பூரணன் - போகன் சங்கர்


ஜெயமோகனின் முதல் நாவல் என நான் படித்தது கன்னியாகுமரி. நான் ஏறக்குறைய 1995 பக்கத்தில் தமிழ் இலக்கியம் மேலேயே ஒட்டுமொத்தமாக சலிப்படைந்து அது எனக்கு இனி எதையும் தரப்போவதில்லை என்கிற முடிவுக்கு வந்து தமிழில் வாசிப்பதையே நிறுத்தியிருந்தேன். ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழில் இலக்கியமல்லாத இதர விஷயங்களை, குறிப்பாக ஆன்மிகம் தொடர்பான விஷயங்களை மட்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். இந்த இடைவெளியில் 1997 ல் தான் ஜெயமோகன் ‘பின்தொடரும் நிழலின் குர’லை எழுதியிருக்கிறார். அது என் கவனத்துக்கு வரவில்லை. இடையில் கணையாழி மட்டும் தொடர்ந்து வாங்கிக்கொண்டிருந்தேன். காலச்சுவடு நின்று நின்று வந்துகொண்டிருந்தது. அல்லது கிடைத்துக்கொண்டிருந்தது. ‘ரப்பர்’ பற்றி சுஜாதாவோ பாலகுமாரனோ எங்கோ சொல்லியிருந்தார்கள். ஆனால் படிக்கும் ஆர்வம் ஏற்படவில்லை. ‘கன்னியாகுமரி’யை வாடகை நூலகம் வைத்திருந்த ஒரு நண்பர்தான் ஏறக்குறைய வற்புறுத்தித் தந்தார். அதனைப் படித்துவிட்டு நான் அடைந்த கொந்தளிப்பு நினைவிலிருக்கிறது. ஏறக்குறைய அதைப் படித்த அதே ஆண்டில் (2000) நான் கன்னியாகுமரிக்கு எனது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக நெல்லை மாவட்டத்திலிருந்து நிர்வாகக் காரணம் என்று சொல்லி மாற்றப்பட்டேன். என்னைப்பற்றிய புகார்க் கடிதத்தில் ‘ஒரு நக்சலைட் மனபாவம்’ உள்ளவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

முதலில் மாற்றியது நக்சலைட்டுகள் மலிந்திருந்த தர்மபுரிக்கு! நான் புகார்க் கடிதத்தை ஒரு பாராட்டுப் பத்திரமாக எடுத்துக்கொண்டு பூரணமான ஒரு நக்சலைட் ஆகியே தீர்வது என்கிற உற்சாகத்தில் இருந்தேன். ஆனால் எனது தந்தை அதை அனுமதிக்கவில்லை. அவர் யாரையெல்லாமோ பிடித்து என்னை குமரிக்கு மாற்றிக் கொண்டுவந்தார். நான் அதற்கு ஒப்புக்கொண்டதற்கு வேறு காரணங்களும் இருந்தன. நெல்லையின் இறுக்கமான சாதிவழியிலான கலாச்சார அதிகார அடுக்குமுறை எனக்கு மூச்சுத்திணறலை அளித்தது. எந்நேரமும் நான் என்ன பேசுகிறேன் என்ன சிந்திக்கிறேன் என்பது பற்றி ஜாக்கிரதை உணர்வுடன் இருக்கவேண்டிய நிர்பந்தத்தை என்னால் சரியாகக் கையாளமுடியவில்லை.

 

மேலும் சுராவின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’ நாவல் மூலமாக எனக்கு குமரி மற்றும் கேரள மண் மற்றும் கலாச்சாரம், அவற்றின் சுதந்திர உணர்வு மீது ஒரு கவர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஒப்பிட குமரி ஓரளவு என் போன்ற பித்தர்களைச் சகித்துக்கொள்கிற இடம். இந்த சவுகரிய உணர்வு குமரி நான் கேட்டு மட்டுமே அறிந்த என் தந்தைவழி தாத்தாவின் மண் என்பதாலும் கிளர்ந்திருக்கலாம். நான் ஒருமாதிரி தனது குல தெய்வத்தைத் தேடிப் போகிற ஒரு ஆன்மிக சாதகன் போலவோ அலெக்ஸ் ஹேலியின் ‘Roots’ நாவலுக்குப் பிறகு தனது மூதாதையர்களின் வேர்களைத் தேடி ஆப்பிரிக்காவுக்குப் போன கருப்பினத்தவரைச் சேர்ந்த எத்தனையோ பேர் போலவோ குமரிக்குப் போய்ச்சேர்ந்தேன். உண்மையில் எனது ஆன்மா விழிப்புற்ற இடம் என்று குமரி மண்ணைத்தான் சொல்லவேண்டும். நான் ஒவ்வொருவரின் ஆன்மாவுக்கும் ஏற்ற திணை, நிலம் ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு அது குமரியாக இருந்தது. இருக்கிறது.

 

ஆனால் குமரிக்கு வந்துவிட்டாலும் ஜெயமோகனையோ சு.ரா.வையோ நான் சந்திக்கவெல்லாம் முற்படவில்லை. எழுத்தாளர்களை நேரில் போய்ப்பார்ப்பது என் சுபாவத்தில் இல்லை. நான் இவர்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டு மட்டும் இருந்தேன்.

 

சு.ரா. எண்ணி எண்ணி எழுதக்கூடியவர். ‘ஜே. ஜே. சில குறிப்புக’ளுக்கு மிக நீண்ட நாட்களுக்குப் பிறகே அவர் ‘ஆண்கள் பெண்கள் குழந்தைகள்’ நாவலை எழுதுகிறார். என்னுள் மீண்டும் புதிதாகக் கிளர்ந்து எழுந்திருந்த தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்துக்கு அவரது நிதானம் போதவில்லை. உண்மையில் அவரது அந்திமக்காலம் வேறு அது. ஜெயமோகன் அப்போதுதான் தனது இணையதளத்தை தொடங்கியிருந்தார். நான் அவரைப் படிப்பதற்கென்றே இணைய நிலையங்களுக்குச் சென்றேன். அப்போதுதான் சாருவும் இணையத்துக்கு எழுத வந்திருந்தார். இணையத்தில் அதற்கு முன்பே சுஜாதா, இரா. முருகன் போன்றவர்கள் இயங்கிக்கொண்டிருந்த இணைய இதழ்கள் இருந்தன. கடும் விவாதங்களும் அவற்றில் நடைபெற்றன. இன்னொரு பக்கம் யாகூ குழுமங்கள் என்கிற பெயரில் தனிமடல் குழுமங்களும் இருந்தன. நான் எல்லாவற்றிலும் சேர்ந்தேன். கவனித்தேன். வாசித்தேன். வெவ்வேறு பெயர்களில் சண்டை போட்டேன். முகம் காட்டாமல் ஓர் அசரீரியாய் இருப்பது என்னைப் போன்ற ஒரு உள்ளொடுங்கிக்குப் பிடித்திருந்தது.

 

சமீபத்தில் மலையாள எழுத்தாளர் எம். முகுந்தனின் (மய்யழி தீரங்கள்) பேட்டி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அவர் எப்படி ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் என்பவர்கள் வாசகர்களிடமிருந்து மிகவும் தொலைவில் இருந்தார்கள் என்று சொல்கிறார். சினிமா பிரபலங்கள் சாமான்யனிடமிருந்து அகன்று நிற்கும் தூரமல்ல அது. இயல்பாகவே உள்ளொடுங்கிகளாக வெளிப்பட விரும்பாதவர்களாக எழுத்தாளர்கள் இருந்ததால் ஏற்பட்ட தூரம் அது. இணையம் இந்த தூரத்தை வெகுவாகக் குறைத்தது. நான் இவர்களைப் படிக்கவென்றே அலுவல் உபயோகத்துக்கு என்று வீட்டில் பொய் சொல்லி ஒரு கணிணி வாங்கினேன். இன்றுவரை அது அதற்கு உபயோகப்படவில்லை.

 

ஜெயமோகனை நான் நெருங்கியதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நான் அப்போது ஆன்மிகத்திலும் அக வளர்ச்சியிலும் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தேன். அப்போதைய தமிழ் இலக்கிய உலகமோ (இப்போதும்) இந்த ஆர்வங்கள் குறித்து மிக எதிர்மறையான எண்ணங்கள் கொண்டதாக இருந்தது. ஒருபக்கம் மார்க்சிய திரள் தீர்வு, மறுபுறம் சார்த்தரிய இருத்தல்வாதம், அன்னியமாதல் என்கிற இரண்டு முனைகளுக்கு நடுவேதான் தமிழ்ச் சிந்தனைப் பரப்பு இயங்கிகொண்டிருந்தது. இது எனக்குச் சோர்வை அளித்தது. இன்று சார்த்தரின் இருத்தலியல்வாதம் மீது எனக்கு மீண்டும் ஆர்வம் வந்திருக்கிறது வேறு விஷயம். ஆனால் இளமையில் ஏற்கெனவே சோர்ந்திருந்த என்னை அது மேலும் ஒரு செயலின்மைக்குள்தான் தள்ளியது.

 

இந்தியத் தத்துவம், யோகம் போன்றவற்றை எல்லாம் பொருட்படுத்திப் பேசிக்கொண்டிருந்த ஒரே நவீன தமிழ் எழுத்தாளராக ஜெயமோகன் மட்டுமே அப்போது இருந்தார். பொதுவாகவே இந்தியாவிலிருந்து வந்த எதையும் இகழ்ச்சியாய்ப் பார்க்கும், பேசவே மறுக்கும் நிலை அன்று இருந்தது. காந்தியைக்கூட ‘யாரடா நீ நாயே?’ என்று பள்ளிக்கூடங்களில் பாடும் பாடல்களில் வசைபாடும் வருந்தத்தக்க சூழல் இருந்தது. பொதுவாக ஒரு மென்மையான இடதுசாரி என்றே தன்னைக் கருதிக்கொள்கிற சு.ரா.வே வருந்தும் நிலையில்தான் சூழல் இருந்தது. இவ்வளவுக்கும் கிழக்கின் வரலாறு பற்றி மேற்கத்திய எழுத்தாளர்கள் கட்டமைத்திருக்கிற பொய்கள் பற்றிய எட்வர்ட் சையதின் ‘Orientalism’ புத்தகம் 1978 லேயே வந்துவிட்டது. தமிழ் அறிவுச்சூழலில் அந்தப் புத்தகம் பற்றி இன்னும் கனத்த மவுனமே நிலவுகிறது. அந்தப் புத்தகத்தை இரண்டு மேற்கோள்களுடன் ஆரம்பிக்கிறார்.

 

கார்ல் மார்க்ஸ், டிஸ்ரேலி.

 

டிஸ்ரேலி அதில் கிழக்கத்திய நாடுகளை மிகப்பெரிய வேலைவாய்ப்பு என்று பார்க்கிறார். (The east is a career)

 

கார்ல் மார்க்ஸ் கிழக்கத்திய மக்கள் தங்களைத் தாங்களே பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள முடியாது. நாம்தான் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்கிறார். இந்த இரண்டு கூற்றுகளிலும் உள்ள வெள்ளையின் மேன்மை மனநிலையைப் பற்றிய விரிவான புத்தகம்தான் எட்வர்ட் சையதினுடையது. பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகள், மக்கள், கலாச்சாரம், இஸ்லாம் போன்ற விஷயங்களைப்பற்றி மேற்கு கட்டமைத்திருக்கும் கருதுகோள்களைப்பற்றி அதில் ஆராய்கிறார்.

 

இதேபோல் இந்தியாவைப் பற்றி வெள்ளையர்கள் கட்டமைத்திருக்கும் தேய்வழக்குகள் பற்றி ஆழமாக விவாதிக்கவேண்டிய தேவை இங்கு இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அதை இங்கிருந்த அறிவுப்புலம் சரியாக நேர்கொள்ளவில்லை. அவர்கள் தங்களைப் பற்றிய மேற்கின் கதைகளையே தாங்களும் ஏற்றுக்கொண்டு தங்கள் மேலும் சுமத்திக்கொண்டார்கள். கிழக்கு ஒரு பொன்னுலகம் என்பதல்ல இதன் பொருள். ஆனால் அது மேற்கத்திய மெசியாக்கள் மட்டுமே காப்பாற்றக்கூடிய நரகமும் அல்ல. இதை ஓரளவு வி. எஸ். நைபால் சுட்டிக்காண்பித்திருக்கிறார். கே. எம். பணிக்கரின் புகழ்பெற்ற ‘Asia and Western Dominance’ நூல் இதுபற்றி சில திறப்புகளை உள்ளிருந்து அளித்தது. மேற்கத்திய சக்திகளின் ஊடுருவலினால் கிழக்கு சில நன்மைகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் மேற்கின் உத்தேசம் நிச்சயமாக அதுவல்ல.

 

அம்பேத்காரின், காந்தியின் எழுத்துகளிலும் வெவ்வேறு கோணங்களில் கிழக்கின் பிரச்சினைகளை அல்லது பெருமைகளை ஓர் உள்ளிருப்பவராகப் புரிந்துகொள்வது, விமர்சிப்பது குறித்த பார்வைகள் உள்ளன. இந்தக் கருத்துக்கு சரியாக முகம் கொடுக்கிற ஒரு நபர் தமிழ் இலக்கியத்தில் தேவைப்பட்டார். சரித்திரத்திலும் வெற்றிடம் என்பது இருக்கவே முடியாது. அது தன்னை நிரப்புகிறவரை தானே கண்டுபிடித்து நிரப்பிக்கொள்ளும். கன்னடத்தில் பைரப்பாவையும் தமிழில் ஜெயமோகனையும் அது அவ்விதம் கண்டுபிடித்து நிறுவிக்கொண்டது என்றே தோன்றுகிறது. ஆனால் பைரப்பா தன்னைக் குறுக்கிக்கொண்ட ஒரு தரப்பிலிருந்து ஜெயமோகன் மேலெழுந்து சென்றார்.

 

உண்மையில் புதிய தலைமுறையினர் இந்த விசயங்களைப் பொருட்படுத்தி விவாதிக்கும், அவற்றில் சாராம்சம் இல்லாவிட்டால் மறுத்து நிறுவும் ஒரு வெளிக்காகதான் ஏங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தமிழ் அறிவுச்சூழல் அவையெல்லாம் ஏற்கெனவே பேசி முடிந்தவை என்றோ பேசத் தகுதியற்றவை என்றோ பாவனை செய்துகொண்டிருந்தது. இடது பக்கத்தில் கோவை ஞானி மட்டுமே இதற்கெல்லாம் ஓரளவு முகம் கொடுத்துப் பேசுகிறவராக இருந்தார். எஸ். என். நாகராசனும். திராவிட இயக்கங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். நாம் ஒரு சிந்தனைத் தொகுப்பின் சாரம் கொண்ட விஷயங்களை நேர்கொண்டு அதை உள்வாங்காமல் போனால் அதன் சாரமற்ற எதிர்மறையான விஷயங்களின் பேயுருக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது தனிவாழ்விலும் வரலாற்றிலும் நான் கண்டது. தமிழ் இலக்கியப் பரப்பில் இதை ஜெயகாந்தனும் பிரமிளும் ஓரளவு கண்டுகொண்டு பேசியிருக்கிறார்கள். பிரமிளின் கண்டுகொள்ளல் பெரும்பாலும் அகவயமானது. அவரிடம் உரையாடல்கள் கிடையாது.

 

கோவை ஞானி நடத்திய இதழில் ஜெயமோகனின் பல கதைகள் வெளியானது தற்செயலானது அல்ல. கடவுள், மதம், ஆன்மிகம் போன்ற இந்த விஷயங்களை விவாதக் களத்துக்குள் கொண்டுவந்தமைக்காக மார்க்சிய முற்போக்குப் பழமைவாதிகளால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த வார்த்தை சற்று வினோதமாக தொனிக்கலாம். எல்லாவற்றிலும் பழமையும் உறைதலும் நிகழ்வது போலவே மார்க்சியத்திலும் நாத்திகத்திலும் அறிவியலிலும் முற்போக்குவாதத்திலும் ஒரு பழமைவாதம் ஏறியிருக்கிறது. உதாரணமாக க்ளாஸ்னாஸ்டுக்குப் பிறகும் சோவியத்தின் உடைவுக்குப் பிறகும் இங்கிருக்கும் பெரும்பான்மை இடதுசாரிகள் அதை எதிர்கொண்ட விதத்தைக் காணலாம். அவர்கள் ஸ்டாலினிசப் பயங்கரவாதங்கள் நிகழவே இல்லை என்பது போல் நடந்துகொண்டார்கள். இன்றும் நடந்துகொள்கிறார்கள். எஸ். வி. ராஜதுரை போன்ற அறத்துணிவு கொண்ட சிலர் மட்டுமே இந்த விஷயத்தை சரியாக எதிர்கொண்டார்கள். எஸ். வி. ராஜதுரை இதுகுறித்து 1989 ல் எழுதிய ‘ரஷ்யப் புரட்சி: இலக்கிய சாட்சியம்’ 32 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இரண்டாம் பதிப்பு (எதிர் வெளியீடு) வந்திருக்கிறது. (புதிய வாசகர்களுக்கு ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலுக்கு இந்த நூல் ஒரு மிகச்சரியான பகைப்புலத்தை அளிப்பதாக இருக்கும். ஜெயமோகன் அந்த நாவலுக்கான உத்வேகத்தை இந்த நூலிலிருந்தும் பெற்றுக்கொண்டார் என்றே நான் நினைக்கிறேன்) இது இடதுசாரிகளின் தேக்கத்தையும் உள்விமர்சனத்தைக் காண மறுக்கும் தன்மையையும் சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வாகும்.

 


நான் இதுபோன்ற விஷயங்களில் ஜெயமோகனுடன் கடும் விவாதங்கள் செய்திருக்கிறேன். நானறிய பலர் செய்திருக்கிறார்கள். இந்த விவாதங்களின் மூலமாக பல நேரங்களில் ஜெயமோகன் நிறுவ முயன்ற தரப்புக்கு எதிரான நிலையையே அடைந்திருக்கிறேன். இந்த விவாதங்கள்தான் முக்கியம் என்றே நினைக்கிறேன். இந்த விவாதங்களின் மூலமாக நாம் நமது சிந்தனையைத் தொகுத்துக்கொள்ள முடிகிறது. சிந்தனை என்பது தொடர்ந்து செயல்படும் ஒரு நிகழ்வு. ஜெயமோகனுக்கு இன்று தமிழ்ப்பரப்பில் கிடைத்திருக்கும் அதிகாரம் அவரது தொடர்ந்த இயக்கத்தினால் அவருக்குக் கிடைத்தது. பொதுவாக நவீன இலக்கியத்தின் மைய உணர்ச்சி சோர்வும் கைவிடப்பட்ட உணர்வும்தான். இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இது இன்னும் அதிகமானது. ஜெயமோகனின் ‘அறம்’ வரிசைக் கதைகளுக்கு முந்திய காலகட்டக் கதைகளிலும் இந்த உணர்வு தூக்கலாக இருப்பதைக் காணலாம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தியப் பிரிவினைக்கும் காந்தியின் படுகொலைக்கும் சோவியத்தின் வீழ்ச்சிக்கும் நேர்மறை உணர்வுகளை எழுப்பி செயலுக்குத் தூண்டும் லட்சியவாதக் கதைகளை எந்தத் தரப்பினராலும் எழுதமுடியாமலே போய்விட்டது. ஜெயமோகனின் மிகச்சிறந்த நாவல்களான ‘விஷ்ணுபுரம்’, ‘கொற்றவை’, ‘பின்தொடரும் நிழலின் குரல்’ மூன்றுமே அழிவை விவரிக்கும் பேரழிவு (Dystopian) நாவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அவருக்கு ஒரு டால்ஸ்டாய் திருப்பம் நிகழ்ந்தது. பழைய இறுக்கத்தைச் சற்றே தளர்த்திக்கொண்டு ‘அறம்’ வரிசைக் கதைகளை அவர் எழுதத் துவங்கினார். பல எழுத்தாளர்கள் ஏற்கத் தயங்கிய ஓர் ஆசிரியன் என்கிற பழைய பாத்திரத்தை அவர் துணிவுடன் எடுத்துக்கொண்டார். இன்றுவரை அதைத் திறம்படச் செய்துவருகிறார்.

 

புதிய தலைமுறை வாசகர்களுக்கு இது உவப்பானதாக இருப்பதைக் காண்கிறேன். இன்று அவரைச் சூழ்ந்து நிற்பவர்களில் பெரும்பாலோனோர் அவர்கள்தான்.

 

இந்திய ஆன்மாவில் ஆழமாய் ஊறிப்போய்விட்ட வர்ணாசிரமம் என்கிற உலகியல் நோக்கைப்பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். வர்ணம் என்கிற சிந்தனை இன்று சாதியாகவும் கிளைச்சாதிகளாகவும் திரிந்து செல்லரித்துப்போய் இந்தியச் சமூகத்தையும் கீழிழுத்துக்கொண்டிருக்கிறது. இதுபற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. வர்ணம் இன்று எந்த சிந்தனாவாதியாலும் ஆதரிக்கப்படக்கூடியதல்ல. ஜெயமோகனும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது கருத்தும் இன்று அவ்வாறே இருக்கிறது.

 

இதன் இரண்டாவது பகுதியான ஆசிரமம் என்கிற கருத்தாக்கம் அதிக கவனம் பெறவில்லை. ஒரு தனிமனிதன் உலகில் அடைகிற, கடந்துசெல்கிற நிலைகள் பற்றிய ஒரு லட்சிய வரைபடம் இது. இந்தத் திட்டமான வரைபடத்தின் வழியே ஜெயமோகனின் வாழ்வு அமைந்திருப்பதைக் காணலாம். மாணவன், கிருகஸ்தன், ஊர்சுற்றி என்கிற ஆசிரமங்களைக் கடந்து அவர் ஒரு தத்துவவாதி என்கிற ஒரு நிலையின் முற்றத்தில் வந்து நின்றிருக்கிறார் என்று உணரமுடிகிறது. டால்ஸ்டாய்க்கு அவர் வந்த கிறித்துவ மரபின் மூலம் கிட்டாத திட்டமான தெளிவான வரைபடம் இது.

 

டால்ஸ்டாயின் பல இறுதிக்காலக் குழப்பங்களுக்கு இது ஒரு காரணம். ஜெயமோகனின் படைப்பு மனதில் டால்ஸ்டாயின் தாக்கம் பெரிது. சில தனிநபர் ஆளுமைக் குறைபாடுகளிலும்கூட அவர் டால்ஸ்டாயை ஒத்திருப்பதைக் காணலாம். ஆனால் டால்ஸ்டாய் ஒரு நிலப்பிரபு. அவர் ஒரு பணக்காரன் சொர்க்கத்தில் நுழைவது ஊசியின் துளையில் ஒட்டகம் நுழைவது போல் என்கிற விவிலிய உருவகத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு கடைசி காலம் வரை தனது செல்வத்தை இழக்க முயன்றார். தன்னுடைய இலக்கிய போதத்தை உதறி ஒரு குடியானவனாகவோ செருப்பு தைப்பவனாகவோ மாற முயன்றார். ஜெயமோகனிடம் இதுபோன்ற மயக்கங்கள் எதுவும் கிடையாது. ஜெயமோகன் எளிமையானவர். ஆனால் ஏழ்மையை விரும்பக்கூடியவர் அல்ல. லவுகீக வாழ்வில் வெற்றிபெறுவது குறித்து அதீத கவலை கொண்டவர் அல்ல. ஆனால் பிற இலக்கியவாதிகள் போல துயரத்தைத் துரத்திப் போகிறவரும் அல்ல. ஜெயமோகனிடம் கிரேக்கக் காவியாசிரியர்களின் ஒரு சாயல் உண்டு. அதே நேரம் வியாசன் போன்ற கீழைக்காவியாசிரியர்களின் தான் செய்வது ஒரு மகத்தான வேலை என்பது போன்ற கர்வமும் உண்டு. ஜெயமோகன் பல வகைகளில் டால்ஸ்டாயின் திருத்தப்பட்ட கீழைப்பதிப்பு. அவரது படைப்புலகத்தை பல கோணங்களில் ‘A modern Hindu’s or Indian’s letter to Tolstoy’ என்றேகூடக் கொள்ளலாம். மேற்கின் அறிவுக்கூர்மையை கிழக்கின் உள்ளுணர்வுத் தீவிரம் சந்திக்கிற ஒரு புள்ளி அவரிடம் உண்டு. இது உண்மையில் அவர் சார்ந்த நாராயண குரு பரம்பரையின் தொடர்ச்சி. நாராயண குரு சாதியை மறுத்து இந்தியச் சிந்தனையின் மற்ற செழுமையான, நேர்மறையான பகுதிகளை ஏற்றுக்கொள்கிறார். அவரது சீடரான நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி போன்றவர்களிடம் இது துலக்கமாக வெளிப்படுவதைக் காணலாம். நடராஜ குருவின் தன்வரலாற்று நூல் ‘Autobiography of an Absolutist’, யதியின் ‘Love and Blessings’ போன்ற நூல்களைப் படிக்கும்போது ஜெயமோகனது கருத்துலகத்தின் வழிக்கற்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கருத்துச்சங்கிலியின் தொடர்ச்சியாகதான் ஜெயமோகன் அம்பேத்கர், அயோத்திதாசர் போன்றவர்களையும் ஏற்றுக்கொள்கிறார்.

 

இந்த மரபில் குருவுக்கும் சீட பரம்பரைக்கும் முக்கியமான பங்கு உண்டு. ஜெயமோகன் தனது குரு அல்லது ஆசான்களுக்கு அளிக்கிற முக்கியத்துவத்துக்கும் அவரைப் பிறர் ஆசான் அல்லது குரு என்று அழைப்பற்கும், கருதுவதற்கும் ஒரு கருத்தியல் தொடர்ச்சி உண்டு.

 

இலக்கியத்தில் ஜெயமோகனை செவ்வியல்வாதத்தின் backlash அல்லது எதிர்த்தாக்குதல் என்று சொன்னவர்களைக் கண்டிருக்கிறேன். அவர் காவியங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் தொன்மங்களிலிருந்தும் கதைகளையும் கதை மாந்தர்களையும் மட்டுமல்ல கதை சொல்லும் முறைகளையுமே பெற்றதால் இந்த அவதானிப்பு. நான் கேரளத்தில் பொதுவாக தீவிர இடதுசாரிப் படைப்பாளிகள்கூட புராண உருவகங்கள், உவமைகளை பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். ஒருமுறை விஷ்ணுபுரம் விழாவுக்கு விருந்தினராக வந்திருந்த சங்கரப்பிள்ளையிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது அவர் இது உலகெங்கும் உள்ளதுதான் என்று சொன்னார். ஜேம்ஸ் ஜாய்சின் உலிசசையும் ஷேக்ஸ்பியரையும் கிரேக்க காவியங்கள், ஐரோப்பிய கதைப்பாடல்கள், விவிலியம் துணையின்றி படிக்கமுடியாது. அவர்களால் அவற்றைப் படைத்திருக்கவும் முடியாது.

 

தமிழ்ச்சூழலில் பவுராணிகத்தின் சுமை மிகுந்து கிடந்தபோது சீர்திருத்தும் முயற்சிகளாக பாரதி, அ. மாதவையா, பாரதிதாசன் போன்றவர்களின் வருகை நிகழ்ந்தது. அதே பொழுது ஓர் எரிச்சலான எதிர்வினையாக கலையில் மேற்கே தோன்றிய Dadaism போல, பழைய எல்லாவற்றையும் குப்பை என்று வெளியே கொட்டிவிடும் போக்கும் இருந்தது. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் பெரியாரின் தாக்கமும் ஒரு முக்கியக் காரணம். Dadaism மும் பெரியாரியமும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோன்றியவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முக்கியமான பணி மற்றும் விளைவு சுத்தப்படுத்துவது. ஒரு சூழலை அடைத்துக்கொண்டிருக்கும் குப்பைகளை எரித்துக் களைவது. ஆனால் அவ்வாறு கிடைத்த இடத்தில் என்ன உருவாக்குவது என்று இவற்றிடம் ஒரு தெளிவில்லை. அதனால்தான் இந்த இயக்கங்களிலிருந்து பெரிய படைப்புகள், படைப்பாளிகள் உருவாகவில்லை.

 

பெரியாருக்குப்பின் வந்தவர்களில் கலையின் தேவை பற்றி கலைஞர் கருணாநிதி மட்டுமே நன்கு உணர்ந்திருந்தார் என்றே தோன்றுகிறது. அவர் தொடர்ந்து இலக்கியவாதிகளை, இலக்கியப் போக்குகளைக் கவனித்துக்கொண்டே இருந்தார். அவரே சில படைப்புகளை எழுதினார். அவற்றின் கலை வெற்றிகள் விவாதத்துக்குரியவை. அண்ணாவின் படைப்புகள் பழைய அழகியலைக் குலைப்பது, கருத்துகளைப் பிரச்சாரம் செய்வது என்பதோடு நின்றுவிட்டன. சினிமா போன்ற வெகுசன ஊடகங்களில் மட்டுமே திராவிட இயக்கம் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது.

 

வெளியே புறச்சூழல்களும் மாறிக்கொண்டிருந்தன. உலகமயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களினால் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடு என்கிற ஸ்தானத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. இடதுசாரிகள் இன்னமும் வறுமையின் நிறம் சிகப்பு காலகட்டத்திலேயே இருந்தார்கள். அதாவது கல்கத்தா கம்யூனிசம். அவர்களது படைப்பாளிகளால் கேரள இடதுசாரி எழுத்தாளர்கள் நகர்ந்த இடத்துக்கு நகரமுடியவில்லை. அவர்கள் மனதில் இன்னமும் ஒரு City of Joy தான் மாடலாக இருக்கிறது. அழுக்கில் உறைந்துபோன ஒரு கல்கத்தா. கல்கத்தாவும் ஒளியடையவில்லை. இடதுசாரிகளின் இலக்கியமும் ஒளியடையவில்லை. தமிழ் இடதுசாரிகள் இவ்விதத்தில் கேரள இடதுசாரிகளைப் பாடமாகக் கொள்ளவேண்டும். அவர்கள் இயல்பான, உள்ளிருந்து தோன்றிய ஒரு வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள். தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் பரிச்சயம் உள்ள ஜெயமோகன் இதைக் கவனித்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை.

 

இடதுசாரிகளின் இந்தத் தேங்கிப் போதலை தமிழில், இலக்கியத்தில், இலக்கியபூர்வமாக பதிவுசெய்த ஒரே நபர் ஜெயமோகன்தான். ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் அதனாலேயே இன்று இடதுசாரி சிந்தனையாளர்களால் அதிகம் வெறுக்கப்படவும் ரகசியமாகப் படிக்கப்படவும் செய்கிறது.

 

இந்தக் காலகட்டம் ஜெயமோகன் வாழ்வில் ஒரு முக்கியமான திருப்புமுனை காலகட்டம் என்று நான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸால் ஈர்க்கப்பட்டு ஒரு சங் சேவக்காகவோ Autobiography of a Yogi படித்துவிட்டு ஒரு துறவியாக மாற விரும்பிய ஒரு நபர் தொழிற்சங்க அரசியல் மூலமாக மார்க்சியத்துக்குள் புகுந்து, சு.ரா. வழியாக தமிழ் இலக்கியம் அறிந்து, ‘இன்றைய காந்தி’ எழுதுகிற ஒரு நபராக மாறியது. அவருடைய முதல் இரு நூல்கள் இடதுசாரி இலக்கிய அமைப்புகளால் வெளியிடப்பட்டன. ‘பின்தொடரும் நிழலின் குரல்’ அவர்களை அவரிடமிருந்து அப்புறப்படுத்தியது. அவர்களிடமிருந்து விலகிவிட்டாலும் அவர் ஒரு விஷயத்தை அணுகும் முறையியலில் மார்க்சியத் தாக்கம் வெகுவாகவே உண்டு என்பதைக் காணலாம். ‘கொற்றவை’, ‘வெள்ளை யானை’, ‘நூறு சிம்மாசனங்கள்’ போன்ற கதைகள் இதற்குச் சாட்சி.

 


அவருடைய இந்தியவியல் ஆர்வங்கள் காரணமாக அவரை நோக்கி ஈர்க்கப்பட்ட இந்துத்துவவாதிகள் பின்னர் அவருடன் பிணக்குகள் கொண்டு இன்று கடும் எதிரிகளாய் வெளியில் நிற்பதைக் காண்கிறேன். அவர் பேசுகிற பண்பாட்டு தேசியம் அவர்களுக்கு உவப்பாக இல்லை. அவர் அடிப்படையில் இந்திய ஒருமை பேசிய ஸ்வாமி விவேகானந்தரால் உந்தப்பட்ட ஒரு தலைமுறையைச் சார்ந்தவர். அங்கிருந்து மானுட ஒருமை பேசிய காந்தியை நோக்கி நகர்ந்தவர்.

 

மேலும் கலை ஒரு வினோதமான தாசி அல்லது அதிகாரி. அது கொண்டுசேர்க்கிற கரைகள் பற்றி ஓர் உண்மையான கலைஞனுக்கு ஒரு பனிமூட்டமான தெளிவே இருக்கும். ஒருவகையில் கலைஞன் என்பவன் ஓரிடத்தில் மூன்று நாட்களுக்குமேல் எங்கும் தங்காத, தங்கக்கூடாத துறவி போன்றவன். அவன் கலை இந்தத் தொடர்ந்த பயணத்தினை நிகழ்த்துவது. பிணங்களால் நடனமாட முடியாது அல்லவா? அவரது இந்தப் பிரயாணம் வாழ்க்கையை உற்றுக் கவனிக்கும் எவருக்குமே ஆர்வமூட்டுகிற ஒன்று.

 

இன்னொரு பக்கம் தனது பெற்றோரின் அடுத்தடுத்த தற்கொலைகளிலிருந்து அவர் மீண்டெழுந்த கொந்தளிப்பும் துயரும் நிரம்பிய அவரது அந்தரங்கப் பயணம். எந்தவொரு மனிதனையும், குறிப்பாக, இலக்கிய நுண்ணுணர்வு நிரம்பிய ஒரு மனிதனை, நொறுக்கிவிடக்கூடிய அனுபவங்களிலிருந்து அவர் மீண்டுவந்திருக்கிறார். பல நேரங்களில் Joseph Campbell எழுதிய ‘The Hero’s Journey’ புத்தகத்தில் வருகிற நாயகனை, அவன் பயணத்தை ஒத்ததாகவே இருக்கிறது அவர் வாழ்க்கை. அவரது படைப்பாற்றலின் ஊற்று இந்தத் துக்கத்தின் அதிர்ச்சியில் திறந்துகொண்டது என்றே நான் கருதுகிறேன். தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு உபாயமாக அவரது ஆழ்மனம் அவருக்கு அளித்த விசை, ஒரு சாவி, அவரது படைப்பாற்றல். அல்லது நான் அவ்வப்போது நினைத்துக்கொள்வது போல், அவர் வீட்டில் நான் உணர்வது போல், எல்லா இடர்களிலிருந்தும் அவரை இன்னமும் காக்க முயல்கிற அவர் அன்னையின் அபவுதிகக் கரம் திறந்து காட்டிய ஓர் அறை.

 

ஏறக்குறைய மரணம் போன்ற துயரத்திலிருந்து அவர் தப்பித்து ஓடும் வழியில் சு.ரா., யதி என்கிற இரண்டு ஆசான்களை அவர் சந்தித்திருக்கிறார் (Joseph Campbell சொல்கிற mentors). அவர்கள் சொற்களைப் பற்றிக்கொண்டு அவர் இன்று வந்தடைந்திருக்கிற இடம் பெரியது. இன்று நான் அவரை நாடி வந்துகொண்டிருக்கும் இளைஞர்களைக் கவனிக்கிறேன். அவர்களும் இதுபோன்றதொரு பயணத்தில்தான் இருக்கிறார்கள். இன்று ஜெயமோகன் அவர்களது ஆசானாக இருக்கிறார். துயரமான இளமைக்காலத்திலிருந்து அவர் தனது படைப்பாற்றல் மூலமாக மீண்டும் தன்னை சேர்த்து கார்ல் யுங் சொல்லும் முழுமையான மனிதனாக மாற்றிக்கொண்டார். நமது காலகட்டம் முழுக்க சிதறல் தன்மை உடையதாக இருக்கிறது. நமது சமூக, பொருளாதார விசைகள் முன் எப்போதையும்விட பல துண்டுகளாகச் சிதறிக் கிடக்கும் ஒரு மனிதனைதான் விரும்புகின்றன. மனச்சிதைவு என்கிற நோயே முதலாளித்துவச் சமூகம் உருவாக்குவது என்று கூறும் டெல்யூஸ் மற்றும் கத்தாரியின் ‘Capitalism and Schizophrenia’ புத்தகம் இங்கு நினைவுகூரத்தக்கது. எளிதில் நம்மை மனச்சோர்வுறச் செய்துவிடும் சூழலில் ஓர் ஒளிக்கீற்றாக தங்கள் சொந்தத் துயரங்களிலிருந்து மீண்டு பெருஞ்செயல்களைச் செய்கிறவர்கள் தோன்றுகிறார்கள்.

 


தனிப்பட்ட முறையில் மிகுந்த தன்னுணர்வு கொண்டவனாகவும் தாழ்வுணர்ச்சி கொண்டவனாகவும் இருந்த என்னை என் கூட்டிலிருந்து வெளியேற்றிக் கொண்டுவந்ததில் ஜெயமோகனுக்குப் பெரிய பங்குண்டு. நான் அவருடன் கடுமையாகப் பிணங்கியிருக்கிறேன். அவரைப்போலவே எனது வாழ்க்கைப் பார்வைகளும் மாறிவந்துள்ளன. இந்தப் பிணக்குகளில் எல்லா நேரங்களிலும் நான் சரியாக நடந்துகொண்டேன் என்றோ அவர் சரியாக நடந்துகொண்டார் என்றோ சொல்லமாட்டேன். இதன் மறுதலையும் அப்படித்தான். மனிதர்கள் அப்படிதான் இருப்பார்கள். ஜெயமோகன் இதை நன்றாக உணர்ந்த ஒரு நபர் என்பதை என் நேரடி அனுபவத்திலேயே சொல்கிறேன். அவர் குறையேயற்ற மகாத்மா என்பதல்ல. அதுபோன்றவர்கள் அரிதாக அரசியலிலும் ஆன்மிகத்திலும் மட்டுமே தோன்ற முடியும். இலக்கியம் மானுடத்தின் அத்தனை பலவீனங்களையும் காட்டுவது. இலக்கியவாதிகளும் மானுடத்தின் அத்தனை பலவீனங்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் வாரிசுகள்தான். மானுட வாழ்வின் சுண்டக் காய்ச்சி எடுக்கப்பட்ட சாரமே இலக்கியம். அதன் கோமுகிகளே இலக்கியவாதிகள். ஜெயமோகனது படைப்புலகமும் ஆளுமையும் அவ்வகையில் மிகச் செறிவுள்ளது. மிகச் செறிவான ஒரு வாழ்வை அவர் வாழ்ந்திருக்கிறார்.

 

ஆனால் அது தற்செயலானது அல்ல. அவர் தன் ஒரு நாளை எப்படிப் பகுத்துக்கொள்கிறார் என்று நான் பார்த்திருக்கிறேன். இலக்கியம், வாசிப்பு தவிர வேறு விஷயங்களுக்குக் கவனம் கொடுக்காத ஒரு வாழ்க்கையை அவர் இருபது வயதிலேயே தேர்ந்துகொண்டுவிட்டார். அதனாலேயே அவரால் பிறர் ‘ராட்சசத்தனமான விஷயங்கள்’ என்று சொல்கிற சாதனைகளை இலக்கியத்துக்குள் செய்ய முடிந்தது. உண்மையில் கார்ல் யுங் இதுபோன்ற மனிதர்களைப்பற்றி தனது கட்டுரைகளில் நிறையவே விளக்கியிருக்கிறார். பொதுப்போக்கிலிருந்து, பழகிய பாதைகளிலிருந்து இவர்கள் துணிந்து விலகிப்போகிறார்கள். அறிந்திடாத இந்தப் பாதைகளின் அபாயங்கள் பல. திரும்பி வராதவர் பலர் உண்டு. மனம் சிதறித் திரும்பி வந்தவர் உண்டு. மிகச்சிலரே இந்தப் புதிய பாதைகளை வெற்றிகொள்கிறார்கள். அவர்களை இந்த உலகம் வியப்புடனும் வெறுப்புடனும் பார்க்கிறது. தனது ஆன்மாவையும் அது செல்லவேண்டிய பாதையையும் கண்டுகொள்ளவேண்டியதும் அதன்வழி செல்லவேண்டியதும் ஒவ்வொருவரின் கடமையாகும். பகவத் கீதை சொல்கிற சுவதர்மத்திலிருந்து இது சற்றே மாறுபட்டது. அது ஒருவரது சுவதர்மத்தை அவரது பிறப்பின் மூலம் கண்டுகொள்ளச் சொல்கிறது. அந்தக் காலம் முடிந்துவிட்டது. ஜெயமோகன் தனது சுவதர்மத்தை, அந்தராத்மாவை மிக சிறுவயதிலேயே கண்டுகொண்டார். அதன் விளியைக் கேட்டு எதிர்க்குரல் கொடுத்தார். இவ்வாறு பதில் அளிப்பவர்களை பாதை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறது. ஜெயமோகன் இவ்வளவு பெரிய ஆளுமையாக உருவாகியிருப்பதற்கு அவரது புறச்சூழல்களும் அதற்கு சாதகமாக இருந்தன என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். மிகப் பாதகமான புறச்சூழல்களிலும் அவர் தான் தேர்ந்தெடுத்த பாதையில்தான் போயிருப்பார் என்பதை உறுதியாக, அருகிலிருந்து பார்த்தவன் என்று என்னால் சொல்லமுடியும்.

 

நான் மிகத் தனியான ஒரு வழியில் ஒரு பயணத்தில் இருந்தேன். அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருந்தேன். காதலிப்பவர்கள் மற்றும் கவிகள் அப்படி நினைத்துக்கொள்வது வழக்கம்தான். மனச்சோர்வும் பெருக்கப்பட்ட துயரமும் கவிஞர்களுக்கு மது போல. அவர்களுக்கு ஜெயமோகன் போன்று சோர்வுறா ‘ராட்சசன்’ ஒருவரின் அண்மை எப்போதும் தேவை. எனக்கு அப்படிப்பட்ட ஒரு அண்மையாக அவர் இருந்தார்.

 

நான் ஒருநாள் காலை நடைக்குச் சென்றேன். வழக்கத்துக்கு மாறாக விடியும் முன்பே சென்றுவிட்டேன். இது ஜெயமோகனும் நடை செல்லும் சாலைதான். இருளில் சற்று தட்டுத்தடுமாறிதான் சென்றேன். அருகில் செல்லும் ஓடையின் சலசலப்பையே ஒளியாக, வழிகாட்டியாகக் கொண்டு சென்றேன். பாதி தூரம் சென்றதும் கீழை வானில் ஒரு ரத்தக்கீறல் போல ஒரு வெளிச்சப்பொட்டு கிளம்பி வழிந்தது. அதன் சிவந்த நிறம் மேற்கே ஒழுகி வந்தது. அந்தப் பாதையில் ஒரு சிறிய அத்தி மரமும் அதன் கீழ் பெயரறியாப் பெண் தெய்வமும் உண்டு. அந்த மரத்தின் கிளைகளில் குழந்தை வரம் வேண்டி சிகப்பு வர்ணத் துணிகளால் கட்டிய தூளிகள் தொங்கிக்கொண்டிருந்தன. புலரியின் முதல் பிங்கல வெளிச்சம் அந்த மரத்தின்மீது படிந்தபோது அந்த மரம் உடல் முழுக்க கசியும் போர்க்காயங்களை அணிந்துகொண்டு ஊழி நடனமாடும் காளி போல் ஆகிவிட்டதைக் கண்டேன். பயங்கரமான காட்சி! ஆனால் அது எனக்குக் கொடுத்த கிளர்ச்சியோ நேர்மறையானது. ரத்தமும் சலமுமாய் பீச்சும் யோனியிலிருந்து பிறக்கும் ஒரு குழந்தையைப் பார்க்கையில் ஏற்படும் அதே பயங்கரமும் வியப்பும் மகிழ்ச்சியும்.

 

ஜெயமோகனின் மிக நல்ல கதைகளைப் படிக்கும்போதெல்லாம் இதே போன்றதொரு உணர்வு எனக்கு ஏற்படத் தவறியதே இல்லை.

 

ஜெயமோகனிடம் குறைகள் நிறைய உண்டு. அதுபற்றிய போதமும் அவருக்குண்டு. அவரே சொல்வது போல அந்தக் குறைகள் நம் எல்லோருக்குள்ளும் இயங்கும் சுயநலமான மரபணுவின் குறைகள். அவர் நிச்சயமாக கசந்துகொள்ளத்தக்க விதத்தில் சில தருணங்களில், சிலரிடமாவது நடந்துகொண்டிருக்கிறார். அதே நேரம் அவர் மிகப் பெருந்தன்மையாக நடந்துகொண்ட தருணங்களையும் நானறிவேன். பிறரது அகங்காரம் சீண்டப்பட்டுவிடாமல் உதவவும், அவர்களே அறியாமல் அவர்கள் பையில் ஒரு பரிசுப்பொருளை வைத்துவிடவும் பின்பு ஒருபோதும் அதுபற்றிப் பேசாமலிருக்கவும் அவருக்குத் தெரியும்.

 

நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியும் என்னாலேயே அறியப்படாத ஒரு மனிதனாக இருந்தேன், ஒரு பெரிய உறக்கத்தில் இருந்தேன். இறுதியாக நான் விழித்தபோது நான் எங்கோ தூங்கியபடியே போய்க்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இந்த விழிப்பு எனக்கு ஒரே நேரத்தில் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் பயங்கரத்தைத் தருவதாகவும் இருந்தது. எந்த நேரமும் விழிப்புடன் இருப்பதுதான் மிகப் பயங்கரமானது! எடை கொண்டது! என்பதை உணரும்போது நான் மிகத் தளர்ந்துபோனேன்.

 

பயணத்தை நிறுத்திவிடலாமா என்கிற அளவுக்கு சோர்வு ஏற்பட்டபோது எனக்கு அந்த வழியில் ஏற்கெனவே சென்றிருந்த சிலரின் பயணக்குறிப்புகள் கிடைத்தன. நான் அவர்களைச் சந்திக்கும் ஆர்வத்தில் அவ்வழியில் விரைந்து நடக்க ஆரம்பித்தேன். நான் எட்டிப் பிடிக்க முயன்ற, முயல்கிற அந்தப் பயணிகளுள் முக்கியமானவர் ஜெ என்கிற ஜெயமோகன்.

 

அவர் பயணம் இன்னும் தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன், என் பயணம் தொடரும் சுயநலம் பொருட்டும்.

 

***


போகன் சங்கர்

2 comments:

  1. I used to wonder who would ever write the intellectual biography of our great Jeyamohan. i found the answer Today. Thank you ,Bogan sir for this concise intellectual biography of one of the greatest writers in world literature.

    ReplyDelete
  2. அருமையான பதிவு. பரந்து விரிந்த பார்வை. மிக்க நன்றி

    ReplyDelete