கவிஞர் கல்பனா ஜெயகாந்த்.
நகரங்கள், கடல், மலைகள் ஆகியவற்றின் வர்ணனைகள்
சந்திரோதய சூர்யோதய வர்ணனைகள்
வனோற்சவங்கள்
ஜலக்கிரீடை வர்ணனைகள்
மதுக் களியாட்டங்கள்
காதல் விளையாட்டுக்கள்
காதலரின் பிரிவு சோகம், விரகம் ஆகியவற்றின் வர்ணனைகள்
திருமண வர்ணனைகள்
குழந்தை பிறப்பை வர்ணித்தல்
அரசனின் சபை வர்ணனை
படை நகர்வு
போர் காட்சிகள்
தலைவனின் வெற்றி ஆகியவற்றை வர்ணித்தல்
இந்த பட்டியல் மனதிற்கு தோன்றியபடி எழுதப்பட்ட பட்டியல் அல்ல. சம்ஸ்க்ருத இலக்கியத்தில் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு பட்டியல். இதில் ஒன்று கூட விடுபடாது அனைத்து வர்ணனைகளையும், தன்னுள்ளே கொண்டுள்ள நூல் தொகுப்பு 'வெண்முரசு'. இவை போன்ற வர்ணனைகள் ஒரு முறை வந்தாலே அது மஹாகாவியம் தான், அவை 'வெண்முரசில்' பலமுறை வருகின்றன, ஒவ்வொரு முறையும் முற்றிலும் புதியவையாக. தமிழில் எழுதப்பட்ட ஒரு மிகப்பெருங்காவியம் அந்நூல். அதே சமயம் பழம் இலக்கியங்களைப் போல வெறும் அலங்காரச் சொற்களால் நிரம்பியதல்ல அது. ஒவ்வொன்றும், மனித(சில சமயம் விலங்குகளின்) மனத்தின் ஆழங்கள் உட்பட, வெகு நுட்பமாக விவரிக்கப்பட்ட நூல் அது. அதிலுள்ள எந்த கதாபாத்திரத்தையும் வெகு இயல்பாக சமகாலத்திலும் பொருத்தி விட முடியும். இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய இலக்கிய நிகழ்வு 'வெண்முரசு'.
அந்நூல் வழியே ஆசிரியர் ஜெயமோகன் அத்தனை ஆயிரம் தமிழ்சொற்களை எனக்குத் தருகிறார். என் அகமொழியை முற்றிலுமாக மாற்றியமைத்த நூல் 'வெண்முரசு'. எவ்வுணர்வைச் சொல்வதற்கும் சொல் தட்டுப்பாடு வராது மேலே மேலே பறக்க வைக்கும் எழுத்து ஜெயமோகனுடையது.
மற்றொன்று: வெண்முரசு மட்டும் என்றில்லாது, அவரின் எவ்வெழுத்தையும் படித்தவுடன் புரியும் தளமல்ல அதன் ஆழம். சிந்திக்க சிந்திக்க முற்றிலும் புதிதாக ஒரு ஆழம் தெளிந்து வருவது ஜெயமோகனின் எழுத்தில் எப்போதுமே நிகழும் ஒரு மாயம். கோட்பாடு சார்ந்து இல்லாது, ரசனை சார்ந்த வாசிப்பை எப்போதுமே முன்னெடுப்பவர் ஜெயமோகன். மொழி, ஆழம், நுட்பம் , ரசனை- இன்னும் பலவற்றை நான் ஜெயமோகன் என்னும் என் ஆசிரியர் வழி பெற்றுக் கொள்கிறேன்.
- கல்பனா ஜெயகாந்த், கவிஞர்
***
தினேஷ் நல்லசிவம்
குன்றா செயலூக்கம் - மனம் தளரும் தருணங்களில் படித்து வியந்த அவரது நூல்களின் எந்தவொரு வரிகளும் எனக்கு தேவையில்லை, சாரின் முகம் மட்டுமே போதும், செயல்பட.
- தினேஷ் நல்லசிவம், வாசகர்.
***
ஜெ எனக்கு எப்படி ஒரு வழிகாட்டியாக இருக்கிறார் - வெங்கட்ரமணன்
முன்னேறத் துடிக்கும் சராசரி மனம், புத்தகவாசிப்பையோ, அனுபவங்களையோ காட்டிலும் வழிகாட்டிகளைத்தான் எளிதில் கைகொள்ளும். அவ்வாறு பரிச்சயப்படக்கூடிய வழிகாட்டியாக சுஜாதா இருந்தார். மிக எதேச்சையாக சுஜாதாவின் மறைவிற்குப் பின் தான் ஜெவை அதிகம் வாசிக்கத்தொடங்கினேன் (இணையதளம் தொப்பிதிலகம் காரணமாக பிரபலமானது). ஆனால் வாசிக்கத் தொடங்கியபின் தோன்றியது *2000ல் விகடனில் சங்கச்சித்திரங்கள் தொடங்கியவுடனேயே (முதல் அறிமுகம்) தொடர்ச்சியாக வாசித்திருந்தால் இன்னும் எளிதில் சராசரித்தனங்களை, கீழ்மைகளை உதறி, நிஜ உலகத்திற்குள் பிரவேசித்திருக்க முடியும் என்பது*. விடலைத்தனங்களை உதறி அறிவியக்கத்தில் தளர்ச்சியில்லாமல் இயங்கும் வகையில் பல அறிமுகங்களை ஆழமாக நிகழ்த்தியிருக்கிறார் ஜெ. 'அறம்' கதைகள் வழியாக நேர்மறை தீவிரங்கள், 'இன்றைய காந்தி' வழியாக காந்தியைப் பற்றிய அற்புதமான விரிவான அறிமுகம்(விளைவாக நமது எந்தவொரு இக்கட்டிலும் காந்தி எப்படி யோசித்திருப்பார் என்று சிந்தித்தாலே தீர்வு வசப்படும்), வெண்முரசில் அறிமுகமான மகாபாரதம், நம்மை தொடர்ச்சியாக ஊக்கும் அதன் பிரமிக்க வைக்கும் உழைப்பும் மேதமையும், எதிலும் நுண்மான்நுழைபுலத்தை கவனப்படுத்தும் கூர்மை, சராசரித்தனத்தை வரித்துக் கொள்வதன் அபத்தமும் கீழ்மையும், முரணியக்கமும் விளைவான நடைமுறைவாதமும், அரசு/ஊடகங்கள் போன்ற அமைப்புகளின் எல்லைகளும் அதனாலேயே அதைத் தாண்டி யோசிப்பதன் அவசியம், விஷ்ணுபுரம், பட்டறைகள் வழியாக இலக்கியம் போன்ற தீவிரமான விஷயங்களையும் முறையாக, எந்தவொரு பெரிய தியாகங்களையும் கோராமல் வாசகனுக்கு அறிமுகப்படுத்துவது, இன்றைய இளைஞர்களைத் கவர்ந்து வசீகரிக்கும் அவரது எளிமை/நேர்மை, சமீபத்திய புனைவுக் களியாட்டு, விக்கிக்கு மாற்று வரையிலாலான இமாலய சிந்தனைச்சாத்தியங்கள், இதையெல்லாவற்றையும் கலைத்துப் போட்டு அடுக்கும் நகைச்சுவை...
இன்னும் பலமடங்கு பெரிய பட்டியல் போடமுடியுமென்றாலும், ஆசானுக்கு நன்றிகூறும் மற்றவர்களையும் மனதில்கொண்டு முற்றுப்புள்ளி.
- வெங்கட்ரமணன், வாசகர், சென்னை.
No comments:
Post a Comment