நிமிர்வு - பவா செல்லதுரை

விஷ்ணுபுரம் விருது விழா 2016

குரு சிஷ்யன் என்ற கருத்தாக்கத்தை அடியோடு வெறுப்பவன் நான். கூட்டு சிந்தனை, கூட்டு செயல்பாடு, கூட்டு நிறைவேற்றம் என்று வளர்க்கப்பட்டேன். அல்லது வளர்ந்தேன். அதில் ஒவ்வாமையும் கசப்பும் சில நேரங்களில் கூடி வந்தாலும் அதுவே மானிட மேன்மையை நோக்கிய ஒரே வழி என எனக்கு மார்க்சியம் சொல்லிக் கொடுத்தது.


ஆனால் மார்க்சியம் மட்டும் மீறக்கூடாததல்ல அல்லவா? என் செயல்பாட்டு வாழ்வில் பல முறை அதை நான் மீறியிருக்கிறேன். அதனால் சில உச்சங்களையும், சில சறுக்கல்களையும் அடைந்திருக்கிறேன். அப்படி நானடைந்த படைப்பு ரீதியான உச்சமென ஜெயமோகனை எப்போதும் சொல்லமுடியும்.


என் வாழ்க்கையை, படைப்பை, என் செயல்பாட்டை என்றுமே அவர் வழிநடத்தியதில்லை. ஆனால் ஒரு படைப்பாளிக்குரிய கம்பீரத்தை, மனநிலையை, நேர்மையை, சுயகௌரவத்தை பல தருணங்களில் அவரிடமிருந்தும் அடைந்திருக்கிறேன்.


‘ரப்பர்’ மட்டுமே அச்சில் வந்து, குறைந்தளவு வாசகர்களே அதை வாசித்து தமிழ் நவீன இலக்கிய உலகத்தில் ஜெயமோகன் என்ற பெயர் எங்கோ சிலரால் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் என் தீவிர சிறுபத்திரிக்கை வாசிப்பில் நிகழ், இனி, புதுயுகம், சுபமங்களா, கல்குதிரை என பலதரப்பு இலக்கிய வகைமைக்கும் உள்ளடங்கிக்கொண்டிருந்த காலத்தில்தான் நான் ‘பல்லக்கு’, ‘போதி’, ‘ஜகன்மித்யை’, ‘மாடன் மோட்சம்’ என வாசித்து அதுவரை அறிந்திராத ஒரு புது உலகத்தில் பிரவேசிக்கவும், இவற்றை எழுதுவது யார்? என்ற தேடலும் எனக்குள் நிகழ்ந்தது.


தொடர்புக்கு இன்லேண்ட் கடிதங்களும் போஸ்ட் கார்டுகளும் போதுமானவையாக இருந்த நாட்கள் அவை. எப்போதாவது தொலைபேசி நிலையக் கூண்டுக்குள் நானடையும் சிலிர்ப்பு சொல்லிலடங்காதது. எப்போதும் காதலியின் குரலும், எப்போதாவது எனக்குப் பிடித்தமான படைப்பாளிகளின் குரலும் மட்டுமே மிக அந்தரங்கமான தருணங்களாக நிறைந்த நாட்கள் அவை.


’சுபமங்களா’வுக்கு ஒரு வாசகர் கூட்டத்தை திருவண்ணாமலையில் நடத்தமுடியுமாவென கோமலும், நண்பர் இளையபாரதியும் கேட்டபோது நான் இன்னும் கொஞ்சம் உயரமானேன். கல்லூரிப் படிப்பை பெயரளவுக்கு முடித்து, வேலையற்ற நாட்களில் அலைந்து திரிந்து வாசிப்பும், ஜோல்னா பையுடன் இலக்கிய கூட்டங்கள் நடத்துவதும், போராட்டங்களில் பங்கேற்பதும், மார்க்சிய வகுப்புகளைப் புரியாமல் கேட்பதும், திருட்டுத்தனமாய் காதல் கடிதங்கள் எழுதுவதுமாய் பல்வேறு மனநிலைகளில் இருந்த என்னை மதித்து இத்தனைப் பெரிய பொறுப்பு தரப்பட்டிருக்கிறதே என்பதில் துளிர்த்த ஒருசில அங்குல உயரமது.


கோமல், இளையபாரதி, ம. ராஜேந்திரன், சா. கந்தசாமி, இந்திரன் எனப் பலரும் பங்கெடுத்த அந்நிகழ்வில் இவர்கள் எவரை விடவும் என்னை என் வயதையொத்த ஜெயமோகன் பெரிதும் ஈர்த்தார். ‘கைதிகள்’ கதையில் அப்பு உருவத்தைப்பற்றி ஜெயமோகன் ‘தருமபுரி அரசு கல்லூரியில் பி.ஏ. ஹிஸ்ட்டரி படிக்கிற ஒரு பையன் பஸ் ஸ்டேண்டில் நின்று மலங்க மலங்க முழிப்பது போல’ என எழுதியிருப்பார். அதையொத்த மனநிலை அது. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நான் அதே மனநிலையில் ஜெயமோகனைப் பார்த்தேன். என்னைப் போலவே தமிழில் புதிதாய் எழுத வந்திருக்கிற ஒரு செவத்த பையன் இவன். ஆனால் இவன் கையாண்டிருக்கிற கதைகளும் மொழியும் இதற்கு முன் நான் அறிந்தும் உணர்ந்தும் இராதவைகள். ‘ஜகன்மித்யை’யில் இவன் காட்டும் கணக்கு எனக்குப் புரியவில்லை. ‘போதி’யில் இவன் காட்டும் வனத்துக்குள் நான் இதுவரை போனதில்லை. அந்த வனநீலி என் கண்களுக்கு இதுவரை தென்படவில்லை. ஆயிரமாயிரம் கிளிகள் ‘சரசு’ ‘சரசு’ எனக் கத்திக் கூச்சலிடும் சிவன் கோவில் வளாகத்தையும் குளக்கரையையும் எப்படி இதுவரை பார்க்க முடியாமல் போனது என்ற வியப்பு என்னுள் கூடிக்கொண்டே போனது.


எப்போதும் போல இலக்கியக் கூட்டங்கள் அரங்குக்குள் நிகழ்வதேயில்லை. அது ஒத்திகை மட்டுமே. அரங்குக்கு வெளியேதான் அது ஆரம்பிக்கிறது.


அன்றும் அது அப்படித்தான் ஆரம்பித்தது. கேர்ள்ஸ் ஹைஸ்கூலுக்கு முன்னிருந்த பாதி உடைந்த ஒரு மதிற்சுவரிலமர்ந்து, பார்வையாளர்களின்றி அவ்வுரையாடல் துவங்கியது. அதை நாங்கள் ஒத்திவைக்கையில் அதிகாலை மூன்று மணி முற்றியிருந்தது.


இடையே ஒரு மணிக்கு அவ்வழியே வந்த சென்னை பேருந்தில் கோமலும் மற்ற படைப்பாளிகளும் தொற்றிக்கொண்டார்கள்.


நானும் ஜெயமோகனும் தனித்து விடப்பட்ட அப்பின்னிரவு என்றும் எங்களிருவரிடமிருந்தும் அகலாதது.


‘ராஜராஜன்’ என்ற பெயரிடப்பட்ட ஒரு மூன்றாம் தர ஹோட்டலில் ஒரு அறையெடுத்துத் தங்கினோம்.


அடுத்த நாள் காலை பதினோரு மணிக்கு யோகிராம் சூரத்குமாரைச் சந்தித்தோம். அச்சந்திப்பை ஜெயமோகன் ‘சொல்புதி’தில் ஒருவிதமாகவும், நான் எனது ‘19. டி.எம் சாரோனிலிருந்து’ தொகுப்பில் இன்னொரு விதமாகவும் பதிவுசெய்திருக்கிறோம். இரண்டு பேரின் எழுத்தையும் படித்து சூரத்குமார் தன் இடி மாதிரியான சிரிப்பொலியினிடையே, கொஞ்சமாக வெட்கப்படுவதையும், எனக்கொரு சிகரெட்டையும் ஜெயமோகனுக்கு ஒரு ஆப்பிள் பழத்தை கையளிப்பதையும் எப்போதும் நினைத்துக்கொள்வேன்.


அச்சந்திப்பின் நிறைவின்போதுதான், தன் பதினைந்து கதைகளின் கைப்பிரதியை வாசிக்கச் சொல்லி ஜெயமோகன் எனக்களித்தார்.


அன்றிரவே அக்கதைகளைத் தனித்திருந்து வாசிக்கத் துவங்கினேன். ‘நதி’யிலிருந்து ஆரம்பித்தேன். பிரமிப்பாயிருந்தது. பார்க்கிற நண்பர்களிடமெல்லாம் அக்கதைகள் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தேன். இன்றுவரை அந்த ஆச்சர்யம் தொடர்கிறது.


என் நண்பன் எஸ். கருணாவிடம் வாசிக்கத் தந்தேன். அவன் வாசித்து முடித்து, “நல்லாதான் எழுதுறான். இயக்கத்துக்கு உதவுவானா கேள்” என ஸ்தாபன கறாரோடு அக்கதைகளைத் திருப்பித் தந்தான். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவோ, மாநிலக் குழு உறுப்பினராகவோ ஜெயமோகனைக் கொண்டுவந்துவிட வேண்டுமென்ற எங்கள் ஆள் பிடிக்கும் வேட்கை இக்கதைகளின் மூலம் தொடர்ந்து அதிகரித்தது.


உதயஷங்கரின் ‘நீலக்கனவு’ புத்தக வெளியீட்டிற்கு அவரை அழைத்தோம். ‘மார்க்சிய அழகியல்’ சம்பந்தமாக சுமார் நாற்பது பக்கக் கட்டுரையை எழுதிவைத்துப் பேசினார். எங்களில் பெரும்பாலானவர்கள் அதன் ஆழத்திற்குள் அமிழமுடியாமல் சட்டென மேலேறி வந்தோம். அந்த உரையின் கடைசி வரி மட்டும் இன்னும் என்னுள் அப்படியேதானிருக்கிறது.


‘பலிபீடத்திலிருந்து ரத்தம் சிந்தாமல் இவரால் நல்ல கதைகளை எழுதமுடியாது’ என எங்களை உறைநிலைக்குக் கொண்டுப்போனார்.


அச்சொற்களோடு வீடு திரும்பினேன். என் நிழல் போல அச்சொற்கள் என்னைப் பின்தொடர்ந்தன.


மார்க்சிய அழகியல் சம்மந்தமாக அன்று பார்வையாளர்களுக்கு நாங்கள் கையளித்த அக்கட்டுரை முற்போக்கு எழுத்தாளர்களையும் தாண்டி மார்க்சியத் தலைவர்களையும் சென்றடைந்தது.


கூர்மையான பல விமர்சனங்கள் அதில் முற்போக்கு எழுத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அக்கட்டுரை விநியோகம் சம்பந்தமான விசாரணையில் நான் அப்போது மாநிலச் செயலாளராக இருந்த தோழர் நல்லசிவன் முன் அமர்ந்து என் எளிய விளக்கத்தினைச் சமர்பிக்கவேண்டியிருந்தது.


“அடுத்து நாங்கள் நடத்தவிருக்கிற மாவட்ட மாநாட்டிற்கும் அவரை அழைக்க இருக்கிறோம் தோழர்” என நான் தோழர் ஏ. நல்லசிவத்திடம் புன்னகைத்தபோது, அவரும் புன்னகைத்து “வாழ்த்துக்கள்” தோழர் எனக் கைகொடுத்தார்.


ஜெயமோகன் எனக்களித்துவிட்டுப்போன அக்கதைத் தொகுப்பிற்கு ‘திசைகளின் நடுவே’ எனப் பெயரிடப்பட்டது. அப்போது நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரே எளிய முகவரியாயிருந்த கவிஞர் மீராவுக்கு ஒரு கடிதம் எழுதி அக்கதைகளை அனுப்பிவைத்தேன்.


‘ஓர் இளம் எழுத்தாளனைக் கண்டடைந்தோம், ‘அன்னம்’ இக்கதைகளை வெளியிடுவதின் மூலம் நவீன எழுத்துகளின் திசை இன்னும் விசாலமாகும்.’


அடுத்த வாரத்தில் மீரா எனக்கொரு கார்ட் போட்டார். ‘அபாரமானக் கதைகள். அச்சுக்கோர்த்துக்கொண்டிருக்கிறோம்.’


கருணாவிடம் சண்டை போட்டு அதற்கொரு அட்டைபடம் தயார் செய்யச் சொன்னேன்.


“இவன்லாம் ஸ்தாபனத்துக்குப் பயன்படமாட்டான்டா. உனக்கு ஆட்களை மதிப்பிடத் தெரியல”


“எனக்கு அவன் கதைகளை மதிப்பிடத் தெரிந்திருக்கிறது கருணா அது போதும்”


“நீயும் உருப்படமாட்ட…” எனத் திட்டிக்கொண்டே கிளாஸ்சிக்கான ஒரு அட்டைப்படத்தை கருணாதான் வடிவமைத்தான்.


இப்படியாக ‘திசைகளின் நடுவே’ வெளிவந்த அதே மாவட்ட மாநாட்டில்தான் அப்போது நவீனத் தமிழிலக்கியத்தையேப் புரட்டிப்போட்ட ‘ஸ்பானியச் சிறகுகளும் வீரவாளும்’ என்ற லத்தின் அமெரிக்க - தமிழ்க் கதைகளின் தொகுப்பை அச்சாபீஸ் ஈரம் காயும் முன் சிவகங்கையிலிருந்து ஒரு பஸ்ஸில் கொண்டுவந்து சேர்த்தான் கோணங்கி.


‘திசைகளின் நடுவே’ அமைதியான நதிபோல திசைகள் தோறும் பாய ஆரம்பித்தபோது ‘ஸ்பானியச் சிறகுகளும் வீரவாளும்’ பெரும் விவாதத்தையும் புயலையும் கிளப்பியது. அசோகமித்திரன் லேசான கிண்டலோடு அதற்கொரு விமர்சனத்தை ‘இந்தியா டுடே’யில் எழுதினார்.



“யதார்த்தவாத எழுத்து செத்துவிட்டது” என்று என் பெயரிலும் கருணா பெயரிலும் அப்புத்தகத்தின் முன்னுரையில் கோணங்கியும், எஸ். ராமகிருஷ்ணனும் பிரகடனப்படுத்தியிருந்தார்கள்.


பல யதார்த்தவாத எழுத்தாளர்களின் தற்கொலைக்கு நாங்களிருவரும் காரணமாகக்கூடும் என நாகார்ஜூனன் கிண்டலடித்தார்.


அத்தொகுப்புகாக பல இடங்களில், பல மாநாடுகளில் நானும் கருணாவும் பாவமன்னிப்பைக் கோரவேண்டியிருந்தது.


நானறிந்து ‘திசைகளின் நடுவே’தான் ஜெயமோகனுக்கு பலதரப்பு வாசகர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.


எழுதுவது மட்டுமே தன் முழு பலம் என வெறிகொண்டு எழுதினார் ஜெயமோகன். அவர் வேகத்திற்கும், எழுதும் பக்கங்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் சிறுபத்திரிகைகள் திணறின.


டார்த்தினியம், மண் போன்ற சிறுகதைகள் குறுநாவல்களாக உருப்பெற்றுக்கொண்டிருந்தன.


இலக்கியச் சண்டைகள், சச்சரவுகள், விமர்சனங்கள், வாசகர் வட்டங்கள் என எதுவுமில்லாமல் படைப்பின் உச்சத்தில் மட்டுமே ஜெயமோகன் சஞ்சரித்த நாட்கள் இவை என்பேன்.


எங்கள் இருவருக்குமான நட்பின் ஆழமும், முரண்பாடுகளின் அகலமும் ஒருசேர வளர்ந்த நாட்கள் எனவும் இந்நாட்களை நினைவுபடுத்திக்கொள்ளமுடியும்.


அப்போது ஜெயமோகன் தருமபுரி தொலைபேசி நிலையத்தில் பணியிலிருந்தார். ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் என்னையும், என்னைவிட என் அப்பா அம்மாவையும் பார்க்கக் கிளம்பி வருவார்.


முடிவுறாத இலக்கிய உரையாடல்களும் விவாதங்களும் முற்றின காலம் அது. முப்பதாண்டுகளுக்கும் மேலான எங்கள் நட்பு வாழ்வில், மற்றவர்களைப்போல நெகிழ்வான தருணங்களை நான் அவரிடமிருந்து அடைந்ததில்லை. இலக்கிய நிகழ்வுகள் முடிந்தபின் ஆரம்பமாகும் விடுதியறை உரையாடல்கள் எனக்கு ஏனோ வாய்க்கவே இல்லை.


ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு அறுவை சிகிச்சையை முடித்து மருத்துவமனையில் லேசான மயக்கநிலையிலிருந்து கண்விழித்தபோது என் எதிரில் ஜெயமோகன் நின்றிருந்தார். கைகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசினார். விமானம் பிடித்து திருவனந்தபுரத்திரிலிருந்து வருவதாகச் சொன்னபோது நான் நெகிழ்ந்து அவர் கைகளை அழுத்திப் பற்றினேன். இப்படியான ஒன்றிரண்டு தருணங்கள் மட்டுமே இப்போது நினைவில் மேலெழுந்து வருகின்றன.


‘வெண்முரசு’ நான் தவறவிட்ட அல்லது ஒத்திவைத்த படைப்பு. அதன் பிரம்மாண்டத்தை நெருங்குவது என்பது எரியும் நெருப்புக்குவியலில் தெரிந்தே இறங்குவதற்கு ஒப்பானது என்ற அச்சம். ஆனால் அதன் மொழி வளமைக்காக அவ்வப்போது அதன் ஓரத்தில் நின்று குளிர்காய்ந்துகொள்வேன். அதிலும் ‘நீலம்’ அபாரம்.


‘ஏழாம் உலகம்’ படித்து காய்ச்சல் வந்து ஐந்து நாட்கள் படுத்துவிட்டேன். ‘பின்தொடரும் நிழலின் குரல்’ வாசிப்பின் வழி நானடைந்தது பதட்டம், வீழ்ச்சி, நம்பிக்கையின்மை. அது இழுத்துப்போன லேசான மனப்பிறழ்வை அருகிலிருந்து கவனித்த ஷைலஜா அதை வலுக்கட்டாயமாக என்னிடமிருந்து பிடுங்கி எங்கோ மறைத்து வைத்துவிட்டு என்னை லேசாக்க முயன்றாள். வீரபத்திரன் பிள்ளைகளையும் அருணாசலங்களையும் அன்றாடம் சந்திப்பவன் நான். அவர்களின் உரையாடல் வழி அடைந்த பதட்டம் அதற்கு முன்னும் பின்னும் எப்படைப்பிலும் அடையாதது.


‘ஊமைச்செந்நாய்’ படித்து நானடைந்த அதீத மனப்பதட்டம் சொல்லிலடங்காதவை. திரும்பத் திரும்ப பழுப்பு நிறக் கண்கள் கொண்ட அப்பையனும், ஜோதியும், அந்த வெள்ளைக்காரத் துரையும், அவன் கெண்டைக்கால் சதையைப் பிடித்துக் கவ்வும் கண்ணாடிவிரியன் பாம்பும் என்னை அலைக்கழித்தார்கள். அந்த விஷக்கடியிலிருந்து மீண்டு வர பல நாட்களானது. படைப்பு இப்படியெல்லாம் மனிதனைச் சிதைக்குமா? என்ற கேள்விக்குப் பதில், நானே ஜெயமோகனின் பல படைப்புகளில் விழுந்து சிதைந்திருக்கிறேன் என்பதே.


காலை கண்விழித்ததும் அவருடைய இணையதளத்தை வாசிக்கும் வரிசையில் எப்போதும் நிற்பவனல்ல நான். அது ‘எப்போதாவது’. அப்படித்தான் ‘அறம்’ வரிசைக் கதைகளைக் கண்டடைந்தேன். அதில் வரும் மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் லட்சியவாதத்தை எட்டிவிடும் தீவிரத்தோடும், எட்டமுடியாத வீழ்ச்சியோடும் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.


‘சோற்றுக் கணக்கு’, ‘அறம்’, ‘வணங்கான்’ என அக்கதைகள் என்னை ‘நீயெல்லாம் என்ன மயிறு வாழ்க்கை வாழுறடா?’ எனக் கேட்டுக்கொண்டேயிருந்தன.


பல ஆண்டுகளுக்குப்பின் தொலைபேசியில் அழைத்து ஜெயமோகனிடம் பேசினேன்.


எப்போதும் எனக்குத் தொலைபேசியில் உரையாடுவதற்கு அணுக்கமான ஆள் இல்லை அவர்.


தொலைபேசியில் நிற்கும் என் உற்சாகத்தை அப்படியே மறுமுனையில் கடத்தும் நண்பர்களாக பிரபஞ்சன், மிஷ்கின், சி. மோகன், கோணங்கி என்ற சிலரே எனக்குண்டு.


“சொல்லுங்க” என்ற அவர் குரல் கிணற்றுக்குள்ளிருந்து மேலெழுந்து வருவதற்குள் நான் வடிந்துவிடுவேன்.


சொன்னேன். ‘அறம்’ வரிசைக் கதைகள் ஒவ்வொன்றிலும் மானுட தரிசனத்தை நிற்கவைத்து என்னைக் கேள்வி கேட்பதை, அம்மனிதர்களை நான் எப்படித் தவறவிட்டேன் என்ற என் அங்கலாய்ப்பை நிதானமாகக் கேட்டு, அவர் சொன்னார், “ஒருவகையில் நீங்களே ‘அறம்’ வரிசை கதைமாந்தர்தான்.”


நான் துண்டித்துக்கொண்டேன். நிதானப்பட சில நாட்களானது. மறுபடியழைத்தேன்.


லட்சியவாதம் என்ற சொல்லுக்கு தன் வாழ்வையே முழுக்க ஒப்புக்கொடுத்து, அதன் நடைமுறை சாத்தியமான இயக்கங்களில் மூழ்கியிருக்கும் ஒரு மனிதன் ஏதேதோ காரணங்களால் அதிலிருந்து விடுபட்டோ, அல்லது விடுவிக்கப்பட்டோ தனி ஆளாகத் தெருவில் நிற்கும்போது எழும் மனநிலையை ஜெயமோகனைவிட எழுத்தில் ஸ்வீகரித்த இன்னொரு தமிழ் எழுத்தாளனை என் வாசிப்பில் நான் கண்டதில்லை. அது தீயின் மீது நின்றெழுதுவது.


அதேபோல மனம் முழுவதும் கலையைத் தேக்கி வைத்துக்கொண்டு தொலைபேசி நிலையத்திலோ, கூட்டுறவு சொஸைட்டியிலோ, மின்சார வாரியத்திலோ வெறும் வயிற்றுப்பிழைப்புகாக அல்லல்படும் கவிஞனை ஜெயமோகன் மாதிரி அடையாளப்படுத்திய இன்னொரு எழுத்தில்லை என்பேன்.


‘குருவி’, ‘பாயசம்’, ‘மாயப்பொன்’ எல்லாமே அப்படியான கலைஞர்களின் லௌகீகச் சரிவுகளே. கண்ணுக்குத் தென்படாத அந்த மாயப்பொன்னின் தேடுதலில் தானே எலும்புக்கூடாய் மிஞ்சுபவர்களும், அவர்களையும் சேர்த்துத் தேடும் இளம் படைப்பாளிகளும் தங்களை அதில் கண்டுகொள்கிறார்கள். அப்பரவசத்திலேயே அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள்.



‘கணக்கு’ கதையில் ஒரு பழங்குடியின் அப்பாவித்தனத்தை, தான் கற்ற கல்வியாலும், தன் உயர்ஜாதி தந்த சூழ்ச்சியாலும் ஒருவன் ஏமாற்றி வெற்றியடையும்போது அந்த வெற்றியின் மீது காறித் துப்பவே தோன்றியது. மாறாக அக்கதையை வாசித்து முடித்தபோது நான் மனங்கசிந்து அழுதுத் தீர்த்தேன்.


‘மனிதனை மறந்த தத்துவமெல்லாம்

மண்ணில் போகட்டுமே

அவன் கண்ணீர் துடைக்க மறந்த கைகள்

கனலில் வேகட்டுமே’


என்ற ரமணனின் வரிகள் என்மீது பேரலை போல பலமுறை மோதியது.


ஒரு நல்ல கதையை எழுதுவதற்கு ஓர் எழுத்தாளன் இருபது சுமாரான கதைகளை எழுதிப் பழகவேண்டியுள்ளது என எழுத்தாளர் பிரபஞ்சன் எப்போதும் சொல்லுவார்.


ஒரு ‘பத்து லட்சம் காலடிகள்’ எழுதுவற்கு ஜெயமோகனும் பத்து சுமாரான கதைகளை அப்பலிபீடத்தில் பலியிடவேண்டியுள்ளது.


ஒரு ‘மாயப்பொன்’னை எட்டுவதற்கு ஏழெட்டு வீழ்ந்த படைப்புகளின் மீது ஏறி அவரே நடக்கவும் வேண்டியுள்ளது. இது எல்லா படைப்பாளிகளுக்கும் நிகழ்வதே. ஜெயமோகன் படைப்புகளின் வீழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைவு. ஒரு நுட்பமான வாசகனால் அவர் எழுதியிருக்கவேண்டாதவை என ஒரு பட்டியல் போடமுடியும்.


‘நூறு நாற்காலிகள்’, ‘வணங்கான்’, ‘சோற்றுக்கணக்கு’, ‘யானை டாக்டர்’ ஆகிய கதைகளில் மிகை நாடகத்தன்மை கலந்திருப்பதை நாம் கண்டுகொள்ள முடியும். ஆனால் ஒரு கதைசொல்லியாக எனக்கு இவ்வித நாடகத்தன்மையே கைகொடுத்தது. மாறாக மிக நுட்பமான இழைபின்னலில் பின்னப்பட்ட புனைவை சொற்களில் கொண்டுவருவது கதைசொல்லிக்கும், கதை கேட்பவனுக்கும் மிகுந்த சவாலைத் தரக்கூடியது.


‘தேவகி சித்தியின் டைரி’, ‘பெரியம்மாவின் சொற்கள்’ இரு கதைகளுமே இருவேறு பெண்களைப்பற்றி எழுதப்பட்ட ஒரே இயங்குதளத்தில் இயங்கும் கதைகளே. தேவகி சித்தி அதில் முன்னகர்ந்து வந்து வாசகர்களின் மனதில் உட்கார்ந்துக்கொள்கிறாள். பெரியம்மா சற்று தள்ளி தன் அரைகுறை ஆங்கில வார்த்தைகளோடு நிற்கவேண்டியுள்ளது.


கிறிஸ்துவத்தையும் இயேசுவையும் முதன்மைப்படுத்தி ஜெயமோகனும் பல கதைகள் எழுதியிருக்கிறார். ஆனாலும் என்னளவில் அவை முற்றாதவை. அவருக்குப் பெரும் சவாலானது எனச் சொல்லும் ‘வெறும் முள்’கூட படைப்பின் உச்சத்தைத் தொடமுடியாமல் வீழ்ந்த ஒன்றுதான்.


பால் சக்காரியாவின் ‘அன்புள்ள பிலாத்துவுக்கு’, ‘யாருக்குத் தெரியும்?’, ‘அன்னம்மா டீச்சரின் நாட்குறிப்புகள்’, ‘அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்’ போன்ற கதைகளே உச்சம் தொட்டவை என்பேன்.


இதற்கு நேர்மாறாக தன் ‘வெள்ளையானை’ என்ற மகத்தான நாவலில் அவர் படைத்த ஏய்டனும் அவனுள் அமிழ்ந்துபோயிருக்கும் ஷெல்லி என்ற கவிஞனின் சொற்களும், அதன் மூலம் அவன் அடையும் அறத்தின் லட்சியவாதமும் அபாரமான இடங்கள். நாவலின் பல இடங்களில் ஏய்டன் அக்கவித்துவ மனநிலையிருந்து வீழ்ந்துவிடுகிறான். குறிப்பாக தன் அதிகாரத் தோல்வியின் போதெல்லாம்.


ஆனால் மாரீசா என்ற அப்பெண் ஏய்டனை விடவும் கவித்துவமான மனநிலைகளிலேயே நாவல் முழுவதும் இயங்குகிறாள். அவளுக்கு இடருதலே இல்லை. ஏனெனில் அவள் அதிகாரத்துக்கு அடைப்படும் பெண் இல்லை.


ஒரு சக மனிதனை, அதுவும் ஓர் இந்தியனைக் குனிய வைத்து, முக்காலியாக்கி தன் ஷூக்களைப் பதிக்கும் ஏய்டனின் குரூர மனநிலை அவளை அவனிடமிருந்து துண்டிக்கிறது.


காய்ச்சலில் கிடந்த அந்த நாலைந்து நாட்களின் சூடு இன்னமும் உடம்பிலிருக்கிறது. திரும்பத் திரும்ப ஜெயமோகன் என்ற படைப்பாளியே என்னைத் திகைக்க வைக்கிறார். தமிழும் மலையாளமும் குழைந்த ஒரு மொழியை அவர் பெரும்பாலான படைப்புகளில் பயன்படுத்தியிருக்கிறார். வாசிக்கும் எவரையும் அதிலேயே மூழ்கடிக்கும் வல்லமையை அம்மொழி தன்னுள் புதைத்து வைத்துள்ளது.


என் வாசிப்பு உலகத்தில் ஜெயமோகன் அவர்களுக்கு இணையாக எழுதிக் குவித்த வேறு ஆளுமையை தமிழில் இன்றுவரை அறிந்ததில்லை. இதில் இந்திய, உலக அளவிற்கான விஸ்தீரணம் கொண்ட பரப்பு என்பதும் ஆச்சிரியப்படுத்துகிறது. என் காலத்தில், என் சக தமிழ் படைப்பாளி ஒருவனின் இந்த உயரமும் அவருடன் முப்பதாண்டுகளுக்கும் மேலான நட்பின் கண்ணியில் பிணைந்திருப்பதும் என் வாழ்வின் பெருமிதங்களில் ஒன்று. பத்தாண்டுகளுக்கு முன் ஒரு அதிகாலையில் மலையாளக் கவிஞன் பாலசந்திரன் சுள்ளிக்காடு என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, “தமிழின் இன்றைய முதன்மையான படைப்பாளி ஜெயமோகன்தானா பவா” எனத் திடீரெனக் கேட்டார். நான் சற்று தடுமாறினேன். கருத்துகள் எனக்குள் குறுக்கும் நெடுக்குமாக பல மணிநேரங்கள் ஓடின. ஆனால் இன்று தயக்கமின்றி சொல்வேன். தமிழில் மட்டும் அல்ல, இந்தியாவில் இன்று எழுதிக்கொண்டிருப்பவர்களில் அவரே முதன்மையானப் படைப்பாளி. அதிலும் அவன் என் நண்பன்.


***

No comments:

Powered by Blogger.