம். கீழ புல் பூண்டுகூட மொளைக்க விடாம இருக்கற பெறப்பு நோக்கமில்லாத மரமா இது? இலையெல்லாம் ஒடுங்கி மழைத் தண்ணி நிலத்தில விழ வைக்கிற மரம் இது. பூமியை குளிர்விக்கிற நோக்கமுண்டு அதுக்கு. நல்லது செய்ற ஒண்ணை தூங்கு மூஞ்சி மரம்னு சொல்லிட்டாங்க" என்றார் மார்க்கர். 


அமர்ந்த நிலையிலேயே என்னுடைய வெண்ணிற விளையாட்டு உடையைத் தொட்டுப் பார்த்தேன், மண்ணொட்டிச் சொதசொதவென இருந்தது ஈரம். ஏனோ அதை உதறத் தோன்றவில்லை உடனடியாக. காலம் முழுக்க ஒட்டி வரப் போகிற செம்மண் அதுவென அறியவும் இல்லை அப்போது. கன்னச் சதைகள் தளர்ந்து தொங்கிய மார்க்கர், அந்த பரந்துவிரிந்த முதிய மரத்தைப் போலவே தெரிந்தார் எனக்கு. என்னை உழற்றிக் கொண்டிருந்த அழுத்தம் ஒன்றினுள் இருந்து மீட்டுக் கொடுக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். பழக்கப்பட்ட உறுதுணைகளிடம் முதிய யானையொன்று செய்வதைப் போல, தலையை ஆட்டியபடி வெற்றிலையை அதக்கிக் கொண்டிருந்தார் என்னருகே அமர்ந்து. 


சுண்ணாம்பு பவுடர் அடங்கிய ஈய வாளியைத் தூக்கிக் கொண்டு, மைதானத்தை குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கோடு போட்டுப் பிரிக்கிறவர் என்பதாலேயே அவருக்கு மார்க்கர் எனப் பெயர். எப்போது பந்து எழும்பும்? துள்ளும்? அவருக்கு எவரைக் காட்டிலும் மைதானத்தை நன்றாகத் தெரியும். தூர தேசத்து மைதானங்களின் மடிகளை எல்லாம் பார்த்தவர். அதில் பெருங்கனவுகளுடன் துள்ளி மடிந்த எத்தனையோ முகங்களையும் கண்டவர். 


அன்றைக்கு அந்த மைதானத்தில் பார்த்த போட்டி ஒன்றில் அவ்வணி அணிந்திருந்த மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிவது குறித்து நான் விசனப்பட்டுக் கொண்டிருந்ததையும் அறிந்தே இருந்தார் அவர். கடமானைப் போல மைதானத்தில் துள்ளியாடும், பெங்களூர் ராணுவ அணியில் விளையாடிய தாம்சனைப் போல ஆக வேண்டும் எனக்கு. "உனக்கு விளையாட்டுன்னா என்னன்னு சொல்லி குடுத்திட்டோம். ஆனா பெரிய மைதானத்தில விளையாட நீ இன்னமும் கத்துக்கலை. ஆசை இருந்தா பத்தாது. நோக்கமும் குறியும் ஒண்ணா சேரணும். மைதானத்தில பந்து ஒட்டி உருள்ற மாதிரி. இது உன்னோட மைதானம் இல்லை. உடனே கிளம்பி அங்க போயிடு. அங்க இருக்கற கோச் உன்னை இன்னொரு இடத்துக்கு கைமாத்தி விட்டிருவாரு. அவர் ஒரு சித்திரக் குள்ளன்" என மார்க்கர்தான் முதன்முதலாக அதைச் சொன்னார் எனக்கு. அவ்வுருவம் எனக்குள் பேருரு கொண்டெழுந்தது ஒரு கருங்கற் சிலையைப் போல. கண்களை மூடிக் கொண்டேன் அனிச்சையாக. 


அப்போது படித்துக் கொண்டிருந்த பதினோராம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, திருநெல்வேலி விளையாட்டு விடுதியில் சேர்வதெனத் தீர்மானித்தேன். ஏனெனில் பதினோராம் வகுப்பில்தான் அங்கே சேர முடியும் என்பதனால், மீண்டுமொரு முறை அவ்வகுப்பைப் படிக்கத் தயாரானேன். "காணாததை கண்ட மாதிரிக்கு கிறுக்கு பிடிச்சு அலையுது இது" எனச் சொன்ன பசுபதி அத்தைதான் சுருக்கில் முடிந்து வைத்திருந்த கசங்கிய ரூபாயை எடுத்து அளித்துத் திருநூறு பூசி அனுப்பி வைத்தாள். கருவேலம் புதர்கள் அடங்கிய அவ்வூரை விட்டு, பெட்டி படுக்கையுடன் சைக்கிளை மிதித்துக் கொண்டு, அதுவரை அறிந்தேயிராத, பச்சை வயல்கள் போர்த்தியிருந்த ஒரு ஆற்று வழித்தடத்தைத் தாண்டி, அந்தச் சித்திரக் குள்ளனின் மடியில் போய்ச் சேர்ந்தேன். "ஏற்கனவே விளையாடுகிறவந்தானே?எதற்காக இங்கே வந்தாய்?" என்றார். "இதுவரை செய்தவைகளின் செய்யப் போகிறவைகளின் அடிப்படைகளை புரிந்துகொள்ள என மார்க்கர் சொல்லச் சொன்னார்" என்ற போது, மூக்கு சிவந்து சிரித்துக் கொண்டார், மலைகள் சூழ்ந்த உபதலையில் பிறந்து வளர்ந்த அவர். 


அதுவரை நான் கற்றுக் கொண்டிருந்த வித்தைகள் எல்லாமும் பல்லிளித்தன, நன்றாக அடிவாங்கி நூல்பிரிந்த ஒரு தோல்ப் பந்தைப் போல. முதலில் அத்துறைக்கான பணிவைக் கற்றுக் கொடுத்த அவர், இறுதியில் மைதானத்தில் உருளும் பந்தாய் மாற்றினார் என்னை. எதிரேயோடும் தடத்தில் குறுக்கே விழும் மட்டைகளைத் தாண்டி ஆகாயத்தில் புள்ளிமானைப் போலத் தவ்வுகிற வித்தையைக் கற்றுக் கொடுத்த அவர், என்னைத் திரும்பவும் வரைந்தார் அம்மைதானத்தில் ஓர் புதிய சித்திரமாய். அச்சித்திரத்தில் அவருடைய வியர்வையின் மணம் ஒட்டியிருக்கிறது உப்பரிந்த தடத்தைப் போல. எங்கெங்கோ அடிப்படை வித்தைகளைக் கற்றுக் கொண்டிருந்திருக்கலாம் என்றாலும் அவர்தான் அடையாளம் எனக்கு. சிதறிக்கிடந்த என்னை அத்துறையில், டர்ப் பந்தைப் போலப் பூரணமாக்கிய வகையில், அவருடைய  மாணவனாகவே இன்றைக்கும் அறியப்படுகிறேன் அவ்விளையாட்டு வெளியில். 


"விளையாடத்தான் வந்திருக்கிறாய், சிவப்பு அட்டை வாங்கி வெளியேறுவதற்கு அல்ல" என வாழ்விற்கான அடிப்படை ஒன்றையும் சேர்த்துக் கற்பித்தவர் அவர். என்னை மிகச் சரியாக ஒருபெரிய வட்டத்திற்குள் கைமாற்றிய வகையில், ஆடத் துவங்கிய காலத்தில் எனக்கு ஆட்டத்தின் அடிப்படைகளைச் சொல்லித் தந்தவர்களை அவர் கௌரவப்படுத்தவும் தவறவில்லை. "விளையாடும் போது கேலரியை பார்க்காதே" எனப் பனியைப் போல உருகுகிற வார்த்தைகளை எனக்குள் ஊன்றியவர். அவ்வெளியை விட்டு வெளியேறிய பிறகும் இன்றைக்கும் இவ்வரிகள் என்னைவிடாமல் துரத்துகின்றன, ஊனை உருக்குகிற வெப்பம்கூடிய வார்த்தைகளாக. எதனைக் காட்டிலும் வலியவை அவை. 


என்னுடைய இரண்டாவது ஆட்டம் அக்கரிசல் மண்ணில் இருந்து எழுத்துத் துறையில் துவங்கிய போது, போதாமைகள் சூழ்ந்து மூச்சுமுட்டிக் கொண்டிருந்தது. தெரிந்த தடத்தில் நடைபோடுகிற வண்டிமாட்டைப் போலப் புறம் தெளிவாகவும் துலக்கமாகவும் தெரிந்தாலும், அகம் எதையோ செய்யச் சொல்லி ஏங்கிக் கொண்டிருந்தது. அதுவரை அறியாத தடமொன்றைப் பிரமைகள் எதுவும் கொள்ளாமல், அச்சமின்றிப் பற்றிக் கொள்ளச் சொன்னது அது. எனக்கான மைதானம் இதுவல்ல, என அடியாழம் அரற்றிக் கொண்டிருந்த வேளையில்தான் என் பயிற்சியாளரை ஒத்த சித்திரக் குள்ளன் என்னை வாரிச் சுருட்டிக் கொண்டார். நான் அதிகமும் கதகதப்பாய் உணரும் சொற்களினுச்சி அதுவென உணர்ந்து கொண்டேன். 


திசைகளின் நடுவே மேற்குநோக்கித் திரும்பி உயர்ந்து நின்றிருந்த அச்சித்திரக் குள்ளன் எனக்குள் விதைத்தவைகளைத் தொகுத்துக் கொள்கிறேன் இப்போது. அதன் அடிமடியில் செம்மண் ஒட்டிய உடையோடு அமர்ந்திருந்த சிறுவனைப் போலத்தான் இக்கணத்திலும் உணர்கிறேன். 


"பாலுள்ள பசுவின் மடி எனினும் குருதியே கொசுவிற்கு உகந்தது" என அவர் எழுதிய வரிகளே என் ஒட்டுமொத்த இயங்கியலுக்குமான ஆதாரம். அதுவொரு அவரால் சுட்டப்பட்ட மேற்கோள்தான். ஆனால் இதைவிட மேலான வரிகள் பலவற்றின் வழியாக அவர் எனக்குள்ளும் எவருக்குள்ளும் நிதமும் புகுந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார் ஒரு மலைத் தேசத்துப் பனிப் புகையைப் போல. 


போதையின் கரங்களில் ஒப்புக்கொடுத்து, அதில் இருந்து மாயக் கரமொன்று என்னை மீட்டெடுக்காதா என ஏங்கிக் கொண்டிருந்த காலங்களில் எல்லாம் என்னை ஈட்டிக் கொடுத்தது விஷ்ணுபுரம்தான். தற்கொலையின் விளிம்பில் ஊசலாடிய போது. மலையுச்சி ஒன்றில் மனம் கலங்கி நின்றிருந்த சமயத்தில். எத்தனை தடவை? அத்தனை தடவையும். "பைபிள் மாதிரி அத கூட வச்சுக்கிட்டே சுத்தறீங்களே" என என் நண்பர்கள்கூட மிதமாய்ச் சுட்டிக் காட்டுவார்கள். 


என் உள்முகத்தை உற்றுநோக்கக் கற்றுத் தந்த அந்நகரில் உலவிய சங்கர்ஷனும், பிங்கலனும் நானே. அதுவரை உள்முகம் எதுவென கேள்வி கேட்கத் தெரியாதவர்களாக இருந்தோம். ஒருவிளையாட்டு வீரனாய் அகம் குவிந்த பரவச நிலைகள் பலவற்றை எட்டியிருக்கிறேன். ஆனால் அங்கே அகம் குவிகிறது என்பதை வெளியில் நின்று எட்டிப் பார்க்கப் பழக்குவித்து, மேலே நின்று பார்க்கிற தோதில் சன்னலைத் திறந்து விட்டது அச்சித்திரக் குள்ளனே. சன்னலுக்குள்ளே தலையைவிட்டு இருளில் கொத்துக் கொத்தாய்த் திரியும் மின்மினிக்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் இப்போது. எப்போதும் நான் உற்றுப் பார்த்தபடியே இருக்கும், உள்ளுக்குள்  புறப்பட்டு மேல்நோக்கிக் கிளம்பித் திரும்பவும் வழியும் நீரூற்றின் அடித்தண்டு அவர் உரமிட்ட வார்த்தைகளென அடியாழத்தில் இருந்து உணர்கிறேன். 


புற அழுத்தங்களின் நிமித்தமாக அகம் செயல்படும் அடிப்படைகள் குறித்த அறியாமைகளில் இருந்தேன். அது மட்டுமல்லாமல், ஒவ்வொன்றின் செயல்படும் விதத்தையும் பிரித்துத் தொகுத்துப் புரிந்து கொள்ளும் வித்தையைச் சுட்டிக் காட்டி ஆற்றுப் படுத்திய அத்தாரோவின் ஏடன் அவர்தான் என்பதை இந்த இடத்தில் சொல்கிறேன். ஒருவகையில், சுபிட்சமுருகனை இன்னொரு அகத்தினுள் அமர்ந்தெழுதிய, எனக்குக் கிடைத்த அழுக்கு மூட்டையும் அவரே. பிரேத அறையொன்றை நெருங்கிப் பார்க்கச் சொல்கிற வார்த்தை ஒன்றின் வழியாக என்னைச் சூழ்ந்திருந்த, அதுபோலவான பெருவச்சங்கள் பலவற்றில் இருந்து அக்காலத்தில் என்னை மீட்டெடுத்த மாயக் கரமும் அதுவே. நேர்மறை அகவுணவூட்டிய கெத்தேல் சாகிப்பின் கரம். 


அகவலைச்சல்கள் கொண்ட என்னைப் போன்றவர்கள் இயல்பாய் வழிப் போக்கில் ஒழுகிச் சென்று சேரும் மடியதுவெனத் துணிந்து சொல்வேன். அதனால்தான் தந்தைமைகூடி குமரித் துறைவியை நோக்கி, அவர் கரைகிற கணங்களில் எங்களது அகமும் மிகச் சரியாக ஒட்டிச் சிலிர்க்கிறது. நாங்களும் செண்பகவல்லியம்மனின் மூக்குத்தி ஒளியை ஏந்தி வளர்ந்தவர்கள் ஆயிற்றே? அதனால்தான் எதிரேயிருக்கிற ஒன்றின், அலைச்சல்களை உருக்கி இன்னொன்றாய் மாற்றும் எண்ணைச் சட்டியாகவும் அவ்வகமும் முகம்காட்டி நிற்கிறது. 


இலக்கிய வட்டச் சுழற்சியில் இருக்கிற நண்பர் ஒருத்தரிடம் பேசிக் கொண்டிருக்கையில், "ஜெமோ எந்நேரமும் மிதமிஞ்சிய குற்றவுணர்விலேயே இருப்பார்" என்றார். அதை அவர் எதிர்நிலை வாதமாக முன்வைத்து நிறுவ முயன்றார். அவர் சென்றபிறகு அதுகுறித்து ஆழமாகச் சிந்தித்தேன். 


என்னைப் போன்றவர்கள் உழல்கிற எங்களுடைய தலைமுறையை முன்னோக்கி உந்திச் செலுத்துவது எது? "எதைத் தொலைத்தாலும் மீட்டுவிடலாம். குற்றவுணர்வைத் தொலைத்து விட்டால் எந்த ராட்சதக் கை வந்தாலும் மீட்டெடுக்க முடியாது" என்பதை அந்த நண்பருக்குப் பதிலாக எழுதினேன். எனக்காகவும்தான். 


ஏனெனில் அவரின் அலைச்சல்கள் வழியாக, அதன் காரணமாய் பாதாளத்தில் தலைகுப்புற விழச் செய்கிற காரணிகள் பலவற்றினூடாக, எதிர்த்து நெஞ்சைக் காட்டுகிற செயலூக்கத்தை விடாமல் பற்றிக் கொண்டிருப்பதற்கு ஆதாரமே அக்குற்றவுணர்வுதான். எங்களைப் போன்றவர்களை அவரின் கீழே இணைக்கிற, தேர்ந்த கொல்லனின் கைநுனிப்பட்ட ஆணியச்சும் அதுவே. அதை நான் நேர்மறையாக அவரிடமிருந்து பெற்ற பெருஞ் சொத்தாக, பேறாக எண்ணுகிறேன். அவ்வுணர்வுதான் எங்களைப் போன்றோரை அரிய செயலை நோக்கி அணுதினமும் விசையுடன் முன்னோக்கித் தள்ளுகிறது. செயலின்மையைப் போலவொரு இழிந்தநிலை இவ்வுலகில் இல்லை என்கிற நாணத்தை அவர் திரட்டித் தந்த அவ்வுணர்வின் வழியாகவே கையேந்திப் பெற்றும் கொள்கிறோம். என்னளவில் கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்க்கிறவனாக உணர்வது, தற்கொலைக்கு ஒப்பானது. முடியாத காலகட்டங்களில்கூட எனக்குப் பதிலாய் என் மனம் அங்கே தலையைச் சிலுப்புகிற, வெப்போர்ச் சேவலைப் போல ஆடிக் கொண்டிருக்கும். அதுவாகவே மாறி அதுவாகவே கரைகிற இவ்வுணர்வைத் தகுதியான சொற்களின் வழியாக எங்களுக்கெல்லாம் கடத்தியது அவரே. 


அவர் அடிமுடி இல்லாத, தனித்தனியாகப் பிரித்தறிய முடியாத கோடிச் சொற்களுக்கு  அதிபதி. செயலூக்கம் என்கிற ஒன்று திரட்டிய உணர்வை எங்களுக்கெல்லாம் ஊட்டிய வகையில், ஒப்பில்லாத மைதானத்தின் மடி அதுவென ஆழமாக உணர்கிறேன். எனக்கு உகந்தது எதுவோ அதை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டபடி இருக்கிறேன். பண்ணி வாகை மரத்தினடியில் அமர்ந்து, செங்காந்தளை ஒத்த நிறப் பூக்களைப் பொறுக்கியபடி, மடியின் ஈரத்தில் பச்சைத் தாவரங்கள் சில முளைக்கக் காணுகிறேன். அதுதான் அதனின் இயல்பும் நோக்கமும் அடிப்படையும். சித்திரக் குள்ளன் ஒருவனாய் ஓங்கி நின்றிருக்கும் என்றென்றைக்குமான மழை மரம் அவர்!

***