சியமந்தகம் - ஓர் அறிமுகம்


இளம் எழுத்தாளராக ஜெயமோகன் தனது ஆதர்ச எழுத்தாளர்களாகத் திகழ்ந்த அசோகமித்திரனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அவர்களது அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி மலர் கொண்டுவந்தார். அவ்வகையில் நம் காலத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜெயமோகனின் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி என்ன செய்யலாம் என நண்பர்களுடன் விவாதித்ததில் இயல்பாக இம்முடிவை வந்தடைந்தோம். ஜெயமோகனை ஆதர்சமாகக் கொண்ட, அவர்மீதும் அவரது படைப்புகளின் மீதும் மரியாதை கொண்ட, தமிழ் புனைவுலகிற்கும் தமிழ் மொழிக்கும் அவர் ஆற்றிவரும் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த இளம் தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிதான் ‘சியமந்தகம்’. வெண்முரசு நாவல் வரிசையில் ‘இந்திர நீல’த்தில் வரும் அருமணி சியமந்தகம். ஜெயமோகனம், ஜெ 60, ஜெயமோகன் 60 இப்படிப் பல தலைப்புகளைப் பரிசீலித்தோம் ஆனால் இன்ன காரணமென விளக்கமுடியவில்லை, மலரின் முதல் கட்டுரை கைக்கு வரும் முன்னரே இத்தொகுதிக்கு ‘சியமந்தகம்’ எனும் பெயர் முடிவானது. ஒருவகையில் இது ஜெ கடைபிடிக்கும் முறைமைதான். அர்த்த சாத்தியங்களைப் பிறப்பிக்கும், வளரும் உருவகம்.


தமிழின் மூத்த எழுத்தாளரான இந்திரா பார்த்தசாரதியின் வாழ்த்துடன் தொடங்கி மலேசியாவின் இளம் தலைமுறை எழுத்தாளர் அரவின்குமார் வரை பல்வேறு எழுத்தாளர்கள் இத்தொகுப்பிற்காகத் தங்களது கட்டுரைகளை அளித்துள்ளார்கள். விமர்சனபூர்வமாக அணுகும் கட்டுரை உட்பட எங்களுக்கு வந்த பெரும்பாலான கட்டுரைகளை வெளியிடுகிறோம், இரண்டு கட்டுரைகளைத் தவிர. அவை விமர்சனபூர்வமானவை என்பதால் அல்ல, அவை பதில் விவாதம் கோருபவை என்பதால். அக்கட்டுரைகளுக்கு இத்தொகுதியில் இடமளிக்க இயலவில்லை. இத்தொகுதியின் முதன்மை நோக்கம் ஜெயமோகனைக் கொண்டாடுவதுதான். கொண்டாடுதல் என்பது போற்றுதல் மட்டுமல்ல, புரிந்து கொள்வது, பகடி செய்வது, இடித்துரைப்பது, பிரமிப்பது, நினைவுகூர்வது, வரையறுப்பது என எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான்.


பொதுவாகவே மூத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் நினைவுகள், வாழ்த்துகள் மற்றும் பொதுவான அவதானிப்புகளைக் கொண்ட கட்டுரை களையும், இளம் தலைமுறையினரிடம் ஆக்கங்கள் குறித்த வாசிப்பு - விமர்சனக் கட்டுரைகளையும் பெறுவதே எங்கள் திட்டம். எனினும் இதற்கு விதிவிலக்காக சில கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக கட்டுரைகள் 1500 சொற்களுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால் அரிதாகவே அவ்வரையறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் கட்டுரையின் பேசு பொருளின் வீச்சைக் கருத்தில் கொண்டு வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கறாராக மட்டுறுத்தவில்லை. 170க்கும் மேற்பட்ட நூல்களை ஜெயமோகன் எழுதியுள்ளார். அவை அனைத்தைப் பற்றியும் கட்டுரைகள் இடம்பெற வேண்டும் எனும் பேராசை எங்களுக்கு இருந்தது. ஆனால் அதை எங்களால் சாதிக்க முடியவில்லை. நூறுக்கும் மேலான கட்டுரைகளைத் தொகுத்த பின்னரும் கணிசமான பகுதிகள் இன்னும் எழுதப்படாமலேயே எஞ்சியிருப்பதை உணர்கிறோம். சினிமாவில் அவரது பங்களிப்பு பற்றிப் பேசவில்லை. பண்பாடு சார்ந்த கட்டுரைகள் நூல்கள், சில புனைவுகள் இன்னும் பேசப்படாமல் எஞ்சி யுள்ளன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் ஒரு பதினைந்து கட்டுரைகளையாவது மிகச்சிறநத கட்டுரைகள் எனச் சுட்டிக்காட்ட முடியும்.


ஜெயமோகன் எனும் ஆளுமை, ஜெயமோகனின் படைப்புலகம் என மொத்த கட்டுரைகளையும் இரண்டு மையங்களில் தொகுக்கலாம். இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வ தானால் இரண்டும் ஒன்றையொன்று நிரப்பும், தொடும் இடங்களையே இக்கட்டுரைகள் பொதுவாகப் பேசுகின்றன எனச் சொல்லலாம். ஜெயமோகனைத் தாண்டி இக்கட்டுரைகள் சிலவற்றில் நாம் ஒரு காலகட்டத்தின் இலக்கிய உலகைக் காணமுடியும். குற்றாலம் கவிதை முகாம், தருமபுரி சந்திப்பு, ஊட்டி சந்திப்புகள் என முனைப்புடன் திகழ்ந்த காலகட்டத்தை அறியமுடியும். தமிழ் மட்டுமின்றி மலையாள எழுத்தாளர்களான கல்பற்றா நாராயணன், பி. ராமன், தத்தன் புனலூர் மற்றும் கன்னட எழுத்தாளரான ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் ஆகியோரது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.


ஜெயமோகனை எப்படி வரையறுப்பது? புனைவெழுத்தாளர், விமர்சகர், பயணி, பண்பாட்டு ஆர்வலர், இலக்கியச் செயல்பாட்டாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல முகங்கள் கொண்டவர். ஜெயமோகன் சொல்வது போல் அவரது முதன்மை அடையாளம் என்பது புனைவெழுத்தாளர் என்பதுதான். ‘வெண்முரசு’ எனும் பிரம்மாண்ட மகாபாரத மறுஆக்க நாவல் அளவிலும் உள்ளடக்கத்திலும் ஒரு பெரும் சாதனை. ‘விஷ்ணுபுரம்’, ‘கொற்றவை’, ‘பின்தொடரும் நிழலின் குரல்’, ‘காடு’, ‘வெள்ளையானை’, ‘ஏழாம் உலகம்’ ஆகிய மகத்தான நாவல்களும் ‘டார்த்தினீயம்’, ‘ஜகன்மித்யை’, ‘லங்காதகனம்’, ‘அறம்’, ‘மத்தகம்’, ‘ஊமைச் செந்நாய்’ தொடங்கி கொரோனா காலக் கதைகள் வரை மகத்தான சிறுகதைகளும் அவரது இடத்தை மறுக்கமுடியாததாக ஆக்குகின்றன. க.நா.சு. வழிவந்த ரசனை விமர்சனத்தின் இன்றைய முகம் எனத் திகழ்கிறார். ‘இலக்கிய முன்னோடிகள்’, ‘மேற்குச் சாளரம்’, ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’, ‘ஆழ்நதியைத் தேடி’ ஆகியவை அவரை முக்கியமான சமகால விமர்சகராக நிலைநிறுத்தும் ஆக்கங்கள். ‘கலாச்சார இந்து’, ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ‘சிலுவையின் பெயரால்’, ‘சாதி: ஓர் உரையாடல்’ உட்பட பல நூல்கள் பண்பாட்டுத் தளத்தில் அவரது ஈடுபாட்டுக்குச் சான்று. ‘அங்காடித் தெரு’, ‘ஒழிமுறி’, ‘கடல்’, ‘2.0’ ஆகிய திரைப்படங்களில் திரைக்கதையில் பங்காற்றியுள்ளார். விஷ்ணுபுரம் விருது, முகாம்கள் அவரது இலக்கிய செயல்பாட்டாளர் முகத்துக்கான சான்று. சமண வழித்தடம், ஆஸ்திரேலியா, இமயப் பயணம் எனப் பயண இலக்கியத்திற்கும் கணிசமாகப் பங்காற்றியுள்ளார். இவற்றுக்கு அப்பால் பலருடைய உள்ளத்தில் ஆசிரியருக்குரிய, தந்தைக்குரிய இடத்தை வகிக்கிறார்.


கட்டுரைகளைத்தவிர சில வாசகர்கள் மற்றும் நண்பர்களிடம் ‘ஜெயமோகன் உங்களுக்கு அளித்தது என்ன?’ எனும் கேள்வியை அனுப்பியிருந்தோம். சுருக்கமாக 150 சொற்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம். பலரும் சற்றே விரிவான பதில்களையே அளித்துள்ளார்கள். அவையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மிக முக்கியமாக ஜெ எப்படி தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தியாக இருக்கிறார் என்பதை இப்பதில்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஜெ தமிழ் இலக்கிய உலகில் கலகக்காரராக, கோபக்கார இளைஞனாக, மிகுந்த தன்முனைப்பும் தன்னகங்காரமும் கொண்டவராகவே அறிமுகம் ஆகிறார். ஆக்கபூர்வ செயல்திட்டம் ஏதுமற்ற வெறும் கலகத்திற்கு அக்காலகட்டத்து எதிர்வினை என்பதற்கப்பால் வேறு பெரிய பலனில்லை. ‘சொல் புதிது’ சிற்றிதழ், தமிழ் - மலையாளக் கவிஞர்கள் சந்திப்புகள், விஷ்ணு புரம் விருது, காவிய முகாம்கள், வாசிப்புப் பட்டறைகள் என ஆக்கபூர்வமாக செயலாற்றி அமைப்புகளை உருவாக்கி வருகிறார். காந்திக்கு, குரு நித்யாவிற்கு இணையதளங்கள் அவரளித்த ஊக்கத்தின் பேரில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நண்பர்கள் சிலர் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு தமிழ் புனைவுகளை ஊக்கத்துடன் மொழியாக்கம் செய்துவருகிறார்கள். கவிதைகளை விவாதிக்க ஒரு இணைய இதழ், சட்டம் குறித்த கட்டுரைகளைத் தாங்கி வரும் ‘அளவை’ எனும் இணைய இதழ் எனப் புதிய முயற்சிகள் தொடர்கின்றன. குக்கூ நண்பர்களின் செயல்பாடுகள், வானவன்மாதேவி - வல்லபியின் செயல்பாடுகள், சந்திரசேகர முத்துராமன் அவர்களின் கல்வி உதவிச் செயல்பாடுகள் எனச் சமூகத்தில் இயங்கு பவர்களுக்கும் உந்துசக்தியாக திகழ்கிறார். வாழ்நாள் சாதனையாளருக்கான விஷ்ணுபுரம் விருது விழாவும், இளம் கவிகளுக்கான குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விழாவும் ஒரு திருவிழாவைப்போல் மாறிவிட்டன. இரண்டு முழு நாட்கள் எழுத்தாளர்களுடனான அமர்வுகள், வேற்றுமொழி எழுத்தாளர்களுடனான சந்திப்புகள் எனத் தமிழின் மிக முக்கியமான நிகழ்வாக மாறிவருகிறது. ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், ஞானக்கூத்தன், தெளிவத்தை ஜோசப், தேவதச்சன், சி. முத்துசாமி, வண்ணதாசன், ராஜ் கௌதமன், சுரேஷ்குமார் இந்திரஜித், அபி, விக்கிரமாதித்யன் ஆகிய தமிழின் முக்கிய எழுத்தாளர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுகளை வெறுமே கையளிப்பது அல்ல, விருது அறிவித்த நாள் தொடங்கி தொடர் வாசிப்பிற்கு உள்ளாவதும், அவர் குறித்து கட்டுரைகள் எழுதப்பட்டு விவாதங்கள் உருவாவதும், விருது விழாவையொட்டி ஆவணப்படம் எடுக்கப்படுவதும் விருதைவிட முக்கியமான அங்கீகாரம் எனச் சொல்லலாம். தமிழ் இணையக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். அதுவும் காலப்போக்கில் பெருகும் பணிதான். எழுத்து, செயல்பாடுகளுக்கு இடையே வருடத்திற்கு இரண்டு மூன்று நீண்ட பெரும் பயணங்கள். இத்தனை எழுதிய, இத்தனை பயணித்த, இத்தனை செயல்பட்ட இன்னொரு தமிழ் எழுத்தாளர் இருந்ததில்லை. இத்தனை விரும்பப்பட்ட, வசைபாடப்பட்ட வேறு தமிழ் எழுத்தாளரும் உண்டா எனத் தெரியவில்லை. உலக அளவிலேயேகூட வெகுசிலர்தான் இருக்கக்கூடும்.


இத்தகைய பல பட்டைகள் கொண்ட அருமணியின் சில பட்டைகளை மட்டுமாவது ‘சியமந்தகம்’ தொகுதி காட்டிச்செல்கிறது என்றே நம்புகிறோம்.


மலருக்காக கட்டுரை கேட்டபோது உற்சாகத்துடன் இசைந்து கட்டுரைகள் அனுப்பித்தந்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றிகள். இத்தகைய பெரும் பணியை நனவாக்க உழைத்த சக நண்பர்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும். மிகச்சிறப்பான முகப்புப் படத்தை வரைந்து கொடுத்த எங்கள் பிரியத்திற்குரிய ஓவியர் ஷண்முகவேலுக்கு நன்றி. பதிப்பிக்க ஒப்புக்கொண்ட அழிசி பதிப்பகத்திற்கும் ஸ்ரீநிவாச கோபாலனுக்கும் நன்றி. நிதியுதவி செய்த நண்பர்களுக்கும் அச்சாக்கித்தந்த ‘நூல்வனம்’ மணிகண்டன் அவர்களுக்கும் நன்றி.


ஜெயமோகன் எங்களுக்கு அளித்தவற்றுக்கும் அவரிடமிருந்து நாங்கள் பெற்றுக் கொண்டதற்கும் செலுத்தப்படும் எளிய சமர்ப்பணம் இந்நூல். ஜெயமோகன் நூற்றாண்டு காணவும் அவரது சொற்கள் நூற்றாண்டுகள் காணவும் மனமார வேண்டுகிறோம்.


நன்றி

நண்பர்கள்

சியமந்தகம் குழு

அனோஜன் பாலகிருஷ்ணன்

ஆனந்த்குமார்

கே. ஜே. அசோக் குமார்

அழகுநிலா

பாலாஜி பிருத்விராஜ்

சிறில் அலெக்ஸ்

தன்ராஜ் மணி

தனசேகரன்

ரா. கிரிதரன்

காளிப்ரஸாத்

கனகலதா

கடலூர் சீனு

மீனாம்பிகை

நரேன்

ஜி. எஸ். எஸ். வி. நவீன்

ம. நவீன்

சா. ராம்குமார்

ஜா. ராஜகோபாலன்

செல்வேந்திரன்

ரா. செந்தில்குமார்

கா. சிவா

சிவா கிருஷ்ணமூர்த்தி

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

ஸ்ரீநிவாச கோபாலன்

சுசித்ரா

சுனில் கிருஷ்ணன்

சுரேஷ் பிரதீப்

சுஷில் குமார்

வேணு வெட்ராயன்

வேணு தயாநிதி

விஷால் ராஜா

9 comments:

  1. மிகச்சிறப்பான ஒரு முன்னெடுப்பு...

    ReplyDelete
  2. சிறப்பு ... வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தகுதிக்கே ஏற்ற தரம்.

    ReplyDelete
  4. சிறப்பு சிறப்போ சிறப்பு...
    ஜெயமோகன் எனும் புனைவு எழுத்துலகின் பிதா மகனுக்கு....
    அறுபதாவது அகவை கொண்டாட்டத்துக்கு உழைத்த முகம் காணாத நல் உள்ளங்களுக்கு எளியவனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்....

    ReplyDelete
  5. மிகச் சிறந்த முன்னெடுப்பு 🌷🌷🌷

    ReplyDelete
  6. nice thing to be appreciated for the most thinkable Writer of present day Shri Jeyamohan /for the initiative taken in this presentation is highly lovable
    reader
    kavignar Ara

    ReplyDelete

Powered by Blogger.