இந்திய ஞானத்தின் தோரணவாயில் - டாக்டர். ரவிச்சந்திரன்
பிடித்த நாவல்களை பலமுறை வாசிக்கும் வழக்கம் உடையவன் நான். மீள்வாசிப்பில் நுட்பங்கள் மேலும் துலங்கி வருவதும், புதிய பரிமாணங்கள் எழுந்து வருவதும், நல்ல நாவலுக்கான எனது தனிப்பட்ட ரசனையின் அளவுகோல்கள்.
நாவல் தனது மொழியால், கதாபாத்திரங்களால், கதை நிகழ்வுகளால், ஒரு புதிய கதைக்களத்தையும், சூழலையும், காலத்தையும் சித்தரிப்பதன் மூலம் ஒரு நிகர் உலகத்தை வாசகனுக்கு படைத்து அளிக்கிறது.
நல்ல நாவல் வாசகனுக்கு ஒரு சவாலை முன்வைக்கிறது. மலைச் சிகரங்களை ஏறி அடைவதற்கும், புதிய நகரத்தில் வசித்து அறிவதற்கும், எண்ணற்ற பாவனைகளுடைய பெண்ணோடு உறவு கொள்வதற்கும் ஒப்பானது அது.
நல்ல நாவல் ஒரு நிலைகுலைவை வாசகனிடம் ஏற்படுத்துகிறது. நாவல் முன்வைக்கும் தேடலால், கேள்விகளால், தர்க்கத்தால், தத்துவத்தால் தரிசனத்தால் குறைந்த அளவிலேனும் வாசகனிடம் ஒரு பாதிப்பை, பதற்றத்தை உருவாக்குகிறது.
தொடர்வாசிப்பின் மூலம் வாசகன் நாவலை தன்வசப்படுத்தி முன் நகர்கிறான். வாசகனின் சிந்தனை சேகரத்தில் நாவல் ஒரு பகுதியாகி விடுகிறது. இருபத்து எட்டு வயதில் வாசிக்கத் துவங்கிய விஷ்ணுபுரம் என்னிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆசிரியன் தன் அகத்தின் தேடல்களை, தத்தளிப்புகளை முழுதாக வெளிப்படுத்தி, தன்னைத்தானே கண்டடையும் படைப்பு அது.
தொடர்ந்து ஐந்தாண்டுகள் விஷ்ணுபுரத்தை வாசித்தேன். படைப்பாசிரியனின் வயதும், வாசகனின் வயதும் ஒத்திருந்தது ஆழமான புரிதலுக்கும், ஒத்திசைவுக்கும் அந்தரங்கமான அணுக்கத்திற்கும் வழிவகுத்தது. திருவடியின் பித்தும், பிங்கலனின் தேடலும், சங்கர்ஷணனின் அலைபாய்தலும், அஜிதனின் ஞானமும் என்னை மிகவும் பாதித்தது.
ஶ்ரீபாத திருவிழாவின் விரிவான உயிர்த்துடிப்பான வரலாறும், கௌஸ்துப ஞானசபையின் விரிவான தத்துவ தரிசன விவாதமும், மணிமுடி பிரளயத்தில் வரலாறும் தத்துவமும் முயங்கி தொன்மங்களாக உருமாறும் விந்தையும் என்னை ஈர்த்தது.
தர்க்கத்திலும், அறிவியலிலும், மேலைத்தத்துவத்திலும் பெருமதிப்பும் கொண்டிருந்த என்னை கீழை ஆன்மீகத்தின் பிரமிப்பூட்டும் ஞானத்தொகைக்கும் பாரம்பரியத்திற்கும் அறிமுகப் படுத்தியது.
தொடர்ச்சியாக மேலைத்தத்துவத்தையும் கீழை ஞான மரபுகளையும் குறித்த தேடலுக்கு என்னை இட்டு சென்றது. பகுத்து அறிந்து நிரூபணத்தை கோரும் மேலைத்தர்க்கத்திற்கும், சந்நத நிலை ஆழ்மன தரிசனத்தின் மூலம் தொகுத்து அறியும் கீழை ஞானத்திற்கும் இடையிலான முரணியக்கத்தின் மூலமே மானிட சிந்தனை முன்னகர முடியும் என்று உணர வைத்தது. விஷ்ணுபுரத்தில் விதைகளாக வெளிப்பட்ட ஆசிரியனின் தேடல்கள் இன்று வெண்முரசு என்னும் பெருவனமாக விளைந்திருக்கிறது.
சிந்து வெளி நாகரிகத்திற்கும் புத்தனின் பிறப்பிற்கும் இடைப்பட்ட பல்லாயிரம் ஆண்டு இந்திய இனக்குழு வரலாறும், தொன்மங்களும், ஞானங்களும், நிலவியலும் மாபெரும் கதைத்தொகுதிகளாக வளர்ந்திருக்கிறது. நவீன வாசகனுக்கு இந்திய ஞானத்தை பரிச்சயப் படுத்தும் தோரணவாயிலாக விஷ்ணுபுரமும், விண்ணை முட்டும் ராஜகோபுரமாக வெண்முரசும் திகழ்கின்றன.
கற்பவன் கடந்து செல்ல முடியாத நூல் ஏதும் இல்லை என்று அஜிதன் விஷ்ணுபுர ஞான சபையில் சொல்வான்.
நான் ஒருபோதும் கடக்க முடியாத, கடக்க விரும்பாத மாபெரும் படைப்பான வெண்முரசை எனக்கு அளித்த ஆசிரியனுக்கு என் அன்பும் வணக்கமும்.
- டாக்டர். ரவிச்சந்திரன்
***
கவிதா ரவீந்திரன்,
11 வருடங்களுக்கு முன் 2001ல் எனக்கும் நீண்ட நாட்களுக்குப்பிறகு இணையம் மூலமாக நட்பு தொடர்ந்த பால்ய கால நண்பனிடம் பேச்சுக்கள் அந்நாளைய ஆண் பெண் உலகங்கள் பற்றிய விவாதத்தில் ஜெ உடைய தளம் வாசிக்க கிடைத்தது. முதல் வாசிப்பிலே அதிர்ச்சி நான் இதுவரை எனக்கு சமூகம் கொடுத்த வரையரையின் படி வாழ்க்கையை தள்ளிக்கொண்டிருந்த நான் அதில் உள்ள சிந்தனைகள் இப்படியும் இருக்கலாம் என்ற ஒரு கருத்து என்னை புரட்டிப்போட்டது. ஆரம்பத்தில் பல கட்டுரைகள் எனக்கு புரிந்து கொள்வதற்கு நேரம் எடுத்தது. பின்னாளில் அவருடைய புனைவுகள் , கட்டுரைகள் என மூழ்கிப்போய் மனதில் மானசீக குருவாக ,எனக்கான உள்ளார்ந்த தோழனாக வரித்துக்கொண்டேன். நீ பெண் உன்னுடைய எல்லைகள் இவ்வளவு என்ற சமூகம் கொடுத்த திணிப்புகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் வாசிப்பின் வழியாக கடந்து என்னைச் சுற்றிலும் அறிதல் என்ற மகிழ்ச்சி அலையை உருவாக்கிக்கொண்டேன் என்பதை விட அறியாமல் உருவாகிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு படைப்புகளையும் வாசித்து அதன் உள்ளே வாழ்ந்து என்னை நான் நிரப்பிக்கொண்டேன்.ஓரளவு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த நான் எதைப்பற்றியும் சிந்திக்காமல் காலத்தோடு பயணித்திக்கொண்டிருந்த எனக்கு அவருடைய "யாருடைய இரத்தம் "கட்டுரை படிக்கும் போது அவர் கேட்ட கேள்வி (எவரது ரத்தத்தை உண்டு நான் இங்கே வந்து சேர்ந்திருக்கிறோம் என்று எண்ணியிருக்கோமா? எவரிடம் கடன் பட்ட வாழ்க்கை இது என எண்ணியிருக்கோமா?) என் தலைல ஓங்கி அறைந்து மாதிரி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதது.
ஜெயுடன் உரையாட ஒரு மலையைப்பார்த்து மலைத்து நிற்கும் சிறுமி போன்று ஒரு பெரிய தயக்கம் இருந்து கொண்டிருக்கிறது.
இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாமல் நான் ஜெ வை வாசிக்க ஆரம்பித்தேன். இன்று அவரது நவீன இலக்கியம், நாவல் கோட்பாடு, வெண்முரசு என ஓரளவு அவருடைய படைப்புகளை வாசித்திருக்கிறேன். இதில் அனைத்துமே பாதித்த படைப்புகள் என்றாலும் வெகுவாக பாதித்தது வெண்முரசு . வெளிவந்த நாட்களிலே ஒவ்வொரு நாள் காலையிலும் அன்று வந்த அத்தியாயம் வாசித்து விட்டுத்தான் என்னுடைய நாள் ஆரம்பிக்கும்.வெண்முரசு என்னுடைய தன்மாதிப்பிடுகளை, வாழ்க்கையைப்பற்றிய எண்ணங்களை, மனிதர்களை, சூழ்நிலைகளை மாற்றியது. என் அனுபவங்களை திரட்டி ஆராய்ந்து அதனுடன் பொருத்தி உண்மைகளை பாரபட்சமின்றி அறிவதற்கு உதவியது.
நான் மட்டுமல்ல அவரை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கு அவனுக்கான ஒரு பாதையை கண்டடைந்திருப்பான். இவ்வாறாக எங்கள் வாழ்க்கையை, சிந்தனைகளை, எண்ணங்களை செதுக்க கற்றுக்கொடுத்த என் நண்பன், ஆசான், குரு, களித்தோழன், மூதாதை, தந்தை எனப் பல உருவகங்களில் என்னுடன் இருக்கும் ஜெ அவர்களை இத்தருணத்தில் நான் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.
- கவிதா ரவீந்திரன்
***
No comments:
Post a Comment